Daily Archives: ஜூலை 31st, 2012

கல்விக் கடன்: `ஏ டூ இசட்’ தகவல்கள்!

ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை, கல்வி. கல்வி கற்ற மனிதனே முழு மனிதனாகிறான்.
ஆனால் குடும்பப் பொருளாதார நிலைமையால் படிப்பைத் தொடர முடியாமல் பலரும் தடுமாறி நிற்கிறார்கள். அவர்களின் கவலை போக்க உருவானதே, கல்விக் கடன் திட்டம்.
இந்தக் கல்விக் கடன், எல்லா மாணவர்களுக்கும் கிடைக்குமா, இதற்கான அடிப்படைத் தகுதிகள் என்ன, அதிகபட்சம் எவ்வளவு கடன் கிடைக்கும், கடனை எப்போது திருப்பிச் செலுத்த வேண்டும் என்பன போன்ற மாணவர்களின் மனதில் எழும் அனைத்துக் கேள்விகளுக்கும் விடை அளிக்கிறது, இத்தொடர்…
மருத்துவம், பொறியியல், இளநிலை, முதுநிலை, ஆசிரியர் பயிற்சி உள்ளிட்ட அனைத்து வகைப் படிப்புகளுக்கும் மத்திய அரசின் மூலம் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்களுக்கு பல கோடி ரூபாய் அளவுக்கு கல்விக் கடனை அளித்து வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் இந்த அளவு அதிகரித்துதான் வருகிறது.

யாரெல்லாம் கடன் பெறலாம்?
மருத்துவம், பொறியியல், நர்சிங், பி.எட்., ஆசிரியர் பயிற்சி ஆகிய படிப்புகளுக்குக் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் சில தகுதிகளை நிர்ணயித்துள்ளன. அதன்படி, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பி.எட்., ஆசிரியர் பயிற்சி மற்றும் நர்சிங் பயிலும் மாணவர்கள் வங்கிகளில் கல்விக் கடன் பெறத் தகுதி உடையவர்கள் ஆவார்கள். திருத்தப்பட்ட கல்விக் கடன் திட்டம் 2011-ன்படி மெரிட் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மட்டுமே இந்தக் கல்விக் கடனைப் பெற முடியும்.
மெரிட் அடிப்படையில் `சீட்’ பெறும் மாணவர்கள் கல்விக் கடன் பெறலாம். கல்விக் கடன் பெறும் மாணவர்கள் தாங்கள் பெறும் கடனுக்கு `செக்யூரிட்டி’ கொடுக்க வேண்டியதில்லை. ஆனால் நிர்வாக ஒதுக்கீட்டில் (மானேஜ்மென்ட் கோட்டா) மருத்துவம், பொறியியல், ஆசிரியர் படிப்பு, நர்சிங் படிப்புகளில் சேரும் மாணவர்கள் வங்கியில் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால் அவர்களுக்கும் கடன் வழங்கப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு, கல்விக் கடன் திட்டத்தில் வழங்கப்படும் சலுகைகள் கிடைக்காது. `செக்யூரிட்டி’யும் அளிக்க வேண்டும்.
தகுதியான மதிப்பெண்கள் பெற்றால்…
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்குத்தான் கல்விக் கடன் அளிக்க முடியும் என்று வங்கிகள் கூற முடியாது. மானேஜ்மென்ட் கோட்டாவில் சேரும் மாணவர்கள் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். அரசு நிர்ணயித்துள்ள தகுதியைப் பெற்றிருப்பவர்கள்தான் `கவுன்சலிங்’ மூலம் கல்லூரியில் சேருவார்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடனைப் பெறும் மாணவரின் பெற்றோருக்கு நிரந்தர வருமானம் இல்லாவிட்டாலும் அவருடைய மகன் அல்லது மகளுக்கு வங்கிகள் கட்டாயம் கல்விக் கடன் வழங்க வேண்டும். கல்விக் கடனை மாணவர் திருப்பிச் செலுத்துவாரா என்றுதான் வங்கிகள் பார்க்க வேண்டுமே தவிர, அவரது பெற்றோரின் தகுதியைப் பார்க்கக் கூடாது.
ஒரே குடும்பத்தினர் பெற முடியுமா?
ஒரே குடும்பத்தில் உள்ள 2 பேர், சொத்து அடமானம் இல்லாமல் கல்விக் கடன் பெற முடியுமா என்ற குழப்பம் பலரிடம் உள்ளது. கல்விக் கடன் பெறும் மாணவர்கள் எதிர்காலத்தில் அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் அவர்கள் படித்து வேலை பெறுவார்களா என்பதைப் பொறுத்துத்தான் கல்விக் கடன் அளிக்கப்படுகிறது. எனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிப்பதற்குத் தடை ஏதும் இல்லை.
திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க…
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கும் மாணவர்கள், கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்காமல் வெளியே தனியாகத் தங்கியிருந்தால் அவர்களுக்கும் வங்கிகள் கடன் வழங்க வேண்டும். மாணவரின் தங்குமிடம் மற்றும் சாப்பாட்டுச் செலவுக்கு ஒரு குறிப்பிட்ட வரையறையை வங்கிகள் வைத்துள்ளன. எனவே கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் இடம் கிடைக்கவில்லை என்ற காரணத்துக்காக மாணவரின் கல்விக் கடன் விண்ணப்பத்தை வங்கிகள் நிராகரிக்க முடியாது. அவருக்குத் தகுதிகள் இருந்தால் தாராளமாகக் கடன் வழங்கலாம்.
கல்விக் கடன் பெற்ற ஒரு மாணவர், அதைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று விரும்பினால் அதுகுறித்து குறிப்பிட்ட வங்கிக்குக் கோரிக்கை விடுக்கலாம். ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின்படி அநëத மாணவரின் வேண்டுகோளை வங்கிகள் பரிசீலிக்க வேண்டும்.

கல்விக் கடன் பெற்ற மாணவர் ஒருவர் படித்து முடித்துவிட்டு மேற்படிப்பு படிக்க விரும்பினால் படிக்கலாம். அந்த மாணவருக்கு கல்விக் கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை 6 மாதம் முதல் ஓராண்டு வரை வங்கிகள் தள்ளி வைக்கலாம். படிப்புக்கு ஆகும் செலவில் ஒரு பகுதிக்கு கல்விக் கடன் வேண்டும் என்று கேட்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், இதுபோன்ற விண்ணப்பங்களையும் வங்கிகள் பரிசீலனை செய்கின்றன. வெளிநாடு வாழ் இந்தியரின் (என்.ஆர்.ஐ.) மகன் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்தால், அவர்களுக்கும் கடன் வழங்குவது குறித்து வங்கிகள் பரிசீலிக்கும். ஆனால் அந்த மாணவரின் தந்தை இந்திய பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும். மேலும் அந்த மாணவருக்கு வழங்கப்படும் கடனுக்கு `செக்யூரிட்டி’ கொடுக்க வேண்டும்.
கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்த மாணவரின் மனு ஏற்கப்பட்டதா, ஏற்கப்படவில்லையா என்ற தகவலை அந்தந்த வங்கிகள் மாணவருக்குக் கடிதம் மூலம் தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை கல்விக் கடன் விண்ணப்ப மனு நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை வங்கிகள் தங்கள் ஆவணங்களில் பதிவு செய்ய வேண்டும்.

வட்டியில்லா கல்விக் கடன்
வட்டியில்லா கல்விக் கடனையும் வங்கிகள் வழங்குகின்றன. வட்டியில்லா கல்விக் கடனைப் பெற இரண்டு தகுதிகள் வேண்டும்.
ஒன்று, வங்கியில் கடன் கோரும் மாணவர், கவுன்சிலிங் மூலம் கல்லூரியில் தொழிற்கல்வி (புரொபஷனல்) படிப்புகள், அதாவது என்ஜினீயரிங், மருத்துவம், பாலிடெக்னிக் போன்ற படிப்புகளில் சேர வேண்டும். பி.ஏ., பி.எஸ்சி. போன்ற கலை, அறிவியல் படிப்புகளுக்கு வட்டி ரத்துச் சலுகை கிடையாது.
மற்றொன்று, மாணவரின் தந்தையின் ஆண்டு வருமானம் நான்கரை லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது. அதற்கான சம்பளச் சான்றிதழை, கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது இணைத்து அனுப்ப வேண்டும்.
இந்தத் தகுதிகள் இருந்தால், மாணவர்கள் கல்விக் கடனாகப் பெறும் தொகைக்கு வட்டி கிடையாது. உதாரணமாக, என்ஜினீயரிங் பயிலும் மாணவர் 4 ஆண்டுகள் படிக் கிறார் என்றால், அந்த 4 ஆண்டுகளுக்கும் அவர் வட்டி செலுத்த வேண்டியதில்லை. ஆனால் அவர் படித்து முடித்து 6 மாதங்களுக்குப் பின்னர் கல்விக் கடனுக்கான மாதத் தவணை செலுத்தும் போது, 4 ஆண்டுகளுக்குப் பிறகு உள்ள கல்விக் கடன் அசல் தொகை மற்றும் வட்டியைச் சேர்த்துச் செலுத்த வேண்டும்.
தந்தையின் மாத வருமானம் நான்கரை லட்சத்துக்கு மேல் உள்ள மாணவருக்கு வட்டி ரத்துச் சலுகை கிடையாது. அந்த மாணவர், என்ஜினீயரிங் படிக்கும் 4 ஆண்டுகளுக்கான வட்டியையும் சேர்த்து, படித்து முடித்த 6 மாதங்களுக்குப் பிறகு செலுத்த வேண்டும்.
கல்விக் கடன் பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்?
வங்கிகளில் மாணவர்கள் கல்விக் கடன் பெறுவதற்கு கீழ்க்கண்ட தகுதிகள் வேண்டும்…
* இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவில் படிப்பதற்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ. 20 லட்சமும் கடன் வழங்கப்படுகிறது.
* கல்விக் கடனுக்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதனுடன் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், கல்லூரி சேர்க்கைக்கான அனுமதிக் கடிதம், கட்டணம் பற்றி கல்லூரி அளிக்கும் கடிதம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மாணவரின் 6 மாதத்துக்கான வங்கிக் கணக்கு ஸ்டேட்மென்ட், மாணவரின் தந்தையின் வருமானச் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து அளிக்க வேண்டும்.

* கல்விக் கடனுக்கான வட்டி விகிதம், வங்கிக்கேற்ப மாறுபடுகிறது. 11.5 சதவீதம் முதல் 13.5 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. ரூ. 4 லட்சம் வரை கடன் பெற்றால் `செக்யூரிட்டி’ தேவையில்லை, அதற்கு மேல் கடன் பெற்றால் `செக்யூரிட்டி’ கொடுக்க வேண்டும். அதாவது சொத்து ஆவணங்களை வழங்க வேண்டும்.
* கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் 5 ஆண்டுகள் முதல், 7 ஆண்டுகள் வரை ஆகும். சில வங்கிகள் 60 சதவீத மதிப்பெண் இருந்தால்தான் கல்விக் கடன் கொடுக்க முடியும் என்று தெரிவிக்கின்றன. மேற்படிப்பில் சேருவதற்கான தகுதிகள் இருந்தாலே அந்த மாணவருக்கு வங்கிகள் கடன் அளிக்க வேண்டும்.
* படித்து முடித்த 6 மாதத்தில் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டும். அதன்பின்னர் வேலை கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும் கல்விக் கடனுக்கான மாதத் தவணையை கட்டாயம் திருப்பிச் செலுத்த வேண்டும்.
* என்ஜினீயரிங் படித்துவிட்டு மேற்கொண்டு எம்.இ. போன்ற பட்ட மேற்படிப்புப் படிக்க விரும்பினால் அதுபற்றி அவர் வங்கிக்குத் தெரியப்படுத்தினால் அதற்கும் கல்விக் கடன் பெறலாம். ஆனால் பட்ட மேற்படிப்பு முடித்து 6 மாதங்கள் கழித்து இரண்டு கல்விக் கடனையும் சேர்த்துத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
* டியூஷன் கட்டணம், நூலகக் கட்டணம், லேபரட்டரி கட்டணம், புத்தகங்கள், உபகரணங்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் வாங்குவதற்கான செலவு, திரும்பக் கிடைக்கும் டொபாசிட் தொகை, இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கான தொகை ரூ. 50 ஆயிரம் உள்பட பல்வேறு வகையான கட்டணங்களுக்கும் கல்விக் கடன் கேட்டு விண்ணப்பிக்கலாம். எவ்வளவு கட்டணம் வழங்குவது என்பது ஒவ்வொரு வங்கிக்கும் வேறுபடும்.

`பான் கார்டு’ வேண்டும்
இந்தக் கல்வியாண்டு முதல், வங்கிகளில் கல்விக் கடன் பெறும் மாணவர்கள் கண்டிப்பாக `பான் கார்டு’ வைத்திருக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
`பான் கார்டு’ ஏன் கேட்கிறார்கள்? இரண்டு காரணங்களுக்காக இது கேட்கப்படுகிறது. ஒன்று, வட்டி ரத்துச் சலுகை கேட்கும் மாணவர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானத்தைச் சரிபார்த்துக் கொள்வதற்காகக் கேட்கப்படுகிறது. மற்றொன்று, கடன் வாங்கிய மாணவர் வங்கியை ஏமாற்றிவிடக் கூடாது என்பதற்காக.
ஒரு மாணவர் ஒரு பான் கார்டு தான் வைத்திருக்க வேண்டும். இரண்டு கார்டுகள் வைத்திருப்பது குற்றம்.
ஒரு மாணவர் பான் கார்டு கேட்டு விண்ணப்பிக்கும்போது அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களும் அந்த பான் கார்டில் இடம்பெற்றிருக்கும். ஒருவேளை வங்கியில் கல்விக் கடன் பெற்று படித்து முடித்துவிட்டு அவர் குடும்பத்தோடு வேறு ஊருக்குச் சென்றுவிட்டால், கடன் கொடுத்த வங்கி அவரைத் தேடிப் பிடிப்பது கடினம். எனவேதான் மாணவர்கள் பான் கார்டு வாங்க வேண்டும் என்று வங்கிகள் கட்டாயப்படுத்துகின்றன.

பான் கார்டு வாங்கிய பின்னர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றும் எண்ணத்துடன் அந்த மாணவர் வேறு ஊருக்குச் சென்றுவிட்டால் அவரை எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். வேறு ஊரில் சென்று அந்த மாணவர் வங்கியிலோ அல்லது தனியார் நிதி நிறுவனத்திலோ எந்தக் கடன் கேட்டாலும் சிக்கிக்கொள்வார்.
கடன் கொடுக்கும் தனியார் நிறுவனங்கள் கூட தற்போது கட்டாயம் `பான் கார்டு’ கேட்கின்றன. அப்படி அந்த மாணவர் கொடுக்கும் பான் கார்டு எண்ணை `கிரெடிட் இன்பர்மேஷன் இந்தியா பியூரோ லிமிடெட்’ என்ற இணையதளத்தில் கொடுத்தால் அவர் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பது தெரிந்துவிடும்.
வங்கிகளை ஏமாற்றும் நபர்களை அடையாளம் காண்பதற்காகவே அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் இணைந்து `கிரெடிட் இன்பர்மேஷன் இந்தியா பியூரோ லிமிடெட்’ என்ற அமைப்பை நடத்துகின்றன. இதன் மூலம், இந்தியாவில் ஒருவர் எங்கு கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தாலும், அவருடைய `செக்’ திரும்பி வந்தாலும் அது பற்றிய விவரம் குறிப்பிட்ட இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுவிடும்.
இதன் காரணமாகத்தான் வங்கிகள் பான் கார்டு வேண்டும் என்று மாணவர்களை வற்புறுத்துகின்றன.
கல்விக் கடனுக்கு வங்கிகள் தயங்குவது ஏன்?
கடைசியாக…
கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் மறுக்கின்றன என்று அதிக புகார்கள் வருகின்றன. உண்மையில் கல்விக் கடன் கொடுக்க வங்கிகள் தயங்குவது
ஏன்?தாங்கள் அளிக்கும் கடன்களில் அதிகம் திரும்பி வராத கடன் கல்விக் கடன் தான் என்கிறார்கள் வங்கி அதிகாரிகள்.
கல்விக் கடன் பெறும் பல மாணவர்களுக்கு அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் இருப்பதில்லை என்பதே நிதர்சனம். பொதுவாக, வீடு, கார், வீட்டு உபயோகச் சாதனங்கள் என்று எதற்குக் கடன் வாங்கினாலும் அதைத் திருப்பிச் செலுத்த வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆனால் கல்விக் கடனை மட்டும் திருப்பிச் செலுத்த பெரும்பாலானவர்கள் விரும்புவதில்லை.
உண்மையில், கல்விக் கடனைப் பெற்றவர்களில் 40 சதவீதம் பேர்தான் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்துகின்றனர். மற்ற 60 சதவீதம் பேரின் கடன் நிலுவையில் உள்ளது. பலர் படிப்பு முடிந்தும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் என்பதும் உண்மை. கல்விக் கடன் பெற்றுத் திருப்பிச் செலுத்தாதவர்களை கண்டுபிடிப்பதும் கடினமாக உள்ளது.
படிக்கும் மாணவ- மாணவியருக்குத்தான் கல்விக் கடன் கொடுக்கப்படுகிறது. அவர்களது பெற்றோருக்கு அல்ல. என் பெற்றோர் தான் கல்விக் கடன் வாங்கினர். நான் வாங்கவில்லை, எனவே கடனைத் திருப்பிச் செலுத்துவது எனது பொறுப்பல்ல என்று ஒரு மாணவர் கூறினால் அதை ஏற்க முடியாது. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தும் கடமை அந்த மாணவருக்குத்தான் என்று வங்கிகள் கூறுகின்றன.
கல்விக் கடன் வசூல் சதவீதம் குறைவாக இருப்பதால்தான் வங்கிகள் கல்விக் கடன் வழங்கத் தயங்குகின்றன. கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தாங்கள் யோசிப்பது, தங்களுக்குப் பின்னால் வரும் தம்மைப் போன்றவர்களைப் பாதிக்கும் என்று உணர்ந்து மாணவர்கள் நடப்பது நல்லது.

ஆரோக்கியம் தரும் அன்னாசி!

 

Mc13

அன்னாசிப் பழத்தில் வைட்டமின் `பி’ உயிர்ச்சத்து அதிகளவு உள்ளது. இது ரத்த விருத்திக்கு மிக முக்கியமானதாகும்.
நன்றாகப் பழுத்த அன்னாசிப் பழத்தைச் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வெயிலில் தூசி படாமல் உலர்த்தி வற்றல்களாக்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் படுக்கச் செல்வதற்கு அரை மணி நேரத்துக்கு முன் ஒரு டம்ளர் பாலில் 5 அன்னாசி வற்றல்களை ஊறவைத்து, படுக்கச் செல்லும்போது அவற்றைச் சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்பந்தமான அனைத்துக் கோளாறுகளும் நீங்கும்.
அன்னாசிப் பழத்துடன் தேன் சேர்த்து ஜூஸ் தயாரித்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒருபக்கத் தலைவலி, இருபக்கத் தலைவலி, எல்லாவித கண் நோய்கள், எல்லாவித காது நோய்கள், பல் வியாதிகள், தொண்டை சம்பந்தமான நோய்கள், வாய்ப்புண், ஞாபகசக்திக் குறைவு ஆகியவை குணமாகும்.
மஞ்சள் காமாலை உள்ளவர்கள் அன்னாசிப் பழச் சாற்றைச் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடைவார்கள்.

மினி கால்குலேட்டர்

கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது. விண்டோஸ் தரும் கால்குலேட்டரையும் ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ், அக்சசரீஸ், கால்குலேட்டர் எனச் சென்று கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தரும் இந்த கால்குலேட்டரை அதன் தோற்றத்திற்காக, தெளிவாகத் தெரியாத தன்மைக்காகப் பலர் விரும்புவதில்லை. டெஸ்க்டாப்பில் ஒரு கால்குலேட்டர் இருந்தால், அதுவும் வசதியாகவும், எளிமையாகவும் பயன்படுத்தும் வகையில் இருந்தால் நன்றாக இருக்குமே. அப்படி ஒரு கால்குலேட்டரைத்தான், மினி கால்குலேட்டர் என்ற பெயரில், இணைய தளம் ஒன்று இலவசமாகத் தருகிறது. இதன் முகவரி http://www.softpedia.com/get/ScienceCAD/MiniCalculator.shtml. இந்த தளம் சென்று இதற்கான ஸிப் பைலை டவுண்லோட் செய்து பின்னர் விரித்து இதன் இ.எக்.ஸி பைலைக் கிளிக் செய்து, டெஸ்க்டாப்பில் வைத்துக் கொள்ளலாம். மிகச் சிறியதாக, ஆனால், கருப்பு வெள்ளையில் தெளிவான தோற்றத்தில் இது இருப்பதனைக் காணலாம். தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள, சயின்டிபிக் கால்குலேஷனும் இதில் கிடைக்கிறது. பைல் மிகச் சிறியதாக உள்ளதால், (157 கே.பி.) யு.எஸ்.பி. ட்ரைவிலும் எடுத்துச் செல்லலாம். தற்போது இதன் பதிப்பு 1.0.4.8 கிடைக்கிறது.
இதன் பல பிரிவுகள் நமக்குப் பல்வேறு வசதிகளைத் தருகின்றன. இதனை ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் உள்ள Show Strip என்பது, நாம் மேற்கொள்ளும் கால்குலேஷன் அனைத்தையும் அப்படியே டெக்ஸ்ட்டாக அமைக்கிறது.
இதனை அப்படியே பைலாக சேவ் செய்திடலாம். கால்குலேஷனில் தவறு இருப்பின் எங்கு என்பதைக் கண்டறியலாம். இதில் ஏற்றப்படும் டேட்டாவினை, Save to File, Copy All, or Clear Strip எனப் பல வகைகளில் பயன்படுத்தலாம். Scientific என்பதனைக் கிளிக் செய்தால், sine, cosine, and tangent எனப் பல சயின்டிபிக் கால்குலேஷன்களை மேற்கொள்ளலாம். கால்குலேட்டர் விண்டோ இயக்கத்தினை அப்படியே அதே நிலையில் சேவ் செய்திட Options கிளிக் செய்து தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அதிக குழப்பமான தோற்றம் இன்றி, மிக மிகச் சிறிய பாக்கெட் கால்குலேட்டர் போல டெஸ்க் டாப்பில் வைத்து இதனை இயக்க நம் அனைவருக்குமே விருப்பமாக இருக்கும். நீங்களும் பயன்படுத்திப் பாருங்கள்.

கூகுள் வீடியோ நிறுத்தம்

கூகுள் வீடியோ நிறுத்தப்படுகிறது என்றவுடன், கூகுள் நிறுவனத்தின் யுட்யூப் சேவை நிறுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறதா? அதுதான் இல்லை. கூகுள் நிறுவனம் முதலில் கூகுள் வீடியோ என்ற சேவையைத் தொடங்கி நடத்தியது. பின்னரே, யுட்யூப் சேவைத் தளத்தை வாங்கி தன்னுடையதாக்கிக் கொண்டது. ஆனால் இரண்டு சேவைத் தளங்களும் இயங்கி வந்தன. அதிகம் பிரபலமாகாத கூகுள் வீடியோ வரும் ஆகஸ்ட் மாதத்துடன் மூடப்படப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2005 ஆம் ஆண்டில், கூகுள் வீடியோ தொடங்கப்பட்டது. தங்களுடைய வீடியோ படங்களை இணையத்தில் தேக்கி வைத்திட, சர்வர் இல்லாதவர்களுக்கு உதவிடும் வகையில் இது தொடங்கப்பட்டது. ஆனால், ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் வீடியோ பார்க்க முயற்சிக்கையில், அதன் சர்வர் தள்ளாடியது. அதனால், ஈடு கொடுக்க இயலவில்லை. அடுத்த ஆண்டிலேயே தனக்குப் போட்டியாக இயங்கி வந்த யுட்யூப் தளத்தை, கூகுள் வாங்கியது.
கூகுள் வீடியோ தளத்தினை சீரமைக்க கூகுள் எடுத்த நடவடிக்கைகள் பலனற்றுப் போயின. இதனால், 2009 ஆம் ஆண்டு முதல், வீடியோ கிளிப் பைல்கள் அப்லோட் செய்வது அனுமதிக்கப்படவில்லை. இப்போது ஆகஸ்ட் 20 முதல் இத்தளம் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே தங்கள் வீடியோக்களை அப்லோட் செய்தவர்கள், அவற்றை யுட்யூப் தளத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்; அல்லது தங்கள் கம்ப்யூட்டரில் இறக்கிப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். ஆகஸ்ட் 20க்குப் பின்னர், கூகுள் வீடியோ தளத்தில் உள்ள வீடியோ பைல்களை, கூகுள் நிறுவனமே யுட்யூப் தளத்திற்கு மாற்றிவிடும். இதே போல தன்னுடைய ஐ கூகுள் சேவையினையும், கூகுள் மூடுகிறது. தனி நபர்கள் தங்களுக்கென ஒரு தளத்தை அமைத்து இயங்க இந்த சேவையினை கூகுள் வழங்கியது. தற்போது இது போல பல தளங்கள் கூடுதல் வசதிகளுடன் இயங்குவதால், இதனையும் மூடுகிறது. இதே போன்ற காரணங்களுக்காக, சிம்பியன் சர்ச் அப்ளிகேஷன், கூகுள் மினி மற்றும் கூகுள் டாக் சேட் பேக் ஆகிய வசதிகளும் மூடப்படுவதாக, கூகுள் அறிவித்துள்ளது.

சொர்க்கம்-நரகம்-புனர் ஜென்மம்

 

மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன?
அவனுடைய ஆவி இப்போது இருப்பதைப் போலவே பூமியில் உலாவுகிறதா?
இல்லை, வான மண்டலத்திலே சொர்க்கத்திற்கோ, நரகத்திற்கோ போய் விடுகிறதா?
அதுவும் இல்லை என்றால், அது இன்னொரு ஜீவனாக உடனே பிறந்து விடுகிறதா?
இந்தக் கேள்விகளுக்கு எப்படியும் பதில் சொல்லலாம்.
உபந்யாசகர்கள் அவர்களுக்குத் தோன்றிய பதிலைச் சொல்கிறார்கள்.
ஆனால், மறுபிறவி என்கிற புனர்ஜென்மத்தைப் பற்றிக் காஞ்சிப் பெரியவர்கள் அழகாக ஒரு விளக்கம் தருகிறார்கள். அதனை அத்தியாயத்தின் இறுதியில் தருகிறேன்.
மனித உயிர் சொர்க்கத்துக்கோ, நரகத்திற்கோ போகிறது என்பதிலும், மறுபிறவி எடுக்கிறது என்பதிலும் இந்துக்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
`சொர்க்கம், நரகம் என்ற இரண்டை ஏன் ஆண்டவன் படைக்க வேண்டும்?’ என்று யாராவது கேட்டால், `உயிர் ஏன் போக வேண்டும்?’ என்றே நான் அவர்களைத் திருப்பிக் கேட்பேன்.
ஒன்பது ஓட்டைக்குள்ளே ஊசலாடிக் கொண்டிருக்கும் ஒரு துளிக் காற்று ஒரு குறிப்பிட்ட தேதியில் வெளியேறுகிறது.

ஆக, அந்தத் தேதியை எவனோ நிர்ணயிக்கிறான் என்று தானே ஆகிறது.
அப்படித் தேதியை நிர்ணயிக்க ஒருவன் இருப்பானானால், மனித உயிருக்கு நீதியையும், அவன் நிர்ணயிப்பானல்லவா?
தவறு செய்தவர்கள் நரகத்திற்குப் போகும்படியும், நல்லது செய்தவர்கள் சொர்க்கத்திற்குப் போகும்படியும், அவன் நிர்ணயிக்கலாம் அல்லவா?
சொர்க்க-நரகத்தின் அமைப்பு, அதன் இருப்பிடம் பற்றி வேண்டுமானால் சர்ச்சை இருக்கலாம். ஆண்டவன் தான் நீதி வழங்குகிறான் என்பதில், விவாதத்துக்கே இடமில்லையே!
அவரவர்களின் கர்மாவுக்கு ஏற்றபடி நீதி வழங்கப்படுகிறது என்பதில் தவறில்லையே?
சிலரது மரணத்தையே நாம் பார்க்கிறோமே…
காந்தியை நேசித்த காமராஜ், காந்திஜீ பிறந்த நாளிலே மரணமடைந்தார்.
முருகனை நேசித்த சின்னப்பா தேவர், முருகனுக்கு உகந்த சஷ்டி நாளிலே காலமானார்.
இந்த இருவருமே சொர்க்கத்துக்குத்தான் போயிருப்பார்கள் என்பதை இவர்களது மரணமே சுட்டிக் காட்டுகிறதே!
படுக்கையில் நீண்ட நாட்கள் படுத்து அவதிப்படாதபடி, அந்தப் புண்ணிய மூர்த்திகளை இறைவன் வலி இல்லாமல் கொண்டு போயிருக்கிறான்.
`வாழ்ந்தால் இப்படி வாழ வேண்டும்’ என்ற ஆசையை விட, `செத்தால் இப்படிச் சாக வேண்டும்’ என்ற எண்ணத்தையல்லவா இந்த மரணங்கள் உண்டாக்கி இருக்கின்றன!
ஒருவனது வாழ்நாளிலேயே மரணத்துக்குப் பின்பு அவன் எந்த நிலையை எய்துவான் என்பதை, இந்துக்கள் கண்டு பிடிக்கிறார்கள்.
சிலரைப் பார்த்து, `அட பாவி, நீ நரகத்திற்குத் தான் போவாய்!’ என்கிறார்கள்.
`புண்ணியவானுக்கு நல்ல கதி கிடைக்கும்!’ என்கிறார்கள், சிலரைப் பார்த்து.
இந்தக் கதி நிர்ணயம், அவர்களது வாழ்க்கையிலே அடங்கிக் கிடக்கிறது.
நான் அடிக்கடி சொல்வேனே ஒரு சாமியார் கதை, அது அப்படித்தான்!
இக வாழ்க்கையில் ஒரு மனிதன் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கவே, பரலோகத்தைத் தீர்க்கதரிசிகள் காட்டினார்கள்.
`கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்றாலும், இந்துக்களின் அனுமானத்தில் இருந்து, அவர்கள் விரும்புகிற பண்பாடு புரிகிறது.
மனிதனை நேர்வழியில் நடக்கச் செய்வதே, அவர்களின் மூலாதார நோக்கம்.
ஆனால் மறுபிறவி என்பது நிச்சயமாக இருக்கிறது.
`ஒன்றை விரும்புகிறவன், அது நிறைவேறாமல் செத்தால், அதை நிறைவேற்றிக் கொள்ள மறுபடியும் பிறக்கிறான்’ என்கிறார்கள்.
தவறு செய்கிறவர்கள் இழி பிறப்பெடுத்ததாகக் கூறுகிறார்கள்.
இழி பிறப்பெடுத்த ஒருவன், அந்தப் பிறப்பில் தன்னுடைய கர்மாவை ஒழுங்காக நிறைவேற்றி விட்டால், அடுத்த பிறப்பில் உயர் பிறப்பெடுக்கிறான் என்கிறார்கள்.
இதிலே, நான் முதலில் கேள்வி கேட்டவாறு, ஒரே ஒரு ஐயப்பாடெழும்.
`ஒருவன் இறந்தபின் எவ்வளவு காலம் கழித்து மறு பிறப்பெடுக்கிறான்?’ என்பதே அது.
அது அவனுடைய ஆசையையும், கருமத்தையும் பொறுத்தது.
எனது சகோதரர் ஏ.எல்.எஸ். மறைந்த அதே நாளில் எனது மகள் கலைச்செல்விக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த ஜீவனின் மறு பிறப்பே இது என்றே நம்பிக்கை தோன்றுகிறது. சரியோ தவறோ, அப்படி ஒரு எண்ணம் எனக்கு ஏற்படுகிறது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாலே எகிப்து நாட்டில் ஒரு விவசாயியைக் காதலித்த குற்றத்திற்காகக் கொலை செய்யப்பட்டாள் ஒரு பதினாறு வயது ராஜகுமாரி.
அவளை அடைத்திருந்த முதுமக்கள் தாழியை அண்மையிலே கண்டுபிடித்திருக்கிறார்கள்.
`ஆயிரம் வருஷம் கழித்து அவள் மறுபடியும், எகிப்து மன்னனைக் கட்டிக் கொண்டாள்’ என்றும், `அந்த விவசாயி தான் எகிப்து மன்னனாகப் பிறந்தான்’ என்றும் ஒருவர் எழுதியிருந்தார்.
இந்தக் கதைகள் உண்மையோ, பொய்யோ, ஜீவர்களைச் சிருஷ்டிக்கும் வேலையைச் சுலபமாக்கிக் கொள்ள ஆண்டவன் மறுபிறப்பை உண்டாக்கி இருக்கிறான் என்பதை நம்பலாம்.
ஆக, சொர்க்கம், நரகம், மறுபிறவி என்பதெல்லாம் வெறும் ஏமாற்று வித்தைகள் என்று கேலி பேசுவதை விட, வாழ்க்கைச் சாலையை ஒழுங்குபடுத்திக் கொடுக்கும் அற்புதங்கள் என்று ஏற்றுக் கொள்வதில் நியாயம் உண்டு.
`அது சரி, ஜீவன் தான் மறுபடி பிறக்கிறதே. மறுபடி பிறந்து அது பூமியில் தண்டனையை அனுபவிக்கப் போகிறதே, அதற்குச் சொர்க்கமும் நரகமும் எதற்கு’ என்ற கேள்வி எழும்.
பகவத் கீதைப்படி, உத்தராயணத்தில் செத்தவர்களுக்கு மட்டுமே பிறப்பு உண்டு. தட்சிணாயணத்தில் செத்தவர்களுக்கு இல்லை.
தட்சிணாயணத்தில் செத்தவர்கள் பாவம் செய்தவர்களாக இருந்தால், அவர்களைக் கொண்டு போய் வைக்க நரகமும், புண்ணியவான்களைக் கொண்டுபோய் வைக்கச் சொர்க்கமும் இருக்கின்றன.
`சொர்க்கத்தில் சுகபோகப் பிருந்தாவனம் இருக்கும்’ என்கிறார்கள்; `நரகத்தில் எண்ணெய்க் கொப்பறையும் செக்கும் இருக்கும்’ என்கிறார்கள். இவையெல்லாம் உண்மையா?
இவையெல்லாம் மனிதனின் கற்பனா வடிவங்கள்.
சொர்க்க-நரகம் என்பது இறைவனின் நீதிமுறை என்றே எனக்குப் புரிகிறது. ஆனால், அதன் அமைப்பை யாரும் பார்த்ததில்லை.
ஆவிகளின் உலகத்தில் ஏதோ ஒரு இருப்பிடம் இருக்கத் தானே செய்யும்? அதற்கொரு வடிவம் கற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
சினிமாக்காரர்கள் அரண்மனை செட் போடும்போது, அவரவர் மனோ தர்மத்திற்கேற்பப் போடுவது போல், சொர்க்க நரகத்தையும் பலர் கற்பனை செய்திருக்கிறார்கள்.
நீதிமன்றம் எப்படி இருக்கும் என்பது, நீதிமன்றத்துக்குப் போகும்வரை யாருக்கும் தெரியாது. எல்லோரும் போய்ப் பார்த்த பிறகுதான் தெரிந்து கொள்ள முடியும்.
தண்டனையோ பரிசோ எதுவானாலும் சரி, அவற்றில் இருந்து தப்ப இக வாழ்க்கையில், `சூதாடுவதையும், குடிப்பதையும், தாசி வீட்டுக்குப் போவதையும் பாவங்கள்’ என்று நான் கருதவில்லை. அவை மனிதன் தனக்குத்தானே விளைவித்துக் கொள்ளும் தீங்குகள்.
அடுத்தவனைக் கெடுப்பது, துரோகம் செய்வது, பிறன் மனை இச்சிப்பது போன்றவையே பாவங்கள் என்று இந்துப் புராணங்கள் கூறுகின்றன.
மாமிசம் உண்பதைக்கூட `மத விரோதம்’ என்று அவை கூறியதில்லை.
சடலத்தை தூக்கிச் செல்லும்போது, `ஐயோ! புண்ணியவான் போய்விட்டாரே!’ என்று பத்துப் பேர் சொன்னால், அந்த வார்த்தைகளே சொர்க்கத்தின் படிக்கட்டுகள்; `சண்டாளன் போய்விட்டான்’ என்றால் நரகத்தின் படிக்கட்டுக்கள்.
அந்த நல்ல பெயரையே மனிதன் தேடிக் கொள்ளவேண்டும்.

இந்துக்களின் வேதங்களும், புராணங்களும் அதையே வலியுறுத்துகின்றன.
இதோ, காஞ்சிப் பெரியவர் பேசுகிறார்:
`மற்ற மதங்களில் இல்லாத பல அம்சங்கள் நம் மதத்தில் இருக்கின்றன. அதில் கர்மக் கொள்கை (Karmattheory) என்று ஒன்று சொல்கிறார்கள்-நம் மதத்திலிருந்தே வந்த பெளத்தம் போன்ற மதங்கள் இதை ஒப்புக் கொண்டாலும், ஏனைய மதங்களில் இந்தக் கொள்கை இல்லை.
`கர்மா தியரி’ என்றால் என்ன?
எந்தச் செயலுக்கும் பிரதியாக ஒரு விளைவு உண்டு. Cause and Effect என்பதாகவும், Action and Reaction என்பதாகவும் இவை தவிர்க்க முடியாத விதிகளாக இருக்கின்றன என்றும் `ஃபிஸிக்ஸில்’ சொல்கிறார்கள். பெளதிகத்தில் சொல்வதையே மனுஷ்ய வாழ்க்கைக்கும் பொருத்தி கர்மக் கொள்கையை நம் ஆன்றோர்கள் கூறுகிறார்கள். பிரபஞ்சத்தில் ஜடமான பூதங்கள் போலவே சைதன்யம் என்ற அறிவுள்ள ஜீவர்களும் அடக்கம். இவை ஒன்று சேர்ந்தது தான் லோக வாழ்வு. எனவே ஒன்றுக்கு இருக்கும் நியதி, தர்மம் இன்னொன்றுக்கும் இருக்கத்தான் வேண்டும். மனிதனின் ஒவ்வொரு கர்மாவுக்கும் விளைவாக ஒரு பலன் உருவாக்கித்தான் தீர வேண்டும் என்பதே (Karmattheory) `பாவ கர்மம் செய்தால் அதற்கான தண்டனையை மனுஷ்யன் அனுபவிக்க வேண்டும். புண்ணிய கர்மம் செய்தால் அதற்கான நற்பலன் அவனை வந்தடையும்’ என்கிறது நம் மதம்.
இம் மாதிரிப் பாவ-புண்ணியக் கர்மங்களை மனிதன் அனுபவிக்க வேண்டும் என்பதாலேயே அவனுக்கும் பல பிறவிகள் உண்டாகின்றன என்கிறது நம் மதம். நல்லது செய்ய வேண்டும். கெட்டது செய்யக் கூடாது என்பதைச் சகல மதங்களும் சொன்னாலும், அவை நம் மதம் மாதிரி இத்தனை அழுத்தம் கொடுத்து, காரணம், விளைவு (Cause and Effect) தொடர்பைச் சொல்லவில்லை. மறு பிறப்புக் கொள்கையை (Reincornation Theory) மற்ற மதங்கள் – பாரத தேசத்தில் தோன்றாத மற்ற மதங்களில் எதுவுமே – சொல்லவில்லை. அது மட்டுமில்லை, இதற்கு மாறாகப் பல தினுசான கருத்துகளைச் சொல்கின்றன. ஆனபடியால், அந்த மதஸ்தர்கள் மனிதனுக்குக் கர்மா தீருகிறவரை பல ஜென்மங்கள் உண்டு என்ற நம் கொள்கையைப் பலமாக ஆட்சேபிப்பார்கள்.
பொதுவாக அந்நிய மதத்தவர் கருத்து என்னவென்றால், `இந்த ஒரே ஜென்மத்தோடு மனுஷ்யனுக்குப் பிறவி தீர்ந்து விடுகிறது. இந்த ஜென்மா முடிந்த பின் அவன் உயிர் என்றைக்கோ ஒரு நாள் ஸ்வாமி கூறுகிற தீர்ப்பைக் கேட்பதற்காக ஓரிடத்தில் போயிருக்கும்.
அந்த நாளில் (Judgement Day) ஸ்வாமி இவன் இந்தப் பிறவியில் செய்த பாவ – புண்ணியங்களைக் கணக்குப் பார்த்து இவனை நித்தய ஸ்வர்க்க வாசகத்துக்கோ அல்லது நிரந்தர நரக வாசகத்திற்கோ (Eternal Damnation)அனுப்பி விடுவார்’ என்பதாகும்.
என்னிடம் வந்த ஒரு வெள்ளைக்காரர் – இப்போதெல்லாம் தான் என்னிடம் நிறைய வெள்ளைக்காரர்கள் வந்தபடி இருக்கிறார்களே, அவர்களில் ஒருத்தர் – இவர் புத்தகம் கித்தகம் எழுதிப் பிரசித்தி பெற்றவர் – வேடிக்கையாகச் சொன்னார், அவருக்குப் பைபிளில் எங்கு பார்த்தாலும் கடவுள் அன்பே உருவானவர் (God is Love) என்று சொல்லிவிட்டு, இப்படிப் பட்டவர் ஒரு தப்புப் பண்ணியவனைத் துளிகூடக் கருணையில்லாமல், மீளவே வழியில்லாமல் நித்திய நரகத்துக்கு அனுப்புகிறார் என்று சொல்வது பொருத்தமில்லாமல் தோன்றியதாம். எனவே ஒரு பாதிரியாரிடம் சமாதானம் கேட்டாராம். அதற்குப் பாதிரியார் `நிரந்தரமாகக் காலியாகவே இருக்கிறது’ என்றாராம்.
ஆனால், யோசித்துப் பார்த்தால் இதை நாம் ஏற்றுக் கொள்வது சிரமமாய் இருக்கும். சுவாமி கருணை காரணமாகப் பாவியைக் கூட நரகத்துக்கு அனுப்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவர்கள் சித்தாந்தப்படி அவர் பாவியின் உயிரை எங்கே அனுப்ப முடியும்? அவர்கள் கொள்கைப்படி மறு ஜென்மம் இல்லையாதலால் பூலோகத்துக்கு மறுபடி அனுப்ப முடியாது. அதனால் பாவியையும் ஸ்வர்க்கத்துக்குத் தான் அனுப்ப வேண்டியதாகும். அப்படியானால் நாம் லோகத்தில் எந்தப் பாவத்தை வேண்டுமானாலும், எத்தனைப் பாவங்கள் வேண்டுமானாலும் கூசாமல் செய்து கொண்டே போகலாம். முடிவில் எப்படியும் ஸ்வாமி நம்மை ஸ்வர்க்கத்துக்கு அனுப்பி விடுவார் என்று ஆகும். அதற்கப்புறம் லோகத்தில் சகலரும் ஒழுங்கு தப்பித்தான் நடப்பார்கள்.
நம் மதப்படியும் கர்ம பலனைத் தந்து தீர்ப்புத் தருகிற பலதாதாவான ஈஸ்வரன் பரம கருணாமூர்த்தி தான். ஆனால், அதற்காக லோகம் அதர்மத்தில் மனமறிந்து விழட்டும் என்று விடுகிறவன் அல்ல அவன்.
அதனால் என்ன பண்ணுகிறான்?
நம் பாவ பலனை (புண்ணிய பலனையும் தான்) அனுபவிப்பதற்காக நம்மை, இன்னொரு ஜென்மா கொடுத்து மறுபடி இந்த உலகுக்கே அனுப்பி வைக்கிறான். ஸ்வர்க்க ஆனந்தம், நரகக் கஷ்டம் இரண்டும் இந்த உலகத்திலேயே தான் இருக்கின்றன. நாம் கலந்தாங்கட்டியாகப் பாவம், புண்ணியம் இரண்டும் போன ஜென்மாவில் பண்ணியிருப்பதால் இப்போது கெட்டது நல்லது இரண்டையும் சேர்த்து அனுபவிக்கிறோம். ரொம்பப் பாவம் செய்தவர்கள் ரொம்பக் கஷ்டப்படுகிறோம். பொதுவிலே ரொம்பக் கஷ்டப்படுகிறவர்கள் அல்லது சமமாகக் கஷ்ட-சுகம் உள்ளவர்கள்தான் இருக்கிறோமே தவிர, தாங்கள் பரம சுகமாக இருப்பதாக நினைக்கிறவர்கள் ரொம்பவும் துர்லபமாகவே இருக்கிறார்கள். இதிலிருந்தே நாம் அனைவரும் பொதுவில் பாவமே அதிகம் பண்ணியிருக்கிறோம் என்பது புரிகிறது.
பகவான், கருணை காரணமாக, இன்னொரு ஜென்மாவிலிருந்து இவன் பாவத்தைக் கழுவிக் கொள்வானா என்று பார்ப்பதற்காக, ஒரு பெரிய வாய்ப்பாக (Opportunity) பிறவியைக் கொடுக்கிறார். அதிலே ஒரு சாஸ்திரம், க்ஷேத்திரங்கள், இத்தியாதி வசதிகளை எல்லாம் கொடுத்து இவனுடைய அழுக்கைத் துடைக்க முன் வருகிறார். `இவன் கையாலாகதவன், ஒரு நாளும் தானாக முன்னேற மாட்டான்’ என்று அடியோடு உதவாக்கரையாக நினைத்து இவனுக்குப் பாவியானாலும் கூட ஸ்வர்க்கத்தைக் கொடுத்து விடுகிறார் என்பதைவிட, இப்படி இவனைக் கூட நம்பி, உடன் தன்னைத் தானே கடைத்தேற்றிக் கொள்வான் என்று நம்பிக்கை வைத்துப் புனர் ஜென்மா தந்து, இதில் இவனுடைய தன் முயற்சிகளுக்குப் பல விதத்தில் கை கொடுக்க ஸ்வாமி முன் வருவதாகச் சொல்வது நன்றாக இருக்கிறது; பொருத்தமாக இருக்கிறது. அதுதான் பரம கருணையாகவும் இருக்கிறது. `எனக்கென்று முயற்சி என்ன இருக்கிறது; எல்லாம் உன் செயல்’ என்று ஜீவன் சரணாகதி செய்கிற போது ஸ்வாமியே இவனை ஒரே தூக்காகத் தூக்கி விடுகிறார் என்பது வாஸ்தவம். ஆனால், இவனாக முயற்சியை விடுகிற சரணாகதியில் அனுக்கிரகம் செய்வது வேறு; இவனுக்கு முயற்சி செய்யவே லாயக்கில்லை என்று நினைத்து அனுக்கிரகம் செய்வது வேறுதான். புருஷ லட்சணம் என்று ஒன்று இருப்பதாக நினைக்கிற வரையில் அதில் ஜீவனை நம்பி விட்டு வைப்பதுதான் பரம கருணை. அதுதான் நிஜமான அனுக்கிரகம்.

நிரந்தர நரகத்திற்கு ஸ்வாமி எவரையும் அனுப்புவதில்லை என்பது ஒரு தனிப்பட்ட பாதிரியாரின் அபிப்பிராயம் தான். அதுவேதான் கிறிஸ்துவம் முதலான `ஒரே பிறவி’ மதங்களின் கோட்பாடு என்று சொல்வதற்கில்லை. ஒரே ஜென்மத்தில் ஒருத்தன் பண்ணுகிற புண்ணியத்திற்காக அல்லது பாவத்திற்காக அவனை ஸ்வாமி ஸ்வர்க்கம் அல்லது நரகத்திற்கு நிரந்தரமாக அனுப்பி விடுகிறார் என்பதுதான் அம் மதங்களின் பொதுக் கருத்து! அதிலும் நாம் பொதுவாகப் பாவமே பண்ணுவதால் நரக தண்டனை பெறுகிறவர்கள் தான் ஜாஸ்தியாக இருப்பார்கள் என்பதால் தீர்ப்பு நாளைக்கே ரொம்பவும் பயங்கரமான பெயர் – Dooms dayஎன்றே வைத்திருக்கிறார்கள். இது பகவானின் கருணைக்குக் குறைவாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.
நம் மதத்தின் புனர் ஜென்மக் கொள்கைக்கு ஆதரவாக ஒன்றை அழுத்தமாகக் காட்டலாம்.
வெள்ளைக்காரி ஒருத்தி என்னிடம் வந்து இந்த (Reincornation) விஷயத்துக்கு நிரூபணம் (Proof) கேட்டாள். நான் அவளிடம் வாதம் ஒன்றும் செய்யவில்லை. அப்போது மடத்து முகாமில் ஒரு பண்டிதர் இருந்தார். அவருக்கு இங்கிலீஷும் வரும். அவரிடம் அவளை அங்கே உள்ள பிரசவ ஆஸ்பத்திரிக்கு அழைத்துக் கொண்டு போய், அங்கே பிறந்திருக்கிற குழந்தைகளைப் பற்றிய விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொண்டுவரும்படி சொன்னேன். அவளும் அப்படியே பிரசவ ஆஸ்பத்திரிக்கு அவரோடு போய்விட்டு வந்து குழந்தைகளைப் பற்றிய குறிப்புகளைச் சொன்னாள். அதன்படி ஒரு குழந்தை கொழு கொழுவென்று இருந்தது. இன்னொன்று அவலட்சணமாக இருந்தது. ஒன்று உசத்தியான `வார்டில்’ செளகரியமாகப் பிறந்தது. இன்னொன்று சொல்ல முடியாத கஷ்டங்களுக்கு நடுவே ஒரு பரம ஏழைப் பெண்ணுக்குப் பிறந்தது.
`ஜென்மாவின் கடைசியில் பகவான் ஒருத்தரை நிரந்தரமாக நரகத்துக்கு அனுப்புவது ஒரு பக்கம் இருக்கட்டும்; அது நமக்கு கண்ணுக்குத் தெரியாத விஷயம்; இப்போது பல ஜென்மங்களில் ஆரம்பத்தைப் பிரசவ ஆஸ்பத்திரியில் பிரத்யட்சமாகப் பார்த்தாயே இதிலே ஏன் இத்தனை ஏற்றத் தாழ்வுகள்? ஏன் ஒன்று தரித்திரியத்திலும், இன்னொன்று சம்பத்திலும் பிறக்க வேண்டும்? ஏன் ஒன்று ஆரோக்கியமாகவும், இன்னொன்று அவலட்சணமாகவும் இருக்க வேண்டும்?
ஜீவனுக்கு ஒரே ஒரு ஜென்மா தான் உண்டு என்ற உங்கள் மதக் கொள்கையை ஒப்புக் கொண்டால் அவை ஜனிக்கிற போதே இத்தனை பாரபட்சங்கள் இருப்பதைப் பார்க்கிற போது ஸ்வாமி கொஞ்சங்கூடக் கருணை இல்லாது, புத்திசாலித்தனம் இல்லாமல் மனம் போனபடி கன்னா பின்னா என்று காரியம் செய்து கொண்டிருக்கிறார் என்று தானே ஆகிறது? அப்படிப்பட்ட ஸ்வாமி கருணை செய்வார் என்று நம்பி எப்படிப் பக்தி செலுத்துவது? பூர்வ ஜென்மப் பாப-புண்ணியங்களை ஒட்டிப் புனர்ஜென்மா அமைகிறது என்ற கொள்கையைத் தவிர, நீ பார்த்த ஏற்றத் தாழ்வுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்?’ என்று கேட்டேன்.
அவள் ரொம்பச் சந்தோஷத்தோடு நான் சொன்னதை ஏற்றுக் கொண்டு போனாள்.
ஆனால், நவீன காலத்தவர்களுக்கு இந்த விளக்கங்கள் (Explanations) போதாது. ஸயன்ஸ்படி ப்ரூப் கேட்பார்கள். அப்படிப் பார்த்தாலும் இப்போது `பாரா ஸைகாலஜி’க்காரர்கள் இந்த விஷயத்தில் நிறைய ஆராய்ச்சி பண்ணி, ஜன்மாந்தரங்கள் உண்டு என்பதற்கு ஆதரவாக அநேக விஷயங்களைச் சொல்கிறார்கள்.
உலகம் முழுக்க இவர்கள் சுற்றி வந்ததில் எத்தனையோ இடங்களில் பூர்வ ஜென்மத்தில் இப்போதைய இடத்துக்குத் துளிகூடச் சம்பந்தமேயில்லாமல் வேறு எங்கேயோ இருக்கப் பட்ட தூர தேசங்களில் தாங்கள் பார்த்தவற்றை நினைவாகச் சொல்கிற பல பேர் இருக்கிறார்கள். அந்த விவரங்களை எல்லாம் மறக்காமல் சொல்கிறார்கள்.
இவர்கள் சொல்வது உண்மைதானா என்று பரிசோதித்துப் பார்ப்பதற்காக `பாராஸைகாலஜி’க்காரர்கள் அந்தந்த ஊர்களுக்குப் போயிருக்கிறார்கள். போனால் அங்கே ஆச்சரியப்படுகிற மாதிரி இவர்கள் சொன்ன அடையாளங்களை, இவர்கள் பூர்வத்தில் சம்பந்தப்பட்டிருந்த மனுஷ்யர்களைப் பார்க்கிறார்கள். இது மாதிரி ஒன்று, இரண்டு அல்ல – ஏகப்பட்ட கேஸ்கள் இருக்கின்றன.
நமக்கெல்லாம் முற் பிறவி சமாசாரங்கள் அடியோடு மறந்து போய் விட்டன. ஆனால், வெகு சிலருக்கு நினைவு இருக்கிறது. அநேகமாக இப்படிப்பட்டவர்கள் பூர்வ ஜென்மத்தில் இயற்கையாகச் செத்துப் போகாமல்(Natural Death) அதாவது நோய் நொடி வந்து செத்துப் போகாமல், கொலை செய்யப்பட்டவனாகவோ, அல்லது திடீரென்று ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு அப்போதே மரணமடைந்தவர்களாகவோ இருக்கிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்….’

மகத்துவம் நிறைந்த ஏகாதசி விரதம்

ந காயத்ர்யா: பர மந்த்ர:
ந மாது பர தைவதம்
ந காச்யா: பரமம் தீர்த்தம்
ந ஏகாதச்யா: ஸமம் வ்ரதம்.
காயத்ரிக்கு மேலான மந்திரமில்லை,
தாயினும் சிறந்த தெய்வமில்லை
காசிக்கு சமமான தீர்த்தமில்லை
ஏகாதசிக்கும் மேலான விரதமில்லை.
பகவான் மகாவிஷ்ணு உறங்கிக் கொண்டிருந்த போது, அவரது திவ்ய சரீரத்திலிருந்து ஒரு சக்தி, ஸ்திரி ரூபத்தில் வெளியே சென்று உலகத்தையே துன்புறுத்திக் கொண்டிருந்த ஒரு அசுரனை கொன்றதாம்.

சக்தி வடிவான அந்த பெண்ணிற்கு `ஏகாதசி’ என பகவான் பெயரிட்டு ஏகாதசி விரதத்தை ஏற்படுத்தியதாக `பத்ம புராணம்’ கூறுகிறது.
பாற்கடலை கடைந்து அமிர்தம் பெற்ற நாளை `ஏகாதசி’ என்றும் கூறுவதுண்டு. இந்துக்கள் அனைவருக்கும் மிக விசேஷமானது ஏகாதசி விரதமாகும்.
ஏகாதசியன்று உபவாசம் இருப்பது வழக்கம்.
உபவாசம் என்பதற்கு `உண்ணாமை’ என்கிற பொருள் அல்ல.
உப – என்றால் `கூட’
வாசம் – என்றால் வசிப்பது.
யார் கூட வசிப்பது?
பகவான் கூடத்தான்!
அன்று பட்டினி கிடப்பதின் நோக்கம் – வைராக்கியத்தை வளர்த்துக் கொள்ளத் தான்.
வைராக்கியம் வந்தால் தான் ஈஸ்வரனிடம் மனம் லயிக்கும். தியானம் திடப்படும்.
உண்ணாவிரதம் ஆரோக்கியத்திற்கும் நல்லது, மனதுக்கும் நல்லது.
`லங்கணம் (பட்டினி கிடப்பது) பரம அவுஷதம்’ என்று வைத்திய சாஸ்திரமே அறிவுறுத்துகிறது.
பலகாரம் பண்ணுவது என்றால் பல விதமான உணவு வகைகளை ருசிப்பது என்று பொருள் அல்ல. பலம் என்றால் வடமொழியில் `பழம்’ என்று அர்த்தம்.
ஆகவே ஏகாதசியன்று பகல் முழுவதும் பட்டினி கிடந்து இரவில் பால், பழம் மட்டும் சாப்பிடுவது தான் உண்மையான விரதமாகும்.
எட்டு வயதிலிருந்து எழுபது வயது வரை எல்லோரும் இரு பட்சங்களிலும் ஏகாதசி விரதம் இருக்கவேண்டும்.
எந்த தீட்டு காலமாக இருந்தாலும் ஏகாதசி விரதம் மட்டும் கடைபிடிக்கலாம்.
வைகுண்ட ஏகாதசிக்கு, மோட்ச ஏகாதசி என்று பெயர்.
கர்ப்ப ஸ்திரிகளுக்கு விரதங்கள் விதிக்கப்படவில்லை.