Daily Archives: ஜூலை 24th, 2012

பிளாஸ்டிக் இல்லாமலும் வாழலாம்!

பிளாஸ்டிக், நம் கண் முன்னே வாழும் எமன். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, மனித உயிர்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள, பேரழிவு சக்தி. உலகம் முழுவதும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 105 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு நபரும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக்குளை பயன்படுத்துகின்றனர்.
பிளாஸ்டிக்கை தயாரிப்பதற்கான செலவு குறைவு. மேலும், நாம் விரும்பும் எந்த ஒரு வடிவத்திலும், இதை எளிதாக உருமாற்றி விடலாம். ஆனால், இதை அழிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இன்று, கடைகளில் வாங்கும் அனைத்து பொருட்களும், பிளாஸ்டிக் பைகளில் தான் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கு கள், பொதுமக்களால் வீதிகளில் தூக்கி எறியப்படுவதன் விளைவாக, பூமிக்குள் ஆங்காங்கே புதைந்து, நிலத்தில் பெய்யும் மழை நீர், பூமிக்குள் ஊடுருவாத வகையில், மிகப் பெரிய பிளாஸ்டிக் கேடயமாக மாறி விடுகிறது. இதனால், நிலத்தடி நீர் குறைந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கடற்கரைகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்குகள், கடலுக்குள் செல்வதால், கடலின் சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களின் உயிர்களுக்கு உலை வைக்கின்றன. இதனால் தான், “அணுகுண்டால் ஏற்படும் பாதிப்பை விட, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு, மிகவும் பயங்கரமானது’ என, நம் சுப்ரீம் கோர்ட், கடுமையான வார்த்தைகளை <உபயோகப் படுத்தியது.
ஆனால், பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை, உங்களால் ஒரு நாளாவது வாழ்ந்து காட்ட முடியுமா? ஆஸ்திரியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், இரண்டு ஆண்டுகள் பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கை வாழ்ந்து காட்டியுள்ளனர்.
ஆஸ்திரியாவைச் சேர்ந்த, சாண்ட்ரா கிராவுட்வாச்சி என்ற பெண், சில ஆண்டுகளுக்கு முன், பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் ஆவணப்படத்தை பார்த்தார். அப்போதிருந்து, இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம், இவருக்குள் வேரூன்றியது.
இதையடுத்து, இவரும், இவரது மூன்று குழந்தைகளும் சேர்ந்து, பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற முடிவை எடுத்தனர். தங்கள் வீட்டில் இருந்த, அத்தனை பிளாஸ்டிக் பொருட்களையும் ஓரம் கட்டினர். பல் துலக்குவதற்காக, மரக் குச்சி யால் தயாரிக்கப்பட்ட, “பிரஷ்’ ஐ பயன்படுத்தினர். சமையலுக்கும், மற்ற பொருட்களை வைத்து கொள்வதற்கும் தகர டின் மற்றும் அலுமினிய பாத்திரங்களை பயன்படுத்தினர்.
ஒரு சில நாட்களிலேயே, பிளாஸ்டிக் இல்லாமல் வாழ்வது, எவ்வளவு சிரமம் என்பது, இவர்களுக்கு தெரிந்து விட்டது. ஆனாலும், தளராத மனதுடன், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பிளாஸ்டிக்கையே பயன் படுத்தாமல், வாழ்ந்து காட்டினர்.
சாண்ட்ரா கூறுகையில், “பிளாஸ்டிக்காலான கழிப்பறை பேப்பருக்கு பதிலாக, வேறு எதை பயன்படுத்துவது என்பதில், பெரிய பிரச்னையாகி விட்டது. சில நாட்கள் செய்தி தாள்களை பயன்படுத்தினோம். சரி வரவில்லை. அப்புறம், இலைகளை பயன்படுத்தினோம். அதுவும் வேலைக்கு ஆகவில்லை. கடைசியாக, மறு சுழற்சி செய்யப்பட்ட பேப்பர் டவல்களை பயன்படுத்தினோம். எங்களைப் பார்த்து, மற்றவர்களுக்கும் விழிப்புணர்வு வர வேண்டும் என்பதற்காகவே, இவ்வாறு செய்தோம்…’ என்றார்.
ஏதோ… பூமியில் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், சக மனிதர் களுக்கும், உயிரினங்களுக்கும், எதிர்கால தலைமுறைக்கும், நம்மால் முடிந்த நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற, மிகப் பரந்த மனதுடன் வாழ்ந்து காட்டிய சாண்ட்ரா குடும்பத்தினரை, பாராட்டுவதற்கு வார்த்தைகளே இல்லை.

புதிய ஸ்கைப் பதிப்பு 5.10.0.114

உ லகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் தொடர்பு கொண்டு பேச, இலவசமாக நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஸ்கைப். ஸ்கைப் பயன்படுத்தும் எவருடனும் இலவசமாக நாம் தொடர்பு கொண்டு பேச முடியும். உலகில் பெரும்பாலானவர்கள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். இதன் புதிய பதிப்பு சென்ற ஜூன் 14 அன்று வெளியாகியுள்ளது. இதனை http://download. skype.com என்ற இந்நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கிக் கொள்ளலாம்.
புதிய வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட இந்த புரோகிராம், புதிதாக இதனைப் பயன்படுத்துபவர்களும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்கைப் இயக்கப்பட்டவுடன் கிடைக்கும் ‘Getting Started Wizard’ மூலம், நாம் அடிக்கடி மேற்கொள்ளும் பணிகளைச் செயல்படுத்தலாம். தொடர்புகளை கண்டறிதல், பெர்சனல் தகவல்களை எடிட் செய்தல், சோதனை அழைப்புகளை மேற்கொள்ளுதல் போன்றவை இப்போது எளிமையாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய பதிப்பில், கூடுதல் வசதிகள் பல இணைக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட பைல்களை இப்போது அனுப்ப முடியும். ஒலி வெளிப்பாடு மேம்படுத்தப்பட்டுள்ளது. தனி நபர் செட்டிங்ஸ் அமைப்பதில் கூடுதல் வசதிகள் தரப்பட்டுள்ளன.
கான்பரன்ஸ் முறையில் ஒரே நேரத்தில் ஐந்து பேர்களுடன் உரையாட முடியும். வெவ்வேறு இயக்கங்களில் இயங்கினாலும் தொடர்பு கொள்ள முடிகிறது.
ஸ்கைப் இயக்க கீழ்க்காணும் வகையில் சிஸ்டம் இருக்க வேண்டும். விண்டோஸ் 2000 அல்லது எக்ஸ்பி மற்றும் பின்னர் வந்த விண்டோஸ் பதிப்புகள். வீடியோ அழைப்பு எனில் குறைந்தது எக்ஸ்பி அவசியத் தேவையாகும். இணைய இணைப்பில் பிராட்பேண்ட் இணைப்பு இருந்தால் நல்லது. ஸ்பீக்கர் மற்றும் மைக், கம்ப்யூட்டர் உள்ளாகவோ, தனியே இணைக்கப்பட்டோ இருக்கலாம். வீடியோ அழைப்புகளுக்கு இதே போல வெப் கேமரா இருக்க வேண்டும். கம்ப்யூட்டரின் ப்ராசசர் குறைந்தது 400 மெகா ஹெர்ட்ஸ் திறனுடன் இருக்க வேண்டும். ராம் நினைவகம் 128 எம்பி மற்றும் டிஸ்க்கில் 15 எம்பி இடம் தேவை.

இச்சா பத்தியம்

யோகப் பயிற்சிகளில் ஒரு வகையான பயிற்சி உண்டு. உடல் வலிமையுள்ள ஒரு ஆடவன், தனியான ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும், அவளைத் தொடாமலேயே இருக்கும் பயிற்சி அது.

`இல்லறத்தில் பிரம்மசரியம்’ என்று இதனைக் காந்தியடிகள் விவரித்தார்கள்.

இப்போது அமெரிக்காவில் இந்து ஞானிகளைச் சுற்றிலும் அமெரிக்கர்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.

அங்கே ஒரு இந்து ஞானி, ஒரு யோகப் பயிற்சியைத் தொடங்கி வைத்திருப்பதாக `டைம்’ பத்திரிகையில் படித்தேன். அதன் புகைப்படத்தையும் அதில் பார்த்தேன்.

ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக நிற்கிறார்கள். அவர்கள் ஒரு வட்டவடிவத்தில் நின்று கொள்கிறார்கள். அதிலும் ஒரு ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறார்கள். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொள்கிறார்கள். எல்லோருடைய அங்கங்களும் திறந்திருக்கின்றன. இந்த நிலையில் ஒருவர் மீது மற்றவருக்கு ஆசை ஏற்படாதவாறு பயிற்சி செய்கிறார்கள்.

நான் பல இடங்களில் குறிப்பிட்டது போல, `இயக்கத்தில் இயலாமை’, `இருந்தும் இல்லாமை’, `கிடைத்தும் ஏற்றுக் கொள்ளாமை’ என்பது இதுவே.

இதை யோகாசனம், என்பதைவிட `மோகாசனம்’ என்பது பொருந்தும்.

மனிதனது உணர்ச்சிகளில் சீக்கிரம் தூண்டப்படக்கூடியது. `பாலுணர்வு’ ஒன்றே.

பசியும் ஒரு உணர்ச்சிதான்; அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

மனிதனுடைய தன்னடக்கத்தை மீறி எந்த உணர்ச்சியும் எழுந்து விடுவதில்லை.

ஆனால், காமம் எந்த மேதையையும் முட்டாளாக்கிக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.

கிடைக்காத பெண்ணுக்கே ஏங்குகின்ற உலகத்தில், கிடைத்து விட்ட பெண்ணை அனுபவிக்காமல் இருக்கப் பயிற்சி பெற வேண்டும்.

அதன் பெயரே, `இல்லறத்தில் பிரம்மசரியம்!’

சித்தர்கள் இதனை, `இச்சா பத்தியம்’ என்பார்கள்.

காந்தியடிகள் பிற்காலங்களில் அப்படி வாழ்ந்து காட்டினார்.

அவருக்கு முன்னால் பரமஹம்சர் வாழ்ந்து காட்டினார்.

செயலற்ற நிலையில் பலவீனமான மனிதன், `நான் என் மனைவியைச் சகோதரியாகப் பாவிக்கிறேன்’ என்றால், அது `திராணி’ இல்லாததால் வந்த தத்துவம்.

உடல் கெடாமல் உள்ளத்தில் உணர்ச்சி மேலோங்கிய நிலையில், அந்த அடக்கம் தோன்றிவிடுமானால், அதுவே ஆன்மாவைப் புடம் போட்ட

ஞானம்.தேகம் ஆன்மாவை வென்றுவிடும். தறிகெட்டு ஓடும்.

ஆன்மா அதை வெல்ல முடியுமானால் அதுவே அற்புதமான யோகம்.

விவேகானந்தரைப் போன்ற இளம் துறவிகளை இன்னும் இந்து மதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவ மதத்திலும் அப்படிப்பட்ட சகோதரர் கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனத்தால் உடம்பை அடக்கியவர்கள்.

அடக்க முடியாமல் கெட்டுப்போய் ஞானிகளானவர்கள் எல்லாம், `உடம்பு என்னை ஆட்டிப் படைக் கிறதே’ என்றுதான்

எழுதியிருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மசாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.

உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை அவர்

மேற்கொண்டிருந்தார்.அவரது உடம்பின் பளபளப்புக்குக் காரணம் அது தான் என்று சொல்வார்கள்.

ஆனால், அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மசாரிகள் நீண்ட நாள் வாழ்வதில்லை.

 

 

ஒரு குறிப்பிட்ட காலம் வரை இல்லறத்தில் வாழ்ந்த பிறகு, அனுபவித்த மனைவியையே சகோதரியாகப் பாவிக்கும் பாவனையையே நான், `இச்சா பத்தியம்’ என்று குறிப்பிடுகிறேன்.

காம உணர்ச்சி ஒருவனுக்கு இல்லாவிட்டாலும் கூட, அவனுடைய உணவு முறையின் மூலம் தூக்கம் பிடிக்காத நிலை ஒன்று ஏற்படும். விபரீத சிந்தனைகள் தோன்றும்.

அதனால் தான் இந்துக்கள், `தனியாக இருக்கும் ஆடவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது’ என்றும், `பெண்கள் மல்லாந்து படுக்கக்கூடாது’ என்றும் கூறுவார்கள்.

இதனை அறிந்துள்ள எந்த இந்துப் பெண்ணுமே மல்லாந்து படுப்பதில்லை. ஒருக்கணித்துதான் படுப்பாள்.

இந்துமதத்தின் சாது சந்நியாசிகள் அந்நாளில் தலைக்குத் தலையணை வைக்கக்கூடாது என்ற விதி இருந்தது.

சாதாரணமாகச் செதுக்கப்பட்ட மரக்கட்டையைத்தான் தலைக்கு வைத்துக் கொண்டு படுப்பார்கள்.

ஒரு வகை மரத்தில் செய்யப்பட்ட கட்டையைத்தான் செருப்பாகப் பயன்படுத்துவார்கள். மெத்தென்ற தோல் செருப்பு அணிய மாட்டார்கள்.ராமகிருஷ்ண பரமஹம்சரும், காந்தியடிகளும் உணவைக் குறைத்ததற்குக் காரணமே, `இல்லறத்தில் பிரமசரிய’த்தை அனுஷ்டிப்பதற்குத்தான்.

இதைக் காந்தியடிகளே ஒரு முறை கூறி இருக்கிறார்.

ஒரு முறை பரமஹம்சரின் சீடர்கள் அவரைப் பார்ப்பதற்காக அவர் தங்கும் இடத்திற்கு வந்தார்கள்.

அப்பொழுது நள்ளிரவு.

பகவான் தேவியாரோடு உள்ளே இருந்தார். `ஐயோ! இந்த நேரத்தில் வந்து விட்டோமே, அவரது சந்தோஷத்தைக் கெடுத்து விட்டோமே’ என்று அந்த இளம் உள்ளங்கள் பயந்தன.

அவர்களுடைய நினைப்பு, பகவான் தேவியாரோடு சல்லாபித்துக் கொண்டிருப்பதாக.

திடீரென்று வெளியே வந்தார் பரமஹம்சர். அவர்கள் சொல்லாமலே அவர்களது பயத்தை உணர்ந்தார்.

மெல்லச் சிரித்துக் கொண்டே, `நான் தேவியின் அருகே இருந்தாலும் தெய்வத்தின் அருகில் தான் இருக்கிறேன்’ என்றார்.

சீடர்களுக்குக் குளிர் விட்டதுபோல் இருந்தது.

காம லயத்தை விட்டு விட்டவனுக்கு மரத்தைத் தொடுவதும், மனைவியைத் தொடுவதும் ஒன்றுதான்.

`துறவு’ என்பதற்கே `நிர்வாணம்’ என்று பெயர்.

ஒரு பெண்ணின் நிர்வாணத்தில் கூட அவன் தெய்வீகத்தையே காணுகிறான்.

கண்ணகி கற்புக்கரசி என்றார்கள்; அதில் அவளுக்கென்ன புதுப் பெருமை?

அவள் கற்போடு இருந்து தீர வேண்டிய குலமகள்.

மதுரையை அவள் எரித்ததை வேண்டுமானால், `மறக்கற்பு’ என்று கூறலாம்.

ஆனால், மாதவி கற்போடு இருந்தாளே, அதுதான் பெருமை.

மாதவி வீட்டுக்குப் பத்துப்பேர் வந்துபோனால் அதைப்பற்றி யாரும் பேசப் போவதில்லை. அவள் அதற்கென்றே நிர்ணயிக்கப்பட்டவள்.

வசதி இருந்தும், நியாயம் இருந்தும், அதை அவள் பயன்படுத்திக் கொள்ளாமல் கற்போடு வாழ்ந்தாள்.

அதைப் போன்றதுதான் இல்லறத்தில் பிரம்மசரியம்.

கெட்டுப் போய் ஞானிகள் ஆனவர்கள், பெண்களைக் கேவலமாகத் திட்டி இருக்கிறார்கள்.

`நாற்றச் சரீரம்’ என்றும், `ஊத்தைச் சரீரம்’ என்றும் `மலசலம் நிறைந்த மண்பாண்டம்’ என்றும், `ஆறாத புண்’ என்றும், `வெட்டுண்ட காயம்’ என்றும் அவர்கள் பலவாறாகப் பெண்களை ஏசி இருக்கிறார்கள்.

இவையெல்லாம் செயலற்ற காலத்துத் தரிசனங்கள்.

அவர்கள் உடம்பு நன்றாக இருந்தபோது, `குவளை மலர்’ என்றும், `முல்லைமலர்’ என்றும், பெண்ணை, அவர்களே தான் வருணித்திருக்கிறார்கள்.ஞானிகள் நிலை அதுவல்ல.

உடம்பு நன்றாக இருக்கும் போதே உள்ளத்தில் தோன்றும் ஒளி, காம லயத்தில் இருந்து அவர்களைப் பிரித்து விடுகிறது.

சுவேதகேதுவின் காலத்திலிருந்து, பல வகையான ஞானிகள், இதை ஒரு பயிற்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குறிப்பிட்ட காலம்வரை, பிள்ளைப் பேறுக்காகவே மனைவியோடு உடலுறவு வைத்திருக்கிறார்கள்.

காம வயப்பட்ட மனிதர்கள் உடலுறவு கொள்ளும் போது சில விநாடிகளிலேயே உடல் தளர்ந்து விடும்.

ஆனால், மனதைப் புடம் போட்டவர்கள் உடலுறவு கொள்ளும் போது, மனைவி எவ்வளவு நேரம் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறாளோ, அவ்வளவு நேரம் நீடிக்கும்.

காரணம் அவர்களிடம் வெறி உணர்வு இல்லை.

பொற்கொல்லர்கள் சங்கிலி செய்வது போலவும், விவசாயிகள் ஏரோட்டுவது போலவும், கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கடமை புரிவதினால் கால வரம்பு நீடிக்கிறது. அதிலே மிருகத்தனம் இல்லை; தெய்விகம் இருக்கிறது. காமம் இல்லை; யோகம் இருக்கிறது. வெறும் விளையாட்டு இல்லை; ஒரு தவம் நடக்கிறது. பற்றற்ற கருமமாகவே அது பாவிக்கப்படுகிறது.

சிட்டுக் குருவியைப்போல், அந்தி பகல் எந்நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருப்பவன், அந்தச் சிந்தனையினாலேயே பலம் இழந்து விடுகிறான்.

உடம்பு செயலாற்றுவதால் ஏற்படும் உஷ்ணத்தைவிட சிந்தனையினால் ஏற்படும் உஷ்ணம் பத்து மடங்கு அதிகம்.

அதுவும் காமச் சிந்தனையாக இருந்தால், அந்தப் பத்து மடங்கு உஷ்ணமும் உடனே ஏறிவிடுகிறது.

அதன் பிறகு அவன் செயலாற்றத் தொடங்கும் போது மனைவியின் கண்ணுக்கே நபும்சகனாகக் காட்சியளிக்கிறான்.

அதனால்தான் இந்துக்கள், தியான முறையைக் கையாண்டார்கள்.

ஈஸ்வர தியானத்தினால் உடம்பில் உள்ள உஷ்ணம் இறங்கி விடுகிறது.

மனத்தின் சிந்தனைப் போக்கு உணர்ச்சி வயப்படாத ஒன்றில் ஐக்கியமாவதால், உடம்பு சம சீதோஷ்ணத்துக்கு வந்து விடுகிறது.

இல்லறத்தில் பிரம்மசரியம் தொடங்கிய பிறகே காந்தியடிகளும், பரமஹம்சரும் தத்துவ ஞானிகள் ஆனார்கள்.

இது பற்றிக் காந்தியடிகள் கூட விரிவாகக் கூறியிருக்கிறார்.