Daily Archives: ஓகஸ்ட் 31st, 2012

சைக்கிள் மிதித்தால் தண்டனை குறையும்!

நம் நாட்டில், தலைவர்களின் பிறந்த நாளின்போது, சிறைக் கைதிகளுக்கான தண்டனையை குறைத்து, அவர்களை விடுவிக்கும் நடைமுறை உள்ளது. பிரேசிலில், கைதிகளின் தண்டனையை குறைப்பதற்கு, ஒரு வினோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. சாண்டா ரிடா டோ சபுகாய் என்ற நகரில் உள்ள சிறையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட சைக்கிள்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த சைக்கிள்கள், பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. சைக்கிளில் உள்ள பெடல், தொடர்ந்து வேகமாக மிதிக்கப்படும்போது, சக்கரம் சுழன்று, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள பேட்டரி மூலம், மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. பேட்டரி பவரை, மின்சாரமாக மாற்றுவதற்கு, தனியாக கன்வெர்ட்டரும் உள்ளது.இந்த சிறையில், நீண்ட நாட்களாக அடைக்கப்பட்டுள்ள கைதிகள், தினமும், இங்கு வந்து, சைக்கிள் மிதிக்க வேண்டும். ஒரு நாளைக்கு, குறைந்தது எட்டு மணி நேரம், சைக்கிள் மிதித்தால், தண்டனை நாளில், ஒரு நாள் குறையும். இந்த வித்தியாசமான தண்டனை குறைப்பு நடைமுறை, பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், சம்பந்தபட்ட கைதிகள், இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

மிளகுக்குழம்பு

செட்டிநாட்டுக் குழம்பு வகைகளில் ஒன்றான மிளகுக் குழம்பு சூடான சாதத்துடன்பரிமாற ஏற்றது. மிளகாய்த் தூள் சேர்த்து குழம்பு வைப்பதற்குப் பதிலாக காரத்திற்கு மிளகு சேர்த்து குழம்பு தயாரித்தால் அல்சர் பிரச்சினை ஏற்படாது. இதோ செய்முறை:

தேவையானவை:

புளி – சிறு உருண்டை
தேங்காய்ப்பூ – 2 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1/4 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
பூண்டு – 4 பல்
சின்ன வெங்காயம் – 4
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கடுகு, பெருங்காயம் – தாளிக்க தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மிளகு சீரகத்தை போட்டு பொரிந்ததும், சின்ன வெங்காயம், பூண்டு, தேங்காய்த்துருவல் சேர்த்து நன்றாக வாசனை வரும்வரை வதக்கிக் கொள்ளவும். ஆற வைத்து மிக்சியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். புளியை நன்கு கரைத்து அத்துடன் மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து குழம்பு கூட்டிக் கொள்ளவும். இத்துடன்அரைத்த மிளகு விழுதை சேர்த்து கரைத்துக் கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து, கூட்டி வைத்திருக்கும் குழம்பை ஊற்றி கொதிக்க விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து எண்ணெய் மிதந்து வருமாறு கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும். இப்போது மணக்கும் மிளகுக் குழம்பு ரெடி.

எக்ஸெல் டிப்ஸ்-shrink to fit

குறிப்பிட்ட அளவில் செல்களை அமைத்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தகவல்களை இடுகிறீர்கள். சில வேளைகளில் செல் கொள்ளாத அளவிற்குத் தகவல்கள் அமைக்கப்படுகின்றன. அப்போது செல் நம் தகவல்களுக்காக நீட்டிக் கொடுக்காது. என்ற அடையாளத்தினைக் காட்டும். அல்லது நாம் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட செல்லின் நீளத்தினை அதிகப்படுத்த வேண்டும்.
இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி உள்ளது. எக்ஸெல் ஒர்க் ஷீட்டினைத் தானே தகவல்களுக்கேற்ற வகையில் நீட்டித்துக் கொள்ள செட் செய்திடலாம். எக்ஸெல் தானாகவே செல் நீள, அகலத்தினை பார்மட் செய்து கொள்ளும். இந்த வசதியினை “shrink to fit” என எக்ஸெல் பெயரிட்டுள்ளது. இடப்படும் தகவல்களின் பாண்ட் அளவைச் சுருக்கி அமைத்துக் கொள்கிறது. ஆனால், மிக நீளமாக இருக்கும் பட்சத்தில், வழக்கம் போல செல் அமைப்பை மாற்றிக் கொள்கிறது. நீங்களாக அந்த செல்லின் அகலத்தைச் சரி செய்திடுகையில், மீண்டும் தகவலுக்கான பாண்ட் அளவை மாற்றிக் கொள்கிறது.
இதற்கு எந்த செல் அல்லது செல்கள் உள்ள வரிசையை மாற்ற வேண்டுமோ, அவற்றைத் தேர்ந்தெடுக்கவும். அது செல், நெட்டு வரிசை அல்லது படுக்கை வரிசையாக இருக்கலாம். இனி, Format Cells திறக்கப்பட வேண்டும். இதற்கு, ரிப்பன் கிளிக் செய்து, Home டேப் கிளிக் செய்திடவும். இங்குள்ள Font groupனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் வலது கீழாக உள்ள dialog box launcherஐ கிளிக் செய்திடவும்.
அடுத்து ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டு ஹைலைட் செய்யப்பட்ட செல் அல்லது வரிசையில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பட்டியலில் Format Cells தேர்ந்தெடுக்கவும். இந்த இடத்தில் பார்மட் செல்ஸ் டயலாக் பாக்ஸில், Alignment tab என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இதில் Text Control section என்ற பிரிவில் Shrink to fit என்பதனைத் தேர்ந்தெடுத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்.
இனி உங்கள் தகவல்கள் செல்களுக்கேற்ற வகையில் சுருங்கச் செய்வதற்கு ஒரு டூல் தயார் ஆகிவிட்டது.
எக்ஸெல் ஆல்ட்+ஷிப்ட் எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்
F1 +ALT+SHIFT: புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும்.
F2 +ALT+SHIFT: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும்.
F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம்.
F6+ALT+SHIFT: ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் திறக்கப்பட்டிருப்பின் தற்போதைய ஒர்க்புக்கிற்கு முந்தைய ஒர்க்புக் விண்டோ திறக்கப்படும்.
F9 +ALT+SHIFT: திறந்திருக்கும் அனைத்து ஒர்க்ஷீட்களிலும் அனைத்து ஒர்க் புக்குகளிலும் அனைத்து கால்குலேஷன்களும் செயல்படுத்தப்படும்.
F10 +ALT+SHIFT: ஸ்மார்ட் டேக்கிற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும். ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்மார்ட் டேக் திறக்கப்பட்டிருந்தால் அடுத்த டேக் சென்று அதற்கான மெனு மற்றும் மெசேஜ் திறக்கப்படும்.
F11 +ALT+SHIFT: மைக்ரோசாப்ட் ஸ்கிரிப் எடிட்டர் திறக்கப்படும்.
F12 +ALT+SHIFT: பிரிண்ட் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.

பெரியது கேட்பின்…

 

சனத்குமாரர் என்ற மகாயோகியை நாரதர் அணுகி, `ஐயனே! எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார்.
`நல்லது நாரதா! உபதேசம் செய்வதற்கு முன்னால் ஒரு வார்த்தை. உனக்கு ஏற்கெனவே என்னென்ன தெரியும் என்பதை முன்கூட்டிச் சொல்லிவிடு. அதன் பிறகுதான் எதை உபதேசிக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்!’ என்றார் சனத்குமாரர்.
நாரதர் தான் கற்ற வித்தைகளைக் கூறத் தொடங்கினார்.
`குருதேவா! எனக்கு ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் தெரியும். இதிகாச புராணங்கள் தெரியும். வேதங்களின் வேதமாகிய இலக்கணம், பிதுரு, கல்பம், கணித சாஸ்திரம், சகுன சாஸ்திரம், கால நிர்ணயம், தர்க்க சாஸ்திரம், நீதி சாஸ்திரம், நிருத்தம், பூதவித்தை, போர்முறை, வான சாஸ்திரம், சர்ப்ப வித்தை, கந்தர்வ வித்தை, இவை அனைத்துமே தெரியும்’ என்றார் நாரதர்.
அப்படிச் சொன்ன நாரதர் தன் சந்தேகம் ஒன்றையும் தெளிவுபடுத்தினார்.
`தேவா! இவ்வளவு வேத மந்திரங்களை நான் கற்றுக் கொண்டேனே தவிர, துன்பங்களைக் கடந்து செல்லும் ஆத்ம யோகத்தை அறிந்தவனாக இல்லை. `எவனொருவன் ஆத்மாவை அறிந்து கொள்கிறானோ அவனே துன்பத்தைக் கடப்பான்’ என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். தயை கூர்ந்து எனக்கு நீங்கள் துன்பத்தைக் கடக்கும் மார்க்கத்தைக் கற்றுத் தர வேண்டும்’ என்றார், நாரதர்.
சனத்குமாரர் சிரித்தார்.
`நாரதரே! நீர் கற்றுக் கொண்ட வித்தைகள் எல்லாம் பெயரளவில் வித்தைகளே. அவற்றை விடப் பெரிய விஷயங்கள் சில உண்டு. அவற்றின் மூலமே ஆத்மாவை அறிய முடியும்’ என்றார் அவர்.
`எவையெவை பெரியவை?’ என்று கேட்டார் நாரதர்.
`நீ சொன்ன பெயர்களை எல்லாம் விட வாக்குப் பெரியது. அந்த வாக்கைவிட மனது பெரியது. எப்படி ஒரு கைப்பிடிக்குள் இரண்டு நெல்லிக்காயோ, இலந்தைப் பழமோ அடங்கி விடுகிறதோ, அப்படியே பெயரும், வாக்கும் மனதுக்குள் அடங்கி விடும். மனத்தால் நினைத்த பின்தானே நீ சொல்லுகிறாய். செயலில் இறங்குகிறாய். அந்த மனதுதான் ஆத்மா. அந்த மனதுதான் உலகம். அந்த மனது தான் பிரம்மம். ஆகையால் மனதை நேசிப்பாயாக. அதே நேரத்தில் இன்னொன்று: சங்கற்பம் செய்வது மனதைவிடப் பெரியது. எப்போது ஒருவன் சங்கற்பம் செய்யத் தொடங்குகிறானோ, அப்போது யோசிக்கத் தொடங்குகிறான். அது மனது. உடனே பேச ஆரம்பிக்கிறான்; அது வாக்கு. அந்த வாக்கு பெயர் வடிவமாகிறது. அதில் மந்திரங்கள் ஒடுங்கி விடுகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்கி விடுகின்றன. அதே நேரத்தில் சங்கற்பத்தைக் காட்டிலும் தியானம் பெரியது. பூமி தியானம் செய்கிறது. வானம் தியானம் செய்கிறது. மலைகள் தியானம் செய்கின்றன. ஆகையால் பெருமைக்குரிய மனிதர்கள் தியான பலத்தில் ஒரு அம்சத்தையாவது பெற்றிருக்கிறார்கள். அற்பர்களுக்கும் கலகக்காரர்களுக்கும் அது வாய்ப்பதில்லை.’
`தியானத்தை விடவும் பெரியது எது என்று கேட்கிறாயா? விஞ்ஞானம் பெரியது. ஆத்ம பலம் விஞ்ஞானத்தைக் காட்டிலும் பெரியது. விஞ்ஞானம் என்பது அனுபவ விஞ்ஞானம். ஆத்ம பலம் படைத்த யோகி நூறு விஞ்ஞானவான்களை ஆட்டி வைக்க முடியும். ஒருவன் பலமுள்ளவனாக இருந்தால் அவன் படுக்கையில் கிடக்க மாட்டான்; எழுவான்; நடப்பான்; சேவை செய்வான்.’
நாரதருக்கும் சனத்குமாரருக்கும் நடந்த இந்த விவாதத்தில் ஆத்ம பலமே பொதுவாகப் பேசப்படுகிறது.

ஆத்ம பலம் என்பது என்ன?
தன்னை உணர்தல்.
`நானே பிரம்மம்! நானே ஈஸ்வரன்’ என்ற நிலையை எய்துதல்.
கடமைகளை ஒழுங்காகச் செய்வதன் மூலம் ஆத்மா பலம் பெறுகிறது.
ஒரு கதை உண்டு.
ஒரு நதியில் வெள்ளம் வந்து, பாலத்தின் இரண்டு பக்கங்களையும் அடித்துக் கொண்டு போய் விட்டது. பாலத்தின் நடுவே ஒரு குடும்பம் நின்று தத்தளித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்துப் பரிதாபப்பட்ட ஒரு பணக்காரர், ஒரு ஓடக்காரனைக் கூப்பிட்டு அவர்களைக் காப்பாற்றும்படியும் நூறு ரூபாய் தருவதாகவும் சொன்னார்.
ஓடக்காரன் அவர்களைக் காப்பாற்றினான்.
நூறு ரூபாய் எடுத்து அவர் கொடுத்தார்.
அவன் `இது என் கடமை’ என்று கூறிப் பணத்தை வாங்காமல் மறுத்து விட்டான்.
இந்த பலன் கருதாத கருமமே `கடமை’ என்பது.
இதைக் கருமம் என்பதைவிடத் `தர்மம்’ என்பது பொருந்தும்.
இத்தகைய தர்மம் தலைமாட்டில் நின்று காப்பாற்றும்.
`நான் லண்டனுக்குப் போனேன்; நான் பாரிஸுக்குப் போனேன். அனுபவித்தேன்’ என்ற அகங்காரம் கடைசிக் காலத்தில் எந்த உதவியையும் செய்யாது.
முதலில் இந்த `நான்’ தன்மையை வென்றவர்கள் தான் பெரிய யோகிகளாக மாறுகிறார்கள்.
அந்த யோகிகளிடம் இறைவனே வந்து உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், `பொன்னைக் கொடு, பொருளைக் கொடு’ என்று கேட்க மாட்டார்கள்; `என்னையே எனக்குக் கொடு’ என்றுதான் கேட்பார்கள்.
இப்படி தன்னை உணர்ந்து கொண்டுவிட்ட மனிதன் மரணத்தில் இருந்து விடுதலை பெற்று விடுகிறான்.
`அவன் செத்து விட்டான்’ என்று சொன்னால் `அவன் உடம்பு தான் செத்து விட்டது. ஆத்மா சாகவில்லை’ என்பது பொருள்.

`என்னையே எனக்குக் கொடு’ எனும் தத்துவத்தில் ஆன்மாவே உணரப்படுகிறது. அதற்குள் இருக்கும் ஈஸ்வரன் அறியப்படுகிறான்.
துயரங்கள் தோன்றாமல், சிரித்துக் கொண்டே அவன் மரணமடைந்து விடுகிறான். அதாவது அவன் உடம்பு அழிந்து விடுகிறது.
இந்த ஆன்ம யோகத்தை மிக ஆழமாக நமது சித்தர்களும், முனிவர்களும், ரிஷிகளும் சிந்தித்தார்கள்.
இமய மலையில் குடி புகுந்தவன் மாத்திரை வாங்குவதற்காக டாக்டரைப் பார்த்ததுண்டா?
ஆன்மாவை உணர்ந்து கொண்டவன் பிறரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள என்ன இருக்கிறது?
அவனுக்குச் சொல்வதற்குத்தான் பிறரிடம் என்ன இருக்கிறது?