Daily Archives: செப்ரெம்பர் 20th, 2012

வழுக்கையை குணமாக்கும் தைலம்!

 

தலைமுடியை நாம் ரொம்ப சாதாரணமாக மதிக்கிறோம், ஆனால் `முடி கிரீடம்’ இழந்த வழுக்கைத் தலையர்களுக்குத்தான் அதன் மகத்துவம் தெரியும்.
அதனால்தான் அவர்கள், விளம்பரங்களில் கூறப்படும் லோஷன்கள், கிரீம்களை எல்லாம் வாங்கித் தேய்த்து, அன்றாடம் கண்ணாடி முன் நின்று தலையை ஆராய்கிறார்கள்.
இதோ, வழுக்கை மனிதர்களுக்கு வாழ்க்கை வந்துவிட்டது! வழுக்கையைக் குணமாக்கும் ஒரு `லோஷனை’ கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.
வழுக்கைத் தலைக்குக் காரணமான ஒரு என்சைமை தங்கள் லோஷன் முடக்கும் என்று கூறும் விஞ்ஞானிகள், தமது தயாரிப்பு இரண்டாண்டுகளுக்குள் விற்பனைக்கு வந்துவிடும் என்கிறார்கள்.

ஆண்களின் வழுக்கைத் தலையில் ஒரு குறிப்பிட்ட என்சைம்தான் முக்கியப் பங்கு வகிக்கிறதாம். எனவே அதற்குத் `தடா’ போடுவதன் மூலம் தலைமுடிக்கு வாழ்வளித்து விடலாம் என்கிறார்கள்.
இந்த ஆய்வில் ஈடுபட்ட அமெரிக்க விஞ்ஞானிகள், குறிப்பிட்ட என்சைமின் பெயர் `புரோஸ்டாகிளாண்டின் டி2′ (பி.ஜி.டி.2) என்கிறார்கள். இதுதான், முடி முளைப்பதை நிறுத்துமாறு ரோம வேர்ப் பைகளுக்கு உத்தரவிடுகிறதாம். முடி இழப்புடன் தொடர்புடைய 250 ஜீன்களை ஆராய்ந்தபோது விஞ்ஞானிகள் இதைக் கண்டுபிடித்தார்கள்.
இதுதொடர்பாக பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் சரும நோயியல் துறைத் தலைவர் ஜார்ஜ் காட்சரேலிஸ் கூறுகையில், தலைமுடி இழப்பில் பி.ஜி.டி.2 முக்கியப் பங்கு வகிப்பதைக் கண்டறிந்திருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்.
சரி… சரி, இந்தத் தைலம் எப்போது கடைக்கு வரும் என்கிறீர்களா? இதுதொடர்பாக ஏற்கனவே மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் விஞ்ஞானிகள் பேச்சுவார்த்தையில் இருக்கிறார்கள். அதை ஜார்ஜும் உறுதிப்படுத்துகிறார்.
உண்மையில் பி.ஜி.டி.2 அளவைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் ஏற்கனவே சந்தையில் இருக்கின்றன. ஆனால் அவை, ஆஸ்துமா போன்ற உபவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ஆனால் புதிய தைலம் மோசமான `சைடு எபெக்ட்’ எதையும் ஏற்படுத்தாதாம்.
இந்த தைலம் கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நல்லதுதான்!

மச்சு பிச்சு!

 

தென் அமெரிக்காவில் கஸ்கோ நகரில் இருந்து 120 கி.மீ. தொலைவில் உள்ளது மச்சு பிச்சு. கடல் மட்டத்துக்கு மேல் 2 ஆயிரம் மீட்டர் உயரத்தில் ஒரு மலையில் உருவாக்கப்பட்டுள்ளது இந்தப் புராதன நகரம்.
இந்த நகரில் தோட்டங்கள், அடுக்கு மாடிகள், பெரிய பெரிய கட்டிடங்கள், அரண்மனைகள் உள்ளன. இந்த நகரில் தண்ணீர் செல்லும் கால்வாய்கள், நீரூற்றுகள், குளிக்கும் இடம் ஆகியவையும் அமைக்கப்பட்டிருக்கின்றன. நூற்றுக்கணக்கான படிக்கட்டுகள் மூலம் தோட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மிகப் பெரிய கற்களில் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரிய வெள்ளை பளிங்குப் பாறை உயரமான இடத்தில் எந்தப் பூச்சும் இல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளது மச்சு பிச்சுவின் மிக அபூர்வமான காட்சி.

விண்டோஸ் 7 முந்துகிறது

விண்டோஸ் எக்ஸ்பி, மறக்க முடியாத, மறைக்கப்பட முடியாத விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 7 முந்தியுள்ளது. அண்மையில் எடுத்த கணக்கின் படி, பன்னாட்டளவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்துவோர் எண்ணிக்கை, விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்து வோரினைக் காட்டிலும் உயர்ந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி 42.8% பங்கினைக் கொண்டு, மாதந்தோறும் 1% இழந்து வருகிறது. விண்டோஸ் 7, 42.2% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% உயர்ந்து வருகிறது. விண்டோஸ் விஸ்டா, ஏறத்தாழ மொத்தமாகத் தன் பங்கினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
விஸ்டா வெற்றி பெறாத இடத்தில், எப்படி விண்டோஸ் 7 வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். மிக உறுதியான ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் 7 வடிவமைக்கப் பட்டுள்ளது. நம்பிக்கையுடன் செயல்படும் தன்மை கொண்டது, பாதுகாப்பானது மற்றும் நாம் விரும்பி இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களை இயைந்து இணைந்து இயக்குகிறது.
2020 ஆம் ஆண்டு வரை விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் சப்போர்ட் தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

மனிதன் நல்லவனாக மாற என்ன செய்ய வேண்டும்?

பாண்டவர்கள் வனவாசத்தின் போது, ஒரு சமயம் வேட்டையாடச் சென்றான் பீமன். அநேக மிருகங்களை வேட்டையாடினான். அந்த சந்தோஷத்தில், ஆடிப் பாடி குதித்தான். அவனுடைய சப்தத்தையும், ஆரவாரத்தையும் கேட்ட பல சர்ப்பங்கள், ஓடி ஒளிந்து கொண்டன. அவன் வந்து கொண்டிருந்த போது, ஒரு குகையில் பிரமாண்டமான சர்ப்பம் ஒன்று படுத்துக் கொண்டிருப்பதை கண்டான். உடனே அந்த பாம்பு, அவனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. மகா பலசாலியான பீமன், எவ்வளவோ முயற்சி செய்தும், அதனிடமிருந்து விடுபட முடியவில்லை.
அந்தப் பாம்பின் வலிமையை கண்ட பீமன், "சிரேஷ்டரே… எதற்காக என்னை பிடித்தாய். நான் பாண்டவர்களில் ஒருவனான பீமசேனன். என்னை இப்படி கட்டக்கூடிய நீ, யார்? வர பலத்தினாலோ, தபோ பலத்தினாலோ இப்படி என்னை கட்டியிருக்கிறாயா? எதனால் என்று சொல்?’ என்றான்.
அவனது கைகளை விட்டு விட்டு, உடலை சுற்றி, "நான், நகுஷன் என்ற ராஜரிஷியாக இருந்தவன். அகத்தியரின் சாபத்தால், இப்படி பாம்பாக மாறி, பல வருஷங்களாக இங்கே கிடக்கிறேன். ராஜரிஷியாக இருந்த நான், சாபத்தினால் சர்ப்பமாகி, இங்கு பசியோடு கிடக்கிறேன். மகா பலசாலியான உன்னை நான் இப்போது சாப்பிடப் போகிறேன். விதி எப்படி எல்லாம் வேலை செய்கிறது பார்த்தாயா?’ என்றது அந்த பாம்பு.
மேலும், "நான் கேட்கும் கேள்விகளுக்கு, எவன் சரியான பதில் கூறுவானோ, அவனால் உனக்கு சாப நிவர்த்தி உண்டாகும்…’ என்று அகத்திய மாமுனி கூறியதாக சொன்னது பாம்பு.
சகோதரனான, பீமனை நெடுநேரமாக காணாததால் கவலைப்பட்டார் யுதிஷ்டிரர். அர்ஜுனனை கூப்பிட்டு, "நீ மற்றவர்களுக்கு காவலாக இரு. நான் பீமனை தேடி வருகிறேன்…’ என்று புறப் பட்டார். காட்டில் ஒரு குகை வாயிலில், ஒரு மலைப் பாம்பால் பீமன் கட்டப்பட்டு நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
நடந்த விஷயத்தைச் சொல்லி, "இது நகுஷன் என்ற ராஜரிஷி. அகத்தியரின் சாபத்தால் இப்படி மலைப் பாம்பாக விழுந்து கிடக்கிறது…’ என்றான் பீமன். சர்ப்பமும் தன் கதையைச் சொல்லி, "நான் கேட்கும் கேள்விகளுக்கு, நீ பதில் சொன்னால், இவனை விட்டு விடுகிறேன்…’ என்றது; யுதிஷ்டிரரும் சம்மதித்தார். நகுஷன் பல கேள்விகளை கேட்க, இவரும் பதில் கூறி வந்தார். அதேபோல் யுதிஷ்டிரரும், நகுஷனிடம் பல கேள்விகளைக் கேட்க, பதில் கூறினான் நகுஷன்.
பிறகு, நகுஷனை பார்த்து, "எந்த கர்மாவைச் செய்து, மனிதன் இப்போதுள்ளதை விட, உயர்ந்த கதியை அடைகிறான்?’ என்றார் யுதிஷ்டிரர். அதற்கு நகுஷன், "ஸத் பாத்திரத்தில் தானம் செய்வது, இனிமையாகப் பேசுவது, உண்மையே பேசுவது, அகிம்சையில் பற்றுதல், ஜீவ இம்சை செய்யாதிருத்தல் ஆகிய குணங்களால் மனிதன் சொர்க்கத்தை அடைகிறான்…’ என்றது.
இதே போல், நகுஷனை பார்த்து, "சரீரத்தை விட்டவன் சொர்க்கம் அடைவதையும், கர்மங்களின் பலன் அழியா மலிருப்பதையும் எப்படி தெரிந்து கொள்வது?’ என்றார் யுதிஷ்டிரர்.
அதற்கு நகுஷன், "அவனவன் செய்த புண்ணிய, பாவங்களால், மனி தனாகவோ மற்றும் பலவித ஜீவன் களாகவோ பிறக்கின்றனர். அகிம்சை யுடன் கூடிய தானம், யாகம் முதலியவை செய்தவனின் ஆத்மா, சொர்க்கத்தை அடைகிறது. காமக்ரோதங்களுடன் உள்ளவன், இம்சை செய்பவன், பேராசைக்காரன், மோசம் செய்பவன், துரோகம் செய்பவன் ஆகியோர் விலங்காகவும், மற்றுமுள்ள தாழ்ந்த பிறவிகளையும் அடைகின்றனர்.
"விலங்குகள், அந்த பிறவியிலிருந்தே தேவனாக ஆகிவிட முடியும் என்றும் வேதத்தில் கூறப்பட்டுள்ளது. யாகத்தில் பயன்படும் வெள்ளாடு போன்றவை சொர்க்கம் சென்று தேவனாகிறது என்கிறது வேதம். புண்ணிய, பாவமாகிய இரு வினைகள் உள்ளவன், பிறப்பு, இறப்புகளை அடைகிறான். "இருவினைகள் கழிந்தவனின் ஜீவன், பிரம்மத்தை அடைந்து, ஆனந்தானுபவத்தை பெறுகிறது. இன்னும் ஏதாவது கேட்க வேண்டுமா?’ என்றது நகுஷன். நிறைய கேள்விகளைக் கேட்டார் யுதிஷ்டிரர்; பதில் சொன்னான் நகுஷன்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், அதிகாரம், ஆணவம் இவையெல்லாம் மனிதனுக்கு நல்லது செய்வதை விட, கெடுதல் தான் செய்கிறது. இதை உணர்ந்து, பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும்.