Daily Archives: ஜூலை 30th, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ; தூக்கத்திலேயே பலர் உயிரிழந்த பரிதாபம்

டில்லியிலிருந்து சென்னை ‌நோக்கி வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது. 20 க்கும் மேற்பட்டோர் காயமுற்ற நிலையில் நெல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தீ பிடித்த ‌‌ரயில்‌ எஸ் -11 கோச்சில் இருந்த மொத்தம் 72 தீயில் சிக்கி இறந்தது 20 ஆண்கள், 6 பெண்கள், 3 குழந்தைகள் அடங்குவர். இதுவரை 28 உடல்கள் ரயிலில் இருந்து எடுக்கப்பட்டள்ளதாக மாவட்ட எஸ். பி., தெரிவித்துள்ளார். முன்னதாக 50 பேர் வரை இறந்து விட்டதாக செய்தி வெளியானது. பயணிகள் தீயி்ல் கருகியதால் பலி எண்ணிக்கை ரயில்வே நிர்வாகத்தினரால் சரியாக கணக்கிட முடியவில்லை. படுகாயமடைந்தவர்கள் சிறப்பு ரயில் மூலம் மேல் கிசிச்சைக்காக சென்னை கொண்டு செல்லப்பட்டுள்ளனர். சம்பவத்திற்கு நாசவேலை காரணமாக இருக்கும் என மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
டில்லியிலிருந்து நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 10.30 மணிக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் சென்னைக்கு புறப்பட்டது. ஆந்திர மாநிலம் நெல்லூர் வந்து பின்னர் அதிகாலை 04:30 மணிக்கு புறப்பட்ட சிறிது நேரத்தில், சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் எஸ்-11வது பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவம் அறி்ந்து ரயில் பெட்டிகள் உடனடியாக அகற்றப்பட்டு பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். ‌பலர் காயமடைந்துள்ளனர்.
நெல்லூர் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் சம்பவ இடத்திற்‌கு சென்று மீட்பு பணிகளை முடுக்கி விட்டுள்ளார். அங்கு கலெக்டர் கூறுகையில், இது வரை 25 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மின் கசிவு காரணமாக இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர் பெட்டியில் பலியாகியிருக்கக்கூடும் என்றார். தூங்கும் வசதி கொண்ட இந்த 2ம் வகுப்பு பெட்டியிலிருந்து காயம் அடைந்தவர்கள் நெல்லூர் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பெட்டியில் மொத்தம் 72 பயணிகள் இருந்தனர்.

சிகிச்சை பெறுவோர் விவரம்: காயமுற்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுவோர் விவரம் வருமாறு: ரேகா, வீணா, சாம்பசிவாராவ், வர்மாசிறீஸ், வெங்கடகோடேஸ்வரராவ், வர்மா ஹூசேன்,ராகவன், சுனில்குமார், ஹர்சித், சந்தீப்அக்னிதோத்ரி, அமீர் பிரீத்சிங். ஆகியோர் நெல்லூர் ஆஸ்பத்திரியில் தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரகாஷ்சிங், ஷோபாசிங், உதய பாஸ்கர், ராமச்சந்திர சீனிவாஸ், குமுத்குமார்பன்சால், பிரசம்சா பன்சால், சுஜன்மால்சாரதா ஆகியோர் நெல்லூரில் உள்ள ஜெயபாரத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பலியானவர்கள் யார்? யார்? : இந்த ரயிலில் தீ பிடித்து எரிந்துள்ளதால் இதில் பலியானவர்கள் யார் ? யார் என அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. அதிகம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாகத்தான் இருக்க முடியும் என்று தகவலல் தெரிவிக்கிறது.

விபத்தில் தப்பியவர்கள் பேட்டி: விபத்தில் சிக்கிய தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் எஸ் 11 கோச் தவிர ஏனைய பெட்டிகளுடன் ரயில் சென்னைக்கு காலை 11. 35 மணியளவில் வந்து சேர்ந்தது. இதில் வந்த பயணிகள் கூறுகையில்: விபத்து நடந்தபோது காலையில் மழை மற்றும் பனி காரணமாக என்ன நடந்தது என்றே தெரியவில்லை. ஆனால் புகை மூட்டத்தை மட்டும் பார்க்க முடிந்தது. அலறல் சப்தம் கேட்டது. பலர் மூச்சு திணறி இறந்திருக்கலாம் என்றனர்.

இதனிடையே தீப்பிடித்து எரிந்த ரயில் பெட்டி, நெல்லூர் கொண்டு செல்லப்பட்டது.

ஒரு உயிருக்கு 5 லட்சம் நிவாரணம்: விபத்தில் சிக்கி பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண தொகை வழங்கப்படும் என ரயில்வே துறை அமைச்சர் முகுல்ராய் அறிவித்துள்ளார். விபத்து குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், காயமுற்றவர்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.

தகவல் அறிந்து கொள்ள : சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இந்த விபத்து குறித்து தகவல் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. 044- 25357398 , 044 -25330821 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை 10 மணியளவில் ஒரு ரயில் அனுப்பி வைக்க ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

நெல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் விவரம் கேட்க வேண்டுமானால் கீழ் வரும் எண்களில் தொடர்பு கொள்ளலாம்: 0861- 2330024, 0861-2328500.

ஆந்திர முதல்வர்ஆறுதல்: சம்பவம் நடந்த இடத்திற்கு ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டி அவசரமாக விரைந்து வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், பலியானவர்கள் குறித்து முழுமையான தகவல் ஏதும் இல்லை. முழு விபரங்கள் கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

அலட்சியமே காரணம்-சந்திரபாபு நாயுடு: காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், ரயில் விபத்துக்கு ரயில்வேயின் அலட்சியம் காரணம். பாதுகாப்பான பயணம் என விமானத்தில் பயணம் செய்பவர்கள் கூட ரயிலில் பயணம் செய்கின்றனர். ஆனால் ரயில்வே பாதுகாப்புக்கு மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் விபத்துநடந்தது. பலியானவர்கள் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள 5 லட்ச ரூபாய் நிவாரணம் போதாது. அவர்களுக்கு 10 லட்சம் முதல் 20 லட்ச ரூபாய் வரை வழங்க வேண்டும் என கூறினார்.

ரயில்வே அமைச்சர் மீது சிரஞ்சீவி குற்றச்சாட்டு: காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறிய பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த காங்கிரஸ் கட்சியின் சிரஞ்சீவி, மத்திய ரயில்வேத்துறையின் அலட்சியமே விபத்துக்கு காரணம். சுதந்திரத்துக்கு முன்பு இருந்ததை போலவே ரயில்வேத்துறை தற்போதும் உள்ளது. நவீன தொழில்நுட்பங்கள் இன்னும் ரயில்வேத்துறையில் சேர்க்கப்படவில்லை என கூறினார்.

மின்கசிவே காரணம்: முக்கிய சாட்சி தகவல்: நெல்லூரில் ரயில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் முக்கிய சாட்சியான சுதாகரன் என்ற பொறியாளர், ரயில் தீப்பிடித்ததுக்கு மின்கசிவே காரணம். மின்சாதன பெட்டியில் தான் முதலில் புகை வந்தது என கூறினார்.

நெல்லூர் செல்கிறார் ரயில்வே அமைச்சர்:நெல்லூர் ரயில் விபத்தை நேரில் பார்வையிட சம்பவ இடத்திற்கு மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் செல்கிறார். இதற்காக விமானம் மூலம் சென்னை வந்தார். அப்போது பத்திரிகையாளர்களிடம் கூறிய அவர், பலியானவர்கள் குடும்பங்களுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளார்.

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ககன் நரங்

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இன்று முதல் பதக்கம் கிடைத்தது. 10 மீ., துப்பாக்கி சுடுதல் போட்டியில் ககன் நரங் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றார்.
லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கோலகலாமாக துவங்கியது. இந்த போட்டியில் தற்போது பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. பல நாடுகள் பதக்க வேட்டையை துவக்கியுள்ள நிலையில் இந்திய அணி மட்டும் பதக்கம் பெறாமல் இருந்தது. இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட பல வீரர்கள் தோல்வியை தழுவினர். பேட்மின்டனில் ஜூவாலா கட்டா தோல்வியடைந்தார். டேபிள் டென்னிசில் இந்திய அணி தோல்விடைந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று செய்னா நேவல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று வில்வித்தையில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பொம்பல்யா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதால், இந்த முறையும் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபினவ் பிந்தரா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெறியேறினார்.
இன்று , இந்தியாவின் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்று இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை போக்கினார். அவர், துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச்சுற்றில் 598 புள்ளிகள் பெற்று 3வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் அவர் 103.1 புள்ளிகள் பெண்ணு மொத்தம் 701.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்தார்.
ககன் சாதனைக்கு அவரது தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார். ககன் , இந்திய கொடியை ஒலிம்பிக் கிராமத்தில் பறக்க விட்டுள்ளார் என பெருமையுடன் கூறினார்.
இன்று துகப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற ககன் நரங் மூன்றாவது வீரர் ஆனார். முன்னாக கடந்த 2004ம் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2008ம் ஆண்டு 10.மீ., ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்தரா தங்கப்பதக்கம் வென்றார்.
இன்றைய போட்டியில் ருமேனியாவின் ஆலின் ஜார்ஜ் மோல்டோவியாயு தங்கப்பதக்கத்தையும், இத்தாலியின் நிக்கோலோ கேம்ப்ரியானி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெண்கலப்பதக்கம் வென்ற ககன் நரங், அரியானா மாநில அரசு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ககன் நரங் பதக்கம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், இன்னும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர், அபினவ் பிந்தரா பதக்கம் வென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ககன் நரங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

கம்ப்யூட்டரைப் பார்த்து கழுத்து தேய்கிறது…

 

ரந்து கிடக்கும் இந்த உலகம் சுடு இன்றைய இளைய தலைமுறையினரின் கைக் குள் வந்து விட்டது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஒரு நாணயத் திற்கு இரு பக்கங்கள் இருப்பது போல இன்றைய வளர்கின்ற, வளர்ச்சி அடைந்துள்ள இளைய சமுதாயம் அதற்காக தரவேண்டியவை- இழக்க வேண்டியவை ஏராளம்.

வளர்ந்து விட்ட நாகரீகமும், அறிவியலும் பல புதிய அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டி ருக்கின்றன. நோய் தீர்க்கும் பல அருமருந்துகளும், நோய்களை கண்டறியும் பல கருவிகள் புரியும் ஜாலங்களும் இன்றைய சமுதாயம் பெற்ற வரம். ஆனால், அதற்காக அவர்கள் தருகின்ற விலை மிக அதிகம்.

சுற்றி நடக்கும் பரபரப்பான உலகத்தின் வேகத்திற்கு தன்னை தயார் செய்து கொள்கிறது இன்றைய இளைய தலைமுறை. இந்த தயார் ஓட்டம் பள்ளி பருவத்திலேயே ஆரம்பித்து விடுகிறது. அதிக மதிப்பெண் வாங்க வேண்டும், பெரிய வேலையில் அமரவேண்டும், நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரு வெறி பிஞ்சு வயதிலேயே நஞ்சாக பதிக்கப் பட்டு விடுகிறது. ஒரு விளையாட்டு கிடையாது, வேடிக்கை கிடையாது, உறவினர்களின் உறவாடல் கிடையாது. உச்சத்தின் உச்சியை தொட்டு விடவேண்டும் என்ற வேட்கையில் சகலத்தையும் இழக்க தயார் செய்து கொள்கிறான். மெல்ல மெல்ல பதற்றம் அவனை அணைத்துக் கொள்கிறது. பதற்றம் மன அழுத்தத்தையும், மன சோர்வையும் விளை விக்கிறது. அவைகளே பல வியாதிகளுக்கு வித்தாகிறது.

ஒவ்வொரு மாணவனும் தன் வீட்டு கலா சாரத்தை மறந்து, பள்ளிகளிலும், கல்லூரி களிலும் இருக்கின்ற மாறுபட்ட கலாசாரத் திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்கி றான். `என் மகனான நீ எல்லா துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும்’ என்ற பெற் றோர்களின் நிர்ப்பந்தம் நினைத்தாலே இனிக் கும் பள்ளிப்பருவத்தையும், கல்லூரி வாழ்க் கையையும் ஒரு சுமையாக, கசப்பான அனுப வமாக மாற்றி விட்டது. பெரிய அளவில் பணத்தைக் கொட்டி கல்வி நிறுவனங்களில் பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் தன்னுடைய மகனோ, மகளோ படும் துன்பங்களை சிந்திக்க மறுக்கிறார்கள். பிள்ளைகளுக்கு வேண்டிய அனைத்தையும் வாங்கி வீடு நிறைய வைத்து விடுகிறார்கள். இதுவே ஒரு சாபமாக மாறுகிறது.

தன்னை தயார் செய்து கொள்ள கணினியை முதலில் நாடுகிறான். கணினியினால் பல நன்மைகள் இருந்தாலும் இன்றைய இளைஞர்கள் அதை பேஸ் புக், டுவிட்டர், சாட்டிங் இதற்காகத்தான் அதிகம் உபயோகிக்கிறார்கள். தொடர்ந்து கணினியை உபயோகப்படுத்து வதால் கழுத்து எலும்பு தேய்கிறது. இடுப்பு எலும்பு உராய்கிறது. இதனால் கை, கால்கள் மரத்து போகுதல், தோள்களில் வலி, தலைசுற்றல், கண்பார்வை கோளாறுகள் ஆகிய வியாதிகள் வருகின்றன.

தொடர்ந்து கணினி திரையை பார்ப்பதால் கண்களில் பார்வை கோளாறு ஏற்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 14 முறை துடிக்க வேண்டிய கண் இமைகள், கூர்ந்து பார்த்து கொண்டே இருப்பதால் 4 முறைதான் துடிக்கின்றன. இதனால் வெள்ளை விழிகளின் நீர்ப்பசை குறைந்து எரிச்சல் உண்டாகிறது.

இன்றைய இளைஞர்களின் உணவு முறை முற்றிலும் மாறுபட்டு விட்டது. காலையில் சீக்கிரம் கிளம்ப வேண்டிய காரணத்தினால் 90 சதவீதம் இளைஞர்கள் காலை உணவை வீட்டில் சாப்பிடுவதில்லை, இதை சரிசெய்ய நண்பர்களுடன் பாஸ்ட் புட், ஜங்க் புட் இவற்றை நாடுகிறார்கள். சாப்பிடுபவர்களை கவர்வதற்காகவும், சுவையை கூட்டுவதற்காக வும் மோனோசோடியம் ஹைட்ரேட் என்ற தாது உப்பை சேர்க்கிறார்கள். இது உடலுக்கு மிகவும் கெடுதல். கண்ணை கவரும் வண்ணங்களுக்காக கலர்களை, வெகுநாட்கள் வைத்திருக்க தேவையான ரசாயனங்களை (preservative) சேர்க்கிறார்கள். இவை அனைத்தும் உடலுக்கு கெடுதி.

ஜீரண கோளாறுகள் கண்டிப்பாக வரும். அதிக கொழுப்புள்ள பொருட்களை சாப்பிடு வதால் உடல் பருத்து விடுகிறது. உடற்பயிற்சி இல்லாததால் எடை கூடுகிறது. எல்லா வற்றிலும் ஒரு அலட்சியம், ஈடுபாடு இல்லாத தன்மை ஏற்படுகிறது.

இப்போது டீன் ஏஜ் பெண்கள் ஒழுங்காக மாதவிலக்கு வராமல் சிரமப்படுகின்றனர். 70 சதவீதம் டீன் ஏஜ் பெண்கள் pcod (poly cystic ovarian disease) என்ற நோயினால் தாக்கப்படுகின்றனர். இதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் முக்கிய காரணம் உடல் பருமன் தான்.

அலட்சிய மனப்போக்கு, ஈடுபாடு இல் லாத தன்மையினால் ஒரு சிலர் தோல் வியை சந்திக்கின்றனர். தோல்வி தரும் மன வேதனையை, மன சுமையை, மன உளைச்சலில் இருந்து மீண்டு வர அவர் கள் மதுவை தேடுகிறார்கள். மது அருந்து வது நாட்டிற்கும், வீட்டிற்கும் கெடுதல் என்று அறிவித்து இருந்தும் இன்றைய நிலவரப்படி சுமார் 50 லட்சம் இளைஞர்கள் தினமும் தமிழ்நாட்டில் குடிக்கிறார்கள். குடியினால் வரும் தீமை அனை வரும் அறிந்ததே. சுகமான வாழ்வைத் தேடி, கடைசியில் சுமையான வாழ்க்கையை வந்தடைகிறார்கள்.

இதில் பல பருவ கோளாறுகளும் சேர் கின்றன. ஆண், பெண் சமத்துவம் என் பதை ஆடைகளிலும் மற்ற வக்கிர செயல்களில்தான் வெளிப்படுத்துகிறார்கள். இனக் கவர்ச்சி யால் உணர்ச்சிவசப்பட்டு எத்தனையோ பள்ளி மாணவ, மாணவிகள் சீரழி கிறார்கள், எத்தனையோ குடும்பங்கள் தலைகுனிந்து போகின்றன.

நாகரீகத்தின் இன்றைய சாபக்கேடு செல்போன். இன்றைய இளைஞர்கள் பலரின் உடலின் ஒரு அங்கமாக செல்போன் மாறிவிட்டது. சாப்பிடும்போது, குளிக்கும்போது, ஏன் தூங்கும் போது கூட, தலையணை அடியில் தஞ்சம் புகுந்திருக்கிறது, இந்த கைபேசி.

ஒரு ஆராய்ச்சியாளரின் அதிர்ச்சி தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பு கிறேன். தொடர்ந்து எஸ்.எம்.எஸ். (குறுஞ்செய்திகள்) அனுப்பிக்கொண்டே இருப்பதால், பல இளைஞர்களின் கட்டை விரல், அதற்கு பக்கத்தில் இருக்கும் விரல்களின் எலும்புகள் தேய்ந்து, எலும்பை சுற்றி இருக்கும் தசை நார்கள் இறுகிபோய் தீராவலி உண்டாகிறது. பலருக்கும் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கும் பழக்கம் இருக்கிறது. அல்லது பாட்டு கேட்டுக்கொண்டே இருக்கின்ற பழக்கம் இருக்கிறது. இதனால் கைபேசியில் இருந்து வரும் ரேடியோ அலைகளினால் காது கேட்கும் திறன் குறைந்து, செவிட்டுத்தன்மை விரைந்து வந்து விடுகிறது- இவை ஆராய்ச்சியாளர்கள் சொல்லும் உண்மை.

இன்னும் சில ஆராய்ச்சியாளர்கள் கைபேசியில் இருந்து வரும் அலைகளினால் புற்றுநோய் வரும். அந்த அலைகள் எச்சில் சுரப்பிகளை தாக்கும் என்றெல்லாம் கூறுகிறார்கள்.

குடிப்பழக்கத்திற்கு ஒரு படி மேலோங்கி இன்றைய இளைஞர்களிடையே இருப்பது புகை பிடிப்பது. இதனால் எவ்வளவு தீங்கு வரும் என தெரிந்தே இதற்கு அடிமை யாகிறார்கள்.

“நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் தேவை” என ஆசைப்பட்டான் முண்டாசு கவி பாரதி. இரும்பென தசைகளும், `எக்கு’வென நரம்புகளையும் கொண்ட 100 இளைஞர் களை என்னிடம் தாருங்கள், இந்தியாவின் தலை எழுத்தை மாற்றி காட்டு கிறேன்” என்று விழைந்தார் வித்தகர் விவேகானந்தர். ஆனால் இன்றைய இளைய தலை முறையோ கூன் விழுந்த முதுகு, பார்வை குறைந்த கண்கள், தடிமனான ஊளைச் தசை கொண்ட உடல், எதிலும் நாட்டமில்லாத எண்ணம், தன்னம்பிக்கை இல்லாத சிந்தனை யுடன் இருந்து கொண்டிருக்கிறது.

இந்தியாவின் எதிர்காலம் ஒளிமயமாக இருக்கவேண்டும். அதற்காக விஞ்ஞான வளர்ச்சி யின் நன்மையை மட்டும் எடுத்துக்கொண்டு அழிவுப்பாதையில் செல்லாமல் ஆக்கப்பூர்வ மான, ஆரோக்கியமான பாதையில் செல்லவேண்டும்.

-டாக்டர் அருணா ராமகிருஷ்ணன், 
(மகப்பேறு துறை நிபுணர்) சென்னை.

பிரட் போண்டா

 

தேவையானவை:

பிரட் பாக்கெட்-1

உருளைக்கிழங்கு-1/4 கிலோ

பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம்-2

பச்சை மிளகாய்-4

இஞ்சி-தேவையான அளவு

கொத்தமல்லி, கறிவேப்பிலை-தேவையான அளவு

உப்பு-தேவையான அளவு

ரீபைன்ட் எண்ணெய்-1/4 லிட்டர்

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து உதிர்த்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்க்கவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு, தாளித்த, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை இவைகளை அதில் போட்டு நன்றாக வதக்கவும். பிறகு உதிர்த்து வைத்திருக்கும் கிழங்கைப் போட்டு கிளறவும். சிறிது ஆறியதும், சிறிய எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.

மார்டன் பிரட் துண்டுகளில் ஒன்றை எடுத்து தண்ணீரில் நனைத்து உடனே உள்ளங்கையில் வைத்து அழுத்தி தண்ணீரை வடியவிட்டு மசால்உருண்டை ஒன்றை வைத்து நன்றாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து இந்த உருண்டைகளை நாலைந்தாக போட்டு, காய்ந்ததும் திருப்பிப்போட்டு சிவந்த உடன் எடுக்கவும். சீக்கிரம் வெந்து விடும். இது தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

இளம் பெண்களின் உடல் பருமன்

weight-loss weight-loss1 weight-loss2

கோடையின் அழகு ராணி நீங்க தான்

அழகின் முதல் எதிரி வெயில்! சருமம் கூந்தல் என உச்சி முதல் பாதம் வரை அழகையும் ஆரோக்கியத்தையும் பாதிக்கற வெயிலை எப்படித்தான் எதிர் கொள்வது? வெயிலைப் பழிப்பதை தவிருங்கள் தினமும் அரை மணி நேரத்தை உங்களுக்காக ஒதுக்கினால் வெயிலின் விபரீத விளையாட்டுகளில்  இருந்து உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் மீட்க முடியும். கோடையில் அழகை பாராமரிக்க வழிகளைச் சொல்கிறார் ‘நேச்சுரல்ஸ்’ வீணா.
சருமத்துக்கு….
லேசான வெயில் பட்டாலே சருமம் கருத்துப் போவதும், பிசுபிசுப்பாக எண்ணெய் வடிவதும் கோடையில் தவிர்க்க முடியாதது. இதை தவிர்க்க மிதமான ஆயில்ஃப்ரீஃபேஸ் வாஸ் கொண்டு, அடிக்கடி முகம் கழுவலாம். இது அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுபடுத்தும்.
வெள்ளரிக்காய் சாறும் தேங்காய் பாலும் சம அளவு எடுத்துக் கலக்கவும். அதில் பஞ்சை நனைத்து, முகம் முழுக்க ஒற்றியெடுத்து பத்து நிமிடங்கள் ஊறிக் கழுவலாம். இது சருமத்தை இயற்கையாக வெளுவெளுப்பாக்கும். வெள்ளரிச்சாறு கலவையை நிறைய தயாரித்து ஃப்ரிட்ஜில் வைத்து அடிக்கடி உபயோகிக்கலாம். குறிப்பாக வெயிலில் அலைந்து விட்டு வந்ததும் தடவினால் கருமை நீங்கும்.
தக்காளியை தோல் நீக்கி சதைப்பகுதியை எடுத்து அத்துடன் தயிர் கலந்து முகம், கழுத்து பகுதியில் தடவி அரை மணி நேரம் கழித்துக் கழுவலாம். வெளியூருக்கு சுற்றுலா சென்று விட்டு வந்ததும் கருத்து போன சருமத்தை இயல்பாக மாற்ற முடியும்.
பப்பாளிக்கூழுடன், வாழைப்பழத்தையும் மசித்து முகத்தில்  தடவி ஊறிக்கழுவினால் இறந்த செல்கள் அகன்று முகம் பளபளக்கும். ஆரஞ்சுபழச் சாறுடன், தேன் கலந்து சருமத்தில் தடவினால், கருத்த சருமம் மெல்ல மெல்ல நிறம் மாறும்.  சுத்தமான சந்தனத்தில் பன்னீர் கலந்து முகம், கழுத்து பகுதிகளில் தடவி சிறிது நேரம் ஊறிக் கழுவினால் கருத்த சருமம் மாறுவதுடன் குளுமையாகவும் இருக்கும்.
முல்தானி மெட்டியில், பன்னீர் கலந்து சருமத்தில் தடவினாலும் எண்ணெய் பசை கட்டுப்படும். வெயிலினால் உண்டாகும் சரும எரிச்சல் அடங்கும். கடைகளில் கற்றாலை ஜெல் கிடைக்கிறது. அதில் முல்தானிமிட்டி கலந்து சருமம் எங்கெல்லாம் தடவினால் கருமை நீங்கி பழைய நிறம் திரும்பும்.
பொதுவாக குளிர் காலத்தில் வெந்நீரில் குளிப்பதும் வெயில் காலத்தில் குளிர்ந்த தண்ணீரில் குளிப்பதும் நம் வாழக்கம். ஆனால் அதை தவிர்த்து லேசான வெதுவெதுப்பான தண்ணீரில் குளிப்பதன் மூலம் சருமம் வறட்சியடையாமல் இருக்கும்.
உள்ளே சாப்பிடுகிற உணவுகளும் சருமத்திலும் கூந்தலிலும்  தன் பிரதிபலிப்பை காட்டும். எனவே அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளைத் தவிர்க்கவும். லைட்டான உணவுகளே வெயில் காலத்துக்கு ஏற்றவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பழங்கள் எடுத்துக்கொள்ளவும். பச்சை காய்கறிகளும் சருமத்துக்கு நல்லது. 3லிட்டர் தண்ணீர் குடிப்பதுடன் இடையிடையே இளநீர் நீர்மோர் ஏதேனும் ஜீஸ் எடுத்துக் கொள்ளலாம்.
முடிந்த வரை காலை 10 முதல் 3மணி வரை வெயிலில் அதிகம் அலைவதைத் தவிர்க்கவும். அப்படியே தவிர்க்க முடியாத பட்சத்தில் சருமத்துக்கு சன் ஸ்கீரின் கைகளுக்கு கிளவுஸ் தலைக்கு தொப்பி கண்களுக்கு கூலிங் கிளாஸ் உடன் செல்வது பாதுகாப்பானது. யுவி கதிர்களின் பாதிப்பிலிருந்து கண் அவசியம். இல்லாவிட்டால் கண்களைச் சுற்றியுள்ள பகுதியில் சுருக்கங்கள் விழலாம்.
சன் ஸ்கீரினை எப்போதும் வெளியில் கிளப்புவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னதாக தடவவும். வெயில் காலத்தில்  மேக்கப் தவிர்ப்பது நல்லது. அவசியம் மேக்கப் போட்டே ஆக வேண்டும் என்பவர்கள் வாட்டர் பேஸ்டு ஃபவுண்டேஷன் அல்லது காம்பேக்ட் மட்டும் உபயோகிக்கலாம். மிக லைட்டான ஷேடுகளில் லிப்ஸ்டிக் போடவும். கண்களுக்கு அதிக மேக்கப் வேண்டாம்.
கூந்தலுக்கு  
வியர்வை அதிகமிருக்கும் என்பதால் வாரம் 3 முறை கூந்தலை தரமான ஷாம்பு கொண்டு அலச வேண்டும்.வியர்வை சேர்ந்தால் மண்டையின் துவாரங்கள் அடைப்பட்டு முடி உதிரும். கூந்தல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
வெயிலில் வெளியே செல்லும் போது தலைக்கு எண்ணெய் வைக்க வேண்டாம்.. எண்ணெய் வைத்தால் தான் முடி படியும் என்பதால் சிலர் எண்ணெய் இல்லாமல் வெளியே செல்ல மாட்டார்கள். எண்ணெய் வைத்தால் சிறிது நேரத்தில் தலையை அலசி விட விட வேண்டும். அல்லது முதல் நாள் இரவு வைத்து காலையில் தலையை அலச வேண்டும்.
வெளியே செல்லும் போது முடிபறக்காமலிருக்க ஸ்டைலிங்க் பொருட்களையோ கண்டிஷனரையோ உபயோகிக்கலாம். எண்ணெயுடன் வெளியே செல்லும் போது அழுக்கும் தூசியும் அதிகம் சேர்ந்து பொடுகு முடி உதிர்வெல்லாம் வரலாம்.  சிறிதளவு தயிரில் முதல் நாள் இரவே கொஞ்சம் வெந்தயத்தை ஊறவைக்கவும். காலையில் அதை பேஸ்ட் போல அரைத்து தலை முழுக்க தடவி சிறிது நேரம் ஊறி அலசலாம். இது உச்சி முதர் பாதம் வரை உடலைக் குளுமையாக்குவதுடன் கூந்தல் ஆரோக்கியத்துக்கும் உதவும்.
சிலருக்கு இந்த நாள்களில் பொடுகு வரும் எண்ணெய்யில் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்துக் குளிக்கலாம். ஆரம்ப நிலை பொடுகுக்கு இது உதவும். செம்பருத்தி இலையை அரைத்து தயிர் சேர்த்து தலையில் தடவி அரை மணி நேரம் கழித்துக் குளித்தால் உடலுக்கும் குளிர்ச்சி கூந்தலும் மிருதுவாகும்.
தேங்காயை அரைத்து பாலெடுத்து தலை முழுக்கக் தடவி சிறிது நேரம் ஊறிக் குளிப்பது குளிர்ச்சியை தரும். கூந்தலையும் கண்டிஷன் செய்யும். சருமத்தை போலவே கூந்தலுக்கும் வெயிலில் இருந்து பாதுகாப்பு அவசியம். எனயே வெளியே செல்லும் போது தலைக்கு தொப்பியோ துணியோ அணியவும். அல்லது குடை எடுத்துச் செல்லவும். வெயிலுக்கேற்றபடி கூந்தலை குட்டையாக வெட்டிக்கொள்ளவும். போனி டெயிலோ உச்சந் தலை கொண்டையோ போட்டுக் கொள்ளலாம்

அசட்டு தைரியத்துடன் அணுகாதீர்

ஜிமெயில், குரோம் பிரவுசர், யுட்யூப், கூகுளின் தேடல் சாதனம் என கூகுள் சாதனத்தைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகையில், நாம் பார்க்க விரும்பும் இணைய தளத்தில் நம்மை செயல் இழக்கச் செய்திடும், அல்லது மோசமான விளைவுகளைத் தரும் புரோகிராம்கள் கொண்ட இணைய தளங்கள் இருப்பின், உடனே அது குறித்து எச்சரிக்கை ஒன்றை கூகுள் தருகிறது. குறிப்பிட்ட தளத்தினைத் திறக்காமல் நம்மைக் காப்பாற்றுகிறது. இது போல நாள் ஒன்றில் ஏறத்தாழ 9,500 தளங்களைக் கண்டறிவதாக, கூகுள் தன் வலைமனையில் (http://googleonline security.blogspot.com/2012/06/safebrowsingprotectingwebusersfor.html ) தெரிவித்துள்ளது.
இது மட்டுமின்றி, நாள் ஒன்றில், கூகுள் ஏறத்தாழ ஒரு கோடி அல்லது 1.2 கோடி தேடல்களுக்குப் பதில் அளிக்கிறது. பதிலாகப் பட்டியலிடப்படும் தளங்களில், மால்வேர்களால் பாதிக்கப்பட்ட தளங்களும் இடம் பெறுகின்றன. நாள் ஒன்றுக்கு டவுண்லோட் செய்யப்படும் நிகழ்வுகளில், 3 லட்சம் பேருக்கு எச்சரிக்கை செய்தியினை குரோம் பிரவுசர் தந்து வருகிறது. இவற்றில் பல தளங்கள் ஒரு மணி நேரம் தான் இணையத்தில் இயங்குகின்றன. தங்களிடம் சிலர் மாட்டிக் கொண்ட பின்னர், தாங்கள் பிடிபடுவதிலிருந்து தப்பிக்க, தளத்தையே சர்வரிலிருந்து எடுத்துவிடுகின்றனர்.
இந்த தளங்கள் ஹேக்கர்களால் கைப்பற்றப்பட்டவையாக இருக்கலாம்; அல்லது வைரஸ் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை பரப்பிடும் தளங்களாக இருக்கலாம். குரோம், பயர்பாக்ஸ் மற்றும் சபாரி பிரவுசர்களைப் பயன்படுத்தும் 60 கோடி பேர், ஒவ்வொரு நாளிலும், பல லட்சக்கணக்கான எண்ணிக்கையில் எச்சரிக்கை செய்திகளைப் பெறுகிறார்கள்.
கூகுள் பயன்படுத்துவோர், புரோகிராம்களை, இணையப் பக்கங்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், அவற்றில் ஆபத்து தரும் புரோகிராம்கள் இருப்பின், கூகுள் உடனே எச்சரிக்கை மூலம் தடுக்கிறது. நாளொன்றுக்கு 3 லட்சம் பேர் இவ்வாறு காப்பாற்றப்படுகின்றனர்.
தினந்தோறும், இணைய தள நிர்வாகிகளுக்கும், இணைய சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும், மால்வேர் குறித்த செய்தியை அனுப்பி, அவர்களின் வாடிக்கையாளர்களை அவற்றிலிருந்து காப்பாற்றும்படி எடுத்துரைக்கிறது கூகுள். வாடிக்கையாளர்களைச் சிக்க வைத்திடும் இணையப் பக்கம் காணப்பட்டால், அவற்றை உடனே நீக்கிடும் பணியில் கூகுள் ஈடுபடுகிறது.
இவற்றுடன் தன் குரோம் வெப் ஸ்டோரில் கிடைக்கும் குரோம் எக்ஸ்டென்ஷன் மற்றும் ப்ளக் இன் புரோகிராம்களை ஸ்கேன் செய்து, தவறானவற்றை உடனடியாக நீக்குகிறது.
இணையத்தை கூடுதல் பாதுகாப்பு கொண்டதாக ஆக்குவதே எங்களின் லட்சியம் என கூகுள் கட்டமைப்பு குழுவின் முதன்மை சாப்ட்வேர் பொறியாளர் நீல்ஸ் ப்ரவோஸ் குறிப்பிட்டுள்ளார். மால்வேர் மற்றும் பிஷ்ஷிங் புரோகிராம்களைக் கண்டறிந்து நீக்க, பல மேம்படுத்தப்பட்ட புரோகிராம்கள் தொடர்ந்து கிடைத்து வந்தாலும், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், முழுக் கவனத்துடன் செயல்பட வேண்டும். சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில், ஏதேனும் தளம் அல்லது புரோகிராம் இருந்தால், அசட்டுத் தைரியத்துடன் அதனைச் சந்திக்காமல், கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு அவை குறித்த தகவல்களை அனுப்ப வேண்டும். அப்போதுதான் உங்கள் கம்ப்யூட்டர் உங்களுக்கு நன்றிக் கடனுடன் செயல்படும் என வேடிக்கையாகவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.