Daily Archives: ஓகஸ்ட் 29th, 2012

வைய விரி வலைக்கு (World Wide Web)வயது 21

வைய விரி வலை (World Wide Web) என அழைக்கப்படும் இன்டர்நெட் வழிமுறை முதன் முதலாக ஆகஸ்ட் 6, 1991ல் இயக்கத்திற்கு வந்தது. 21 ஆண்டுகளை இனிதே கடந்து, பல நவீன முன்னேற்றங்களைக் கண்டு, உலகெங்கும் மனிதர்களை இணைக்க பாலத்தினைத் தந்து கொண்டிருக்கிறது.
இணையம் என்ற இன்டர்நெட் இதற்கும் முந்தையதாகும். தகவல்களைத் தாங்கிப் பரிமாறிக் கொள்ளும் சர்வர்களின் கட்டமைப்பும் மற்றும் அவற்றின் வழிகளும் இன்டர்நெட் Internet என அழைக்கப்படுகின்றன. இதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வடிவமைக்கப்பட்ட ஒரு வழிமுறை (Protocol) தான் வைய விரி வலை.
இதனை உருவாக்கியவர் டிம் பெர்னர்ஸ் லீ (Tim Berners Lee) என்பவர். டாகுமெண்ட்களை ஒன்றுடன் ஒன்றினை இணைக்கும் ஹைப்பர் லிங்க் எனப்படும் சிஸ்டத்தை உருவாக்கி, அதனை ஒரு பிரவுசர் வழியாகக் காணும் வழிமுறையை இவர் உருவாக்கித் தந்தார். ஏற்கனவே வேறு வழிமுறைகளில் இயங்கிக் கொண்டிருந்த இணையத்தினை அதனுடன் வெற்றிகரமாக இணைத்து செயல்படுத்தினார். இதன் மூலம் மக்கள் எளிதாகவும், வெற்றிகரமாகவும் டாகுமெண்ட் மற்றும் படங்களை உருவாக்கிப் பகிர்ந்து கொள்ள முடிந்தது. இப்போது பெரும் வழக்கில் பயன்படுத்தப்படும் எச்.டி.டி.பி. மற்றும் எச்.டி.எம்.எல். (HTTPHypertext Transfer ProtocolHypertext Transfer Protocol, HTML Hypertext Markup Language) வழங்கு முறை தொழில் நுட்பங்கள் இதில் உருவானவையே.
தான் உருவாக்கிய இந்த வழிமுறை இருபத்து ஒன்று ஆண்டுகளையும் கடந்து பழக்கத்தில் உள்ளது குறித்து டிம் பெர்னர்ஸ் லீ மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஓய்வாக இருக்கும் போது, இது குறித்துக் கூறுகையில், இந்த வழிமுறையை இன்னும் எளிமையாக, குறிப்பாக இரு முன்கோடுகள் (//forward slash) இல்லாமல் உருவாக்கி இருக்கலாம். ஆனால் அப்போது அது எனக்கு தோன்றவில்லை. இனி அதனை மாற்றுவது கஷ்டம் என்று குறிப்பிட்டார். "வேர்ல்ட் வைட் வெப் என்பது கம்ப்யூட்டர்களின் நெட்வொர்க் அல்ல; மனிதர்களை இணைக்கும் வளையம்’ என்று லீ அடிக்கடி கூறுவார்.
பிரிட்டனைச் சேர்ந்த லீ, இயற்பியல் மற்றும் கம்ப்யூட்டர் அறிவியலில் விஞ்ஞானியாக இன்றும் செயல்பட்டு வருகிறார். வைய விரி வலை இயக்கத்தினைக் கண்காணிக்கும் மையத்தின் (world wide web consortium (W3C)) தலைவராகச் செயல்படுகிறார். 2003 ஆம் ஆண்டில், மனித சமுதாய முன்னேற்றத்தில் இவரின் பங்கினப் பாராட்டி, இவருக்கு சர் பட்டம் வழங்கப்பட்டது.
இன்று, இந்த வைய விரி வலையினை மேம்படுத்த வேண்டும், கூடுதல் வேகத்துடன் செயல்படுத்த வைத்திட வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே இருக்கிறது. ஆனால், இதன் இடத்தில் இன்னொரு தொழில் நுட்பம் வர முடியாது என்றே விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதனைக் கட்டாயமாக மாற்றியே ஆக வேண்டும் என்ற கால கட்டம் தோன்றும் வரை வேர்ல்ட் வைட் வெப் நம் வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருக்கும்.
இந்த தொழில் நுட்பத்தினைத் தந்த டிம் பெர்னர்ஸ் லீ யை நாமும் வாழ்த்துவோம்.

குட்டைப் பாவாடைக்கு 50 சதவீதம் தள்ளுபடி!

சீனாவின் குவாங்கி என்ற இடத்தில், குய்லின் மேரிலாண்ட் என்ற பொழுது போக்கு பூங்கா உள்ளது. இந்த பூங்கா நிர்வாகம், வாடிக்கை யாளர்களை கவர்வதற்காக, அவ்வப்போது, ஏதாவது அதிரடியாக செய்வது வழக்கம். இந்த முறை, கிளு கிளுப்பான ஒரு விஷயத்தை செய்து, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர்.
"இந்த பொழுது போக்கு பூங்காவுக்கு வரும் பெண்கள், 38 செ.மீ.,க்கும் குறைவான குட்டைப் பாவாடை (ஷார்ட் ஸ்கர்ட்) அணிந்து வந்தால், அவர்களுக்கு நுழைவுக் கட்டணத்தில், 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும்’ என்பது தான், அந்த சர்ச்சைக்குரிய அறிவிப்பு. 38 செ.மீ.,க்கு, ஒரு செ.மீ., அதிகமாக இருந்தாலும், இந்த சலுகையை பெற முடியாது.
இங்கு வரும் பெண்களின் குட்டைப் பாவாடையை அளப்பதற்காகவே, பொழுது போக்கு பூங்காவின் நுழைவாயில் அருகே, ஏராளமான பெண் ஊழியர்கள், கைகளில் டேப்புகளுடன் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த அறிவிப்பின் மூலம், இளம் பெண் வாடிக்கையாளர்களை அதிகம் கவர முடியும் என்றும், இதைப் பார்ப்பதற்காக ஆண்களும் அதிக அளவில் வருவர் என்றும், பொழுது பூங்கா நிர்வாகம் கணக்கு போட்டுள்ளது. ஆனால், "இந்த கிளு கிளுப்பான அறிவிப்பு, விஷமத்தனமான செயல்’என, பத்திரிகைகளும், சமூக ஆர்வலர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெஜிடபிள் ரவா இட்லி

கடையில் விற்கும் `ரெடிமேட் இட்லிமிக்ஸ்’ வாங்கி ரவாஇட்லி தயாரிப்பதை விட, வீட்டிலேயே காய்கறிகள் சேர்த்து ரவா இட்லி தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பம்பாய் ரவை-1 டம்ளர்Idly_06
தயிர்-2 டம்ளர்
நறுக்கிய கேரட், பட்டாணி-1 கப்
சின்ன வெங்காயம் (நறுக்கியது) -1/2 கப்
பச்சை மிளகாய்- 1
கடலைப்பருப்பு- 2 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 டீஸ்பூன்
கடுகு- 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு- 5
நெய்-1 டீஸ்பூன்
எண்ணெய்-2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு ரவையை நன்கு சிவக்க வறுத்து, ஒரு பாத்திரத்தில் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு தாளித்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், காய்கறிகள் சேர்க்கவும். இந்த கலவையை வதக்கி, வறுத்த ரவையில் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்பு நெய் ஒரு டீஸ்பூன் விட்டு தயிர் 2 டம்ளர் சேர்த்து ரவா இட்லி மாவு கலவை தயார் செய்து கொள்ளவும். தேவைப்பட்டால் அரை கப் தண்ணீர் சேர்த்து கட்டி இல்லாமல் கரைத்து இட்லி தட்டுகளில் எண்ணெய் தடவி, சிறிது

கொத்தமல்லி இலை போட்டு அதன்மேல் ரவை கலவையை ஊற்றி ரவா இட்லிகள் தயாரிக்கவும். (கேரட், பட்டாணி தவிர வேறு காய்கறிகள் சேர்க்கத் தேவையில்லை.) தேங்காய் சட்னியுடன் பரிமாற சுவையோ சுவை.

ஒற்றைத் தலைவலியா?

 

ஒற்றைத் தலைவலியால் தற்போது பலரும் அவதிப்பட்டு வருகிறார்கள். ஒற்றைத் தலைவலிக்குக் காரணம் அதிகமான மன அழுத்தமே.
வளைந்து கொடுக்காத தன்மையும், மிகுந்த கண்டிப்பும் உள்ள பலருக்கு ஒற்றைத் தலைவலிப் பிரச்சினை இருக்கிறது. மேலும் ஒற்றைத் தலைவலிக்கும் வயிறு, பார்வைக்கும் முக்கியத் தொடர்பு இருக்கிறது. எனவே வயிற்றைச் சுத்தமாக வைத்திருப்பதும், கண்களைப் பாதுகாப்பதும் முக்கியம்.

பொதுவாக, குறைவான சர்க்கரை அளவு, ஒவ்வாமை, சில மருந்துகளை அதிகமாக எடுத்துக்கொள்வது, சத்துக் குறைபாடு, அதிகப்படியான வேலை, சரியான தூக்கம், ஓய்வு இல்லாமை, அதிகப்படியான மது, புகைப் பழக்கம் போன்றவையும் ஒற்றைத் தலைவலிக்குக் காரணமாக அமைகின்றன.
ஒற்றைத் தலைவலி பிரச்சினை உள்ளவர்களுக்கு, இடைவிடாத தலைவலி, வாந்தி, உடல்வலி, கண் மங்குதல், வயிற்றுக் கோளாறு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.
ஒற்றைத் தலைவலியால் அவதிப்படும் ஒருவர், எதனால் அது ஏற்பட்டது என்று அறிந்து அதன்படி தீர்வு காண வேண்டும்.
ஒற்றை தலைவலி உள்ளவர்கள் செய்ய வேண்டியவை:
* வைட்டமின் நியாசின் அதிகமுள்ள உணவு வகைகளான முழுக் கோதுமை, ஈஸ்ட், பச்சை இலையுடன் கூடிய காய்கறிகள், சூரியகாந்தி விதைகள், கொட்டைகள், தக்காளி, ஈரல், மீன் போன்றவற்றை உண்ண வேண்டும்.
* இரண்டு- மூன்று நாட்களுக்கு பழச்சாறு மற்றும் காய்கறிச் சாறை மட்டும் பருகலாம். நீர் அதிகமாக அருந்த வேண்டும்.
* இரவில் தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரால் நெற்றிப் பொட்டில் ஒத்தடம் தரலாம்.
* தலையில் இறுக்கமான துண்டையோ, பட்டையோ கட்டிக்கொள்ள வேண்டும்.
தவிர்க்க வேண்டியவை:
* புகை, மது. இவை தலைவலியைத் தூண்டக் கூடியவை.
* வெயிலில் அலைவது.
* காரமான உணவு வகைகள்.
* வயிறு நிறையச் சாப்பிடுதல்.
* தேவையில்லாத மனஅழுத்தம், கவலை.

வேர்ட் டிப்ஸ்-குறிப்பிட்ட பக்கம் உடனே செல்ல

குறிப்பிட்ட பக்கம் உடனே செல்ல
மிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று நிறுத்திப் பின்னர் நாம் விரும்பும் இடத்திற்கு வர வேண்டும். சரியாக ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்குச் செல்ல ஒரு சுருக்கு வழி உள்ளது.
Edit மெனு சென்று, GoTo செல்லவும். அல்லது எப்5 கீ அழுத்தவும். உடனே, Find and Replace டயலாக் பாக்ஸ், GoTo என்ற பிரிவில் திறக்கப்படும். இடது பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்புவது எந்த அடிப்படையில் Page, Line, Section எனத் தொடங்கி 13 ஆப்ஷன்கள் கிடைக்கும். இதில் Page தேர்ந்தெடுத்து, வலது பக்கம், பக்க எண்ணை டைப் செய்து, பின்னர் ஓகே கிளிக் செய்தால், குறிப்பிட்ட பக்கம் காட்டப்படும்.
டேப் அளவினை மாற்ற
வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்க முயற்சிக்கையில், அதில் டேப் செட்டிங்ஸ் முதலில் மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். வேர்டில் மாறா நிலையில் அரை அங்குல அளவில் டேப் செட்டிங்ஸ் அமைக்கப்பட்டிருக்கும். நீங்கள் டேப் பட்டனைத் தட்டி, கர்சர் செல்லும் அளவினைக் கண்டு இதனை உணரலாம். ஆனால், இந்த செட்டிங் பல ஆண்டுகளாக வேர்டில் மாறா நிலையில் இருந்து வருகிறது. ஆனால் அதிர்ஷ்ட வசமாக, நீங்கள் இதனை மாற்ற வேண்டும் என எண்ணினால் அதற்கும் வழி உள்ளது. மாற்ற கீழ்க்காணும் வழிகளைக் கையாள வேண்டும்.
1. ஹோம் டேப்பில் முதலில் கிளிக் செய்திடவும். பாரா குரூப் டயலாக் லாஞ்சரில் அடுத்து கிளிக் செய்திடவும். நீங்கள் வேர்ட் 2003 பயன்படுத்துபவராக இருந்தால், பார்மட் மெனு சென்று டேப் தேர்ந்தெடுக்கவும்.
2. கீழாக இடது மூலையில் உள்ள டேப்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும்.
3. மாறா நிலையில் உள்ள டேப் அளவினை .50 லிருந்து .25க்கு மாற்றவும். இன்னும் பல அளவுகளை மாற்றுவதற்கு வழிகள் தரப்பட்டிருப்பதனை நீங்கள் காணலாம். விருப்பம் இருப்பின் அவற்றையும் மாற்றி, என்ன நிகழ்வுகள் ஏற்படுகின்றன எனப் பார்க்கலாம்.
4. அனைத்தும் மாற்றிய பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த மாற்றத்தினை ஏற்படுத்திய பின்னர், ஒவ்வொரு டேபின் அளவும் அரை அங்குலத்திற்குப் பதிலாக, கால் அங்குல அளவில் இருக்கும். இதனை இன்னும் சிறிதாகவோ அல்லது பெரியதாகவோ அமைக்கலாம்.
வேர்ட்: கமெண்ட் வண்ணம் மாற்ற
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்டில் உருவாக்கப்படும் கமெண்ட்கள் தனி வண்ணத்தில் அமைக்கப்படுகின்றன. இந்த வண்ணத்தை வேறு வண்ணத்தில் மாற்ற, வேர்ட் தொகுப்பினில் வழி இல்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டத்தில் சில மாறுதல்கள் செய்து இதன் வண்ணத்தினை மாற்றலாம். அந்த வழியை இங்கு காணலாம்.
பொதுவாக, வேர்ட் டாகுமெண்ட்டில், குறிப்பிட்ட சில இடங்களில் நாம் குறிப்புகளை எழுதி அமைப்போம். மவுஸ் பாய்ண்ட்டரை குறிப்பு உள்ளது என்று காட்டும் இடத்திற்குக் கொண்டு சென்றால், சிறிய பாப் அப் பாக்ஸ் காட்டப்பட்டு, அதனுடன் தொடர்புள்ள கமெண்ட் காட்டப்படும். பொதுவாக, இந்த கமெண்ட்டின் வண்ணம் இளம் மஞ்சளாக இருக்கும். இப்போது இந்த வண்ணத்தை மாற்ற என்ன செய்யலாம் என்று பார்க்கலாம். ஏனென்றால், வேர்டில் இதனை மாற்ற வழி தரப்படவில்லை. ஆனால் விண்டோஸ் சிஸ்டம் செட்டிங்ஸில் அமைக்கப்படும் வண்ணத்தினை,வேர்ட் ஏற்றுக் கொள்கிறது. அதற்கான வழிகள்:
1. வேர்ட் தொகுப்பினை மினிமைஸ் செய்து கொள்ளவும். மற்ற அப்ளிகேஷன் புரோகிராம்கள் திறந்திருந்தாலும், அவற்றையும் சுருக்கவும்.
2. அடுத்து, டெஸ்க்டாப் திரையில் காலியாக உள்ள ஓர் இடத்தில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் Context Menu ஒன்றைக் காட்டும்.
3. இங்கு Properties தேர்ந்தெடுக்கவும். இதன் பின்னர், விண்டோஸ் Display Properties டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Appearance என்ற டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும். இங்கு Item கீழ் விரி மெனுவினைப் பயன்படுத்தி, Tool Tip தேர்ந்தெடுக்கவும்.
6. இங்கு கீழ்விரி மெனுவில் வலது பக்கமாக உள்ள, Color indicator என்பதில் கிளிக் செய்திடவும். விண்டோஸ் ஒரு சிறிய கட்டத்தினைக் காட்டும். இதில் நீங்கள் விரும்பும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுக்கலாம்.
7. உங்களுக்கு எந்த வண்ணம் வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
8. பின்னர் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செட்டிங்ஸ் விண்டோஸ் எக்ஸ்பிக்காகத் தரப்பட்டுள்ளது. மற்ற தொகுப்புகளில் அவை காட்டும் வழிகளைப் பின்பற்றி செயல்படவும்.
ஹைலைட்டிங் கலர்
அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.
மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.

நல்லாட்சி மலரட்டும்!…ஆக., 29 – ஓணம் பண்டிகை

இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். மூன்றடியானால் என்ன… மூன்று லட்சம் அடியாய் இருந்தால் என்ன! வாழ்வதற்கு என்ன தேவையோ அது போதாதா! அதிகமாய் சேர்ந்தால் ஆணவம் ஏற்படும். அந்த ஆணவம், மற்றவர்களை அழித்து, முடிவில் தன்னையே அழித்து விடும். இதுதான் மகாபலி சக்கரவர்த்தியின் வரலாறு உணர்த்தும் பாடம்.
திருமாலின் ஐந்தாவது அவதாரம் வாமனம். இந்த அவதாரத்தில், குறுகிய மனித வடிவம் எடுத்து, நீண்டு நெடிதுயர்ந்து, உலகளந்த விக்ரமன் ஆகி, மகாபலி மன்னனை ஆட்கொண்டார். இந்த அவதாரத்தில், இன்னொரு விசேஷமும் உண்டு. தசாவதாரத்தில், இரண்டு அவதாரங்கள், ஒரே குடும்பத்துக்காக உருவானது. நரசிம்மனாய் பிரகலாதனுக்கும், வாமனனாய் அவரது பேரன் மகாபலிக்கும் அவர் அவதரித்தது குறிப்பிடத்தக்கது.
விரோசனன் என்ற அசுரனுக்கும், அவனது மனைவி தேவிக்கும் பிறந்த மகனே மகாபலி. இவன் ஒரு யாகம் செய்து, மின்னலென பறக்கும் குதிரை, தேர், சிங்கக்கொடி, வில், இரண்டு அம்பறாத்தூளி (அம்புகள் வைக்கப் பயன்படுவது), ஒரு கவசம் ஆகியவற்றை பெற்றான். இவனது தாத்தா பிரகலாதன், ஒரு கவசத்தை அளித்தார். குரு சுக்ராச்சாரியார், வெற்றிச்சங்கு ஒன்றை வழங்கினார். எவராலும் அழிக்க இயலாத இந்த ஆயுதங்களை வைத்து பூலோகம், தேவலோகம், பாதாளம் உள்ளிட்ட எல்லாவற்றையும் ஜெயித்தான். இவனது ஆட்சி நல்லாட்சியாக அமைந்தது. இல்லை என்ற சொல் மக்களிடம் இல்லை. இதன் காரணமாக, தன்னை விட்டால் ஆளில்லை என்ற ஆணவத்துடன் திரிந்தான்.
தேவர்களின் தாயான அதிதிக்கு, தன் பிள்ளைகளான இந்திரன் உள்ளிட்ட தேவர்கள், மகாபலிக்கு அடிமையாகி பட்டபாடு சகிக்கவில்லை. அவள் விஷ்ணுவை பிரார்த்தித்தாள். அவளுக்கே மகனாகப் பிறந்து, தேவர்களை மீட்பதாக வாக்களித்தார். அதன்படியே அவள் வயிற்றில், திருவோண நட்சத்திரம் துவாதசி திதியில் பிறந்தார். பு@ராகிதர் வடிவில் மகாபலியை தேடிச் சென்றார்.
புரோகிதர் என்ற சொல்லில் உள்ள, புரோ என்பது, மேலே அல்லது இனி என பொருள்படும். இதம் என்றால் நல்லதை எடுத்துரைப்பது. அதாவது, எதிர் காலம் நல்லதாக இருக்க யோசனை சொல்பவர் புரோகிதர்.
திருமால் புரோகிதர் வடிவில் வந்ததற்கு காரணம் உண்டு. மகாபலி எல்லா வகையிலும் நல்லவன் தான், திறமைசாலி தான்; ஆனால், ஆணவம் அவன் கண்ணை மறைக்கிறதே! அதை அழித்து, அவனுக்கு இனி வரும் காலம் நல்லதாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் இப்படி ஒரு வடிவில் வந்தார். அது மட்டுமல்லாமல், முந்தைய அவதாரத்தில், தன் பக்தன் பிரகலாதன், தன் மீது செலுத்திய பக்திக்கான நன்றிக்கடனை, அவனது சந்ததிக்கும் தருகிறார். இதனால் தான், ஒருவர் இன்று செலுத்தும் பக்தியும், செய்யும் நற்செயல்களும், அவனது தலைமுறையையும் பாதுகாக்கும் என்கின்றனர்.
மகாபலிக்கு புரோகிதராக இருந்தவர் சுக்ராச்சாரியார், அவர், "வந்திருப்பது எல்லாம் வல்ல ஹரி, அவர் கேட்பதை மட்டும் கொடுத்து விடாதே…’ என்று எடுத்துச் சொன்னார்.
மகாபலியோ, "இறைவனே ஒரு பொருளை யாசித்து என்னிடம் வந்திருக்கிறான் என்றால், நானல்லவோ உயர்ந்தவன், நீர் சொல்வதைக் கேட்க மாட்டேன்…’ என குரு நிந்தனை செய்தான். குருவுக்கு மகாகோபம். "உன் செல்வத்தையெல்லாம் இழப்பாய்…’ என சாபமிட்டார். பின், விஷ்ணு ஈரடியால் உலகளந்து, மூன்றாவது அடியை மகாபலியின் தலையில் வைத்து ஆட்கொண்டது தெரிந்த கதை.
"அந்தணரே… வெறும் மூன்றடி நிலம் கேட்கவா இவ்வளவு தூரம் வந்தீர்… உலகத்தையே என் வசம் வைத்திருக்கிறேன். அவ்வளவையும் கேட்டாலும் தருகிறேன்…’ என்றான் மகாபலி.
அதற்கு வாமனர், "ஒருவனுக்கு தேவை என்னவோ, அதைத் தான் கேட்க வேண்டும்…’ என்றார்.
இதன்மூலம், இருப்பதைக் கொண்டு திருப்தியடைய வேண்டும் என்ற உயர்ந்த தத்துவத்தை, திருமாலும், தன்னைப் போல் மக்களுக்கு நல்லாட்சி தர வேண்டுமென மகாபலியும், உலகத்துக்கு உணர்த்தி யிருக்கின்றனர். இனியேனும் நாட்டில் நல்லாட்சி மலர, வாமனர் அருள் செய்யட்டும்.