Daily Archives: ஓகஸ்ட் 16th, 2012

மாரடைப்பைத் தடுக்கும் `கிவி’!

 

`சீனத்து நெல்லிக்கனி’ என்றால் யோசிப்பீர்கள். `கிவி’ என்றால் உங்களுக்குத் தெரியக்கூடும். இந்த வெளிநாட்டுப் பழம், தற்போது நம்மூர் கடைகளில் கிடைக்கிறது.
பல மருத்துவக் குணங்கள் அடங்கிய `கிவி’யின் முக்கியமான தன்மை, மாரடைப்புக்குத் தடை போடுவது.

திடீரென்று மனிதர்களின் உயிரைப் பறிக்கும் அபாயங்களில் முக்கியமானது, மாரடைப்பு. மாரடைப்புக்கு முன் பல்வேறு நிகழ்வுகள் இதயத் தமனிகளில் நிகழ்கின்றன. அவற்றில் முக்கியமானது, ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், பிளேட்லெட்கள் போன்றவை ஒன்றாகக் குழுமி, கட்டி அடைப்பாக மாறி இதயத் தமனிகளில் ரத்தம் செல்லாமல் முழுமையாக அடைத்து, மாரடைப்புக்கு வழிவகுப்பது.
அவ்வாறு இதயத் தமனிகளில் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் `கிவி’ பழத்துக்கு இயற்கையாக உள்ளது. மேலும் இது, வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும்.
இதில் `போலேட்’ என்ற சத்தும், `ஒமேகா 3′ என்ற கொழுப்பு அமிலமும் மற்ற பழங்களை விட மிக அதிகமான அளவில் உள்ளது.
இவை, குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துகளில் மிகவும் சிறந்தவை என்று உணவியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்குக் கிவி பழத்தைக் கொடுப்பது நல்ல பலன் அளிப்பதாக அமையும்.
நீரிழிவு நோயாளிகளுக்கும் `கிவி’ பழம் நல்லது என்கிறார்கள். காரணம் இப்பழத்தின் சர்க்கரைக் குறியீட்டின் அளவானது மிகவும் குறைவு. எனவே இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவை மற்ற பழங்களைப் போல விரைவாக அதிகரிக்காமல், கொஞ்சமாகவும், நிலையாகவும் நிலைநிறுத்துகிறது. எனவே சர்க்கரை நோயாளிகள் சாப்பிடுவதற்கு ஏற்ற பழம் இது என்று தெரிவிக்கப்படுகிறது.
உடல் எடையைக் குறைக்க நினைப்பவர் களுக்கும் `கிவி’ கைகொடுக்கும். காரணம், மற்ற பழங்களுடன் ஒப்பிடுகையில் இதில் குறைவான கலோரிகள் உள்ளன. ஆப்பிள், பேரிக்காயில் 32.8 கலோரிகளும், வாழைப்பழத்தில் 22.4 கலோரிகளும், ஆரஞ்சுப் பழத்தில் 20.9 கலோரிகளும் உள்ளன. ஆனால் ஒரு `கிவி’ பழத்தில் 3.8 கலோரிகளே உள்ளன.

பெரியது, பெரியது…!

 

மீன்களில் பெரியது எது என்று கேட்டால் திமிங்கலம் என்று தான் அத்தனைபேரும் பதில் சொல்வார்கள். ஆனால் எலும்புள்ள மீன் வகைகளில் பெரியது எது என்று கேட்டால் மோலா மோலா மீன்கள் அந்த இடத்தைப் பிடிக்கின்றன. மிதமான வெப்ப மண்டலம் கொண்ட கடல்களில் இதைக் காண முடியும்.

BigFish இந்த மீன் வகைகள் 11 அடி உயரம் வரை வளரக் கூடியது. இதன் எலும்புகள் மனித எலும்பு மாதிரி உறுதியானவை.

இந்த மீன்களின் விருப்ப உணவு ஜெல்லி பிஷ்கள் தான். ஆனால் மோலா மோலா மீன்களோ கடல் சிங்கத்துக்கு விருப்ப உணவாகி விடுகிறது. இரைக்காக இவற்றை கடல் சிங்கங்கள் வேட்டையாடினால் கூட பரவாயில்லை, பல நேரங்களில் தானொரு பெரிய வேட்டைக்காரன் என்ற நினைப்பில் இந்த மீன்களைப் பார்த்ததும் பெருமைக்காகவாவது வேட்டையைத் தொடங்கி விடுகிறது. இதனால் மோலா மோலா மீன்கள் தேவையே இல்லாமல் கணிசமாக அழிக்கப்பட்டு வரும் கொடுமை தொடர்ந்து வருகிறது.

இந்த மீன்களின் துடுப்பு சுறா மீனின் துடுப்பு போல் இருப்பதால் பல நேரங்களில் கடலுக்குள் இவை வலம் வரும்போது துடுப்பு மட்டும் தண்ணீருக்கு வெளியே தெரியும். அப்போது மீன் பிடிப்பவர்கள், கடல்ஆராய்ச்சியாளர்கள் சுறா மீனோ என்று திகிலடைவதும் உண்டு.