Daily Archives: ஜூலை 25th, 2012

காப்பீடு… கவனம்!

நம்மில் சிலர், காப்பீட்டு விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கும் தகவல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதனால் பெரிதாக என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்ற அலட்சியம். அது சரிதானா?

உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்… 3 லட்ச ரூபாய் வருடாந்திர வருமானம் கொண்டவர் ராஜேஷ். இவர் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தமாக ரூ. 25 லட்சத்துக்குக் காப்பீடு செய்திருக்கிறார். மீண்டும் ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெறுவதற்கு ஒரு புதிய டெர்ம் இன்சூரன்ஸுக்கு ராஜேஷ் விண்ணப்பித்தார்.

அப்போது, மேலும் கூடுதலாக ரூ. 50 லட்சத்துக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும் என்று கூறி ராஜேஷின் விண்ணப்பத்தைக் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனம் நிராகரித்து விட்டது.

ஏன் அவ்வாறு செய்தது?

ராஜேஷ் தனது பணிவாழ்க்கைக் காலம் வரை (58 வயது) வாழ்வார் என்றால் அவர் மொத்தமாக ரூ. 75 லட்சம் சம்பாதிப்பார். அதாவது, ரூ. 3 லட்சம் * 25 ஆண்டுகள். ஆண்டுதோறும் ராஜேஷின் சம்பளம் உயரும் என்றாலும், வருடங்கள் குறையும் என்பது போன்ற காரணங்களால் உத்தேசமாகத்தான் இந்தக் கணக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராஜேஷ் ஏற்கனவே ரூ. 25 லட்சம் காப்பீடு பெற்றிருக்கிறார். புதிதாக ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெற்றால் அவரது மொத்தக் காப்பீடு ரூ. 1.25 கோடியாக உயரும். ராஜேஷ் உயிரோடு இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பாரோ அதைவிட அதிகமாக அவரது மரணத்துக்குப் பின் பெறும் நிலை ஏற்படும்.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ராஜேஷின் வாரிசுதாரர்கள் அவர் உயிரோடு இருந்தால் எவ்வளவு பெறுவார்களோ, அதைவிட அதிகமாக அவர் இறந்தால் பெறுவார்கள். இந்த `லாஜிக்’கின் அடிப்படையில்தான் புதிய காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 கோடிக்கான அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

நீங்கள் லாபம் அடைவதற்கான அமைப்பல்ல, காப்பீட்டுத் திட்டம். ஒருவர் உயிரோடு இருப்பதைவிட, காலமானால் அதிகப் பயன் கிட்டும் என்ற கருத்து ஏற்பட்டால், காப்பீடு தவறாகப் பயன்படுத்தப்படலாம். காப்பீட்டுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகும். ஏற்கனவே காப்பீடு தொடர்பான பல குற்றங்கள் உலகளவில் காணப்படுகின்றன.

ஒருவர் தான் ஏற்கனவே பெற்றிருக்கிற காப்பீடுகளை தெரிவிக்காமல் அல்லது ஒன்றிரண்டு காப்பீடுகளை மட்டும் தெரிவித்தால், அவர் காலமாகும்போது அவருக்கான `கிளெய்மை’ நிராகரிக்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிமை உண்டு. புதிய காப்பீடைப் பெறுவதே பலனளிக்காமல் போகும்.

எனவே உங்களின் காப்பீட்டு முகவர், அனைத்துத் தகவல்களையும் அளிக்கும்படி வற்புறுத்தினால் எரிச்சல்பட்டு, `எனக்குக் காப்பீடே வேண்டாம்’ என்று மிரட்டாதீர்கள். முழுமையான தகவல்கள் இல்லாமலே அவர் விண்ணப்பத்தை அனுப்பிவிடக்கூடும். ஆனால் அதனால் நஷ்டமடையப் போவது உங்கள் குடும்பம்தானே தவிர, முகவர் அல்ல.

ஸீரோ டே வழி வைரஸ் தாக்குதல்

கம்ப்யூட்டர்களுக்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுபவர்கள், எங்கே நுழைந்து தாக்க முடியும் என புரோகிராம்களில் உள்ள பலவீனமான குறியீடு வழிகளைக் கண்டு பிடித்து தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்வார்கள். எந்த வழியில் இவர்கள் நுழைகிறார்கள் என்று அறியும் வகையில், அந்த பலவீனமான இடங்கள் ஸீரோ டே வழிகள் என அழைக்கப்படுகின்றன.
அப்படிப்பட்ட ஒரு பலவீனத்தைப் பயன்படுத்தி மால்வேர் புரோகிராம் ஒன்றை சில ஹேக்கர்கள் அனுப்பியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் எச்சரித்துள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் இந்த அத்துமீறல் நடந்துள்ளதாகத் தெரிகிறது.
இதன் மூலம் உள்ளே நுழையும் மால்வேர் புரோகிராம்கள் வழியாக, இதனை அனுப்பியவர்கள், அந்த கம்ப்யூட்டரையும், மற்ற வசதிகளையும் கெடுதல் விளைவிக்கும் செயல்களுக்குப் பயன்படுத்த முடியும். விண்டோஸ் எக்ஸ்பி முதல் விண்டோஸ் 7 வரையிலான அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இயங்குகையில் இது நடைபெறுகிறது.
எந்த சந்தேகமும் இடம் கொள்ள முடியாதபடி, சில மின்னஞ்சல்கள் வருகின்றன. இவை நம் ஆர்வத்தைத் தூண்டும் சில காரணங்களைப் பயன்படுத்தி, லிங்க் ஒன்றைக் கொடுத்து அதில் உள்ள தளத்திற்குச் செல்லுமாறு தூண்டுகின்றன. லிங்க்கில் கிளிக் செய்துவிட்டால், குறிப்பிட்ட மால்வேர் புரோகிராம் தானாக, அந்த கம்ப்யூட்டரில் இறங்கி அமர்ந்து கொண்டு தன் நாச வேலையைத் தொடங்குகிறது. மால்வேர் புரோகிராமினை அனுப்பியவர்களுக்கும் தகவலைத் தருகிறது. அனுப்பியவர்கள், கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை தங்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்து, நாச வேலைகளில் ஈடுபட முடியும்.
எனவே, மைக்ரோசாப்ட் வழங்கும் செக்யூரிட்டி அப்டேட் பைலை உடனடியாக அனைவரும் பெற்று இன்ஸ்டால் செய்திட வேண்டும் என மற்ற ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்களும் கேட்டுக் கொண்டுள்ளன. நீங்களாக அப்டேட் செய்திட வேண்டுமென்றால், ஸ்டார்ட் அழுத்தி, ஆல் புரோகிராம்ஸ் தேர்ந்தெடுத்து, இதில் விண்டோஸ் அப்டேட் என்பதில் கிளிக் செய்து அப்டேட் செய்து கொள்ளலாம். அப்போது சிஸ்டம் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும். அப்டேட் பைலை தானாக தரவிறக்கம் செய்து, தாங்கள் விரும்பிய பின்னர் இன்ஸ்டால் செய்திடும்படி சிலர் செட் செய்து இருப்பார்கள். இவர்கள் விண்டோஸ் அப்டேட் புரோகிராம், அப்டேட் செய்திடவா என மஞ்சள் நிற பலூன் வழி கேட்கையில், உடனே இன்ஸ்டால் செய்திட வேண்டும்.

நலந்தானா..!

நாம் உறவினர்களையோ, நண்பர்களையோ சந்திக்கும்போது கேட்டுக்கொள்ளும் முதல் வார்த்தை, முக்கியமான வார்த்தை, `நலந்தானா?’ என்பது! மனித வாழ்க்கையில் `நலம்’ அவ்வளவு முக்கியம் என்பதை இது உணர்த்துகிறது.

ஆனால் யாரைப் பார்த்தாலும் ஏதாவது ஒருவகையில் உடல் நலக் குறைபாட்டுடன்தான் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதை ஒரு விவாத பொருளாக மாற்றாமல், `நலமாக இருக்கிறேன்’ என்று கூறிவிடுவார்கள்.

சிலரோ, `நலந்தானா?’ என்று கேட்டு முடிப்பதற்குள், தனக்கு அங்கே வலிக்கிறது.. இங்கே வலிக்கிறது என்று புலம்பத் தொடங்கி விடுவார்கள். இந்த புலம்பல்கள் தனக்கு இருக்கும் வலியை மற்றவர்களுக்கும் ஓரளவு பரவச் செய்யும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும். அதே நேரத்தில் அவருக்கு இருக்கும் வலியும் அதிகரிக்கத்தான் செய்யுமே தவிர குறையாது.

இதுபற்றி மனநல நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

“ஒருவருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும்போது ஓரளவுக்கு அவரது மனநலமும் பாதிக்கும். மனநலம் அதி கம் பாதித்தால் உடல் ஆரோக்கியம் மேலும் பாதிக்கும். ஒரு வருடைய மனநலன் பாதிக்கப்படுவதற்கு குடும்ப பிரச்சினை, அலுவலக பிரச்சினை, சமூக சூழல் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன.

ஒருவர் தனக்கு இருக்கும் பிரச்சினை களைப் பற்றி அடுத்தவர்களிடம் புலம் பாமல் அதை எப்படி தீர்ப்பது என்று தீர்க்கும் வழியைப் பற்றிதான் ஆலோ சிக்கவேண்டும். உடல் நலம் கெடும் போது சிலருக்கு பயம் வந்துவிடும். அந்த பயமே, புலம்பலாக வெளிப் படுகிறது. அதனால் ஒருவர் தன்னிடம் புலம்பும்போது அவர் தன் ஆரோக்கியம் பற்றி நிறைய பயப்படுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியும். அதனால் மருத்துவ விஞ்ஞானத்தை நம்பி, புலம்பலை கைவிடுவதுதான் சிறந்த வழி.

குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு நோய் வந்து விட்டால் குடும்பமே அவரை சுற்றி நின்று வேதனையை வெளிபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அந்த வேதனை அவர்களை மேலும் சோர்வடையச் செய்யும். அதற்கு பதிலாக, இந்த மாதிரியான நோய்களில் இருந்து மீண்டவர்கள் பற்றிய தகவலைக்கூறி அவர்களுக்கு நம்பிக்கையையும், புத்துணர்ச்சியையும் ஊட்டவேண்டும்.

சிலர் நோயாளிகளை நன்றாக கவனிப்பதாக கருதிக்கொண்டு, அவர்கள் அருகிலே யாரை யும் விடாமல் தனிமைப்படுத்திவிடுவார்கள். அப்படி தனிமைப்படுத்தவும் கூடாது. வருவோர் போவோரிடம் அந்த நோயைப் பற்றி புலம்பி ஆறுதல் தேடவும் கூடாது. எந்நேரமும் அந்த நோயைப் பற்றியே பேசி, அதற்குள்ளே அந்த நோயாளியை மூழ்கிவிடவும் செய்யக்கூடாது.

நோயாளிகளாக இருப்பவர்கள், தனது நோய் தாக்குதல்தன்மை ஒருபுறத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சையை முறைப்படியாக எடுத்துக்கொண்டு, தனக்கென்று இருக்கும் வேலையை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்.

சிலர் முழு ஆரோக்கியத்துடன் இருப்பார்கள். அவர்களிடம், `நலந்தானா?’ என்று கேட்டால், கேட்ட ஆள் `போதுமய்யா நிறுத்தும்’ என்று சொல்லும் அளவுக்கு தன் குடும்ப பிரச்சினை, வேலை பிரச்சினைகளைக்கூறி புலம்பித் தீர்த்துவிடுவார்கள். எதிரில் இருப்பவருக்கு வாழ்க்கை வெறுத்துவிடும் அளவுக்கு இருக்கும் அந்த புலம்பல். இந்த புலம்பல்வாதிகள், `நம்மிடம் இருக்கும் கொஞ்ச சந்தோஷத்தையும் நீர்த்துபோய்விடச் செய்வார்கள்’ என்று கருதி மறுநாள் அவர் அருகில்கூட செல்லாமல் நழுவிவிடுவார்கள்” என்று விளக்கு கிறார்கள்.

உங்களிடம் புலம்பல் இருக்கிறதா? அது ஒரு வேண்டாத விருந்தாளி. அதை உங்களோடு வைத்துக்கொள்ளாதீர்கள். சீக்கிரம் அதை மூட்டைக்கட்டி அனுப்பிவிடுங்கள்.

பெருமாளை சுற்றி வருவது ஏன்?

நட்சத்திர சத்ரயாகம் நடந்து முடிந்ததும், தம் ஆசனத்தில் அமர்ந்தார் சூதபுராணிகர். அவரைச் சுற்றி வந்தமர்ந்தனர் பல முனிவர்கள். அவர்களில் ஒரு முனிவர், “பாவ ஜென்மமான நாய், வைகுந்த பதவி அடைய முடியுமா?’ என்று சூதபுராணிகரிடம் கேட்டார்.
“ஓ… முடியுமே!’ என்று சொல்லி, ஒரு சின்ன கதையை சொன்னார்:
ஒரு கிராமத்தில், ஒரு பெருமாள் கோவில் இருந்தது. அதன் வாசலில், ஒரு நாய் படுத்துக் கொண்டிருப்பது வழக்கம். தினமும் பெருமாளுக்கு நிவேதனம் செய்யும் பிரசாதத்தை, பக்தர்களுக்கு வழங்குவர். அந்த பிரசாதத்தை சாப்பிட்டபடி, பெருமாளை சுற்றி வருவர் பக்தர்கள்.
அப்படி வரும்போது, அந்த பிரசாதம் கோவில் பிரகாரத்தில் சிந்தி விடும். பிரசாதத்தை பொறுக்கி சாப்பிட்டபடி, பிரகாரத்தை சுற்றி வரும் அந்த நாய். இப்படியே பல நாட்கள் பிரசாதத்தையும் சாப்பிட்டு, பெருமாளையும் சுற்றி வந்தது. ஒரு நாள், அது மரணமடைந்தது. அந்த ஜீவனை, தர்மராஜன் முன் நிறுத்தினர் எமதூதர்கள்.
கணக்கை பார்த்துவிட்டு, “இந்த நாய், பெருமாள் பிரசாதத்தை சாப்பிட்டுவிட்டு, பெருமாளையும் பிரதட்சணம் செய்துள்ளதால், இது, வைகுந்தம் போக வேண்டும்…’ என்றான் சித்ரகுப்தன். பூலோகத்தில், சாட்சி தேவதைகள் என்று சில தேவதைகள் சுற்றி வருவதுண்டு. யார், யார் என்ன புண்ணியம், பாவம் செய்துள்ளனர் என்று தெரிந்து, தர்மராஜன் சபைக்குப் போகும். சித்ரகுப்தன்
ஒவ்வொரு ஜீவனும் செய்த பாவ புண்ணியங்களை, தர்மராஜனிடம் தெரிவிப்பான். சாட்சி தேவதைகளைப் பார்த்து, “இது நிஜமா!’ என்று கேட்டான் தர்மராஜன்.
சாட்சி தேவதைகளும், “ஆமாம்!’ என்றனர். அதன்பின் அந்த நாயின் ஆத்மா, வைகுந்தம் போகலாம் என்று தீர்ப்பு வழங்கினான்
தர்மராஜன். உடன் விஷ்ணு தூதர்கள் வந்து, அந்த ஜீவனை வைகுந்தம் அழைத்துப் போயினர். எந்த ஜீவனாக இருந்தாலும், பெருமாள் பிரசாதத்தை உண்டு, பெருமாளை சுற்றி வந்தால் போதும், வைகுந்த பதவி கிடைக்கும் என்று இந்தக் கதையை சொல்லி முடித்தார் சூதபுராணிகர். இதைக் கேட்ட முனிவர்கள், “பெருமாள் பிரசாதத்துக்கும், பெருமாளை சுற்றி வருவதற்கும் இவ்வளவு புண்ணியம் உள்ளதே!’ என்று ஆச்சரியப்பட்டனர்.

ஹெட்செட் பயன்களும் டிப்ஸ்களும்

போனுடன் இணைக்கப்படும் ஹெட்செட்கள் தொலைதொடர்பு செயல்பாட்டில் பல பயன்களைத் தருகின்றன. மொபைல் போனுடன் இவை இணைக்கப் படுகையில் இவை தரும் வசதிகள் பல நோக்கில் உள்ளன. (பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் லேண்ட்லைன் போன்களுடனும் ஹெட்செட்களை இணைந்து செயல்படுத்தலாம்.)
1. எந்த வகையான போனுடனும் ஹெட்செட் இணைக்கப்படுகையில், நம் கைகள் சுதந்திரமாகச் செயல்படும் நிலையைப் பெறுகின்றன. கார் ஓட்டலாம்; கம்ப்யூட்டர் இயக்கலாம்; போனில் வரும் செய்திகளைக் குறித்து வைக்கலாம். இவ்வாறு பணியாற்றும் இடத்தில் நம் திறனை முழுமையாகப் பயன்படுத்த நமக்கு ஹெட்செட்கள் உதவுகின்றன.
2. சரியான முறையில் அமர்ந்து செயல்பட நமக்கு ஹெட்செட்கள் உதவுகின்றன. மொபைல் போனை தோளுக்கும் சாய்ந்த தலைக்கும் இடையே வைத்துக் கொண்டு, பைசா நகரத்து சாய்ந்த கோபுரம் மாதிரி நடக்க வேண்டியதில்லை. மேலும் இவற்றைத் தொங்க விடுவதனால் டேபிளில் இடம் பிடிக்காது. தற்போதைய வயர்லெஸ் ஹெட்செட்களில் இந்த பிரச்னைக்கு இடமே இல்லை.
3. பெர்சனல் கம்ப்யூட்டருடன் ஹெட்செட் இணைக்கப்படுகையில், இன்டர்நெட்டில் இன்னொரு முனையில் இருப்பவருடன் பேசிட மிக உதவியாய் உள்ளது. போனில் விளையாடுகையிலும் இது ஒரு நல்ல அனுபவத்தினைத் தருகிறது.
இதனை வாங்குகையில் சில அம்சங்களைப் பார்த்து வாங்க வேண்டும்.
1. முதலாவதாக கிடைக்கும் ஒலியின் தன்மை தொலைதொடர்பு கொள்வதுதான் நம் முக்கிய நோக்கமாக இருப்பதால் ஹெட்செட் தரும் வாய்ஸ் துல்லிதமாக இருக்க வேண்டும். இதற்காக சற்று கூடுதலாகப் பணம் செலவழித்தாலும் பரவாயில்லை.
2. மைக்ரோபோனின் தன்மை: பேசுவது எப்படி கேட்கப்பட வேண்டுமோ அதே போல நாம் பேசுவதனையும் துல்லிதமாகக் கிரஹித்து அனுப்பும் மைக்ரோபோன் ஹெட்செட்டில் இருக்க வேண்டும். மேலும் நம் வாய் அருகே தான் இருக்க வேண்டும் என்று இல்லாமல் ஹெட்செட்டை மாட்டிய நிலையில் நம் வாய்ஸ் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
3. காதில் அல்லது தலையில் சரியாக பொருந்தி இருக்க வேண்டும். சில ஹெட்செட்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் தான் தலையில் மாட்ட முடியும். அப்படி இல்லாமல் யாருடைய தலையிலும் பொருந்தும்படி இருக்க வேண்டும்.
4. இத்துறையில் நல்ல அனுபவம் பெற்ற நிறுவனங்களின் ஹெட்செட்களை வாங்கிப் பயன்படுத்துவது நல்லது. மலிவான விலையில் கிடைக்கும் ஹெட்செட்கள் நாளடைவில் அதனை இணைக்கு வயர்களில் பிரச்னை ஏற்பட்டு இயங்காமல் போய்விடலாம்.

புலியுடன் கயிறு இழுக்க ரெடியா?

புலி வாலைப் பிடிப்பது என்ற பழமொழியை கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால், புலியின் வாயில் கயிறை வைத்து, இழுக்கும் போட்டியை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், புஜ் கார்டன் என்ற மிருக காட்சி சாலையில் தான், இந்த வித்தியாசமான நிகழ்வு அரங்கேறுகிறது. இங்கு 2,700க்கும் மேற்பட்ட மிருகங்கள், வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மிருக காட்சி சாலையில், பார்வையாளர்களை கவர்வதற்காக, அவ்வப்போது வித்தியாசமான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். தற்போது நடத்தப்பட்டு வரும் போட்டி தான், புலியுடனான கயிறு இழுக்கும் போட்டி.
இந்த மிருக காட்சி சாலையில், 200 கிலோ எடையுள்ள பெங்கால் புலியை, கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ளனர். கம்பி வேலியின் நடுவில், சிறிய துளை போடப்பட்டு, அதில், தடித்த, உறுதியான கயிறு ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்த கயிறின் ஒரு முனை, கம்பி வேலிக்குள் இருக்கும் புலியின் வாயில் கொடுக்கப்படும். மற்றொரு முனை, வேலிக்கு வெளியில் உள்ள போட்டியாளர்களின் கைகளில் கொடுக்கப்படும். போட்டி துவங்கியதும், ஒரு பக்கம் புலியும், மற்றொரு பக்கம் போட்டியாளரும், கயிறை பலம் கொண்ட மட்டும் இழுப்பர். போட்டியில் பங்கேற்ற பார்வையாளர் வெற்றி பெற்றால், அவருக்கு பரிசு அளிக்கப்படும். அதே நேரத்தில், புலி வெற்றி பெற்றால், அதற்கு ஐந்து கிலோ இறைச்சி, கூடுதலாக, வழங்கப்படும்.