Daily Archives: செப்ரெம்பர் 27th, 2012

பணிபுரியும் பெண்கள் ஆரோக்கியமா இருக்காங்க!

 

`ஹோம் மேக்கர்’ எனப்படும் வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை விட, வேலைக்குச் செல்லும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கிறார்கள் என்கிறது ஒரு புதிய ஆய்வு.

வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு, வீட்டில் உள்ள சக பெண்மணிகளை விட கூடுதல் அனு கூலங்கள் இருக்கின்றன. அதாவது, சம்பளம் என்ற வருவாய் மட்டுமின்றி, ஆரோக்கியம் என்ற அம்சமும் கூட என்கின்றனர் ஆய்வாளர்கள்.
அக்ரான் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியர் அட்ரியான் பிரே இந்த ஆய்வுக்குத் தலைமை தாங்கி நடத்தினார்.
அவர் கூறும்போது, “வேலைக்குப் போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள், பகுதி நேரமாகப் பணிபுரியும் பெண்கள் அல்லது சமீபமாக வேலையை இழந்த பெண்கள் ஆகியோருடன் ஒப்பிடும்போது, அன்றாடம் முழு நேர அலுவலகப் பணிபுரியும் பெண்கள் மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறார்கள். குழந்தை பெற்ற பிறகு சீக்கிரமே வேலைக்குத் திரும்பும் இளந்தாய்மார்களுக்கு நல்ல மனநலமும், உடல்நலமும் இருக் கிறது. அவர்கள் 40 வயதை எட்டுகையில் நல்ல சுறுசுறுப்புடனும், உற்சாகத்துடனும் காணப்படுகிறார்கள். அந்தப் பெண்மணிகள் மத்தியில் மனஅழுத்தமும் குறைவாகக் காணப்படுகிறது” என்கிறார்.
வீடு, அலுவலகம் என்று இரண்டு இடங்களின் நெருக்கடிகளையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதே பணிபுரியும் பெண்கள் பலரின் குறைபாடாக இருக்கிறது. அதற்கு எதிராக உள்ள புதிய ஆய்வு, நிச்சயம் புதுமையானதுதான்!

ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?

வால்மார்ட்டை ஆதரிக்கும் ‘அறிவாளிகள்’ தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து கொள்ளலாம்.

ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?‘வால்மார்ட் வந்தால் வேலைவாய்ப்புகள் பெருகும். நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும்’ என்று ஊடகங்கள் மற்றும் தாராளமயதாசர்களால் கொடிபிடிக்கப்படுகிறது. ‘சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு வந்தால்தான் நாடு முன்னேற முடியும், நாட்டு மக்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்க முடியும்’ என்று நாட்டை ஆளும் பணியை அன்னிய நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடுவதற்கு போட்டி போடுகின்றனர் ஆளும் காங்கிரசு கட்சியும் அதை எதிர்ப்பது போல பாவனை செய்யும் பாரதீய ஜனதா கட்சியும்.

நமது நாட்டில் இப்போது செயல்படும் சில்லறை வணிக முறையில் எத்தகைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன? அவற்றுக்கு அரசு ஆதரவு அல்லது மானியம் அல்லது நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்று பார்க்கலாம்?

சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில், பேருந்து ஓடும் சாலையிலிருந்து பிரிந்து போகும் தெருவில் இருக்கும் கடையை எடுத்துக் கொள்வோம். சுமார் 300 சதுர அடிக்கும் குறைவான இடத்தில் அமைந்திருக்கிறது அந்தக் மளிகைக் கடை. போட்டிக்கும் குறைவில்லாத சூழல். இரண்டு கடை தள்ளி மற்றொரு மளிகைக் கடை இருக்கிறது. இருநூறு மீட்டர் தொலைவில் இன்னொரு மளிகைக் கடையும் உண்டு. பிரிந்து போகும் கிளைத் தெருக்களில் சின்னச் சின்னதாக பல மளிகைக் கடைகள். மெயின் ரோட்டைத் தாண்டி மறுபகுதியில் மளிகைக்கடையாக இருந்து சூப்பர் மார்கெட்டாக மாறிய கடைகள், பிர்லா குழுமத்தின் மோர் சூப்பர் மார்கெட், ரிலையன்ஸ் பிரெஷ் கடைகள் என்று கார்பொரேட் நிறுவன பேரங்காடிகள்.

இந்த வட்டாரத்தில் பெருமளவு சுறுசுறுப்பாக வியாபாரம் நடப்பது இந்தக் கடையில்தான்.

கடையின் உரிமையாளர், அவர் மனைவி, தம்பிகள், வயதான தந்தை என்று 6 குடும்ப உறுப்பினர்கள் கடை வேலைகளில் ஈடுபடுகிறார்கள். ஆள் மாறி மாறி காலையில் 6 மணியிலிருந்து இரவு 11 மணி வரை கடை திறந்திருப்பதற்கு தேவையான வேலைகளை செய்கிறார்கள். இவர்களைத் தவிர சம்பளத்துக்கு இரண்டு பேர் வைத்திருக்கிறார். மொத்தம் 8 பேர் நேரடியாக வாழ்க்கை நடத்துகிறார்கள். சொந்தமாக வீடு கட்டி வசதியாகவே வாழ்கிறார்கள்.

மளிகைச் சாமான்கள், பால், காய்கறி, தண்ணீர், தின்பண்டங்கள் மற்றும் சகலவிதமான வீட்டு உபயோக பொருட்களை விற்கிறார்கள்.

உரிமையாளர் 4 மணிக்கு எழுந்து சந்தைக்கு காய்கறி வாங்கப் போவார். ஆறரை மணிக்கெல்லாம் ஒரு தம்பி வந்து கடையை திறப்பார். சந்தையிலிருந்து திரும்பி வந்தவரும் பொருட்களை எடுத்துக் கொடுக்க நிற்பார். காலை நேரம் சுறுசுறுப்பான நேரம். பால் வாங்க வருபவர்கள், அன்று வாங்கி வரும் காய்கறி வாங்கிப் போக வருபவர்கள் என்று பரபரப்பாக இயங்கும். அந்த நேரத்தில் வயதான தந்தையும் உதவிக்கு சேர்ந்து கொள்வார். பகல் வேளையில் கணவன், மனைவி இருவரில் ஒருவர் மாறி மாறி யாராவது ஒருவர் கடையில் இருப்பார்கள். தண்ணீர், பால், வீடுகளுக்கு பொருட்களை கொண்டு கொடுப்பது போன்ற வேலைகளை சம்பளத்துக்கு இருக்கும் இரண்டு பையன்கள் வேலை செய்வார்கள்.

இரவு 10.30 வரை கடை திறந்திருக்கும். ஓய்வாக இருக்கும் போது பொருட்களை அடுக்கி வைப்பது, கணக்கு எடுப்பது போன்ற பணிகளை செய்ய வேண்டியதுதான். வாரத்துக்கு 7 நாளும் உழைப்பு, வார விடுமுறை கிடையாது. தவிர்க்க முடியாத குடும்ப நிகழ்வுகளுக்குப் போக வேண்டியிருந்தால் ஒழிய கடைக்கு விடுமுறை கிடையாது.

இது போன்ற கடைக்குப் பொருள் சப்ளை செய்யும் நிறுவனங்கள் எத்தகையவை, அவற்றில் எவ்வளவு பேர் வேலை பார்ப்பார்கள்?

சுமார் 100க்கும் மேற்பட்ட சப்ளையர்கள் பொருட்களைக் கொண்டு வந்து போடுகிறார்கள். அவற்றில் தயாரிப்பு நிறுவனங்களின் ஏஜன்சிகளும், நேரடியாக பொருட்களை தயாரித்து கொண்டு வருபவர்களும் அடங்குவார்கள்.

ஆச்சி மசாலா, சக்தி மசாலா, அரசன் சோப்பு, இதயம் நல்லெண்ணெய், பிராண்டட் பருப்பு வகைகள், எழுதுபொருட்கள் போன்ற பொருட்களுக்கான ஏஜன்சிகளில் சுமார் 5 முதல் 10 பேர் வேலை செய்கிறார்கள். குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் கடைகளுக்கு அவர்கள் பொருட்களை கொண்டு தருகிறார்கள். இத்தகைய ஏஜன்சிகளில் சேல்ஸ்மேன்கள், சப்ளையர்கள், சேல்ஸ் மேனேஜர்கள் போன்றவர்கள் கடைகளுக்கு பொருட்களை கொண்டு சேர்ப்பதையும், விற்ற பொருட்களுக்கான பணத்தை வசூல் செய்வதையும் செய்கிறார்கள். இந்த நிறுவனங்களுக்கான பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் நூற்றுக்கணக்கான பேர் வேலை செய்வார்கள். அவை மாநிலம் முழுமைக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் அமைந்திருக்கலாம்.

இரண்டாவதாக, சேமியா, அப்பளம், ஜூஸ், சுக்கு, ஆசிட், லோசன், கடலை, ஓம திரவம், சிப்ஸ், தரை துடைப்பு, துடைப்பம், கற்கண்டு, முறுக்கு, பிஸ்கட், லோஷன், துடைப்பம், கடலை மிட்டாய், மெழுகுவர்த்தி, கருவாடு போன்ற பொருட்களை செய்து வழங்குபவர்கள். இவை பெரும்பாலும் குடிசைத் தொழில்களாக செயல்படுகின்றன. நகரத்தைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலும், புறநகர்ப் பகுதிகளிலும் வீடுகளில் பொருட்கள் செய்யப்பட்டு எடுத்து வரப்படுகின்றன. ஒரு மளிகைக்கடையில் விற்கப்படும் இத்தகைய பொருட்களை செய்யும் தொழில்களில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். பொருட்களை டூவீலர் அல்லது சைக்கிளில் கொண்டு வந்து கடையில் போட்டு விட்டு, பணம் வாங்கிக் கொண்டு போவார்கள்.

சுமார் 50 வகையான இத்தகைய பொருட்களை தயாரிப்பதில் ஆயிரக்கணக்கான பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைக்கிறது. .

ஒரு அண்ணாச்சி கடை எத்தனை பேருக்கு வாழ்வளிக்கிறது ?முட்டை கொண்டு வந்து தருபவர் கோழிப்பண்ணைகளிலிருந்து வந்து இறங்கும் முட்டைகளை மொத்தமாக வாங்கி சைக்கிளில் கட்டி எடுத்து வந்து கடைகளுக்குக் கொடுத்து விட்டுப் போவார். பால், மோர், தயிர் போன்றவற்றுக்கு ஆவின், ஆரோக்கியா ஏஜன்சிகளை கடைக்காரரே எடுத்திருக்கிறார். ஆவின் நிறுவனத்தின் மாநிலம் முழுவதற்குமான கூட்டுறவு பண்ணைகள், பால் பிடித்து வரும் வண்டிகள், பால் பதப்படுத்தும் தொழிலகங்கள், பால் கொண்டு வந்து போடும் ஊழியர்கள் என்று நூற்றுக் கணக்கானவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

அரிசி, உளுந்து, பருப்பு வகைகளுக்கு சில்லறையாக விற்பதற்கு மொத்தச் சந்தையிலிருந்து மூட்டையில் வாங்கிக் கொண்டு வருகிறார்கள். அரிசி மண்டி, வெல்ல மண்டி, பயறு மண்டி என்று மொத்த வியாபாரிகளும் அவர்களைச் சார்ந்தவர்களும் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். காலையில் காய்கறி சந்தைக்குப் போய் காய், பழம் வாங்கி வருகிறார் கடைக்காரர். லாரிகளில் தூரத்திலிருந்து வரும் காய்கறிகள் தவிர, சுற்றி இருக்கும் கிராமங்களிலிருந்து வரும் காய்கறிகளும் விற்கப்படுகின்றன. சிறு விவசாயிகள் தமது விளைபொருட்களை விற்பதற்கான முக்கியமான வழியை சில்லறை வணிகர்கள் ஏற்படுத்திக் கொடுக்கிறார்கள்.

இவ்வாறாக மளிகைக் கடை சில்லறை வணிகத்தின் மூலம் ஒவ்வொரு நகரத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவற்றில் பெரும்பகுதியினர் சுயமாக தொழில் செய்பவர்கள்.  இவர்களில் யாருக்குமே அரசு வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை. வங்கிக் கடன்கள், மானியங்கள் போன்ற சலுகைகளும் சுத்தமாக கிடைப்பது இல்லை. முழுக்க முழுக்க தமது உழைப்பு, சேமிப்பு, சமூக ஆதரவு மூலமாகவே இந்த வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படுகின்றன.

இவர்களின் வருமானம், லாபம் நாட்டுக்குள்ளேயே செலவழிக்கப்படுகிறது அல்லது முதலீடு செய்யப்படுகிறது. உதாரணமாக மளிகைக் கடைக்காரர் சம்பாதிக்கும் பணத்தை உள்ளூரிலேயே வீடு கட்ட, கடையை விரிவு படுத்த பயன்படுத்துவார். அது மறைமுகமாக அடுத்த சுற்று வேலை வாய்ப்புகளுக்கு வழி வகுக்கிறது. இப்படியாக, இந்தியா முழுவதும் சுமார் 15 கோடி மக்கள் சில்லறை வணிக துறையின் மூலம் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள்.

வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் சில்லறை வணிகர்கள் பொருட்கள் வாங்குவதையே உலகமயமாக்கியிருப்பவர்கள். வால்மார்ட்டில் விற்கப்படும் பால் பாக்கெட் ஆவின் பாலாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விலை குறைவாக கிடைத்தால் ஆஸ்திரேலியாவிலிருந்து பதப்படுத்தப்பட்ட, டெட்ராபேக் பாலை விற்க ஆரம்பிப்பார்கள். காய்கறிகள், முட்டை போன்றவற்றை ஒப்பந்த பண்ணை முறையில் பணக்கார விவசாயிகள் அல்லது முதலாளிகளிடம் ஒப்படைத்து சிறு விவசாயிகளையும், குடிசைத் தொழில்களையும் ஒழித்து விடுவார்கள். அரிசி, பருப்பு, வீட்டு பயன்பாட்டுப் பொருட்கள், பழங்கள் கூட குறைந்த விலையில் வால்மார்ட்டின் தரத்துக்கு கிடைக்கக் கூடிய எந்த நாட்டிலிருந்தாவது இறக்குமதி செய்யப்பட்டு விற்கப்படும்.

இப்படி துரத்தியடிக்கப்படும் 15 கோடி மக்களுக்குப் பதிலாக சில ஆயிரம் பேரை கூலி உழைப்பாளிகளாக வைத்துக் கொள்வதுதான் வால்மார்ட் மக்களுக்கு வழங்கும் ஒரே வேலைவாய்ப்பாக இருக்கும். வால்மார்ட்டில் வேலை செய்வது என்பதன் பொருள் குறைந்த ஊதியம், ஓவர் டைம் கொடுக்காமல் அதிக நேரம் வேலை வாங்கப்படுதல், போதுமான மருத்துவ வசதிகள் மறுப்பு என்று பலவிதமான சுரண்டல்களுக்கு உள்ளாக்கப்படுவதே ஆகும்.

‘வால்மார்ட்டில் குறைந்த விலை அல்வா கிடைக்கலாம், ஆனால் வால்மார்ட் அழித்து விடப் போகும் கோடிக்கணக்கான வாழ்க்கைகள், என்ன விலை கொடுத்தாலும் திரும்பப் பெற முடியாதது’ என்பது கார்பொரேட் சில்லறை வணிகத்தை அனுமதித்த பல நாடுகளின் அனுபவம்.

வால்மார்ட் சில்லறை வணிக குடும்பங்களை மட்டுமல்ல, அவர்களுக்கு சப்ளை செய்யும் குடிசைத் தொழில்கள், சிறு, நடுத்தர விவசாயிகள், அத்தனை பேரையும் சேர்த்தே அழிக்கிறது. தூக்கி எறியப்படும் இந்த மக்கள் ஏற்கனவே வாழ்ந்து வந்த வாழ்க்கையை இழப்பதோடு மலிவான கூலியுழைப்பு சந்தையின் ரிசர்வ் சக்திகளாக அலைய வேண்டியிருக்கும்.

இந்த அழிவை தடுத்த நிறுத்தா விட்டால் அதன் சமூக, அரசியல் விளைவுகள் அபாயகரமாக இருக்கும். வால்மார்ட்டை ஆதரிக்கும் அறிவாளிகள் தாங்கள் குடியிருக்கும் தெருவில் உள்ள அண்ணாச்சி கடைகளுக்குச் சென்று அந்த கடை மூலம் எத்தனை குடும்பங்கள் வாழ்கின்றன என்பதை கேட்டறிந்து தெரிந்து கொள்ளலாம். பின்னர் பிராயச்சித்தமாக வால்மார்ட்டை எதிர்க்கும் போராட்டங்களிலும் கலந்து கொள்ளலாம். செய்வார்களா?

நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு ஒரு மணி நேரத்தில் பறக்கலாம்!

நியூயார்க்கிலிருந்து லண்டனுக்கு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும், பிரிட்டனின் லண்டன் நகருக்கும் இடையேயான தூரம், 5,570 கி.மீ., இந்த தூரத்தை விமானத்தில் கடப் பதற்கு, ஏழில் இருந்து, எட்டு மணி நேரம் ஆகும். மோசமான வானிலை ஏற்பட்டால், கூடுதல் நேரம் பிடிக்கும். ஆனால், நியூயார்க்கில் இருந்து, ஒரு மணி நேரத்துக்குள் லண்டனுக்கு செல்லும் வகையில், அதி நவீன விமானம் ஒன்று தயாராகி வருகிறது.
அமெரிக்காவின் நாசா தயாரித்துள்ள, இந்த அதி நவீன சூப்பர்சானிக் விமானத்துக்கு, "எக்ஸ்-51 ஏ வேவ் ரைடர்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது< மணிக்கு, 7,242 கி.மீ., வேகத்தில் செல்லும். போர்களின் போது, குண்டுவீச்சுக்காக பயன்படுத்தப் படும், பி-52 ரக விமானத்தின், இறக்கைகள், இதில் பொருத்தப் பட்டுள்ளன. முழுக்க முழுக்க ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும், இந்த விமானத்தின் சோதனை ஓட்டம், அமெரிக்காவில் நடந்து வருகிறது. சோதனை வெற்றி பெறும் பட்சத்தில், நியூயார்க்கில் இருந்து லண் டனுக்கு, ஒரு மணி நேரத்துக்குள்ளேயே சென்று விடலாம்.

ஆஸ்டியோபொரோசிஸ் எனும் அசுரப் பிரச்னை

நோய்களுக்கும் பெண்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும் போல. அதனால்தான் பலதும் பெண்களைக் குறிவைத்தே தாக்குகின்றன  ஆஸ்டியோபொரோசி’ஸும்  அப்படித்தான். அதென்ன ஆஸ்டியோபொரோசிஸ்?
எலும்புப்புரை நோய், எலும்பு மெலிதல் நோய், எலும்புத்துளை நோய்… எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம். ஆஸ்டியோபொரோசிஸ் ஆண்களுக்கும் வரும். ஆனால், அரிதாகவே தாக்கும்! பெண்களையோ பாரபட்சமின்றி தாக்கும். ஆஸ்டியோபொரோசிஸ் என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்னென்ன? யாருக்கெல்லாம் வரும்? தவிர்க்க முடியுமா? தப்பிக்க வழி உண்டா? எல்லாவற்றையும் பற்றி விளக்கமாகப் பேசுகிறார் எலும்பு, மூட்டு சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஆறுமுகம்.
‘‘நம்முடைய எலும்புகளில் கால்சியம் சத்து குறைந்து, எலும்புகளின் அடர்த்தியும் குறைந்து, அவை உறுதித்தன்மையை இழந்து, மிருதுவாகும் நிலைதான் ஆஸ்டியோ பொரோசிஸ். மனித உடலில் மிக உறுதியான பாகமான எலும்பு, ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கிய பிறகு, ஸ்பாஞ்ச் மாதிரி மிருதுவாக மாறும். 50 பிளஸ்சில் உள்ள பெண்கள்தான் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது மெனோபாஸ் காலகட்டத்தில் இருக்கும் பெண்களையே இது குறி வைக்கும். மெனோபாஸ் காலத்தில், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் சுரப்பது குறையத் தொடங்கும். அதன் விளைவாக கால்சியம் கிரகிக்கப்படும் திறனும் குறையும். விளைவு..? ஆஸ்டியோபொரோசிஸ்!
சரி, எலும்புகள் மிருதுவானால் என்னாகும்?
ஆரோக்கியமான ஒருவர், லேசாக கீழே விழுந்தாலோ, இடறினாலோ எலும்புகள் அத்தனை சீக்கிரத்தில் உடையாது. அதுவே ஆஸ்டியோபொரோசிஸ் பாதித்தவர்களுக்கு, லேசாக இடித்துக் கொண்டாலோ, வழுக்கி விழுந்தாலோ, எலும்புகள் உடையும்.
அறிகுறிகள்?
கால் வலி, மூட்டு வலி என எலும்புகள் இணைகிற இடங்களில் எல்லாம் வலி இருக்கும். மிதமான உடற்பயிற்சிகள் கூட களைப்படையச் செய்யும். வலிதான் பிரதான அறிகுறி என்பதால், அதை வைத்து, ஆஸ்டியோபொரோசிஸாக இருக்குமோ என யாருக்கும் சந்தேகிக்கத் தோன்றாது. அடிபட்டோ, கீழே விழுந்தோ, எலும்புகள் நொறுங்கும்போதுதான், அதன் வீரியம் தெரியும். முதுகெலும்பு, இடுப்பெலும்பு, விலா எலும்பு மற்றும் மணிக்கட்டுப் பகுதிகளில் இந்த பாதிப்பை அதிகம் காணலாம்.
எலும்புகள் அடர்த்தி இழப்பதேன்?
நன்றாக இருந்த எலும்புகள், திடீரென ஏன் தம் அடர்த்தியை இழக்க வேண்டும்? எலும்புகளின் அடர்த்தியைப் பொறுத்தே, அவற்றின் உறுதித் தன்மை தீர்மானிக்கப்படும். பெண்களைவிட, ஆண்களுக்கு இயல்பிலேயே எலும்புகளின் அடர்த்தி அதிகம். அதனால்தான், அவர்கள் ஆஸ்டியோபொரோசிஸால் அரிதாகவே பாதிக்கப்படுகிறார்கள். எலும்புகளின் அடர்த்தியானது குழந்தைப்பருவத்தில் அதிகரிக்கத் தொடங்கி, ஒருவரது 25வது வயதில் உச்சத்தில் இருக்கும். வயதாக, ஆக, அதாவது 35க்குப் பிறகு, அந்த அடர்த்தி மெல்ல மெல்லக் குறைய ஆரம்பிக்கும். வருடத்துக்கொரு முறை முதுமையின் காரணமாக, 0.3 முதல் 0.5 சதவிகிதம் வரை எலும்புகளின் அடர்த்தி குறைந்து கொண்டே வரும்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
DEXA   என்கிற ஸ்கேன் மூலம் நடு முதுகெலும்பு, இடுப்பெலும்பு ஆகியவற்றின் அடர்த்தியைக் கண்டுபிடிக்கலாம். இந்த ஸ்கேன் செய்ய ரூ.2,500 செலவாகும். T score   என்கிற அளவீட்டை வைத்து, ஆஸ்டியோபொரோசிஸ்தானா என்பதைக் கண்டுபிடிப்பார்கள். T score   மைனஸ் 1 ஆக இருக்க வேண்டும். அது மைனஸ் 3 அல்லது அதற்கும் கீழ் என்றால் ஆஸ்டியோபொரோசிஸ் உறுதி செய்யப்படும். மைனஸ் 1க்கும் மைனஸ் 2.5க்கும் இடைப்பட்டிருந்தால், அது ‘ஆஸ்டியோபீனியா’ என்கிற நிலை. அதாவது ஆஸ்டியோபொரோசிஸை நோக்கிய பயணத்தின் ஆரம்பக் கட்டம்!
சிகிச்சைகள்?
தினசரி உடலின் இயக்கத்துக்கு கால்சியம் மிக அவசியம். அதற்குப் போதுமான கால்சியம் சேராத பட்சத்தில், அது எலும்புகளில் இருந்து தேவையான கால்சியத்தை எடுத்துக் கொள்ளும். இதைத் தவிர்க்கவும், புதிய செல்கள் உருவாகவும் மருந்துகள் உள்ளன. மருத்துவரின் ஆலோசனையின் பேரில் கால்சியம் சப்ளிமென்ட்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.
கால்சியம் உடலில் சேர, வைட்டமின் டி3 சத்து மிக அவசியம். வைட்டமின் டி3 சத்தை சூரிய வெளிச்சத்திலிருந்து மட்டுமே பெற முடியும். ஆனால், இன்று வெயிலுக்குப் பயந்துகொண்டு, தலை முதல் கால் வரை மூடி மறைத்துக் கொண்டுதான் வெளியே செல்கிறார்கள் பெண்கள். குறிப்பாக
இஸ்லாமிய பெண்கள், பர்தா அணிந்த படியே வெளியில் செல்வதால், அவர்களுக்கு வைட்டமின் டி3 குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகமாகி, அதன் விளைவாக ஆஸ்டியோபொரோசிஸ் வரும் ஆபத்தும் அதிகம்.
வைட்டமின் டி3 குறைபாடு உள்ளதா என்பதை ரத்தப் பரிசோதனையின் மூலம் தெரிந்து கொள்ளலாம். அப்படியிருந்தால், வைட்டமின் டி3 மருந்தை வாரம் ஒரு முறை என 6 வாரங்களுக்கும், பிறகு மாதம் ஒரு முறையும் தர வேண்டியிருக்கும்.
கர்ப்பப்பையை சீக்கிரமே அகற்றி விட்ட பெண்களுக்கு ஆஸ்டியோபொரோசிஸ் தாக்கும் அபாயம் அதிகம். அவர்களுக்கு ஹார்மோன் ரீப்ளேஸ்மென்ட்
தெரபியுடன், கால்சியம் சப்ளிமென்ட்டுகளும் தர வேண்டும்.  எலும்புகளில் கால்சியம் சேரச் செய்வதற்கான பிரத்யேக ஊசிகளும் உள்ளன. வருடம் ஒரு முறை அந்த ஊசியைப் போட்டால், ஒரு வருடத்துக்குப் பலன் இருக்கும்.
மூக்கின் வழியே இழுத்துக் கொள்ளக் கூடிய ஸ்பிரே வகை மருந்துகளும் உள்ளன. அவை, எலும்புகளில் உள்ள கால்சியத்தை, உடல் இழுத்துக் கொள்வதைத் தடுக்கும். ஒரு வேளை எலும்பு முறிந்தால், அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம்.
தப்பிக்க வழி?
ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாறுவதுதான் முதல் வழி. பருமன் பிரச்னை, ஸ்டியோபொரோசிஸுக்கும்  விதை போடலாம். ஜாக்கிரதை! உடற்பயிற்சி மட்டும்தான், இதற்கான ஒரே தீர்வு.
கால்சியம் அதிகமுள்ள பால் மற்றும் பால் பொருள்கள், முட்டை போன்றவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் குடித்தால் கால்சியம் சேரும் என லிட்டர் லிட்டராக பாலைக் குடித்துக்கொண்டு, உடற் பயிற்சியே இல்லாமல் இருந்தால், எடை கூடும். வெயிலே படாமல் இருப்பது பாதுகாப்பானதல்ல. அதிகாலை வெயிலும், அந்தி சாய்கிற நேரத்து வெயிலும்,ஒன்றும் செய்யாது. தினம் சில நிமிடங்களாவது வெயில் உங்கள் மீது படட்டும்.”

நன்றி-தினகரன்

ஆர்ட்டிக் பனி 10 ஆண்டுகளில் மறையும்!

 

ஆர்ட்டிக் கடலில் காணப்படும் பனிப் படிவுகள் அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலுமாக மறைந்து போகும் என்று பயமுறுத்துகிறார்கள் விஞ்ஞானிகள்.
உலக வெப்பமயமாதல் காரணமாக, பனிக் கண்டங் களில் பனி உருகிவருவது ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாலும், 10 ஆண்டுகளில் முற்றிலுமாக `ஒன்றுமில்லாமல்’ போகும் என்பது, முன்பு கணிக்கப்பட்டதையும் விட விரைவானது. சரியாகச் சொல்வதென்றால், 50 சதவீத அதிக வேகம்.
விஞ்ஞானிகள் ஒரு குத்துமதிப்பான கணிப்பின்படி இப்படிக் கூறிவிடவில்லை. ஐரோப்பிய விண்வெளி ஆய்வு அமைப்பின் `கிரையோசாட்-2′ என்ற செயற்கைக்கோள் எடுத்து அனுப்பியிருக்கும் புகைப்படங் களின்படி, ஆர்ட்டிக் கடலில் கடந்த ஓராண்டில் மட்டும் 900 கன அடி கிலோமீட்டர் பரப்பளவுக்கு பனிப் படிவுகள் காணாமல் போயிருக்கின்றன. பூமியின் இரு பனிக் கண்டங்களில் பனி அடுக்குகளின் தடிமனை அளவிடுவதற்கு என்றே விசேஷமாக அனுப்பப்பட்ட செயற்கைக்கோளாகும் கிரையோசாட்-2.
தற்போது, ஆர்ட்டிக் பகுதியில் பனிப் படிவுகள் முன்பு கணிக்கப்பட்டதை விட வேகமாகக் கரைந்து வருவது, உலக வெப்பமயமாதல் இப்பகுதியில் அதிகத் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது என்று காட்டுகிறது.
இதே நிலை தொடர்ந்தால், குறிப்பிட்ட ஆண்டுகளில் இங்கு கோடை காலத்தில் பனிப் படிவே இல்லாமல் போகும். அப்போது, பனியால் மூடப்பட்ட ஆர்ட்டிக் பெருங்கடல் `பளிச்’சென்று வெளிப்படும் என்பதால், இங்குள்ள மீன் வளம், எண்ணை, தாது வளங்களை அள்ளிச் செல்லவும், புதிய கடல் வழிகளைக் கண்டு பிடிக்கவும் மனிதர்கள் இங்கு படையெடுப்பார்கள். அது புதிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கக் கூடும் என்ற கவலையும் விஞ்ஞானிகளால் தெரிவிக்கப்படுகிறது.

சூரியக் குடும்பத்தை விட்டு விலகும் `வாயேஜர்’!

 

satilight

`வாயேஜர் 1′ விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு 35 ஆண்டுகளாகிவிட்டன. இவ்வளவு காலம் சமர்த்துப்பிள்ளையாக சூரியக் குடும்ப வட்டத்தில் வலம் வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்த வாயேஜர், இவ்வட்டத்தை விட்டு விலகப் போகிறது. அப்படி நடந்தால், சூரியக் குடும்பத்தைத் தாண்டிச் செல்லும் மனிதனால் உருவாக்கப்பட்ட முதல் பொருள் என்ற பெருமையை வாயேஜர் பெறும்.
1977-ம் ஆண்டு நாசாவால் வாயேஜர் 1, வாயேஜர் 2 விண்கலங்கள் விண்ணுக்குச் செலுத்தப்பட்டபோது, அவை உத்தேசமாக எவ்வளவு ஆண்டுகள் செயல்படும் என்று யாருக்கும் தெரியாது. தற்போது வெவ்வேறு திசைகளில் இருந்தபடி பூமியை வலம் வரும் இந்த இரு விண்கலங்களும், மிக நீண்டகாலம் செயல்படும் விண்கலங்கள் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றன. பூமியிலிருந்து மிகத் தொலைவில், அதாவது லட்சக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இவை இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இம்மாதம் 5-ம் தேதி, வாயேஜர் விண்ணில் ஏவப்பட்ட 35-ம் ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. தற்போது சூரியக் குடும்பத்தின் விளிம்பில் உள்ள வாயேஜர் 1 விண்கலம், அந்த எல்லையைக் கடந்து செல்லக்கூடும் என்கிறார்கள் விண்வெளி விஞ்ஞானிகள். அதற்கு நாட்கள், மாதங்கள் ஏன், வருடங்கள் கூட ஆகலாம்.
`வாயேஜர் 1′ விண்கலம் சூரியனில் இருந்து 17.7 பில்லியன் கிலோமீட்டர் தொலைவிலும், `வாயேஜர் 2′ விண்கலம் 14.4 பில்லியன் கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளன.
உண்மையில் வியாழன் மற்றும் சனிக் கோள்களை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட வாயேஜர் விண்கலங்கள், பல முக்கியமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளன.