Daily Archives: செப்ரெம்பர் 17th, 2012

பரோட்டா சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்?

கொத்து, வீச்சு, சில்லி, ஆலு, கைமா, நெய், முட்டை… தமிழகத்தில் ரவுடி களை விட அதிக அடைமொழிகள் பரோட்டாக்களுக்குத்தான் உண்டு. இழை இழையாகப் பிரிந்து வரும் நேர்த்தியோ, அல்லது குருமாவுடன் கூட்டணி சேரும் பக்குவமோ… ஏதோ ஒன்றால் இது சாப்பாட்டுப் பிரியர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. விசிறி அடித்துத் தேய்க்கிறபோதே எச்சில் ஊற வைக்கிற இந்த பரோட்டாக்கள் சர்க்கரை நோய்க்குக் காரணமாகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!
பரோட்டா என்ன அத்தனை ஆபத்தான உணவா?’ என்றால், கொஞ்சம் தயங்கினாலும் பின்பு ஆமோதிக்கவே செய்கிறார்கள் நிபுணர்கள். ‘‘பொதுவாவே நார்ச்சத்து இல்லாத எந்த உணவுப் பொருளும் உடம்புக்கு நல்லதில்ல. உணவுல இருக்கற நார்ச்சத்துதான் அதைச் சரியான நேரத்துல செரிக்கச் செய்யுது. செரிமானம் கரெக்டா நடந்தாதான் உடம்புக்கு எல்லா சத்துகளும் முறையா கிடைக்கும். உடலின் இயக்கமும் இயல்பா இருக்கும். கோதுமையில இருந்து நார்ச்சத்தையெல்லாம் பிரிச்ச பிறகு கிடைக்கற மைதாவுலதான் பரோட்டா தயாரிக்கப்படுது. ஆக, பரோட்டா சாப்பிட்டா செரிக்க லேட் ஆகும்ங்கிறது நிஜம். அதனால அடிக்கடி பரோட்டா சாப்பிடறதைக் கூடுமானவரை தவிர்க்கலாம்!’’ என்றார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.
‘செரிமானப் பிரச்னை இருக்கட்டும். நேரடியாகவே சர்க்கரை நோய்க்கு பரோட்டாக்கள் காரணமாகுதுங்கிறதை மக்கள் புரிஞ்சுக்கணும்’ என்று பரோட்டாவைப் புரட்டிப் போட்டிருப்பது ‘கேரளா கிளப் ஆஃப் நியூட்ரிஷனிஸ்ட்’ என்கிற அமைப்பு. ஆய்வு முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருப்பது இதுதான்…
‘‘மையாக அரைக்கப்பட்ட கோதுமையில், கடைசியாக மிஞ்சுவது பழுப்பு கலந்த மஞ்சள் நிற மாவு. இந்த மாவுடன் பென்சாயில் பெராக்ஸைடு என்னும் வேதிப்பொருள் சேர்க்கும்போது அது பளிச்சென வெள்ளை நிறமாகிறது. தொடர்ந்து ‘அலெக்ஸான்’ என்னும் இன்னொரு வேதிப்பொருள் கலந்து மாவை மிருதுவாக்க, அது மைதாவாகிறது. மேற்சொன்ன இரண்டு வேதிப்பொருட்களுமே நேரடியாக சர்க்கரை நோயை வரவழைக்கக் கூடியவை. பென்சாயில் பெராக்ஸைடு ‘ஹேர் டை’யில் பயன்படுத்தப்படுகிற ரசாயனப் பொருள். மாவிலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து இதை எடுத்துக் கொள்ளும்போது உடலில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. ‘அலெக்ஸான்’ என்பது இன்னும் மோசம். சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சிகளில், சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைக்கக் கொடுக்கப்படுபவை இவை!’’
இந்த எச்சரிக்கை கண்ட மறுநாள் முதலே கேரளாவில் பரோட்டா குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கி விட்டன சில நுகர்வோர் நல அமைப்புகள். தமிழ்நாட்டில் இந்த விஷயம் அவ்வளவாகத் தெரியவில்லை. சென்னையின் பிரபல நீரிழிவு மருத்துவர் விஜய் விஸ்வநாதனிடம் இது குறித்துப் பேசினோம்.
‘‘சர்க்கரை நோய் வர்றதுக்கு முன்னாலயும் பின்னாலயும் முக்கிய காரணியா இருக்கறது உணவுப் பழக்கம்தான். சரிவிகித உணவை எடுத்துக்கறது ஒண்ணுதான் இதுல இருந்து தப்பிக்க ஒரே வழி. சிலர், ‘இதுதான் பிடிக்கும்’னு குறிப்பிட்ட ஒரு உணவுப் பதார்த்தத்தைச் சாப்பிட்டே பழக்கப்பட்டுடறாங்க. அதுதான் தப்பு. ஒரே பொருளை திரும்பத் திரும்ப சாப்பிடறப்ப, அதுல அதிகமா இருக்குற சத்துக்கள் மட்டுமே உடல்லயும் அதிகமாச் சேருது. எல்லாப் பிரச்னைகளும் அங்க இருந்தே தொடங்குது.
எல்லா உணவுப் பொருட்களுமே சில பல வேதி நிகழ்வுகளைக் கடந்துதான் தயாராகுது. மைதாவுல கலக்கப்படுற பொருட்கள் பத்தி உறுதியா தெரியாம அதைப் பத்தி நாம கருத்து சொல்ல முடியாது. ஆனா, சில வேதிப்பொருட்கள் உடல்ல சேர்றப்ப ரத்தத்துல சர்க்கரையோட அளவு பாதிக்கப்படுதுங்கறது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதுதான். தவிர, பரோட்டாவுல ஆயில், கலோரி அதிகமா இருக்கறதால உடல் வெயிட் போடறதையும் தடுக்க முடியாது. அதுவே சர்க்கரை நோய்க்குக் காரணமாவும் அமையலாம்’’ என்றார் விஸ்வநாதன்.
மத்தியான பரோட்டாக் கடை ஒன்றில் மாவு பிசைந்து கொண்டிருந்த மாஸ்டர் ஒருவரிடம் இதையெல்லாம் நாம் விளக்கிச் சொல்ல, ‘‘இது ஒழைப்பாளிங்க சாப்புடுறது சார். ஒடம்புக்கு ஒண்ணும் வராது. ரெண்டு பரோட்டா சாப்பிட்டுப் பாருங்க… அப்புறம் பேசுங்க’’ என்று நம்மை ஆஃப் செய்தார்.
மைதா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பேசியபோது, ‘‘மைதா மாவு என்னமோ முந்தா நேத்து வந்து இறங்கின மாதிரி பேசுறீங்க… பிரிட்டிஷ் காலத்துல இருந்து இதுலதான் கேக், பிஸ்கட் செய்யிறாங்க. சும்மா எதையாச்சும் கிளப்புறவங் களைப் பத்தியெல்லாம் நாங்க கவலைப்படலை’’ என்று முடித்துக் கொண்டார்கள். இப்படி அசால்ட்டா நம்மால இருக்க முடியலையே! – அய்யனார் ராஜன்
வீட்டு பரோட்டா ஓகே!
‘‘பரோட்டா மட்டுமில்லை… விரும்புகிற எந்த உணவையும் சாப்பிடலாம். ஆனால் அளவும் சுகாதாரமும்தான் முக்கியம்’’ என்கிறார் எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின் உணவியல் மருத்துவர் ஷீலா பால். ‘‘பரோட்டா சாப்பிட்டாலே சுகர் வந்திடும்னு நினைக்க வேண்டியதில்ல. அடிக்கடி, அளவுக்கதிகமா எடுத்துக்கறப்பதான் அப்படி ஆகும். எப்பவாவது சாப்பிடறதுக்கு பயப்பட வேண்டியதில்ல. ஆனா ஓட்டல்கள்ல சாப்பிடறப்ப மசாலா, எண்ணெய் அதிகமா இருக்க வாய்ப்பிருக்கு. அதனால வீட்டுலயே பண்ணிச் சாப்பிடறது நல்லது. ஆனா, கண்டிப்பா ராத்திரி வேளையில வேண்டாம்’’ என்கிறார் அவர்.

நன்றி-தினகரன்

தடுப்பூசியால் தொற்றிலிருந்து தப்பிக்கலாம்!

வைரசால் கடுமையான கல்லீரல் வீக்கம் கொண்ட நோயாளிகளில், 90 சதவீதம் பேர் பின்விளைவுகள் ஏதுமின்றி குணமடைகின்றனர். 3 – 6 சதவீதம் நோயாளிகளுக்கு, நாட்பட்ட கல்லீரல் வீக்கம், கல்லீரல் அரிப்பு, கல்லீரல் புற்று ஏற்படுகின்றன.
உலக அளவில், 30 லட்சம் மக்கள், "ஹெப்படைடிஸ் – ஏ’ தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். ஆண்டிற்கு, 15 லட்சம் மக்கள், "ஹெப்படைடிஸ் – பி’ தொற்று நோய்க்கு ஆளாகின்றனர். இதற்கு காரணம், கடுமையான வைரஸ் தொற்று. பின், நாட்பட்ட கல்லீரல் நோய் உண்டாகி, கல்லீரல் அரிப்பாக மாறுகிறது அல்லது கல்லீரல் புற்று நோயாகிறது. இந்த இரண்டு தொற்று நோய்க்கும், தடுப்பு மருந்து உண்டு.
அதீதமான ஈரல் அழற்சியும், அதிகப்படியான ஈரல் திசுக்களின் அழிவும், கீழ்க்காணும் காரணங்களால் ஏற்படுகின்றன.
* வைரஸ் கிருமிகளின் தாக்கம் (வைரஸ் எ, பி, சி, இ, எப்ஸ்டீன் வைரஸ்)
* வைரஸ் அல்லாத கிருமிகளின் தாக்கம் (டெக்சோ பிளாஸ்மா, லெப்டோஸ் பைரா)
* சில மருந்துகள்
* மது
* நஞ்சுகள்
"ஹெப்படைடிஸ் – ஏ’ என்றால் என்ன?
உலகிலேயே அதிகமாக காணப்படும் நோய், "ஹெப்படைடிஸ் – ஏ’ எனப்படும் வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கம் ஆகும். அதிகமாக பரவும் இவ்வைரஸ் கிருமி, தொற்றும் நோய். பலதரப்பட்ட நோய் நிலைகளை தாண்டி, மருத்துவமனை சிகிச்சை அல்லது சில நேரங்களில் இறப்பிற்கும் கூட வழி வகுக்கிறது.
"ஹெப்படைடிஸ் – ஏ’ பரவுவது எப்படி?
* மலக்கழிவுகளால் ஏற்படும் சாக்கடை நீர்களின் மூலம், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது.
* பழச்சாறு, பால் பொருட்கள், இனிப்பு பண்டங்கள், குளிரூட்டப்பட்ட பானங்கள் இவைகள் மூலம் பரவுவதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது.
* வெளி உணவகங்களின் மூலம், உணவு உண்பதாலும், அசுத்தமற்ற முறையில் உணவு தயாரிப்பதன் மூலமும் தொற்று பரவும்.
ஏன், "ஹெப்படைடிஸ் – ஏ’ அதிகமாக தொற்றி பரவுகிறது?
"ஹெப்படைடிஸ் – ஏ’ வைரஸ் இறுதிவரை சூழலை எதிர்த்து, நீண்ட காலம் வாழும் திறன் கொண்டது. இது கடல் நீரில் வார கணக்கில் உயிர்வாழக் கூடியது. உறைய வைப்பதன் மூலம் அழிக்கப்படுவதில்லை, நீரின் மூலம் விரைவாக பரவக்கூடியது.
"ஹெப்படைடிஸ் – ஏ’ உங்களை தாக்கினால் என்ன நிகழும்? வைரஸ் தொற்றுக்குள்ளான நேரத்தில், அந்நபர் எவ்வித அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம். பொதுவாக எதிர் கொள்ளும் அறிகுறிகள், காய்ச்சல், சோர்வு, பசியின்மை, குமட்டல், வயிறு உபாதைகள், சிறுநீர் கருத்த நிறத்தில் இருத்தல், கண்கள் மஞ்சளாதல்.
நோயாளி மேற்கண்ட அறிகுறிகளில், அனைத்தையுமோ அல்லது சிலவற்றையோ அனுபவிக்கலாம். வயதைப் பொருத்தும், கருவுற்ற காலங்களிலும் நோயின் தீவிரம் அதிகரிக்கும். அறிகுறிகள், மூன்று வாரத்திலிருந்து, மூன்று மாத கால அளவிற்குத் தெரியலாம்.
"ஹெப்படைடிஸ் – ஏ’ உங்களுக்கு உள்ளது என்பதை எப்படி அறிவீர்கள்?
ரத்த பரிசோதனையில், ஐ.ஜி.எம்., ஆன்டிபாடி அதிகரித்திருக்கும்.
"ஹெப்படைடிஸ் – ஏ’ வைரஸ்க்கான அதிக அபாயம் யாருக்குள்ளது?
வளர்ந்த நாடுகளிலிருந்து, வளரும் நாடுகளுக்கு பயணம் செல்லும் நபர்கள், ஓரின சேர்க்கை, போதை மருத்திற்கு அடிமையானவர்கள், குறைந்த நோய் எதிர்ப்புத் திறன் உள்ளவர்கள், சாக்கடை சுத்தி கரிப்பு பணிபுரிபவர்கள், ஹெப்படைடிஸ் ஏ-க்கான தடுப்பூசி செலுத்தப்படாதவர்கள்.
"ஹெப்படைடிஸ் – ஏ’ வை ஒருவர் எவ்வாறு தடுக்க முடியும்?
கைகளைச் சுத்தமாகக் கழுவவும், சுத்தமற்ற நீரையும், உணவையும் தவிர்க்கவும்.
"ஹெப்படைடிஸ் – பி’ என்றால் என்ன?
"ஹெப்படைடிஸ் – பி’ என அழைக்கப்படும் வைரசால் உண்டாகும் தொற்று இது. இது, கடுமையான கல்லீரல் வீக்கம், நாட்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் செயலிழப்பு, கல்லீரல் அரிப்பு, கல்லீரல் புற்று ஆகியவற்றை உண்டாக்கும். வைரசால் உண்டாகும் கல்லீரல் வீக்கத்தில், இது மிகவும் அபாயகரமானது.
"ஹெப்படைடிஸ் – பி’ பரவுவது எப்படி?
*மருத்துவ தொழில் சார்ந்தவர்களுக்கு, தொற்றுடைய நபரின் ரத்தம் அல்லது உடல் திரவங்களை (உமிழ்நீர், விந்து, யோனி சுரப்பு) தொடுவதன் மூலமும், ஊசி குத்திய காயத்தாலும் பரவுகிறது.
* நோய் பாதிக்கப்பட்டவரிடம் உடல் உறவு கொள்வதன் மூலம்.
* பிரசவத்திற்கு முன் தொப்புள் கொடி மூலம், தாயிடமிருந்து குழந்தைக்கு பரவுகிறது.
* போதை மருந்து பழக்கமுள்ளவர் (பாதுகாப்பற்ற முறையில் ஊசி பரிமாறி கொள்ளுதல் )
* மருத்தவமனைகளில் சரிவர கிருமி நீக்கம் செய்யப்படாத ஊசிகளை, மறுமுறை பயன்படுத்துவதன் மூலம், நோயாளிகளுக்கிடையில் பரவுகிறது.
"ஹெப்படைடிஸ் – பி’ தொற்று உருவாகும் அபாயம் அதிகமுள்ளவர்கள் யார்?
யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். ஆனால் அவர் பின்வரும் நபராக இருப்பின், அபாயம் அதிகமாகும்.
* ஹெப்படைடிஸ் – பி வைரஸ் தொற்றுடைய ஒருவருடன் உடலுறவு கொள்பவர்.
* ஒன்றுக்கு மேற்பட்ட துணையிடம் உடலுறவு கொள்பவர்.
* ஓரினச் சேர்க்கை கொள்பவர்.
* வாழ்நாள் முழுவதும், "ஹெப்படைடிஸ் – பி’ வைரஸ் தொற்றுடையவருடன் ஒரே வீட்டில் வசிப்பவர்.
* "ஹெப்படைடிஸ் – பி’ பொதுவாக உள்ள இடங்களுக்கு அடிக்கடி பயணிப்பவர்.
* மருத்துவ சம்பந்தமான மற்றும் ரத்த ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் பணியில் ஈடுபடுபவர்.
* போதை மருந்திற்கு அடிமையானவர்.
"ஹெப்படைடிஸ் – பி’ அறிகுறிகள் என்ன?
சில நேரங்களில், "ஹெப்படைடிஸ் – பி’ வைரஸ் தொற்றுடைய நபர், எவ்வித அறிகுறியும் இன்றி இருக்கலாம். அறிகுறிகள், "ஹெப்படைடிஸ் – ஏ’ வைரஸ் தொற்றில் உண்டாவதை போன்றதே. 10 சதவீதம், "ஹெப்படைடிஸ் – பி’ வைரஸ், நாட்பட்ட கல்லீரல் நோய், கல்லீரல் புற்றை உண்டாக்க கூடியது.
கல்லீரல் வீக்கத்தின் பின்விளைவுகள்
வைரசால் கடுமையான கல்லீரல் வீக்கம் கொண்ட நோயாளிகளில், 90 சதவீதம் பேர் பின்விளைவுகள் ஏதுமின்றி குணமடைகின்றனர். நீண்டகாலம் தொடருகையில், 3 – 6 சதவீதம் நோயாளிகளுக்கு, பின்வரும் பின் விளைவுகள் உண்டாகின்றன.
* நாட்பட்ட கல்லீரல் வீக்கம்
* கல்லீரல் அரிப்பு / இறுக்க நிலை
* கல்லீரல் புற்று
"ஹெப்படைடிஸ் – பி’ வைரஸ் தொற்றை எவ்வாறு கணிக்க முடியும்?
ஹெப்படைடிஸ் – பி நோயை கணிக்க, ரத்த பரிசோதனை தேவைப்படும். நோயானது கடுமையான அல்லது நாட்பட்ட நிலையில் உள்ளதா என்பதை அறிய, முழுரத்தப் பரிசோதனை அவசியம். மேலும், வைரசின் தீவிர நிலை, வைரசின் உட்பிரிவுகள் ஆகியவற்றையும் கண்டறிய முடியும்.
"ஹெப்படைடிஸ்’ வைரசை, ஒருவர் எவ்வாறு தடுக்க முடியும்?
ரத்தம் இருக்க வாய்ப்புடைய, தனிப்பட்ட முறையில் கையாளும் பொருட்களான சவரகத்தி, பல்துலக்கும் தூரிகை, துண்டு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள கூடாது. முடிதிருத்தம் செய்தல், பச்சைகுத்துதல், ஊசி போடுதல், இவைகள் செய்யும் முன் நோய் பரவும் அபாயத்தை தடுக்க வேண்டும். பாதுகாப்பான முறையில் உடலுறவு கொள்ளுதல், போதை மருந்துக்கு அடிமையாகாமல் தடுத்துக் கொள்ளுதல்."ஹெப்படைடிஸ் – பி’ தடுப்பூசி, மிக சக்தி வாய்ந்த காப்பு முறையாகும்.
தடுப்பூசி உங்களை காக்குமா?
"ஹெப்படைடிஸ் – ஏ’ தடுப்பூசி, உங்கள் உடலில், "ஆன்டிபாடி’யை உற்பத்தி செய்வதன் மூலம், உடலின் நோய் எதிர்ப்புதிறன் அதிகரிக்கிறது. அதனால் மிகவும் சக்தி வாய்ந்த தடுப்பு முறையாக, இது அமைகிறது.
குழந்தைகள், 18 வயது வரையுள்ள சிறுவர்கள், இதற்கு முன் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத நடுவயதினர், அதிக அபாயமுள்ள பிரிவினர் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
"ஹெப்படைடிஸ் – ஏ , பி’ தொற்றுக்களை விளையாட்டாக கருதி விட்டு விடாதீர்கள். அறியாமை நல்லதல்ல. உங்கள் குழந்தையின் ஆசையான உணவு கூட, "ஹெப்படைடிஸ் – ஏ’வை உண்டாக்கலாம். உங்கள் மருத்துவரை அணுகி தடுப்பூசி போட்டு, உங்களை "ஹெப்படைடிஸ்’ தொற்று நோயிலிருந்து காத்துக் கொள்ளுங்கள்.
பேராசிரியர் என். தினகரன்
வயிறு மற்றும் குடல் நோய் பிரிவு தலைவர்,
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

உடல்நலத்தைக் காட்டும் கண்கள்!

காதலை கண்கள் காட்டும் என்பார்கள். காதலை மட்டுமல்ல, உடல்நலக் குறைவையும் கண்கள் தெளிவாகக் கூறிவிடும்.
அதனால்தான் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவரிடம் சென்றால் அவர் முதலில் நமது கண்களைப் பரிசோதிக்கின்றார். ஆகவே நாமும் நமது கண்கள் எப்படி இருந்தால், என்ன பிரச்சினையாக இருக்கக்கூடும் என்று தெரிந்துகொள்வோம்…
மங்கலான பார்வை: பொதுவாக இந்தப் பிரச்சினை கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்களுக்கு ஏற்படும். கணினியில் உள்ள பிக்சல்களின் அமைப்பு சரியாக இல்லாவிட்டாலும் இந்த நிலை ஏற்படலாம். இது மட்டுமல்லாமல், சிலருக்குக் கண்களில் இருந்து கண்ணீரும் வரும்.

கண்களில் ஈரப்பசை குறையும்போது எரிச்சல் ஏற்படும். அதிகம் மங்கலான பார்வை இருந்தால் அது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம்.
சிவப்பு, எரிச்சல்: கண்கள் சிவப்பாகவும், எரிச்சலுடனும் இருந்தால் அது சைனஸ் மற்றும் சளியின் அறிகுறி. மேலும் சில நேரங்களில் ஒவ்வாமை காரணமாகவும், கண்களுக்குப் போடும் மேக்-அப் செட்டின் வேதிப்பொருட்கள் மூலமாகவும் இந்நிலை ஏற்படும்.
கண்களுக்கான மருந்துகளை தேவையில்லாமல் கண்களில் பயன்படுத்தினாலும் எரிச்சல், சிவப்பு ஏற்படக் கூடும்.
வெளிர்நிற கண்கள்:கண்கள் வெளிறிப் போயிருந்தால் உடம்பில் ரத்த சோகை முற்றியுள்ளது என்று பொருள். அதாவது உடலில் ஹீமோகுளோபின் அளவு மிகவும் குறைவாக இருப்பதால் கண்கள் வெளிறிப் போயிருக்கின்றன. இந்த நிலையில் கண்கள் இருந்தால் உடனே மருத்துவரை அணுக வேண்டும்.
மஞ்சள்நிற கண்கள்: உடலில் கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்த நாளங்கள் சரியாக இயங்காதபோது கண்கள் இந்த நிறத்தை அடைகின்றன. மேலும் கண்களில் இருக்கும் வெள்ளை நிறப் பகுதி மட்டும் நன்கு மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால் அவர்கள் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று பொருள்.
வீக்கமான கண்கள்: கண்கள் வீக்கத்துடன் காணப்படுவது, உடல் குறைபாட்டைக் காட்டுகிறது. குறிப்பாக, தைராய்டு பாதிப்புகளில் ஒன்றான ஹைப்பர் தைராய்டு நிலையாக இருக்கலாம்.
ஆகவே உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சில நேரங்களில் எந்த விதக் காரணமும் இன்றியும் கண்கள் வீக்கமாகக் காணப்படலாம். எப்படியிருந்தாலும், கண்கள் வீக்கத்துடன் காணப்படுகின்றன என்று யாராவது கூறினாலோ, அப்படி உங்களுக்குத் தோன்றினாலே உடனே மருத்துவரை நாடுவதே நலம்.
வறட்சியான கண்கள்: கண்கள் வறண்டு காணப்படுவது, உடலில் நோய் எதிர்ப்பு அமைப்பு பலவீனமடைந்துள்ளதைக் காட்டலாம். எனவே அம்மாதிரி வேளையில், ஆரோக்கியமான உணவுகளை உண்ண வேண்டும். நிறையத் தண்ணீர் பருக வேண்டும்.

COMBIN பார்முலா – எக்ஸெல் டிப்ஸ்

எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். அவசியம் எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாதல்லவா? இதோ இது குறித்துப் பார்க்கலாம்.
இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் கொண்டு எத்தனை வகையாக இணைக்கலாம் என்பதனை உடனே காட்டும். எடுத்துக் காட்டாக 26 எழுத்துக்கள் ஆங்கிலத்தில் உள்ளன. 10 எண்கள் உள்ளன. (0 முதல் 9 வரை) இவற்றைப் பயன்படுத்தி நான்கு கேரக்டர்கள் உள்ள இணைப்புகள் எத்தனை உருவாக்க முடியும்? நாம் பேப்பர் பேனா எடுத்துப் போட்டால் இன்று மட்டுமல்ல ஒரு வாரத்திற்கு மேல் ஆகலாம். எக்ஸெல் கண் சிமிட்டும் நேரத்தில் சொல்லிவிடும். அதற்கு இந்த பங்சன் உதவுகிறது.
இந்த பங்சன் செயல்பட பார்முலா பார்மட் கீழ்க்கண்டவாறு அமைகிறது =COMBIN (universe, sets). இதில் universe என்பது புதிதாக அமைக்கப்படுவதற்கான டேட்டா.
இங்கே 26 எழுத்துக்களும் பத்து எண்களுமாகும். sets என்பது ஒவ்வொரு இணப்பிலும் எத்தனை கேரக்டர் இருக்க வேண்டும் என்பதனைக் குறிக்கிறது. எனவே நாம் மேலே சொன்ன டேட்டாவிற்கு பார்முலா கீழ்க்கண்டவாறு அமைகிறது : =COMBIN(26+10,4) எத்தனை இணைப்பு இதில் உருவாகும் என்று அறிய பலர் ஆர்வமாக இருப்பீர்கள் இல்லையா? 58,905 இணைப்பு கேரக்டர்களை உருவாக்கலாம்.

பதில் இல்லாத கேள்வி

 

சிறு வயதில் குருகுல வாசத்தை விட்டு நான் வெளியிலே வந்த போது, கோழிக்குஞ்சு முட்டையில் இருந்து வெளிவந்தது போல் தான் இருந்தேன்.
`நான் யார்’ என்பதே எனக்கு தெரியாது. விபரம் தெரியாத நிலை; பக்குவமற்ற சூழ்நிலை.
காபி ஓட்டல்களையும், தியேட்டர்களையும் கூட ஆச்சரியமாகப் பார்க்கின்ற சூழ்நிலை.
குருகுலம், நல்ல பண்பாடுகளையும், பழக்க வழக்கங்களையும் கற்பித்தது என்றாலும், வெளி உலகத்தைக் காண விடாமல் வைத்திருந்தது.
ஆகவே, தெளிந்த இதயத்தோடும் உலக அனுபவம் அற்ற நிலையிலும் நான் வெளியே வந்தேன்.
வந்ததிலும் தவறில்லை; நான் வாழ்ந்ததிலும் தவறில்லை; ஆனால், ஒரு முக்கியமான கேள்விக்கு விடை காண முடியாமல் தவித்தேன்.
அந்தக் கேள்வி என்ன?
"நான் யார்?” என்பதே அது.
நான் யார்?
அண்ட சராசரங்கள் அனைத்துமே அதைத்தான் கேட்டுக் கொள்கின்றனவாம்!

மனிதன் அறிய வேண்டிய அறிவுகளில் எல்லாம் முக்கியமான அறிவு, தன்னை அறிதலே.
ஒவ்வொரு விலங்கும், ஓரளவுக்குத் தன்னை அறிகின்றது.
பருந்து பாய்ந்து வந்தால், கோழி ஆத்திரப்படுகின்றது.
நாயை கண்டதும், முயல் ஓடுகிறது.
புலியைக் கண்டதும், மான் ஓடுகிறது.
உயிரின் மீது உள்ள இந்த நாட்டம், ஓரளவுக்குத் தன்னைப் பற்றிய உணர்வே ஆகும்.
ஆனால், இந்த உணர்வு வேறு; தான் யார் என்று அறிந்து கொள்ளும் அறிவு வேறு.
தாயினாலும், தகப்பனாலும் நாம் இந்த பூமிக்கு வந்து விட்டோம். ஆனால், ஏன் வந்தோம்; நம் வருகைக்கான நோக்கம் என்ன என்பது எத்தனை பேருக்கு தெரியும்?
வந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று பல பேர் மடிந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் வரவு- செலவு பார்த்திருக்கிறார்கள்.
சிலர் காதலித்து, வெற்றி காண முடியாமல் மாண்டிருக்கிறார்கள்.
சிலர் மணம் முடித்து, மக்களைப் பெற்று அவதிப்பட்டு இறந்திருக்கிறார்கள்.
சிலர், `பதவி பதவி’ என்று அலைந்து செத்து இருக்கிறார்கள்.
சிலர், `உதவி உதவி’ என்று ஓடி, ஆடி உயிரை விட்டிருக்கிறார்கள்.
இவர்களிலே, `தான் யார்’
என்பதைக் கண்டு கொண்டு உலகிற்குச் சொல்லிவிட்டு, மறைந்த ஞானிகள் எத்தனை பேர்?
அவர்கள் பெரும் கூட்டமாக இல்லை; விரல் விட்டு எண்ணக் கூடியவர்களாகவே இருக்கிறார்கள்.

நான் யார்?
சினிமாப் பாட்டு எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
தொடர்கதை எழுதுகிறானே, அந்தக் கண்ணதாசன் தானா நான்?
மதுவிலும் சிற்றின்பத்திலும் மயங்கிக் கிடப்பவன் தானா நான்?
அரசியல் வாண வேடிக்கையில் அடிக்கடி பங்கு கொள்கிறவன் தானா நான்?
நல்லது கெட்டது பாராமல் நடக்கும், ஒரு முரட்டு மாடுதானா நான்?
இன்றைக்கு ஐம்பத்திரண்டு தீபாவளிகளைக் கொண்டாடி, அடுத்தது என்ன என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நான் யார்?
நான் ஏன் பிறந்தேன்?
நான் விரும்பிப் பிறக்கவில்லை என்றாலும், இதுவும் ஒரு நியாயமான கேள்விதான்.
இயற்கையின் நியதியில் சூரியனுக்கும், சந்திரனுக்கும், நட்சத்திரங்களுக்
கும் நோக்கம் இருக்கும்போது, என் பிறப்புக்கும் ஒரு நோக்கம் இருந்தாக வேண்டும்.
அது எனக்குப் புரியவில்லையே தவிர, ஏதோ ஒரு லட்சியத்துக்காகவே நான் சிருஷ்டிக்கப்பட்டு இருக்கிறேன் என்பது உண்மை.
ஒவ்வொரு ஜீவனும், ஒவ்வொரு லட்சியத்திற்காகவே படைக்கப்பட்டு இருக்கின்றன.
ஜீவனற்ற அஃறிணைப் பொருளும் அவ்வாறே.
தண்ணீர் தாகத்தைத் தீர்க்கவும், வயல்களை வளப்படுத்தவும், உணவுப் பொருள்களுக்கு உரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
அந்தத் தண்ணீரில் வாழும் மீன் அழுக்கைத் தின்று நீரைச் சுத்தப்படுத்தவும், மனிதனுக்கும், பறவைகளுக்கும் ஆகாரமாகவும் படைக்கப்பட்டு இருக்கிறது.
ஒரு காக்கையின் பிறப்புக்கு கூட ஒரு சிறிய காரணம் இருக்கிறது.
அப்படி என்றால், என் பிறப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டுமே?
காலையில் இட்லி, தோசை; மத்தியானம் சாப்பாடு; ராத்திரியில் மீண்டும் பலகாரம்; இதற்காகவா நான் படைக்கப்பட்டேன்?
தமிழில் எல்லாச் சொல்லுக்கும் பொருள் உண்டு என்று சூத்திரம் சொல்கிறது. அது போலவே எல்லா ஜீவனுக்கும் காரணம் உண்டு.
நான் முன்பே சொன்ன சனத்குமாரர்- நாரதர் கதை தான்.
எல்லாம் தெரிகிறது எனக்கு; என்னைத் தெரியவில்லை.
கண்ணாடியில் முகம் தெரிகிறது; மனம் தெரியவில்லை.
யோசித்துப் பார்த்தால் மனம் தெரிகிறது. ஆனால் அது ஏன் படைக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
ஒன்றைத் தொடர்ந்து ஒன்றாகப் பற்றிக் கொண்டே போனாலும் கூட, நான் படைக்கப்பட்டதன் மூலக் காரணத்தை என்னால் அறிந்து கொள்ள முடியவில்லை.
`இப்படித்தான் இருக்கும், இதற்காகத்தான் இருக்கும்’ என்று ஒரு காரணத்தை நானே வகுத்துக் கொண்டு, என்னை நானே அறிய முற்படுகிறேன்.

இந்த ஒரு ஆன்மா, ஒரு லட்சம் ஆன்மாக்களுக்காவது வழிகாட்ட வேண்டும் என்பதற்காகவே, நான் படைக்கப்பட்டு இருக்கிறேன்.
நன்மை- தீமை புரியாமல், நியாய அநியாயம் தெரியாமல் தடுமாறும் மானிட ஜாதிக்கு, ஒரு அரிக்கேன் விளக்கையாவது ஏற்றி நான் வழிகாட்டியாக வேண்டும்.
நீதி சொல்வதில், நான் வள்ளுவனாக முடியாது. ஏன்? இன்னொரு வள்ளுவன் பிறக்கவே முடியாது.
ஆனால், என் அனுபவம் சுட்டிக் காட்டுகிற நீதிகளில் வள்ளுவன் சொல்லாததும் இருக்கக்கூடும்.
தர்மோபதேசம் செய்வதில் நான் வடலூர் வள்ளலாராக முடியாது. ஏன், இன்னொரு வள்ளலார் இந்தத் தலைமுறையில் பிறக்கப் போவதும் கிடையாது.
ஆனால், என் உடலில் பட்ட காயங்களில் வள்ளலார் காணாத காட்சிகளும் இருக்கக்கூடும்.
நான் நீண்ட தூரப் பிரயாணி.
மலைச் சரிவுகளிலும் பயணம் செய்து இருக்கின்றேன். சமவெளிகளிலும் பயணம் செய்திருக்கின்றேன்.
நான் யார் என்பது தெரியாத பிரக்ஞையற்ற நிலையிலேயே, அனுபவங்களைச் சேகரித்து இருக்கிறேன்.
இந்த உலகத்தை ஓரளவு எனக்குத் தெரியும்.
நான் எழுத்தாளனாக இருக்கிறேன்; ஆகவே, வறுமையை அறிவேன்.
அரசியலில் இருந்திருக்கிறேன்; ஆகவே, அயோக்கியத்தனம் என்ன என்பது புரியும்.
கலைத்துறையில் இருந்திருக்கிறேன்; ஆகவே, ஏற்ற இறக்கங்களை அறிவேன்.
எப்படி எல்லாம் வாழக்கூடாதோ, அப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறேன்.
ஆகவே, இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக்கூடிய யோக்கியதை எனக்கு உண்டு.
முதன் முதலில் நான் நாத்திகனாக இருந்த காலங்களை எடுத்துக் கொள்கிறேன்.
இப்போது நான் நாத்திகன்.
`கடவுள் இல்லை’ என்று மிகவும் அழுத்தம் திருத்தமாக நாக்கு வலிக்கச் சொல்லும் ஒரு நாத்திகன்.
என் பின்னால் வாருங்கள்.