சேரிடம் அறிந்து சேர்

 

சுத்தமான சோம்பேறிகள் எப்படி சம்பாதிப்பது என முடிவு கட்டித் தொடங்கிய இயக்கமே, நாத்திக இயக்கம்.
உலகத்தின் மற்றப் பகுதிகளிலே, நம்பி நாத்திகர்களானவர்கள் உண்டு.
தமிழ் நாட்டில் பெரும்பாலும் திருடர்களும், அயோக்கியர்களுமே நாத்திகர்களானார்கள்.
திருவிழாவில் வழி தவறிப்போன குழந்தை, தேர்ச்சக்கரத்தில் சிக்கிக் கொண்டது போல், நான் இதில் சிக்கிக் கொண்டேன்.
தவறான சேர்க்கையாலே, பிறப்பின் அர்த்தத்தை மாற்ற முயற்சித்தேன்.
நான் யார் என்று புரியாத காரணத்தாலே, தங்களைப் பொறுத்தவரை கெட்டிகாரர்களாக இருந்தவர்கள் வலையில் விழுந்தேன்.
என்ன செய்வது? பக்குவமற்ற நிலை.
சின்ன வயதில் என் தாத்தா என்னைத் தோளிலே தூக்கி வைத்துக் கொள்வார்.
நான் ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைக் காட்டி, `அவை என்ன தாத்தா?’ என்பேன்.
`நட்சத்திரங்கள்’ என்பார்.
`அப்படியென்றால் என்ன?’ என்று கேட்பேன்.
உடனே அவர் எனக்குப் புரிகின்ற பாஷையில் சொல்லத் தொடங்குவார்.
`அதாவது ஆகாயத்தில் தேவர்கள் இருக்கிறார்கள் அல்லவா, அவர்களெல்லாம் சுருட்டுப் பிடிக்கிறார்கள். அதுதான் இது!’ என்பார்.
நான் நம்பி விடுவேன்.
மழை பெய்யும்; `இது என்ன தாத்தா?’ என்பேன்.
`தேவர்களெல்லாம் குளிக்கிறார்கள்; அது தான் இது!’ என்பார்.
அதையும் நம்பி விடுவேன்.
இருபது வயதிலும் இப்படிப்பட்ட பக்குவத்தில் நான் இருந்தேன் என்பதை வெட்கமில்லாமல் ஒப்பு கொள்கிறேன்.
இல்லையென்றால் எவனோ ஒரு நாத்திகனோடு நட்பு ஏற்பட்டு, நான் நாத்திகனாகி இருப்பேனா?
ஒரு மாயா வாதம், போலித்தனம்-மனது அறிந்தே சொன்ன பொய், நாத்திகம் என்பது.
வாழ்க்கையில் அலுத்தவர்கள், சலித்தவர்கள், எவ்வளவோ காலம் கடவுளை வேண்டியும் பயனில்லையே என்று நினைத்தவர்கள்-இவர்களெல்லாம் சிக்கிக்கொண்ட வலையே நாத்திகம்.
சிக்கிக் கொண்ட ஈக்களைக் கடித்துத் தின்ன முயன்ற சிலந்திகளே, அதன் தலைவர்கள்.
அதற்கு அவர்கள் பூசிய சாயம், `பகுத்தறிவு’ என்பது.
சட்டையைக் கறுப்பாகப் போட்டுக் கொண்டு துக்கம் கொண்டாடிய அவர்கள், உள்ளத்தையும் `கறுப்பாகவே’ வைத்திருந்தார்கள்.
பெண்டாட்டியைக் கோவிலுக்கு அனுப்புவார்கள்; பிள்ளையை ஜாதகம் எழுதி வாங்கி வரச் சொல்வார்கள்; மேடையில், `எல்லாம் பொய்’ என்று பேசுவார்கள். நான் அதை நம்பினேன்.
அதுவரை கேளாத புதிய விஷயமாக இருந்ததால் அதைச் சொல்வதைப் பெருமை என்று நினைத்தேன். எதையும் மறுப்பது அறிவுக்கு அடையாளம் என்று முடிவு கட்டினேன்.

இவ்வளவு கூத்தும், இரண்டு மூன்று ஆண்டுகளே.
ஆயினும், இந்த அனுபவங் களையும், அந்தத் தலைவர்களையும் என்னால் மறக்க முடியாது.
பொய்யும் அயோக்கியத்தனமும் நிறைந்த ஒரு உலகத்தை, புனித உலகமாகச் சித்திரித்த அந்தக் கெட்டிக்காரர்களை, எப்படி நான் மறக்க முடியும்?
அவர்கள் கடவுளைப் பற்றிய கதைகளின் மீதும், புராண இதிகாசங்களின் மீதும் விளையாடினார்களே தவிர, அடிப்படைக் கடவுள் தத்துவத்திற்குச் சரியான விளக்கமும், மறுப்பும் கொடுக்க முடியவில்லை.
அதனால் தான், நான் விரைவிலேயே அதிலிருந்து மீண்டு விட்டேன்.
பிறப்புக்கு முந்தியதென்ன? இறப்புக்குப் பிந்தியதென்ன?
விஞ்ஞானிகளே திண்டாடும் இந்தக் கேள்விக்கு, இந்த அரைவேக்காடுகள் என்ன பதில் சொல்ல முடியும்?
`அம்மிக் குழவி சாமி’ என்றும், `அந்தக் கல்லை உடைத்து ரோடு போடுவோம்’ என்றும் ஊர்ச்சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு திமிர் பிடித்துப் பேச முடிந்ததே தவிர, இன்னின்ன காரணங் களால் கடவுள் இல்லை என்று எவனுமே விளக்கம் சொன்னதில்லை.
அதிலே, சிக்கிக்கொண்ட நானும், அவர்கள் பாணியிலேயே, `அடியே, காஞ்சி காமாட்சி! மதுரை மீனாட்சி! காசி விசாலாட்சி! உங்களுக்கு ஏனடி மண்டபங்கள்?’ என்று பேசத் தொடங்கினேன்.
எந்த வெயிலிலும், வற்றிப் போகக்கூடிய அந்தக் காட்டு வெள்ளம் என்னையும், இழுத்துக் கொண்டு போயிற்று.
நாத்திக வாதம் ஒரு போலித்தனம் என்பதை என்னால் உணர முடியவில்லையே, அப்போது!
அவர்களை மட்டுமே குறை சொல்லி என்ன பயன்? அந்தப் பக்குவம் எனக்கில்லையே, அப்போது!
நான் யார் என்பதை முற்றிலும் அறியவில்லையே அப்போது!
மகத்தான காவியங்களைப் படைக்கக் கூடிய உள்ளறிவு எனக்கிருப்பதாகத் தோன்றவில்லையே, அப்போது!
கூட்டம் கூடுவார்கள்; ஆட்டம் போடுவார்கள்; வசூல் செய்வார்கள்; வாழ்க்கை நடத்துவார்கள்; நானோ கைச்செலவு செய்து கொண்டு, கத்திக் கொண்டிருப்பேன்.
காரைக்குடிக்குப் போகும் போதெல்லாம் சில செட்டியார்கள் கேட்பார்கள், `ஏண்டா தம்பி, எவ்வளவோ பெரிய திறமையை வைத்துக்கொண்டு இந்தக் கூட்டத்தில் போய்க் கிடக் கிறாயே’ என்று.
அப்போது எனக்குப் புரிந்ததில்லை.
பல்லாயிரம் ஆண்டு காலப் பண்பாடுகளைப் பற்றிய வரலாற்று அறிவு எனக்குக் கொஞ்சம் கூட இருந்ததில்லை என்பதை, வெட்கத்தோடு ஒப்புக்கொள்கிறேன்.
அந்த இரண்டு மூன்று ஆண்டுகள், நானும் கறுப்புச் சட்டை போட்டிருந்தேன்.
பார்ப்பதற்கே அருவறுப்பானதும், வெயில் காலத்துக்கு ஒத்து வராததுமான கறுப்புச் சட்டையை, நான் விருப்பத்தோடு தான்
போட்டேன்.சீதையைப் பற்றியும், திரவுபதியைப் பற்றியும் கேவலமாக எழுதினேன்; கம்பனைக் கேலி செய்தேன்.
சுய உணர்வில்லாத செம்மறி ஆடு, கசாப்புக் கடைக்குத் தானே போய்க் கழுத்தை நீட்டுவது போல, நீட்டினேன்.
நல்ல வேளை; கத்தி விழும் முன்பாகவே புத்தி வந்து வெளியேறினேன்.
நாத்திகன் சொல்வது என்ன?
திரும்பத் திரும்ப ஒன்றுதான்.
`சூரியன் இயற்கையாக வருகிறது; சந்திரன் இயற்கையாக வருகிறது; பிள்ளை தகப்பனாலே பிறக்கிறது; மரணம் இயற்கையாகவே நடக்கிறது; இதிலே கடவுள் என்றொருவன் இல்லவே இல்லை’ என்பதே அது.
அதிலே எனக்குப் புரியாத ஒன்று, சில தகப்பன்மார்கள் இருந்தும் அவர்களுக்குக் குழந்தை இல்லையே ஏன்?
அதுவும் இயற்கைதானா? இல்லை, அவன் ஆண் மகன் இல்லையா?
நான், யாரையும் குறிப்பிடவில்லை; பொதுவாகவே சொல்கிறேன்.
எல்லாமே இயற்கையாக நடக்கும் என்றால், செத்துப் போன பிறகு, தானே ஏன் அந்தச் சடலம் சுடுகாட்டுக்குப் போகக் கூடாது?
அப்போது மட்டும் நான்கு பேர் தேவைப்படுகிறதே, ஏன்?
இந்தச் சிந்தனை, என் கண்களைத் திறந்தது.
உள்ளே இழுக்கும் காற்று, பிராணன்; வெளியே விடும் காற்று, அபானன், இந்தக் காற்றைப் பத்திரமாகப் பாதுகாக்க உடம்பிலே எந்த மூடியும் இல்லை. ஆனால், ஓட்டைகளோ ஒன்பதிருக்கின்றன!
தினம் தினம் போய்ப் போய் வந்து கொண்டிருக்கும் காற்று, ஒரு நாள் போனால் திரும்புவதில்லை.
முன்பே குறிப்பிட்டுள்ள இந்தக் கேள்வியும், என் கண்களைத் திறந்தது.
நான் ஆசைப்படுவது எனக்குக் கிடைக்கவில்லை; `அதுதானடா விதி’ என்பாள், என் தாய்.
அந்த வாசகமும் என் அறிவுக்குத் தீனி போட்டது.
நான் படித்தது குறைவு; தோன்றிய கற்பனைகள் அதிகம்.
`இது ஏதோவொரு அருள்’ என்பார்கள் பெரியவர்கள்.
`கடவுளின் அருளா?’
அப்படியொரு கேள்வி எனக்குள் எழுந்தது.
உலக வரலாறு என் உணர்வுக்குப் புதிய உரம் ஏற்றிற்று.
கோவலனின் விதியிலிருந்து சர்வாதிகாரி ஹிட்லரின் விதி வரையில் சிந்தித்துப் பார்த்தேன்.
மாபெரும் விஞ்ஞானி கூட, சர்ச்சுக்குப் போவதைச் சிந்தித்தேன்.
இறையுணர்வு என்பது தவிர்க்க முடியாதது என்றும், அதை மறுப்பது ஒரு வியாபாரத் தந்திரமே என்றும் எனக்குத் தோன்றிற்று.
1949-இல் நாத்திகம் பேசத் தொடங்கிய நான், 1954-இல் `மங்கையர் திலகம்’ என்ற படத்தில் துளசி பூஜைப் பாட்டெழுதி விட்டேன்.

`எங்கள் குலதேவி நீயே, ஸ்ரீ துளசி அம்மா அன்புத் தாயே’ என்று தொடங்கும் பாடல் அது.
அப்போதும், இப்போதும் அந்தக் கட்சியில், என்னை எதிர்ப்பதற்கென்றே ஒருவர் இருக்கிறார்; அவர் உடனே அதை ஒரு பெரிய பிரச்சினையாக்கினார்.
ஆனால், திரு. அண்ணா அவர்கள் என்னோடு பேசும் போது, `உனக்குச் சரியென்று பட்டதைச் செய்; கடவுள் இல்லவே இல்லை என்ற கொள்கையில் எனக்கும் உடன்பாடல்ல!’ என்றார்.
அதைத் தொடர்ந்து தான், `ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்’ என்று அவர் கோஷம் கொடுத்தார்.
மூன்று வருஷங்கள் நாத்திகனாக இருந்த நான், கடவுள் பாடல்கள் எழுதத் தொடங்கினேன்.
நாளாக நாளாகக் கடவுள் தத்துவங்கள் மலரத் தொடங்கின.
இந்த நிலையில், `நான் யார்?’ என்பதைக் கண்டு கொள்ள எனக்கு இவ்வளவு காலங்கள் தேவைப்பட்டன.
ஆகவே, உனக்கு நான் சொல்வது, `உன்னையே நீ ஒழுங்காக அறிய வேண்டும்’ என்றால், முதலில் யாரோடு சேருகிறாய் என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
நீ யாரோடு சேருகிறாயோ, அவனது குணத்தை மட்டுமல்ல, பிறப்பையும் பார்க்க வேண்டும்.
நன்மைகள், தீமைகள் ஓரளவுக்குப் பிறப்பிலிருந்தே உருவாக்கப்படுகின்றன.
ஸ்ரீ ஆதி சங்கரர் சொன்னபடி, நல்ல உறவுகள் ஏற்பட்டால், `என் வீடு, என் சொத்து’ என்ற எண்ணம் மறைந்து விடும்.
அந்த எண்ணம் மறைந்து விட்டால், அது தேவை, இது தேவை என்ற ஆசை மறைந்து விடும்.
அந்த ஆசை மறைந்து விட்டால், சலனமற்ற நிம்மதி கிடைக்கும்.
நிம்மதியான வாழ்க்கையில் ஆன்மா சாந்தியடையும்.
ஆகவே, உன்னையே நீ அறிவதின் முதற்படி, `சேரிடம் அறிந்து சேர்’ என்ற பழமொழியாகும்.

%d bloggers like this: