Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 5th, 2012

மசால் தோசை பலவிதம்

உருளைக்கிழங்கு மசால் தோசை

புழுங்கல் அரிசி- 500 கிராம், பச்சை அரிசி- 100 கிராம், உ.பருப்பு- 150 கிராம், வெந்தயம் சிறிதளவு கலந்து ஊறவைத்து, தோசை மாவு தயார் செய்துகொள்ளவும். உப்பும் சேர்த்துக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கு- 250 கிராம், பெ.வெங்காயம்-2, ப.மிளகாய்-4, இஞ்சி ஒரு துண்டு, கறிவேப்பிலை, கொத்த மல்லி தழை, உப்பு போன்றவைகளை எடுத்துக்கொள்ளுங் கள். இவற்றை பயன்படுத்தி மசாலா தயார் செய்யுங்கள்.

தோசைக் கல்லில் நல்லெண்ணெய் தடவி, மாவு ஊற்றி மெலிதான தோசையாக வார்க்கவும். சிறிதளவு நெய் ஊற்றிக்கொள்ளவும். ஒரு பகுதி வெந்ததும், தயார் செய்து வைத்திருக்கும் மசாலில் இரண்டு தேக்கரண்டி எடுத்து தோசையின் நடுவில் வைத்து பரப்பி மடக்கி எடுக்கவும். இதற்கு தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்.

வெஜிடபிள் மசால் தோசை

முதலில் குறிப்பிட்டிருப்பதுபோல் அரிசி வகைகள், உளுந்து போன்றவைகளை ஊறவைத்து அரைக்கவேண்டும். பாதி அளவு அரைபடும்போது காய்ந்த மிளகாய்-6, சீரகம்- ஒரு தேக்கரண்டி போன்றவைகளை அதில் சேர்க்கவேண்டும். கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத்தூள் போன்றவைகளை யும் தேவையான அளவு கலந்து அரைக்கவேண்டும். பின்பு அதில் கேரட், பீட்ரூட், நூல்கோல், முள்ளங்கி போன்றவைகளை தலா 75 கிராம் அள விற்கு சேர்த்து அரையுங் கள். தோசை மாவு பக்குவத்திற்கு அரைத்து, தோசையாக வார்த்து சுவைக்கலாம்.

வெஜிடபிள் டிரை ஸ்டீவ் மசால் தோசை

– தோசை மாவு தயார் செய்துகொள்ளுங்கள்

– விரும்பும் காய்கறிகளை சிறிதாக நறுக்கிக்கொள்ளுங்கள்.

– கொதி நீரில் உப்பு போட்டு தண்ணீர் சுண்டும் வரை காய்கறியை வேகவிடுங்கள்.

– ஒரு தேங்காயில் இருந்து பாலை பிழிந்தெடுத்து, வேகவைத்த காய்கறியில் கலந்து, அடுப்பில் அரை சிம்மில் வைத்து கொதிக்கவிடுங்கள். தேவைப்பட்டால் காரத்திற்கு பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கி சேருங்கள். நன்றாக கிளறிவிடுங்கள். இல்லாவிட்டால் தேங்காய்ப்பால் அடியில் பிடித்துவிடும். 15 நிமிடத்தில் `டிரை’ ஆகிவிடும். இந்த மசாலை தேவையான அளவு எடுத்து, தோசையில் சேர்த்து மசாலா தோசையாக சாப்பிடலாம்.

கேரட் மசால் தோசை

தோசை மாவு தயார் செய்துகொள்ளுங்கள். கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், வேகவைத்த பச்சை பட்டாணி, துருவிய உருளைக்கிழங்கு, கறிமசால் போன்றவை களை சேர்த்து உருளைக்கிழங்கு மசால் போன்று தயார் செய்யுங்கள். இது கிரேவி மாதிரி இருக்கும். இதை பயன்படுத்தி தோசை தயார் செய்து சுவையுங்கள்.

எந்த `மசால்’ நல்லது?

நமது மசால் தோசையை உலகமே சுவைப்பது மகிழ்ச்சியான விஷயம். மசால் தோசை என்றதும் உருளைக் கிழங்கு மசால்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், டீன் ஏஜினருக்கு அது சிறந்த உணவுதான். பொட்டாசியமும், மாவு சத்தும் அதில் நிறைய இருப்பது உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் ஏற்றது தான். ஆனால் 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டும் அளவோடு உருளைக்கிழங்கு மசால் தோசை சாப்பிடவேண்டும்.

உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதில் உடல்வலுவுக்கு தேவையான புரதம், அமினோ அமிலம், பலவகை வைட்டமின் சேர்ந்த உணவு பொருட்கள் நிறைய உள்ளன. அவை களை சேர்த்து மசாலா ஆக்கலாம். அவை நோய் எதிர்ப்பு சக்தியையும் தருகின்றன.

அவற்றில் சில:

– சோயா பீன் மசாலா அல்லது டோபு மசாலா.

– சோயா சங்க்ஸ் மசாலா.

– வெந்தய கீரை மசாலா.

– முடக்கத்தான் கீரை மசாலா.

– பசலைக்கீரை மசாலா.

– பருப்பு உருண்டை மசாலா.

– பூசணிக்காய் மசாலா.

– ஓட்ஸ் மசாலா.

– காளான் மசாலா.

– காலிபிளவர், வெங்காயம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மசாலா.

– கார்ன் மசாலா.

– பீஸ் மசாலா.

மேற்கண்ட மசாலாக்களை உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதில் சேர்த்தால் அதிக சத்தும், சுவையும் கிடைக்கும்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு மாவு சத்தும், புரதச் சத்தும் தேவை. அவை இரண்டும் உளுந்து, அரிசி கலந்த தோசை மாவில் இருக்கிறது. அதனால் தோசை எல்லா வயதின ருக்கும் ஏற்றது.

நமக்கு வயதாகிக்கொண்டே இருக்கும்போது, நல்ல உணவுகள் நமது மூன்று விதமான தேவைகளை நிறைவேற்றவேண்டும்.

ஒன்று: நாம் சாப்பிடும் உணவு குளுகோஸ் ஆக மாற அதிக நேரம் எடுத்துக் கொள்ளவேண்டும். அப்படியானால்தான் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

இரண்டு: நாம் சாப்பிடும் உணவு அதிக நார்ச்சத்து நிறைந்ததாகவும், எண்ணெய் பயன் பாடு குறைந்ததாகவும் அமையவேண்டும்.

மூன்று: கலோரி குறைந்த, உடல் எடையை அதிகரிக்காத உணவு அவசியம். குறைந்த அளவே சாப்பிட்டாலும் அதிகம் சாப்பிட்டது போன்ற உணர்வை தருவதாக அந்த உணவு அமையவேண்டும்.

இந்த மூன்றுவிதமான தேவைகளை நிறைவேற்ற நமது பாரம்பரிய உணவுகளில் ருசிக்கு தக்கபடி சில மாற்றங்களை ஏற்படுத்தி உண்ணுவது நல்லது. அந்த வகையில் நார்ச்சத்து நிறைந்த முடக்கத்தான் கீரை, பசலைக்கீரை போன்றவைகளை தோசைக்கான மசால்களில் சேர்க்கவேண்டும்.

தோசை மாவுக்கு பாரம்பரியமாக அரிசி சேர்க்கிறோம். அதற்கு பதிலாக ஓட்ஸ், கோதுமை, சோயா, கடலைமாவு, கேழ்வரகு மாவு, அவல், பிரவுன் அரிசி போன்றவைகளை சேர்க்க வேண்டும். முழுமையாக இல்லாவிட்டாலும் படிப்படியாக இவைகளை பயன்படுத்த வேண் டும். உடலுக்கு மிகத் தேவையான இரும்பு சத்து, கால்சியம் போன்றவை மேற் கண்டவைகளில் உள்ளன.

கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள், ஒல்லியாக இருக்கும் டீன்ஏஜ் பெண்கள் தோசைக்கு முட்டை மசாலா, பாலாடைக்கட்டி மசாலா, பன்னீர் மசாலா, கோழி இறைச்சி மசாலா, மீன் மசாலா, இறால் மசாலா போன்றவைகளை தயார்செய்து உண்ணலாம். இவற்றை காலை உணவாக சாப்பிடுவது நல்லது. அதனால் உடல் இயக்கம் சிறப்பாகும்.

சிறிதளவு எண்ணெயை கலந்து வீட்டில் தயாரிக்கும் சாதாரண தோசை ஒன்றில் 100 முதல் 120 கலோரி இருக்கும். ஓட்டலில் ஒரு தோசை சாப்பிட்டால் 250 முதல் 300 கலோரி உடலில் சேரும். அது அளவில் சற்று பெரிதாக இருப்பதாலும், எண்ணெய் அதிகம் சேருவதாலும் கலோரி அதிகரிக்கிறது. அதே நேரத்தில் சோயா, ஓட்ஸ் போன்றவற்றில் தயாரான தோசை சாப்பிட்டால் 60 முதல் 80 கலோரிதான் சேரும். இதை எல்லாம் நாம் மனதில் வைத்துக்கொண்டு உடலுக்கு ஏற்ற விதத்தில் நாம் மசால் தோசைகளை தயாரித்து சாப்பிடவேண்டும்.

Advertisements

அன்றாட உணவில் ஆரோக்கியம் தரும் உணவுகள் அவசியம்

ht1353 நம் உடல் பாதுகாப்பாக இயங்கப் பத்து சூப்பர் உணவுகள் உள்ளன. காற்று, நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றைப் படுசுத்தமான மனிதர் கூடத் தடுக்க முடியாது. நாம் சாப்பிடும் முக்கியமான உணவு வகைகள், நம் உடலில் சேரும் இத்தகைய நோய் நுண்மங்களை எளிதில் தடுத்து அழித்துவிடும். நோய் பரவுவதைத் தடுக்கும் அந்தப் பத்து சூப்பர் உணவுகள்.
வெள்ளைப் பூண்டு:  பண்டைய எகிப்திலும் பாபிலோனியாவிலும் அற்புதங்களை விளைவித்துக் குணமாக்கிய மண்ணடித் தாவரம் இது. கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப் பூண்டை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப் பூண்டின் பெருமையை மங்கச் செய்ய முடியவில்லை. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.
வெங்காயம்:  வெள்ளைப் பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க, புகழ்மிக்க மருந்தாக வெங்காயம் செயல்பட்டு வருகிறது. ஜலதோஷத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இராசயனப் பொருள்தான் பாக்டீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன. இத்துடன் புற்றுநோய்க் கட்டிகள் வளராமலும் தடுக்கின்றன.
காரட்:  நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட காரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது காரட்தான்.
ஆரஞ்சு : வைட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர்பெரான் என்ற இராசயனத் தூதுவர்களை அதிகம் உற்பத்தி செய்வது வைட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும் நோய்த் தொற்றுக் கிருமிகளை இந்த இன்டர்பெரான்கள் எதிர்த்துப் போராடி உடலில் அவை சேராமல் அழிக்கின்றன. ஆரஞ்சு கிடைக்காத போது எலுமிச்சம்பழச் சாறு அருந்தலாம்.
பருப்பு வகைகள் : பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளில் உள்ள வைட்டமின் ஈ, வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டிவிடுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.
கோதுமை ரொட்டி : நரம்பு மண்டலமும், மூளையும் நன்கு செயல்படவும் புதிய செல்கள் உற்பத்தியில் உதவும் மண்ணீரலும், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். தைமஸ் சுரப்பியும் விரைந்து செயல்பட ப்ரெளன் (கோதுமை) ரொட்டியில் உள்ள பைரிடாக்ஸின் (B4) என்ற வைட்டமின் உதவுகிறது. இத்துடன் கீரையையும், முட்டையையும் தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இறால் மீன் மற்றும் நண்டு :அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே, வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.
தேநீர் :தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்துவிடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்துவிடலாம்.
பாலாடைக்கட்டி : சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கால்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத் தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.
முட்டைக்கோஸ் : குடல் புண்கள் ஆறு மடங்கு வேகத்தில் குணம் பெற முட்டைக் கோஸில் உள்ள குளுட்டோமைன் என்ற அமிலம் உதவுகிறது. உணவின் மூலம் உள்ளே சென்றுள்ள நோய்த்தொற்று நுண்மங்கள் முட்டைக்கோஸால் உடனே அகற்றப்படுகின்றன. இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது. முட்டைக் கோஸஸுக்குப் புற்று நோயைத் தடுக்கும் ஆற்றல் உண்டு.
மேற்கண்ட உணவுப்பொருட்களில் ஏழு உணவுப் பொருட்களாவது தினமும் நம் உணவில் இடம் பெற வேண்டும். இதைச் செய்து வந்தால் நம் மருந்துவச் செலவு குறைந்துவிடும்.

வெளிவராத தகவல் – பளபளக்கும் கோடிகள்!

“தமிழ்நாட்டில் நடக்கும் சில நிகழ்வுகள் கிரானைட் தொழிலின் மீது கரும்புள்ளியை ஏற்படுத்தியிருக்கின்றன. தமிழ் நாட்டில் மட்டும் கோடானுகோடிகள் கிரானைட்டில் புரள்வதாக, செய்திகள் படபடக்கின்றன. ஆனால் உண்மை நிலையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்’ – என்கிறார் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி. கடந்த 30 வருடங்களுக்கு மேல் கிரானைட் தொழிலில் இருக்கும் வீரமணி, மத்திய அரசின் எக்ஸ்போர்ட் பிரமோஷன் கவுன்ஸிலின் கனிமவள ஏற்றுமதி பிரிவின் தலைவர். இது தொடர்பான உலக அமைப்புகளிலும் பங்கு வகிக்கிறார்.
“மத்திய அரசின் சட்டத்தின் கீழ் இந்தத் தொழில் நடக்கிறது. மத்திய அரசின் சட்டத்தையொட்டி மாநில அரசுகள் தங்கள் சூழலுக்கும் தேவைக்கும் ஏற்ப பல விதிகளை வகுத்துக் கொள்ளலாம். இதில் சிறு கனிமங்கள் என்ற பிரிவின் கீழ் “கிரானைட்’ வருகிறது. கனிம வகைகள் பல. அணுசக்திக்குத் தேவையான கனிமங்கள், இரும்புத் தாது, பாஸ்பேட், நிலக்கரி, அரிதான கற்கள்… என்று பற்பல தேவைகளுக்கு கனிமங்கள் இருக்கின்றன.’
கட்டடத்துக்கு வெளிப்புறச் சுவர்களில் கிரானைட் பதிப்பது, தரையில் பதிப்பது, சமையலறை, வாஷ்பேஸின் போன்ற இடங்களில் பதிப்பது என்று கிரானைட் கற்கள் பயன்பாடு (கறுப்புக் கற்கள்) பல வகைகள். அடுத்து நினைவு மண்டபங்கள், சமாதிகள் கட்ட பயன்படுத்தும் உயர்வகையான கறுப்புக் கற்கள். மற்றொரு வகை பொறியியல், மற்றும் ஆய்வுக் கூடங்களில் மேஜைகளாகப் பயன்படுத்தக் கூடியவை. நம் ஊரில் இருப்பது போல் அல்லாமல் வெளிநாடுகளில் வேகத் தடைகளை, கருங்கற்களைக் கொண்டு அரை மி.மீ. நீளத்தில் அமைப்பார்கள். நடை மேடைகளிலும் பயன்படுத்துவார்கள். சிலைகள், படங்கள், நினைவுச் சின்னங்கள் கட்டவென்று கிரானைட்டின் பயன்பாடுகள் அதிகம். வெட்டியெடுத்த கற்களை அப்படியே பயன்படுத்த முடியாது. பயன்பாட்டுக்கு ஏற்ப அதை மேம்படுத்திப் பளிச்சிட வைக்க வேண்டும். இதற்கான மிகச் சிறந்த தொழில்நுட்பம் இந்தியாவில் உண்டு. 12 வகையாக ஃபினிஷிங் செய்கிறோம். பத்தாயிரம் டன் எடையுடைய கல்லைக் கூட வைரக் கம்பியால் தேவைக்கேற்ப ஸ்லைஸ் ஸ்லைஸ் போடுகிறோம்.
கறுப்புக் கற்களைத் தவிர சாம்பல் நிறக் கற்களும் உண்டு. ஆந்திராவில் குப்பம் என்ற இடத்தில் மிகச் சிறந்த கறுப்புக் கற்கள் கிடைக்கின்றன. பொதுவாகவே எரிமலைகள் வெடித்துக் கிளம்பிய பின்னர் இறுகிப் போய் பூமியின் மத்தியிலிருந்து வெளி வந்தவைதான் இந்தக் கற்கள். இந்த மாற்றம் கோடிக் கணக்கான ஆண்டுகளில் நிகழ்வது. கலர் கிரானைட் என்று நூறுவிதமான உயர்ரகக் கற்கள் இருக்கின்றன. இளமையான கல் என்றால் 60 கோடி ஆண்டுகள். முதிர்ந்த கல் என்றால் நூறு கோடி ஆண்டுகள்.
1978க்குப் பிறகு கிரானைட் தொடர்பான கொள்கை தமிழ்நாட்டில் திருத்தப்பட்டு “தமிழ்நாடு கனிமவள நிறுவனம்’ ஏற்படுத்தப்பட்டது. பல மாநிலங்களில் அரசு கனிம நிறுவனங்கள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் பல காலமாய் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருந்த உற்பத்தியாளர்கள் 1978க்கு வேறு பல மாநிலங்களுக்கு தொழில் செய்யக் கிளம்பிவிட்டனர். ஆந்திரா உட்பட 12 மாநிலங்களில், கிரானைட் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நடக்கிறது. கிரானைட் தொழில் தொடர்பான மிகச் சிறந்த கொள்கை ஆந்திராவில் அமல்படுத்தப்படுகிறது. ஆந்திராவில் க்ரீம் நகர் மற்றும் ஓங்கோல் பகுதிகளில் மிகச் சிறந்த, தரமான கிரானைட் வெட்டியெடுக்கப்படுகின்றன. வெண்புள்ளிகள், வெடிப்புகள் இருக்கும் கற்கள் ஏற்றுமதிக்கு ஏற்றவையல்ல. எண்பது சதவிகிதம் சேதாரம் இருக்கும். இந்திய அளவில் ஐயாயிரம் கிரானைட் நிறுவனங்கள் இருக்கின்றன. நான்காயிரம் குவாரிகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இந்தியாவின் ஒட்டுமொத்த கிரானைட் உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 22 முதல் 25 சதவிகிதம்தான்.
உலகில் எண்பது நாடுகள் கிரானைட் தொழிலில் ஈடுபட்டிருக்கின்றன. உலகச் சந்தையில் நமக்கு பிரேசில், சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள்தான் கடும் போட்டி. நமது உற்பத்தியில் பத்து சதவிகிதம்தான் நமது தேவைக்கு. தொண்ணூறு சதவிகிதம் ஏற்றுமதிதான். 2000-2001ம் ஆண்டில் நாம் 1954 கோடிக்கு ஏற்றுமதி செய்தோம். 2011-12ம் ஆண்டில் அது 6000 கோடி. இந்திய அளவில் இந்தப் பத்தாண்டுகளில் 43000 கோடிக்கு ஏற்றுமதி செய்கிறோம். தமிழ்நாட்டில் இந்தக் காலகட்டத்தில் 11500 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது. இங்கு 120 நிறுவனங்கள் (டாமின் உட்பட) ஏற்றுமதி வணிகத்தில் ஈடுபட்டிருக்கின்றன. இது மத்திய அரசின் அதிகார பூர்வ புள்ளிவிவரங்கள். சராசரியாக பார்த்தால் ஒரு வருடத்தில் சுமார் 100 கோடி அளவுக்கு தமிழ்நாட்டிலிருந்து ஏற்றுமதி நடந்திருக்கிறது. நூற்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் (அரசு நிறுவனம் உட்பட) ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் நிலையில் ஏதேனும் ஒரு நிறுவனம் மட்டும் லட்சம் கோடி, ஆயிரக்கணக்கான கோடிகள் என்று எப்படி ஏற்றுமதி செய்திருக்க முடியும்? மற்றொரு ரகசியம்! மிக உயர்ந்த ரகக் கற்கள் கிடைப்பதாகச் சொல்லும் தென் தமிழகக் கற்களை அமெரிக்க இறக்குமதியாளர்கள் விரும்புவதில்லை. நான் ஏற்றுமதி செய்த ற்கள் அமெரிக்காவில் இரண்டு லட்சம் கட்டடங்களிலும் ஜப்பானில் 65 கட்டடங்களிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதில் ஒரு சதவிகிதம் கூட தமிழ்நாட்டுக் கற்கள் கிடையாது.
நமது நாட்டு மலைகளை கிரானைட்டுக்காக வெட்டியெடுப்பதை விட, வீடு கட்ட மற்றும் சாலை போட பயன்புடத்தப்படும் கருங்கல் ஜல்லிக் கற்களுக்காக வெட்டியெடுப்பது அதிகம். ஒரு பக்கம் இந்தியாவில் கிரானைட் ஏற்றுமதி வணிகத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று குளறுபடிகளும்; தனி மனிதர் செயல்பாடுகளும் தொழிலின் முன்னேற்றத்துக்கு ஸ்பீட் பிரேக்கர் போடுவது வருத்தமான விஷயம்தான்.

நன்றி-கல்கி