Daily Archives: செப்ரெம்பர் 25th, 2012

யுவராஜ் சிங்கம்

மரணத்தை எதிர்கொள்ளும் எந்த ஒரு தருணத்தையும் கடந்து வருவது என்பது கடவுள் செயல் மட்டுமல்ல, ஒரு தனிமனிதனின் தன்னம்பிக்கைக்கு சரியான அளவுகோல், நோய் எதுவென்று அறியாத நிலையில் தோன்றும் அறிகுறியை பார்த்தே நாம் பல சமயம் ஆடிப்போய் விடுகிறோம்… ஆனால் நுரையீரலில் கேன்ஸர் என்று உறுதியான பிறகு அதில் இருந்து மீண்டதோடு மட்டுமல்லமால் களத்தில் இறங்கி அடுத்த கட்டப்போராட்டத்திற்கு தயாராவது என்பது சரித்திர நாயகர்களுக்கு மட்டுமே சாத்தியம். சேப்பாக்கத்தில் நியூஸிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங் அந்த நாயகர்களில் ஒருவராகி விட்டார். தன்னம்பிக்கையின் தலைவனாகிவிட்டார்.
"மைதானத்தில் காலை வைத்ததும் என் கண்கள் கண்ணீரால் நிரம்பின… உணர்ச்சி வசப்பட்டு உணர்வுகளற்று நின்ற அந்த நேரத்தில் எந்த டி.வி. கேமராவும் குளோஸப்பில் காட்ட முயற்சிக்காததற்கு என் மனமார்ந்த நன்றி!’ என்று நீண்ட இடைவெளிக்குப்பின் தேசத்திற்காக விளையாடிய அந்த நிமிடங்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் யுவராஜ் சிங்.
"அதிக எடை போட்டுவிட்டதால், வேகமாக நகர முடியவில்லை; பாடி ரிஃப்ளக்ஸ் போதிய அளவிற்கு இல்லை, ஏதோ சென்டிமெண்ட் சீனாக யுவராஜ்ஜை களமிறக்கி விட்டார்கள்’ என்று வட இந்திய பத்திரிகைகள் சில வழக்கம்போல் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்தை குறிவைத்த வேளையில், இந்தியாவின் ஒரு ரன் தோல்விக்கு தான் எந்தவிதத்திலும் காரணமில்லை என்பதை ரசிகர்களின் கண்களுக்கு முன் நிரூபித்துக்காட்டினார் யுவராஜ் சிங்!
மிட்விக்கெட், எக்ஸ்ட்ரா கவர் திசையில் அழகாக ஃபீல்டிங் பண்ணிய யுவராஜ், "பேண்ட் ஓவர் டைட்டாக இருப்பதால் கால்களை நகர்த்துவது கடினமாக இருக்கிறது’ என்று அருகில் நின்ற மனோஜ் திவாரியிடமும், பாலாஜியிடமும் காமெடி பண்ணி விட்டு ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஹர்பஜன்சிங்கை தனக்காக ஃபீல்டிங் பண்ணச் சொல்லிவிட்டு பெவிலியன் சென்று திரும்பினார். பெயருக்குச் சில நிமிடங்கள் மட்டுமே ஃபீல்டிங் செய்யாமல் முழுநேரமும் களத்தில் நின்றது யுவராஜின் உடல் தகுதிக்கு முதல் வெற்றி!
ஏழாவது ஓவரில் டோனி அவரை பவுலிங் செய்ய அழைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை… யுவராஜ் பந்தைக் கையில் எடுத்ததுமே அரங்கம் அதிர்ந்தது. தனது இடது கைப் பந்து வீச்சால் இரண்டு ஓவரில் வெறும் பதினான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது அவரின் பவுலிங் திறமைக்குக் கிடைத்த வெற்றி!
ஃபீல்டிங்கின் போது மெக்கல்லம் விளாசி அடித்த பந்தை ஒற்றைக் கையால் தடுத்து நான்கு ரன்னை அணிக்கு சேமித்ததோடு மட்டுமல்லாமல் தன் உள்ளங்கை வேதனைக்கு சிலநிமிடம் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்கியது இன்னமும் யுவராஜிடம் போராட்டக் குணம் குறையவில்லை என்பதை கோடிட்டுக் காட்டியது.
வெற்றிக்கு 168 ரன் என்ற சராசரி இலக்கை நியூஸிலாந்து இந்தியாவிற்கு தீர்மானித்தாலும் கடுமையாகப் போராட வேண்டிய சூழல்… மறுமுனையில் தோனி என்றுமில்லாத அளவிற்கு பந்துகளை ஏப்பம் விட்டு சொதப்ப… இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்ட்ரி என 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அதிரடி பேட்டிங்கில் அசத்தியது யுவராஜிற்குக் கிடைத்த இறுதி வெற்றி! ஆனாலும், "அணியின் தோல்வி தவிர்க்கப்படவில்லையே’ என்று நண்பர்களுடன் தன் மனவருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதை நம் காதுபடவே கேட்க முடிந்தது.
இப்படி யுவராஜின் மறுபிரவேசத்தில் மறக்க முடியாத காட்சிகள் பல… குறிப்பாக முதல்பந்தை தேர்ட்மேன் திசைக்கு திட்டமிட்டு திருப்பி தன் கணக்கை துவங்கிய யுவராஜ் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அதே திசையில் அவர் தன் முதல் பவுண்ட்ரியை அடித்த போதுதான் அரங்கத்தில் அமர்ந்திருந்த அவரது தாயாரின் முகத்தில் சிரிப்பு. "தன் மகன் ஜெயித்துவிட்டான்; மரணத்தை மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதையும் வென்றுவிட்டான்’ என்ற சந்தோஷத்தில், பெருமிதத்தில் அவர் துள்ளி குதித்த காட்சி நம் கண்களை விட்டு மறையாதது. ஒரு தாயிடம் ஒளிந்திருக்கும் குழந்தையைக் காட்டியது அந்த உற்சாகம்.
இந்த உணர்வுமிக்க தருணங்களைப் பார்த்து ரசித்த சென்னை ரசிகர்கள் முதல் போட்டியின்போது விசாகப்பட்டினத்தில் பெய்த மழைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!
ரிட்டர்ன் ஆஃப் யுவராஜ் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ரசிகனுக்கும் உற்சாக டானிக்தான்!

அழகைக் காக்க வலியில்லாத வழி!

 

அழகைக் கட்டிக் காப்பதில் அதீத ஆர்வம் கொண்டவர்கள் பெண்கள். அதனால்தான் அவர்கள் பிளாஸ்டிக் சர்ஜரி, போட்டாக்ஸ் ஊசி போன்ற வலி மிகுந்த விஷயங்களையும் நாடிச் செல்கிறார்கள்.
ஆனால் தற்போது மேலைநாடுகளில் பிரபலமாகிவரும் `பேஸ் யோகா’ என்ற `முக யோகா’, வலியின்றி முகச் சுருக்கங்கள் வராமல் தடுக்கும் என்கிறார்கள். எனவே செலவு மிகுந்த அழகு சாதனப் பொருட்களை நாட வேண்டியதில்லையாம்.

சாதாரணமாக யோகாவில் பல்வேறு ஆசனங்கள் இருப்பதைப் போல இந்த முக யோகாவில் பல்வேறு முக அசைவுகளுக்கும் வெவ்வேறு பெயரிட்டிருக்கிறார்கள். உதாரணமாக மரிலின், பம்பிள்பீ அல்லது லயன் ஆகியவை, வயதாவதைத் தடுத்து, சுருக்கங் களுக்கு அணை போடுமாம்.
பெண்களை இந்த `பேஸ் யோகா’ பெரிதும் கவர்ந்து விட்டதன் விளைவு அவர்கள் `யூடியூப்’பில் இது குறித்து ஆர்வமாகப் பார்க்கிறார்கள், `தி யோகா பேஸ்’ போன்ற புத்தகங்களை பரபரப்பாகப் புரட்டுகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தற்போது `ஐபோன்’ அப்ளிக்கேஷன்களுள் ஒன்றாக இது வந்துவிட்டது.
ஊட்டச்சத்து நிபுணரான ஜோசி கோல்டுபர்க், "வேடிக்கையாக செய்யத்தக்க, அதே நேரம் எண்ணற்ற அனுகூலங்களை அள்ளித் தரும் விஷயம் பேஸ் யோகா” என்கிறார்.
"நான் எனது சில தோழிகளுடன் அதை முயன்று பார்த்தேன். அது ரொம்பவே சுவாரசியமாக இருந்தது. நாங்கள் ஓர் வட்டமாக அமர்ந்து, வேடிக்கையாக முகத்தை அமைத்துப் பார்த்தோம். சிரிப்புப் பொங்கும் நிகழ்வாக அது இருந்தது” என்கிறார்.
"நாம் பொதுவாக உடனடித் தீர்வுகளை நாடுகிறோம். ஆனால் அவை நீண்ட கால அடிப்படையில் தீமை பயப்பவை. ஆனால் பேஸ் யோகா போன்றவை நீண்ட கால அடிப்படையில் நன்மை செய்யக்கூடியவை” என்கிறார் ஜோசி கோல்டுபர்க்.

கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை!

உலகில், எத்தனை, எத்தனையோ, வித்தியாசமான சிறைச்சாலைகளை பார்த்திருப்போம், படித்திருப்போம். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் லா பாஜ் என்ற இடத்தில் உள்ள, சான் பெட்ரோ என்ற சிறைச்சாலை, உலகின் மற்ற சிறைச்சாலைகளை விட, மிகவும் வித்தியாசமானது. இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற, 1,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மேன்ஷன்கள் போல் தோற்றமளிக்கிறது<, இந்த சிறைச்சாலை. இதில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, எந்தவித கட்டுப்பாடும் இல்லை. விரும்பும்போது, வெளியில் செல்லலாம். மாலை 6:00 மணிக்குள், சிறைக்கு திரும்பி விட வேண்டும்.
கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு பணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால், ஒரு சிறிய அறை, அந்த கைதியின் குடும்பத்துக்கு ஒதுக்கப்படும். தண்டனை காலம் முடியும் வரை, அவர்கள் அங்கு தங்கியிருக்கலாம். ஓட்டல், காய்கறி சந்தை, முடி திருத்தும் கடை என, அனைத்து வசதிகளும், சிறை வளாகத்துக்குள் உண்டு.
வி.ஐ.பி., கைதிகளுக்கு, தனி அறை உள்ளது. இந்த அறைகளில், சமையலறை, பாத்ரூம், கேபிள் "டிவி’ உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த அறைகளில் தங்குவதற்கு, மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்த சிறையில், 200 குழந்தைகள் உள்ளனர். (கைதிகளின் குழந்தைகள்) இவர்களுக்கான பொழுது போக்கு வசதியும், செய்து தரப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான சிறைச்சாலை பற்றி, இணையதளங்கள் மூலமாக தகவல் பரவியதை அடுத்து, இதைக் காண்பதற்காக, உலகம் முழுவதிலுமிருந்து, சுற்றுலா பயணிகள், இங்கு குவியத் துவங்கியுள்ளனர். சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலர், போதைப் பொருட்களை, சட்ட விரோதமாக விற்பனை செய்கின்றனர். இதை வாங்குவதற்காகவும், ஏராளமானோர் வருகின்றனர்.
இந்த வித்தியாசமான சிறைச்சாலைக்கு எதிராக, சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். "இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மிகப் பெரிய குற்றவாளிகள் உள்ளனர். கட்டுப்பாடு இல்லாததால், இவர்கள், சக கைதிகளை அடித்து, உதைத்து, பணம் மற்றும் பொருட்களை அபகரித்துக் கொள்கின்றனர். சில நேரங்களில், பெரிய அளவில் அடிதடி சம்பவங்களும் நிகழ்கின்றன. இங்கு வளரும் குழந்தைகளும், ஆரோக்கியமற்ற சூழலில் தான், வசிக்கின்றனர். இவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இந்த சிறை நிர்வாக விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும்…’ என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

மன உளைச்சலா, மாரடைப்பா? தலைமுடியை ஆராய்ந்தால் உடல் கண்டிஷன் தெரியும்

முடியின் ஆரோக்கியத்தை வைத்து மன உளைச்சல் மற்றும் மாரடைப்புக்கான சாத்தியங்களை துல்லியமாக அறிந்து கொள்ளலாம் என்கிறது லேட்டஸ்ட் ஆய்வு. தலை முடிக்கும் உடல் ஆரோக்கியத்துக்குமான தொடர்பு பற்றி கனடாவின் வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கிடியான் கொரியன், ஸ்டான் வான் யுன் தலைமையில் சமீபத்தில் விரிவான ஆய்வு நடத்தப்பட்டது.
இதய நோயால் பாதிக்கப்பட்டு இஸ்ரேலின் மேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 56 பேரின் தலைமுடியை வைத்து ஆராய்ச்சி நடந்தது. இதய பாதிப்பு இல்லாதவர்களின் முடியும் ஆய்வு செய்யப்பட்டது. இதய நோய் பாதிப்பு உள்ள அனைவரின் தலைமுடியிலும் கார்டிசால் என்ற ஸ்டீராய்டு ஹார்மோனின் அளவு அதிகம் இருப்பது பரிசோதனைகள் மூலம் தெரியவந்தது.
ஆய்வு விவரங்கள் குறித்து கிடியான் மேலும் கூறியதாவது:
மன உளைச் சலுக்கு கார்டிசால் ஹார்மோன் சுரப்பு முக்கிய காரணம். மன உளைச்சல் அதிகரித்தால், அட்ரீனல் சுரப்பியில் கார்டிசால் ஹார்மோன் அதிகம் சுரக்கும். இன்சுலினின் செயலுக்கு எதிராக செயல்படும் குணம் கொண்டது கார்டிசால். இதன் அளவு அதிகமானால், குளுக்கனோஜெனிசிஸ் வினை காரணமாக  ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. தொடர்ந்து கார்டிசால் அதிகம் சுரந்தால் `பல்வேறு பாதிப்புகள் ஏற்படும்.
தலைமுடி சராசரியாக ஒரு மாதத்துக்கு ஒரு செ.மீ. நீளம் வளர்கிறது. 1 செ.மீ. நீள தலைமுடியை ஆய்வு செய்து, அதில் கார்டிசால் அளவை கணக்கிட்டால் ஒரு மாத காலத்தில் மனஉளைச்சல் பற்றி தெரிந்துகொள்ளலாம். 6 மாத காலத்துக்கு மனஉளைச்சல் நிலவரத்தை தெரிந்துகொள்ள 6 செ.மீ. நீள தலைமுடி போதும். மேலும், கார்டிசால் அளவைக் கொண்டு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் தெரிந்துகொள்ள முடியும்.
இவ்வாறு கிடியான் கூறினார்.

நன்றி-தினகரன்

புற்றுநோய்க்கு எதிராக களமிறங்கும் எய்ட்ஸ் வைரஸ்!

 

vaires

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்களுக்கு, வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட எல்லா வகையான நுண் கிருமிகளையும் கொல்லும் திறன் அடிப்படையிலேயே உண்டு. ஆனால் இவற்றின் துணையுடன், எய்ட்ஸ் நோய் ஏற்படுத்தும் வைரஸ் கிருமியான எச்.ஐ.வி. உள்ளிட்ட சில வைரஸ்களை கொல்வது என்பது இன்னும் நமக்கு குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது!
காரணம், வைரஸ்கள் ஆள்மாறாட்டம் செய்வதில் கில்லாடிகள் என்பதுதான். அதாவது, தங்களுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் மற்றும் பல்வேறு மருந்துகளில் இருந்து தப்பிக்க, வைரஸ்கள் தங்களின் உடலமைப்பு, வெளிப்புற புரதங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவையாய் இருக்கின்றன.
ஆனால், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். அதுபோல, ஆள்மாறாட்டம் செய்வதில் முதலிடத்தில் இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ்களைப் பயன்படுத்தி, உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை அழிக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கள் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் கள்.
மனிதர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் இந்த ஆய்வு பிரான்ஸ் நாட்டின் தேசிய அறிவியல் ஆய்வு மையத்தில் நடத்தப்பட்டது. அடிப்படையில், புற்றுநோய் மருந்துகளின் வீரியத்தை மேம்படுத்தும் வேதியியல் மூலக்கூறுகளை கண்டறியும் நோக்கத்திலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய ஆய்வுகளில், குறிப்பிட்ட ஒரு உயிர்வேதியியல் வினையை தடைசெய்யும் திறனுள்ள வேதியியல் மூலக்கூறு தேர்வு செய்யப்படும். இதற்கான மருந்தியல் ஆய்வுகள் பெரும்பாலும் பாக்டீரியாக்களைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், பாக்டீரியாக்கள் மீதான ஆய்வுகளில் நன்றாக செயல்படும் மூலக்கூறுகள், சில சமயங்களில் மனித உயிரணுக்கள் மீதான ஆய்வுகளில் அதே வீரியத்துடன் செயல்படுவது இல்லை. அதனால், இத்தகைய ஆய்வுகளை தொடக்கத்திலேயே மனித உயிரணுக்கள் கொண்டு மேற்கொள்வது புத்திசாலித்தனமானது.
புதிய மருந்துகளை கண்டறிய மேற்கொள்ளப்படும் இவ்வகையான ஆய்வின் வேகத்தை அதிகப்படுத்த, மிக வேகமாக வளரும், உடலமைப்பு மற்றும் வெளிப்புற புரதங்களை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் திறனுடைய எச்.ஐ.வி. வைரஸை தேர்ந்தெடுத்தது பிரான்ஸ் நாட்டு ஆய்வுக்குழு.
ஒரு எச்.ஐ.வி. வைரஸ் வளர்ந்து இரண்டாகும் போது, ஒவ்வொரு சந்ததியிலும் சற்று மாறுபட்ட, புதிய வகையான வைரஸ்களை உற்பத்தி செய்யும் பிரத்தியேக திறனுடையது. இதனாலேயே எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பல்வேறு வகையான மருந்துகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான சிகிச்சைகளை முறியடிக்கும் திறன் எச்.ஐ.வி. வைரஸுக்கு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக் கது.
எச்.ஐ.வி. வைரஸின் இந்த தந்திரத்தை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வோம் என்று முடிவு செய்தார்கள் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர்கள். அதன்படி, புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளை தூண்டும் தன்மையுள்ள `டீ ஆக்ஸிசைட்டிடின் கைனேஸ் (டி.சி.கே.)’ எனும் புரதத்தை உற்பத்தி செய்யும் மனித மரபணுவை, எச்.ஐ.வி. வைரஸின் மரபுத்தொகையில் முதலில் பொருத்தினார்கள். இதன்மூலம், சற்றே மாறுபட்ட விதத்தில் செயல்படும் ஆயிரக்கணக்கான டி.சி.கே. புரதங்களை எச்.ஐ.வி. வைரஸ் உற்பத்தி செய்யும்.
இவற்றிலிருந்து, புற்றுநோய் மருந்துகளை அதிகமான வீரியத்துடன் செயல்படத் தூண்டும் திறனுள்ள டி.சி.கே. புரதங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை மட்டும் அதிக அளவில் உற்பத்தி செய்து கொள்ளலாம். இதன் மூலம் புற்றுநோய் மருந்துகளை குறைவான அளவு எடுத்துக்கொண்டாலே அதிக பலன் கிடைக்கும் என்பதோடு, மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
இந்த திட்டத்தின்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட எச்.ஐ.வி. வைரஸ், பல சந்ததிகள் வரை இனப்பெருக் கம் செய்யப்பட்டது. இறுதியில், சுமார் 80 வகையான டி.சி.கே. புரதங்கள் கிடைத்தன. இவற்றிலிருந்து, புற்றணுக்களை அதிக வீரியத்துடன் கொல்லும் ஒரு புரதத்தை தேர்வு செய்தனர். இந்த புரதத்தின் துணையுடன், புற்றணுக்களை கொல்ல வெறும் 1/300 அளவு புற்றுநோய் மருந்தே போதுமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இதுவரை மனிதர்களின் பரம எதிரியாக கருதப்பட்டு வந்த எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) வைரஸ் கூட, இப்போது மனிதர்களின் `நண்பேன்டா’ பட்டியலில் சேர்ந்துவிட்டது.
எது எப்படியோ, புற்றுநோய் ஒழிந்தால் சரிதான்!

கோதுமை ராகி அப்பம்

 

இந்த கோதுமை ராகி அப்பத்தை வெல்லம் கலந்து தயாரிப்பதால் எளிதில் ஜீரணமாகும். சத்தானதும் கூட. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு வகை இது. செய்முறையை பார்ப்போமா!

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – 1 கப்
ராகி மாவு – 1 கப்
வெல்லம் – 1 கப்
கனிந்த வாழைப்பழம் – 2
தேங்காய்த்துருவல் – 1 மூடி
ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன்
நெய் – தேவையான அளவு
ரீபைன்ட் எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

கோதுமை மாவு, ராகி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொள்ளவும். வெல்லத்தை தூளாக்கிக் கொள்ளவும். மாவுடன் வெல்லம், தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து வாழைப்பழத்தை பிசைந்து போட்டு தண்ணீர் விட்டு தோசை மாவு போல கரைத்துக் கொள்ளவும். தோசைக்கல்லில் லேசாக நெய் தடவி ஊத்தப்பம் போல் சிறிது சிறிதாக வட்ட வட்டமாக ஊற்றி திருப்பிப் போட்டு எடுக்கவும். நெய்யும், ரீபைன்ட் எண்ணையுமாக கலந்து தோசையை சுற்றி ஊற்றலாம். இதில் நெய்யானது அப்பத்திற்கு மணத்தையும் சுவையையும் கொடுக்கும்.

பெண்கள் ஊஞ்சல் ஆடுவது ஏன் தெரியுமா?

 

ஊஞ்சல் ஆடுவது எல்லோருக்கும் பிடித்த விஷயம். வீடடில் இருக்கும் உபகரணங்களிலே பெண்களுக்கு அதிக மகிழ்ச்சியைத் தரக் கூடியது ஊஞ்சல்தான்.

முன்பெல்லாம் ஊருக்கு வெளியே ஆலமரத்தில் ஊஞ்சல் கட்டி பெண்கள் ஆனந்தமாக ஆடினார்கள். பின்பு படிப்படியாய் அது குறைந்து, காணாமல் போய்விட்டது. இந்த ஊஞ்சல் ஆட்டம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, மன ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. அதனால் தான் வீடுகளில் தவறாமல் ஊஞ்சல் அமைக்கிறார்கள். இடவசதி குறைவாக உள்ளவர் களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் ஊஞ்சல்கள் வடிவமைக்கப்பட்டு இப்போது விற்பனைக்கு வருகின்றன.

ஊஞ்சல் ஆடுவது கடவுளுக்குகூட மகிழ்ச்சி அளிக்கும் விஷயம் என்பதால்தான், கோவில்களில் இறைவனை ஊஞ்சல்களில் வைத்து சீராட்டும் பெருமை மிகு கைங்கர்யங்கள் இன்றும் நடந்துக் கொண்டிருக்கிறது.

Page3b * ஊஞ்சலில் ஆடுவதால் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் மறைந்து பாசிடிவ் எண்ணங்கள் தோன்றுகிறது. மகிழ்ச்சி பெருகி எதிர்காலத்தைப் பற்றிய வளமான எண்ணங்களும் தோன்றுகின்றன. திரு மணங்களில் `ஊஞ்சல் சடங்கு’ இதன் அடிப்படையிலேயே நடத்தப்படுகிறது.

* ஊஞ்சல் ஆடுவதால் மனச்சோர்வு நீங்கி உடல் உற்சாகம் பெறுகிறது. நேராக அமர்ந்து கைகளை உயர்த்தி இரு பக்க சங்கலிகளையும் பிடித்துக்கொண்டு வேக மாக ஆடும் போது முதுகுத்தண்டுக்கு ரத்த ஓட்டம் படர்ந்து மூளை சுறு சுறுப்பாகிறது. இது ஒரு நல்ல பயிற்சி.

* கம்ப்யூட்டரில் மணிகணக்கில் உட்கார்ந்து முதுகுத்தண்டு வளைந்துப் போன இன் றைய பெண்கள் இந்த ஊஞ்சல் பயிற் சியை தினமும் செய்தால் முதுகுத்தண்டு வடம் பலம் பெற்று கழுத்துவலி குண மடைய வழி செய்கிறது.

*தோட்டத்தில் அமைக் கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் ஆடுவது அதிக பலனை தரக் கூடியது. மரம் செடிகளிலிருந்து வரும் பிராணவாயு வேகமாக உடல் முழுவதும் பரவி ரத்தத்தை சுத்திகரிக்கும். இதயத்திற்கு சுத்தமான பிராண வாயுவை கொடுத்து இதயத்தை சீராக இயங்கச் செய்யும். தினமும் தோட்டத்தில் ஊஞ்சல் ஆடுவர்களுக்கு இதயநோய் கட்டுப் படும்.

* ஊஞ்சல் ஆடுவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரித்து இதயத்திற்கு ரத்தம் சீராக செல்லும்.

* சாப்பிட்டவுடன் அரைமணிநேரம் மிதமான வேகத்தில் ஊஞ்சல் ஆடுவது நல்லது. சாப்பிட்ட உணவு நன்கு செரிக்க இந்த ஆட்டம் உதவும். கோபமாக இருக்கும் போது ஊஞ்சல் ஆடினால் கோபம் தணியும். வெளியில் சுற்றியலைந்துவிட்டு வந்து ஊஞ்சலில் உட்கார்ந்து கண்களை மூடி தலையை சற்றே மேலே உயர்த்தி, இரு கைகளையும் ஊஞ்சல் பலகையில் பதியவைத்து ரிலாக்ஸாக ஆடினால் களைப்பெல்லாம் பறந்து, உடலின் ஒவ்வொரு பகுதியும் ஓய்வு பெற்று நிம்மதி ஏற்படும்.

* பழங்காலத்தில் எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் ஊஞ்சல் கட்டி வைத்திருப்பார்கள். வீட்டுக்குள் வரும் தேவதைகள் ஊஞ்சலில் ஆடப் பிரியப்படுவார்கள், ஊஞ்சலில் ஆடி நல்லது செய்வார்கள் என்பதும் நம்பிக்கை. சுப காரியங்களைப் பற்றி பேசும் போது ஊஞ்சலில் உட்கார்ந்து பேசுவதும் வழக்கமாக இருந்தது.

* இல்லத்திற்கு அழகு சேர்க்கும் கலைப்பொருட்களில் ஊஞ்சலும் ஒன்று. இதை ஒரு தெய்வீக ஆசனம் என்றும் கூறுவர். வாஸ்துப் படி வீட்டின் முகப்பில் ஊஞ்சல் அமைத்தால் நல்லது.

ஊஞ்சல்கள் பலவகை:

சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெரிய பலகைகளை கொண்ட ஊஞ்சல். இது பழையகால ஊஞ்சல் என்றாலும் இதில் ஆடும்போது திரில் அதிகம்.

நவீன வகை ஊஞ்சல்கள் "சோபா” வகையை சேர்ந்தது. அமர்ந்து ஆட வசதியாக இருக்கும்.

தோட்டம் திறந்த வெளிகளுக்கு மெட்டல் ஊஞ்சல்கள் ஏற்றது.

மூங்கில் ஊஞ்சல்கள் பால்கனி படுக்கை அறைகளுக்கு ஏற்றது. மூங்கில் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும் அதனால் வெயில் காலங்களில் குளிர்ச்சியை உடலுக்கு தர வல்லது. குறுகலான இடத்தில் ஊஞ்சல்கள் அமைக்கக் கூடாது. காற்றோட்டமான இடத்தில் தாராளமான இடவசதி உள்ள இடத்தில் ஊஞ்சல்கள் அமைப்பதே நல்லது.

கூடுமானவரை ஜன்னல்கள் அருகே ஊஞ்சல் அமைப்பது நல்லது. ரம்மியமான சூழ்நிலையில் ஊஞ்சல் அமைத்தால் இளைப்பாற வசதியாக இருக்கும்.

தெய்வ பக்தி ஏற்பட…

"சிந்தனை செய் மனமே’ என்று ஒரு சொற்றொடருக்கு, ஏற்ப மனிதன் சதா காலமும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த சிந்தனையிலிருந்து எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை நிறைவேற்ற, உறுப்புகள் அனைத்தும் உதவுகின்றன.
இந்த சிந்தனைகளும், எண்ணங்களும் நல்லவையாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவை தீயவைகளாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் துன்பம் தான். நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும்.
ஒருவரிடம் நிறைய பண வசதி இருக்கிறது. அவரது எண்ணமெல்லாம், "இவ்வளவு செல்வம் இருக்கிறதே… இவற்றை நல்ல வழியில் செலவிட வேண்டுமே’ என்று எண்ணுவார். என்ன செய்யலாம் என்று சிந்திப்பார். நம்மிடம் உள்ள செல்வம், பிறருக்கு பயன்பட வேண்டும் என்று எண்ணி, ஒரு கோவிலோ, மருத்துவமனையோ, ஒரு கல்விக் கூடமோ ஏற்படுத்துவார். பணத்தை அதற்காக செலவிடுவார்.
அவரது செல்வம் நல்ல வழியில் செலவாகிறது என்று திருப்தியடைவார். மற்றும் சிலர், தம்மிடமுள்ள பணத்தை சூதாட்டம், பிராந்திக் கடை என்று பலவிதத்தில் செலவு செய்வது உண்டு. அது, அவரவர்களின் எண்ணத்தை பொறுத்தது.
ஆனால், நல்லதையே நினைத்து, நல்லதையே செய்ய வேண்டும். இப்படி செய்ய, நல்ல பழக்கம் வேண்டும். நல்ல பழக்கம் எப்படி ஏற்படும்? நல்லவர்களோடு பழக வேண்டும், மகான்களை அண்டி, அவர்களது உபதேசம் பெற வேண்டும். தர்ம சாஸ்திரங்களை அறிய வேண்டும். அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.
மற்றவர்கள் என்ன சொல்வரோ என்று எண்ண வேண்டியதில்லை. நல்ல பழக்க வழக்கங்களை அனுசரித்து வந்தாலே போதும்.
தவறு செய்பவன் தான், பிறரைக் கண்டு சங்கோஜப்படுவான்; பயப்படுவான். நல்லவனுக்கு எந்த பயமும் இல்லை; எதற்கும் சங்கோஜப்பட வேண்டிஇராது.
அதனால், பெரியோர்களையும், மகான்களையும், தரிசித்து, அவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம், நல்ல புத்தி ஏற்படும். வாழ்க்கையில் இது தானே முக்கியம். அதனால், நல்ல விஷயங்களை பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.
நல்ல விஷயம் என்பதில் முக்கியமானது தெய்வ பக்தி. அந்த தெய்வ பக்தி இருந்தால், மனமும் தெளிவடையும். ஒவ்வொரு நாளிலும் சிறிது நேரமாவது தெய்வத்தை நினைக்க வேண்டும்.