`கங்கா ஸ்நானம்’ யாருடைய பாவத்தை போக்கும்?

 

கங்கையில் நீராடினால் கடின பாவமும் கரைந்தோடும் என்பது நம்பிக்கை. ஆனால் அந்த கங்கை நீராடல் என்ற புனிதமான செயலை எப்படி செய்ய வேண்டும்? கங்கைக்கு சென்று நீராடினால் நாம் இதுவரை செய்த அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்று பலரும் நினைக்கிறார்கள். அவர்களின் நினைப்பு உண்மைதான். ஆனால் அதன்பிறகும் பலரின் பாவங்கள் நீங்குவதில்லையே அது ஏன்?.
சிவபெருமானும், பார்வதியும், ஒரு முறை ஹரித்துவார் நகரை வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது ஆயிரக் கணக்கான மக்கள், கங்கை நதியில் `ஸ்நானம்’ செய்து திரும்பிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்ததும் பார்வதிதேவி, சிவபெருமானை பார்த்து கேட்டார். `சுவாமி! கங்கையில் நீராடினால் அனைத்து பாவங்களும் நீங்கி விடும் என்கிறார்கள். ஆனாலும் இங்கு வந்து நீராடும் பக்தர்களின் பாவங்கள் நீங்கியது போன்றே தெரியவில்லையே? அதற்கான காரணம் என்ன?’ என்றார்.

IND02141B

அதற்கு சிவபெருமான், `கங்கையில் நீராடினால் தானே பாவம் நீங்கும். இவர்கள் யாரும் ஸ்நானம் செய்யவில்லை. மாறாக, கங்கையில் தங்கள் உடலை நனைத்துக் கொண்டுதான் வருகிறார்கள்’ என்று கூறினார்.
சிவனின் பேச்சால் வெகுவாக குழம்பி போனார் பார்வதிதேவி. ஆகையால் அந்த பேச்சின் அர்த்தம் புரியாமல், `என்ன சுவாமி சொல்கிறீர்கள்! உடலை நனைத்துக் கொள்வது என்பது நீராடுவது தானே?’ என்று கேட்டார்.
`உனக்கு சரியாக விளங்க வில்லை தேவி. நாளை, நான் நடத்தும் விளையாட்டை பார்த்து நீயே புரிந்து கொள்வாய்’ என்றார்
சிவபெருமான்.அன்று இரவு பலத்த மழை பெய்தது. இதனால் கங்கைக்கு செல்லும் பாதை சேரும், சகதியுமாக காணப்பட்டது. மேலும் அந்த வழியில் ஒரு பெரிய பள்ளமும் இருந்தது. மறுநாள் காலை, சிவபெருமான் ஒரு முதியவர் வேடம் பூண்டு அந்த பள்ளத்தில் விழுந்து வெளியேற முடியாமல் தவிப்பது போல் பாவனை செய்தார். பார்வதி தேவியும், மூதாட்டி வேடத்தில் பள்ளத்தின் அருகில் நின்று `ஐயோ! என்னவர் குழியில் விழுந்து விட்டாரே! யாராவது கைகொடுத்து இவரை தூக்கி விடுங்களேன்?’ என்று பொய்யாக பரிதவித்து கொண்டிருந்தார்.
கங்கையில் மூழ்கி விட்டு வந்தவர்களில் பலர், இப்போதுதான் குளித்து விட்டு வருகிறோம். இவரை காப்பாற்றி, சேற்றை பூசிக் கொள்ள வேண்டுமா? என்ற எண்ணத்தில் சென்று கொண்டிருந்தனர். ஒரு சிலர் காப்பற்ற முன்வந்தனர். அவர்களிடம் மூதாட்டி உருவில் இருந்த பார்வதி, `என் கணவர் எந்த பாவமும் அறியாதவர். ஆகையால் பாவம் அற்றவர்கள் தாம் இவரை தொட வேண்டும். பாவம் செய்தவர் யாரேனும் தொட்டால் அவர்கள் அக்கணமே சாம்பலாகி விடுவர்’ என்று ஒரு குண்டையும் தூக்கிப் போட்டார்.
`அப்படியானால் நான் இவரைத் தொட லாயக்கில்லை’ என்றபடி அனைவரும் சென்று விட்டனர். கங்கையில் நீராடியபடி சென்ற ஒருவர் கூட அந்த முதியவரை தூக்கி விட முன்வரவில்லை. கடைசியில் ஒரு வாலிபன் முன்வந்தான். அவனிடமும் பார்வதி, தன் கணவரை பாவம் செய்தவர்கள் தொட்டால் பஸ்பமாகி விடுவார்கள் என்றார்.
அதற்கு அந்த வாலிபன், `நான் பாவம் அற்றவன் என்பதில் என்ன சந்தேகம். இப்போது தானே கங்கை நதியில் நீராடி, எனது பாவங்களை நீக்கி விட்டு வருகிறேன். ஆகவே நான் பஸ்பமாக மாட்டேன்’ என்று கூறியதுடன், அந்த முதியவரையும் தூக்கி விட்டான். அப்போது அவனுக்கு சிவபெருமானும், பார்வதியும் காட்சியளித்து அருளாசி வழங்கினர்.
பின்னர் பார்வதியை நோக்கி, `இப்போது உனக்கு புரிந்திருக்கும் தேவி. நம்பிக்கையுடன், கங்கையில் நீராடும் போது தான் ஒருவனின் பாவங்கள் விலகும்’ என்றார் சிவபெருமான்.

One response

  1. Nambikai than vaalkai…… adai nangu unarnthor matumae, maru pirapu illa nilai petru paavam tholaipar ippiraviyil……..
    Regards
    K.Sureshkumar – Chennai – India

%d bloggers like this: