Daily Archives: செப்ரெம்பர் 18th, 2012

கழுத்தில் ஒளிந்திருக்கிறது இளமையின் ரகசியம்!

பெண்களின் வயது முதிர்ச்சியை முதலில் வெளிக்காட்டும் பகுதி கழுத்துதான்.
அழகான சங்கு கழுத்து பெறுவது ஒன்றும் சிரமமான காரியமல்ல. இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சில டிப்ஸ்களை கவனமாகப் பின்பற்றி வந்தாலே போதும்…
முகத்திற்கு மட்டுமே பேஷியல் செய்து பிரகாசிக்க செய்வதால், கழுத்து இன்னும் அதிகமாக அதன் நிறத்தை இழந்து, கறுப்புத் திரை போல காணப்படுகிறது. எனவே, முகத்தோடு கழுத்துக்கும் சேர்த்து, பேஷியல், ப்ளீச்சிங் செய்ய வேண்டும்.
முகத்தோடு சேர்த்து கழுத்தையும் அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலமும், தினமும் இரண்டு மூன்று முறை சன் ஸ்க்ரீன் லோஷன் மற்றும் ஆன்டிரிங்கிள்( சுருக்கம் நீக்கும்) க்ரீம் தடவுவதன் மூலமும் கழுத்தின் அழகை அதிகப்படுத்தலாம்.
இரட்டை நாடி இருப்பவர்கள், கீழே கொடுத்துள்ள உடற்பயிற்சியின் மூலம் அதை சரி செய்யலாம்.
நேராக உட்காரவும். பிறகு நாடியை மேலே உயர்த்தவும். உதடுகளை மூடிக்கொள்ளவும். கீழ் உதடு அசையாமல், மேல் உதட்டை மட்டும் அசைத்து சிரிக்கவும்.
தலையை ஒரு பக்கமாக சாய்க்கவும். உங்கள் கன்னத்திலும், கழுத்திலும் ஒருவிதமான அழுத்தம் ஏற்படுவதை நீங்கள் உணர்வீர்கள். மெதுவாக மீண்டும் பழைய நிலைக்கு வரவும். இப்படி, 30 தடவை தினமும் செய்யவும்.
கழுத்துப் பகுதியும், மூக்கின் இரு பக்கங்களும் கறுப்பாக உள்ளவர்கள், கோதுமை மாவு, பயற்றம் மாவு, ஓட்ஸ்மாவு ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து, அதில் எலுமிச்சைச் சாற்றை ஊற்றிக் கலந்து, கழுத்திலும், மூக்கின் பக்க வாட்டிலும் பூசி, 20 நிமிடங்களுக்கு பிறகு கழுவினால், கறுப்பு நீங்கி விடும்.

எதைப் பொறுத்து கடன் கொடுப்பார்கள்?

 

`நானும் பாங்க் பாங்கா ஏறி இறங்குறேன்… யாரும் கடன் கொடுக்க மாட்டேங்கிறாங்க…’ என்று சிலர் புலம்புவார்கள்.
அவர்கள், `கடன் நிலை தகவல் அறிக்கை’யின் (`கிரெடிட் இன்பர்மேஷன் ரிப்போர்ட்’- சுருக்கமாக `சி.ஐ.ஆர்.’) அடிப்படையில்தான் ஒருவருக்குக் கடன் கொடுப்பதா, இல்லையா என்று வங்கிகள் தீர்மானிக்கின்றன என்பதை அறியாதவர்கள்.
வங்கிகள், நிதி நிறுவனங்கள் சார்பில் `சி.ஐ.ஆர்.’கள் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கடன் கொடுப்பது குறித்து முடிவெடுப்பதில் `சி.ஐ.ஆர்.’ தான் வங்கிகளுக்கு வேதம். ஆனால் இதன் முக்கியத்துவம் குறித்து மக்கள் மிகச் சமீபமாகத்தான் உணர ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கேற்பத் தங்கள் வங்கி நிலை, நிதித் தொடர்புகளைப் பராமரிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
கடன் நிலை தகவல் அறிக்கையைப் புரிந்துகொள்வதன் மூலம், எந்த நேரத்தில் கடனுக்கு விண்ணப்பிப்பது, கடன் ஒப்புதலுக்கான வாய்ப்பை எப்படி அதிகரித்துக்கொள்வது எனத் தெரிந்துகொள்ளலாம். எனவே, கடன் கொடுப்பவர்கள் இந்த அறிக்கையில் முக்கியமாக எவற்றைக் கவனிக்கிறார்கள் என்று பார்க்கலாம்…
தவணை செலுத்திய பட்டியல் (பேமன்ட் ஹிஸ்டரி)
உங்களுக்கான சி.ஐ.ஆரில் கணக்குப் பிரிவில் இது இடம்பெறும். இதுவரை செலுத்தியிருக்கும் தவணைத் தொகைகள், மாத, வருட விவரங்கள் இங்கு இடம்பெற்றிருக்கும்.
கடைசி மாதத்தில் தவணைத் தொகை எத்தனை நாள் தாமதத்தில் (அப்படி இருந்தால்) செலுத்தப்பட்டிருக்கிறது என்ற விவரமும் இருக்கும். அதுகுறித்து, `000′ தவிர வேறு ஏதாவது குறிப்பிட்டிருந்தால் கடன் கொடுக்கும் நிறுவனம் `நெகட்டிவாக’ கருதும். 3 மாதங்கள் வரை இந்தப் பட்டியல் இருக்கும். சமீபகால மாதங்கள் முதலிலும், பழைய மாதங்கள் அதைத் தொடர்ந்து வரிசையாகவும் இடம்பெற்றிருக்கும்.
நடப்பு கடன் இருப்பு
சி.ஐ.ஆர். கணக்குப் பிரிவில் காணப்படும் இன்னொரு விவரம், நீங்கள் பெற்றுள்ள பல்வேறு கடன்களில் செலுத்த வேண்டிய தொகைகளைச் சுட்டிக் காட்டும். அதன் மூலம் உங்கள் கடன் சுமையை உணர முடியும். ஒவ்வொரு கடனிலும் செலுத்த வேண்டிய தொகையைக் கூட்டுவதன் மூலம், தற்போது உங்களால் எவ்வளவு தவணை செலுத்த முடியும் என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கணக்கிடுவார்கள். அப்போது அவர்கள் உங்களின் நடப்பு வருமானத்தையும் கணக்கில்கொள்வார்கள். இயல்பாகவே, நீங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையின் அளவு குறையும்போது, புதிய கடனுக்கான ஒப்புதல் கிடைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
புதிய கடன் வசதிகள்
உங்களுக்குச் சமீபமாக புதிய கிளைக் கடன் வசதிகள் அளிக்கப்பட்டிருந்தால் மாதாந்திர தவணைத் தொகையும் அதிகரித்திருக்கும். அப்படி ஏதாவது கிளைக் கடன் அளிக்கப்பட்டிருக்கிறதா என்று புதிதாகக் கடன் கொடுப்பவர்கள் கவனிப்பார்கள். எனவே நீங்கள் பெற்ற ஒரு புதிய கடன் வசதி, மேலும் ஒரு கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பாதிப்பை ஏற்படுத்தும்.
விண்ணப்பித்த விவரங்கள்
நீங்கள் சமீபமாக பல கடன்களுக்கு விண்ணப்பித்திருந்தால், புதிதாகக் கடன் பெறும் வாய்ப்புக் குறையும். உங்களின் அந்தப் பழக்கம், நீங்கள் `கடன் பசி’யில் இருக்கிறீர்கள் என்பதையும், கடன் பெற வேண்டிய தலைபோகிற அவசரத்தில் நீங்கள் உள்ளதையும் காட்டிக் கொடுத்துவிடும்.
கடன் கொடுப்போர், உங்கள் கடன் விண்ணப்பத்தை அலசும்போது ரொம்பக் கவனமாக இருப்பார்கள். எனவே, நீங்கள் ஒன்றிரண்டு வருடங்களில் வீட்டுக் கடன் அல்லது வேறு கடன் பெறத் திட்டமிட்டிருக்கிறீர்கள் என்றால், வருடத்துக்கு மூன்று அல்லது நான்கு முறை உங்கள் சி.ஐ.ஆர். நிலையைப் பரிசோதித்துக் கொள்வது நல்லது.
கன்னாபின்னாவென்று கடன் பெறும் வழக்கத்தை வளர்த்துக்கொள்ளாமல் இருப்பது ரொம்பவே நல்லது.

முற்றுப்புள்ளிக்கு முன்

இரண்டு வாக்கியங்களுக்கிடையே இரண்டு ஸ்பேஸ் இடைவெளி அமைப்பது எப்போதும் வழக்கமாகும். இதனை வேர்ட் புரோகிராமில் எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
தட்டச்சு இயந்திரங்கள் மட்டுமே இருந்த காலத்தில், தட்டச்சு செய்வதனைச் சொல்லிக் கொடுத்த பயிற்சி நிலையங்களில், முற்றுப் புள்ளி வைத்து வாக்கியம் ஒன்றை முடிக்கையில், இரண்டு எழுத்து இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தினைத் தொடங்கச் சொல்வார்கள். (இந்த நாட்களில் இளைஞர்கள் அது போன்ற வரைமுறைகளைப் பின்பற்றுகிறார்களா என்று தெரியவில்லை.) திட்ட ஆய்வு அறிக்கைகளை தட்டச்சு செய்கையில் இதனைக் கட்டாயமாகப் பின்பற்றச் சொல்வார்கள்.
சரி, இதனைத் தானாக அமையும்படி எப்படி வேர்ட் புரோகிராமில் அமைப்பது எனப் பார்க்கலாம். வேர்ட் தானாக இதனை அமைத்துக் கொள்வதில்லை; நாம் தான் அமைக்க வேண்டும்.
1. Tools மெனுவிலிருந்து Options பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் Options டயலாக் பாக்ஸைக் காட்டும்.
2. இந்த பாக்ஸில், Spelling & Grammar டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3. இனி Settings பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Grammar Settings டயலாக் பாக்ஸைக் காட்டும்.
4. இங்கு Spaces Required Between Sentences என்ற கீழ்விரி பட்டியலைத் திறக்கவும். இங்கு எத்தனை ஸ்பேஸ் வேண்டும் என்பதற்கான அள வுகள் 1, 2 எனக் கிடைக்கும்.
5. எத்தனை ஸ்பேஸ் எனத் தேர்ந்தெடுத்த பின்னர், ஓகே கிளிக் செய்து Grammar Settings டயலாக் பாக்ஸை மூடவும். அதன் பின்னர், ஆப்ஷன் டயலாக் பாக்ஸையும் அதே போல் மூடவும்.
இனி, இலக்கண தவறுகளைச் சோதனை செய்கையில், வாக்கியங்களுக்கு இடையில், இரண்டு இடைவெளி இல்லாமல் அமையும் இடங்களில், அந்த பிழையைச் சுட்டிக் காட்டும். இதில் ரைட் கிளிக் செய்து, தானாக பிழையைச் சரி செய்திட ஆப்ஷன் கொடுத்தால், இரண்டு ஸ்பேஸ் தரப்படும்.