தெய்வ பக்தி ஏற்பட…

"சிந்தனை செய் மனமே’ என்று ஒரு சொற்றொடருக்கு, ஏற்ப மனிதன் சதா காலமும் எதைப் பற்றியாவது சிந்தித்துக் கொண்டு தான் இருக்கிறான். இந்த சிந்தனையிலிருந்து எண்ணங்கள், ஆசைகள் உண்டாகின்றன. அவைகளை நிறைவேற்ற, உறுப்புகள் அனைத்தும் உதவுகின்றன.
இந்த சிந்தனைகளும், எண்ணங்களும் நல்லவையாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இவை தீயவைகளாக இருந்து விட்டால், தனக்கும், பிறருக்கும் துன்பம் தான். நல்ல எண்ணங்கள் இருக்க வேண்டும்.
ஒருவரிடம் நிறைய பண வசதி இருக்கிறது. அவரது எண்ணமெல்லாம், "இவ்வளவு செல்வம் இருக்கிறதே… இவற்றை நல்ல வழியில் செலவிட வேண்டுமே’ என்று எண்ணுவார். என்ன செய்யலாம் என்று சிந்திப்பார். நம்மிடம் உள்ள செல்வம், பிறருக்கு பயன்பட வேண்டும் என்று எண்ணி, ஒரு கோவிலோ, மருத்துவமனையோ, ஒரு கல்விக் கூடமோ ஏற்படுத்துவார். பணத்தை அதற்காக செலவிடுவார்.
அவரது செல்வம் நல்ல வழியில் செலவாகிறது என்று திருப்தியடைவார். மற்றும் சிலர், தம்மிடமுள்ள பணத்தை சூதாட்டம், பிராந்திக் கடை என்று பலவிதத்தில் செலவு செய்வது உண்டு. அது, அவரவர்களின் எண்ணத்தை பொறுத்தது.
ஆனால், நல்லதையே நினைத்து, நல்லதையே செய்ய வேண்டும். இப்படி செய்ய, நல்ல பழக்கம் வேண்டும். நல்ல பழக்கம் எப்படி ஏற்படும்? நல்லவர்களோடு பழக வேண்டும், மகான்களை அண்டி, அவர்களது உபதேசம் பெற வேண்டும். தர்ம சாஸ்திரங்களை அறிய வேண்டும். அதன்படி நடக்க முயற்சிக்க வேண்டும்.
மற்றவர்கள் என்ன சொல்வரோ என்று எண்ண வேண்டியதில்லை. நல்ல பழக்க வழக்கங்களை அனுசரித்து வந்தாலே போதும்.
தவறு செய்பவன் தான், பிறரைக் கண்டு சங்கோஜப்படுவான்; பயப்படுவான். நல்லவனுக்கு எந்த பயமும் இல்லை; எதற்கும் சங்கோஜப்பட வேண்டிஇராது.
அதனால், பெரியோர்களையும், மகான்களையும், தரிசித்து, அவர்களோடு சேர்ந்தால் நல்ல பழக்கம், நல்ல புத்தி ஏற்படும். வாழ்க்கையில் இது தானே முக்கியம். அதனால், நல்ல விஷயங்களை பற்றி சிந்தனை செய்ய வேண்டும்.
நல்ல விஷயம் என்பதில் முக்கியமானது தெய்வ பக்தி. அந்த தெய்வ பக்தி இருந்தால், மனமும் தெளிவடையும். ஒவ்வொரு நாளிலும் சிறிது நேரமாவது தெய்வத்தை நினைக்க வேண்டும்.

%d bloggers like this: