Daily Archives: ஓகஸ்ட் 18th, 2012

யார் செய்யும் சதி?

உண்மை வீட்டைவிட்டுப் புறப்படும் முன்பே, ஊரைச் சுற்றிவிட்டு வந்துவிடுமாம் பொய்!’. இது எத்தகைய நிஜம் என்பதைக் கடந்த இரு நாள்களாக, பீதியினால் சொந்த ஊருக்குத் திரும்பிக்கொண்டிருக்கும் வடகிழக்கு மாநிலத்தவர்களிடம் காண முடிகிறது.

"அச்சப்படாதீர்கள். உங்களுக்குப் பாதுகாப்பு அளிப்போம்’ என்று மாநில அரசும், மத்திய அரசும் உறுதி கூறினாலும்கூட இந்த வெளியேற்றம் நின்றபாடில்லை. நாடாளுமன்றத்தில் அனைவரும் இந்த மக்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து ஒன்றுபட்ட போதிலும் இவர்கள் மனதில் இன்னமும் பீதி நீங்கியபாடில்லை.

"உங்களில் யாரையாவது மிரட்டினார்களா? தாக்கினார்களா?’ என்று பீதியில் உறைந்து வீடு திரும்பும் மக்களிடம் கர்நாடக மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கேட்டபோதும் சரி, ஆந்திர மாநிலம், ஹைதராபாத்தில் வடகிழக்கு மாநிலத்தவர்களிடம் பேசிய காவல் துணை ஆணையர் யோகானந்த் கேட்டபோதும் சரி, தாங்கள் நேரடியாக இத்தகைய மிரட்டலுக்கு ஆளானதாக ஒருவரும் சொல்லவில்லை. "ஊரில் உள்ள பெற்றோர் பயந்துபோய் வரச் சொல்கிறார்கள், போகின்றோம்’ என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள். செல்போன் குறுந்தகவல் உதவியால் திட்டமிட்டு யாரோ பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள்!

மனிதனின் பின்தொடரும் நிழல் போன்றது செல்போன் என்கிறார்கள். ஒருவர் இருக்கும் இடம், பேசும்பேச்சு அனைத்தையும் செல்போன் நிறுவனங்களால் கண்காணிக்க முடியும் என்கிறார்கள். நம் செல்போன் நம்மை காட்டிக்கொடுக்கும் "எட்டப்பன்’ என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தகைய குறுந்தகவல்கள் எங்கிருந்து வருகின்றன என்பதை இன்னமும் அரசால் கண்டறிய முடியவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

தற்போது நாடு முழுவதும், குறுந்தகவல் விடியோதகவல் அனுப்புவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 5 பேருக்கு மட்டுமே குறுந்தகவல் அனுப்ப முடியும். 20கிலோபைட் விடியோதகவல் மட்டுமே அனுப்ப இயலும். ஆனால், இதனால் பீதி அடங்கிவிடாது என்றாலும், இன்னும் மோசமான காட்சிகள், தகவல்களை அனுப்புவதை இந்த நிபந்தனைகள் கட்டுப்படுத்தும். எரியும் அடுப்பிலிருந்து ஒரு கட்டையை உருவி எடுத்திருக்கிறார்கள். அவ்வளவே!

ஆனால், இதற்குக் காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதும், இதைச் செய்யக் காரணம் என்ன என்பதை அறிந்துகொள்வதும் சாத்தியமாகும்போதுதான் இந்த பீதி இல்லாமல் ஆகும்.

அசாம் மற்றும் மியான்மரில் மத வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவித்து ரஸா அகாதமி ஆகஸ்ட் 11-ம் தேதி மும்பையில் நடத்திய பேரணியில் விநியோகிக்கப்பட்ட, அசாம் வன்முறை தொடர்பான படங்கள், பேரணியில் கலந்துகொண்டவர்களைக் கொதிப்படையச் செய்தன. வன்முறை ஏற்பட்டது. பொதுமக்களில் இருவர் கொல்லப்பட்டனர்.

அசாம் மாநிலத்தில் ஓரளவு அமைதி திரும்பி, பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பத் தொடங்கிய வேளையில், அசாம் வன்முறைகளுக்குக் கண்டனம் தெரிவிக்கும் பேரணியை மும்பையில் நடத்த அனுமதி கொடுத்தது பெருந்தவறு. அமைதி திரும்பும் வேளையில், சம்பந்தம் இல்லாத நகரத்தில் இப்படியொரு ஊர்வலத்தை மகாராஷ்டிரம் அனுமதித்தது ஏன்? பேரணியில் விநியோகிக்கப்பட்ட அசாம் வன்முறைப் படம் உண்மையானதா, கணினியில் வடிவமைக்கப்பட்டதா என்ற உண்மையைக்கூட வெளிவுலகுக்கு சொல்லாமல் மௌனம் சாதிப்பது ஏன்?

குறுந்தகவல் மூலம் பீதி பரவுகிறது என்பதை அசாம் மாநில தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான பிறகு, அங்குள்ளவர்கள் தங்கள் உறவுகளைத் தொடர்புகொண்டு வீடு வந்து சேரும்படி சொல்வது அதிகரித்துள்ளது. இதனை மாநில, மத்திய அரசுகள் உணர்ந்து, குறுந்தகவலை உடனடியாக அப்போதே கட்டுப்படுத்தியிருக்கலாமே?

இத்தகைய குறுந்தகவல் வடகிழக்கு மக்களை மட்டுமே சென்றடைந்துள்ளது என்றால், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களின் செல்போன் நம்பர்கள் மட்டுமே மிகச் சரியாகக் கிடைக்கிறது என்றால், செல்போன் இணைப்பு வழங்கிய வடகிழக்கு மாநில அலுவலகங்களையும் கண்காணிக்க வேண்டியது அவசியம்.

இது எத்தகைய கீழ்த்தரமான அரசியலாக இருந்தாலும், இதனால் பாதிக்கப்படுவது அரசியல் தலைமைகளோ கட்சிகளோ அல்ல, சாதாரண மக்கள்! படிக்கவும், வேலை செய்து சம்பாதிக்கவும் ஊரைவிட்டு ஊர்வந்திருக்கும் இளைஞர்கூட்டம்தான் இதனால் பாதிக்கப்படுகிறது. இவர்களது பெற்றோரின் மனஉளைச்சல் ஒருபுறம், சொந்தங்கள் இல்லாத மண்ணில் பீதி ஒருபுறம், ரயில்பெட்டிகளில் ஆயிரக்கணக்கில் நெரிசலில் சிக்கி பல மணி நேரப் பயணத் துன்பம் ஒருபுறம், படிப்பு பாதிக்கப்படுவதும், வேலைநாள், சம்பளத்தை இழப்பதும் ஒருபுறம்… ஆற்றொணாது அழுத கண்ணீருடன் அவர்கள் வீடு திரும்புகிறார்கள்.

பெங்களூரில் சுமார் 6,000 பேர் கடந்த இரு நாள்களில் வெளியேறியுள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னையிலும் புணே, ஹைதராபாத் ஆகிய இடங்களிலிருந்தும், வடகிழக்கு மாநிலத்தவர் கூட்டம் கூட்டமாக வெளியேறிக்கொண்டிருக்கின்றனர்.

வெறுமனே அஞ்சாதே என்று சொல்வதால் மட்டும் அச்சம் தீர்ந்துவிடாது. இத்தகைய அச்சம் தரும் தகவல்கள் வெறும் புரளி என்று சொன்னால் மட்டுமே போதாது. இத்தகைய தகவல்களை அனுப்பிய மூலநபர்களைக் கண்டறிந்து அவர்களைத் தண்டிப்பதுதான் மக்களின் அச்சத்தைப் போக்கும்.

சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்த பிறகும், சுதந்திரமாக ஒரு மாநிலத்தை, பகுதியைச் சேர்ந்த மக்கள் இன்னொரு மாநிலத்திலோ, பகுதியிலோ வாழ முடியவில்லை என்றால், சுதந்திரம் முறையாகச் செயல்படவில்லை என்று அர்த்தம். வெளிநாடுகளிலிருந்து இந்தியன் ஒருவன் துரத்தப்படலாம், வெளியேற்றப்படலாம். உள்நாட்டிலுமா? சிந்திக்க வேண்டிய தருணம் இது.

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல்!:1.86 லட்சம் கோடி, ரிலையன்ஸ் நிறுவன சலுகை: 29,033 கோடி

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த மெகா ஊழலை மிஞ்சும் வகையில், தற்போது மேலும் பல ஊழல்கள் நடந்திருப்பது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தனியார் நிறுவனங்களுக்கு நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்ததில், 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கும், டில்லி விமான நிலைய பணிகளில், தனியார் நிறுவனத்துக்கு சலுகை அளித்ததில், 3,415 கோடி ரூபாய் அளவுக்கும், ஊழல் நடந்து உள்ளது தெரியவந்துள்ளது. தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி’ ஸ்பெக்ட்ரம் உரிமங்கள் வழங்கப்பட்டதில், 1.76 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டது, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகத்தின் அறிக்கை மூலம், வெளிச்சத்துக்கு வந்தது. ஸ்பெக்ட்ரம் ஊழலை மிஞ்சும் அளவுக்கு, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை, மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டுள்ளதாவது: சுரங்க ஒதுக்கீடு: கடந்த 2005லிருந்து, 2009 வரையிலான காலத்தில், 150 நிலக்கரி சுரங்கங்களை, தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததில், சரியான ஏல நடைமுறை பின்பற்றப்படவில்லை. ஏல முறையை பின்பற்றாமல், சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதால், எஸ்ஸார் பவர், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், டாடா பவர், ஜிண்டால் ஸ்டீல் உள்ளிட்ட, 25 நிறுவனங்கள் பயனடைந்துள்ளன. இதன் மூலம், அரசுக்கு, 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முறையான ஏல நடைமுறையின் கீழ், சுரங்கங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தால், அரசுக்கு இந்த இழப்பீடு ஏற்பட்டிருக்காது. கடந்த 2010 – 11ம் ஆண்டு காலத்தில், சராசரி தயாரிப்பு செலவு மற்றும் சராசரி விற்பனை விலை

ஆகியவற்றை அடிப்படையாக வைத்து, கணக்கிட்டதில், 1.86 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக, மதிப்பிட்டுள்ளோம்.
ரிலையன்ஸ்: மத்திய பிரதேசத்தில் உள்ள சாசன் மின் நிலையத்தில், 4,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் பணியை, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த மின் நிலையத்துக்காக, விதிமுறைகளை மீறி, உபரியாக உள்ள நிலக்கரிகளை எடுத்துக் கொள்ள, அந்த நிறுவனத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம், ரிலையன்ஸ் நிறுவனம், 29 ஆயிரத்து 33 கோடி ரூபாய் அளவுக்கு, முறைகேடாக லாபம் அடைந்துள்ளது. இந்த தொகையும், அரசுக்கு ஏற்பட்ட இழப்பீடாகவே கருத வேண்டும்.
விமான நிலையம்
: டில்லி விமான நிலைய நிலத்தை குத்தகைக்கு விட்டதிலும், அரசுக்கு இழப்பீடு ஏற்பட்டுள்ளது. டில்லி விமான நிலையம், தற்போது அரசு – தனியார் பங்களிப்புடன் செயல்பட்டு வருகிறது. டில்லி விமான நிலைய ஆணையம் லிட்.,டும் (டி.ஐ.ஏ. எல்.,), ஜி.எம்.ஆர்., என்ற தனியார் நிறுவனமும் இணைந்து, விமான நிலைய பொறுப்புகளை கவனித்து வருகின்றன. விமான நிலைய திட்டப் பணிகளுக்காக, இந்த நிறுவனங்களுக்கு, 4,800 ஏக்கர் நிலம் குத்தகைக்கு ஒதுக்கப்பட்டது. இதற்காக, ஆண்டு குத்தகையாக, அந்த நிறுவனங்களுக்கு 100 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலத்திலிருந்து, 60 ஆண்டுகளுக்கு, இந்த நிலத்தின் மூலம், டி.ஐ.ஏ.எல்.,லும், ஜி.எம். ஆர்., நிறுவனமும், 1,63,557 கோடி ரூபாய் லாபம் ஈட்ட முடியும். நிலைமை இவ்வாறு இருக்க, ஆண்டுக்கு, வெறும் 100 ரூபாய் மட்டுமே, குத்தகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விமான நிலைய மேம்பாட்டு திட்டப் பணிகளுக்காக நிதி திரட்டுவதற்காக, இந்த இரண்டு நிறுவனங்களும், விமான நிலையத்துக்கு வரும் பயணிகளிடம்,

கட்டணம் வசூலித்துள்ளன. இந்த நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில், மேம்பாட்டுப் பணிகளுக்காக, பயணிகளிடம் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக, எந்த விஷயமும் இடம் பெறாத நிலையில், ஒப்பந்த விதிமுறைகளை மீறி, இந்த கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனங்கள், 3,415 கோடி ரூபாய் லாபம் அடைந்துள்ளன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமருக்கு நெருக்கடி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் காலத்தில், அந்த துறையை, பிரதமர் மன்மோகன் சிங், கவனித்து வந்ததால், அவர் பதவி விலக வேண்டும் என, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. இதனால், பிரதமருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தோழா… தோழா… தோள் கொடு தோழா!

நாம், 40 வயதை கடந்து விட்டாலே, ரத்த ஓட்டம் குறையும். சர்க்கரை நோயாலும், ரத்தநாளம் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கும். இதனால் பல்வேறு வித மூட்டு வலி, தோள் பட்டை வலி பிரச்னைகள் உருவாகும். சிலருக்கு
தோள்பட்டையை மேலே தூக்கினால் வலி ஏற்படும். நம் நாட்டில், ஏழில் ஒருவருக்கு, தோள்பட்டை வலி உள்ளது. ""இந்தியாவில் ஏழு பேரில் ஒருவருக்கு, தோள்பட்டை வலி உள்ளது. தொடர்ந்து வலி இருந்தால் ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்யும், நவீன, "நுண்துளை அறுவை சிகிச்சை’ முறைகள் தற்போது உள்ளன,” என்கிறார், மதுரை அப்பல்லோ மருத்துவமனை மூட்டு நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர், டாக்டர் கே.என்.சுப்பிரமணியன்.
இவர் ஆர்த்ரோஸ்கோப்பி, ஆர்த்ரோபிளாஸ்டி, தோள்பட்டை அறுவை சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்று, மூட்டு எலும்பு சிகிச்சையில் எப்.ஆர்.சி.எஸ்., பெற்றவர். வெளிநாடுகளில் பணிபுரிந்து விட்டு, தற்போது மதுரையில் சிகிச்சை அளிக்கிறார்.
தோளைத் தூக்கினால் வலி இன்று நம் அனைவருக்கும் இருக்கும் அடிப்படை பிரச்னைகளான தோள்பட்டை வலி, மூட்டு வலி, முழங்கால் வலி பிரச்னைகள் தொடர்பாக விளக்குகிறார்…
நாம், 40 வயதை கடந்து விட்டாலே, ரத்த ஓட்டம் குறையும். சர்க்கரை நோயாலும், ரத்தநாளம் சுருங்கி, ரத்த ஓட்டம் பாதிக்கும். இதனால் பல்வேறு வித மூட்டு வலி, தோள் பட்டை வலி பிரச்னைகள் உருவாகும். சிலருக்கு தோள்பட்டையை மேலே தூக்கினால் வலி ஏற்படும். நம் நாட்டில், ஏழில் ஒருவருக்கு, தோள்பட்டை வலி உள்ளது. தோள்பட்டையில் உள்ள நீர் சுரப்பி, புண் ஆகி இருக்கும். இவற்றை எல்லாம், ஆரம்ப கட்டத்தில் மருந்து மூலம் தற்காலிகமாக குணப்படுத்தலாம். தொடர்ந்து வலி இருந்தால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். சிலருக்கு தோள்பட்டை எலும்பு, இயற்கையாகவே வளைந்து இருக்கும். இதை நேராக்க, மருந்து இல்லை. இதற்கும் அறுவை சிகிச்சையே தீர்வு.
திறக்க வேண்டாம் முன்பு போல, தோள்பட்டை பகுதியைத் திறந்து, அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இல்லை. தற்போது அதிநவீன, "நுண்துளை அறுவை சிகிச்சை’ வந்து விட்டது. தோள்பட்டையில் எந்த இடத்தில், சிறு பிரச்னை இருந்தாலும், "கேமரா’ மூலம் தெளிவாக அறிந்து சிகிச்சை செய்யலாம். ஒருநாளில் அறுவை சிகிச்சை முடிந்து, ஒரு வாரத்தில் வழக்கமான பணியை தொடரலாம். வலியும் மிகக்குறைவு. ரத்தக்கசிவு இல்லை. பழைய முறை சிகிச்சைக்கு, எட்டு வாரம் வரை நாம் ஓய்வில் இருக்க வேண்டும். விபத்துகளில் தோள்பட்டை விலகி, சிகிச்சை பெற்று, மீண்டும் விலகாமல் இருக்கவும் இந்த நுண்துளை அறுவை சிகிச்சை முக்கிய பங்கு வகிக்கிறது. சிலருக்கு, தோள்பட்டையை அசைத்தாலே வலி வரும். இரவில் தூங்கும் போது, சுற்றியுள்ள தசைகள், "ரிலாக்சாக’ இருக்கும். அப்போது, சிலருக்கு தோள்பட்டை விலகும். தோள்பட்டைக்கும், கழுத்திற்கும் இடைப்பட்ட எலும்பு விலகினால், "மெட்டல் பட்டன்’ மூலம் இணைக்க வேண்டும்.
தசைநார் விலகல்: நாம் நேராக நடக்கும் போது, திரும்பும் போது, கீழே விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டால், முழங்கால் வலுவில்லாமல் உள்ளது என உணர்ந்தால், மூட்டு திடமாக இல்லை என உணர்ந்தால், தசை நார் விலகி இருக்கிறது என்று அர்த்தம். முழங்கால் மூட்டு இணைப்பு தசைநாரில் பாதிப்பு ஏற்பட்டால், முன்பு, 13 செ.மீ., அளவிற்கு திறந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது. சாதாரண வாழ்வுக்கு நாம் திரும்ப, மூன்று மாதம் ஆகும். நவீன நுண்துளை முறையில், அரை செ.மீ., அளவிற்கு இரண்டு துளை, 2 செ.மீ., அளவிற்கு ஒருதுளையிட்டு அறுவை சிகிச்சை செய்யலாம். நான்கு வாரத்தில் ஓடலாம்.
ஜவ்வும் கிழியும்: முதுமையால் மூட்டு தேய்மானம் ஆகும். இயற்கையாகவே, ஜவ்வில் ரத்த ஓட்டம் கிடையாது. ஜவ்வு கிழிந்து மூட்டு விலகும். செயற்கை மூட்டு வைத்தாலும், 10 ஆண்டு கழித்து மாற்ற வேண்டும். மூட்டு மாற்று சிகிச்சை இல்லாமல், இயற்கையாகவே ஜவ்வை வளர வைக்க வேண்டும் என்பதற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். நோயாளிகள் வலி இல்லாமல், சந்தோஷமாக சிகிச்சை முடிந்து செல்ல வேண்டும். நுண்துளை சிகிச்சை நிபுணர்கள் நமது நாட்டில் குறைவு; போதிய வசதிகள் உள்ள மருத்துவமனைகளும் குறைவு. இதனால், பொதுமக்களிடமும் போதிய விழிப்புணர்வு இல்லை. இவ்வாறு கூறினார்.

சகோதர உறவு மேம்பட செவ்வாய் வழிபாடு

Anme05 பொதுவாக செவ்வாய்க்கிழமையை மங்களகரமான நாள் என்று கூறுவார்கள். ஜோதிட சாஸ்திரங்களும் செவ்வாய்க்கிழமை வழிபாட்டுக்கு உகந்த நாளாகத்தான் சிறப்புடன் குறிப்பிடுகிறது. செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் கோவில்களில் வழிபாடு என்பது அதிகமாக இருக்கும். திருவிழாக்களும் இதே செவ்வாய்க் கிழமைகளில் தான் அம்மன் ஆலயங் களில் நடத்தப்படும்.
ஆனால் செவ்வாய் அன்று சுப விசேஷ நிகழ்ச்சிகளை செய்ய பலரும் தயங்குவார்கள். தமிழகத்தில் செவ்வாய்க்கிழமையில் முகூர்த்தநாள் குறிப்பதில்லை. ஆனால், கேரளா மாநிலத்தில் உள்ள மக்கள் செவ்வாய்க்கிழமை மங்கள நாள் என்று, அன்றைய தினத்தில் திருமண நிகழ்ச்சிகளை நடத்துவது வாடிக்கையான ஒன்று. செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானையும், அன்றைய தின ராகு காலத்தில் துர்க்கை, காளியம்மனை வழிபடுவார்கள்.
நவக்கிரகங்களில் ஒன்றான செவ்வாய், சகோதரகாரகர் என்ற சிறப்பு பெயருடனும் அழைக்கப்படுகிறது. செவ்வாயை வழிபடுவதன் மூலம் சகோதர உறவு பலப்படும். பிரிந்திருக்கும் சகோதரர்கள் ஒன்று சேர, செவ்வாய்க்கு செவ்வரளி மாலை சூட்டி வழிபட வேண்டும்.

தெய்வத்தை அணுகும் முறை

 

உலகத்திலேயே மனிதன் அதிகமாக நேசிக்கக் கூடியது அமைதியும், நிம்மதியுமே.
பணம் வரலாம்; போகலாம். பல தாரங்களை மணந்து கொள்ளலாம்; வீடு வாங்கலாம்; விற்கலாம்; நிலம் வாங்கலாம்; சொத்தைப் பெருக்கலாம்; எல்லாம் இருந்தும் கூட நிம்மதி இல்லை என்றால் அவன் வாழ்ந்து என்ன பயன்?
சேர்க்கின்ற சொத்து நிம்மதிக்காக.
கட்டுகிற மனைவி நிம்மதிக்காகவே.
தேடுகின்ற வீடும், நிலமும் நிம்மதிக்காக.
எப்போது அவன் நிம்மதியை நாடுகிறானோ, அப்போது அவனுக்கு அவஸ்தை வந்து சேருகிறது.
ஆரம்பத்தில் மனிதன் விரும்பியோ விரும்பாமலோ பல சிக்கல்களைத் தானே உண்டாக்கிக் கொள்கிறான்.
தானே கிணறு வெட்டுகிறான்; அதில் தானே விழுகிறான்.
தானே தொழில் தொடங்குகிறான்; தவியாய்த் தவிக்கிறான்.
தானே காதலிக்கிறான்; அதற்காக உருகுகிறான்.
தானே ஒரு பெண்ணை விரும்பிக் கல்யாணம் செய்து கொள்கிறான்; பிறகு இது பெண்ணா?, பேயா? என்று துடியாய்த் துடிக்கிறான்.
எந்தக் கோணத்தில் நின்று பார்த்தாலும் மனித வாழ்க்கை துன்பகரமாகவே காட்சியளிக்கிறது.
ஆகவேதான், மனிதன் ஏதாவது ஒரு புகலிடத்தை நாடுகிறான்.
தனக்கு அடைக்கலம் கொடுக்கக் கூடியவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்று தேடுகிறான்.
மனிதர்களோ அவதூறு பேசுகிறார்கள்; கேலி செய்கிறார்கள்.
ஆகவே, அவன் தெய்வத்தைச் சரணடைகிறான்.
அந்தத் தெய்வம் அவன் குறையைக் கேட் கிறதோ இல்லையோ, காட்சியிலேயே நிம்மதியைத் தருகிறது.
இந்தத் தெய்வ பக்தியில் மிக முக்கியமானது அணுகும் முறை.
எல்லோரையும் போல கோவிலுக்குப் போனோம்; ஒரு தேங்காய் உடைத்தோம்; இரண்டு பழங்களை வாங்கிச் சென்றோம் என்பதில் லாபமில்லை.
கோவிலில் பாடப்படும் `கோரஸ்’ அல்லது கோஷ்டி கானத்தில் பெரும் பயனடைவதில்லை.
ஏழை ஒருவன் வள்ளல் வீட்டுப் படிக்கட்டுகளில் நம்பிக்கையோடு ஏறுவது போல், இறைவனை அணுக வேண்டும்.
இறைவனை ஒரு உன்னதமான இடத்தில் வைத்து, அடிமையைப் போல் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
அவனைத் தோழனாகவே பாவிக்கலாம்.

தனியறையில் உட்கார்ந்து கொண்டு, ஒரு தெய்வப் பிரதிமையின் முன்னால் குறைகளைச் சொல்லி அழுவதில் பயனிருக்கிறது.
எங்கள் கிராமங்களில் ஒரு காரியம் நடக்குமா நடக்காதா என்பதற்குப் பூக்கட்டி வைத்துப் பார்ப்பார்கள். வெற்றிலைப் பாக்கு வைத்துக் கேட்பார்கள். சாமி அனுமதித்தால் மட்டுமே அந்தக் காரியத்தைச் செய்வார்கள்.
எல்லாவற்றிற்குமே தெய்வத்தை நம்பி, அதன் மூலம் அவர்கள் நிம்மதி அடைந்திருக்கிறார்கள்.
`திருவுளம்’ கேட்பது என்பது கிராமங்களில் இருக்கும் ஒருமுறை. `நான் மேற்கொண்ட காரியம் நடக்கும் என்றால் பல்லி சொல்ல வேண்டும்’ என்று வேண்டிக் கொள்வார்கள்.
கோவிலின் ஏதாவது ஒரு பகுதியில் பல்லி சொன்னால், இறைவனின் திருவுளம் இரங்கி விட்டதென மகிழ்வார்கள். அது சொல்லவில்லை என்றால், அந்தக் காரியத்தில் ஈடுபடமாட்டார்கள்.
மனிதனின் மிகவும் குறைந்த பட்சத் தேவை நிம்மதி. அதைத் தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவனுக்குப் பெயர் தான் இந்து.
தெய்வத்தை அணுகுவதில் திறமையுள்ளவர்கள் தங்கள் காரியங்களைக் கண் முன்னாலேயே சாதித்துக் கொண்டிருக்கிறார் கள்.
`முருகா முருகா’ என்று எல்லோரும்தான் கூவுகிறோம்; சிலருக்கு மட்டும் தொட்டதெல்லாம் பலிக் கிறதே, ஏன்?
அவர்கள் தெய்வத்தை அணுகத் தெரிந்து கொண்டு விட்டார்கள் என்பதே, அதன் பொருள்.
கொல்கத்தா காளி கோவிலைப் பற்றி ஒரு கதை சொல்வார்கள்.
ஒரு ஏழை உழைப்பாளி. அந்தக் கோவில் வாசலில் போய்ப் படுத்துக் கொள்வானாம். காலையில் கண் விழிக்கும் போது சந்நிதானத்தில் தான் கண் விழிப்பானாம். காளி தேவியிடம் வேண்டிக் கொண்டுதான் தொழிலுக்குப் புறப்படுவானாம். எப்படியும் அன்றைக்குப் பத்து ரூபாய் சம்பாதித்து விடுவானாம். என்றைக்கு அவன் ஞாபக மறதியாகச் சந்நிதானத்தைப் பார்த்துக் கண் விழிக்காமல் தெருவைப் பார்த்து விழிக்கிறானோ, அன்றைக்கு அவன் வாழ்க்கையில் சிரமம் ஏற்படுமாம்.
இதை எப்படிச் சொல்கிறார்கள் என்றால், `இன்றைக்கு இவனுக்கு லாபமில்லாத நாள் என்று தெரிந்து, ஈஸ்வரியே அவனை வேறு பக்கம் விழிக்க வைக்கிறாள்’ என்கிறார்கள்.
இதுதான் உண்மை என்று நான் நம்புகிறேன். எனக்கும் இதில் ஒரு அனுபவம் உண்டு.
நான்கு ஆண்டுகளுக்கு முன் நான் என் கவிதா ஹோட்டல், தேவர் திருமண மண்டபத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு கேரளத்து நண்பர் என்னைப் பார்க்க வந்தார். வந்தவர் ஒரு சிறிய குருவாயூரப்பன் புகைப்படத்தைக் கொடுத்து விட்டுப் போனார்.
அதை நான் என் சட்டைப் பையிலே வைத்திருந்தேன்.
காலையில் சட்டை மாற்றும்போது எதை வைக்க மறந்தாலும், அந்தப் படத்தை வைக்க மறக்கமாட்டேன்.
அது `பெதடின்’ பழக்கத்தை விட்டு விட்ட நேரம். உடம்பிலே சில எதிரொலிகள் ஏற்பட்டு அடங்கிவிட்டன.
குருவாயூரப்பன் படம் வந்ததில் இருந்து உடம்பு மிக நன்றாக இருந்தது.
காலை குளித்துப் பலகாரம் சாப்பிட்டு விட்டு `இன்சுலின்’ போட்டுக் கொண்டால், மதியம் வரையிலே சுறுசுறுப்பாக இருக்கும்.
மதியம் நல்ல கீரையோடு சாப்பாடு சாப்பிட்டு விட்டுப் படுத்தால், மாத்திரை இல்லாமலே தூக்கம் வரும்.
சாயங்காலம் எழுந்து குளித்தால், உலகமே புதிதாகத் தோன்றும்.
உடனே மண்டபத்துக்கு வந்து மாலைப் பத்திரிகைகள் அனைத்தும் படித்து முடிப்பேன். ஏதாவது எழுதுவேன். உடம்பு அவ்வளவு நன்றாக இருந்தது.
அப்போது எனக்கு மலேசியாவில் இருந்து அழைப்பு வந்தது. `உடம்பு தான் நன்றாக இருக்கிறதே, போய் வரலாம்’ என்று முடிவு கட்டினேன்.
புறப்படுவதற்கு முதல் நாள் இரவு நான் நீர் சாப்பிடும் கண்ணாடித் தம்பளர் விழுந்து உடைந்தது. என்னுடைய கைக்கடிகாரம் கழன்று விழுந்தது. `என்ன துர்ச்சகுணங்களோ’ என்று எண்ணியபடி விட்டு விட்டேன்.
மறுநாள் காலை பத்தரை மணிக்கு விமானம்.
காலை இட்லி கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன்.
`அதிகமாகச் சாப்பிட்டு விட்டோம்’ என்று நானே எண்ணிக் கொண்டு, `இன்சுலின்’ மருந்தை வழக்கத்துக்கு விரோதமாக அதிகம் போட்டுக் கொண்டு விட்டேன்.
சற்று மயக்கமாக இருந்தது.
விமான தளத்துக்குப் போகும் போது பையைத் தடவிப் பார்த்தேன். குருவாயூரப்பன் படத்தைக் காணவில்லை. பழைய சட்டையில் தேடிப் பார்க்கச் சொன்னேன். அதிலும் இல்லை.
விமான நிலையத்துக்கு வந்த போது ஆட்களையே அடையாளம் தெரியாத நிலை ஏற்பட்டு விட்டது.
என் குழந்தைகள், பேரன், பேத்திகளெல்லாம் விமான நிலையத்துக்கு வந்திருந்தார்கள்.
யாரோடு பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதே எனக்குப் புரியவில்லை.
என்னோடு கனரா பாங்க் நண்பர்களும் விமானத்தில் வந்தார்கள்.
விமானத்தில் இனிப்பு வாங்கிச் சாப்பிட்டேன்; குடித்துப் பார்த்தேன்; மயக்கம் மயக்கம் தான்.
இது நடந்தது 1975 செப்டம்பர் 28ஆம் தேதி.
மலேசியாவில் நான் போய்க் கோலாலம்பூரில் இறங்கி அங்கிருந்து 250 மைல் தூரத்திலுள்ள சித்தியவான் என்ற ஊருக்குப் போய்விட்டேன்.
அந்தச் சித்தியவான் நகரில் எனக்கு ஒரு அற்புதமான நண்பர் உண்டு. அவர் சிவகங்கைப் பகுதியைச் சேர்ந்தவர். கிருஷ்ணன் என்று பெயர்.
கோலாலம்பூர் கூட்டங்களுக்குத் தப்பி, ஓய்வுக்காக நான் அங்கே சென்றேன்.
அங்கிருந்து மூன்றாவது மைலில் ஒரு கடற்கரை உண்டு. அதன் கரையில் ஒரு சிற்றூர் உண்டு. அதன் பெயர் `லுமுட்’. அங்கே ஒரு தென்னந்தோப்பில் அழகான ஒரு காட்டேஜில் நான் தங்கி இருந்தேன்.
சரியாக மூன்றாவது நாள் அங்கிருந்து நான் சித்தியவான் நகருக்கு வந்தபோது, தமிழர்களெல்லாம் சென்னை வானொலியைச் சிரமப்பட்டுத் திருப்பிக் கொண்டிருந்தார்கள்.
நான் கிருஷ்ணன் வீட்டுப் படியேறிப் போகும் சமயம், அங்கிருந்த கிருஷ்ணனின் குமாரர், `ஐயா, காமராஜ் இறந்து விட்டார்’ என்றார்.
மறுநாள் மதியம், சென்னையில் இருந்து எனக்கு டிரங்க் கால் வந்தது, `அதே அக்டோபர் இரண்டாம் தேதியில் என் உடன் பிறந்த சகோதரியும் இறந்து விட்டதாக!’
நான் சென்னை வரமுடியவில்லை. மலேசியப் பயணத்தை ஒரு நாள்கூட ரசிக்க முடியவில்லை. ஒரே ரத்தக் கொதிப்பு; சர்க்கரைக் குறைவு; மயக்கம்; மயக்கம்; மயக்கம்!
இந்த நிலையிலும், `நான் இந்தோனேஷியாவுக்கு வந்தேயாக வேண்டும்’ என்று வற்புறுத்தினார்கள்.
பினாங்கில் புறப்படும் விமானம் இருபது நிமிஷத்தில் சுமத்திரா தீவுக்குப் போய் விடுகிறது.
நான் அங்கிருந்து கோலாலம்பூர் திரும்பியதும், சென்னையில் இருந்து டிரங்க்கால் வந்தது. என் சகோதரரை ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாக.
உடனே நான் தங்கியிருந்த பசிபிக் ஹோட்டல் டிராவல் ஏஜெண்டிடம் டிக்கெட்டைக் கொடுத்து ஏர் இந்தியாவில் உறுதி செய்யச் சொன்னேன். அவர் உறுதி செய்து விட்டார். ஆனால், என்னிடம் டிக்கெட்டைக் கொடுக்கவில்லை.
மறுநாள் ஞாயிற்றுக் கிழமை. காலை எட்டரை மணிக்கு விமானம். டிராவல் ஏஜெண்ட் வரவில்லை.
என்னை அழைத்துப் போயிருந்த துணை பப்ளிக் பிராஸிக்யூட்டர் நண்பர் சம்பந்தமூர்த்தி, விமான நிலையத்திலேயே டாலர் கட்டி எனக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தார்.

எத்தனை துயரங்கள்! எத்தனை சோதனைகள்!
`இவற்றுக்கெல்லாம் நாம் ஏன் காரணமாக இருக்க வேண்டும்?’ என்று தானே, குருவாயூரப்பன் காணாமல் போனான்!
விதி தவறாக இருக்குமானால், தெய்வம் கண்ணை மூடிக் கொள்ளும். அதற்காக அழுது பயனில்லை.
தெய்வத்தை அணுகும் முறையில் இருந்தே பல விஷயங்களை நாம் முன் கூட்டித் தெரிந்து கொள்ளலாம்.
தெய்வ நம்பிக்கை உள்ளவனுக்கு சகுனத் தடை ஏற்பட்டால், அதைத் தெய்வத்தின் கட்டளை என்றும், நமது கர்மா என்றும் கொள்ள
வேண்டும்.தடைதான் ஏற்படுமே தவிர, பெரும் கொடுமைகள் நிகழமாட்டா.
மலேஷியாவில் இருந்து திரும்பிய பிறகும் என் உடல்நிலை சரியாக இல்லை. உடம்பு இளைத்துக் கொண்டே வந்தது.
முப்பது பவுண்டு இளைத்து விட்டேன்.
இப்போது பார்க்கும் டாக்டர்கள் எல்லாம், இதுதான் சரியான எடை என்கிறார்கள்.
இதுவும் நான் விரும்பி நடந்ததல்ல.
பகவான் சில காலங்களில் சில காரியம் நடக்கும் என்று நிர்ணயிக்கிறான்; நம்முடைய பிரக்ஞை இல்லாமலே அவை நடந்து விடுகின்றன.
தெய்வத்தை அணுகினால் பலன்கிடைக்கும் என்பதற்காகக் கண்ட கோவிலுக்கெல்லாம் ஓடிக் கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை.
ஒரு தெய்வத்தை உளமாரப் பற்ற வேண்டும். பெரும்பாலும் சக்தி வணக்கம் உதவி செய்யக் கூடியது.
புவனேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி, அகிலாண்டேஸ்வரி, கற்பகாம்பாள், மீனாட்சி, காமாட்சி, விசாலாட்சி எல்லாமே சக்தியின் பிம்பங்களாக இருப்பதால், சக்தி உபாசனை பலன் தரும்.
ஆண் தெய்வங்களில் அவரவர் விருப்பப்படி சிவ தத்துவத்தையோ, விஷ்ணு தத்துவத்தையோ ஏற்றுக் கொள்ளலாம்.
இரவில் படுக்கப் போகும் போது தூங்குவதற்கு முன் கடைசியாகச் சொல்லும் வார்த்தை, தெய்வத்தின் பெயராக இருக்க வேண்டும்.
அதன் பிறகும் யாருடனாவது பேச வேண்டி வந்தால் மீண்டும் தெய்வத்தின் பெயரைச் சொல்லி விட்டுத் தூங்க வேண்டும்.
சின்னப்பாத் தேவர் யாரைக் கண்டாலும், `வணக்கம் முருகா’ என்பார்.
எம்.ஜி.ஆர். யாரைக் கண்டாலும், `வணக்கம் ஆண்டவனே’ என்பார்.
ஐயப்ப பக்தர்கள், `சாமி சரணம்’ என்பார்கள்.
தெய்வத்தை நாம் நடு வீட்டில் நிற்க வைத்தால், அது உள் வீட்டிலேயே வந்து உட்கார்ந்து கொள்ளும்.
நன்றி கெட்டவன் மனிதன்; நன்றியுள்ளது தெய்வம்.