கட்டுபாடுகள் இல்லாத அதிசய சிறைச்சாலை!

உலகில், எத்தனை, எத்தனையோ, வித்தியாசமான சிறைச்சாலைகளை பார்த்திருப்போம், படித்திருப்போம். தென் அமெரிக்காவில் உள்ள பொலிவியா நாட்டின் லா பாஜ் என்ற இடத்தில் உள்ள, சான் பெட்ரோ என்ற சிறைச்சாலை, உலகின் மற்ற சிறைச்சாலைகளை விட, மிகவும் வித்தியாசமானது. இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு, தண்டனை பெற்ற, 1,500 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள மேன்ஷன்கள் போல் தோற்றமளிக்கிறது<, இந்த சிறைச்சாலை. இதில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு, எந்தவித கட்டுப்பாடும் இல்லை. விரும்பும்போது, வெளியில் செல்லலாம். மாலை 6:00 மணிக்குள், சிறைக்கு திரும்பி விட வேண்டும்.
கைதிகள், தங்கள் குடும்பத்தினருடன் தங்குவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்கு பணம் செலுத்த வேண்டும். குறிப்பிட்ட அளவு பணம் செலுத்தினால், ஒரு சிறிய அறை, அந்த கைதியின் குடும்பத்துக்கு ஒதுக்கப்படும். தண்டனை காலம் முடியும் வரை, அவர்கள் அங்கு தங்கியிருக்கலாம். ஓட்டல், காய்கறி சந்தை, முடி திருத்தும் கடை என, அனைத்து வசதிகளும், சிறை வளாகத்துக்குள் உண்டு.
வி.ஐ.பி., கைதிகளுக்கு, தனி அறை உள்ளது. இந்த அறைகளில், சமையலறை, பாத்ரூம், கேபிள் "டிவி’ உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இந்த அறைகளில் தங்குவதற்கு, மாதந்தோறும், 50 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய நிலவரப்படி, இந்த சிறையில், 200 குழந்தைகள் உள்ளனர். (கைதிகளின் குழந்தைகள்) இவர்களுக்கான பொழுது போக்கு வசதியும், செய்து தரப்பட்டுள்ளது.
இந்த வித்தியாசமான சிறைச்சாலை பற்றி, இணையதளங்கள் மூலமாக தகவல் பரவியதை அடுத்து, இதைக் காண்பதற்காக, உலகம் முழுவதிலுமிருந்து, சுற்றுலா பயணிகள், இங்கு குவியத் துவங்கியுள்ளனர். சிறையில் உள்ள குற்றவாளிகள் சிலர், போதைப் பொருட்களை, சட்ட விரோதமாக விற்பனை செய்கின்றனர். இதை வாங்குவதற்காகவும், ஏராளமானோர் வருகின்றனர்.
இந்த வித்தியாசமான சிறைச்சாலைக்கு எதிராக, சமூக ஆர்வலர்கள் கடும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். "இங்கு, பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட மிகப் பெரிய குற்றவாளிகள் உள்ளனர். கட்டுப்பாடு இல்லாததால், இவர்கள், சக கைதிகளை அடித்து, உதைத்து, பணம் மற்றும் பொருட்களை அபகரித்துக் கொள்கின்றனர். சில நேரங்களில், பெரிய அளவில் அடிதடி சம்பவங்களும் நிகழ்கின்றன. இங்கு வளரும் குழந்தைகளும், ஆரோக்கியமற்ற சூழலில் தான், வசிக்கின்றனர். இவர்களின் எதிர்காலம், பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், இந்த சிறை நிர்வாக விஷயத்தில், அரசு கவனம் செலுத்த வேண்டும்…’ என்கின்றனர், சமூக ஆர்வலர்கள்.

%d bloggers like this: