தவறு செய்தவர்களை மன்னியுங்கள்!-செப்., 27 நரசிங்க முனையரையர் குருபூஜை

தவறு செய்யாத மனிதர்களே பூமியில் இல்லை. இறைவன் கூட மனிதனாகப் பிறக்கும் போது, தர்மத்தைக் காப்பதற்காக, மனித இயல்புக்கேற்ப சில சமயங்களில் வாழ்க்கை நியதிகளை மீற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதே நேரம், தவறு செய்தவர்களை ஒரேயடியாக வெறுத்து விட வேண்டும் என்ற அவசியமில்லை.
நம்மில் பலர், சிலரால் ஏமாற்றப்பட்டிருக் கலாம், வஞ்சிக்கப்பட்டிருக்கலாம். அவர்கள் நமக்கு செய்த துரோகம், நம் இதயத்தில் தீராத காயத்தை ஏற்படுத்தி இருக்கும். ஆனாலும், அவற்றை மறந்து மன்னிப்பதே, இறைவனின் சன்னிதானத்தில் நமக்கு பெருமையைத் தரும். அத்தகைய பெருமைக்கு சொந்தக்காரர் தான், மாமன்னர் நரசிங்க முனையரையர்.
திருமுனைப்பாடி நாட்டை ஆட்சி செய்தவர் நரசிங்க முனையரையர். இவரது நண்பர் சடையனார், திருநாவலூரில் வசித்து வந் தார். சடையனாரின் மனைவி இசைஞானியார். இவர்களுக்கு பிறந்த மகனே சுந்தரர். குழந்தை சுந்தரர் மிகவும் அழகாக இருப்பார். இக்காலத்தில், குழந்தைகள் நடை வண்டி ஓட்டி விளையாடுவது போல, அன்று, சிறு தேர்களை குழந்தைகள் ஓட்டி விளை யாடுவர். குழந்தையான சுந்தரரும் அவ்வாறு விளையாடிக் கொண்டிருந்த சமயத்தில், மன்னர் நரசிங்க முனையரையர் அவ்வழியாக தேரில் வந்தார்.
சிறுதேரை, பல குழந்தைகள் ஓட்டி விளையாடிக் கொண்டிருந் தாலும், சுந்தரரின், "பளிச்’ அழகு, முனையரையரை கவர்ந்தது. அந்த குழந்தையைத் தானே வளர்த்தால் என்ன என்ற எண்ணம் மேலிடவே, குழந்தை யின் பெற்றோரைப் பற்றி விசாரித்தார். அந்த குழந்தை, தன் நண்பர் சடையனாரின் குழந்தை என்பதை அறிந்து மகிழ்ந்தார். அவரிடம் பேசி, குழந்தையை அரண்மனையிலேயே வளர்க்க அனுமதி கேட்டார். சடை யனாரும் ஒப்புக்கொண்டார்.
பக்தனுக்கு அடிப்படை குணம் இரக்கம். அது நிறையவே இருந்தது மன்னர் முனையரையரிடம்; அவர் சிறந்த சிவபக்தர்.
ஒருமுறை, திருவாதிரை திருநாளன்று மன்னர், பக்தர் களுக்கு பொன்னும், மணியும் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த வரிசையில் ஒரு பெண் பித்தனும் நின்றான். அவனுக்கு பெண் பித்து காரணமாக நோய் ஏற்பட்டிருந்தது. உடலில் புண்கள் நிறைந்து காணப்பட்டன. அவனுடன் வரிசையில் நின்றவர்கள் ஒதுங்கி நிற்க ஆரம்பித்தனர்.
அவனுக்கு ஆறுதல் தருவார் யாருமில்லை. மன்னர், அவனை கண்டதும் கையெடுத்து வணங்கினார். யாரொருவர் உடல் முழுவதும் திருநீறு அணிந்து சைவப்பழமாகக் காட்சியளிக் கிறாரோ, அவர் விரோதி ஆயினும் அவர்களுக்கு சேவை செய்வது மன்னரின் பழக்கம். அந்த பித்தனும் மேனியெங்கும் திருநீறு பூசி வந்ததால், மன்னர் அவனை மார்போடு அணைத்து ஆறுதல் கூறினார். அவனுக்கு நோய் இருந்தாலும், இரக்கத்துடன் அவனைத் தழுவியது, அவனுக்கு பெரும் ஆறுதலைத் தந்தது. எல்லாரும் வெறுத்த நிலை யில், நாட்டின் மன்னன், கடவுள் போல ஆறுதல் அளித்தது இதமாய் இருந்தது. அவனுக்கும் பொருட்களை வாரி வழங்கினார் மன்னர். இவ்வாறு தவறு செய்து துன்பப்படும் உயிர்களிட மும் கருணை காட்டிய வள்ளலாகத் திகழ்ந்தார் முனையரையர்.
சுந்தரரை வளர்ப்பு மகனாகப் பெற்ற இவர், கொடுத்து வைத்தவராகவும் விளங்கினார். சுந்தரர் சிவ பெருமானின் நண்பராகும் பேறு பெற்றார். அத்தகைய பிள்ளையை வளர்க்கும் பாக்கியத்தை இறைவன் முனையரையருக்கு அளித்தார். அதன் காரணமாகவும், சிவத் தொண்டு காரணமாகவும், நரசிங்க முனையரையரும் நாயன்மார் வரிசையில் இடம் பெற்றார். அவரது குருபூஜை, புரட்டாசி மாதம், சதயம் நட்சத்திரத்தில் அனுஷ்டிக் கப்படுகிறது. இந்நாளில், சிவாலயங்களில் உள்ள நாயன்மார் சன்னிதியில் பூஜை செய்ய வேண்டும். நரசிங்க முனையரையருக்கு பட்டு வஸ்திரம் சாத்த வேண்டும். தவறு செய்தவர்களையும் மன்னிக்கும் மனோ நிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

%d bloggers like this: