Daily Archives: ஓகஸ்ட் 11th, 2012

பெண்ணுக்கு வரதட்சணை… மூன்று நாள் மது விருந்து… சண்டை சச்சரவு…இதுதான் நரிக்குறவர் திருமணம்!

இதுதான் நரிக்குறவர் திருமணம்! பழமையான வாழ்க்கை முறையையும் மரபுகளையும் இன்றுவரை கடைபிடித்து வரும் சமூகங்களில் நரிக்குறவர் சமூகம் முதன்மையானது. கடும் கட்டுப்பாடுகள், ஒழுக்கமான வாழ்க்கை முறை கொண்ட இவர்களின் திருமண முறை மிகவும் சுவாரஸ்யமானது. தண்ணீராக ஓடும் மது, வேடிக்கையான விளையாட்டுகள், சண்டைகள், சச்சரவுகள், பஞ்சாயத்துகள் என ஏகப்பட்ட களேபரங்களோடுதான் நரிக்குறவர்கள் மண வாழ்வைத் தொடங்குகிறார்கள்.
நரிக்குறவர்களின் பூர்வீகம் வட இந்தியா. சிவாஜியின் படைப்பிரிவில் முன்னணி வீரர்களாக இருந்தவர்கள். முகமதியர் படையெடுப்பில் சிவாஜிக்கு பின்னடைவு ஏற்பட்ட பிறகு, படைவீரர்களாக இருந்த நரிக்குறவர்கள் அடிமைகளாக்கப்பட்டு கடும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். அதிலிருந்து தப்பிப்பதற்காக காடுகளில் தஞ்சம் புகுந்தனர். அணிந்திருந்த உடைகள் அடிமைகளாக அடையாளம் காட்டவே, அவற்றை களைந்துவிட்டு இலை தழைகளை உடுத்திக் கொண்டனர். பிரிட்டிஷார் இந்தியாவை ஆட்கொண்ட நேரத்தில், காடுகளுக்கு வேட்டையாடச் சென்ற அதிகாரிகளுக்கு உதவி செய்யப்போக, இவர்களின் வேட்டையாடும் திறனைக் கண்டு வியந்த பிரிட்டிஷ் துரைமார்கள் துப்பாக்கி வழங்கி சமதளத்தில் வேட்டையாடிப் பிழைக்க வழியும் செய்து தந்தார்கள். தமிழகத்தில் வசிப்போருக்கு, நரி விருப்பத்துக்குரிய உணவாக இருப்பதால் நரிக்குறவர் என்று அடையாளமிடப்பட்டது. இவர்களது மொழியான ‘வாக்ரி போலி’க்கு எழுத்து வடிவம் இல்லை.
நரிக்குறவ மக்கள் பெண் குழந்தை ப்றந்தால் கொண்டாடுகிறார்கள். குலத்தைக் காக்க வந்த குலக்கொழுந்தாகப் போற்றுகிறார்கள். “ எங்க சமூகத்துல கல்யாணம் பண்ணணும்னா பெண்ணுக்கு மாப்பிள்ளைதான் வரதட்சணை தரணும். பொண்ணு வீட்டுக்கார உறவுமுறை எல்லாத்துக்கும் உடை வாங்கித்தரணும். கல்யாணச் செலவையும் ஏத்துக்கணும். மாப்பிள்ளைக்கு சாமிச்சொத்து இருக்கணும். சாமிச்சொத்துன்னா, மூதாதைகள் கொடுத்துட்டுப் போன சாமிப்பொருட்கள். நிறைய சாமிச்சொத்து வச்சிருக்கவனுக்கு மரியாதை ஜாஸ்தி. வெள்ளிச் சிலைகள், வழிபாட்டுச் சாமான்கள் வச்சிருந்தா பெரிய சாமிச்சொத்து. அதை பத்துரமா வீட்டுக்குள்ள வச்சிருப்பாங்க.
எங்கள்ல எருமை வெட்டுறவங்க, ஆடு வெட்டுறவங்கன்னு ரெண்டு பிரிவு இருக்கு. எருமை வெட்டுறவங்க ஆடு வெட்டுறவங்க வீட்டுல மட்டும்தான் பொண்ணெடுக்கணும். மாறி எடுத்தா அண்ணன் தங்கச்சி முறையாயிரும். பொண்ணுங்களுக்கு 13-14 வயசுலயே கல்யாணமாயிரும். ஆணுக்கு அதிகபட்சம் 18 வயசு. பெரும்பாலும் பெரியவங்க பாத்துத்தான் கல்யாணம் பண்ணுவாங்க. இப்போ, காதலிச்சு கல்யாணம் பண்றதும் நடக்குது. சரியான உறவுக்குள்ள காதலிச்சு கல்யாணம் பண்ணியிருந்தா ஊரு கூடி பரிசப்பணம்  வாங்கிக்கொடுத்து கூட்டத்துலச் சேத்துக்குவாங்க. மாறி ஒரே பிரிவுக்குள்ள கல்யாணம் கட்டியிருந்தா, விலக்கு செஞ்சிருவோம்’’ – என்கிறார் தஞ்சை நரிக்குறவர் சங்கத் தலைவர் சுந்தர்.
குழந்தைகள் பிறக்கும்போதே திருமணத்தை நிச்சயித்துவிடும் வழக்கம் நரிக்குறவர்களிடையே இருந்தது. பெண்ணுக்கு மூன்று வயதான உடனே, திருமணத்தை முடித்து மாப்பிள்ளை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுவார்கள். உறவு விட்டுப்போகக் கூடாது என்பதற்காக நடக்கும் இதுபோன்ற திருமணங்கள் இப்போது குறைந்து விட்டது.  “பொண்ணு பாக்கப் போகும்போது தாம்பூலம் இருக்கோ இல்லையோ, பிராந்தி இருக்கணும். பேச்சு வார்த்தை தொடங்குறதுக்கு முன்னாடி எல்லாரும் நல்லா சாப்பிட்டுதான் ஆரம்பிப்பாங்க. பொண்ணோட அப்பனுக்கு சாமிச்சொத்து இருக்கணும். அம்மா நல்ல குணமுள்ளவளா இருக்கணும். பொண்ணுக்கு அழகும், மணி கோர்க்குற திறமையும், அதை வித்துக் காசாக்குற அறிவும் இருக்கணும். குறிப்பா கெட்ட பெயர் இருக்கக்கூடாது.
அதேமாதிரி மாப்பிள்ளைக்கும் தகுதிகள் இருக்கு. சாமிச்சொத்து வச்சிருக்கணும். நல்லா வேட்டையாடணும். அம்மா, அப்பா நல்ல குணமுள்ள ஆட்களா இருக்கணும். குறிப்பா குடுமி வச்சிருக்கணும். எங்க சமூகத்துல பெண்கள் பாவாடையால அடிச்சாலோ, ஆண்கள் கோவணத்தால அடிச்சாலோ தீராத அவமானம். மாப்பிள்ளை இந்த அவமானத்துக்கு ஆளாகியிருக்கக்கூடாது. பொண்ணும் மாப்பிள்ளையும் பிடிச்சுப் போயிட்டா அடுத்து பரிசம்தான்…’’ என்று சிரிக்கிறார் சுந்தர். ‘‘எங்க அம்மா காலத்துல மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பொண்ணு வீட்டுக்கு 250 ரூபா பரிசம் கொடுப்பாங்க. இப்போவெல்லாம் நிக்க வச்சுப் பேரம் பேசுறாங்க. 25 ஆயிரம், 30 ஆயிரம் இருந்தாத்தான் பரிசம் போட முடியும். அந்தப் பணத்தை வாங்கி, பொண்ணுக்கு சித்தப்பன், பெரியப்பன், மாமா, அத்தைக்கெல்லாம் பிரிச்சுக் கொடுத்துருவாங்க. வளத்தத்துக்கு கூலி.
கல்யாணத்துக்கு முதல் நாள் பரிசப்பணம் கொடுத்தாகணும். கல்யாணம் மாப்பிள்ளை வீட்டுலதான் நடக்கும். முன்னாடி 10 நாள், 15 நாள் நடக்கும். இப்போ 3 நாளா சுருங்கிருச்சு. பொண்ணு வீட்டுக்காரங்க உறவுமுறைகளோட மாப்பிள்ளை வீட்டுக்கு வந்திருவாங்க. எல்லாருக்கும் பிராந்தி வாங்கிக் கொடுக்கணும். சின்னம், பெரிசுன்னு எல்லாம் குடிக்கும். முதல்நாள் ராத்திரி கையில காப்புக் கட்டுவாங்க. மாப்பிள்ளை, பொண்ணு கழுத்துல கருகமணி கட்டுவாரு. கறி, மீன், கோழி வாங்கி அன்னைக்கு எல்லாருக்கும் விருந்து வைக்கணும். சண்டை, சச்சரவுன்னு ஜாலியா பொழுது ஓடும். மறுநாள் மாப்பிள்ளையும் பொண்ணும் மூணுவேளை குளிப்பாங்க. அன்னைக்கும் விருந்து. மூணாம் நாளு பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் ஏகப்பட்ட விளையாட்டுகள் நடக்கும். ‘காந்தே சூடனு’ன்னு ஒரு விளையாட்டு. பொண்ணு கையில கட்டுன காப்பை மாப்பிள்ளையும், மாப்பிள்ளை கையில கட்டுன காப்பை பொண்ணும் அவுக்கணும். ஒருத்தருக்கொருத்தர் அவுக்க விடாம வம்பு பண்ணுவாங்க.
யாரு முதல்ல அவுக்குறாங்களோ அவங்க ஜெயிச்சதா அருத்தம். அடுத்து எல்லார்கிட்டயும், மோதிரம், காசுகளை வாங்கி சொம்புல போட்டு யாரு எவ்வளவு எடுக்கிறாங்கன்னு போட்டி. இதுக்கு ‘மீனு புடிக்கிறது’ன்னு பேரு. அடுத்து சாப்பாடு. மாப்பிள்ளை, பொண்ணுக்கு சாப்பாடு ஊட்டணும். பொண்ணு, மாப்பிள்ளைக்கு ஊட்டணும். ரெண்டு பேருமே வாயைத் திறக்க மாட்டாங்க. ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சியில அப்பிக்குவாங்க. மாப்பிள்ளைக்கு மாமியார் ஆரத்தி எடுக்கிறப்போ மாப்பிள்ளை மேல பிடிச்சுத் தள்ளிருவாங்க. ஒரே கூத்தும் கும்மாளமுமா இருக்கும். கல்யாணம் முடிஞ்சதும் மூணு நாளைக்கு மாப்பிள்ளையோட வேட்டியை பொண்ணு தலையில முக்காடா சுத்திக்கணும். அந்த நேரத்துல பேயி, பிசாசு, காத்துக் கருப்பெல்லாம் பொண்ணை அண்டும். அதைவிரட்டத்தான் இந்த ஏற்பாடு. திருமணத்துக்குப் பிறகு ஒருவருட காலத்துக்கு ஆண் வீட்டில் பாதிநாளும், பெண் வீட்டில் பாதி நாளும் மணமக்கள் இருக்கணும். அதன்பிறகு தனிக்குடித்தனம் போகலாம். அல்லது மாப்பிள்ளை வீட்டுலயே இருக்கலாம்’’ என்கிறார் சுந்தர்.
திருமணம் முடித்த பெண்கள் மெட்டியணியக் கூடாது. செருப்பு அணியக் கூடாது. பூ வைத்துக் கொள்ளக்கூடாது. திருமணத்துக்குப் பிறகு, ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒத்துப்போகாத நிலையில் வெகு எளிதாக அதிலிருந்து வெளியே வரவும் வாய்ப்பிருக்கிறது. பஞ்சாயத்து கூடி இருவருக்கும் உள்ள கருத்து வேறுபாடுகளை நீக்கி ஒன்று சேர்க்க முயற்சிக்கும். முடியாத பட்சத்தில் எளிய தீர்வு. ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து வைத்து ஆளுக்கொரு வைக்கோலை எடுத்து மூன்றாக முறித்து அந்த தண்ணீரில் போடவேண்டும். அப்போதும் மது விருந்து வைக்க வேண்டும். பிறகு இருவருமே புது வாழ்க்கையைத் தொடங்கலாம்! வெறும் காட்சிப்பொருளாகக் கடந்து செல்லும் நரிக்குறவர்களின் வாழ்க்கையில் இப்படி ஏகப்
பட்ட கட்டுப்பாடுகள்… நெறிகள்… அவர்களின் வாழ்க்கையில் ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் மட்டுமல்ல… பாடங்களும் இருக்கின்றன!

நன்றி-தினகரன்

புகைப்பழக்க போதையை தடுக்க புதிய ஜீன் தெரபி!

OK

 

இந்த புகைப்பழக்கம் இருக்கிறதே அதுவும் ஒரு வகையில் கழுதை மாதிரிதான்! புகைபிடித்து போதை ஏறும்போது `அட நல்லா யிருக்கே’ என்று தொடர்ந்தால் புற்றுநோயில் கொண்டு சேர்த்துவிடும். `ஐயய்யோ, புகைபிடித்தால் புற்றுநோய் வருமா?’ என்று புகைபழக்கத்தை விட்டாலும் சில பின் விளைவுகள் வந்து சேரும். ஆக மொத்தத்தில், முன் னாடியும் போக முடியாது பின்னாடியும் வர முடியாது.
இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண முயன்ற ஆய்வாளர்கள் இதுவரை பல்வேறு சிகிச்சை முறைகளை உருவாக்கினார்கள். ஆனால் இந்த முறைகள் மூலமாக உடலுக்குள் செல்லும் நிக்கோடின் ஏற்படுத்தும் பாதிப்புகளும் அதிகம் என்பதால் மிக சமீபத்தில் நிக்கோடின் வாக்சின் (தடுப்பூசி) கண்டுபிடிக்கப்பட்டது.
துரதிஷ்டவசமாக, நிக்கோடின் தடுப்பூசியும் பெரிதாக பலனளிக்கவில்லை. ஆக, நிக்கோடின் விஷயத்தில் இந்த இரண்டுமே சாத்தியப்படவில்லை. சரி, நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தினால் பலன் இருக்கிறதா பார்ப்போம் என்றும் பரிசோதித்தார்கள். இப்படி செலுத்தப் படும் ஆன்டிபாடிகள் நீண்ட நேரம் திடமாக இல்லாமல் போகவே, இந்த சிகிச்சை முறை மிகவும் காஸ்ட்லியாக மாறி பலனளிக்காமல் போனது.
இப்படியெல்லாம் தட்டுத்தடுமாறிய புகைப்பழக்க பாதிப்புகளுக்கான மருத்துவ முயற்சிகளை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்ல வந்துவிட்டது ஜீன் தெரபி.
நிக்கோடின் ஆன்டிபாடிகள் உடலுக்குள் நீண்ட நேரம் இருந்து தொடர்ச்சியாக நிக்கோடினை அழித்துக்கொண்டிருக்க வேண்டுமானால், உடலுக்குள் ஆன்டிபாடி உற்பத்தியும் தொடர்ச்சியாக நிகழ வேண்டும். இந்த பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, உடலுக்குள் நிக்கோடின் ஆன்டிபாடியை உற்பத்தி செய்யும் ஒரு மரபணுவை பொருத்துவது சிறந்த வழி என்று முடிவு செய்தார் நியூயார்க்கில் உள்ள வெய்ல் கார்னெல் மருத்துவ கல்லூரியின் ஆய்வாளர் ரொனால்டு கிரிஸ்டல்.
இதற்காக நிக்கோடினுக்கு எதிரான மிகவும் வலிமையான ஒரு ஆன்டிபாடியையும், அதனை உற்பத்தி செய்யும் மரபணுவையும் ஒரு எலியில் இருந்து கண்டெடுத்தனர். பின்னர் அந்த மரபணுவை ஜீன் தெரபிக்கு பயன்படும் கேரியர் எனும் அடினோ அசோசியேட்டட் வைரஸுக்குள் பொருத்தினர். அதன் பிறகு அந்த வைரஸ், நிக்கோடின் போதைக்கு அடிமையான ஒரு எலியின் உடலுக்குள் ஊசி மூலம் செலுத்தப்பட்டது.
எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்ட வைரஸ் அதன் கல்லீரலுக்குள் பொருந்திய பின்னர் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடி கல்லீரலில் உற்பத்தி ஆனது. பின்னர் இந்த ஆன்டிபாடிகள் ரத்த ஓட்டத்துக்குள் கலந்தன. இந்நிலையில் இரண்டு சிகரெட்டுக்குள் இருக்கும் அளவு நிக்கோடின், வைரஸ் புகுத்தப்பட்ட எலியின் உடலுக்குள் செலுத்தப்பட்டது. எலியின் உடலுக்குள் உற்பத்தியான நிக் கோடின் ஆன்டிபாடிகள் சுமார் 83 சதவீதம் நிக்கோடினை அழித்தது தெரியவந்தது. முக்கியமாக, இந்த நிக்கோடின் மூளைக்குச் செல்வதற்கு முன்பு அழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, நிக்கோடின் போதைக்கு அடிமையான எலிகள் மந்தமாக இருக்கும். ஆனால் ஜீன் தெரபி செய்யப்பட்ட பின் நிக்கோடின் கொடுக்கப்பட்ட எலிகள் மிகவும் உற்சாகமாக இருந்தன. மேலும், இந்த எலிகளின் இதய துடிப்பும் மிகவும் சீராக இருந்தது. ஜீன் தெரபிக்கு பிந்தைய சுமார் 18 வாரங்கள் கழித்த பிறகும், எலிகளின் கல்லீரல்கள் நிக்கோடினுக்கு எதிரான ஆன்டிபாடிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆக, நிகோடின் போதைக்கு எதிரான ஜீன் தெரபி செய்துகொண்டால், நிக்கோடினால் ஏற்படும் பாதிப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு நீண்ட காலத்துக்கு உடலுக்குள் நீடிக்கும் என்பது இந்த ஆய்வு மூலம் நிரூபணமாகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
அதெல்லாம் சரி, இந்த ஜீன் தெரபி மூலம் மனித குலத்துக்கு உடனடி பலன் எதுவும் இருக்கிறதா?
தற்போது எலிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வு மனிதர்களைக் கொண்டு நடத்தப்படும் முன்னர், குரங்குகள் மீது மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம். மேலும், ஜீன் தெரபியில் பயன்படுத்தப்படும் அடினோ அசோசியேட்டட் வைரஸ்கள் எய்ட்ஸ் மற்றும் இறுதி நிலை புற்று நோய் ஆகிய நோய்களுக்கான ஜீன் தெரபியில் மனிதர்கள் மீது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் ஆபத்துகளுடன் ஒப்பிடும்போது அதிகமான பலன்கள் கிடைத்துள்ளன என்றாலும் நிக்கோடின் போதைக் கான இந்த ஜீன் தெரபியை மனிதர் கள் மீது பரிசோதிக்க 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகுமாம்.
அதனால் ஆபத்தான ஜீன் தெரபியை கொண்டு நிக்கோடின் போதை அல்லது புகைப்பழக்கத்துக்கான சிகிச்சையை மேற்கொள்வதற்கு முன்பு, புகைப்பழக்கத்தை துறக்க முயற்சி செய்வதே சாலச் சிறந்தது என்கிறார் பேய்லர் மருத்துவக் கல்லூரியின் மூத்த ஆய்வாளரான தாமஸ் கோஸ்டன்.

முனைவர் பத்மஹரி