Daily Archives: ஜூலை 28th, 2012

செக்ஸ் உறவுக்கு வேட்டு வைக்கும் வேலைப்பளு: அதிர்ச்சி தகவல்

தம்பதியரிடையேயான தவிர்க்க முடியாத வேளைப்பளுவினால் 30 வயதில் இருந்து 40 வயதிற்குட்பட்ட தம்பதியர் தங்களின் சந்தோசமான தாம்பத்ய வாழ்க்கையை தொலைத்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான் அவர்களின் செக்ஸ் ஆர்வத்துக்கு வேட்டு வைத்துக்கொண்டிருப்பதாகவும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். தாம்பத்ய வாழ்க்கையை பாதிக்கும் காரணிகள் பற்றியும், எந்தெந்த வயதில் என்ன மாதிரியான உணர்வுகள் ஏற்படும் என்பது பற்றியும் பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள், படியுங்களேன்.

மனித வாழ்க்கையில் செக்ஸ் என்பது தவிர்க்க முடியாதது. இது தொடர்பான ஆய்வுகளும், கட்டுரைகளும் ஆங்காங்கே வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் ஆண்-பெண் இருவரில் யாருக்கு செக்ஸ் ஆர்வம் அதிகம்?’ என்று ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.

30 வயது முதல் 50 வயது வரை உடைய ஆண் பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 30 வயதுப் பெண்களில் 85 சதவீதம் பேரிடம் செக்ஸ் ஆர்வம் அதிகமிருப்பதாக தெரியவந்தது. இந்த வயதுடைய ஆண்களில் 75 சதவீதம் பேர்தான் இந்த ஆர்வப் பட்டியலில் இருக்கிறார்கள்.

தாம்பத்ய உறவில் அதிக ஆர்வம் இருந்தாலும் அதிக வேளைப்பளுவினால் சோர்வடைந்து விடுவதாகவும் மாதம் ஒரு முறைதான் கணவருடன் உறவு வைத்துக் கொள்ள முடிகிறது என்றும் ஆய்வின் போது பெண்கள் கூறியுள்ளனர்.

கணவரும் நீண்ட நேரம் பணியில் ஈடுபடுவதோடு அவரின் நீண்ட நேர பயணம், பணிச்சூழலின் மனஅழுத்தம், பணக்கவலை எல்லாம் தங்களின் செக்ஸ் வாழ்க்கையை முழுங்கி வருகிறது’ என்றும் கணக்கெடுப்பில் பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வு பற்றி கருத்து கூறிய டாக்டர் ஷா `30 வயதில் இருந்து 40 வயது வரை பெண்களின் செக்ஸ் ஆசைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. மாறாக ஆண்களின் ஆசைகள் குறைந்து கொண்டே போகிறது. அதுதான் இவர் மாதிரியான பெண்களின் வேதனைக்கு காரணம்’ என்கிறார்.

இந்த ஆர்வத்துக்கு இப்போது வேட்டு வைத்துக்கொண்டிருப்பதே ஆண்-பெண் இருபாலரின் சம்பாதிக்கும் ஆசை தான். இந்த 30-40 வயதுப் பருவம் வாழ்க்கைக்கு அடிப்படையான வருவாயைத் திரட்டும் பருவமாக இருப்பதால் பெரும்பாலும் ஆண்கள் (பரவலாக தம்பதியினர்) கூடுதல் நேரம் வேலை செய்து வருவாய் ஈட்டவே விரும்புகிறார்கள்.

பெற்ற குழந்தை போதுமென்றும், உறவை குறைத்துக் கொள்வது நல்லது என்றும் கூட்டாக முடிவு செய்கிறார்கள். இந்த கூடுதல் வேலைப்பளுவால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் செக்சில் ஆர்வம் குறைந்து விடுகிறது.

40 வயதில் பெண்கள் அதிக செக்ஸ் ஆர்வத்துக்கு உள்ளாகிறார்கள். அப்போது அவர்களின் குழந்தைகளும் பருவம் அடையும் நிலைக்கு வளர்ந்திருப்பார்கள். அதனால் உறவை தவிர்க்கிறார்கள்.

43 வயது குடும்பத் தலைவி ஒருவர் டாக்டரின் இந்தக் கருத்தை ஒப்புக்கொள்கிறார். `நான் 20-வது வயதிலேயே 2 குழந்தைகளுக்கு தாயாகி விட்டேன். அப்போதிருந்தே வேலைக்கும்-குழந்தைக்கும் இடையே ஒரு தறி `நாடா’ போல ஓடிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த அலைச்சல் குறைந்திருப்பதால் என் செக்ஸ் உணர்வுகள் திரும்புவதாக உணர்கிறேன். ஆனால் என் கணவர் இந்த உணர்வுகளை புரிந்து கொள்வதில்லை’ என்றார்.

இது தவிர எந்தெந்த வயதில் செக்ஸ் ஆர்வம் எப்படி இருக்கும் என்பது பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்துள்ளனர்.

30 வயதில் பெண்களுக்கு தாம்பத்ய திருப்தி அதிகம் ஏற்படுகிறது. அதிகமாக ஆர்வமும் காட்டுவார்கள். ஆனால் இந்த வயது ஆண்களுக்கு பொறுப்புணர்ச்சி மிகுந்து விடுகிறது. குடும்பம், குழந்தை, நிரந்தர வருவாய், அந்தஸ்து என நிர்ப்பந்தமான வாழ்க்கைப் போராட்டத்தால் கவலைகள் அதிகரிக்கிறது. அதனால் 30 வயது ஆண்களுக்கு செக்ஸ் ஆர்வம் குறையத் தொடங்குகிறது.

40 வயதில் பெண்களுக்கு ஹார்மோன்கள் சுரப்பது குறையத் தொடங்குகிறது. ஆனாலும் செக்ஸ் உணர்வுகள் மறுபடியும் மேலெழ ஆரம்பிக்கிறது. குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய கவலை, உறுதியான வருவாய் இல்லாத நிலை போன்றவை பெரும்பாலான பெண்களின் உறவு உணர்வுகளை ஒதுக்கச் செய்கிறது.

இதே வயதில் ஆண்கள் பலர் வாழ்க்கையில் நல்ல நிலைமையில் செட்டில் ஆகிவிடுகிறார்கள். இருந்தாலும் குறையும் உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதற்காக அதிக நேரத்தையும், கவனத்தையும் செலவிடுவதால், செக்ஸ் உணர்வுகளில் கொஞ்சம் ஆர்வம் குறைந்தவர்களாக இருக்கிறார்கள்.

50 வயதில் பெண்கள் மாதவிடாய் நிற்கும் மெனோபாஸ் கட்டத்தை அடைகிறார்கள். அதனுடன் போராடத் தொடங்குவதால் செக்ஸ் ஆர்வத்தை கெடுக்கிறது இந்தப் பருவம்.

ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த வயதில் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய் பாதிப்புகளின் தாக்கம் வெளிப்படத் தொடங்குகிறது. எனவே விரைப்புத் தன்மையில் தளர்வு ஏற்படுவதால் அவர்களுக்கும் செக்ஸ் ஆர்வம் குறைகிறது. அரிதாக எப்போதாவது ஆர்வம் எழுகிறது.

30 வயது முதல் 50 வயது வரை ஆண்-பெண் தாம்பத்ய நிலை இப்படித்தான் இருக்கிறது. இதில் நீங்கள் எந்த வயதில் இருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொண்டு அதற்குத் தக்கபடி உங்கள் தாம்பத்ய ஆர்வம் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.

சமூக தளங்களில் நன்னடத்தை வழிகள்

இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர். உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் தலையீடுவோரும் இங்கே காணப்படுகின்றனர். இவர்களிடம் நாம் பாதுகாப்பாக இயங்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் மற்றவர்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து நாம் இயங்க வேண்டியுள்ளது. இதற்கென நாம் சில அடிப்படை கோட்பாடுகளைக் கடைப்பிடித்தால் அது அனைவருக்கும் நலம் அளிக்கும். அவற்றை இங்கு காணலாம்.
1. உணர்வு பகிர்தலில் கட்டுப்பாடு: என்னதான் நம் நண்பர்களுடன் நம் உணர்ச்சிகளைப் பகிர்ந்து கொண்டாலும், சிலவற்றை நம்முடனே வைத்துக் கொள்வதுதான் நாகரிகமானது. ஒரு சிலர் வேண்டும் என்றே, உண்மைக்கு மாறான தகவல்களை, வெளிப்படுத்துகின்றனர். நம் உடல்நலக் குறைவு, பாலியல் ரீதியான பிரச்னைகள், மற்றவரை இன்னலுக்குள்ளாக்கும் காதல் பிரச்னைகளை மற்றவர் அறியத் தருவது நம்மைப் பற்றிய அருவருப்பைத்தான் ஏற்படுத்தும். எனவே உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பிறர் அறியத் தர வேண்டாமே.
2. சமூக தளம் உங்கள் பிரச்சார மேடை அல்ல: இணையத்தில் உருவாக்கப் பட்டிருக்கும் சமூகத் தளங்கள், நம் கருத்துக்களை வெளிப்படுத்தவும் தரப்பட்டிருக்கும் ஓர் இடம் தான். ஆனால், அதனையே நம் பிரச்சார மேடையாக்கி, எப்போதும் நான் எண்ணுவதே, என் கொள்கைகளே, கருத்துக்களே சரி என்ற அளவில் இயங்குவது தவறானதாகும். உங்கள் ஒழுக்க, அரசியல் கோட்பாடுகளை உங்களுடனே வைத்துக் கொள்ளுங்கள். மற்றவர்கள் அவற்றைப் பின்பற்ற வேண்டும் அல்லது அதற்காக உங்களைப் பாராட்ட வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளியிடுவது தவறு.
3.குற்றச்சாட்டுக்கான மேடையா இது?: சிலர் நுகர்வோர் பிரச்னைகளுக்கான மேடையாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவும் தவறு. ஒன்றிரண்டு பொதுவான பிரச்னைகளை தெரிவிக்கலாம். ஆனால், தொடர்ந்து ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு எதிரான கருத்துக்களை, அவர்களின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் வெளியிடுவது கூடாது.
4. நீங்கள் என்ன செய்தி ஏஜென்சியா? : இணையத்தில் இப்போது சுடச் சுட செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கையில், அல்லது நடந்து முடிந்த சில நொடிகளில் அது குறித்த தகவல்கள் கிடைக்கின்றன. ஆனால், ஒரு சிலர் தங்களுக்குத்தான் முதலில் தெரிந்ததாகக் காட்டிக் கொண்டு அவை பற்றி தகவல்களைத் தெரிவிக்கின்றனர். இதற்கென இருக்கும் நியூஸ் ஏஜென்சிகள் அவற்றைப் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் ஏன் நேரத்தையும், வலைத் தளங்களின் இடத்தையும் வீணடிக்கிறீர்கள்.
5.மேற்கோள்கள் தேவையா?: சிலர் ஐன்ஸ்டீன் சொன்னது, ஷேக்ஸ்பியர் நாயகர்கள் கூறியது என எதனையாவது மேற்கோள் காட்டிக் கொண்டே இருப்பார்கள். தொடர்பற்று இருக்கும் இவை தேவையா? நீங்கள் உங்களைப் பெரிய குருவாக எண்ணுவதனை நிறுத்திக் கொள்ளலாமே.
6. வீணான பெருமை வேண்டாமே!: சிலர் தங்கள் நண்பர்கள் வட்டம் மிகப் பெரிது என்பதைக் காட்டுவதற்காக, தினந்தோறும் தொடர்பு அற்ற பலருக்கு மெசேஜ் அனுப்புவார்கள். இதனால் என்ன நேரப் போகிறது. உண்மையிலேயே நீங்கள் பகிர்ந்து கொள்ளக்கூடிய நிலை இருந்தால் மட்டுமே நண்பர்களின் வட்டத்தை விரிதாக்குங்கள். நட்பு வட்டத்தில் உள்ளவர்களிடம் ஆரோக்கியமான உறவினைப் பலப்படுத்துங்கள்.
7.உங்களுக்கு தகவல், மற்றவருக்கு குப்பை?: சில தகவல்கள் உங்களுக்கு மட்டுமே தொடர்புடையதாக இருக்கும். மற்றவருக்கு அது கிஞ்சித்தும் பயன்படாததாக இருக்கலாம். அவற்றை அனைவருக்கும் அனுப்புவதனை நிறுத்தவும். ஏனென்றால், சமூக வலைத் தளம் உங்களின் பிரைவேட் டயரி அல்ல.
8. முகம் சுழிக்கும் படங்கள் தேவையா?: என்ன ஏது என்று பார்க்காமல், சிலர் தாங்கள் ரசிக்கும் படங்களைப் பதிக்கின்றனர். மத ரீதியாக சிலர் மனதை அவை புண்படுத்தலாம். நாகரிக அடிப்படையில் சில ஒத்துக் கொள்ளக் கூடாததாக இருக்கலாம். எனவே தேவையற்ற படங்களை வெளியிட வேண்டாமே. அதே போல உங்களின் தோழர்கள் மற்றும் தோழியர்களின் படங்களை வெளியிடுவது மிகப் பெருந் தவறல்லவா. அவர்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையினை பாழ்படுத்த வேண்டாமே.

இந்தியா V/S சீனா

குடியரசுத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி. ஜூன் 26ம் தேதி தமது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தவுடன் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தற்காலிகமாக நிதி மந்திரி பொறுப்பையும் தாமே ஏற்றுக் கொண்டார். உடனே பிரதமர் நிதி அமைச்சகத்திலுள்ள அனைத்து உயர் அதிகாரிகளையும் கூப்பிட்டு அவர்களிடம் நாட்டின் இன்றைய பொருளாதார நிலையைப் பற்றிய தமது கவலையையும் பொருளாதாரத்தை ஊக்கப்படுத்த பல கருத்துக்களையும் தெரிவித்தார். முக்கியமாக இப்போது நாட்டில் நிலவும் பண வீக்கம், விலைவாசி உயர்வு, அரசு வரி வசூலில் ஏற்பட்டிருக்கும் தொய்வு, உணவு, உரம் மற்றும் எரிபொருள் இவற்றுக்கான அரசு மானியத்தால் ஏற்படும் கடுமையான நிதிப்பற்றாக்குறை, நாட்டின் மொத்த உற்பத்தி வளர்ச்சியில் காணும் தொய்வு முதலியவை. மேலும் நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தில் அதிக இறக்குமதியினால் ஏற்பட்டிருக்கும் நடப்பு கணக்கின் பற்றாக்குறை (Current Account Deficit).
மேற்சொன்ன பிரச்னைகள் அனைத்தும் புதிதாக ஏற்பட்ட பிரச்னைகள் அல்ல. சென்ற இரண்டு மூன்று வருஷங்களாகவே இந்தப் பிரச்னைகள் இருந்து கொண்டிருக்கின்றன. ஆரம்பத்தில் சிறிய அளவுகளில் இருந்த பிரச்னைகள், அரசின் மெத்தனத்தால் இன்று விஸ்வரூபம் எடுத்திருக்கின்றன. இதற்கு அடிப்படைக் காரணம், மத்திய அரசின் மிக அவசியமான ஆனால் கடுமையான முடிவுகளை எடுக்க இயலாத போக்குதான். எரிபொருள் விலை நிர்ணயத்தில் அரசு எந்த ஒரு தீர்மானமான முடிவையும் எடுத்தேன் – கவிழ்த்தேன் என்கிற மாதிரி அவ்வப்போது சில எரிபொருள்களின் விலையை ஏற்றுவது, அதற்கு எதிர்ப்பு கிளம்பிய உடன் ஏற்றிய விலையில் அளவில் கொஞ்சம் குறைப்பது. இதுதான் அரசின் இன்றைய போக்கு. செயலின்மைக்குக் காரணமாகச் சொல்வது “கூட்டணி தர்மம்’. நாட்டின் பொருளாதார நிலைக்கும் கூட்டணி தர்மத்துக்கும் என்ன சம்பந்தம்?
பிரதம மந்திரிக்கு பொருளாதார விஷயங்களில் ஆலோசனை சொல்ல எத்தனையோ பேர்… முக்கியமாக முன்னாள் ரிஸர்வ் வங்கி கவர்னர் ரங்கராஜன், திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக்சிங் அலுவாலியா, நிதி அமைச்சகத்தின் ஆலோசகர் கௌஷிக் பாஸு. இப்படி எத்தனையோ பேர் இருந்தும் என்ன பிரயோஜனம். இவர்களின் பொழுது போக்கு அவ்வப்போது பண வீக்கம் எப்போது எவ்வளவு குறையும், உற்பத்தி எவ்வளவு பெருகும் என்று ஜோஸ்யம் சொல்வதுதான்.
இந்த நேரத்தில் சீனாவின் பொருளாதார வளர்ச்சியை நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியோடு ஒப்பிட்டு பார்க்க ஒரு சந்தர்ப்பம். சமீபத்தில் உலக வங்கி தனது இணையதளத்தில் சென்ற ஐந்து ஆண்டுகளில் உலக நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சியைப் பற்றி ஒரு புள்ளி விவரம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி நம்நாடு மற்றும் சீனாவின் வளர்ச்சியைப் பார்ப்போம்.
2007 – 2008 முதல் 2011 – 2012 வரை ஐந்து ஆண்டுகளுக்கான சராசரி வளர்ச்சி (ஆண்டொன்றுக்கு):
1. நாட்டின் மொத்த உற்பத்தி அதிகரிப்பு: இந்தியா – 8.5 சதவிகிதம், சீனா 11.2 சதவிகிதம்.
2. பணவீக்கம்: இந்தியா – 7.8 சதவிகிதம், சீனா – 2.7 சதவிகிதம்.
3. நாட்டின் மொத்த உற்பத்தியில் உள்நாட்டிலேயே நுகரப்படுவது : இந்தியா – 68.2 சதவிகிதம், சீனா – 48.8 சதவிகிதம்.
இந்தப் பள்ளிவிவரத்தில் மறைந்திருக்கும் ஒரு முக்கியமான உண்மையைப் பார்ப்போம். நம்நாட்டு உற்பத்தியில் பெரும்பகுதியை இந்தியா உள்நாட்டிலேயே நுகருகிறது. (68.2 சதவிகிதம்) சீனாவில் இது 48.8 சதவிகிதம்தான். இதற்கு முக்கிய காரணம் சீனாவின் ஆண்டு உற்பத்தியின் அளவு நம் நாட்டின் அளவைவிட பல மடங்கு அதிகமாக இருப்பதுதான். சென்ற ஆண்டில் நமது நாட்டின் மொத்த உற்பத்தி அளவு சுமார் 80 லட்சம் கோடி ரூபாய் (1600 பில்லியன் டாலர்). இதுவே சீனாவில் 360 லட்சம் கோடி ரூபாய். (7200 பில்லியன் டாலர்). இந்தியாவின் ஜனத் தொகை 120 கோடி. சீனாவில் ஜனத்தொகை 140 கோடி. இந்த அதிக அளவு உற்பத்தியினால் சீனா, தனது உற்பத்தியில் 50 சதவிகிதத்துக்கு அதிகமாக ஏற்றுமதி செய்கிறது. நமது ஏற்றுமதி, உற்பத்தியில் 20 சதவிகிதம் தான். இந்த அதிக ஏற்றுமதியினால் சீனாவின் அன்னியச் செலாவணி கையிருப்பு 2000 – பில்லியன் டாலருக்கும் அதிகம். நமது அன்னியச் செலாவணியின் கையிருப்புச் சுமார் 280 பில்லியன் டாலர். இந்தக் கையிருப்பு, அதிக ஏற்றுமதியினால் ஏற்பட்டதல்ல. நமது நாட்டின் அன்னியக் கடன் 346 பில்லியன் டாலர். இந்தக் கடன் தொகையிலிருந்துதான் நமது தற்போதைய கையிருப்பு 280 பில்லியன் டாலர்.
பிரதம மந்திரி கவலைப்படுகிறார். அவருடன் சேர்ந்து மற்ற மந்திரிகளும் கவலைப்படுகிறார்கள். என்ன பிரயோஜனம்? உருப்படியாக உடனே ஏதாவது செய்யாவிட்டால் தொடர்ந்து எல்லோரும் கவலைப்பட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டும்.