Daily Archives: ஜூலை 21st, 2012

பயனுள்ள இணையதளங்கள்

சில இணைய தளங்கள் பற்றிய குறிப்பு இங்கே சிறிய அளவில் தரப்படுகிறது. இந்த தளங்கள் அனைவருக்கும் பல விதங்களில் பயன்தரும் தளங்களாகும்.
www.photonhead.com டிஜிட்டல் கேமரா வாங்கிப் பயன்படுத்தாத வாசகர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். எளிதாக சிறுவர்கள் கூட இவற்றைக் கையாளத் தொடங்கிவிட்டனர். ஆனால் முழுமையாக அதன் வசதிகளைப் பயன்படுத்துகின்றனரா என்றால், இல்லை என்றே கூற வேண்டும். டிஜிட்டல் கேமராவின் வசதிகள் என்ன? எதனைப் பயன்படுத்தினால் என்ன கிடைக்கும் என்று விலாவாரியாகத் தரும் தளம் இது. அபெர்ச்சர், ஸ்பீட், ரெட் ஐ எனப் பல விஷயங்கள் குறித்து இங்கு தகவல்கள் தரப்படுகின்றன. குழந்தைக்குச் சொல்லிக் கொடுப்பது போன்ற பல டுடோரியல்கள் உள்ளன. சிமுலேட்டர் முறையில் ஒரு கேமரா ஆன்லைனிலேயே தரப்பட்டு எப்படி இயக்குவது என்பதைச் சொல்லிக் கொடுக்கிறது. ஆனால் கொஞ்சம் பழமையானது போல சில விஷயங்கள் இருக்கின்றன. நவீன தொழில் நுட்பம் தான் எனக்கு வேண்டும் என எண்ணுபவர்கள் www.slrgear.com என்ற தளத்திற்குச் செல்லலாம்.
www.stopbadware.org இது பக்கத்துவீட்டு காவல்காரன் போல செயல்படுகிறது. ஏதேனும் மோசமான விளைவுகளைத் தருவதற்கென்றே உருவாக்கப்படும் தளங்கள் குறித்த தகவல்களைத் தருகிறது. இது போன்ற தளங்களால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் தகவல்களைத் திரட்டி அவற்றின் அடிப்படையில் மோசமான தளங்கள் மற்றும் புரோகிராம்களின் பட்டியலை அளிக்கிறது.
www.gmailtips.com: கூகுள் மெயில்பயன்படுத்துபவர்களுக்கான தகவல் களஞ்சியம். அதிகமான எண்ணிக்கையில் குறிப்புகள்,டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் தரப்பட்டுள்ளன.
www.quotedb.com நீங்கள் சிறந்த பேச்சாளர் ஆக வேண்டுமா? உங்கள் உரை வீச்சுகளில் அடிக்கடி பல பெரிய அறிஞர்கள் மற்றும் பெரிய தலைவர்களின் கூற்றுக்களை கோடிட்டுக் காட்ட வேண்டுமா? அப்படியானால் அதற்கான சிறந்த தளம் இதுதான். 60 வகை பொருள்களில் ஏறத்தாழ 4,000 புகழ் பெற்ற மேற்கோள் உரைகள் உள்ளன.
சிறந்த பேராசிரியராக, மாணவர்களிடத்தில் நற்பெயர் விரும்பும் ஆசிரியர்களுக்கும் இது உகந்த தளம்.
www.techcrunch.com இன்டர்நெட் வெப்சைட் குறித்த செய்திகள் மற்றும் ஆய்வுகள் குறித்த தகவல்களைத் தருகிறது. குறிப்பாக வெப்2.0 குறித்த அண்மைக் காலத்திய செய்திகள் ஏராளம்.
www.tweakguides.com உங்கள் சிஸ்டத்தை ட்யூன் செய்து அதன் திறனை அதிகப்படுத்த வேண்டுமா? இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய தளம். விளையாட்டுகள், பிரவுசர்கள், டிரைவர்கள் என அனைத்தையும் இந்த தளம் மூலம் மேம்படுத்தி கம்ப்யூட்டர் இயக்கத்தை புதுப்பிக்கலாம்.

இதயத்தை வருடும் இருட்டு உணவகம்

அரை இருட்டுக்குள்அமர்ந்து சாப்பிடுவது, அதுவும் நெருக்கமான ஜோடியுடன் அமர்ந்து சாப்பிடுவது என்பது காதலிக்கும் காலத்தில் வேண்டுமானால் பலரும் விரும்புவதாக இருக் கலாம். ஆனால் அதே காதலியை கைப்பிடித்து மனைவி யாக்கிவிட்டால், `அந்த அரையிருட்டு ஓட்டல் இப்போதைக்கு நமக்கு சரிவராது. வெளிச்சத்தில் அமர்ந்து சாப்பிடுவோம்’ என்று சொல்பவர்கள்தான் அதிகம்.

ஆனால் இருட்டுக்குள்ளே ஒரு ஓட்டல் இயங்கிக்கொண்டிருக்கிறது. அந்த ஓட்டலில் அப்படி இப்படியான இருட்டு அல்ல! கும்மிருட்டு. கதவைத் திறந்து உள்ளே போனால் அந்த இருட்டுக்குள் சங்கமித்து விடவேண்டியதுதான். ஒருவர் மெல்ல மெல்ல வந்து, உங்கள் அருகில் வந்து நின்றுகொண்டு ஆர்டர் எடுப்பார். பின்பு அந்த இருட்டுக்குள்ளே உணவு வரும். மணத்தைவைத்தும், தடவிப்பார்த்தும் உணவை தெரிந்து கொள்ள வேண்டும். அப்படியே சாப்பிட வேண்டும்.

`அட இது என்னங்க மீண்டும் காட்டுவாசி காலத்துக்கு போறீங்களாக்கும்?’ என்று கேட்பவர் கள் சற்று பொறுங்கள். இந்த இருட்டு ஓட்டல் மிகப்பெரிய வாழ்வியல் தத்துவத்தை உணர்த்துவதை கடைசியாக சொல்கிறோம். அதுவரை தொடர்ந்து படியுங்கள்.

அந்த ஓட்டலின் பெயரும் `டார்க்’, அதாவது இருட்டு தான்! பெங்களூரில் இருக்கிறது. இருட்டு உணவு அனுபவத்தை பெற நினைக்கிறவர்கள் பெரும்பாலும் தன்னிடம் இருப்பதில் கறுப்பான சட்டையைத்தான் தேடிப்பிடித்து, அணிந்து செல்கிறார்கள். வெளிச் சத்தை கடந்து அந்த இருட்டு உணவறைக்குள் அடியெடுத்துவைத்துவிட்டால் வெஜிட்டேரி யனில் நான்கு வகை உணவுகள் உண்டு, நான்வெஜிட்டேரியனில் நான்கு வகை உணவுகள் உண்டு என்ற மெனுவை சொல்கிறார்கள். அசைவ உணவை விரும்புகிறவர் களுக்கு கொஞ்சம் பயம் வரத்தான் செய்கிறது. இருட்டுக்குள் மீனை சாப்பிட்டுவிட்டு முள் தொண்டையில் சிக்கிக் கொண்டால் என்ன செய்வது?!

உணவு ஆர்டர் கொடுத்ததும், ஒருவர் இருட்டுக்குள் மெதுவாக வந்து கையை தொடுகிறார். `என் பெயர் சந்திரசேகர். என் கையை இறுக்கமாகபிடித்துக்கொள்ளுங்கள்’ என்கிறார். அவர் குரல் இருட்டு பயத்தை கொஞ்சம் விலக்கும் நேரத்தில் அவர் கும்மிருட்டுக்குள் அழைத்து செல்வார்.

எத்தனை முறை கண்களை அடைத்து, அடைத்து திறந்தாலும் மறையாத அந்த கும்மிருட்டு, உள்ளே செல்பவருக்கு ஒரு குகைக்குள் செல்வது போன்ற பிரமையை ஏற்படுத்துகிறது. `நான்கு பேர் இருக்கக் கூடிய மேஜை அருகில் நீங்கள் நிற்கிறீர்கள். உங்களுக்கான இருக்கை இங்கே இருக்கிறது. அமருங்கள்’ என்று, அழைத்து செல்லும் நபர் சொல்லும்போது வருடிப்பார்த்து, நாற்காலியை அடையாளம் கண்டு அமர்கிறார்கள்.

சிறிது நேரத்தில் ஆர்டர் செய்த உணவுகள் அருகில் கொண்டுவரப்படுவதை, அதன் மணம் வெளிப்படுத்துகிறது. அவர்கள் முன்னால் உணவு வைக்கப்படுகிறது. அப்போது சந்திரசேகர், `உங்கள் இடதுபுறத்தில் டவலும், கத்தியும், முள்கரண்டியும் இருக்கிறது. உணவை உண்ணு வதற்கு அவைகளை எடுத்து பயன்படுத்திக்கொள்ளுங்கள்’ என்கிறார்.

தட்டில் என்ன உணவுகள் இருக்கின்றன என்பதை தடவிப்பார்த்து தெரிந்துகொள்வதற்கு முன்னால் சந்திரசேகரே விளக்கம் சொல்கிறார். `உங்கள் பிளேட்டை ஒரு கடிகாரம்போல் நினைத்துக்கொள்ளுங்கள்’ என்று அவர் கூறிவிட்டு, கடிகார முள் 12 இருக்கும் இடத்தில் இந்த உணவு இருக்கிறது, கடிகார முள் 3 இருக்கும் இடத்தில் இந்த உணவு இருக்கிறது என்று சொல்கிறார். சாலட், மீன், இறைச்சி போன்று பல வகையான உணவுகள் அந்த பெரிய பிளேட்டில் இருப்பதை சாப்பிடுவதற்கு வசதியாக விளக்குகிறார்.

வாடிக்கையாளர்கள் அமைதியாக அமர்ந்து சாப்பிடுகிறார்கள். வெளிச்சமான இடத்தில் அமர்ந்து நாம் சாப்பிடும்போது நமது கண்கள் டெலிவிஷனை பார்க்கும், காதுகள் குழந்தைகள் சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கும். சிந்தனை அலுவலகத்தையோ, நண்பர்களையோ சுற்றிக்கொண்டிருக்கும். இந்த இருட்டில் சாப்பிடும்போது சிந்தனை, செயல் எல்லாம் இருட்டை மட்டும்தான் சுற்றுகிறது. அதனால் முழுமையாக உணவை ருசித்து உண்ணமுடிகிறது.

சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது தனிமையில் இருப்பது போன்ற பயம் ஏற்பட்டால், இருட்டுக் குள் எளிதாக நடந்து வழிகாட்டும் சந்திரசேகரை தேடவேண்டியதிருக்கிறது. `மிஸ்டர் சந்திர சேகர் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?’ என்று கேட்டால் அவர், `இங்கே இன்னொரு இருக்கையில் இருப்பவருக்கு உணவு பரிமாறிக்கொண்டிருக்கிறேன்’ என்று நம்பிக்கையூட்டும் விதத்தில் குரல் கொடுக்கிறார்.

இந்த இருட்டு ஓட்டலில் சாப்பிடுபவர்கள் எல்லோருக்குள்ளும் மிகப்பெரிய கேள்வி ஒன்று எழத்தான் செய்யும். `நாம் இருட்டுக்குள் தட்டுத்தடுமாறுகிறோம். ஆனால் இந்த சந்திரசேகர் இருட்டு மனிதரா? அவர் எந்த தடுமாற்றமும் இன்றி நமக்கு இருட்டுக்குள் மிக எளிதாக வழிகாட்டுகிறாரே! எப்படி அவரால் மட்டும் இது முடிகிறது?’ என்ற கேள்வி எழத்தானே செய்யும்.

இதற்கான பதில் நெகிழ்ச்சியானது. அந்த சந்திரசேகர் பிறவியிலே கண்தெரியாதவர்.

“வெளிச்சம் என்றால் என்னவென்றே எனக்கு தெரியாது. நான் இந்த இருட்டுக்குள்ளே வாழ்ந்து பழகிவிட்டதால், இருட்டுக்குள் வரும் உங்களுக்கு எளிதாக என்னால் வழிகாட்ட முடிகிறது. இங்கே 16 இருக்கைகள் உள்ளன. நான் ஒருவனே அத்தனை பேரையும் கவனித்துக்கொள்கிறேன். டேபிள் அரேன்ஞ்மென்ட்களை கவனிக்க இன்னொருவரை நான் துணைக்கு வைத்திருக்கிறேன். அவரும் கண் தெரியாதவர்தான்..” என்று விளக்கிக்கொண்டே வாடிக்கையாளர்களை கையைப் பிடித்து வழிகாட்டி, வெளிச்சத்தில் கொண்டு விட்டுச் செல்கிறார், அவர். நெகிழ்ச்சியோடு நன்றி சொல்லிவிட்டு விடைபெறுகிறார்கள்.

(முக்கிய குறிப்பு: இருட்டு என்பதால் ஜோடியாக சென்று, எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்ளலாமே! என்று நினைப்பவர்கள் கவனிக்கவேண்டிய விஷயம். `நைட் விஷன் கேமிராவை’ உள்ளே இணைத்திருக்கிறார்கள். எல்லை மீறுபவர்களை உடனே வெளியேற்றி விடுகிறார்கள்)