Daily Archives: ஜூலை 27th, 2012

நீர்வழி தடங்களை சுத்திகரிக்க ரூ.300 கோடி நிதி: கூவம் ஆற்றில் நீச்சல் சாத்தியமாகும்?

சென்னையின் பிரதான நீர்வழி தடங்களான அடையாறு, கூவம் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 300 கோடி ரூபாய் செலவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.

சென்னை நகரின் பொருளாதார மற்றும் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப, கட்டமைப்பு வளராததால், இயற்கை ஆதாரங்களில் கழிவுநீர் மற்றும் குப்பை கொட்டுவது அதிகரித்து வருகிறது. இதனால், கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் "செத்து’விட்டதாக அண்ணா பல்கலை, கடந்த வாரம், அரசிடம் அறிக்கை கொடுத்தது. அதன்படி, இந்த நீர்வழிகளில், கலக்கும் தொழிற்சாலை மற்றும் குடியிருப்பு பகுதி கழிவுநீரால், ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து, எந்த வகை உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக இந்த ஆய்வு நடந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்த நீர்வழிகளின் நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கப் படுகிறது.

துவங்கவில்லை: முந்தைய தி.மு.க., ஆட்சியின் போது, அடையாறு, கூவம் ஆறுகள் சுத்தப் படுத்தப் படும் என்று, அறிவிக்கப் பட்டது. ஆனால், அதற்கான முதல்கட்ட பணிகள் கூட துவக்கப் படவில்லை. ஆய்வின் பேரில், முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சில "மாஜி’க்கள் சிங்கப்பூர் பயணம் மட்டும் மேற்கொண்டனர். இந்த நிலையில், சென்னையின் பிரதான நீர்வழி தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுக்க, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

அரசு உத்தரவு: இது குறித்து,நேற்று, அரசு வெளியிட்ட அறிக்கை விவரம்: சென்னை நகர நீர்வழி பாதைகளில் கழிவுநீர் கலக்க கூடிய, கூவம் ஆற்றில், 105 இடங்கள்; பக்கிங்ஹாம் கால்வாயில், 183 இடங்கள், அடையாறில், 49 இடங்கள் என, 337 இடங்களில் கழிவுநீரை சுத்திகரிக்க 300 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டு உள்ளது. இந்த பணிகளை மேற்கொள்ள முதல்கட்டமாக, 150 கோடி ரூபாயை தவணை முறையில் சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு விடுவிக்கவும் உத்தரவிடப் பட்டு உள்ளது. இதன்படி, பிரதான கழிவுநீர் குழாய்கள் அமைத்தல், சிறிய அளவிலான குழாய்களை அகற்றி, அதிக லிட்டர் கொள்ளளவு கொண்ட கழிவுநீர் உந்து குழாய்கள் அமைத்தல், சாலையோரம் சிறிய கழிவுநீரேற்றும் நிலையங்கள் அமைத்தல், ஏற்கனவே உள்ள கழிவுநீரேற்றும் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளுதல் மற்றம் ஏற்கனவே உள்ள சிறிய அளவிலான கழிவுநீர் குழாய்களை பெரிய குழாய்கள் கொண்டு மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப் படும். இதன் மூலம் சென்னையில் சுத்திகரிக்கப் படாத கழிவுநீர் ஆறுகளுடன் கலப்பது தடுத்து நிறுத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப் பட்டு உள்ளது.

லண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!

லண்டன்:ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இன்று ஒலிம்பிக் மைதானத்தில் துவக்க விழா (இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணி) வண்ணமயமாக நடக்கிறது.

ஆஸ்கர் விருது வென்ற பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்ல், துவக்க விழாவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கற்பனையில், மைதானமே ஒரு பசுமையான கிராமப்புறமாக மாற உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பங்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி, மல்யுத்த வீரர் சுஷில் குமார் வர உள்ளார். பின் ஜோதி ஏற்றப்படும். இரண்டாம் ராணி எலிசபெத், ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைக்கிறார்.

வரலட்சுமி விரதம்

கயிலாயத்தில் ஒருமுறை சிவனும் பார்வதியும் சொக்கட்டான் ஆடும் போது உமாதேவி தான் வெற்றி பெற்றதாகக் கூற சிவன் மறுத்தார்.
இருவருக்கும் கடும் வாக்குவாதம் நடந்தது.
இறுதியில் கணதேவனான சித்திரநேமியை அழைத்துப் பார்க்கச் சொல்ல, அவனோ சிவனே வெற்றி பெற்றார் என்று சொல்லிவிட்டான்.
கோபம் கொண்ட பார்வதி, “நீ பொய் கூறியதால், பெருவியாதியுடன் பூலோகத்தில் வாழ்வாயாக’ என சித்திரநேமியை சபித்தாள்.
அதிர்ந்த சிவபெருமான் தன்னால்தானே சித்திரநேமிக்கு இந்த நிலை ஏற்பட்டதை உணர்ந்து, அதற்குரிய சாப விமோசனத்தை பார்வதியே கூறவேண்டும் என்று பணித்தார்.
பார்வதியும், “பூலோகத்தில் புண்ணிய நதிக்கரையில் தேவலோகத்து கன்னிப் பெண்கள் புண்ணியமான ஒரு விரதத்தை அனுஷ்டிப்பார்கள். அந்த விரதத்தின்போது நடத்தப்படும் ஹோமத்தின் புகை உன்மீது பட்டால், உன் நோய் நீங்கும்’ என்றாள் சித்திரநேமியிடம்.
சாபத்தின்படி சித்திரநேமி நோயால் பீடிக்கப்பட்டு பூலோகம் வந்து புண்ணிய நதிக்கரையில் வாழ்ந்து வந்தான்.
ஒருநாள் தேவமங்கையர்கள் நதிக்கரைக்கு வந்து பூஜை செய்வதைப் பார்த்து அவர்களிடம் விரதம் பற்றி விளக்கம் கேட்டார்.
சிரவண மாதத்தில் சுக்லபட்ச வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்பட வேண்டிய அந்த விரதத்தைப் பற்றி கூறினர். மகாலட்சுமிக்குரிய அந்த விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் நன்மைகளையும் சொல்லினர்.
அனைத்தையும் கேட்ட சித்திரநேமி அவர்களோடு சேர்ந்து தானும் விரதம் இருந்தான். அப்போது நடத்தப்பட்டஹோமத்தின் புகை பட்டதில், சித்திரநேமியின் நோய் அகன்றது. தொடர்ந்து அதே பூஜை செய்து ஐந்து வித தர்மங்களைச் செய்த சித்திரநேமி, எல்லா சௌபாக்யங்களுடனும் கயிலாயம் சென்றான்.

வரலட்சுமி விரத நியதிகள்…
ஆடி அல்லது ஆவணி மாதம் பௌர்ணமிக்கு முன் வரக்கூடிய வெள்ளிக்கிழமையன்று சுமங்கலிகள் இந்த விரதத்தைக் கடைப் பிடிப்பார்கள்.
அன்றைய தினம் பசுஞ்சாணத்தால் வீடு மெழுகி கோலமிட்டு வீட்டிலுள்ள அனைவரும் குளித்து சுத்தமாக இருக்க வேண்டும். விரதமிருக்கும் பெண்கள் கண்டிப்பாக உபவாசம் இருக்க வேண்டும்.
பூஜையறையில் மண்டபம் போல் மேடை அமைத்து, அம்மண்டபத்தில் தரையில் நெல்லைப் பரப்பி அதன் மீது தாம்பாளத்தினை வைத்து அதில் அரிசியைப் பரப்பி, அதன் மேல் வெள்ளி அல்லது செம்பால் செய்யப்பட்ட கலசத்தில் காதோலை, கருகமணி, வளையல் உள்ளிட்ட பொருட்களை இட வேண்டும். பின் அநத செம்பின் வாயில் மாவிலைகளைச் செருகி, கலசத்தின் மேல் தேங்காய் வைத்து செம்பிற்கும் தேங்காய்க்கும் மஞ்சள் பூசி சந்தனப்பொட்டு வைத்து குங்குமம் இட்டு பூச்சூடி அலங்கரித்து வைக்க வேண்டும்.
அந்தக் கலசத்தின் முன் வெள்ளியால் செய்த வரலட்சுமி முகத்தை செருகி வைத்து பூஜையைத் தொடங்கி விரதத்துக்கு வேண்டிய நோன்புக் கயிறை கலசத்தின் மீது சாத்த வேண்டும்.
பிறகு மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்து கற்பூரம் ஏற்றி பிள்ளையாருக்கு தூப தீபம் காட்டி வழிபட்ட பின் வரலட்சுமி பூஜையை ஆரம்பிக்க வேண்டும்.
தீபங்கள் எரிய, ஊதுபத்திகள் மணம் பரப்ப, சுமங்கலிப் பெண்கள் தோத்திரப் பாடல்களைப் பாடியோ மந்திரங்கள் கூறியோ குங்குமத்தாலோ புஷ்பத்தாலோ அர்ச்சனை செய்யலாம். வேதம் அறிந்தவர்களை வைத்தும் பூஜை நடத்தலாம். “வரலட்சுமி வருவாயம்மா’ என்ற பாட்டைப்பாடி தேவியை உங்கள் இல்லாம் தேடி வரும்படி வேண்டுவது சிறப்பு.
நிவேதனப் பொருள்கள், சர்க்கரைப்பொங்கல், கொழுக்கட்டை பலகாரங்கள், சுண்டல் செய்து பழங்கள் வைத்துப் படைக்கலாம். பஞ்சபாத்திரத்தில்நீரில் துளசி போட்டு தீர்த்தமாக அனைவரும் பருகி நோன்புக் கயிறை கையில் கட்டிக் கொள்ள வேண்டும். சுமங்கலிப் பெண்களை வரவேற்று மங்களப் பொருட்களுடன் குங்குமம் வழங்கி ஆசிர்வாதம் பெற வேண்டும்.
இந்த வரலட்சுமி விரதத்தை முறையாகக் கடைப்பிடித்தால் கணவனுக்கு ஆயுள் பலமும் பெண்களுக்கு மாங்கல்ய பலமும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெருகும். இதோடு சுமங்கலி பூஜையும் செய்யலாம்.
ஒன்பது சுமங்கலிப் பெண்களை வரிசையாக நிறுத்தி, அவர்கள் பாதங்களின் கீழ் தாம்பாளத் தட்டு வைத்து நீரிட்டு அவர்களின் பாதங்களைக் கழுவி மஞ்சள், சந்தனம் பூசி, பொட்டிட்டு, மலர் தூவி வணங்கி அவர்களை அமர்த்தி இலைபோட்டு வடை பாயசத்தோடு உணவு படைத்து வழியனுப்ப வேண்டும்.
இவ்விரதம் இருப்பதால் பெண்களுக்கு சுமங்கலி பாக்கியம் உள்ளிட்ட மேலான நற்பலன்களும், ஆண்களுக்கு அனைத்துவித நன்மைகளும் கிட்டும்.

குரு-சிஷ்ய பாவம் கவியரசு கண்ணதாசன்

பண்டைய குருகுல முறைகள் இப்போது மறைந்து விட்டன.

குரு – சிஷ்ய பாவம் மறைந்து விட்டது.

ஆங்கிலக் கல்வியின் பெயரால் கல்லூரிகள் வெறும் பட்டதாரிகளையோ, காலிக் கும்பல்களையோ உற்பத்தி செய்கின்றன.

வாழ்க்கைக்குத் தேவையான ஒழுக்கத்தை இன்றையக் கல்வி போதிக்கவில்லை.

ஐந்து வருஷம் பட்டப் படிப்புப் படித்தாலும் பயனில்லாத ஒரு கல்வியையே நாம் கட்டிக்கொண்டு மாரடிக்கிறோம்.

ஒழுங்கீனமே கல்லூரியின் பிரதான அம்சமாகக் காட்சியளிக்கிறது.

சில கல்லூரிகளுக்குள் எல்.எஸ்.டி. மாத்திரைகளும், விஸ்கி பாட்டில்களும், கஞ்சாவும் தாராளமாக நடமாடுகின்றன.

அண்மையில் சென்னையில் மிகப் பிரபலமான டாக்டர் ஒருவரிடம் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் வந்தார். தொடையில் ஆபரேஷன் செய்ய வேண்டிய நிலைமையில் அவர் இருந்தார்.

அந்த டாக்டர் மருத்துவக் கல்லூரியோடு தொடர்புள்ளவர். அவருக்கு அந்தப் பெண்ணைப் பற்றித் தெரியும்.

`என்னம்மா, ஆபரேஷன் செய்யலாமா? இல்லை, ஒரு பெதடின் போட்டுக் கொள்கிறாயா?’ என்று கேட்டார்.

`பெதடினே போடுங்கள், போதும்!’ என்று கெஞ்சினார் அந்த இள நங்கை.

டாக்டர் ஆபரேஷனும் செய்யவில்லை; பெதடினும் போடவில்லை; அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார்.

இன்று கல்வியின் தரமும் கெட்டு, மாணவர்களின் ஒழுக்கமும் பாழ்பட்டு விட்டது.

ஆனால், அந்நாளில் இந்துக்கள் ஒரு வகையான குருகுலப் பயிற்சியை வைத்திருந்தார்கள்.

ராம கதையில் வரும் ராமனும், இலக்குவனும் குரு குலத்தில் பயின்றவர்கள்.

மகாபாரதத்தில் வரும் பீமனும், அர்ஜூனனும் குருகுலவாசிகள்.

இந்துப் புராணப் பாத்திரங்கள் அனைத்துமே குருகுலப் பயிற்சியில் வளர்ந்தவையே.

அதிருஷ்டவசமாக நானும் நான்கு ஆண்டுகள் குருகுல வாசம் செய்தவன்.

`குரு வாழ்க, குருவே துணை’ என்ற சுலோகத்தைச் சொன்னவன்.

நான் பயின்ற அமராவதி புதூர் குருகுலத்தில், அதிகாலை ஐந்து மணிக்கு மாணவர்களை எழுப்பி விடுவார்கள்.

வகுப்பு வாரியாக மாணவர்கள் வரிசையில் அணிவகுத்து, வகுப்பு மானிட்டரின் தலைமையில் பின் பக்கத்துக் காட்டுக்குச் செல்வோம். அங்கே கலைந்து சென்று காலைக் கடன்களை முடிப்போம்.

பிறகு மீண்டும் வரிசையாக நின்று தியான மண்டபத்துக்குத் திரும்புவோம். அங்கே நான்தான் `பிரேயர்’ பாட்டுப் பாடுவேன். மற்றும் சில மாணவர்கள் இரண்டொரு பாடல்கள் பாடுவார்கள்.

பிறகு கலைந்து சென்று எல்லோரும் கிணறுகளில் தண்ணீர் சேந்திக் குளிப்போம்.

சாப்பாட்டு விடுதியில் வரிசையாக அமர்ந்ததும், காலைப் பலகாரம் பரிமாறப்படும், அங்கேயும் சில கோஷங்கள் உண்டு.

அவற்றிலே கடைசி இரண்டு கோஷம், `காந்தியடிகள் வாழ்க! குருகுலம் நீடூழி வாழ்க!’ என முடியும்.

அந்தக் கோஷம் முடிந்த பிறகுதான் எல்லோரும் சாப்பிடத் துவங்குவோம்.

சாப்பிட்டு முடிந்ததும் வகுப்புத் துவக்கத்துக்கான மணியோசை கேட்கும்.

வகுப்புகளுக்குள் நுழைவோம்.

பள்ளிப் பாடங்களுக்கிடையிலேயே தேச பக்தியையும், தெய்வ பக்தியையும், புகட்டுவார்கள். அன்றாடச் செய்திகளையும் சொல்வார்கள்.

மாலையில் விளையாட்டு; இரவிலே மீண்டும் தியானம்; படுக்கை.

காம்பவுண்டுச் சுவரைத் தாண்டி யாரும் வெளியே போக முடியாது.

எல்லோருக்கும் வரிசை நம்பர் உண்டு. நம்பரைச் சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.

என்னுடைய நம்பர் 498, `முத்து’ என்பது என் பெயர்.

பாரதியின் கிளிப்பாட்டுகளை நான் அதிகம் பாடுவேன். அதனால் எனக்குக் `கிளிமுத்து’ என்று பட்டம்.

உடம்பு இளைத்திருந்தால், `மீன் எண்ணெய்’ கொடுப்பார்கள்.

ஓர் அழகான நூல் நிலையம் உண்டு.

சிறிய இரசாயனக் கூடம் உண்டு.

நான் பெரும்பாலும் நூல் நிலையத்தில் தான் காணப்படுவேன்.

இசை வகுப்புத் தொடங்கினார்கள்; அதில் நானும் சேர்ந்தேன்.

காலை நான்கு மணிக்கே எழுந்து பாடல் கற்றுக் கொள்ள வேண்டும்.

`சிதம்பர நாதா திருவருள் தாதா’ என்பதே நான் கற்றுக் கொண்ட முதற் பாட்டு.

வித்வான் படிப்பு ஆரம்பித்தார்கள்; அதிலும் நான் ஒரு மாணவன்.

பத்துக்குப் பத்துச் சதுர அடியுள்ள நிலத்தை ஒவ்வொரு மாணவனுக்கும் கொடுப்பார்கள். அதில் அவனுடைய விவசாயத் திறமையைப் பார்ப்பார்கள்.

ஆளுக்கு ஒரு கன்றுக்குட்டி கொடுப்பார்கள். அதில் மாணவனுடைய கால்நடைப் பராமரிப்புத் திறமையைப் பார்ப்பார்கள்.

உள்ளேயே ஏராளமான கைத்தறிகள் உண்டு. மாணவன் அங்கே போய்த் தறி நெய்யக் கற்றுக் கொள்ளலாம்.

நான் அடிக்கடி அதில் தான் கவனம் செலுத்துவேன்.

ஒருநாள் ஒரு முழு வேட்டியையே நெய்து விட்டேன்.

நாங்கள் நெசவு செய்த வேட்டியைத்தான் நாங்கள் கட்டிக் கொள்வோம்.

சில தொழில் நெசவாளர்களும் அமர்த்தப்பட்டிருந்தார்கள். அதனால் வெளியில் துணி வாங்குவதே இல்லை.

வெளியிலே சுதந்திரப் போராட்டம் நடந்தது. உள்ளுக்குள்ளே அந்தக் கனலைக் குருகுலம் மூட்டிற்று.

1939 இல் இந்தி படிக்கும் பிரச்சினை எழுந்தது. குருகுலத்தில் இந்தி வகுப்பு ஆரம்பமாயிற்று. அன்றைக்கு நிர்வாகியாக இருந்த சுப்பிரமணிய நைனார் தான் இன்றும் இருக்கிறார்.

இந்தக் குருகுலம் போட்ட அடிப்படையில் தான் இன்றும் நான் உலாவிக் கொண்டிருக்கிறேன்.

அந்தக் குரு-சிஷ்ய பாவம், நாட்பட மறைந்து கொண்டே வருகிறது.

வாலாஜாபாத் இந்துமதப் பாடசாலையும், அமராவதி புதூர் சுப்பிரமணியம் செட்டியார் குருகுலமும் போன்ற சில மட்டுமே இன்னும் அதைக் கட்டிக் காத்துக் கொண்டு வருகின்றன.

வியாசர், வசிஷ்டர், விசுவாமித்திரர், துரோணர் போன்ற மகாத்மாக்கள் உற்பத்தி செய்த சீடர்களால் தான் இந்து மதம் செழித்துத் தழைத்தோங்கியது.

அந்தத் தத்துவ ஞான பீடத்தை கான்வென்ட் படிப்பு நிறுவ முடியாது.

பி.ஏ. படிப்பும், பி.எஸ்.சி. படிப்பும் மனிதனுடைய தார்மிக ஒழுக்கத்துக்குச் சம்பந்தமே இல்லாதவை.

குரு-சிஷ்ய பாவத்துக்குத் திரும்பினாலொழிய சராசரி வாழ்க்கையில் இனி நிம்மதி இருக்காது.

ஆசிரியரைக் கல்லால் அடிப்பது, அவதூறு பொழிந்து நோட்டீஸ் போடுவது, கல்லூரி மாணவியைக் கடற் கரையில் சந்திப்பது இவையெல்லாம் நாகரிகம் விளைவித்த கேடுகள்.

குரு-சிஷ்ய பாவத்தில் உடம்பும் உள்ளமும் பேணிக்காக்கப்பட்டன.

தேச பக்தியும், தெய்வ பக்தியும் சேர்ந்து ஊட்டப்பட்டன.

ஐந்து வயதில் இருந்தே தர்மம் தொடங்கியது.

அதனால் தான் மனிதனின் இல்லறம் கூட நல்லறமாக அமைந்தது.

வள்ளுவனுக்கு வாசுகியும், ராமனுக்குச் சீதையும், கோவலனுக்குக் கண்ணகியும் கிடைத்தார்கள்.

இன்றையப் போலி நாகரிகம் கணவன் மனைவியைக் கோர்ட்டிலே கொண்டு வந்து நிறுத்துகிறது.

சினிமா நடிகை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதும், முதற் கணவனுக்கு நஷ்ட ஈடு கொடுத்ததும், குழந்தைக்கு ஜீவனாம்சம் கொடுத்ததும் செய்திகளாகின்றன.

சந்திர மண்டலமல்ல; சூரிய மண்டலத்திற்கே மனிதன் போகட்டும். பழங்காலங்களில் இந்துக்கள் வகுத்த அடிப்படைத் தர்மங்களைக் கடைப் பிடித்தால் தான், அவன் நிம்மதியாக வாழ முடியும்.

அவற்றில் ஒன்றுதான் குரு-சிஷ்ய பாவம்.

இன்று எந்த மாணவன் ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்குகிறான்? தன் கால் செருப்பையல்லவா அவர் மீது வீசுகிறான்!

இவன் படித்தால் என்ன, படிக்காவிட்டால் என்ன? நவாபுகள் படையெடுப்பினாலும், ஆங்கிலப் படிப்பினாலும் நமது பாரம்பரிய தர்மம் நசிந்து விட்டது.

அதைக் காப்பாற்றுவதற்குப் பணம் படைத்தோர் செய்ய வேண்டிய முதற்காரியம், பழைய பாணியில் குரு குலங்களை ஆரம்பிப்பதே.

 

ஆலயங்களில் கூடாதவை


1. ஒரு பிரதட்சணம், ஒரு நமஸ்காரம்.

2. உடம்பைப் போர்த்திக்கொண்டு பிரதட்சணம், சமஸ்காரம் செய்தல். (பெண்கள் இதற்கு விதிவிலக்கு)

3. தனித்தனியாக ஒவ்வொரு தெய்வத்தையும் நமஸ்கரித்தல்.

4. பிரசாதத்தைத் தவிர வேறு உணவு வகைகளை கோவிலுக்குள் சாப்பிடக்கூடாது.

5. வீட்டு விலக்கு, சாவுத்தீட்டு போன்ற அசுத்த நிலையில் செல்லக்கூடாது.

6. கண்டகண்ட இடத்தில் கற்பூரம் ஏற்றக் கூடாது. விக்கிரங்களைத் தொட்டு வணங்கவே கூடாது.

7. கர்ப்ப கிரகத்தினுள் நமஸ்காரம் செய்யக்கூடாது.

8. கொடி மரம், நந்தி, பலி பீடம் இவைகளுக்கு குறுக்காகச் சென்று பிரதட்சணம் செய்யக்கூடாது.

9. தெற்கு முகமாக நமஸ்காரம் செய்யக்கூடாது.

10. தலைக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டோ, ஈரஆடையுடன் கூடவோ தெய்வ வழிபாடு செய்யக்கூடாது.

11. ஆலயத்தினுள், படுத்து உறங்குதல், அரட்டை அடித்தல், உரக்க சிரித்தல், அழுதல், தாம்பூலம் தரித்தல் போன்ற காரியங்களைச் செய்யக்கூடாது.

12. பொய் பேசுதல், மற்றவர்களை நிந்தித்தல், பெண்களிடம் தகாத முறையில் நடத்தல் போன்றவை கூடாது.

13. ஆலயத்தினுள் மனிதர்கள் யாருக்குமே நமஸ்காரம் செய்யக் கூடாது. ஆலயம், இறைவனுடைய இல்லம். இங்கு செய்யப்படும் மரியாதைகள் அனைத்தும் அவனுக்கு மட்டுமே உரியன.

14. ஆலயத்தின் உள்ளும், புறமும், மல ஜலம் மற்றும் சிறுநீர் கழிப்பது மகா பாவம்.

15. காலணிகள், தோல் பை மற்றும் மிருகத் தோலாலான எந்த பொருளுடனும் ஆலயத்தினுள் நுழையக் கூடாது.

16. கோவில் மூடிய நிலையில் இருக்கும் போதும் சுவாமி வீதியில் உலா வரும் போதும் கோவிலினுள் சென்று தரிசனம் செய்ய முயற்சிக்கக்கூடாது.

இ,பாஸ்புக் வந்து விட்டது பி.எப் எவ்வளவு இருக்கிறது? மாதந்தோறும் பார்க்கலாம்

உங்கள் பி.எப். கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது? இதை தெரிந்து கொள்ள ஆண்டுக்கு ஒரு முறை தரும் பி.எப் சிலிப்புக்காக காத்திருக்க வேண்டாம். பி.எப் ஆபீசுக்கும் போக வேண்டாம். ஆன்லைனில் மாதந்தோறும் தெரிந்து கொள்ளலாம். ஆம், ஆன்லைனில் இ,பாஸ்புக் பெற்று கொள்ளலாம். அதாவது, பி.எப் இணையதளத்தில் பதிவு செய்தால், உங்களுக்கு இ,பாஸ்புக் ரெடியாகி விடும். அதை பாஸ்வேர்டு கொடுத்து மாதந்தோறும் பார்த்து அப்டேட் செய்து கொள்ளலாம்.
இது பற்றி, டெல்லியில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி(பி.எப்) சட்டம் குறித்த கருத்தரங்கில் பி.எப் ஆணையர் ஆர்.சி.மிஸ்ரா கூறியதாவது:
இ,பாஸ்புக் பெற பி.எப். சந்தாதாரர்கள் இபிஎப்ஓ இணையதளத்தில் தங்கள் பி.எப் எண்ணை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்தவர்களுக்கு இ,பாஸ்புக் தயாராகி விடும். அதில் அவர்களின் கணக்கில் எவ்வளவு தொகை இருக்கிறது என பார்த்து கொள்ளலாம்.
அதன்பின், மாதந்தோறும் அந்த தொகை அப்டேட் செய்யப்படும். எனவே, சந்தாதாரர்கள் ஆன்லைனில் பி.எப். கணக்கு விவரங்களை அவ்வப்போது தெரிந்து கொள்ளலாம்.
அந்த இ,பாஸ்புக்கில் பெயர், பிறந்ததேதி உள்ளிட்ட விவரங்களும் இடம் பெறும். இந்த வசதி தற்போது மாதச் சந்தா செலுத்தி வருபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஏற்கனவே கணக்கு முடித்தவர்கள் அல்லது செயல்படாத கணக்குகளுக்கு உரியவர்களுக்கு கிடைக்காது.
மேலும், பி.எப் கடன், கணக்கு முடித்து தொகை பெறுதல் ஆகியவற்றுக்கும் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதியை விரைவில் கொண்டு வரவுள்ளோம். தற்போது மண்டல அளவில் ஆன்லைன் செயல்பாடு உள்ளது. இதை மாற்றி தேசிய அளவில் விவரங்கள் சேகரிக்க முயற்சித்து வருகிறோம். அது முடிந்ததும் ஆன்லைனில் எங்களது 80% வேலைகள் முடிந்து விடும். சந்தாதாரர்களுக்கும் சிறப்பான சேவை கிடைக்கும். இவ்வாறு மிஸ்ரா தெரிவித்தார். பி.எப் அலுவலக இணையதள முகவரி http://www.epfindia.com