Daily Archives: ஜூலை 26th, 2012

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு பதிவு பண்ணலாமா?

“தமிழ்நாடு திருமணப் பதிவுச் சட்டம்’ 2009ஆம் வருடம் நவம்பர் மாதம் 24ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அந்தத் தேதிக்குப் பிறகு, மாநிலத்தில் நடக்கிற அனைத்து திபருமணங்களும், திருமணத் தேதியிலிருந்து 90 நாட்களுக்குள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும், என இந்தச் சட்டம் சொல்கிறது.

எங்கே பதிவு செய்ய வேண்டும்?
கணவரது சொந்த ஊர், மனைவியின் சொந்த ஊர், தம்பதி வசிக்கும் இடம், திருமணம் நடந்த இடம் என ஏதாவது ஒரு பகுதிக்குரிய சார்பதிவாளர் அலுவலகத்தில் திருமணத்தைப் பதிவு செய்யலாம். பதிவு செய்யும்போது, கணவன், மனைவி மற்றும் இரண்டு சாட்சிகள் தேவை. திருமணப் பதிவின்போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் சில உண்டு. பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன்கார்ட், வருமானவரித்துறையால் வழங்கப்பட்ட பான்கார்ட், அரசு அல்லது அரசுத்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சல் அலுவலக பாஸ் புத்தகம், முதியோர் பென்ஷன் புத்தகம், துப்பாக்கி லைசென்ஸ், சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, பள்ளி இறுதிச் சான்றிதழ் இவற்றில் ஏதாவது ஒன்றின் பிரதி. கணவன், மனைவியின் வயதுக்கான ஆதாரம், திருமண அழைப்பிதழ் பிரதி அல்லது திருமணம் நடந்த இடத்தை உறுதிப்படுத்தும் விதமாக வேறு ஏதாவது ஆதாரம் போன்வற்றை அளிக்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
சம்பந்தப்பட்ட அலுவலரிடம், திருமணத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை இலவசமாகப் பெறலாம். அதனுடன் தேவையான ஆவணப் பிரதிகளை இணைத்து, நூறு ரூபாய் கட்டணத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். திருமண நாளிலிருந்து தொண்ணூறு நாட்களுக்குள் திருமணத்தை பதிவு செய்யாமல் போனால், அடுத்த சில நாட்களுக்குள் பதிவு செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்போது கட்டணம் 150 ரூபாய்.

அப்போதும் பதிவு செய்யவில்லை என்றால்?
திருமணம் நடந்த 150 நாட்களுக்குள் பதிவு செய்யாவிட்டால் இன்ன தண்டனை என்று சட்டத்தில் கூறப்படவில்லை. ஆனாலும், என் அனுபவம் மற்றும் பொது அறிவின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால், வரையறுக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் பதிவு செய்யாமல், அதன் பிறகு விண்ணப்பித்தால், சார்பதிவாளர் பதிவு செய்ய மறுக்கலாம். அப்போது, அவரது மறுப்பை எதிர்த்து, மாவட்ட பதிவாளரிடம் மேல் முறையீடு செய்யலாம். அவரும் மறுத்தால் மாநிலத் தலைமை பதிவாளரிடம் முறையீடு செய்யலாம்.

இத்தனை நாட்களாக இல்லாத இப்படி ஒரு கட்டாயச் சட்டம் இப்போது என்ன அவசியம்?
பிறப்பு-இறப்பைப் போல நாட்டில் நடைபெறும் திருமணங்களையும் பதிவு செய்ய வேண்டியது அவசியம் என்று நம் மத்திய அரசாங்கம் கருதியதால், திருமணப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன் அடிப்படையில் பல்வேறு மாநில அரசுகளும் திருமணங்களைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளன.

இந்தச் சட்டத்தால் என்ன பலன்?
ஒருவரது திருமணம் குறித்து எந்தப் பிரச்னை எழுந்தாலும், அதுபற்றிய சட்டபூர்வமாக, தெளிவான முடிவுகள் எடுப்பதற்கு இந்தத் திருமணப் பதிவு மிகவும் உபயோகமாக இருக்கும். ஒருவர், பலரை ஏமாற்றித் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்களில்கூட அந்த ஆசாமி நாலு திருமணங்களையுமே பதிவு செய்திருந்தாலும்கூட அந்தப் பதிவுச் சான்றிதழ்கள், அந்தக் கேசில் முக்கியமான சில முடிவுகளை எடுக்க முக்கிய ஆதாரமாக அமையும்.

இந்தச் சட்டம் எல்லா ஜாதியினருக்கும், மதத்தினருக்கும் பொதுவானதா?
ஆமாம்! எந்த மதத்தினராக, ஜாதியினராக இருந்தாலும், இந்தச் சட்டப்படி கட்டாயமாக தங்கள் திருமணத்தைப் பதிவு செய்ய வேண்டியது அவசியம். இன்னும் சொல்லப் போனால், இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவ திருமணச் சட்டம் 1872, சிறப்புத் திருமணச் சட்டம் 1954, முகமதியர்கள் ஷரியத் திருமணச் சட்டம் மற்றும் வேறு எந்த தனிப்பட்ட சட்டங்களின் கீழ் திருமணம் பதிவு செய்யப்பட்டிருந்தாலும்கூட இந்தச் சட்டத்தின் மூன்றாவது பிரிவின் கீழ் கட்டாயமாகப் பதிவு செய்யப்படுவது அவசியம்.
அதுமட்டுமல்ல, ஒருவருடைய திருமணப் பதிவு குறித்த தகவல்களையும் அறிய முறைப்படி விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, தஸ்தாவேஜ்களைப் பார்வையிடவும், பிரதிகள்கேட்டுப் பெறவும் சட்டத்தில் வழி இருக்கிறது.

`கோமா’வுக்கு காரணம்

மனிதர்களுக்கு நீண்டகாலம் நினைவு பாதிக்கப்படுவது `கோமா’ எனப்படுகிறது. இந்த கோமா எப்படி ஏற்படுகிறது?

இதற்கு மருத்துவர்கள் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அவற்றில் முக்கியக் காரணம், மூளையில் அடிபடுவது. மூளையின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு காலகட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை நினைவில் வைத்துக்கொள்ளும் தன்மையுடையவை. அத்தகைய மூளை அடிபட்டு உள்ளே ரத்தக் கசிவு ஏற்பட்டால் மூளையின் அனைத்துப் பகுதிகளுமோ அல்லது ஒரு பகுதி மட்டுமோ செயலிழக்கிறது. மூளையின் ஒரு பகுதி மட்டும் பாதிக்கப்படும்போது அந்தக் காலகட்ட நினைவுகள் மட்டும் பாதிக்கப்படும். அந்த நினைவுகள் மீண்டும் வராமல் போகும். இது ஒருவகை கோமா என்று அழைக்கப்படுகிறது.

இன்னொரு வகை கோமாவில் மூளையில் சகல பகுதிகளும் பாதிக்கப்படுகின்றன. ஆனால் அனிச்சைச் செயல்களான சுவாசத்தையும், இதயத்துடிப்பையும் மட்டும் எதுவும் செய்வதில்லை. அதனால் உயிர் மட்டும் இருக்கும். விளைவு, கோமா.

மற்றொரு காரணம், `ஸ்ட்ரோக்’. மூளைக்குள் ரத்தக் கட்டி ஏற்பட்டு அல்லது அதிக ரத்த அழுத்தத்தால் மூளைக்குள் ரத்தம் கசிந்து மூளைச் செல்களைக் கடுமையாகப் பாதிக்கும். அதை `செரிப்ரல் திராம்பாசிஸ்’, `செரிப்ரல் எம்போசிஸ்’ என்று பிரிக்கிறார்கள்.

மூளையில் சேதம் அதிகம் இல்லையென்றால் கோமாவில் இருந்து வெளியே வருவது சுலபம். நிறையப் பேர் அவ்வாறு மீண்டிருக்கிறார்கள். சிலர் வருடக் கணக்கில் கோமாவில் இருந்துவிட்டு வெளியே வந்து நலமாக வாழ்கிறார்கள். இறுதிவரை அப்படியே இருந்து இறந்து போகிறவர்களும் உண்டு. கோமாவில் இருந்து மீள்வதும், மீளாததும் மூளையில் ஏற்படும் சேதத்தின் அளவைப் பொறுத்தது.

பொதுவாக தலையில் அடிபடாமல் பார்த்துக்கொள்வது அவசியம். இருசக்கர வாகனம் ஓட்டும்போது கண்டிப்பாக தலைக்கவசம் (ஹெல்மட்) அணிய வேண்டும்.

வேர்ட் 2003 டிப்ஸ்

வேர்ட் பாரா பார்மட்டிங்
வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா? இடது, வலது, நடு என பாரா இணையாக அமைவதை மாற்றி அமைக்க எண்ணமா? இதற்கெல்லாம் முழு பாராவினையும் நீங்கள் செலக்ட் செய்திட வேண்டியதில்லை. பாராவில் ஒரு சிறு பகுதியை செலக்ட் செய்து, தேவையான மாற்றத்திற்கான கட்டளையைத் தரவும். அது அப்படியே பாரா முழுவதும் மேற்கொள்ளப்படும்.

எளிதில் பைல் பெற்றுத் திறக்க
வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமென்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது.
வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர், File Name என்ற கட்டத்தில் நிற்கிறது. நீங்கள் N என்ற எழுத்தில் தொடங்கும் டாகுமெண்ட் பைல்களின் பட்டியலை மட்டும் பெற விரும்பினால், N*.doc என டைப் செய்து என்டர் தட்டவும். உடன், அந்த ட்ரைவில் உள்ள டைரக்டரிகள், அல்லது போல்டர்கள் முதலாவதாகவும், பின்னர் N என்ற எழுத்தில் தொடங்கும் பைல்கள் அடுத்ததாகவும் கிடைக்கும். இனி இதில் நீங்கள் விரும்பும் பைலைத் தேர்ந்தெடுத்து திறக்கலாம். அதிக பைல்களை ஒரு போல்டரில் வைத்திருக்கையில் இந்த கட்டளை உங்களுக்குப் பயன் தரும். டாகுமென்ட் பைல்கள் மட்டுமின்றி, வேறு எக்ஸ்டன்ஸ்கள் கொண்ட பைல்களையும் பட்டியலிட்டுக் கேட்கலாம். எடுத்துக்காட்டாக, டெக்ஸ்ட் பைல் ஒன்றைத் திறக்க வேண்டும் எனில் பொதுவாக *.txt எனக் கொடுத்துப் பெறலாம். இந்த வகைப் பைல்களில் கு என்ற எழுத்தில் தொடங்கும் பைல் மட்டும் வேண்டும் எனில், S*.txt என டைப் செய்து பட்டியலைப் பெறலாம்.

பக்க எண்கள் சொற்களாக
வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமென்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக இருக்கும். அந்த ஆசையைப் பூர்த்தி செய்திட கீழ்க்கண்டபடி செயல்படவும்.
1. வழக்கம்போல பக்க எண்களை இணைக்கவும்.
2. அதன் பின் பக்க எண்ணுக்குரிய பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு பக்க எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று இருமுறை கிளிக் செய்திடவும். பக்க எண் பேஜ் ஹெடர் அல்லது புட்டரில் தான் இருக்கும். இப்போது அந்த இடம் முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டு புள்ளிகள் கொண்ட கோடுகளால் கட்டம் கட்டப்பட்டு காட்டப்படும். இதில் எண் இருக்கும்.
3. இனி இந்த எண்ணுக்கான பீல்டைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது எங்கே இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இந்த எண் அருகே கர்சரைக் கொண்டு சென்று ஷிப்ட்+எப்9 அழுத்தவும். எண்ணுக்கான பீல்டு கிடைக்கும். பீல்டு தேர்ந்தெடுக்கப்பட்டு கிரே கலரில் காட்டப்படும். பீல்டில் PAGE என்று தெரியும். இது தான் அதனுடைய குறியீடு.
4. இனி இந்த குறியீட்டிற்குப் பதிலாக \* CardText என டைப் செய்திடவும்.
5. பின் மீண்டும் எப்9 கீ அழுத்தினால் எண் இலக்கமாக இருப்பது மாற்றம் பெற்று எழுத்தில் கிடைக்கும். எடுத்துக்காட்டாக முதல் பக்கத்தில் 1 என்பதற்குப் பதிலாக One என இருக்கும்.

மிருகங்களின் பெயர்கள்

ஆங்கிலத்தில் காடு மற்றும் வீடுகளில் வாழும் அல்லது வளர்க்கப்படும் மிருகங்களை எப்படி அழைப்பது? இந்த சந்தேகம் இது குறித்து எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக, ஆடு ஒன்றை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது goat/sheep எது சரி?
பெண் ஆட்டிற்கான சொல் என்ன? ஆடுகள் கூட்டமாக இருந்தால் அதனை எப்படிக் குறிப்பிடுவது? குட்டி ஆட்டினை எந்தப் பெயர் சொல்லி அழைப்பது? டிக்ஷனரியைப் புரட்டினாலும், அதற்கான ஏதேனும் ஒரு பெயர் தெரியாமல் கண்டறிவது கஷ்டமல்லவா? இந்த வகையில் உதவி செய்திட ஓர் இணைய தளம் உள்ளது. அதன் முகவரி http://www.enchantedlearning. com/subjects/animals/ Animalbabies.shtml. இந்த தளத்தில் நுழைந்தவுடன், அகரவரிசையில் மிருகங்களின் பெயர்ப்பட்டியல் காணப்படுகிறது. அதன் அருகிலேயே Animal, Male, Female, Baby, and Group எனப் பட்டியல் வரிசை தரப்பட்டு அதன் பெயர்கள் தரப்பட்டுள்ளன.
ஏதேனும் ஒரு மிருகம் குறித்து மேலும் கூடுதல் தகவல்கள் அறிய வேண்டுமானால், மிருகத்தின் பெயரில் கிளிக் செய்தால், இன்னொரு தளத்திற்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள்.
அதில் பலவகையான தகவல்களைப் பெறலாம். எடுத்துக்காட்டாக, ஆடு குறித்து அறிய goat என்னும் பெயரில் கிளிக் செய்த போது, பத்தாயிரம் ஆண்டுகளாகத்தான் ஆடு, வீட்டில் வளர்க்கப்படும் பிராணியாக மாறியது என்ற தகவல் கிடைக்கிறது.
காடுகளில் இவை வளர்ந்தால் 12 ஆண்டுகள் வரை வாழும் என்ற உண்மையும், ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு ஆடுகளுக்கும் கொம்பு மற்றும் தாடி உண்டென்றும் அறியப்படுகிறது. இப்படியே பல தகவல்கள் நமக்கு அதிசயத்தக்க வகையில் கிடைக்கின்றன. குழந்தைகளை இந்த தளத்திற்குப் பழக்கிவிடுங்கள். பல கூடுதல் தகவல்களை அவர்களாகவே அறிந்து கொள்வார்கள். நீங்களும் அறிந்து கொள்ளலாம்.

விண்டோஸ் 8: இன்ஸ்டலேஷன்

விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ குறித்த தகவல்களை அளித்த பின்னர், பல வாசகர்கள் தொடர்ந்து பல முனைக் கேள்விகளை அனுப்பிக் கொண்டுள்ளனர். எல்லாருக்கும் தங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்ஸ்டால் செய்து பார்க்க ஆவல். அண்மையில் நிறுவனம் ஒன்றின் நேர்முக தேர்வுக்கு, தேர்வாளர்களில் ஒருவராக நான் சென்ற போது, மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றிலிருந்து பி.இ. இறுதியாண்டு தேர்வு எழுதிய மாணவர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் தான் கொண்டு வந்திருந்த தன் லேப்டாப் கம்ப்யூட்டரில், விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்திருந்தார். அதில் விண்டோஸ் 7 சிஸ்டமும் இயங்கியது. டூயல் பூட் ஓ.எஸ். அமைத்திருப்பதாகக் கூறிய அவர், யு.எஸ்.பி. ட்ரைவ் ஒன்றில், விண்டோஸ் 8 வைத்திருப்பதாகவும், அதிலிருந்து தான் டூயல் பூட் முறையில், விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்ததாகவும் கூறினார். மிகவும் நம்பிக்கையுடன் தன் புரோகிராம்களை இயக்கிக் காட்டினார்.
இதோ, நம் வாசகர்கள் அனைவருக்கும் டூயல் பூட் முறையில், ஒரு யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து எப்படி விண்டோஸ் 8 இன்ஸ்டால் செய்வது என்று பார்க்கலாம்.
1. முதல் படி: முதலில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 யு.எஸ்.பி./டி.வி.டி. டூலினை தரவிறக்கம் செய்திடவும். இதற்கான தளங்களின் முகவரிகள் :http://www.tech spot.com/downloads/5330windows8releasepreview.html மற்றும் http:// www.techspot. com/downloads/4911windows7usbdvddownloadtool.html. உங்களுக்கு விண்டோஸ் 8 தொகுப்பின் எந்த வெர்ஷன் (64 பிட் அல்லது 32 பிட்) தரவிறக்கம் செய்திட வேண்டும் என்ற குழப்பம் இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் அண்மையில் வாங்கப்பட்டிருந்தால், 64 பிட் பதிப்பினையே செய்திட பரிந்துரைக்கிறேன். இரண்டு பிட் பதிப்புகளுக்கிடையே என்ன வேறுபாடு என அறிந்து கொள்ள ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள், http://www.techspot. com/ news/ 35624techtipoftheweekshouldyouinstallwindows732bitor64bit.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ள வழி காட்டுதல்களைப் படிக்கலாம். வேறுபாடுகளும் புரியும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்கு, 1 ஜிபி ராம் கூடுதலாகத் தேவைப்படும். ஸ்டோரேஜ் அதற்கென 4 ஜிபி வேண்டும். இது அநேகமாக பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இருக்கும்.
2. இரண்டாம் படி: பூட் செய்யக்கூடிய விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினைத் தயார் செய்திடவும். இதற்கு 4 ஜிபிக்கும் அதிகமான கொள்ளளவு உடைய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, கம்ப்யூட்டரில் அதற்கான ட்ரைவில் இணைக்கவும். இப்போது தரவிறக்கம் செய்த Windows 7 USB/DVD டூலை இன்ஸ்டால் செய்திடவும். இந்த டூல் செயல்படத் தொடங்கியவுடன், பிரவுஸ் செய்து, உங்களின் யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்த விண்டோஸ் 8 ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறிய முடியும். இச்செயல்பாட்டின் போது உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும் என்பதால், முக்கிய அல்லது அனைத்து பைல்களுக்கும் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் காப்பி எடுக்க, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் வேகத்தைப் பொறுத்து 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.
3.மூன்றாம் படி: விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கான கீ (key: TK8TP9JN 6P7X7 WWRFFTVB7QPF) உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களில் தேவையானதை, அல்லது அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையினை நீங்கள் ஏற்கனவே எடுத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மீதே நீங்கள் மீண்டும் சிஸ்டம் அமைப்பதாக இருந்தாலோ, அல்லது அப்கிரேட் செய்வதாக இருந்தாலோ, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவின் ரூட் டைரக்டரியைத் திறந்து, அதில் உள்ள Setup.exe பைலை இயக்கவும்.
இதில், விண்டோஸ் 7 பயனாளர்கள், எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், அப்கிரேட் செய்யப்படுவதனை உணர்வீர்கள். ஏனென்றால், புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் இம்போர்ட் செய்யப்படும். ஆனால், விண்டோஸ் 8, விஸ்டாவிலிருந்து புரோகிராம்களை சேவ் செய்திடாது. அதே போல விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்தும் புரோகிராம்கள் சேவ் செய்யப்பட மாட்டாது.
உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் சிஸ்டத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை டூயல் பூட் ஆக அமைக்க திட்டமிட்டால், நீங்கள் இன்னொரு ஸ்டோரேஜ் சாதனத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்; அல்லது புதிய பார்ட்டிஷன் ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய பார்ட்டிஷனை உருவாக்க சற்று கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம். இந்த சிஸ்டத்தில் உள்ள Windows’ Disk Management application என்ற (Start > search for Disk Management) அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் லோட் ஆனவுடன், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ட்ரைவினைக் காணலாம். கீழ்க்காணும் முறையில் செயல்படவும்:
* எந்த ட்ரைவில் விண்டோஸ் 8 அமைக்க விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “Shrink Volume” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்குக் குறைந்தது 20 ஜிபி இடம் தேவைப்படும் என்பதால், அதற்கேற்ப ட்ரைவ் தேர்ந்தெடுக்கவும்.)
* தொடர்ந்து, “Unallocated” என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “New Simple Volume” என்று ஒன்றை உருவாக்கவும்.
* இவ்வகையில் கிடைக்கும் ட்ரைவ் எழுத்தைத் தேர்ந்தெடுத்து, அதனை quick format முறையில் பார்ட்டிஷன் செய்திடவும். இதனை NTFS பார்மட் பைல் வகையில் பார்ட்டிஷன் செய்வது அவசியம்.
இந்த ட்ரைவ் வால்யூமிற்கு ஏதேனும் ஒரு பெயர் கொடுக்கலாம். விண்டோஸ் 8 எனப் பெயர் கொடுப்பது, நமக்கு அதனை எளிதாக அடையாளம் காட்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், Partition Logic போன்ற ஏதேனும் ஒரு தர்ட் பார்ட்டி டூல் மூலம், ட்ரைவ் பார்ட்டிஷன் செய்வது நல்லது. இந்த வழியிலும் மேலே கூறப்பட்ட அதே வழிகளையே பின்பற்ற வேண்டியதிருக்கும். ஒரு வால்யூம் ட்ரைவினைச் சுருக்கி, இன்னொன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கிய பின்னர், மைக்ரோசாப்ட் இன்ஸ்டலேஷன் புரோகிராம் உங்களை எளிதாக வழி நடத்தும். விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்கி, custom installation என்பதனைத் தேந்தெடுக்கவும். புதியதாய் நீங்கள் உருவாக்கிய பார்ட்டிஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்குவதில் சிக்கல் இருந்தால், பயாஸ் செட் அப்பில், உங்கள் சிஸ்டம் ட்ரைவிற்கு முன்னால், யு.எஸ்.பி. ட்ரைவினை அமைக்க வேண்டியதிருக்கும். பூட் ஆப்ஷன்ஸ் பகுதியில் இதனை அமைக்கலாம். சரி, விண்டோஸ் 8 சிஸ்டம் அமைத்த பின்னர், அது தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், நீக்குவதும் எளிதாக அமையும்.
உங்களுடைய முதன்மை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழைந்து, பார்ட்டிஷன் சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கவும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் Disk Management இயக்க வேண்டும். பின்னர், விண்டோஸ் 8 வால்யூமினை டெலீட் செய்திடுங்கள். மீதமுள்ள பகுதியை நீக்கிய இந்த பகுதியின் நீட்சியாக மாற்றவும். விண்டோஸ் 8 நீக்கப்பட்டதால், உங்கள் பூட் லோடர் பிரச்னைகுள்ளாகி, ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதில் சற்றே சிக்கல் ஏற்படலாம். கவலையே பட வேண்டாம். இது சின்ன பிரச்னைதான். விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 பயன்படுத்துபவர்கள், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் அப் ரிப்பேர் டூலைப் பயன்படுத்தி சரி செய்துவிடலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் தான் சற்று கூடுதல் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். சுற்றி வளைத்து விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே மீண்டும் பதிய வேண்டியதிருக்கலாம். இவர்கள் விளக்கமான நடைமுறைக்கு http://www. techspot.com /guides/144removingwindows7/page2.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் காட்டப்பட்டுள்ள வழிமுறையினைப் பின்பற்றலாம்.

ரோபாட் ஓட்டல்!

சீனாவின் ஹார்பின் நகரத்தில், வித்தியாசமான ஓட்டல் உள்ளது. இதில் பணிபுரியும் வரவேற்பாளரில் இருந்து, சர்வர் வரை, அனைத்துமே ரோபாட்கள் தான். இந்த உணவகத்துக்கு, ரோபாட் ஓட்டல் என்று தான் பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓட்டலில், 18 ரோபாட்கள் உள்ளன. வாடிக்கையாளர் உள்ளே நுழைந்ததும், “ரோபாட் உணவகம் உங்களை வரவேற்கிறது…’ என பதிவு செய்யப்பட்ட குரலில், ஒரு ரோபாட், வரவேற்கும்.
சமையல் பணியில் உதவுவதற்கும், சில ரோபாட்கள் உள்ளன. சமை யலுக்கு தேவை யான உணவுப் பொருட்களை எடுத்துக் கொடுப்பது போன்ற பணிகளை, இந்த ரோபாட்கள் செய்யும். உணவு தயாரானதும், அதை வாடிக்கையாளரிடம் கொண்டு செல்வதும், ரோபாட் தான். இவை நடந்து செல்வதற்காகவே, ஓட்டலில் பிரத்யேக வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள ஒவ்வொரு ரோபாட்டும், 1.3 மீட்டரிலிருந்து, 1.6 மீட்டர் உயரமுடையவை. பத்துக்கும் மேற்பட்ட முக உணர்வுகளை வெளிப்படுத்தும் தொழில்நுட்பமும், இந்த ரோபாட்களில் செயல்படுத்தப்பட்டுள்ளன. சீன மொழியில், ஒரு சில வார்த்தைகளை, இந்த ரோபாட்கள் பேசும். இந்த ரோபாட்களை இயக்குவதற்காக, ஓட்டலின் ஒரு பகுதியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், பத்து இன்ஜினியர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த ரோபாட்களுக்கு இரண்டு மணி நேரம், “சார்ஜ்’ ஏற்றினால், ஐந்து மணி நேரம் தொடர்ந்து செயல்படும். சீனாவைச் சேர்ந்த பிரபலமான ரோபாட் தயாரிப்பு நிறுவனம் தான், இந்த ஓட்டலை அமைத்துள்ளது. இதற்காக, 44 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது. ஒரு ரோபாட்டை வடிவமைப்பதற்கு, 22 லட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. தங்களால் தயாரிக்கப்பட்டுள்ள ரோபாட்களை பிரபலப்படுத்துவதற்காகவே, இவர்கள் இந்த ஓட்டலை துவக்கியுள்ளனர். இந்த ஓட்டலில் சாப்பிடுவதற்கு, ஒருவருக்கான சாப்பாட்டு செலவு, குறைந்தது, 1,000 ரூபாய்.
இந்த ஓட்டலுக்காக போட்ட முதலீட்டை எடுப்பதற்கு, இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பது, சம்பந்தபட்ட நிறுவனத்துக்கு நன்றாகவே தெரியும். ஆனாலும், இதைப் பார்த்து, பிரபலமான ஓட்டல் நிறுவனங்கள், ரோபாட்களை விலைக்கு வாங்கும் என்ற நப்பாசையில் இருக்கிறது, அந்த நிறுவனம். “அதெல்லாம் சரி… ரோபாட்களை பயன்படுத்துவதற்கு, பல்வேறு தொழில்கள் இருக்கும்போது, ஓட்டல் தொழிலுக்காக பயன்படுத்துவது ஏன்?’ என கேட்டால், “சீனாவில் ஓட்டல் வேலைக்கு ஆள் கிடைப்பது குதிரை கொம்பாக இருக்கிறது. இந்த சிரமத்தை குறைப்பதற்காகவே, ஓட்டல் வேலைக்கான ரோபாட்களை தயார் செய்துள்ளோம்…’ என்கின்றனர்.

பூமிக்கு வந்த பொறுமை!

பொறுமைக்கு இலக்கணமானவள் பூமிமாதா. அவள், நமக்கு உணவு, உடைக்கான பயிர்கள், அனுபவிக்கத்தக்க பலவித பொருட்களை தந்திருக்கிறாள். நாம், அவள் மேல், நம் கழிவு களையெல்லாம் கொட்டுகிறோம், பொறுமையே வடிவாய் புன்னகை ததும்பும் முகத்துடன் ஏற்றுக் கொள்கிறாள். இவளே ஆண்டாளாக, ஆடிப்பூரத் தன்று பூமியில் அவதரித்தாள்.
ராமாவதாரத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற தத்துவத்தால், லட்சுமி தாயார் மட்டும் சீதையாக அவதரித்தாள். கிருஷ்ணாவதாரத்தில் ருக்மிணியாக பிறந்தாள். விஷ்ணுவின் மற்றொரு மனைவியான பூமாதேவி, சத்யபாமாவாக பிறந்தாள். கிருஷ்ணா வதாரத்துடன், விஷ்ணுவின் அவதாரம் நிறை வடைந்தது. அவர், உலகத்துக்கு கீதையைப் போதித்திருந்தார். ஆனால், யாரும் அதைப் பின்பற்றுவதாக தெரியவில்லை. ஒருவேளை, தான் சொன்ன கீதை, மக்களுக்கு புரியவில்லையோ என்ற எண்ணத்தில் இருந்த வேளையில் தான், பூமாதேவி அவரை அணுகினாள்.
“ஐயனே… தாங்கள் ஒரு காலத்தில் வராகவதாரம் எடுத்து, ரண்யாட்சனால் கடத்தப்பட்ட என்னை மீட்டீர். ஆனால், என்னில் வசிக்கும் உயிரினங்கள், உலக ஆசையில் மூழ்கி, செய்யக் கூடாத பாவமெல்லாம் செய்கின்றன. நானும் எவ்வளவோ பொறுத்துத் தான் போகிறேன். இந்த உயிர்களை திருத்தி மீட்பதற்கு, தாங்கள் ஏதாவது செய்யக் கூடாதா?’ என்றாள்.
விஷ்ணு, அவளது கோரிக்கையை ஏற்றார். லட்சுமியிடம், “நான் பூலோகத்தில் மீண்டும் அர்ச்சாவதாரமாக (சிலை வடிவம்) அவதரிக்க உள்ளேன். நீயும் என்னுடன் வர வேண்டும்’ என்றார்.
லட்சுமி மறுத்து விட்டாள். “ராமாவதாரத்தில் உங்களோடு சீதையாக இருந்த என்னை சந்தேகப் பட்டீர்கள். கிருஷ்ணாவதாரத்தில், அந்த சத்யபாமா வோடும், இதர பெண்களோடும் இருந்து, என் மனதை படாதபாடு படுத்தினீர்கள். எனவே, இனி நான் உங்களோடு பூலோகத்துக்கு வருவதாக இல்லை’ என்றாள். பூமாதேவியிடம், “நீயாவது வருகிறாயா?’ என்றார் விஷ்ணு.
பொறுமையின் பிறப்பிடமாயிற்றே பூமாதேவி! மேலும், பகவானே தன்னிடம் கேட்கும் போது, அதிலும், தன்னில் வசிக்கும் உயிர்களை ஆசை நோயில் இருந்து மீட்பதற்காக கேட்கும் போது, விடுவாளா என்ன! “தங்களோடு வருகிறேன்’ என கிளம்பி விட்டாள்.
“சரி… ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் புண்ணிய தலத்தில், நான் வடபத்ரசாயியாக அருள்செய்து வருகிறேன். அங்கே, என் பக்தரான விஷ்ணுசித்தர் இருக்கிறார். அவரது வளர்ப்பு மகளாக நீ இருந்து வா. சமயம் வரும்போது உன்னைத் திருமணம் செய் வேன்’ என்றார்.
பூமாதேவியும், விஷ்ணுசித்தரின் கண்ணில் படும்படியாக, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள துளசி தோட்டத்தில், ஐந்து வயது சிறுமியாய் கிடைத்தாள். அந்த விஷ்ணு சித்தரே, “பெரியாழ்வார்’ என போற்றப்படுபவர். குழந்தைக்கு, “கோதை’ எனப் பெயரிட்டார்.
பூமியில் பிறந்த எல்லாருக்கும், மனிதர்கள் மீது காதல் வரும். ஆனால், கோதை தெய்வப்பிறவி யல்லவா! ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் உறையும் வடபத்ரசாயியை கிருஷ்ணராகக் கருதி, கணவனாக அடைய ஆசைப்பட்டாள். அதற்காக, கடும் விரதமிருந்தாள். ஸ்ரீவில்லிபுத்தூரை ஆயர்பாடி யாகவும், அங்குள்ள பெண்களை கோபியர்களா கவும், அவர்களில் ஒருவராக தன்னையும் இணைத்துக் கொண்டாள்.
மார்கழி மாதத்தில், தோழியருடன் இணைந்து நோன்பிருந்தாள். தன் தந்தை, அவ்வூர் இறை வனுக்கு அனுப்பும் மாலையை, தன் கழுத்தில் போட்டு அழகு பார்த்து அனுப்பி வைத்தாள். விஷ்ணுசித்தருக்கு இது தெரியவரவே, அவளைக் கண்டித்தார். ஆனால், வடபத்ரசாயியோ, “என் பக்தை கழுத்தில் அணிந்து அனுப்பும் மாலையே தான் வேண்டும்…’ என்றார். தன் மகளுக்கு ஏற்பட்ட பெருமையை எண்ணி, ஆனந்தம் கொண்டார் பெரியாழ்வார்.
“எல்லாரையும் பெருமாள் ஆள்கிறார். ஆனால், நீ பெருமாளையே ஆண்டதால், “ஆண்டாள்’ என பெயர் பெறுவாய்’ என்றார். தன் விரதத்தை முடித்த ஆண்டாள், விஷ்ணுவின் <உத்தரவுப்படி, ஸ்ரீரங்கம் சென்று அவருடன் கலந்தாள்.
ஆண்டாள், பூமிக்கு வந்ததன் நோக்கம், இந்த உலக உயிர்களை, பிறவித்தளையில் இருந்து உய்விக்க வேண்டும் என்பதற்காகத்தான். அதனால் தான், அவள் திருப்பாவை பாடினாள். கீதை, படிப்பதற்கு சிரமமானது. அதிலுள்ள கருத்துக்களை உள்ளடக்கி, எளிமையாக திருப்பாவை பாடல்களை வடிவமைத்தாள். இந்தப் பாடல் களை தினம் ஒன்றாகப்பாடு வோர், வாழும் காலத்தில் நிம்மதி யையும், வாழ்வுக் குப் பின் பிறப் பற்ற நிலையையும் அடைவர்.