Daily Archives: செப்ரெம்பர் 28th, 2012

மூளையைக் கவனிக்கும் `ஹெல்மட்’!

 

மேலை நாடுகளில் விரும்பி ஆடப்படும் ரக்பி ஒரு விறுவிறுப்பான விளையாட்டு. ஆனால் இது போன்ற விளையாட்டுகளில் கொஞ்சம் முரட்டுத்தனமும் கலந்திருக்கும்.
இம்மாதிரியான விளையாட்டுகளில் தலைப் பகுதியில் காயம் படும்போது அது மோசமான பாதிப்பை ஏற் படுத்திவிடும் என்பதால், தலையைக் காப்பது மட்டுமின்றி கண்காணிக்கவும் செய்யக்கூடிய ஹெல்மட்டை விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கிறார்கள்.
சென்சார்கள் பொருத்தப்பட்ட இந்த ஹெல்மட், வீரர்கள் விளையாட்டுக் களத்தை விட்டு வெளியே வந்ததும் அவர்களின் மூளை அலைகளை அளவிடும். அப்போது, கடுமையான மோதலால் தலைக்குள் ஏதும் மாற்றம் ஏற்பட்டிருந்தால் அதைக் கண்டு பிடித்துக் கூறிவிடும்.

மூளையின் சிறிய காந்தப் புலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பதன் மூலம் இந்த ஹெல்மட், பாதிப்புகளைக் கண்டறிந்துவிடுகிறது.
தற்போது இந்த ஹெல்மட் ஆய்வகத்தில்தான் உள்ளது. இன்னும் விளையாட்டு வீரர்களிடம் பரிசோதிக்கப்படவில்லை.
ஆனால் இதன் மூலம் `பிரெய்ன் இமேஜிங்’ மற்றும் மூளை வியாதிகளை அதிகச் செலவில்லாமல் கண்டுபிடிப்பது போன்ற எண்ணற்ற வாய்ப்புகள் இருக்கின்றன என்கிறார், ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் மின்னியல் மற்றும் கணினிப் பொறியியல் துறை பேராசிரியர் டாக்டர் ஜோஸ் லூயிஸ் கான்ட்ரேராஸ் விடால்.
இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம், மூளை சமிக்ஞைகளைக் கொண்டு செயற்கைக் கால்களை இயங்கச் செய்வது குறித்துத் தீவிரமாக ஆய்வு செய்துவருகிறார், டாக்டர் ஜோஸ்.
அம்முயற்சி வெற்றி பெற்றுவிட்டால், மாற்றுத்திறனாளிகளுக்குப் பெரும் நன்மை பிறக்கும்!

பேஸ்ட் தான் பெஸ்ட்

நாம் காலையில் விழிப்பதே டூத் பேஸ்ட் முன்னால் தான். டூத் பேஸ்ட் பற்களை வெண்மையாக்கும். வாய் துர்நாற்றம் போக்கும். ஈறுகளை பலப்படுத்தும் என்பது போன்ற பயன்கள் நாம் அறிந்ததே.

நாம் அறியாதது அல்லது அறிய வேண்டியது:-

* பூச்சிக்கடியினால் ஏற்படும் எரிச்சல், வீக்கம், கொப்புளங்கள், அரிப்பு போன்றவற்றை போக்க சிறிது டூத் பேஸ்ட்டை தடவுங்கள். வீக்கம் குறைவதுடன் சீக்கிரம் குணமாகும்.
* சிறிய தீக்காயங்களுக்கு டூத் பேஸ்ட் தற்காலிகமாக கூலிங் எபெக்ட் கொடுக்கும்.
* முகப்பருக்கள் வேகமாக மறைய தூங்க போகும் முன் பருவின் மேல் ஒரு புள்ளி அளவுக்கு பேஸ்டை வைத்தால் இரண்டு மூன்று நாட்களில் பரு மறையும். காலையில் எழுந்தவுடன் முகம் கழுதவல் அவசியம்.
* பற்களுக்கு எனாமல் கோட்டிங் உண்டு. பற்கள் பளிச்சிட நாம் டூத் பேஸ்ட் உபயோகிக்கிறோம். அதே போல் நகங்களுக்கும் எனாமல் கோட்டிங் உண்டு. நகங்கள் சுத்தமாகவும் பளிச்சிடவும் பற்களை சுத்தம் செய்வது போல் மேல்புறமும் இடுக்குகளிலும் பேஸ்ட் பிரஷ்ஷால் தேய்த்தால் நல்ல பலன் தெரியும். இது நகங்களை வலுப்படுத்தவும் செய்யும்.
*பூண்டு, வெங்காயம், மீன் இவற்றை கையாளும் பொழுது கைகளில் இருந்து ஒரு வித வாடை வரும். சிறிது டூத் பேஸ்ட் எடுத்து தேய்த்து விட்டு கழுவினால் வாடை நீங்கும்.
* துணிகளிலும், கார் பெட்களிலும் படிந்த கனமான கறைகளை டூத் பேஸ்ட் மூலம் நீக்க முடியும். பேஸ்ட்டை கறை படிந்த இடங்களில் தடவி நன்றாக தேய்த்தால் கறைகள் நீங்கும்.
* குழந்தைகள், வீட்டுச் சுவர்களில் கிரேயான் கொண்டு கோடுகள் கிறுக்குவது, சகஜம். ஈரத்துணியில் பேஸ்ட் தடவி, கிரேயான் கோடுகளின் மீது தேய்த்தால் மறைந்து விடும்.
* வெள்ளி பாத்திரங்கள், ஆபரணங்கள் பளிச்சிட ஒரு மெல்லிய காட்டன் துணியில் டூத் பேஸ்ட் தடவி மெதுவாக பாலீஷ் செய்வது போல் தேய்த்தால் புதிதுபோல் இருக்கும். இது வைர நகைகளுக்கும் பொருந்தும்.
* சி.டி./ டி.வி.டி.களில் கோடுகள் விழுந்தால் ஒரு துளி டூத் பேஸ்ட் கோட்டிங் கொடுத்து மெல்லிய துணியால் துடைத்து விடுங்கள்.
* குழந்தைகளில் பால் பாட்டில் ஒரு வித வாடை வீசும். சிறிது டூத் பேஸ்ட் விட்டு நன்றாக அலசினால் வாடை போகும்.
* வீடுகளில் இஸ்திரி பெட்டி உபயோகிக்கும்போது நாளடைவில் துரு பிடித்தது போல் ஒருவித கருமை நிற கோட்டிங் படிந்து இருக்கும். டூத் பேஸ்டில் உள்ள சிலிக்கா இந்த துருவை நீக்கி விடும்.
* நமது மூக்கு கண்ணாடியை துடைப்பதற்கு டூத் பேஸ்டை விட சிறந்தது ஒன்றுமில்லை. சிறிது பேஸ்ட் தடவி நன்றாக கழுவினால் பளிச்சென்று மாறிவிடும்.

நன்றி- மங்கையர் மலர்

`பேசும்’ நீர்வாழ் உயிரினங்கள்!

 

நீர்வாழ் உயிரினங்களில் சில பேசுகின்றன என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். ஆனால் உண்மையாகவே கடலின் அடியில் வாழும் திமிங்கலங்களும், சிலவகை மீன்களும் பேசுகின்றன. கடலின் அடியில் அமைதியில்லை. மாறாகப் பல ஒலிகள் இருந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் சக்திக்கு அப்பாற்பட்டவை. இந்த ஒலிகளைத் தனியான கருவிகள் மூலம் பதிவு செய்கிறார்கள்.

நீரில் மீன்கள் ஏன் ஒலியை உண்டாக்க வேண்டும்? வவ்வால்கள் ஏன் ஒலியை உண்டாக்குகின்றன என்று நீங்கள் சிந்தித்தால் இதற்கான விடை உங்களுக்குக் கிடைக்கும்.
மீன்களுக்கு நம்மைப் போல வெளிச் செவியில்லை. ஒலி அலைகள் அவற்றின் உடலின் ஊடாகச் சென்று அவற்றின் உட்செவிகளை அடைகின்றன. திமிங்கலங்களுக்கு குரல்நாண்கள் இல்லாத போதும் அவை ஒன்றுக்கொன்று பேசிக் கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவை `கிளிக்’… `கிளிக்’ என்று விட்டுவிட்டு ஒலி எழுப்புகின்றன.
இந்த ஒலிகளின் எதிரொலியால் கடலில் சுற்றித் திரிகின்றன. இவை உண்டாக்கும் ஒலி வினாடிக்கு 50 ஆயிரம் அதிர்வுகளைக் கொண்டது.
இதேபோல் சில பறவைகளும் தங்கள் எதிரொலியின் மூலம் இடத்தை அறிந்துகொண்டு பறக்கின்றன. ஆந்தை தன் உணவை இந்த எதிரொலியின் மூலம்தான் பிடிக்கிறது. பல பறவைகள், கேட்க முடியாத இந்த ஒலிகளின் மூலம்தான் வாழ்க்கையை நடத்துகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.