Daily Archives: செப்ரெம்பர் 23rd, 2012

மன அழுத்தம் மூளையைச் `சுருக்கும்’!

 

கடுமையான மன அழுத்தமும், தொடர்ச்சியான மன நெருக்கடியும் உங்களின் மூளை அளவைச் சுருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
மூளை அளவு சுருங்கினால் என்ன ஆகும்? உணர்வுரீதியான, உளவியல் ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்.
அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் தெரிவிக்கும் தகவல் இது.
மேற்கண்ட பாதிப்புக்குக் காரணம், ஓர் ஒற்றை மரபணுவால் ஏற்படும் தூண்டுதலாம். அது, மனிதர்களின் மூளைச் செல்களுக்கு இடையிலான தொடர்பைப் பாதிக்கிறது.
இதுதொடர்பாக மூத்த ஆய்வாளரும் மனோவியல் மற்றும் நரம்பியல் நிபுணருமான ரொனால்டு டுமன், "மனிதர்களின் மூளை இணைப்பில் மனஅழுத்தம் இழப்பை ஏற்படுத்துகிறது என்பது குறித்து நாங்கள் மேலும் ஆராய விரும்புகிறோம்” என்கிறார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், "மூளையின் `சிங்கிள் டிரான்ஸ்கிரிப்ஷன் பாக்டர்’ என்பது தூண்டப்படும்போது, உணர்வுகள், உளவியல் தொடர்பான இணைப்புச் சுற்றுகள் தொந்தரவுக்கு உள்ளாகின்றன என்பதை நாங்கள் காட்ட விரும்புகிறோம்” என்கிறார்.
இவர் உள்ளிட்ட ஆய்வாளர்கள், ஒரு மூளை வங்கியில் இருந்து, மன அழுத்தத்துக்கு உள்ளான, மன அழுத்தம் இல்லாத நோயாளிகளின் மூளை திசுவைப் பெற்று ஆராய்ந்தனர். அவற்றில் ஜீன் தூண்டல் எவ்வாறு நடந்திருக்கிறது என்று ஆராயப்பட்டது. அப்போது, மன அழுத்தத்துக்கு உள்ளான நோயாளிகளின் மூளைத் திசு பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
மற்றொரு ஆய்வாளரான எச்.ஜே. காங் கூறும்போது, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளில் காணப்படும் ஜீன்கள், நிகிஜிகி1 என்ற `சிங்கிள் டிரான்ஸ்கிரிப்ஷன் பாக்டரால்’ கட்டுப்படுத்தப்படக்கூடும் என்கிறார்.
இதுதொடர்பாக மேலதிக ஆய்வுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஏற்படும் முன்னேற்றங்களைத் தொடர்ந்து, மேலும் பல புதிய தகவல்கள் தெரிய வரலாம்.

நோய்த் தொற்று ஏற்படுத்தும் டாட்டூ

‘டாட்டூ போடுவதால் பல நோய்கள் வருகின்றன. எய்ட்ஸ்கூட தொற்றலாம் என்கிறார் ராணுவ உயர் அதிகாரி ஒருவர். நிஜமாகவே டாட்டூக்களுக்குப் பின்னால் ஆபத்து இருக்கிறதா? அதை அறிய கிளம்பினோம்… சென்னை மயிலாப்பூரில் உள்ள மஹா பியூட்டி பார்லர். வயது வித்தியாசமின்றி விதவிதமான உருவங்களை தங்கள் உடம்பில் குத்திக்கொண்டிருந்தனர் டாட்டூ பிரியர்கள். ‘‘நீங்களும் குத்திக்கறீங்களா?’’ என்றபடி வரவேற்றார் உரிமையாளர் மஹாலட்சுமி.
‘‘தரமான புது நீடில், தரமான கலர்ஸ்… இதெல்லாம் வச்சு சரியான முறைப்படி டாட்டூ போட்டுக்கும்போது ஒரு பிரச்னையும் இல்லை. இப்போவெல்லாம் குழந்தைங்க கூட பவர் ரேஞ்சர்ஸ், ஸ்பைடர்மேன்னு கார்ட்டூன் கேரக்டர்ஸை வரைஞ்சுக்க வர்றாங்க. இளைஞர்கள் பெரும்பாலும் மனசுக்குப் பிடிச்சவங்க பேரை நெஞ்சுல எழுதச் சொல்லிக் கேக்கறாங்க.
மாடலிங் செய்யறவங்க இடுப்பு, கழுத்து, கால்ல டாட்டூ போட்டுக்கிட்டா, கேட் வாக் செய்யும்போது அழகா இருக்கும். மணப்பெண்களுக்கு முதுகுலயும் கையிலயும் போட்டா, வீடியோல அழகாத் தெரியும். இளம்பெண்கள் சில பேர் அழகுக்காக உதட்டு மேல மச்சம் இருக்குற மாதிரி டாட்டூ வச்சிக்கறாங்க. இப்படி மச்ச சைஸ்ல தொடங்கி உடம்பு முழுக்க போடுற சைஸ் வரை நிறைய டாட்டூ டிசைன்ஸ் இருக்கு. சிவப்பு, நீலம், ரோஸ், ஆரஞ்சு, பச்சைன்னு பல கலர்ஸ்ல போடலாம். வேண்டாம்னு நினைச்சா, லேசர் முறையில ரிமூவ் பண்ணிடவும் முடியும். முன்னாடியெல்லாம் டாட்டூ போட்டுக்கறவங்களுக்கு பாஸ்போர்ட், விசா எடுக்கறதுல சிக்கல் இருந்தது. இப்போ அதுகூட இல்லை’’ என்றார் மஹாலட்சுமி.
சென்னையைச் சேர்ந்த தோல் மருத்துவ நிபுணரான டாக்டர் பிரியாவிடம் இதுபற்றிக் கேட்டோம்…
‘‘டாட்டூ போடுவதில் பயிற்சி உள்ளவர்கள், ஊசி உள்ளிட்ட தரமான உபகரணங்கள், ஆபத்து விளைவிக்காத நிறங்கள்… இதில் ஏதாவது ஒன்று தவறினாலும் நோய் தொற்றும் ஆபத்து இருக்கிறது. புதிய ஊசியை பயன்படுத்தாவிட்டால், foreign body granu loma   என்கிற ஒருவித தோல் அலர்ஜி ஏற்பட்டு, அந்த இடத்தில் கட்டி போன்று வீங்கிக்கொள்ளும். பின்பு அந்த இடமே புண்ணாகி விடும். ஒருவருக்குப் பயன்படுத்திய ஊசியை இன்னொருவருக்குப் பயன்படுத்தும்போது, வைரஸ் தொற்றும் ஏற்படலாம். சாதாரண நோய்த் தொற்றுகள் மட்டுமின்றி, ஹெபடைடிஸ் பி, சி, எச்.ஐ.வி போன்ற ஆபத்தான நோய்கள் கூட தொற்றலாம்.
சர்க்கரை நோயாளிகள், உடலில் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் டாட்டூ போட்டுக்கொள்ளும்போது, அந்த இடத்தில் அரிப்பு, நமைச்சல் ஏற்படலாம். அப்படிப்பட்டவர்கள் முதலில் சிறிய அளவில் போட்டுப் பார்த்து, அலர்ஜியை சோதிப்பது அவசியம். டாட்டூவை அகற்ற இப்போது லேசர் சிகிச்சை உள்ளது. ஆனால் அதற்கு நிறைய பணம் செலவாகும் என்பதோடு, மாதத்திற்கு ஒரு முறை என ஆறிலிருந்து பத்து முறையாவது அந்த சிகிச்சையைச் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும் 80 முதல் 90 சதவீதம் மட்டுமே மறையும். அதிலும் ஆரஞ்சு, மஞ்சள் நிற டாட்டூக்களை அழிப்பது அத்தனை சுலபமல்ல.
டாட்டூ போட பயன்படுத்தப்படும் நிறங்களை பிக்மென்ட் (Pigment)   என்பார்கள். நம் நாட்டில் உபயோகப்படுத்தப்படும் பலவித பிக்மென்ட்களுக்கு முறையான அனுமதியே இல்லை எனலாம். பிரின்டிங் இங்க்குகளையே டாட்டூவுக்கும் பயன்படுத்துகிறார்கள். AZO என்ற பிக்மென்ட்டைப் பயன்படுத்திப் போட்ட டாட்டூவை லேசர் சிகிச்சையில் அகற்றும்போது, அது கரையும் நிலையில் சில நச்சுக்களை உருவாக்கும். இதனால் கேன்சர் வரும் ஆபத்தும் இருக்கிறது’’ என்று எச்சரிக்கிறார் பிரியா.
‘‘கல்லூரி மாணவர்கள் பலர் தங்கள் காதலியின் பெயரை டாட்டூவாக எழுதிக்கொள்கிறார்கள். கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரியும்போது, அந்தப் பெயரை அழிக்கச் சொல்லி நிறைய பேர் வருகிறார்கள். தரமற்ற பிக்மென்ட்களால் டாட்டூ போட்டிருந்தால், அதனை அழிப்பது கடினம். புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் BIORESORBABLE வகை பிக்மென்ட்டில் கரையும் தன்மை அதிகமிருப்பதால், அதில் போடும் டாட்டூக்களை எளிதாக அழித்துவிட முடியும். இது எதுவுமே தெரியாமல் நம்மவர்கள் டாட்டூவைப் போட்டுக் கொள்கிறார்கள். அதன் பின் விஷயம் தெரிந்து பலர் அவதிப்படுகிறார்கள்’’ என்று எச்சரிக்கிறார் அவர்.

நன்றி-தினகரன்

கணினி சில விளக்கங்கள்

Hard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் கரப்ட் ஆகிவிட்டதாகக் கூறுவார்கள். ஒரு முறை கெட்டுப் போனால் அதனை மீண்டும் சரி செய்வது சிரமமான காரியம். எனவே இதில் பதியப்படும் பைல்களுக்கு நகல் எடுத்து தனியே இதைப் போன்ற வேறு சாதனங்களில் பதிந்து வைப்பது நல்லது.
Web Browser: (வெப் பிரவுசர்) இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடிப்படைத் தேவையான இயக்கத் தொகுப்பு எனலாம். இதன் வழியே இணையத்தில் உள்ள பக்கங்களைப் பெற்று பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஆப்பரா போன்ற பிரவுசர்கள் இன்று பிரபலமாய்ப் பயன்படுத்தப்படுகின்றன.
Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், சாப்ட்வேர் அப்ளிகேஷன்கள் (எம்.எஸ். ஆபீஸ், கேம்ஸ் போன்றவை) ஆகிய அனைத்தும் இந்த சொல்லால் குறிப்பிடப்படும்.
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்னை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.

தேடல் பக்கத்தில் கால்குலேட்டர்

கூகுள் அண்மையில் தன் தேடல் பக்கத்தில் புதிய வசதி ஒன்றைத் தந்துள்ளது. தேடல் கட்டத்தில், நீங்கள் ஏதேனும் கணக்கீட்டினை (எ.கா. 568*(23+4)–34) டைப் செய்தால், உடனே கால்குலேட்டர் ஒன்று இயக்கிப் பார்க்க உங்களுக்கெனத் தரப்படும். இதில் சாதாரண கணக்குகளிலிருந்து சயின்டிபிக் கால்குலேஷன் வரை போட்டுப் பார்க்கலாம். மிகப் பெரிய கட்டங்களில் இந்த கால்குலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. எளிதாக இதன் கட்டங்களை அறிந்து செயல்படலாம். இதில் உள்ள எண்களை மவுஸால் கிளிக் செய்து கணக்குகளைப் போடலாம். பார்முலாக்களை அமைத்தும் விடைகளைப் பெறலாம். நாம் அமைக்கும் கணக்குகள் அதன் ஒவ்வொரு படி நிலையிலும் மேலாக நமக்குக் காட்டப்படுகின்றன. இதனால், நாம் போடும் கணக்கினை எந்த நிலையிலும் நாம் சோதனை செய்து கொள்ளலாம்.
இதுவரை, கூகுள் தேடல் கட்டத்தில், கணக்கினை டைப் செய்து அமைத்தால், உடனே அதற்கான விடை அதே கட்டத்தில் காட்டப்படும். முதல் முறையாக, கூகுள் இப்போது கால்குலேட்டர் ஒன்றைப் பல வசதிகளுடன் நமக்குத் தருகிறது. இது ஒரு சாதாரண விஷயம் தான் என்றாலும், தன் தளத்திற்கு வந்தவர்கள், தேவைக்காக வேறு ஒரு இடத்திற்குச் செல்லக் கூடாது. அனைத்தும் தரும் அட்சய பாத்திரமாக தன் தளம் இருக்க வேண்டும் என கூகுள் திட்டமிட்டு அமைக்கிறது.
ஏற்கனவே சென்ற மே மாதத்தில் கூகுள் Knowledge Graph என்ற ஒரு வசதியை அளித்தது. இதில் ஏறத்தாழ 50 கோடி மக்கள், இடம், பொருட்கள் எனப் பலவகையானவை குறித்த தகவல்கள் தரப்பட்டு வருகின்றன. இதனால் தேடலுக்கு கூகுள் சென்றவர்கள், மேலும் தகவல்களுக்காக வேறு தளங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியத்தினை கூகுள் குறைக்கிறது.

தம் சிக்கன்

 

சிக்கன் வகைகளில் அலாதியானது இந்த தம் சிக்கன். இதன் ருசிக்காக இதை விரும்பி சாப்பிடுகிறவர்கள் அதிகம். செய்து பார்த்து சுவைப்போமா?

தேவையான பொருட்கள்

சிக்கன் – 1/4 கிலோ
முந்திரிப்பருப்பு – 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ(நறுக்கியது)
தக்காளி – 200 கிராம் (நறுக்கியது)
கசகசா – 150 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 20 கிராம்
சிவப்பு காய்ந்த மிளகாய் விழுது-20 கிராம்
கொத்தமல்லி இலை-சிறிதளவு (நறுக்கியது)
பால் – 100 மில்லி
கரம் மசாலா தூள் – சிறிதளவு
உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப

செய்முறை:

பாலில் முந்திரிப்பருப்பு, கசகசா சேர்த்து விழுதாக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும். இஞ்சி, பூண்டு விழுதை சேர்க்கவும். நறுக்கிய தக்காளியையும், மிளகாய் விழுதையும் சேர்த்து வதக்கவும்.

இப்போது அரைத்த முந்திரி, கசகசா விழுதை சேர்த்து நன்கு கிளறி வதக்கவும். சிக்கனில் தேவையான உப்பு சேர்த்து சிக்கன் வேகும்வரை அடுப்பில் வைக்கவும். சிக்கன் நன்கு வெந்ததும் கரம்மசாலா தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். பரிமாறும் முன்பாக கொத்தமல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.

இப்போது மணக்கும் தம் சிக்கன் ரெடி.