Daily Archives: செப்ரெம்பர் 10th, 2012

அமெரிக்காவில் இப்படியும் ஒரு கூத்து!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில், "உன் தந்தை யார்?’ என்ற பெயரில், வாகனம் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்த வாகனத்தில், மரபணுச் சோதனை நடத்துவதற்கான, பரிசோதனை வசதிகளும், அதற்கான நிபுணர்களும் உள்ளனர். ஏராளமான ஆண் கள், தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வருகின்றனர். இந்த குழந்தை, தங்களுக்கு பிறந்தது தானா என்பதை அறிந்து கொள்வதற்காக, மரபணுச் சோதனைக்கு <உட்படுத்துகின்றனர். ஆய்வு முடிவுகள், சில நாட்களுக்கு பின், மின்னஞ்சலிலோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கப் படுகிறது.
இந்த சோதனையை நடத்துவதற்காக, ஒரு நபருக்கு, 32 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள ஏதாவது ஒரு இடத்தில், தினமும் இந்த வாகனம் நிறுத்தப்படுகிறது. வாகனத்தில் இதுபோன்ற சோதனை நடத்துவதற்கு, அமெரிக்காவில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. "இந்த வாகனத்தால், ஏராளமான தம்பதிகளுக்கு இடையே, தேவையற்ற மனக் கசப்பு ஏற்படுகிறது…’ என, சமூக ஆர்வலர்கள் புகார் கூறினாலும், நாளுக்கு நாள், இதற்கு வரவேற்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கூகுள் பைபர்: மின்னல் வேக இன்டர்நெட்

கூகுள் அண்மையில் ஓர் அட்டகாசமான திட்டம் ஒன்றை அமெரிக்க மக்களுக்குத் தந்துள்ளது. இன்டர்நெட் வரலாற்றில் இது அடுத்த கட்டமாக அமைய உள்ளது.
இது வெற்றிகரமாகச் செயல்பட்டால், உலகின் அனைத்து இடங்களிலும், கூகுள் இதனைச் சாத்தியப்படுத்தலாம். கூகுள் பைபர் (Google Fiber) என்ற பெயரில், அதி வேக, மின்னல் வேக பிராட்பேண்ட் இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் திட்டம் ஒன்றை வடிவமைத்துள்ளது.
2011 ஆம் ஆண்டில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டது. பைபர் ஆப்டிக் வழி தகவல் தொடர்பினை இணைய தொடர்பிற்குத் தருவதே இந்த திட்டம். உலகிலேயே அதிக வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினை இதன் மூலம் பெறலாம். மின்னல் வேக டேட்டா பரிமாற்றம் என்பது நிஜமாகவே இதன் மூலம் நடைபெறும். ஒரு நொடியில், ஒரு கிகாபிட் பிட்ஸ் டேட்டா பரிமாறப்படும். ஆப்டிகல் பைபர் மூலம் இது சாத்தியமாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நெட்வொர்க்கினை இதற்கென அமைத்து வெற்றிகரமாக செயல்படுத்த கூகுள் சோதனை நடத்தியுள்ளது. இன்டர்நெட் மட்டுமின்றி, வீடியோ, தொலைக்காட்சி சேனல்கள் ஆகியவையும் இதன் மூலம் வழங்கப்பட இருக்கின்றன. ஆனால், தொலைபேசி சேவை இதில் சேர்க்கப்படவில்லை.
தொடக்கத்தில் கேன்சாஸ் நகரத்தில் இது அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1,100 இல்ல வளாகங்கள் முதல் சந்தாதாரர்களாக விண்ணப்பித்தன. சென்ற ஜூலையில் இவை பதியப்பட்டன. மூன்று வகைகளில் இது கிடைக்கும். இலவச இன்டர்நெட் இணைப்பு, மாதம் 70 டாலர் செலுத்துவோருக்கான ஒரு கிகா பிட் வேக இன்டர்நெட் இணைப்பு மற்றும் 120 டாலருக்கு, தொலைக்காட்சி சேவை இணைந்த இன்டர்நெட். தொலைக்காட்சி இணைந்த சேவையில், ஒரு டெராபைட் அளவிலான கூகுள் ட்ரைவ் வசதி தரப்படுகிறது. அத்துடன் ஒரு டெராபைட் டி.வி.ஆர். ரெகார்டிங் வசதியும் கிடைக்கிறது. இதன் மூலம் ஒரே நேரத்தில் எட்டு தொலைக் காட்சி சேனல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து வைத்து, பின்னர் வேண்டும் போது பார்த்துக் கொள்ளலாம். இந்த வகை சேவை பெறுவோருக்கு நெக்சஸ் 7 டேப்ளட் பிசி ஒன்று தரப்படுகிறது. இதனை ரிமோட் கண்ட்ரோல் போல பயன்படுத்தலாம். இலவச இன்டர்நெட் வகையில், இன்ஸ்டலேஷன் கட்டணமாக 300 டாலர் கட்டிவிட்டால், ஏழு ஆண்டுகளுக்கு நொடிக்கு 5 மெகா பைட் டவுண்லோட் மற்றும் நொடிக்கு ஒரு மெகா பைட் அப்லோட் இன்டர்நெட் சேவை, அப்லோட் மற்றும் டவுண்லோட் பிரிவில் எந்த விதக் கட்டுப்பாடும் இன்றிக் கிடைக்கும். இந்த 300 டாலர் கட்டணத்தை, ஓராண்டு காலத்தில் தவணை முறையில் செலுத்தலாம். மாதம் 70 டாலர் கட்டணம் செலுத்துவோருக்கு, இன்ஸ்டலேஷன்
கட்டணம் இல்லை. நொடிக்கு ஒரு கிகா பிட் வேகத்தில் அப்லோட் மற்றும் டவுண்லோட் இருக்கும். கூகுள் ட்ரைவில் ஒரு டெரா பைட் அளவு இடம் இலவசம்.
கேன்சஸ் நகர வாசிகள் முன் கூட்டியே பதிவு செய்திட, இணைய தளப் பக்கம் ஒன்றை கூகுள் திறந்துள்ளது. வரும் செப்டம்பரில் வீடுகளுக்கான இணைப்பு தரப்படும். ஒரே நேரத்தில் இணையான இணைப்பினை அனைவரும் பெறுவார்கள். குறிப்பிட்ட ஏரியாவில், எதிர்பார்க்ப்படும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்கள் சேர்ந்த பின்னரே, பைபர் நெட்வொர்க்கினை அமைத்து, கூகுள் மின்னல் வேக இன்டர்நெட் சேவையைத் தரத் தொடங்கும். இந்த சேவையில், நொடிக்கு ஒரு கிகா பிட் டேட்டா கிடைக்கும். தற்போது அமெரிக்காவில் கிடைக்கும் இன்டர்நெட் இணைப்பின் வேகத்தைப் போல, இது நூறு மடங்கு அதிகமானது. என்னதான், பெரிய அளவில் விளம்பரம் செய்தாலும், அமெரிக்க நகரங்களில் இன்டர்நெட் டவுண்லோட் வேகம் நொடிக்கு 4 மெகா பிட்ஸ் தான்.
கேன்சஸ் நகரம், அமெரிக்காவில் இரு மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்த இரண்டு பிரிவுகளிலும் தர கூகுள் முடிவெடுத்துள்ளது. இந்த நிகழ்வை ஒட்டி, முன்பு பிரபலமான "கிவ் அ லிட்டில் பிட்’ (“Give a Little Bit”) என்ற பாடல் "கிவ் எ கிகாபிட்’ (“Give a Giga Bit”) என ரீமேக் செய்யப்பட்டது. கேன்சஸ் நகரின் ஒரு பிரிவான டொபேகா (Topeka) என்ற பெயர் தற்காலிகமாக கூகுள் என மாற்றி அழைக்கப்பட்டது. ப்ளோரிடா மாநிலத்தில் உள்ள சரசோடா (“Sarasota”) என்ற தீவு தற்காலிகமாக கூகுள் தீவு என அழைக்கப்பட்டது.
கூகுள் பைபர் இன்டர்நெட் வெற்றி அடைந்தால், தற்போது இன்டர்நெட் சேவை வழங்கி வரும், இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களை நிச்சயம் இழப்பார்கள். இந்த அளவிலான வேகத்திலும், வகைகளிலும் சேவையினை அவர்களால் தர முடியாது. கூகுள் தற்போது மக்கள் வசிக்கும் இல்லங்களுக்கு மட்டுமே இந்த இணைப்பினைத் தர இருக்கிறது. விரிவடையும் காலத்தில் வர்த்தக நிறுவனங்களுக்கும் இதனை நீட்டிக்கலாம்.

வேகம்… வேகம்…

 

சிறுத்தை

cheetah

உலகில் வேகமாக ஓடும் விலங்கினங்களில் முதலிடத்தில் இருப்பது சிறுத்தை. எதிரியை வீழ்த்துவதிலும் இதற்கே முதலிடம். ஓடும்போது இதன் வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டர். ஆனால் இந்த வேகத்தில் அதிக பட்சம் 8 நிமிடம் வரை மட்டுமே இதனால் ஓட முடியும். ஆனால் அதற்குள் தனக்கு முன்னே ஓடும் தன் இரையை கவ்விப் பிடித்து விடும். ஓடுவதற்கு வசதியாக இதன் கால்கள் மிகவும் வலிமை கொண்டவை. பெரும்பாலும் ஆப்பிரிக்க காடுகளில் தான் இந்த சிறுத்தைகள் அதிகம் காணப்படுகின்றன.

ஸ்பிரிங் ஸ்பாட்

springh

ஓட்டத்தில் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது ஸ்பிரிங் பாட். உச்ச வேகத்திலும் தாவித் தாவி ஓடும் இதன் ஓட்ட அழகைப் பார்த்தவர்கள் இதனை கங்காரு என்றே நினைத்தார்கள். இது தனக்கு நேரும் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டது. அதனால் பெரும்பாலும் எதிரி விலங்குகளிடம் இருந்து தப்பி விடும். இது சைவ விலங்கு என்பது இன்னொரு ஆச்சரியம்.

காட்டெருமை

yeruma madu

நாலாவது இடத்தில் இருப்பது? நம்பித்தான் ஆக வேண்டும். காட்டெருமை தான் ஓட்டத்தில் நாலாவதாக வரும் விலங்கு. இவை எப்போதும் கூட்டமாகவே தென்படும். சிங்கத்தை விட இவை வேகமாக ஓடினாலும், இவை கூட்டமாக தங்கள் உயிரைக் காக்க ஓட வேண்டியிருப்பதால் ஏதாவது ஒன்று சுலபத்தில் சிங்கத்திடம் சிக்கி இரையாகி விடும். எதிரிகளைத் தாக்க இவை கொம்புகளையே பயன்படுத்தும். நேருக்கு நேர் சிங்கம் வந்தால் கூட இதன் கொம்புக்கு பலியாக வேண்டி வரும். அதனால் பக்கவாட்டில் வந்து இவற்றை `ஸ்வாகா’ செய்து விடுகின்றன, சிங்கங்கள்.

குவாட்டர் குதிரை

kuthirai

குவாட்டர் குதிரைக்கு ஓட்டத்தில் ஆறாமிடம். இந்தவகைக் குதிரைகளின் சிறப்பே அதன் வேகமான ஓட்டம் தான். இவை குதிரைப் பந்தயங்களில் பிரபலம். ஏழாமிடத்தில கலைமான் உள்ளது. இதன் கொம்புகள் பெரியவை. இவை சில நேரங்களில் ஆக்ரோஷமாக தாக்கும். பெரும்பாலான நேரங்கள் இவை தன்னை துரத்தும் எந்த மிருகத்துக்காகவாவது பயந்து தன் ஓட்டத்தை தொடர்ந்து கொண்டிருக்கும்.

கூட்டமாக சென்று தன்னை விடவும் பெரிய விலங்குகளை வேட்டையாடும் வேட்டை நாய்களுக்கு எட்டாமிடம். ஆப்பிரிக்க காடுகளில் கூட்டமாக காணப்படும் இவற்றின் இனம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அருகி, அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பது அதிர்ச்சி கலந்த உண்மை. ஒன்பதாவது இடத்தில் ஓநாயும் பத்தாவது இடத்தில் நரியும் இருக்கின்றன.

மான்கள்

kombumaan

இரண்டாம் இடத்தில் இருப்பது நீண்ட கொம்புடைய மான்கள். இதன் இதயம், மற்றும் நுரையீரல் மிகவும் பெரியது. அதனால் ஓடும்போது அதன் வேகம் இயல்பாகவே அதிகரித்து விடுகிறது. தவிரவும் சிறுத்தை, சிங்கம் போன்ற விலங்குகள் இரைக்காக இவற்றை துரத்தும்போது இவை தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடவேண்டியிருப்பதால், அந்த மரண பயம் இவற்றின் வேகத்தை இன்னும் அதிகமாக்கி விடுகிறது. வட அமெரிக்காவில் அதிகம் காணப்படும் இவற்றின் கண் பார்வை மிகத் துல்லியம் என்பதால், தூரத்தில் இருந்தாலும் சுலபத்தில் தனது மேய்ச்சலுக்கான இடத்தை கண்டு பிடித்து விடுகிறது. அதோடு எதிரி விலங்குக்கு இரையாகாமலும் தன்னைக் காப்பாற்றிக் கொள்கிறது.

சிங்கம்

Lion

ஓட்டப்பந்தயத்தில் ஐந்தாவது இடத்தைப் பிடிக்கும் விலங்கு சிங்கம். காட்டுராஜாவான இதன் சிறப்பு அம்சம், காட்டையே அதிர வைக்கும் இதன் கர்ஜனை. இந்த கர்ஜனையை கேட்கும் மற்ற விலங்குகள் அந்த பயத்தில் தாறு

மாறாக ஓடத்தொடங்கி கடைசியில் சிங்கத்தின் அருகாமைக்கு வந்து விட, இரையை தேடிப்பிடிக்கும் வேலை மிச்சமாகி விடுகிறது, சிங்கத்துக்கு. ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா கண்டங்களில் சிங்கங்கள் அதிகம் காணப்படுகின்றன.

பால் கொழுக்கட்டை

 

செட்டிநாட்டு இனிப்பு வகைகளில் பிரசித்தி பெற்றது இது. வெல்லம் சேர்த்த இனிப்பு வகை என்பதால், செரிப்பதற்கு எளிதானது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி பெரியவர் களுக்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி அல்லது இட்லி அரிசி-1 டம்ளர்
வெல்லத்தூள்-1 டம்ளர்
தேங்காய்ப்பூ-ஒரு மூடி
ஏலக்காய் தூள்-1/4 டீஸ்பூன்

செய்முறை:

அரிசியை ஊற வைத்து நன்கு கெட்டி யாக அரைத்துக் கொள்ளவும். சிறிது உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். இதை பெரிய சைஸ் முறுக்கு அச்சில் ஒரு பேப்பரில் பிழிந்து விடவும்.

அடுப்பில் ஒரு கனமான பாத்திரத்தை வைத்து 8 டம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் பிழிந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக இரண்டு மூன்று தடவைகளாக போடவும். முதல் தடவை போட்டதும் மாவு வெந்து மிதந்த பிறகே அடுத்த தடவை போட வேண்டும். முழுவதும் வெந்ததும் வெல்லத்தூள், தேங்காய்ப்பூ, ஏலப்பொடி சேர்க்கவும். வெல்லம் கரைந்து கெட்டியானதும் இறக்கி வைக்கவும். இப்போது சுவையான பால் கொழுக்கட்டை ரெடி. சூடாக சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.

குறிப்பு: இறக்கி வைக்கும்போது சற்றே தளர இருந்தால் தான் போகப் போக ஆறியதும் சரியான பதத்தில் இருக்கும்.