புற்றுநோய்க்கு எதிராக களமிறங்கும் எய்ட்ஸ் வைரஸ்!

 

vaires

நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு உயிரணுக்களுக்கு, வைரஸ், பாக்டீரியா உள்ளிட்ட எல்லா வகையான நுண் கிருமிகளையும் கொல்லும் திறன் அடிப்படையிலேயே உண்டு. ஆனால் இவற்றின் துணையுடன், எய்ட்ஸ் நோய் ஏற்படுத்தும் வைரஸ் கிருமியான எச்.ஐ.வி. உள்ளிட்ட சில வைரஸ்களை கொல்வது என்பது இன்னும் நமக்கு குதிரைக் கொம்பாகத்தான் இருக்கிறது!
காரணம், வைரஸ்கள் ஆள்மாறாட்டம் செய்வதில் கில்லாடிகள் என்பதுதான். அதாவது, தங்களுக்கு எதிராக செயல்படும் நோய் எதிர்ப்பு உயிரணுக்கள் மற்றும் பல்வேறு மருந்துகளில் இருந்து தப்பிக்க, வைரஸ்கள் தங்களின் உடலமைப்பு, வெளிப்புற புரதங்கள் போன்றவற்றை தொடர்ச்சியாக மாற்றிக்கொள்ளும் திறன் கொண்டவையாய் இருக்கின்றன.
ஆனால், முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும் என்பார்கள். அதுபோல, ஆள்மாறாட்டம் செய்வதில் முதலிடத்தில் இருக்கும் எச்.ஐ.வி. வைரஸ்களைப் பயன்படுத்தி, உயிர்க்கொல்லி நோயான புற்றுநோயை அழிக்கும் மருந்துகளை தயாரிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் கள் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர் கள்.
மனிதர்களின் வயிற்றில் பாலை வார்க்கும் இந்த ஆய்வு பிரான்ஸ் நாட்டின் தேசிய அறிவியல் ஆய்வு மையத்தில் நடத்தப்பட்டது. அடிப்படையில், புற்றுநோய் மருந்துகளின் வீரியத்தை மேம்படுத்தும் வேதியியல் மூலக்கூறுகளை கண்டறியும் நோக்கத்திலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்தகைய ஆய்வுகளில், குறிப்பிட்ட ஒரு உயிர்வேதியியல் வினையை தடைசெய்யும் திறனுள்ள வேதியியல் மூலக்கூறு தேர்வு செய்யப்படும். இதற்கான மருந்தியல் ஆய்வுகள் பெரும்பாலும் பாக்டீரியாக்களைக் கொண்டே மேற்கொள்ளப்படுகின்றன.
ஆனால், பாக்டீரியாக்கள் மீதான ஆய்வுகளில் நன்றாக செயல்படும் மூலக்கூறுகள், சில சமயங்களில் மனித உயிரணுக்கள் மீதான ஆய்வுகளில் அதே வீரியத்துடன் செயல்படுவது இல்லை. அதனால், இத்தகைய ஆய்வுகளை தொடக்கத்திலேயே மனித உயிரணுக்கள் கொண்டு மேற்கொள்வது புத்திசாலித்தனமானது.
புதிய மருந்துகளை கண்டறிய மேற்கொள்ளப்படும் இவ்வகையான ஆய்வின் வேகத்தை அதிகப்படுத்த, மிக வேகமாக வளரும், உடலமைப்பு மற்றும் வெளிப்புற புரதங்களை அடிக்கடி மாற்றிக்கொள்ளும் திறனுடைய எச்.ஐ.வி. வைரஸை தேர்ந்தெடுத்தது பிரான்ஸ் நாட்டு ஆய்வுக்குழு.
ஒரு எச்.ஐ.வி. வைரஸ் வளர்ந்து இரண்டாகும் போது, ஒவ்வொரு சந்ததியிலும் சற்று மாறுபட்ட, புதிய வகையான வைரஸ்களை உற்பத்தி செய்யும் பிரத்தியேக திறனுடையது. இதனாலேயே எய்ட்ஸ் நோய்க்கு எதிரான பல்வேறு வகையான மருந்துகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிரான சிகிச்சைகளை முறியடிக்கும் திறன் எச்.ஐ.வி. வைரஸுக்கு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக் கது.
எச்.ஐ.வி. வைரஸின் இந்த தந்திரத்தை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்வோம் என்று முடிவு செய்தார்கள் பிரான்ஸ் நாட்டு ஆய்வாளர்கள். அதன்படி, புற்றுநோய்க்கு எதிரான மருந்துகளை தூண்டும் தன்மையுள்ள `டீ ஆக்ஸிசைட்டிடின் கைனேஸ் (டி.சி.கே.)’ எனும் புரதத்தை உற்பத்தி செய்யும் மனித மரபணுவை, எச்.ஐ.வி. வைரஸின் மரபுத்தொகையில் முதலில் பொருத்தினார்கள். இதன்மூலம், சற்றே மாறுபட்ட விதத்தில் செயல்படும் ஆயிரக்கணக்கான டி.சி.கே. புரதங்களை எச்.ஐ.வி. வைரஸ் உற்பத்தி செய்யும்.
இவற்றிலிருந்து, புற்றுநோய் மருந்துகளை அதிகமான வீரியத்துடன் செயல்படத் தூண்டும் திறனுள்ள டி.சி.கே. புரதங்களை தேர்ந்தெடுத்து, அவற்றை மட்டும் அதிக அளவில் உற்பத்தி செய்து கொள்ளலாம். இதன் மூலம் புற்றுநோய் மருந்துகளை குறைவான அளவு எடுத்துக்கொண்டாலே அதிக பலன் கிடைக்கும் என்பதோடு, மருந்தினால் ஏற்படும் பக்க விளைவுகளும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.
இந்த திட்டத்தின்படி மரபணு மாற்றம் செய்யப்பட்ட எச்.ஐ.வி. வைரஸ், பல சந்ததிகள் வரை இனப்பெருக் கம் செய்யப்பட்டது. இறுதியில், சுமார் 80 வகையான டி.சி.கே. புரதங்கள் கிடைத்தன. இவற்றிலிருந்து, புற்றணுக்களை அதிக வீரியத்துடன் கொல்லும் ஒரு புரதத்தை தேர்வு செய்தனர். இந்த புரதத்தின் துணையுடன், புற்றணுக்களை கொல்ல வெறும் 1/300 அளவு புற்றுநோய் மருந்தே போதுமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக, இதுவரை மனிதர்களின் பரம எதிரியாக கருதப்பட்டு வந்த எச்.ஐ.வி. (எய்ட்ஸ்) வைரஸ் கூட, இப்போது மனிதர்களின் `நண்பேன்டா’ பட்டியலில் சேர்ந்துவிட்டது.
எது எப்படியோ, புற்றுநோய் ஒழிந்தால் சரிதான்!

%d bloggers like this: