Daily Archives: ஜூலை 17th, 2012

இப்போதும் செய்யலாம் அசுவமேதம்!-ஜூலை 18 – ஆடி அமாவாசை

அசுவமேதம் என்ற யாகம் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். அம்பாளின் பூரண அனுக்கிரகத்தைப் பெறுவதற்காக இதை செய்வதுண்டு. “ஸ்ரீஹயமேத ஸமர்ச்சிதா’ என்று சமஸ்கிருதத்தில் அம்பாளுக்கு ஒரு பெயர் உண்டு. இதற்கு, “அசுவமேதத்தால் வழிபடப்படுபவள்’ என பொருள். இன்றைய காலக் கட்டத்தில், இதை முறையாக எப்படி செய்ய வேண்டும் என, ஒரு சிலர் வேண்டுமானால் அறிந்திருக்கலாம். அதற்குரிய பணவசதி எல்லாருக்கும் இருப்பதில்லை. ஆனால், அசுவமேதத்துக்கு சமமான, எளிதான ஒரு விஷயம் உலகில் இருக்கிறது. அதுதான் மரணமடைந் தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வது.
மரணமடைந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாக, அனாதைகளின் உடலை முறைப்படி அடக்கம் செய்ய உதவினால், அது அசுவ மேதத்துக்கு சமமான பலனைத் தரும் என்கிறது சாஸ்திரம். பணம் உள்ளவர்கள் தாராள மாக கொடுத்து உதவலாம். பலம் உள்ளவர்கள், பிணத்தை தூக்குவது முதலான கைங்கர் யங்களைச் செய்யலாம். அது மட்டுமின்றி, நாம் யாருடைய உடலை இறைவனிடம் ஒப்படைத்தோமோ, அவர்களை நம் சகோதரர்களாக, சகோதரிகளாக, பெற்றவர்களாக பாவித்து, அவர்களுக்காக ஆண்டுதோறும் ஆடி அமாவாசையன்று புனித நதிகளில் நீராடி, கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி வரலாம். அவர்களின் பெயர் தெரிந்தால், அவர்களுக்காக தர்ப்பணம் கூட செய்யலாம்.
ராமபிரானை எடுத்துக் கொள்ளுங்கள். யாரோ ஒரு ஜடாயு, அதிலும் பறவை. அது இறந்து போனதும், அதன் இறுதிச்சடங்கை ஒரு மகன் ஸ்தானத்தில் இருந்து செய்தார். வாலியை அவர் கொன்றதும், அங்கதனை அழைத்து தகனம் செய்ய உத்தரவிட்டார். ராவணன் அழிந்ததும், விபீஷணனை வைத்து இறுதிச்சடங்கு செய்வித்தார். தன் மனைவியைக் கடத்திச் சென்றவன் என்ற நிலையிலும் கூட, அவனது உடலை, காக்கை, கழுகுக்கு போடாமல், முறையான இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தார்.
நம் உறவினர் யார் இறந்தாலும், அதற்கு போகாமல் இருப்பதும், அங்கே போய் சும்மா இருப்பதும் தவறு. அந்த உறவினர் வாழ்ந்த காலம் வரை நமக்கு பரம எதிரியாகக் கூட இருந்திருக்கலாம். ஆனால், உடலை விட்டு ஆத்மா பிரிந்து சென்றதும், இறைவனால் அருளப்பட்ட அந்த உடல் புனிதமானதாகி விடுகிறது. அதை பத்திரமாக அக்னி மூலம் இறைவனிடம் ஒப்படைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
கவுரவர்கள், கிருஷ்ணருக்கு எதிரிகள் என்றாலும், அவர்களின் இறப்புக்குப் பின், திருதராஷ்டிரனையும், பாண்டவர்களையும் அழைத்துச் சென்று அவர்களுக்கு தர்ப்பணம் செய்து வைத்துள்ள தகவலை, மகாபாரதம் மூலம் அறிகிறோம். சிலர், பெற்றோர் தங்களுக்கு சொத்து எழுதி வைக்கவில்லை என்ற காரணம் காட்டி, கோபத்தில் அவர்களுக்கு தர்ப்பணம் முதலிய சடங்குகள் செய்யாமல் இருக்கின்றனர். ஆனால், மகாபாரதத்தில் கண்ணன் நிகழ்த்திய இந்த நிகழ்வின் மூலம், மறைந்த எதிரிகளுக்கும் தர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது தெளிவாகிறது.
ஒருவன், தான் செய்த புண்ணியத்தால் பிரம்மலோகம், தேவலோகத்துக்கு போனால், அங்கே இன்பங்களை அனுபவித்த பின், மீண்டும் பூலோகம் வந்து பிறப்பெடுத்தாக வேண்டும். ஆனால், அனாதை பிணங்களை அடக்கம் செய்ய உதவுபவன், நேராக அம்பாளின் லோகத்துக்கு போகிறான். அவளது திருவடிகளை காண்பவன், மீண்டும் இங்கே வர வேண்டும் என்பதில்லை.
காசி மன்னன் அரிச்சந்திரன், தன் கஷ்ட காலத்தில் செய்தது சுடுகாட்டுப் பணி. இதன் விளைவாக, இறந்து போன தன் மகன் லோகிதாசனைத் திரும்பப் பெற்றான். பிரிந்த மனைவி திரும்பினாள். இழந்த அரசு திரும்பக் கிடைத்தது. இதற்கெல்லாம் மேலாக, அவன் சிவபார்வதி தரிசனத்தையே பெற்றான். இந்தாண்டு, ஆடி அமாவாசைக்கு தவறாமல் தீர்த்தக் கரை களுக்குச் சென்று, அவரவர் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வர வேண்டும். அனாதைகள், ஏழைகள் இறந்தால் அவர்களது இறுதிச் சடங்கை முன்னின்று நடத்த வேண்டும். இதன் மூலம், அசுவமேத யாகம் செய்த பலனை அடையலாம். அம்பாளின் அனுக்கிரகத்தைப் பெறலாம்.

புதுமையான கண்ணாடி!

அதிகாலை வேளையில் மூக்குக் கண்ணாடியில் புகை போலப் படியும் பனி, அதை அணிவோருக்குத் தொந்தரவையும், எரிச்சலையும் ஏற்படுத்தும்.

இனி அம்மாதிரி சாதாரணக் கண்ணாடிகளுக்கு விடை கொடுத்துவிடலாம். இப்போது, ஈரப்பதமான இடங்கள், நேரங்களில் புகை போல பனி படியாத மூக்குக் கண்ணாடியைத் தயாரித்திருக்கிறார்கள். இது, எப்படிப்பட்ட காலநிலையிலும் தெளிவாகவே இருக்கும்.

`ஆப்டிபாக்’ எனப்படும் இந்த கண்ணாடியில் ஒரு விசேஷப் பூச்சு அமைந்திருக்கிறது. இது தண்ணீரை கூடுதல் ஈர்ப்பாகக் கவரும். ஆனால் கண்ணாடியில் பனி போல படர விடாமல், கண்ணுக்குத் தெரியாத படலமாக மாற்றிவிடும். எனவே கண்ணாடியில் ஈரப்பதம் பட்டாலும் அது தெளிவாகவே இருக்கும் என்கிறார்கள் இதன் தயாரிப்பாளர்கள்.

இதை உருவாக்கியிருக்கும் பிரெஞ்சு நிறுவனமான எசிலார், சமையல் கலைஞர்கள், ஓட்டப்பந்தய வீரர்கள், சைக்கிள் வீரர்கள், முகமூடி அணியும் மருத்துவ நிபுணர்கள் போன்றவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று கூறுகிறது.

“கண்ணாடி மூலம் பார்ப்பது இயற்கைப் பார்வைக்கு இணையாக இருக்கும் வகையில் செய்வதற்கு எங்கள் ஆராய்ச்சியாளர்கள் உழைத்து வருகிறார்கள். அந்த நோக்கில் `ஆப்டிபாக்’ ஒரு முக் கியமான மைல்கல்” என்கிறார், மேற்கண்ட நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மைக் கிர்க்லி.

பனி எதிர்ப்புப் பூச்சைக் காக்க இந்த கண்ணாடியில் ஒவ்வொரு வாரமும் ஒரு வேதித் திரவத்தை `ஸ்பிரே’ செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

காலி பிளவர் பஜ்ஜி

மாலை நேர சிற்றுண்டியாகவும், லஞ்ச் நேரத்தில் துணைக்கறியாகவும் இந்த காலி பிளவர் பஜ்ஜியை பயன்படுத்தலாம். செய்முறை இதோ:

தேவையான பொருட்கள்:

காலி பிளவர் -1/2 கிலோ

கடலை மாவு -11/2 கப்

அரிசிமாவு -1/2 கப்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்

மிளகுத்தூள் -1/4 டீஸ்பூன்

பச்சை மிளகாய் – 2

பூண்டு – 2 பல்

பச்சைக்கொத்தமல்லி -சிறிதளவு

சோடா உப்பு – 1 சிட்டிகை

உப்பு -தேவையான அளவு

ரீபைன்ட் எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

காலிபிளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி அரை வேக்காடாக சிறிது உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாய், பச்சைக்கொத்தமல்லி, பூண்டு இவைகளை நைசாக அரைத்துக் கொள்ளவும். கடலை மாவுடன்அரிசி மாவு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், மிளகுத்தூள், அரைத்த மசால், சோடா உப்பு, உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு மாதிரி கொஞ்சம் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். வாணலியில் ரீபைன்ட் எண்ணெய் விட்டு காய்ந்ததும், காலிபிளவர் துண்டுகளை ஒவ்வொன்றாக பஜ்ஜி மாவில் நனைத்துப் போட்டு பொன்னிறமானதும் எடுக்கவும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

இறைவனுக்கு எப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும்?


அருளை நல்கி, மருளைப் போக்கும் கருணைக் கடல் இறைவன். அகந்தையை விட்டொழித்து, `நீயன்றி வேறு கதி இல்லை’ என்ற மனோபாவத்தோடு, நம் உடலை தரையில் கிடத்தி இறைவனை வணங்குவதே நமஸ்காரத்தின் உட்பொருள். நமஸ்கார வகைகள் வருமாறு…

ஏகாங்க நமஸ்காரம்:- தலையை மட்டும் குனிந்து வணங்குவது,

த்ரியங்க நமஸ்காரம்:- தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வணங்குதல்,

பஞ்சாங்க நமஸ்காரம்:- (பெண்களுக்கு மட்டும்) கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு, தலை ஆக 5 அங்கங்கள் தரையில் படும்படி நமஸ்கரித்தல்,

அஷ்டாங்க நமஸ்காரம்:- (ஆண்களுக்கு) தலை, கை இரண்டு, இரு காதுகள், மார்பு, இரு கால்கள் ஆகிய 8 அங்கங்கள் தரையில் படவேண்டும்.

இறைவனுக்கு 3 முறை, சன்னியாசிகளுக்கு 4 முறை, தாய்-தகப்பனுக்கு ஒருமுறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.

மனிதர்களுக்கு நமஸ்காரம் செய்யும் போது, அவர்கள் அவசியம் ஆசியளிக்க வேண்டும். கோவிலில், இறைவனைத்தவிர வேறு யாருக்குமே நமஸ்காரம் செய்யவே கூடாது.