யுவராஜ் சிங்கம்

மரணத்தை எதிர்கொள்ளும் எந்த ஒரு தருணத்தையும் கடந்து வருவது என்பது கடவுள் செயல் மட்டுமல்ல, ஒரு தனிமனிதனின் தன்னம்பிக்கைக்கு சரியான அளவுகோல், நோய் எதுவென்று அறியாத நிலையில் தோன்றும் அறிகுறியை பார்த்தே நாம் பல சமயம் ஆடிப்போய் விடுகிறோம்… ஆனால் நுரையீரலில் கேன்ஸர் என்று உறுதியான பிறகு அதில் இருந்து மீண்டதோடு மட்டுமல்லமால் களத்தில் இறங்கி அடுத்த கட்டப்போராட்டத்திற்கு தயாராவது என்பது சரித்திர நாயகர்களுக்கு மட்டுமே சாத்தியம். சேப்பாக்கத்தில் நியூஸிலாந்திற்கு எதிரான டி20 போட்டியில் களமிறங்கிய யுவராஜ் சிங் அந்த நாயகர்களில் ஒருவராகி விட்டார். தன்னம்பிக்கையின் தலைவனாகிவிட்டார்.
"மைதானத்தில் காலை வைத்ததும் என் கண்கள் கண்ணீரால் நிரம்பின… உணர்ச்சி வசப்பட்டு உணர்வுகளற்று நின்ற அந்த நேரத்தில் எந்த டி.வி. கேமராவும் குளோஸப்பில் காட்ட முயற்சிக்காததற்கு என் மனமார்ந்த நன்றி!’ என்று நீண்ட இடைவெளிக்குப்பின் தேசத்திற்காக விளையாடிய அந்த நிமிடங்களை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் யுவராஜ் சிங்.
"அதிக எடை போட்டுவிட்டதால், வேகமாக நகர முடியவில்லை; பாடி ரிஃப்ளக்ஸ் போதிய அளவிற்கு இல்லை, ஏதோ சென்டிமெண்ட் சீனாக யுவராஜ்ஜை களமிறக்கி விட்டார்கள்’ என்று வட இந்திய பத்திரிகைகள் சில வழக்கம்போல் தேர்வுக் குழுத் தலைவர் ஸ்ரீகாந்தை குறிவைத்த வேளையில், இந்தியாவின் ஒரு ரன் தோல்விக்கு தான் எந்தவிதத்திலும் காரணமில்லை என்பதை ரசிகர்களின் கண்களுக்கு முன் நிரூபித்துக்காட்டினார் யுவராஜ் சிங்!
மிட்விக்கெட், எக்ஸ்ட்ரா கவர் திசையில் அழகாக ஃபீல்டிங் பண்ணிய யுவராஜ், "பேண்ட் ஓவர் டைட்டாக இருப்பதால் கால்களை நகர்த்துவது கடினமாக இருக்கிறது’ என்று அருகில் நின்ற மனோஜ் திவாரியிடமும், பாலாஜியிடமும் காமெடி பண்ணி விட்டு ஒரு சில நிமிடங்கள் மட்டும் ஹர்பஜன்சிங்கை தனக்காக ஃபீல்டிங் பண்ணச் சொல்லிவிட்டு பெவிலியன் சென்று திரும்பினார். பெயருக்குச் சில நிமிடங்கள் மட்டுமே ஃபீல்டிங் செய்யாமல் முழுநேரமும் களத்தில் நின்றது யுவராஜின் உடல் தகுதிக்கு முதல் வெற்றி!
ஏழாவது ஓவரில் டோனி அவரை பவுலிங் செய்ய அழைப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை… யுவராஜ் பந்தைக் கையில் எடுத்ததுமே அரங்கம் அதிர்ந்தது. தனது இடது கைப் பந்து வீச்சால் இரண்டு ஓவரில் வெறும் பதினான்கு ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தது அவரின் பவுலிங் திறமைக்குக் கிடைத்த வெற்றி!
ஃபீல்டிங்கின் போது மெக்கல்லம் விளாசி அடித்த பந்தை ஒற்றைக் கையால் தடுத்து நான்கு ரன்னை அணிக்கு சேமித்ததோடு மட்டுமல்லாமல் தன் உள்ளங்கை வேதனைக்கு சிலநிமிடம் மட்டுமே சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டும் களத்தில் இறங்கியது இன்னமும் யுவராஜிடம் போராட்டக் குணம் குறையவில்லை என்பதை கோடிட்டுக் காட்டியது.
வெற்றிக்கு 168 ரன் என்ற சராசரி இலக்கை நியூஸிலாந்து இந்தியாவிற்கு தீர்மானித்தாலும் கடுமையாகப் போராட வேண்டிய சூழல்… மறுமுனையில் தோனி என்றுமில்லாத அளவிற்கு பந்துகளை ஏப்பம் விட்டு சொதப்ப… இரண்டு சிக்ஸர் ஒரு பவுண்ட்ரி என 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து அதிரடி பேட்டிங்கில் அசத்தியது யுவராஜிற்குக் கிடைத்த இறுதி வெற்றி! ஆனாலும், "அணியின் தோல்வி தவிர்க்கப்படவில்லையே’ என்று நண்பர்களுடன் தன் மனவருத்தத்தைப் பகிர்ந்து கொண்டதை நம் காதுபடவே கேட்க முடிந்தது.
இப்படி யுவராஜின் மறுபிரவேசத்தில் மறக்க முடியாத காட்சிகள் பல… குறிப்பாக முதல்பந்தை தேர்ட்மேன் திசைக்கு திட்டமிட்டு திருப்பி தன் கணக்கை துவங்கிய யுவராஜ் கொஞ்சம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார். அதே திசையில் அவர் தன் முதல் பவுண்ட்ரியை அடித்த போதுதான் அரங்கத்தில் அமர்ந்திருந்த அவரது தாயாரின் முகத்தில் சிரிப்பு. "தன் மகன் ஜெயித்துவிட்டான்; மரணத்தை மட்டுமல்ல இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் மனதையும் வென்றுவிட்டான்’ என்ற சந்தோஷத்தில், பெருமிதத்தில் அவர் துள்ளி குதித்த காட்சி நம் கண்களை விட்டு மறையாதது. ஒரு தாயிடம் ஒளிந்திருக்கும் குழந்தையைக் காட்டியது அந்த உற்சாகம்.
இந்த உணர்வுமிக்க தருணங்களைப் பார்த்து ரசித்த சென்னை ரசிகர்கள் முதல் போட்டியின்போது விசாகப்பட்டினத்தில் பெய்த மழைக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்!
ரிட்டர்ன் ஆஃப் யுவராஜ் இந்திய கிரிக்கெட்டுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு ரசிகனுக்கும் உற்சாக டானிக்தான்!

One response

%d bloggers like this: