Daily Archives: செப்ரெம்பர் 29th, 2012

விஞ்ஞானிக்கான தகுதி

 

விஞ்ஞானிகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகள் குறித்துப் புகழ்பெற்ற விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் இவ்வாறு கூறியிருக்கிறார்…
“ஒரே சமயத்தில் அதிர்ஷ்டவசமாக நான் எந்த உண்மையையும் கண்டுபிடித்து விடவில்லை. பல காலம் தொடர்ந்து செய்த முயற்சியின் விளைவுதான் என்னுடைய சாதனைகளாகத் திகழ்கின்றன.
அறிவியலாளர்களில் சிலர் இரண்டு, மூன்று பரிசோதனைகளைச் செய்துவிட்டு நின்றுவிடுகிறார்கள். ஆனால் நான் வெற்றி அடையும் வரை மேற்கொண்ட முயற்சியைக் கைவிடுவதே இல்லை.”
எடிசனின் விடாமுயற்சிக்கு ஓர் உதாரணமாக கீழ்க்கண்ட நிகழ்ச்சியைச் சொல்லலாம்…
ஒலித்தட்டு ஒன்றை உருவாக்கும் முயற்சியில் எடிசனின் பணியாளர்களில் ஒருவர் ஈடுபட்டிருந்தார்.

எடிசன் அந்த உதவியாளரைப் பார்த்து, “இன்று நம் பணியை எவ்வளவு நேரமானாலும் முடித்துவிட வேண்டும். ஆகவே இன்று இரவு நமக்கு உறக்கமே கிடையாது என்று நாம் முடிவு செய்துகொள்ள வேண்டும்” என்று முன்னதாக எச்சரிக்கை விடுத்தார்.
பணியாளர் ஒலித்தட்டு தயார் செய்வதற்கு மெழுகு தயாரிக்கத் தொடங்கினார்.
அவர் பல தடவை முயன்றும் மெழுகு பக்குவமாக வரவில்லை.
பணியாளர் சலிப்படைந்துவிட்டார்.
எடிசனை நோக்கி அவர், “அய்யா… எத்தனையோ தடவை முயன்றும் மெழுகு, ஒலித்தட்டு தயாரிப்புக்குத் தகுந்த பக்குவ நிலைக்கு வரவில்லை. நமது செயல்முறையில் ஏதோ குறைபாடு இருக்கிறது போலும். இன்று இத்துடன் நிறுத்திக்கொள்வோம். நாளை புதிதாக முயற்சி செய்து பார்க்கலாம்” என்றார்.
அந்தச் சொற்கள் காதில் விழுந்ததும் எடிசன் கடுங்கோபம் கொண்டார்.
“நாம் இருவரும் மடையர்கள் என்று தீர்மானித்து விட்டீர்களா? அது உண்மையாகக் கூட இருக்கலாம். கடவுள் நிச்சயமாக அவ்வாறு இருக்க முடியாது. நாம் என்ன தவறு செய்ததால் மெழுகு பதமாக வரவில்லை என்று கடவுள் நமக்கு உணர்த்துவார். வாய் பேசாமல் உமது வேலையைப் பாருங்கள்” என்று எடிசன் சீறினார்.
அடுத்த இரண்டு நிமிடங்களுக்கு எல்லாம் மெழுகு பதமாக வந்துவிட்டது. ஒலித்தட்டை அவர்கள் இருவரும் மிகவும் நேர்த்தியாகத் தயார் செய்துவிட்டார்கள்.

அக்னி சாட்சியாக….திருமணங்கள்

இந்த காலத்தில் நடைபெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது நடத்தப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை. எந்திரம் போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த் திருமண முறைகளை தொகுத்துள்ளேன்.

திருமண உறுதி:


(நிச்சயதார்த்தம்): திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையும் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும்.

சடங்கு முறைகள் :

அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும்.
இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்பம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) சபையில் படித்து காட்ட வேண்டும்.
மணமக்களை மேடைக்கு அழைத்து சங்கல்பம் செய்து திருமண உறுதி புடவையும், அணிகலன்களையும் கொடுத்தல் வேண்டும். மணமகள் அப்புடவையை அணிந்து வந்து சபையோரை வணங்க வேண்டும். சான்றோர்கள் மஞ்சள், அரிசி தூவி ஆசீர்வதித்து பின் மகளிர் நலுங்கு இடுதல் வேண்டும்.

தமிழ்திருமுறை, திருமண தீபம்:

மனையில் மூன்று கலசங்கள், மஞ்சள் பிள்ளையார், முளைப்பாலிகை, நவகோள்கள் வைத்து இரு குத்து விளக்கில் ஒன்றில் மணமகள் வீட்டாரும், மற்றொன்றில் மணமகன் வீட்டாரும் தீபம் ஏற்ற வேண்டும்.

அம்மை அப்பர் கலச வழிபாடு:

மூன்று கலசத்தில் முதல் கலசம் கொண்டு புண்ணிய வாசம் செய்த பிறகு அடுத்த இரு கலசங்களில் இத்திருமணத்துக்கு சாட்சியாக அம்மை அப்பர் தெய்வத்தையும் ஆவாஹனம் செய்து வரவழைக்க வேண்டும்.

நவகோள் வழிபாடு:

முழு பச்சை பாக்குகள் ஒன்பதை எடுத்து, அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பஞ்சாங்கத்தில் உள்ளபடி கிரகங்களை வரிசை கிரமமாக நிறுத்தி தமிழ் நவக்கிரஹ மந்திரத்தை சொல்லி நவக்கிரக பூஜையை முடித்த வேண்டும்.

முளைப்பாலிகை வழிபாடு:

தமிழ் திருமணங்களில் முளைப்பாலிகை வழிபாடு மிக முக்கியமாக இடம் பெறுமாம் திருமண விழாவில் இறைவனின் திருவுளத்தை அறிந்த கொள்வதற்கே முளைப்பாலிகை வழிபாடு செய்தல் வேண்டும்.

மணமக்களை கன்னியர்களாக வரவழைத்தல்:

மணமகள், மணமகனை மேடைக்கு வரவழைத்து அம்மை அப்பர், நவகோள், முளைப்பாலிகை இவற்றை வணங்க செய்து புண்ணியகவாசம் செய்த நீரை மணமக்கள் மீது தெளித்து புத்தாடை மற்றும் தங்க நகைகளை கொடுக்க வேண்டும்.

மங்கள நான் வழிபாடு:

மங்கல நானை தேங்காயில் சுற்றி மஞ்சள் அரிசி தட்டில் வைக்க வேண்டும். மங்கல நாணில் உள்ள திருமாங்கல்யத்தை மேலாக வைத்து, மஞ்சள், குங்குமம் வைத்து, தர்ப்பையில் மங்கல நாணின் பாதத்தை தொட்டு கொண்டு தமிழ் வேத மந்திரம் அல்லது அபிராமி அந்தாதி பாடலை பாட வேண்டும்.

முன்னோர்கள் வழிபாடு:

­வந்தவுடன் மணப்பொங்கல் வைத்திருப்பார்கள். அதற்கு பூஜை செய்து விட்டு, முன்னோர்கள் உருவப் படத்தையோ அல்லது அருவமான மஞ்சள் கூம்பையோ வைத்து மங்கல பொருட்கள் கொண்டு அலங்கரித்து உதிரிப்பூக்கள் கொண்டு தமிழ் மந்திரம் சொல்லி வழிபட வேண்டும்.

பாத பூஜை:

பெற்றோர்களுக்கு மணமக்கள்பாத பூஜை செய்யும்போது நாற்காலியில் அமர்ந்து நிதானமாக பாத பூஜையை ஏற்று மணமக்களை ஆசீர்வாதிக்க வேண்டும். மணமகள் தான் முதலில் பாத பூஜை செய்ய வேண்டும்.

மங்கல நான் ஆகுதி:

அவையோர்க்கு அனுப்பி ஆசீர்வதிக்கப்பட்ட மங்கல நாணை குண்டத்தில் அருகில் வைப்பார்கள். திருமந்திரம் ஓதி மணமக்களை தொட்டு வணங்கி தமிழ் வேதியர் திருமந்திரம் ஓதி பெரிய மனிதரிடம் மங்கல, நானை கொடுக்க அவர் மணமகனிடம் கொடுக்க மணமகள் கழுத்தில் பூட்டி மூன்று முடிச்சு இட வேண்டும்.

விளக்கேற்றும் உரிமை, பட்டம் கட்டுதல்:

மணமக்கள் பின்புறம் நாத்தனார்கள் காமாட்சி அம்மன் விளக்கை ஏற்றி நிற்க வேண்டும். தாலி கட்டிய பிறகு மணமகளின் அப்பா, மணமகளின் தாய்மாமன் இவர்கள் மணமகளுக்கு நெற்றியில் பட்டம் கட்ட வேண்டும்.

அக்னி வலம் நிகழ்ச்சி:

மணமகன் சுண்டு விரலோடு மணமகள் சுண்டு விரலை சேர்த்து கொண்டு அக்னி வலம் வரவேண்டும். காமாட்சி அம்மன் தீபத்தோடு மணமகனுக்கு முன்னே ஒரு பெண் செல்ல வேண்டும். மணமகளுக்கு பின்னால் முளைப்பாலிகையை ஏந்திக்கொண்டு சிறுமிகள் செல்ல வேண்டும்.

அம்மி மிதித்தத்தலும் மெட்டி அணிவித்தலும்:

அம்மி மிதித்தல், மெட்டி அணிவித்தல் நிகழ்ச்சி அக்னி வலம் வரும் பொழுது மூன்றாவது சுற்றில் நடைபெறும் அம்மி, என்பது கருங்கல்லால் ஆனது. இது உடையுமே தவிர வளையாது. மணமகளானவள் குடும்ப கௌரவத்தை காப்பாற்ற இந்த அம்மியை போல் உழைத்து தேய்ந்து உடைய வேண்டுமே தவிர, குடும்ப கௌரவத்தை என் இஷ்டத்துக்கு வளைக்கமாட்டேன் என்று உறுதி கூறும் நிகழ்ச்சி.

ஆசீர்வாத நிகழ்ச்சி:

வேதியர் தமிழ் வேத மந்திரம் ஓதி மணமக்களுக்கு திருநீறுஇட்டு ஆசீர்வதித்த பின் பெரியோர்கள் தத்தம் குல வழக்கப்படி மஞ்சள் அரிசி தூவி வாழ்த்துவார்கள். இறுதியில் மணமக்களுக்கு பாலும் பழமும் கொடுத்து சிறப்பாசனத்தில் அமர செய்து வாழ்த்துவார்கள்.

நன்றி- மங்கையர் மலர்

நோய் எதிர்ப்பு சக்தி தரும் உலர் திராட்சை

என்னதான் வைட்டமின் மருந்து, மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை குணம் வாய்ந்த பழங்களுக்கு நிகர் எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை… அந்த வகையில் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை தரும் சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் உள்ள வைட்டமின் மற்றும் அமினோ அமிலங்கள் சக்தியை தருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு போட்டியின் நடுவே ஊக்கமளிக்க கூடிய பழ வகைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலர் திராட்சை. இதில் உள்ள தாமிரசத்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.
மஞ்சள்காமாலை நோயுள்ளவர்கள் தினமும் 2 வேளை இந்த பழத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும். தொண்டைக்கட்டு பிரச்னை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு காய்ச்சி 10 வால்மிளகை தூள் செய்து, பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் தொண்டைக்கட்டு சென்ற இடமே தெரியாது.
மூல நோயுள்ளவர்கள் தினமும் உணவுக்கு பின்னர் காலை மற்றும் மாலையில் 25 உலர் திராட்சை பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூரண குணம் பெறலாம்.

மைக்ரோ சிப்பில் ஒரு மனித உடல்!

 

உயிரியலும், பொறியியலும் இணைந்த போது `உயிரிப்பொறியியல்’ எனும் ஒரு அட்டகாசமான குழந்தை பிறந்தது. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் என்பதை நிரூபித்தது அந்த நவீனத்துறை.
மனித குலத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக உயிரியலின் பண்புகளை பயன்படுத்தியபோது மருத்துவமும், பொறியியலை பயன்படுத்திய போது எண்ணற்ற தொழில்நுட்ப வினோதங்களும் சாத்தியப்பட்டன. தனித்தனியாக இயங்கிய இவ்விருதுறைகளும் இணைந்து உயிரிப்பொறியியலானதும், இருவகையான மருத்துவதொழில்நுட்ப பரிசுகள் மனிதனுக்கு கிடைத்தன.
ஒன்று, நோய் அறியும் கருவிகள். உதாரணமாக, எக்ஸ்ரே, ஈ.சி.ஜி. போன்றவை. மற்றொன்று, நோய் தீர்க்கும் அல்லது சிகிச்சை அளிக்கும் கருவிகள். உதாரணமாக, ஹியரிங் எய்டு, பழுதடைந்த நுரையீரலை இயங்கச் செய்யும் செயற்கை நுரையீரல் மற்றும் வலுவிழந்த இதயத்தை துடிக்கச் செய்யும் `பேஸ் மேக்கர்’ போன்றவற்றை சொல்லலாம்.
ஆனால் உயிரியல் மற்றும் பொறியியலுடன், கணினித்துறையும் கைகோர்த்த பிறகுதான் இவ்விரு வகை கருவிகளும் மேம்பட்டு, பல்கிப்பெருகின! உதாரணமாக, அல்ட்ரா சவுண்டு, எண்டோஸ்கோப், சி.டி, என்.எம்.ஆர், எம்.ஆர்.ஐ. மற்றும் பி.ஈ.டி. ஸ்கேன் போன்ற அதி நவீன ஸ்கேன் கருவிகள், அறுவை சிகிச்சை செய்யும் ரோபோக்கள், செயற்கை உடல் பாகங்கள் போன்றவற்றை கூறலாம்.
இத்தனை அதிசயங்களுக்கும் ஆதாரமான, உயிரிப்பொறியியலின் 21 ஆம் நூற்றாண்டு மாயாஜாலம்தான் `திசு பொறி யியல்’. ஸ்டெம் செல்கள் மற்றும் இதர உயிரணுக்களில் இருந்து திசுக்களை உற்பத்தி செய்து, அவற்றிலிருந்து இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்ற உடல் பாகங்களை சோதனைக்கூடத்தில் முழுமையாக வளர்த்து எடுத்திருப்பது, இத்துறையின் சமீபத்திய சாதனைகளுள் ஒன்று.
திசு பொறியியலின் அடுத்த இலக்கு, ஒரு மைக்ரோ சிப்பில் மனித உடல் பாகங்களை வளர்ப்பது. இதன்மூலம், எதிர்காலத்தில் ஒரு சிறிய மைக்ரோ சிப்பில் முழு மனித உடலையும் உள்ளடக்குவதுதான் இத்துறையின் நோக்கம்.
மைக்ரோ சிப்பில் மனித உடலா? இதென்ன சுத்த பேத்தலாக இருக்கிறது? அதெப்படி சாத்தியம் என்று கேட்கத் தோன்றுகிறதா?
உண்மைதான். சுமார் 70 மில்லியன் டாலர் பொருட்செலவில் இதற்கான ஆய்வுகள் தொடங்கிவிட்டன. இந்த உயிரிப்பொறியியல் மாயாஜாலத்தின் முதற்படியாக, சுமார் 37 மில்லியன் டாலர் மூலதனத்தில், 10 மனித உடல் பாகங்களை மைக்ரோ சிப்களில் உருவாக்கும் ஆய்வு, அமெரிக்காவின் விஸ் ஆய்வு மையத்தில் தொடங்கி விட்டது.
நுரையீரல், இதயம் மற்றும் பெருங் குடல் ஆகிய உடல் பாகங்கள் நாணய அளவு மைக்ரோ சிப்களில் இதற்கு முன்னரே உற்பத்தி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ சிப் மீதான ஒவ்வொரு உடல் பாகமும், வளையும் தன்மையுள்ள பாலிமர் இழைகளால் ஆனவை. இவற்றின் உள்ளே மனித உயிரணுக்களால் ஆன, குழாய் போன்ற நுண்ணிய கால்வாய்கள் உண்டு. இந்த நுண்ணிய கருவிகள், கண்ணாடி போல ஒளி ஊடுருவிச் செல்லும் தன்மையுடன் இருப்பதால், உயிருள்ள உடல்களை அறுக்காமலேயே மனித உடல் பாகங்களின் உள்கட்டமைப்புகளை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

Wyss Institute researchers and a multidisciplinary team of collaborators seek to build and link 10 human organs-on-chips to mimic whole body physiology. The system will incorporate the Institute's Human Lung-on-a-Chip (top) and Human Gut-on-a-Chip (bottom).

Read more at: http://phys.org/news/2012-08-scientists-multiple-organ-on-chip-mimic-human.html#jCp

இவ்வாறு உருவாக்கப்படும் (மனித உடல் பாக) மைக்ரோ சிப்களைக் கொண்டு, உடல் பாகங்கள் இயங்கும் விதம், நோயால் பாதிக்கப்படும்போது அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அவற்றுக்கான சிகிச்சைக்குப் பின்னான மாற்றங்கள் போன்ற பல்வேறு மருத்துவ தகவல்களை சுலபமாக கண்டறிந்துவிட முடியுமாம்.
முக்கியமாக, புதிதாக கண்டுபிடிக்கப்படும் மருந்துகள், நோய்வாய்ப்பட்ட உடல் பாகங்களை எந்தெந்த விதத்தில் பாதிக்கின்றன அல்லது எப்படி குணப் படுத்துகின்றன என்பதை சோதனைக்கூடத்திலேயே கண்டறிவது.
பின்னர், ஆபத்தில்லாத தரமான மருந்துகளை மட்டும் மனிதர்கள் மீதான பரிசோதனைகளை பயன்படுத்தி, சரியான மருந்துகளை மட்டும் விற்பனை செய்வது. இவை, இந்த உன்னத முயற்சிக்கு பின்னே இருக்கும் சில நோக்கங்களாகும்.
இந்த முயற்சி முழுமையாக வெற்றியடையும் பட்சத்தில், 10 வெவ்வேறு உடல் பாகங்களை உடைய மைக்ரோ சிப்களை ஒன்றிணைத்து, ஒரு முழு மனித உடலின் உடலியக்கவியல் மாற்றங்களை ஒரு வீடியோ படம் போல தத்ரூபமாக கண்டு, புரிந்துகொள்ள முடியுமாம்.
இதன்மூலம், மனித உடல் மாற்றங்களை வெளிப் படுத்த முடியாத, தற்போதைய விலங்கு மாதிரிகளுக்கு மாற்றாக, இந்த மனித உடல் மைக்ரோ சிப்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.