Advertisements

Daily Archives: செப்ரெம்பர் 12th, 2012

வாசனையை வைத்து ‘மூடை’ அறிவதில் பெண்கள் கில்லாடிகளாம்!

ஒவ்வொரு உயிரினத்திற்கும் பாலியல் தேவை இருக்கும். பாலுணர்வு கிளர்ச்சி ஏற்படும்போது அதற்குரிய துணையுடன் இணைந்து தங்களின் ஆர்வத்தினை தணித்துக்கொள்ளும். விலங்குகள் தங்களின் தேவையை அதற்கேற்ப சங்கேத சப்தங்களை எழுப்பி உணர்த்தும். இணையின் உடலில் இருந்து எழும் வாசனையை மோப்பம் பிடித்து பின்னர் இணையுமாம். அதேபோல ஆணின் உடலில் எழும் ஒருவித வாசனை அவர்களின் மூடினை உணர்த்தும் என்கின்றனர் நிபுணர்கள். பெண்களுக்கு மோப்ப சக்தி சரியாக இருந்தால் சரியான நேரத்தில் தங்களின் துணையுடன் இணையலாமாம்.

ஆண்களின் மூடு பொறுத்து அவர்களின் உடலின் செக்ஸ் ஹார்மோன் சுரக்கிறது. இது வியர்வை மூலம் வாசனையாக வெளிப்படுகிறது. இந்த வாசனையை இனம் கண்டறிந்து கொள்ளும் பெண்கள் தங்களின் துணைவரின் மூடுக்கு ஏற்ப தயாராகிவிடுகின்றனராம்.

சேலைக்கட்டும் பெண்ணுக்கு மட்டுமல்ல வாசனை ஆணுக்கும் இதுபோன்ற வாசனை எழுமாம். அதேபோல் மூச்சின் லயமும் பெண்ணுக்கு பிடிபடுமாம். இதனை வைத்துதான் பசியறிந்து பரிமாறுகின்றனர் நம் இந்திய பெண்மணிகள்.

இந்த ஆய்வுக்காக, 20 வயதுகளில் இருக்கும் 19 பெண்களிடம் இரு வகையான ஆண்களின் வியர்வை சாம்பிள்களைக் கொடுத்துள்ளனர். ஒன்று சாதாரணமான வியர்வை, இன்னொன்று செக்ஸ் மூடில் இருந்தபோது எடுக்கப்பட்ட வியர்வை சாம்பிள். உடலின் அக்குள் பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட இந்த வியர்வை வாசனையை எடுக்க அதிகம் மெனக்கெட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.

ஆய்வில் பங்கேற்ற ஆண்களுக்கு முதலில் கல்வி சம்பந்தப்பட்ட, 20 நிமிடம் ஓடும் வீடியோவை பார்க்க வைத்துள்ளனர் அப்போது ஆண்களிடம் ஏற்பட்ட வியர்வை சாம்பிளாக சேகரிக்கப்பட்டது. பின்னர் அடுத்த 20 நிமிடம் செக்ஸ் படத்தை ஓட விட்டு பார்க்க வைத்தனர். அப்போது கிடைத்த வியர்வை செக்ஸ் மூடில் இருந்ததாக வரிசைப்படுத்தப்பட்டது. இந்த வியர்வை சாம்பிள்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களிடம் கொடுத்தனர்.

ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்கள், இந்த வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளை செயல்பாட்டை ஆய்வாளர்கள் கண்காணித்தனர். பெண்கள் வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது அவர்களுக்கு எதுவும் தெரியவில்லையாம். ஆனால் அவர்களின் மூளை பல்வேறு விதமாக ரியாக்ட் செய்துள்ளது.

இது குறித்து ஆய்வுக் குழுவின் தலைவரான டெக்ஸாஸ் ரைஸ் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் டெனிஸ் சென் கூறுகையில், சாதாரண வியர்வையை நுகர்ந்து பார்த்தபோது எந்தவகையான செயல்பாடுகளும் மூளையில் காணப்படவில்லை. அதே சமயம், ஆண்கள் செக்ஸ் மூடில் இருந்தபோது சேகரித்த வியர்வையை பெண்கள் நுகர்ந்து பார்த்தபோது அவர்களின் மூளையின் பல இடங்கள் தூண்டப்பட்டது என்று கூறியுள்ளார்.

எனவே மூடு பார்த்து முன்னேறுவதைப் போல வாசனைப் பார்த்து இனி ஆசையை புரிந்து கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். உங்க மோப்ப சக்தி எப்படி? ஒர்க் அவுட் ஆகுமா?

Advertisements

அரை மணி நேர ஆரோக்கிய `மந்திரம்’

 

பெண்கள் ஆரோக்கியமாக வாழ்வது ரொம்ப சிம்பிள். வீட்டில் எவ்வளவுதான் வேலைகள் இருந்தாலும், அந்த வேலைகளை கவனித்துவிட்டு வேகவேகமாக அலுவலகத்திற்கு ஓடினாலும் பெண்களால் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள முடியும். அதற்கு தினமும் வெறும் 30 நிமிடங்கள் போதுமானது. இந்த அரை மணி நேர ஆரோக்கிய மந்திரத்தை செயல்படுத்த ஜிம்முக்கு போய்தான் ஆகவேண்டும் என்றில்லை. வீட்டிலேயே செய்து முடித்துவிடலாம்.

எப்படி?

* தினமும் வழக்கமான நேரத்தைவிட அரை மணி நேரம் முன்னதாக விழித்திடுங்கள். அந்த நேரத்தில் 20 நிமிடத்தை உடற்பயிற்சிக்காக ஒதுக்குங்கள். முதலில் நடை பயிற்சிக்கு செல்ல மனதளவில் தயாராகுங்கள்.

* நடை பயிற்சியை தொடங்குவதற்கு முன்னால் ஒன்று அல்லது இரண்டு கப் தண்ணீர் பருகுங்கள்.

* உடற்பயிற்சிக்காக ஒதுக்கும் அரை மணி நேரமும் கடுமையான பயிற்சி செய்யும் திட்டம் இருந்தால், முதலிலே ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிடுவது நல்லது. முதல் நாள் இரவில் 8 மணிக்கு சாப்பிடுகிறீர்கள் என்றால், மறுநாள் விழித்து உடற்பயிற்சி செய்ய செல்லும்போது கிட்டத்தட்ட பத்து மணி நேரம் ஆகியிருக்கும். அவ்வளவு நேரம் வயிறு காலியாக இருப்பது கடுமையான உடற்பயிற்சிக்கு ஏற்றதல்ல. அதனால்தான் ஒரு கப் பால் அல்லது ஒரு பழம் சாப்பிட்டுவிட்டு கடுமையான உடற்பயிற்சியை தொடரவேண்டும்.

* கடுமையான உடற்பயிற்சி பெண்களின் உடலுக்கு அவசியம் இல்லை. 20 நிமிடங்கள் வேகமாக நடந்து செல்லுங்கள் அல்லது மாடிப்படிகளில் நாலைந்து முறை ஏறி இறங்குங்கள்.

* பக்கத்து வீட்டு பெண்களையோ, உறவினர்களையோ உடன் அழைத்துச் சென்றபடி நடப்பது தப்பில்லை. ஆனால் குடும்பக் கதை, ஊர்க் கதை பேசுவதற்கு அந்த நேரத்தை பயன்படுத்தாதீர். பெண்கள் பேசிக்கொண்டே நடந்தால் அதன் பெயர் உடற் பயிற்சி அல்ல! ஊர் கதை பேசுதல்! உடற்பயிற்சியின்போது பேசாமல் கைகளை வேகமாக வீசி நடந்து செல்லுங்கள். நீங்கள் அரை மணி நேரமே உடற்பயிற்சிக்காக ஒதுக்குவதால் அந்த நேரத்தை முழுமையாக அதற்கு மட்டுமே பயன்படுத்துங்கள்.

* அலுவலகத்திற்கோ, கடைகளுக்கோ செல்லும்போது குறுகிய தூரமே இருந்தால் அதற்கு வாகனப் பயணம் அவசியம் இல்லை. நடந்தே செல்லுங்கள். நடந்து சென்றால் தன்னை வசதி குறைந்தவர் என்று யாராவது கருதிவிடுவார்கள் என்ற தப்பான கண்ணோட்டத்தில் இருந்து விடுபடுங்கள்.

* ஸ்கிப்பிங் பெண்களுக்கு ஏற்ற நல்ல உடற்பயிற்சி. வீட்டிலே அதை செய்யலாம். நீங்கள் விரும்பும் சவுகரியமான உடையில் அதை செய்யலாம். ஒரு சில நாட்கள் தடுமாறினாலும், பின்பு அது உங்களுக்கு பிடித்தமானதாகிவிடும். அடிக்கடி துள்ளுவது, அன்று முழுவதும் உங்களை உற்சாக துள்ளல்போடவைக்கும். அந்த உற்சாகத்துக்கு ஆசைப்பட்டு தினமும் ஸ்கிப்பிங் ஆடுவீர்கள். அது உங்களை ஆரோக்கியத்தின் பாதைக்கு அழைத்துச் சென்று விடும்.

* கர்ப்பிணிகள் டாக்டரின் ஆலோசனைப்படி, அதிக சிரமம் இல்லாத உடற்பயிற்சிகளை செய்யலாம். அவர்கள் நடந்தால் தசை வலுப்பெறும். அவர்கள் மிதமான உடற்பயிற்சிகளை செய்வதே நல்லது.

* தினமும் உடற்பயிற்சி செய்ய முடியாத பெண்கள், வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களாவது பயிற்சியை மேற்கொள்ளவேண்டும். மாதத்தில் இருபது நாட்களாவது பயிற்சி செய்தால்தான் உங்களிடம் ஆரோக்கியமான மாறுதல் ஏற்படும்.

* கடுமையான உடற்பயிற்சி செய்யும் பெண்கள், ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்யுங்கள். உடற்பயிற்சிக்கு அடுத்த நாள் உடலுக்கு முழுமையாக ஓய்வு கொடுங்கள்.

* பெண்கள் புதுமை விரும்பிகள். ஒரே மாதிரியான பயிற்சியை செய்ய அவர்கள் விரும்பமாட்டார்கள். அதனால் வெவ்வேறு பயிற்சிகளை செய்வது நல்லது. அதன் மூலம் உடற்பயிற்சி மீது புது ஆர்வம் பிறக்கும்.

* அதிக உடல் எடை கொண்டவர்கள் உடற்பயிற்சியில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது. அவர்கள் உணவுக் கட்டுப்பாட்டையும் நடைமுறைப்படுத்தவேண்டும். அவர்களுக்கு கலோரி குறைந்த உணவே தேவை. உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு இரண்டையும் நிபுணர்களின் ஆலோசனைப்படியே செய்யவேண்டும்.

* மாதவிலக்கு நாட்களில் சிரமமான உடற்பயிற்சிகள் அவசியம் இல்லை. அன்று நடை பயிற்சி, மாடிப்படி ஏறும் பயிற்சி போன்றவை போதுமானது.

ஏழைகளுக்கு உதவும் அதிசய பிறவி!

வீடுகளிலும் வங்கி களிலும், பணத்தையும், நகையையும் குவித்து வைத்து, எச்சில் கையில் கூட, காக்கா ஓட்டாத கஞ்ச மகா கருமிகள், நம்மிடையே வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர். இல்லையென, கையேந்துவோருக்கு, ஒரு பைசா கூட, கொடுப்பதற்கு, இவர்களுக்கு மனம் வராது. இவர்களிடம், காசு, பணம், கொட்டி கிடந்தாலும், மனிதாபிமானம், சுத்தமாக இருக்காது.
ஆனால், தைவானில், காய்கறி வியாபாரம் செய்து, பிழைப்பை நடத்தும் ஒரு பெண், தான் சம்பாதிப்பதை எல்லாம், ஏழைகளுக்காக வாரிக் கொடுக்கும் அதிசய பிறவியாக வாழ்ந்து வருகிறார். அவரது பெயர், சென் சூ சு. இவருக்கு 60 வயதாகிறது. ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர். கிழக்கு தைவானின், டாய்டுங் மாகாணத்தில் உள்ள காய்கறிச் சந்தையில், சிறிய அளவில் காய்கறி வியாபாரத்தை துவங்கினார். இளம் வயதில் வறுமையில் வாடியதால், வறுமையின் கொடுமை என்ன என்பதை, நன்கு அறிந்திருந்த சென் சூவுக்கு, இயற்கையிலேயே, ஏழைகளுக்கு உதவும், மனப் பக்குவம் வந்திருந்தது.
இதனால், தன்னுடைய வருமானம் முழுவதையும், ஏழைக் குழந்தைகள், ஆதரவற்ற காப்பகங்கள் ஆகியவற்றுக்கு வாரி வழங்கினார். கடந்த, 40 ஆண்டுகளில், இதுவரை, ஒரு கோடி ரூபாய்க்கு மேல், தானமாக அளித்துள்ளார். ஊட்டச் சத்து குறைவாக இருக்கும் குழந்தைகளுக்காகவும், ஏழைக் குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில், நூலகம் அமைப்பதற்காகவும், உள்ளூரில் உள்ள காப்பகங்களுக்கும், அதிகமான நன்கொடை அளித்துள்ளார்.
நூறு ரூபாய், தானமாக கொடுத்தாலே, பத்திரிகை, புகைப்படக்காரர்களை கூப்பிட்டு, புகைப்படம் எடுத்து, பெரிய அளவில் விளம்பரம் தேடிக் கொள்வோர் மத்தியில், தன் சம்பாத்தியம் முழு வதையும் வாரி வழங்கும் இவர், தன்னுடைய உதவியைப் பற்றி, வெளியில் யாரிடமும் கூறுவது இல்லை.
தினமும், அதிகாலையில் சந்தைக்கு வந்து, இரவு 8:00 மணி வரை, தீவிரமாக காய்கறி வியாபாரம் செய்கிறார் இவர். ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே தூக்கம். "டைம்’ மற்றும் "போர்ப்ஸ் ஏசியா’ போன்ற பத்திரிகைகள், இவரது சாதனையை, வெளி உலகிற்கு அடையாளம் காட்டினாலும், தனக்கும், அதற்கும், சம்பந்தமில்லாதவர் போல், மிகவும் எளிமையாகவே இருக்கிறார்.
"காய்கறி வியாபாரம் செய்யும் உங்களால், எப்படி ஒரு கோடி ரூபாய்க்கு மேல், உதவ முடிந்தது?’என்ற, கேள்விக்கு, மிகவும் பொறுமையாக பதில் அளித்தார்…
"உணவு, உடை உள்ளிட்ட, என்னுடைய அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே, பணத்தை செலவிடுகிறேன். மற்ற அனைத்தையும், ஏழைகளுக்கு கொடுத்து விடுவேன். அதனால் தான், இவ்வளவு பெரிய தொகையை என்னால் கொடுக்க முடிந்தது. என் உயிர் உள்ளவரை, தொடர்ந்து ஏழைகளுக்கு உதவுவேன். பீரோக்களில் பணத்தையும், நகைகளையும் அடுக்கி வைத்து, மனிதாபிமானத்தை மறந்து, குப்பையான மனதுடன், என்னால் வாழ முடியாது…’ என, அழுத்தம், திருத்தமாக பேசுகிறார். உயர்ந்த லட்சியத்துடன் வாழும் இவர், ஒரு அதிசய பிறவி என்பதில், எந்த சந்தேகமுமில்லை.

சாப்பிடும் விதம் சரிதானா?

 

சாப்பிடுவது, அன்றாடம் வேளை தவறாத வேலை. ஆனால் நாம் சாப்பிடும் விதம் சரிதானா என என்றாவது யோசித்திருக்கிறோமா?
சாப்பிடும்போது செய்ய வேண்டிய விஷயங்களை மறக்கக் கூடாது.
சிலர் மிக வேகமாகச் சாப்பிடுவார்கள், சிலர் மிக மெதுவாகச் சாப்பிடுவார்கள். எப்படிச் சாப்பிட்டாலும் சரி, வாயில் போடப்பட்ட உணவு நன்றாகக் கடிக்கப்பட்டு, மெல்லப்பட்டு, சுவைக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு அதன்பின்தான் வயிற்றுக்குள் போக வேண்டும். அதுதான் முக்கியம். உணவை அப்படி அப்படியே விழுங்கக் கூடாது.
சிலர் இரண்டே நிமிடத்தில் சாப்பிட்டு முடித்துவிடுவர், சிலரோ ஒவ்வொரு வேளையும் சுமார் முக்கால் மணி நேரம் சாப்பிடுவர். அதுவும் தவறு, இதுவும் தவறு.

பொதுவாக சைவ உணவை சீக்கிரம் சாப்பிட்டு முடித்து விடலாம். அசைவ உணவைச் சாப்பிட சிறிது நேரமாகத்தான் செய்யும். குறைந்தது 10 நிமிடங்களும், அதிகபட்சமாக பதினைந்து நிமிடங்களும் சாப்பிடுவதற்கு ஒதுக்குவது நல்லது.
நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆவதில் வாயில் உள்ள உமிழ்நீர் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதனின் வாயின் இரண்டு பக்கங்களிலும் மூன்று ஜோடி உமிழ் நீர்ச் சுரப்பிகள் உள்ளன. அவை, பரோடிட் சுரப்பி, சப்மேன்டிபுலார் சுரப்பி, சப்லிங்குவல் சுரப்பி எனப்படு கின்றன.
உணவைப் பார்த்தவுடன், உணவை நினைத்தவுடன், உணவின் வாசனையை நுகர்ந்தவுடன் உமிழ்ந்íர் அதிகமாகச் சுரக்க ஆரம்பிக்கிறது. உமிழ்நீரில் மியூக்கஸ், புரோட்டீன், தாது உப்புகள் மற்றும் அமிலேஸ் என்ற என்சைம் ஆகியவை இருக்கின்றன. இவை எல்லாம் சேர்ந்துதான் செரிமானத்துக்கு உதவுகின்றன.
நாக்கில் உள்ள சுவை நரம்புகள், நாக்கில் வந்து தொடும் உணவானது இனிப்பா, புளிப்பா, உப்பா, துவர்ப்பா என்பதைக் கண்டுபிடித்து அதற்கு தேவையான சரியான என்சைம்களை சுரக்கச் செய்கின்றன.
* வெற்றிலை, பாக்கு, புகையிலை போன்றவற்றைத் தொடர்ந்து உபயோகிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு உமிழ்நீர்ச் சுரப்பிகளில் அடைப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால்தான் இப்பழக்கம் உள்ளவர்களுக்கு உமிழ்நீர் சரிவரச் சுரக்காமல் அடிக்கடி தொண்டை காய்ந்து போய்விடுகிறது. அதேபோல பற்களை நன்கு பராமரிக்காவிட்டாலும் உணவை முழுமையாக அரைத்து விழுங்க முடியாது.
சாப்பிடுங்கள், நன்றாகச் சாப்பிடுங்கள். ஆனால் அடிப்படையான விஷயங்களை மறக்காதீர்கள். உணவு ஜீரணம் ஆகும் வேலை வாயிலேயே தொடங்கிவிடுகிறது என்பதை எப்போதும் நினைவில் நிறுத்துங்கள்.

நிஜ பக்தி செலுத்துங்கள்!-செப்., 13 – அதிபத்தர் குருபூஜை

"டிவி’, சினிமா, போதை வகைகள், பீரோ நிறைய உடைகள், தேவைக்கு மேல் நகை… இப்படி ஆடம்பரத்திற்காக, மக்கள் ஏராளமாக செலவிடுகின்றனர். ஆனால், கோவிலுக்கு போனால், சிறிதளவாவது காணிக்கை செலுத்துவோமே என எண்ணுவதில்லை. ஏன்… சிலர், வீடுகளில் உண்டியலில் காணிக்கைக்காக என சேர்த்த பிறகு கூட, அவசரத்தேவை என்றால் உடைத்து விடுகின்றனர். கோவில் நிலங்களை குத்தகை எடுத்தவர்கள், கொஞ்சம் கூட நன்றி இல்லாமல், ஆண்டவனுக்குரிய பங்கை செலுத்துவதில்லை.
ஆனால், அந்தக் கால பக்தி எப்படி இருந்தது தெரியுமா! அதிபத்தர் என்ற சிவபக்தரின் கதையைக் கேளுங்கள்…
அக்காலத்தில், நெய்தல் எனப்படும் கடல்சார்ந்த நிலத்தில் வசிப்பவர்களை, "நுளையர்’ என்று அழைத்தனர். இந்த நுளையர் (மீனவர்) குலத்தில் அவதரித்தவர் தான் அதிபத்தர். இவருக்கு ஏராளமான நாவாய்கள் (மீன்பிடி மரக்கலம்) உண்டு. அவற்றின் மூலம், ஏராளமான மீன்கள் கிடைத்தன. மிகுந்த செல்வச் செழிப்புடன் வாழ்ந்தார் அதிபத்தர்.
பெரிய முதலாளியாக இருந்தாலும், அதிபத்தரும் ஒருநாள் கூட உழைப்பைக் கைவிட்டதில்லை. அவரும் ஒரு மரக்கலத்தில் மீன்பிடிக்க போய் விடுவார். வலையில் சிக்கும் முதல் மீனை, மீண்டும் கடலுக்குள்ளேயே விட்டு, "சிவபெருமானுக்கு அர்ப்பணம்’ என்பார்.
இறைவனுக்கு, நாம் என்ன காணிக்கை கொடுக்கிறோம் என்பது முக்கியமல்ல. கண்ணப்பநாயனார், சிவனுக்கு இறைச்சியை அளித்தார். வாயில் கொண்டு வந்த தண்ணீரை, லிங்கத்தின் மேல் உமிழ்ந்து, அபிஷேகம் செய்தார். இறைவன் அந்தப் பொருட் களின் சுத்தத்தை விட, அதில் புதைந்து கிடந்த அன்பைத்தான் பார்த்தார். அதுபோல், அவர், தனக்கு பக்தன் மீனைத் தினமும் காணிக்கை யாக்குகிறானே என்பதைப் பார்க்கவில்லை. அதில் புதைந்து கிடந்த பக்திப் பெருக்கை ஏற்றுக் கொண்டார்.
எவர் ஒருவர் கடவுளை அதிகமாக நேசிக்கிறாரோ, அவரைச் சோதிப்பது ஆண்டவனுக்கு கைவந்த கலை. அதிபத்தரின் பக்தியை, உலகறியச் செய்வதற்காக, அவரையும் சோதிக்க முற்பட்டார் சிவன். அதிபத்தர் சார்பில் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு, அதிக மீன்கள் கிடைக்கவிடாமல் செய்தார். அதிபத்தருக்கோ தினமும் ஒரே ஒரு மீன் தான் கிடைத்தது. வழக்கப்படி, அதை கடலிலே, சிவனுக்கு காணிக்கையாக்கி விட்டு, வெறுங்கையுடன் வீடு திரும்புவார். தொழில் சரிவால், வீட்டில் பொருளாதாரமும் பாதிக்கப்பட்டது.
இருந்தாலும், நம்பிக்கையுடன், "சிவாயநம’ என்னும் நாமத்தை உச்சரித்தபடியே, கடலுக்கு தினமும் சென்றார் அதிபத்தர். ஒருநாள், ஒரு தங்கமீன், நவரத்தின செதில்களுடன் வலையில் சிக்கியது. சக மீனவர்கள், "ஐயா! இத்தனை நாள் தொழில் சரிவும், இந்த ஒரே மீனில் சரியாகி விட்டது. இதை விற்றால், நீர் தான் இவ்வூரிலேயே செல்வச் சீமான்…’ என்றனர்.
அதிபத்தரோ அவர்களின் வார்த்தையை பொருட்படுத்தவே இல்லை. "இன்று எனக்கு இறைவன் அளித்தது இந்த ஒரு மீனைத்தான்! வழக்கப்படி அது அவனுக்கே சொந்தம்…’ எனச்சொல்லி, கடலில் விட்டு விட்டார். "இப்படியும் பக்திப் பைத்தியமான மனிதர் இருக்கிறாரே’ என எல்லாரும் ஆச்சரியப்பட்ட வேளையில், சிவபார்வதி வானில் தோன்றினர்.
"அதிபத்தரே… உம் பக்தியை உலகறியச் செய்யவே, இவ்வாறு நாடகம் நிகழ்த்தினோம். நீர் இப்பூமியில் செல்வச்செழிப்புடன் வாழ்ந்து, சிவலோகப் பதவி அடைவீர்…’ என வாழ்த்தினர். அதிபத்தரின் வாழ்வில் இருந்து, இறைவன் சோதிப்பான், ஆனால், கைவிட மாட்டான் என்பதையும், யார் ஒருவர் நம்புகிறாரோ, அவரே நிஜமான பக்தர் என்ற உண்மையையும் உணர்ந்து கொள்கிறோம்.
ஆவணி ஆயில்ய நட்சத்திரத்தில், அதிபத்தரின் குருபூஜை நடக்கும். அன்று சிவாலயங்களில், நாயன்மார் சன்னிதியில் இருக்கும் அதிபத்தரை தரிசித்து, அவரைப் போலவே நிஜபக்தி வேண்டுமென பிரார்த்தியுங்கள். கோவில்களுக்கு குத்தகை பாக்கியை உடனே செலுத்துங்கள். காணிக்கையை வாரி வழங்கி, நம் கலைச் சிற்பங்களைப் பாதுகாக்க உறுதியெடுங்கள்.