Daily Archives: ஓகஸ்ட் 24th, 2012

எக்ஸெல் தொகுப்பினை வசமாக்க

எக்ஸெல் தொகுப்பிலும் சில மாறா நிலை அம்சங்களை நம் விருப்பத்திற்கேற்ப மாற்றி அமைத்து வைத்துக் கொள்ளலாம். இதனால், எக்ஸெல் புரோகிராமில் செயல்படுவது முற்றிலும் நம்முடைய விருப்பப்படியே இருக்கும். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். நம் விருப்பப்படி ஒவ்வொரு எக்ஸெல் ஒர்க்புக்கினையும் மாற்ற வேண்டியதில்லை. நாமே நம் விருப்பத்திற்கேற்ப அமைக்கும் மாற்றங்கள் படி, ஒர்க் புக்குகள் அமையும்.
1. பைல் அமையும் இடம்: பல பயனாளர்கள், அவர்களின் பைல்கள் சென்றடையும் இடம் My Documents ஆக இருப்பதனை ஏற்றுக் கொள்வதில்லை. இதனை மாற்றி, நீங்கள் விரும்பும் போல்டரிலேயே, பைல்களைப் பதியும்படி செய்து கொள்ளலாம்.
File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் கிளிக் செய்து பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், டூல்ஸ் மெனு சென்று ஆப்ஷன்ஸ் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடது பக்க பிரிவில், Save தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல் General டேப் கிளிக் செய்திடவும். பின்னர், Save Documents செக்ஷனில் Default File Location பீல்டில் பைல் எங்கு சென்று சேவ் செய்யப்பட வேண்டுமோ, அதற்கேற்ப path ஐ மாற்றவும். அல்லது அந்த ட்ரைவ் மற்றும் போல்டர் பிரவுஸ் செய்து காட்டி அமைக்கவும். இவை அனைத்தும் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
2. ஷீட்களின் எண்ணிக்கை: ஒவ்வொரு புதிய எக்ஸெல் ஒர்க் புக்கும் மூன்று ஷீட்களுடன் கிடைக்கும். இதன் பின்னர், நீங்கள் ஒர்க்ஷீட்டுகளை இணைக்கலாம் அல்லது நீக்கலாம். அதே நேரத்தில், மாறா நிலையில் உள்ள ஒர்க்ஷீட்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம்.
File டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். இடது பிரிவில் General கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் ஜெனரல் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு When Creating New Workbooks என்ற பிரிவில், எத்தனை ஷீட்கள் மாறா நிலையில் அமைக்கப்பட வேண்டுமோ, அந்த எண்ணை Include This Many Sheets என்ற பீல்டில் அமைக்கவும். எக்ஸெல் 2003ல், Sheets In New Workbook என்பதைப் பயன்படுத்தி இந்த எண்ணை அமைக்கவும். பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
3. குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறக்க: எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது, சிலர் ஏதேனும் ஒரு ஒர்க்புக்கினை எப்போதும் திறந்து அதிலிருந்து தங்கள் பணியினைத் தொடங்குவார்கள். இவர்களுக்கு எக்ஸெல் புரோகிராம் திறக்கும்போது அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்குடன் திறந்தால், பல வேலைகள் மிச்சமாகும். இதனையும் நாம் செட் செய்துவிடலாம். அந்த குறிப்பிட்ட ஒர்க்புக்கினை XLStart போல்டரில் சேவ் செய்து விட்டால், எக்ஸெல் புரோகிராமினைத் திறக்கையில், அந்த ஒர்க்புக்குடனே திறக்கப்படும். நீங்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடிப்படையில், இந்த போல்டரைக் கீழே குறிப்பிட்ட வகையில் காணலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி: C:\Documents and Settings\user name\Application Data\Microsoft\Excel\XLStart
விண்டோஸ் விஸ்டா: C:\Users\user name\AppData\Local\Microsoft\Excel\XLStart
விண்டோஸ் 7: C:\Program Files\Microsoft Office\Office\XLStart எப்போதும் ஒரு பைலை சேவ் செய்வது போல, அதனை இந்த XLStart போல்டரில் சேவ் செய்துவிடவும்.
4. கர்சர் செல்லும் முறை: நீங்கள் என்டர் தட்டினால், எக்ஸெல் புரோகிராமில் கர்சர் கீழாக ஒரு செல் செல்லும். ஆனால், நீங்கள் வலது பக்கம் உள்ள செல்லில் டேட்டா அமைக்க விரும்பினால், என்டர் தட்டியவுடன், வலது பக்கம் உள்ள செல்லுக்குச் செல்லும் வகையில் அமைக்கலாம்.
File டேப் கிளிக் செய்து, பின்னர் ஹெல்ப் பகுதியில் Options கிளிக் செய்திடவும்.
எக்ஸெல் 2007ல், Office பட்டன் கிளிக் செய்து, அதன் பின்னர், Excel Options கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல், Tools மெனுவில் Options தேர்ந்தெடுக்கவும். இடது பிரிவில் Advanced கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003ல் Edit டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். Editing Options பிரிவில் Direction என்ற கீழ்விரி மெனுவில், After Pressing Enter Move Selection என்பதன் கீழ் Right என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எந்த திசையில் வேண்டுமானாலும் கர்சர் செல்லும்படி அமைக்கலாம். அதற்கென Right, Left, Up, மற்றும் Down ஆக நான்கு ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். எக்ஸெல் 2003ல் இது Move Selection After Enter எனக் கொடுக்கப்பட்டிருக்கும். கர்சர் நகர்த்தப்படக் கூடாது என எண்ணினால், இங்கு ஆப்ஷன் கட்டத்தில் டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம். இவ்வளவும் செட் செய்த பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
5. எழுத்தும் அளவும்: ஒவ்வொரு தனிநபரும் அல்லது நிறுவனமும் தாங்கள் விரும்பும் எழுத்திலும், குறிப்பிட்ட சைஸிலும் எக்ஸெல் ஒர்க்புக்கை அமைக்க விரும்புவார்கள். இதற்கென எக்ஸெல் புரோகிராமினைத் திறந்த பின்னர், அதற்கு மாற்றிக் கொள்வார்கள். அப்படி மாறா நிலையில் திறக்கப்படாமல், நீங்கள் விரும்பும் எழுத்து வகையினையும் அதன் அளவையும் மாறா நிலையில் இருக்குமாறு மாற்றி அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிமுறைகளை மேற்கொள்ளவும்.
File டேப் கிளிக் செய்து Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007 புரோகிராமில், Office பட்டன் கிளிக் செய்து பின்னர் Excel Options என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், Tools மெனு சென்று Options என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இடது பக்க பிரிவில், Save தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல் General டேப் கிளிக் செய்திடவும். When Creating New Workbooks என்ற பிரிவில், Use This Font என்பதில், நீங்கள் விரும்பும் எழுத்து வகையினையும், Font Size options என்பதில் அந்த எழுத்து என்ன அளவில் இருக்க வேண்டும் என்பதனையும் நிர்ணயம் செய்திடவும். இனி ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
6. டெம்ப்ளேட் மாற்றம்: வேர்ட் புரோகிராம் போலவே, எக்ஸெல் புரோகிராமும், ஒவ்வொரு புதிய ஒர்க்புக்கினை ஒரு டெம்ப்ளேட் பைல் மீது தொடங்கி உருவாக்குகிறது. இந்த பைல் பெயர் Book.xltx. இந்த பைலில் மாற்றங்கள் செய்வதன் மூலம், நீங்கள் விரும்பும் வகையில் அடிப்படை பைலை அமைத்துக் கொள்ளலாம். டெம்ப்ளேட் பைலில் மாற்றங்களை மேற்கொள்ள கீழே குறிப்பிட்டுள்ள இரண்டு வழிகளில் ஒன்றைப் பின்பற்றலாம். டெம்ப்ளேட் பைலை உங்களுக்கேற்றபடி மாற்றங்களை மேற்கொண்டால், அதனைத் திறந்தால், மாற்றங்களுடன் ஒர்க்புக் அமைக்கலாம். மாற்றப்படாமல் இருந்தால், காலியாக உள்ள ஒர்க்புக்கிலிருந்து (blank workbook) பணியைத் தொடங்கலாம்.
டெம்ப்ளேட் பைல் அளவிலேயே மாற்றங்களை மேற்கொண்டு விட்டால், அதனை யே டெம்ப்ளேட் பைலாக சேவ் செய்துவிடவும். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல் படவும். பைல் டேப் கிளிக் செய்து அதில் Save As என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2007ல் ஆபீஸ் பட்டன் கிளிக் செய்து Save As தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் 2003ல், பைல் மெனுவில் இருந்து Save As தேர்ந்தெடுக்கவும். அடுத்து, Save As Type என்பதனை கீழ்விரி மெனுவிலிருந்து தேர்ந்தெடுக்கவும். இதில் எக்ஸெல் 2003ல், டெம்ப்ளேட் பைல் .xlt என்பதைப் பைல் துணைப் பெயராகக் கொண்டிருக்கும். Save In கண்ட்ரோல் பயன்படுத்தி XLStart போல்டரைக் கண்டறியவும். பின்னர் Save அழுத்தினால், மாற்றங்கள் அனைத்தும் சேவ் செய்யப்படும். XLStart போல்டரைக் காண இயலாவிட்டால், எக்ஸெல் தொகுப்பின் விசுவல் பேசிக் எடிட்டர் மூலம் இதனைக் கண்டறிந்து பெறலாம். இதற்கு Alt + F11 கீகளை அழுத்தி, எக்ஸெல் விசுவல் பேசிக் எடிட்டரைத் திறக்கவும். Immediate விண்டோ கிடைக்கவில்லை என்றால், Ctrl + G கீகளை அழுத்தவும். Immediate விண்டோவில் application.StartupPath என டைப் செய்து என்டர் அழுத்தவும். ஒர்க் ஷீட் லெவலில் மாற்றங்களை ஏற்படுத்த விரும் பினால், அவற்றை ஏற்படுத்தி, ஒர்க்ஷீட்டினை Sheet.xltx என்ற பெயரில் சேவ் செய்திடவும். இந்த பைலை கிரிட்லைன் போன்றவற்றை மாற்றுவதற்கும் பயன்படுத்தலாம். இன்னும் சில மாற்றங்கள் குறித்து அடுத்த வாரம் பார்க்கலாம்.

நிஜ மாமியார் – டெலிவிஷன் மாமியார்-என்ன வித்தியாசம்?

மாமியார் வீட்டில் அடியெடுத்து வைக்கும் ஒவ்வொரு மருமகளின் கனவு, தான் மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்பது தான். ஒவ்வொரு மாமியாரின் கனவும் தான் மருமகளை மகள் போல பாவிக்க வேண்டும் என்பது தான். ஆனால் நடப்பதோ வேறு!

மாமியார் மருமகள் என்ற வார்த்தைக்கு எலியும், பூனையும் என்பது தான் பொருளா…? `நான் எவ்வளவு பிரியமாக இருந்தாலும் மருமகள் என்னை மதிப்பதில்லை’ என்று மாமியாரும்- `நான் எவ்வளவு தான் விட்டுக் கொடுத்து தாழ்ந்து போனாலும் என்னை எப்போதும் குறைசொல்வதே இவர்களுக்கு வேலை’ என்று மருமகளும் புலம்புவதை கேட்க முடிகிறது. எவ்வளவு பெரிய குடும்பமானாலும் மாமியாரும், மருமகளும் ஒற்றுமையாக இருப்பதென்பது நடக்காத காரியமாக உள்ளது.

ஏன் இந்த இரண்டு பெண்களுக்கும் இடையே எப்போதும் மோதல் நடந்துகொண்டே இருக்கிறது?

படித்துவிட்டு பல்வேறு துறைகளில் செயலாற்றி பல இக்கட்டான பிரச்சினைகளை தனியாக நின்று சமாளிக்கும் பெண்கள் கூட இன்று மாமியார் மருமகள் பிரச்சினைக்கு தப்புவதில்லை. மனோரீதியாக இதற்கொரு தீர்வு காண முற்பட்டு பல்வேறு ஆய்வுகளை நடத்தி மாமியார் மருமகள் பிரச்சினைக்கு பல காரணங்களை கண்டு பிடித்து அதனை தவிர்க்கும் வழிமுறைகளையும் சொல்லியிருக்கிறார்கள். இது சம்பந்தமாக பிரபல பெண்மணிகளை சந்தித்து அவர்களுடைய குடும்பவாழ்க்கை, மாமியார் மருமகள் உறவு பற்றி அலசி ஆராய்ந்து குறை நிறைகளை சொல்லியிருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது பல குடும்பங்களுக்குப் பொருந்தும் வகையில் உள்ளது.

டெலிவிஷன் தொடர்களில் மாமியார் வேடங்களில் வெற்றிகரமாக நடித்துக் கொண்டிருக்கும் ஹேமா கிங், இது பற்றி சில விஷயங்களை கூறுகிறார்.

"இப்பொழுதெல்லாம் டி.வி. சீரியல்களில் மாமியார் மருமகள் சண்டைகளை மையப்படுத்தியே காண்பிக்கிறார்கள். மாமியார் மருமகளை அதிகாரம் செய்வதும், கொடுமைப்படுத்துவதும், வீட்டை விட்டு துரத்துவதுமாக காட்சிகள் எல்லை மீறி போகின்றன. இப்படிப்பட்ட சீரியல்கள் மக்கள் மத்தியில் வெற்றியடைவது அவர்களின் தவறான ரசனையைத்தான் காட்டுகிறது. என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வன்முறை காட்சிதான். இப்படிப்பட்ட வன்முறைகளை சின்னத்திரை தவிர்க்க வேண்டும். மக்கள் மனதில் ஆழமாக பதியும் விதத்தில் குடும்பச் சண்டைகளை விரிவுப்படுத்தி காண்பிக்ககூடாது.

நிஜ மாமியாருக்கும் சீரியல் மாமியாருக்கும் என்ன வேறுபாடு? நிஜமாமியாரை அக்கம்பக்கத்தில் சுற்றியிருப்பவர்கள் இயக்குவார்கள். சீரியல் மாமியாரை இயக்குநர் இயக்குவார். சுய அறிவோடு இயங்கும் மாமியார்கள் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும். நல்ல மாமியாரால் சீரியலில் வெற்றிபெற முடியாது.

மாமியார் மருமகள் இருவரையும் சமாளிப்பது வீட்டில் உள்ள ஆண்களுக்கு மிகப் பெரிய சவாலாகவே உள்ளது. இருவரும் முக்கியமானவர்கள். யாரையும் வெறுக்க முடியாது. பெரும்பாலான குடும்பங்களில் மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே தான் பிரச்சினைகள் ஏற்படுகிறது. மருமகளுக்கும் மாமனாருக்கும் ஏற்படுவதில்லையே ஏன்?” என்று கேட்டு, இதற்கும் ஹேமா பதில் சொல்கிறார்.

"மாமனார் அதிக நேரம் வீட்டில் இருப்பதில்லை. மேலும் அவர் தனக்கு போட்டியாக மருமகளை நினைப்பதில்லை. மருமகளின் பெரும்பாலான தவறுகளை மாமனார் பெரிதுபடுத்துவதில்லை. அதிக நேரம் மருமகளுடன் நெருங்கி பழகும் மாமியாரின் கண்ணுக்கு தான் குறை-நிறைகள் தென்படுகிறது. மேலும் தனக்குப் பிறகு இந்த குடும்பத்தை ஏற்று பொறுப்பாக கவனித்துக் கொள்ளும் தகுதி மருமகளுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, புதிய பெண்ணை ஒரு தகுதியுடைய குடும்பத் தலைவியாக்க வேண்டுமே என்ற துடிப்பு அவர்களை ஆட்கொள்ளும் போது அது அதிகாரமாக மாறிவிடுகிறது. இதை மருமகள் புரிந்துகொண்டால், மாமியார் மேல் உள்ள வெறுப்பு நீங்கி மாமியார் மெச்சும் மருமகளாகலாம்.

மருமகளை மகளாக மாமியார் பாவிக்க வேண்டும் என்ற எண்ணம் எல்லா பெண்களுக்கும் இருக்கலாம். ஆனால் மாமியாரை தாயாக பாவிக்கும் மருமகள்கள் எத்தனை பேர்?

ஒரு தாய், தனது மகளிடம் எப்போதும் அன்பு காட்டிக் கொண்டே இருப்பதில்லையே. தவறு செய்யும் போது கண்டிக்கவும் செய்கிறாள். அதற்காக ஒரு பெண் தாயை வெறுப்பதில்லை. ஆனால் இதே கண்டிப்பு மாமியாரிடமிருந்து வந்தால் அது மாமியாரை வெறுக்கும் அளவுக்கு போய்விடுகிறது.

நல்ல மாமியார் எப்படி இருக்க வேண்டும்? பாரபட்சம் இல்லாமல் இருக்க வேண்டும். மருமகள், மருமகன் இரண்டு பேருக்கும் ஒரே மாமியார் தான். ஆனால் மருமகனிடம் நடந்துகொள்ளும் விதம் வேறு, மருமகளிடம் நடந்துகொள்ளும் விதம் வேறாக அல்லவா இருக்கிறது. ஒரு மருமகனிடம் தவறுகளை சுட்டிக் காட்டும்போது மிகவும் பக்குவமாக நடந்துகொள்கிறார், மாமியார். காரணம் மகளின் வாழ்க்கை பாதித்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை. அதைப் போன்ற பக்குவம் மருமகளிடம் ஏன் வருவதில்லை. மகனுடைய வாழ்வை பற்றிய அக்கறையில்லையா? இந்த இடத்தில் மாமியார்கள் சமநிலைப் பட வேண்டும். அப்போதுதான் நல்ல மாமியாராக முடியும்.

மகள், மருமகள் இருவர் மீதும் ஒரு பெண் அன்பு காட்டினாலும் தவறுகள் ஏற்படும் போது மகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் மருமகளிடம் நடந்து கொள்ளும் விதத்திலும் நிச்சயம் வேறுபாடு இருக்கிறது. மகளை மன்னிக்கும் மனம் மருமகளை மன்னிக்காது.

மகளின் குறைகளை மறைத்து, நிறைகளை பார்க்கும் பெண், மருமகளின் விஷயத்தில் நிறைகளை மறைத்து குறைகளை பெரிதுபடுத்தும் விதமாக நடந்துகொள்கிறார். மேலும் இந்திய பெண்களுக்கு மாமியார்-மருமகள் சண்டையை பார்ப்பது போன்றதொரு சுவாரஸ்யம் வேறு எதிலும் இருப்பதில்லை. இந்த மனப்போக்கு தான் இத்தகைய சீரியல்களின் வெற்றிக்கு காரணம். இந்த மனப் போக்கை மாற்ற வேண்டும். அவரவர் வீட்டில் மகிழ்ச்சி ஏற்பட மாமியார் மருமகள் ஒற்றுமைக்கான வழி முறைகளை தேட வேண்டும். அதுவே நல்ல சமுதாய மலர்ச்சிக்கு காரணமாக இருக்கும். ஒரு பெண் தாயிடம் இருப்பதைவிட மாமியாரிடம் இருக்கும் காலமே அதிகம். அன்பு காட்டும் நேரத்தை விட ஒரு பெண் தவறு செய்யும் போது அதை மென்மையாக கையாளும் பக்குவத்தில்தான் மாமியார்களின் உயர்ந்த உள்ளம் வெளிப்படும். மகனின் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தான் மருமகளிடம் நடந்து கொள்ளும் முறையும் ஒரு காரணம் என்பதை மனதில் கொண்டு பொறுப்போடு பெண்கள் நடந்துகொள்ள வேண்டும்.

எந்த இக்கட்டான நேரத்திலும் தன் சுயபுத்தியோடு செயல்பட வேண்டுமே தவிர பிறர் சொல்லை கேட்டு தவறாக தடம் மாறக் கூடாது. இது நம் குடும்பம். போர்க்களமல்ல. இதில் யாருக்கு வெற்றி என்பது நம் இலக்கல்ல. மற்றவர்களின் மனநிம்மதியே நம் வெற்றி என்பதை மனதில் கொண்டு இருவரும் செயல்பட வேண்டும். திருமண வாழ்க்கை என்பது மாமியார்-மருமகள் இருவருக்கும் ஒரு திருப்புமுனை. அதற்கு தக்கபடி இருவருமே மாறவேண்டும்.

இந்தியாவை பொறுத்தவரை மாமியார் மெச்சும் மருமகளாக இருப்பது தான் ஒரு பெண்ணின் பெரிய சாதனை.

கண் பார்வை வலுப் பெற..!

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் எனும் மூன்று மூலிகைப் பொருட்களை நன்றாகப் பொடித்து, திரிபலா சூரணம் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூரணத்தை இரவில் படுக்கும் முன் நக்கிச் சாப்பிட்டு அதற்குப் பிறகு பசும்பால் சாப்பிடுவது கண்பார்வைக்கு மிகவும் நல்லது. சுமார் 1/2 ஸ்பூன் (2.5 கிராம்) சூரணம் 1 1/2 ஸ்பூன் (7.5 கிராம்) த்ரைபல க்ருதம் எனும் உருக்கிய நெய் மருந்து, அரை ஸ்பூன் சுத்தமான தேன் என்ற விகிதத்தில் சதும்ப குழைத்து இரவில் படுக்கும் முன் சாப்பிட்டு வந்தால், கண் கோளாறுகள் நீங்குவதோடு பார்வையும் நன்றாகத் தெரியும்.

அதிக நேரம் தரையில் குனிந்து அமர்ந்து ஹோம் ஒர்க் செய்வது, படுத்துக் கொண்டு பாடப் புத்தகங்ளைப் படிப்பது, அதிக வெளிச்சமில்லாத அறையில், தனக்குப் பின்புறம் தலைக்கு மேல் விளக்கு எரியாமல், முன்புறம் எரியும் விளக்கில் படிப்பது, பிள்ளைகளுக்குச் சளி பிடித்துவிடக் கூடாதே என்ற பயத்தில் தலைக்குச் சுடு தண்ணீர் விட்டுக் குளிப்பாட்டுவது, நூடூல்ஸ், பாஸ்தா, பர்க்கர், பேல்பூரி, பானிப்பூரி, மசாலா சுண்டல், சிப்ஸ் போன்றவற்றைப் பிள்ளைகள் ஆசைப்படும்போதெல்லாம் வாங்கித் தருவது ஆகியவை தவிர்க்கப்பட வேண்டியவை.

உணவாக முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வல்லாரை, மிதிபாகல் பிஞ்சு, வெண்டை, மணத்தக்காளி, வற்றல், கேரட், முட்டை, பசும்பால் அதிகம் சேர்ப்பது நலம். மேலும் பயறு, கடலை, துவரை, உளுந்து, காராமணி, எள்ளு, மொச்சை முதலிய பருப்பு வகையும் மிளகு, சுக்கு, பெருங்காயம் (சிட்டிகை) முதலிய ஜீரண உதவிகளையும் காலை உணவாக ஏற்பது பிள்ளைகளுக்கு மிகவும் நல்லது. தாமதித்துச் செரிக்கும் உணவுப் பொருட்களாகிய கிழங்குகள், பழ வகைகள், எருமைத் தயிர், கீரை போன்றவை மதிய உணவிலும், பகல் பொழுதிலும் சேர்த்தால் ஏற்படும் வயிற்று மந்தம் வெயிலின் சூட்டாலும், விளையாட்டாலும் பாதிக்காது. அவரைப் பிஞ்சு, அத்திக்காய், பசுவின் பால், கடைந்த மோர், முருங்கைப் பிஞ்சு, துவரம் பருப்பு, மணத்தக்காளி வற்றல் போன்றவை இரவில் சாப்பிட உகந்தவை.

"ஆலோசகம்’ என்றொரு பித்தம் கண்ணிலிருந்து செயல்படுகிறது. பார்வை தெளிவாக இருப்பதற்கு இந்த பித்தம் உதவுகிறது. காரம், புளி, உப்பு ஆகியவற்றை உணவில் அதிகம் சேர்த்தால் இந்தப் பித்தம் கெட்டுவிடும். கண்பார்வை மங்கும். அதனால் இந்தச் சுவைகளை உணவில் குறைத்து வாழைப்பூ, வாழைத்தண்டு போன்ற துவர்ப்புச் சுவையும், கசப்பான பாகற்காய், அகத்திக் கீரையும், இனிப்பான பொருட்களையும் பிள்ளைகளுக்குச் சாப்பிடும்படி பழக்கினால் இந்த ஆலோசக பித்தம் நன்றாகச் செயலாற்றும்.

கண்களில் வெளிப்புறம் உளுந்து மாவை வரம்பு கட்டி, கண்களில் உள்ளே மூலிகை நெய் மருந்தை ஊற்றி நிரப்பி, கண்களைத் திறந்து மூடச் செய்யும் நேத்ர தர்ப்பணம் எனும் சிகிச்சை முறை, புடபாகம், பிடாலகம், ஆஸ்சோதனம், அஞ்சனம் போன்ற கண் சிகிச்சை முறைகளால் கண்பார்வைக் கோளாறுகளைத் தவிர்க்க முடியும் என்று ஆயுர்வேதம் வலியுறுத்துகிறது. ஆயுர்வேத மருத்துவமனைகளில் இந்த சிகிச்சைமுறைகள் சிறப்பாகச் செய்யப்படுகின்றன.

உள்ளங்கால் நடுப்பகுதியில் "தலஹ்ருதயம்’ என்று ஒரு மர்ம ஸ்தானமிருக்கிறது. அந்த இடத்தில் பசு நெய்யை உருக்கித் தொடர்ந்து பூசி வந்தால், கண்பார்வை நன்றாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நயனாமிருதம் என்ற கண்சொட்டு மருந்தும் உபயோகிப்பது கண்களுக்கு வலுவைக் கூட்டும். முதலில் விட்டவுடன் எரிச்சலைத் தரும். ஆனால் அதன் பிறகு குளிர்ச்சியைத் தரும். வீட்டில் சாதா உப்புக்குப் பதிலாக இந்துப்பு சமையலுக்கு உபயோகித்து வந்தால் கண்களுக்கு நல்லது. பொதுவாகவே உப்பு கண்களுக்குக் கெடுதல். ஆனால் இந்துப்பு இதற்கு விதிவிலக்காகும்

விண்டோஸ் 8 புதிய செய்திகள்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8, இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது என்ற செய்தியுடன், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்த பல செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில், ஆய்வமைப்பு வெளியிட்ட செய்தியில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எதிர்பார்ப்பதால், தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கத் திட்டமிடுபவர்கள், தங்கள் முடிவை சற்று ஒத்தி போட்டுள்ளனர். இதனால், பெர்சனல் கம்ப்யூட்டர் விற்பனை உலக அளவில் சரியத் தொடங்கி உள்ளது. இதற்குக் காரணம் விண்டோஸ் 8 வர்த்தக வெளியீட்டிற்கான தேதி அறிவிப்பு மட்டுமல்ல. அதன் ரிலீஸ் பிரிவியூ காட்டியுள்ள பல புதிய வசதிகளும் தான்.
மேலும் நோட்புக் கம்ப்யூட்டர் விற்பனை உச்சகட்டத்தினை அடைந்து இப்போது அவ்வளவாக விரும்பப்படுவதில்லை. புதியதாக விண்டோஸ் 8 என்ன தரும் என இதனைப் பயன்படுத்துபவர்கள் காத்திருக்கின்றனர்.
கம்ப்யூட்டர் விற்பனை செய்பவர்களும், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வர இருப்பதால், தங்களிடம் உள்ள பெர்சனல் மற்றும் லேப் டாப் கம்ப்யூட்டர்களின் இருப்பு எண்ணிக்கையினைக் குறைக்க விரும்பி, செயலில் காட்டி வருகின்றனர்.
உலக அளவில் மொத்த கம்ப்யூட்டர் விற்பனை கடந்த மூன்று மாதங்களில், சென்ற ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 0.1 சதவிகிதம் குறைந்துள்ளது. ஆனால், இதே காலத்தில், லெனோவா தன் கம்ப்யூட்டர் விற்பனையை உயர்த்தியுள்ளது. 25% கூடுதல் விற்பனையுடன், மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது. முதல் இடத்தை எச்.பி. கம்ப்யூட்டர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருந்தாலும், இந்த சந்தையில் இவற்றின் விற்பனைப் பங்கு 17.6 சதவிகிதத்திலிருந்து 15.5%க்கு இறங்கியது. அசூஸ் நிறுவனத்தின் மொத்த விற்பனை 39.8% உயர்ந்தாலும், ஐந்தாவது இடத்திலேயே தொடர்ந்து இருந்து வருகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தினைத் தாங்கள் விற்பனை செய்திடும் கம்ப்யூட்டர்களில் பதிந்து அளித்திடும் நிறுவனங்களிடம் இருந்து, லைசன்ஸ் ஒன்றுக்கு 100 டாலர் மைக்ரோசாப்ட் கட்டணமாக விதித்திருந்தது.
இதனைத் தற்போது குறைத்துள்ளதாக, உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்டோஸ் ஆர்.டி. பதிந்த கம்ப்யூட்டர்களுக்கான உரிமக் கட்டணம் 80 முதல் 100 டாலராகவும், எக்ஸ்86 பதிப்புக்கு 60 முதல் 80 டாலராகவும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், விண்டோஸ் 8 பதிந்து விற்பனை செய்திட, ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிறுவனங்களின் லாபம் அதிகமாகும். இதனால், அவை கம்ப்யூட்டர் விற்பனை விலையைக் குறைக்கலாம்.

உடல் நலம் காக்கும் கல்யாண முருங்கை

ht1428 பண்ணைக்கீரை சாப்பிட்டதுண்டா?  சகல சத்துகளும் நிறைந்த கீரை வேண்டுமானால் கதிர் அறுத்த வயற்காடுக்குத்தான் போக வேண்டும். விவசாய வேலைக்குப் போன பெண்கள் வீடு திரும்பும்போது, கண்ணில்படும் இளம்தும்பை, குப்பைமேனி, பசலி, பொன்னாங்கண்ணி, குதிரைவாலி, முடக்கத்தான், நுனிப் பிரண்டை என சகல பச்சைகளும் பறித்து சேலை முந்தானையில் கட்டி வருவார்கள். இதுதான் பண்ணைக்கீரை. அடிநுனியை அகற்றிவிட்டு பொரியலோ, துவட்டலோ செய்தால் சைடிஷ் ரெடி. சுவை மட்டுமல்ல… பலனும் பல!  
நகரங்களில் சாக்கடைக் கால்வாய்களுக்கு நடுவில் வீடுகள் இருக்கின்றன. கிராமங்களிலோ சத்துணவுகளுக்கு நடுவில்தான் வீடுகள் இருக்கும். வீட்டுக்கு வேலியாக முள்முருங்கை மரம். கண்வலிக்காரர்கள் இம்மரத்தின் பூக்களைப் பார்த்தால் நோய் போய் விடும் என்பார்கள். சோயா போல இருக்கும் இதன் கொட்டையை உரசிவிட்டு உடலில் வைத்தால் கொப்புளித்து விடும். ‘சூடுகொட்டை’ என்பார்கள். கிராமத்துப் பிள்ளைகளின் விளையாட்டுகளில் சூடுகொட்டை விளையாட்டும் ஒன்று.
தெருக்கூத்தில் அணிகலன்கள் செய்வதற்கு இம்மரத்தின் கட்டையைத்தான் பயன்படுத்துவார்கள். எடை குறைவென்பதால் உடுத்திக்கொண்டு களமாட ஏதுவாக இருக்கும். இம்மரத்தின் இலையோடு அரிசி சேர்த்து அரைத்து தோசை வார்ப்பார்கள். நெஞ்சிலிருக்கும் சளியை முறித்து தள்ளிவிடும். மதுரை கூடழலகர் தெருவில் முள்முருங்கை வடை சாப்பிடலாம். முள்முருங்கை இலையோடு சித்தரத்தை, மிளகு, பச்சரிசி கலந்து செய்கிறார்கள்.
வேப்பம்பூ பூக்கும் சீசனில் சேகரித்து, காயவைத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்வார்கள்.
மாதமொருமுறை வேப்பம்பூ பொரியல் செய்வார்கள். வயிற்றை வதைக்கும் பூச்சிகளை கொன்றொழித்து விடுமாம்! கடுங்காய்ச்சல் கண்டவர்களுக்கு என்றே புதருக்கு புதர் முளைத்துக் கிடக்கும் தூதுவளை. கொக்கி முள்ளால் நிறைந்திருக்கும் இதன் இலையை துவையல் அரைப்பார்கள். பொரியலும் செய்வார்கள். காயை உடைத்துப் போட்டு ரசம் வைப்பார்கள். புதர்தோறும் நெளிந்து கிடக்கும் பிரண்டையின் இளந்தண்டை ஒடித்தால் துவையல் அரைக்கலாம்.
வயிற்றுக் கோளாறு முதல் ஆண்மைக் கோளாறு வரை எல்லாவற்றுக்கும் மருந்து. நீரிழிவுகாரர்களுக்காக, வெற்றிலை கணக்கில் மரங்கள்தோறும் படர்ந்து கிடக்கும் கசப்புக்குறிஞ்சா. மாதம் ஒருமுறை இதை பொரித்துச் சாப்பிட்டால் பலன் உண்டு. குளக்கரைகளில் இதழ் விட்டு முளைத்துக் கிடக்கும் வல்லாரை பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.
கதிர் அறுத்த வயல்களில் முளைத்துக் கிடக்கும் சுக்கங்காய் (மிதுக்கங்காய்) பறித்து இரண்டாக வகுந்து மோரில் ஊற வைத்து காய வைக்க வேண்டும். அதைப் பொரித்தெடுத்தால் கசப்பும் துவர்ப்பும் மிக்க மிதுக்கு வற்றல். சுடுகஞ்சிக்கு அற்புத துணை! பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் எல்லா நோய்க்கும் ஒரே மருந்து… கோதுமை ஜூஸ்!

நட்சத்திர திருவிழா!-ஆக., 25-சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்

குறிப்பிட்ட சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களை, இவர்கள் வீட்டுக்கு ஆகாதவர்கள், நாட்டுக்கு ஆகாதவர்கள் என்று ஒதுக்கித் தள்ளுகின்றனர். அதற்கேற்றாற் போல், சில சொலவடைகளையும் சொல்லி வைத்திருக்கின்றனர். எப்படியோ அவை மக்கள் மனதில் பதிந்து விட்டன. ஆனால், இதெல்லாம் மூட நம்பிக்கை. தெய்வத்திற்குரிய திருவிழாக்கள் கூட, ஒதுக்கப்பட்ட நட்சத்திரங்களில் தான் நடக்கின்றன.
குறிப்பிட்ட சில நட்சத்திரங்களின் தன்மை, ஏதேனும் ஒரு மாதத்தில் மட்டும் கடுமையானதாக இருந்திருக்க வேண்டும். அதனால் தான், சித்திரை மாத சித்திரை, வைகாசி விசாகம், ஆனி உத்திரம், ஆடிப்பூரம், ஆவணி மூலம், கார்த்திகை மாத கார்த்திகை, மார்கழி திருவாதிரை, தைப்பூசம், மாசி மகம், பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் திருவிழாக்களை, முன்னோர் ஏற்பாடு செய்தனர். இந்நாட்களில் தெய்வ வழிபாடு செய்தால், அந்த நட்சத்திரங்களினால் ஏற்படும் துன்பத்தின் தாக்கம் குறையும்.
"ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பு இரண்டுமுடனே ஆசறு நல்லநல்ல அவை நல்லநல்ல அடியார் அவர்க்கு மிகவே’ என சம்பந்தர் பாடியது கூட இதனால் தான்! "சிவபெருமான் துணையிருக்கும் போது, மேற்கண்ட கிரகங்கள், நம்மை என்ன செய்து விட முடியும்?’ என்று கேட்கிறது இந்த இளஞ்சிங்கம்.
இந்த அடிப்படையில், சரியான சீதோஷ்ண நிலை அமைய வேண்டுமென்று இறைவனைப் பிரார்த்திப்பதற்கான நாள் தான் ஆவணி மூலம். இதற்கென்றே, தனித் திருவிழா, மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நடத்தப்படுகிறது. முதன்முதலாக ஆணுக்கு நிகராக, பெண்ணுக்கு சமஉரிமை கொடுக்கப்பட்டது மதுரை நகரில் தான். இங்கு மாசி மாதம் மீனாட்சியம்மனுக்கும், ஆவணி மாதம் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடத்தி, தலா ஆறு மாதம் ஆட்சி நடத்துவர். அதனால் தான், மாசித் திருவிழாவின் போது, சுவாமி வலம் வரும் வீதிகளுக்கு, "மாசி வீதி’ என்ற பெயர் வந்தது. ஆக, மாசி முதல் ஆடி வரை, ஆறு மாதம் அம்பாளின் கையில் ஆட்சி இருந்தது. ஆவணியில் பொறுப்பேற்கும் சொக்கநாதர், ஆடி வரை ஆட்சி நடத்துவார். இந்த சமமான மாதங்கள், திருமலை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மாறியது. மாசித் திருவிழா சித்திரைக்கு மாற்றப்பட்டு, அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா அத்துடன் இணைக்கப்பட்டது. அதனால் தான், மீனாட்சி பட்டாபிஷேகம் தற்போது சித்திரையில் நடக்கிறது. நான்கு மாதங்கள், அம்பாள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறாள்.
சித்திரை வீதி, ஆடி வீதி, மாசி வீதி என்று மதுரை நகர தெருக்களுக்கு பெயர் இருக்க, ஆவணி வீதியை மட்டும் மூல நட்சத்திரத்துடன் இணைத்து, "ஆவணி மூல வீதி’ என்கின்றனர். ஏன் தெரியுமா?
ஆவணி மூலம், இந்த உ<லகத்திற்கு நல்லதோ, கெட்டதோ செய்யப் போகிற ஒரு முக்கிய நாள். இந்த நாளில் இருக்கும் சீதோஷ்ணத்தை பொறுத்தே, உலகத்தின் சீதோஷ்ண நிலை ஓராண்டுக்கு அமையும். அன்று சூரியன் உதயமாகும் போது, மேகம் மறைத்திருந்தால், அந்த ஆண்டில் மழை கொட்டி, வெள்ளச் சேதத்தை ஏற்படுத்த வாய்ப்புண்டு. சுட்டெரிக்கும் வகையில் வெளிப்பட்டால், மழை குறைந்து பஞ்சம் கூட வந்து விடலாம். இதில், எது நடந்தாலும் நமக்கு கேடு. இந்நிலையில் இருந்து நம்மை பாதுகாப்பது இறைவன் மட்டுமே. அதனால் தான் ஆவணி மூலத்தை ஒட்டி, சுந்தரேஸ்வரரின் கையில், உலகத்தின் ஆட்சியை ஒப்படைத்து விடுகிறோம். அவர், நம்மை ஆட்டுவிக்க வரும் சீதோஷ்ண நிலையை சீராக்கி அருள் புரிவார் என நம்புகிறோம்.
எந்தக் காலத்திலும் இறைவன் நம்மை கைவிட்டதில்லை. ஆவணி மூல நன்னாளில், நம் ஊர்களிலுள்ள எல்லாக் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து, சிறந்த சீதோஷ்ண நிலை அமைய, வேண்டுதல் வைப்போம். இந்த கூட்டுப் பிரார்த்தனை, இறைவனின் மனதைக் கனிய வைக்கும். நமக்குத் தேவையான நல்ல சீதோஷ்ணமும் கிடைக்கும்.