Daily Archives: செப்ரெம்பர் 21st, 2012

சீட்டை விட்டு நகராத வேலையா? சர்க்கரை, இதய நோய்கள் தாக்கும் சீனியர்கள், மேனேஜர்கள் உஷார்

‘ஆபீசுக்கு போனா, சீட்டை விட்டு எழுந்திருக்க வேண்டாம். உட்கார்ந்த இடத்திலேயேதான் வேலை’ என்று இனி பெருமையடிக்காதீர்கள். அதிக நேரம் சீட்டில் உட்கார்ந்து கம்ப்யூட்டருடன் மல்லுக்கட்டும் ஊழியர்களை சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி.
அலுவலக வேலையால் ஏற்படும் உடல்நல கோளாறுகள் தொடர்பாக ஆஸ்திரேலியாவின் சிட்னி பல்கலைக்கழகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது.
இதுபற்றி ஆய்வுக்குழு தலைவர் கரின் க்ரிபித்ஸ் கூறியதாவது:
அரசு அலுவலக ஊழியர்கள் 1000 ஊழியர்களிடம் சர்வே நடத்தப்பட்டது. சராசரியாக தினமும் 8 மணி நேரம் அல்லது அதற்கு மேல் கம்ப்யூட்டர் பணி செய்பவர்களில் 85 சதவீதம் பேர் கழுத்து வலி இருப்பதாக கூறினர். தோள்பட்டை வலி இருப்பதாக 75% பேரும், முதுகு வலி இருப்பதாக 70% பேரும் கூறியுள்ளனர். அதிக நேரம் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் உடல்நலம் பாதிக்கப்படுகிறது என்று 1980-களில் இருந்தே மருத்துவ ஆய்வுகள் எச்சரித்து வருகின்றன.
இதையடுத்து, ஊழியர்கள் நின்றபடி, உட்கார்ந்தபடி, சோபாவில் சாய்ந்தபடி வேலை பார்க்கும் வசதிகளை சில முன்னணி நிறுவனங்கள் அமல்படுத்தின. அலுவலகங்களில் வீடியோகேம், ‘ஒர்க்ஸ்டேஷன்’ போல கம்ப்யூட்டர் சீட்களை மாற்றி அமைத்தனர். இதன் பிறகு, ஊழியர்களின் கழுத்து, முதுகு வலிகள் ஓரளவு குறைந்தன. ஆனாலும் வலி பிரச்னைகள் முழுவதுமாக தீரவில்லை.
ஆண்டுகள் ஆகஆக, இந்த பிரச்னை அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் எல்லா வேலைக்கும் இடம் விட்டு நகர வேண்டி இருந்தது. போன், செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் வசதிகள் வந்த பிறகு நகர்தல் குறைந்து வருகிறது. உட்கார்ந்த இடத்திலேயே எல்லா வேலைகளும் முடிகின்றன. மீட்டிங்கூட கான்பிரன்ஸ் கால் அல்லது வீடியோ கான்பரன்சில் முடித்து விடுகின்றனர்.
அதிக நேரம் உட்கார்வதால் ஏற்படும் பாதிப்புகளை ‘சேர் டிசீஸ்’ (நாற்காலி நோய்கள்) என்கிறது மருத்துவ உலகம். நாற்காலியை மாற்றுவதால், தரமான நாற்காலி போட்டுக் கொள்வதால் இப்பிரச்னை தீராது. வெகு நேரம் உட்கார்வதை தவிர்ப்பது அவசியம். இல்லாவிட்டால் உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது. கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் உட்காரும் நிர்வாக பொறுப்பில் இருப்பவர்கள், சீனியர் அதிகாரிகள் என்றால் நோய் இன்னும் கடுமையாக தாக்கும்.

நன்றி-தினகரன்

இணையதள மோசடிகளால் ஏமாறும் இளைஞர்கள்!

இந்தியாவிலுள்ள வேலையற்ற இளைஞர்களை குறிவைத்து பணம் பறிக்கும் ஏமாற்று கும்பல் ஒன்று கிளம்பி உள்ளது.
இந்த அப்பாவி இளைஞர்களின் பலவீனங்களை பயன்படுத்தி, இவர்களை சுரண்டுவதற்காகவே காத்துக் கொண்டிருக்கிறது, ஒரு வெளிநாட்டுக் கூட்டம். இவர்களில் பெரும்பாலானோர் கருப்பின இளைஞர்கள். படிப்பதற்காகவும், வியாபார விஷயமாகவும், இந்தியாவுக்கு வருகை தரும் இவர்களின் ஒரே முதலீடு, இணையதள வசதியுள்ள ஒரு கம்ப்யூட்டர், மொபைல் போன் மற்றும் பாங்க் கணக்கு எண் இவை மூன்றும் தான். உட்கார்ந்த இடத்திலிருந்து லட்சக்கணக்கில் சம்பாதித்து விடலாம்; சம்பாதித்த பணத்தை, அடுத்த நொடியே, தங்களது சொந்த நாட்டிற்கு மாற்றியும் விடலாம்.
இந்த இணையதள மோசடி பேர்வழிகளை பற்றி, ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வந்தாலும் கூட, நம் இளைஞர்கள், தாங்கள் ஏமாறுவது குறித்து விழிப்புணர்வு அடைந்ததாக தெரியவில்லை. ஆன்-லைன் பண பரிவர்த்தனைகள், எந்த அளவுக்கு இந்தியாவை உயரத்துக்கு இட்டுச் செல்கிறதோ, அதே வேகத்தில், குப்புறத்தள்ளி, குழியையும் பறிக்கிறது.
"ஆசையே துன்பங்களுக் கெல்லாம் காரணம்…’ என்றார் புத்தர். ஆனால், நம் இந்திய இளைஞர்களுக்கு இருப்பதோ பேராசை. முதலீடு இல்லாமல் வருமானம் வர வேண்டும்; உழைக்காமல் செல்வந்தர் ஆக வேண்டும். இதெல்லாம் நடக்கிற காரியமா? ஏமாற்றுபவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம்.
"லட்சக்கணக்கான போன் நம்பரிலிருந்து, ரேண்டம் ஆக செலக்ட் செய்ததில், உங்களது மொபைல் நம்பர், மைக்ரோ சாப்ட் அவார்டுக்கு தேர்வாகி உள்ளது. உங்களுக்கு ஐந்து லட்சம் பவுண்ட் பரிசு காத்துக் கொண்டிருக்கிறது. உடனடியாக உங்களது முகவரி மற்றும் பாங்க் கணக்கு எண் ஆகியவற்றை எங்களுக்கு தெரியப்படுத்தவும். இந்த பரிசு தொகையை உங்களுக்கு அனுப்புவதற்குரிய செலவாக, 10,000 ரூபாயை, நாங்கள் குறிப்பிட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்தவும். பணம் கிடைத்ததும் < பரிசுத்தொகை, உங்களது வங்கி கணக்கிற்கு மாற்றப்படும்…’ என தெரிவிக்கும் ஒரு மின்னஞ்சல்.
இதை படித்ததும், பெரும்பாலானோர் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டதாக கற்பனை செய்து, ரகசியமாக அவர்கள் கேட்ட பணத்தை செலுத்தி விடுகின்றனர். காத்திருந்து, காத்திருந்து பரிசு பணம் வரவில்லையே என, அந்த ஏமாற்று பேர்வழிகள் குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டால், இன்னும், 25,000 ரூபாய் அனுப்பு என்பான். இப்படியாக முடிந்த வரை கறந்து, பின், அடுத்த ஏமாளியை தேடி ஓடுவான்.
மொபைல் போன் வைத்திருப்பவர்களுக்கு தான் இதுபோல் ஆபத்து என்றால், இவர்களது அடுத்த இலக்கு, மின்னஞ்சல் முகவரியுடன் இணையத்தளத்தை பயன்படுத்துவது. ஏமாறுகிறவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவனும் இருக்கத்தானே செய்வான்.
சமீபத்தில், நண்பர் ஒருவருக்கு வந்த மின்னஞ்சலை பாருங்கள்… ஹூண்டாய் கம்பெனியில், ஒரிஜினல் லோகோ மற்றும் முழு முகவரியுடன், கம்பெனியில் முதன்மை செயல் அலுவலர் பெயரில், ஹூண்டாய் கம்பெனியின் பல்வேறு பிரிவுகளில், காலியாகவுள்ள இடங்களுக்கு, நேரடி தேர்வு நடைபெறுவதாகவும், அதற்கு உங்களது விண்ணப்பம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சம்பளம், 80,000 ரூபாய் முதல், மூன்று லட்சம் வரை. இன்டர்வியூ, ஹூண்டாய் கம்பெனியின், டில்லி அலுவலகத்தில் நடைபெறும். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், திருப்பி தரப்படும் டெபாசிட் தொகையாக, 11,500 ரூபாயை நாங்கள் குறிப்பிடும் ஸ்டேட் பேங்க் அல்லது ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி கணக்கில் செலுத்தவும். உங்களது பணம் வந்து சேர்ந்ததும், நுழைவுத் தேர்வுக்காக டில்லி வரும்போது, தாங்கள் தங்குவதற்குரிய லாட்ஜ் விவரம் மற்றும் விமான டிக்கெட்டுகள் உங்களது முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும். ஒரு வேளை, இந்த வேலை உங்களுக்கு கிடைக்கவில்லையென்றால், தங்களது டெபாசிட் தொகை, 11,500 ரூபாயில், 200 ரூபாய் பிடித்தம் போக, மீதி தொகை உங்களுக்கு திருப்பி தரப்படும் என நீள்கிறது இந்த மின்னஞ்சல்.
இதைத் பார்த்ததும், நம் இளைஞனுக்கு விமானத்தில் பறப்பது போலவும், லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைப்பது போலவும் கனவு விரிகிறது. கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? நாம் இந்த வேலைக்கு விண்ணப்பம் அனுப்பினோமா? வேலைக்கே விண்ணப்பிக்காமல், எப்படி இன்டர் வியூவுக்கு அழைப்பர். சரி, பல இடங்களில் வேலை வாய்ப்புக்காக விண்ணப்பித் திருக்கிறோம். அதிலிருந்து இவர்கள் தெரிவு செய்திருப்பர் என, போலியாக கற்பனை செய்து, சமாதானமாக பணத்தை அனுப்பி விடுவர். இந்த பலவீனம் தான், ஏமாற்றுபவர்களுக்கு பெரிய பலம்.
இப்படி ஏமாறு பவர்களில் பலர், வெட்கப்பட்டு வெளியில் சொல்வது கிடையாது. ஒரு சிலர் தான் போலீசில் புகார் செய்கின்றனர். கண்ணிமைக்கும் நேரத்தில், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் இப்படி பணத்தை இழந்து கொண்டிருக்கின்றனர்.
இப்படி துணிந்து ஏமாற்றிக் கொண்டிருக்கும் கருப்பின இளைஞர்களை, உடனடியாக மத்திய அரசு தலையிட்டு, இவர்களையும், இவர்களது வங்கி கணக்கையும் கண்காணித்து, இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கணக்குப் போடும் நாய்

 

உங்களிடம் இந்தமாதிரி ஒரு நாய் இருந்தால் உங்களுக்கு கால்குலேட்டரே தேவைப்படாது.

கால்குலேட்டருக்கும் நாய்க்கும் என்ன சம்பந்தம் என்று யோசிப்பீர்கள்.

வழக்கமாக பயிற்சி அளிக்கப்படுகிற நாய்கள் `உட்கார்’ என்றால் உட்காரும். `நில்’ என்றால் நிற்கும். `ஓடு’ என்றால் ஓடும். இந்த நாய் இதையெல்லாம் சர்வ சாதாரணமாக செய்வதோடு கணக்கும் போடுகிறது.

கறுப்பு லேபரடார் இனத்தை சேர்ந்த இந்த 12 வயது நாயின் பெயர் பிக். இந்த நாயை வின்ஸ் டெவ்லின் என்பவர் ஒரு கோடைவிடுமுறையில் சந்தித்தபோது இந்த நாய்க்கு கற்றுக் கொடுத்ததே கணக்குப் போடும் வித்தை.

dog-1

இந்த கணக்கை அவர் எப்படி கற்றுக் கொடுத்தார் தெரியுமா? முதலில் நாயின் முன்பாக ஒரு எலும்புத் துண்டைபோட்டு ஒருமுறை குரைக்கச் சொன்னார். பிறகு இன்னொரு எலும்புத் துண்டை போட்டு இரண்டு முறை குரைக்கச் சொன்னார். இப்படி ஆரம்பித்த கணக்கு கடைசியில் கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் வரை நீண்டு இப்போது நாயை கணக்கு மாஸ்டராக்கி இருக்கிறது. மூன்றை மூன்றால் பெருக்கினால் என்ன வரும் என்று கேட்டால் 9 முறை குரைத்து விடை சொல்கிறது. 9 இல் இருந்து 5-ஐ கழித்தால் எவ்வளவு என்று கேட்டு முடிப்பதற்குள் 4 முறை குரைக்கிறது.

இதை விட சிறப்பு, `உன் வயதென்ன?’ என்று கேட்டால் உடனே 12 முறை குரைத்து தன் வயது 12 என்பதை சொல்கிறது. ஒரு அறையில் 4 ஆண்கள் இருக்கிறார்கள். அப்போது இந்த நாயிடம் இங்கே இப்போது எத்தனை ஆண்கள் இருக்கிறார்கள்? என்று கேட்டால் 5 பேர் என்று சொல்கிறது.. இது தப்பான கணக்கல்லவா என்று கேட்டால், "அது தான் தவறு. இந்த நாய் தன்னையும் ஒரு ஆணாக கருதிக் கொண்டு இந்த எண்ணிக்கையை கூறுகிறது” என்று சொல்லி ஆச்சரியப் படுத்துகிறார் பயிற்சியாளர்.

இந்த நாயை அதன் உரிமையாளர் 3 மாத குட்டியாக தன் வீட்டு வாசற்படியில் கண்டெடுத்திருக்கிறார். அப்போது இது யார் வீட்டு நாய் என்பதை கண்டுபிடிப்பதற்காக நகரம் முழுக்க போஸ்டர் அடித்து ஒட்டிப் பார்த்திருக்கிறார். யாரும் தங்களுடையது என்று கேட்டு வராத நிலையில் நாயின் கணக்குப் போடும் திறமை நகரம் முழுக்க பிரபலமாக, அப்போது வந்திருக்கிறார், நாயின் உரிமையாளர். நாய்க்கு ஒரு தொகை கையில் கிடைத்ததும் உற்சாகமாக நடையைக் கட்டியிருக்கிறார். நாய் கூட்டல் கழித்தல் கணக்கைப் போட, அதன் உரிமையாளர் போட்டதோ லாபக்கணக்கு. இது எப்படி இருக்கு!

எந்த உணவு உடலுக்கு நல்லது? – சத்குரு விளக்கம்

 

`துரித உணவு (ஜங்க் புட்) சாப்பிடுவது மிகவும் சாதாரணமாகி விட்டது. அதனுடன் சேர்த்து கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானமும் குடிக்கிறார்கள். இதனால் பாதிப்பு வருமா?’ என்று, என்னிடம் பலரும் கேட்கிறார்கள்.

இதனால் நம் பொருளாதாரம் நன்றாக நடக்கும். நம் பொருளாதாரத்திற்கு இதெல்லாம் மிகவும் தேவைப்படுகிறது. இதனால் நோய்கள் வரும்போது மருத்துவமனைகள் எல்லாம் நன்றாக நடக்கும். மருந்தகங்களும் நன்றாக நடக்கும். நீங்கள் சீக்கிரம் இறந்தும் போகலாம்.

ஜங்க் என்றால் "எதற்கும் உதவாத” என்று அர்த்தம். இது எல்லாருக்கும் தெரியும்.

"எதற்கும் உதவாத உணவை சாப்பிடுகிறேன்,” என்றால் யார் என்ன செய்யமுடியும்? சாப்பிடுங்கள்!

நம் கலாசாரத்தில் கோடைகாலம், மழைக்காலம், குளிர் காலம் என்று ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற உணவை நிர்ணயித்து வைத்தார்கள். ஏனெனில் அந்தந்த காலத்திற்கேற்ற உணவைத்தான் நாம் சாப்பிட வேண்டும்.

Sun18

அது மட்டுமல்ல, இந்த உடல் என்பது மண்தான். மண்ணில் விளைந்ததுதான் இப்போது உடலாக மாறியிருக்கிறது. மேலும் ஒரு குறிப்பிட்ட தொலைவிற்குள் விளைவதை மட்டுமே அவரவர் சாப்பிட வேண்டும். அதை ஆயுர்வேதம் "உங்களால் ஒரு நாளில் எவ்வளவு தூரம் நடந்து போக முடியுமோ அந்த இடத்திற்குள் விளைகிற உணவை மட்டும் சாப்பிட வேண்டும்” என்று குறிப்பிடுகிறது.

இது உங்களுக்கு நடைமுறையில் மிகவும் கடினமாக இருந்தால் நீங்கள் மிதி வண்டியில் ஒருநாளில் போகும் அளவிற்கு உள்ள நிலத்தில் விளைகிற உணவை சாப்பிடலாம்.

இது கூட கடினமாக இருந்தால், காரில் ஒரு நாளைக்கு எவ்வளவு தூரம் போக முடியுமோ அந்த அளவு உள்ள நிலத்தில் விளையும் உணவை சாப்பிடலாம்.

இப்போது நாம் அதையெல்லாம் மறந்து விட்டோம். இன்னும் சில நாட்களில் சந்திரலோகத்தில் காய்கறிகள் விளைவித்து அதையும் சாப்பிடுவோம்.

இது வியாபாரத்திற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கும். ஆனால் இதை நம் உடல் ஏற்றுக்கொள்ளாது. ஏனெனில் இந்த உடலுக்கும் நாம் வாழும் இந்த நிலத்திற்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.

இந்த மண்ணுக்கு என்ன விதமான ஞாபகசக்தி இருக்கிறதோ அதே ஞாபகசக்தி இந்த உடலுக்கும் இருக்கிறது. இதிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியாது. இதனால்தான் நாம் ஆசிரமத்தில் அனைவரையும் நிலத்தில் படுக்க வேண்டும் என்று சொல்கிறோம்.

ஏனெனில் இந்த உடலும் நிலமும் ஒரு தொடர்பில் இருக்கும்போது ஆரோக்கியம் மேம்படுகிறது.

நம் ஆசிரமத்தில் உள்ள புத்துணர்வு மையத்துக்கு பலவிதமான நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வருகிறார்கள்.

ஒரு குழி தோண்டி அவர் கழுத்து வரை மண் நிரப்பி அவரை மூன்று மணி நேரம் அப்படியே வைத்திருந்து பின்னர் எடுத்தால் அவர் நோயே போய் விட்டது என்று சொல்கிறார். இதற்குக் காரணம் மண்ணுடன் ஏற்படுத்திக் கொண்ட தொடர்புதான்.

இங்கு நோயாளிகள் வந்தால் "முதலில் போய் தோட்டத்தில் வேலை செய்யுங்கள்,” என்று நான் சொல்கிறேன். "செருப்பு போடாமல் வெறும் காலில் வேலை செய்யுங்கள்” என்று சொல்கிறேன்.

பூமியுடன் ஆழமான தொடர்பு ஏற்படும் போது உடல் தன்னை தானாகவே சார்ஜ் செய்து கொள்கிறது. ஏனெனில் இந்த உடல் பூமியின் பகுதிதான், மண்ணால் ஆனதுதான். மண்ணுடன் தொடர்பில் இருக்கும் போது உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கிறது.

Sun07

நீங்களே "ஜங்க் புட்” என்று சொல்லி விட்டீர்கள். அதற்கு மேல் நான் என்ன சொல்வது?

சுவைக்காக ஏதோ ஒரு நாள் சாப்பிட்டால் பரவாயில்லை. ஆனால் உப்பு, காரம் எதுவும் இல்லாமல் மேற்கத்திய நாடுகளில் சாப்பிடுகிறார்கள் என்பதால் அதையே நாமும் தினமும் சாப்பிடுவது சரியானது அல்ல. இதனால் என்ன பாதிப்பு வரும் என்று தெரிந்துகொள்ள வேண்டும் எனில் நீங்கள் அமெரிக்கா சென்று பார்க்கலாம்.

அமெரிக்காவில் இருக்கும் ஒரு பத்திரிகையாளர் புத்தகம் எழுதினார். அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை சுமார் 3000 கிலோ மீட்டர் தூரத்தை 30 நாட்களில் கடந்து வழியில் கிடைக்கும் எல்லா சாலையோர உணவையும் உண்டு, உடலுக்கு என்ன நடக்கிறது என்பதை பரிசோதனை செய்து அந்த புத்தகத்தில் எழுதினார்.

30 நாட்களில் அவர் நியூயார்க் வந்து சேரும் முன்பு அவருக்கு ரத்த கொதிப்பு வந்து விட்டது. அவரது எடை 17 கிலோ அதிகமாகியது. அவருக்கு லேசான சர்க்கரை வியாதியும், ஆண்மை குறைவும் ஏற்பட்டது. இன்னும் அவருக்கு வேறென்னவெல்லாம் பாதிப்பு ஏற்பட்டதென்று ஒரு அட்டவணை போட்டார்கள். அதை அவர் அந்த புத்தகத்தில் விவரமாக எழுதியுள்ளார். இது போன்ற உணவை தினமும் சாப்பிட்டால் என்ன ஆகும் என்பதை அந்த புத்தகத்தை படித்தால் நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

கார்பனேற்றம் செய்யப்பட்ட குளிர்பானம் பற்றி சொல்வதனால் இந்த உடல் என்னும் இயந்திரத்திற்கு ஆக்ஸிஜன்தான் தேவை. கார்பன் டை ஆக்ஸைடு தேவையில்லை என்பது ஒரு சிறு குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் நான் கார்பன் டை ஆக்ஸைடையே குடித்து கொள்கிறேன் என்று சொன்னால் என்ன செய்வது? வாழ வேண்டும் என்ற ஆசை இல்லையென்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.

விளம்பரங்களில் சொல்வதை எல்லாம் உண்மை என்று நீங்கள் நினைத்தால், உங்களுக்கு நன்றாக வாழவேண்டும் என்ற ஆசை இல்லை என்றுதான் அர்த்தம்.

அது மட்டுமல்ல. நாம் உணவு உண்ணும்போது தண்ணீர் குடிக்க கூடாது. அப்படிக் குடித்தால், செரிமானத்திற்காக நம் உடலில் சுரக்கும் நொதிகள் நீர்த்துப் போய்விடும் என்பார்கள். அதிலும் நீங்கள் சொல்லும் குளிர்பானம் தண்ணீருடன் சர்க்கரையும் சேர்ந்தது. எனவே ஜீரணம் மிகவும் பாதிக்கப்படும்.

சர்க்கரை மட்டுமல்ல, கார்பன் டை ஆக்ஸைடு வேறு சேர்த்து சாப்பிடுகிறீர்கள். இருக்கும் விஷம் போதாது என்று இன்னொன்றும் சேர்த்து அருந்திவிட்டு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது அப்படி வேலை செய்யாது.

உடல் என்ற இந்த இயந்திரத்திற்கு என்ன வேண்டுமோ அதை கொடுத்தால் இந்த இயந்திரம் நல்லபடியாக நடக்கும். அதற்கு எது வேண்டாமோ அதையெல்லாம் கொடுத்தால் பிறகு அது நம்மைப் போட்டுப் பார்க்கும் (சிரிக்கிறார்).

ஏற்கனவே நாம் பாதிப்பில் இருக்கிறோம். நாம் சம்பிரதாயமாக சாப்பிடும் உணவிலேயே முக்கியமான அம்சங்களை எடுத்துவிட்டு சாப்பிடும் தன்மை இப்போது வந்துவிட்டது. வெறும் சாதம் மட்டுமே சாப்பிடுகிறார்கள். சிறிதளவு புளி, உப்பு, வெங்காயம், மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரிசியை சுவையாக சமைத்து சாப்பிட்டுவிட்டால் உடலுக்கு தேவையானது கிடைத்துவிடாது. அது நமது சம்பிரதாய சாப்பாடும் அல்ல.

ஒரு தலைமுறை அல்லது இரண்டு தலைமுறைக்கு முன் இந்த நாட்டில் மக்கள் எப்படி சாப்பிட்டார்களோ அப்படி சாப்பிட்டு பாருங்கள். ஆரோக்கியம் என்பது தானாகவே கிடைக்கும். அதில் சந்தேகமே கிடையாது.

நான் சொல்வது என்னவென்றால், இந்த உடலுக்கு எப்படி தேவையோ, இந்த உடல் எதை சாப்பிட்டால் சுகமாக இருக்கிறதோ அதை சாப்பிடுங்கள் என்கிறேன்.

பூட்டிங்: என்ன நடக்கிறது?

கம்ப்யூட்டர் இயங்கத் தயாராக மேற்கொள்ளும் பல வேலைகளை மொத்தமாக பூட்டிங் என அழைக்கிறோம். இந்த பூட்டிங் பணியின் போது என்ன என்ன வேலைகள் நடக்கின்றன என்று நம் கம்ப்யூட்டரிலேயே பார்க்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், எங்கு பிரச்னை உள்ளது என அறியலாம். இதற்கு எம்.எஸ்.கான்பிக் என்ற பைல் உதவுகிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த வசதியினை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
தகவல் தொழில் நுட்பத்தினைப் பொறுத்தவரை, தகவல் தான் எதற்கும் அடிப்படை. அந்த வகையில் கம்ப்யூட்டர் பூட் செய்திடுகையில், என்ன நடக்கிறது என்று அறிந்து கொள்வது நம் கம்ப்யூட்டரை நல்ல நிலையில் வைத்துக் கொள்ளவும் உதவும். இதற்கு விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டரில், எம்.எஸ். கான்பிக் (msconfig.exe) பைல் உதவுகிறது. இந்த பைலுடன், ஒரு பூட் லாக்கர் (boot logger) செட் செய்துவிட்டால், அது பூட் ஆகும்போது லோட் ஆகும் ஒவ்வொரு ட்ரைவரும் என்ன செய்கிறது என்பதை நமக்குக் காட்டும். இந்த தகவல்கள் நமக்குக் கிடைத்துவிட்டால், கம்ப்யூட்டரின் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண இயலும்.
முதலில் எம்.எஸ்.கான்பிக் பைலை இயக்குங்கள். இதற்கு படி 1:
1. விண்டோஸ் + ஆர் கீகளை அழுத்தவும்.
2. கிடைக்கும் ரன் கட்டத்தில் msconfig.exe என டைப் செய்திடவும்.
3. பின்னர் ஓகே கிளிக் செய்திடவும்; அல்லது என்டர் தட்டவும்.
படி 2: பூட் லாக் இயக்க:
எம்.எஸ். கான்பிக் திறக்கப்பட்டவுடன், பூட் (Boot) டேப் கிளிக் செய்திடவும். பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இப்போது, கம்ப்யூட்டரை மீண்டும் பூட் செய்திட, ப்ராம்ப்ட் ஒன்று கிடைக்கும். இதன் மூலம் செட் அப் முழுமையடையும்.
படி 3: லாக் பைல் பார்க்க:
ரீ பூட் முழுமையடைந்தவுடன், msconfig டூலைத் திறக்கவும். இந்த பைலைப் பார்க்க, பின்வருமாறு செயல்படவும்.
1. நோட்பேட் திறக்கவும். இதற்கு Start | All Programs | Accessories | Notepad எனச் செல்லவும். அல்லது ரன் கட்டத்தில் notepad.exe என டைப் செய்து ஓகே கிளிக் செய்திடவும்.
2. நோட்பேடில் C:\Windows\ எனச் சென்று ntbtlog.txt என்ற பைலைத் திறக்கவும்.
3. உங்கள் கம்ப்யூட்டர் இயக்கத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால், பூட் லாக் பைலில் ஆய்வு செய்து, பிரச்னை எங்கு ஏற்பட்டுள்ளது எனக் காணலாம். உங்கள் கம்ப்யூட்டரில் எந்த சர்வீஸ் பேக் வரை இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது என்ற தகவலையும் பெறலாம்.
படி 4: பைலை சேவ் செய்திடுக:
ஒவ்வொரு முறை விண்டோஸ் ரீ பூட் ஆகும்போது, புதிய விஷயங்கள் இந்த லாக் பைலில் இணைக்கப்படும். இதனால் இதன் நீளம் அதிகரித்துக் கொண்டே செல்லும். எனவே, நீங்கள் பார்த்த லாக் பைலை சேவ் செய்திடவும். பைல் பெயரில் தேதி குறித்து சேவ் செய்திடவும். இதனால், பின்னொரு நாளில் லாக் பைலைத் தேடுகையில், நாள் குறித்துத் தேடி அறியமுடியும்; அல்லது லாக் பைலில் உள்ள பழைய குறிப்புகளை நீக்கிவிட்டு சேவ் செய்திடலாம். இதனால், இந்த பைல் நீளம் அதிகரிப்பது தடுக்கப்படும். கம்ப்யூட்டர் பிரச்னை குறித்து அறிந்து கொண்டவுடன், இந்த வசதியை நிறுத்திவிடலாம்.