Daily Archives: ஒக்ரோபர் 3rd, 2012

குளித்தபடி படம் பார்க்கலாம்!

சினிமா பார்ப்பதற்கு, தியேட்டர் களுக்கு தான் செல்ல வேண்டுமா? எங்களிடம் வாருங்கள். வெது, வெதுப்பான தண்ணீருக்குள் குளித்த படி படம் பார்க்கலாம்…’ என, அழைக்கிறது ஒரு நிறுவனம். லண்டனில் உள்ள பூங்கா ஒன்றை விலைக்கு வாங்கி, திறந்த வெளி தியேட்டரை கட்டியுள்ளது, இந்த நிறுவனம்.
இந்த பூங்காவில், ஆங்காங்கே, போதிய இடைவெளிகளில், பத்துக்கும் மேற்பட்ட, தண்ணீர் தொட்டிகள் வைக்கப் பட்டுள்ளன. இவற்றில், வெதுவெதுப்பான, சுடு நீர் நிரப்பப்படும். இந்த தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்தபடியே, பூங்காவின் மையப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திரையில் ஒளிபரப்பப்படும், படங்களை பார்த்து ரசிக்கலாம்.
தண்ணீர் தொட்டிக்குள் அமர்ந்தபடியோ, குளித்தபடியோ, ஆட்டம் போட்டபடியோ படத்தை ரசிக்கலாம். இந்த வித்தியாசமான தியேட்டரில், படம் பார்ப்பதற்கு, நபர் ஒன்றுக்கு, 2,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. பிறந்த நாள், திருமண நாளுக்காக அளிக்கப்படும் விருந்துகளுக்கும், இந்த தியேட்டர், முன் கூட்டியே ரிசர்வ் செய்யப்படுகிறது. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் மற்றும் குளியலுடன், படம் பார்த்து ஜமாய்க்கின்றனர், லண்டன் இளைஞர்கள்.

விண்டோஸ் 8ல் மெட்ரோ இல்லை

விண்டோஸ் 8 சோதனைத் தொகுப்பு வாடிக்கையாளர் களுக்குத் தரப்பட்ட நாள் முதல், அதன் இன்டர்பேஸ் என்னும் இடைமுகம் "மெட்ரோ இன்டர்பேஸ்’ என அழைக்கப்பட்டது. ஆனால், பல்வேறு சட்ட சிக்கல்கள் அதில் ஏற்பட்டதால், மெட்ரோ என்ற பெயரை, விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் பயன்படுத்துவதில்லை என்ற முடிவை, மைக்ரோசாப்ட் எடுத்துள்ளது.
"மெட்ரோ’ என்ற பெயரினை, சியாட்டில் நகரத்தில் செயல்படும் போக்குவரத்துக் கழகத்தின் இயக்க முறையினால் கவரப்பட்டு, மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது. சியாட்டில் நகரில் தான் மைக்ரோசாப்ட் தலைமை அலுவலகம் இயங்குகிறது. மிகப் பெரிய ஐகான்களுடன், தொடு உணர்வுடன் இயக்கத்தினை அமைத்து, மிக விரைவான இயக்கம் என்ற பொருளினை உணர்த்த, இந்த மெட்ரோ என்ற பெயரினை மைக்ரோசாப்ட் தேர்ந்தெடுத்தது.
ஆனால், விஷயம் சட்ட சிக்கலில் மாட்டிக் கொண்டது. ஜெர்மனியில் "மெட்ரோ ஏ.ஜி.’ என்ற நிறுவனம் இந்த பெயருடன் இயங்குகிறது. எனவே விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்திடுகையில், பெயர் காப்புரிமை பிரச்னை ஏற்படும் என, மைக்ரோசாப்டுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொண்ட ஐரோப்பிய நிறுவனங்கள் எச்சரித்தன. தொடர்ந்து ஆலோசனைகளை மேற்கொண்ட மைக்ரோசாப்ட் மெட்ரோ என்னும் பெயரினைக் கைவிடும் முடிவினை எடுத்துள்ளது.
தற்போதைக்கு மெட்ரோ ஸ்டைலை, “Windows 8 Style UI” என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. இதற்கு வேறு ஒரு பெயரினை அக்டோபர் 26க்குள் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிலந்தி வலை இழைகளே வயலின் கம்பிகளாக…

ஒரு ஜப்பானிய விஞ்ஞானி “சிலந்திப்பூச்சியின் வலையிலுள்ள இழைகளிலிருந்து வயலின் வாத்தியத்திற்கான தந்திக்கம்பிகள் செய்ய முடியும்’ என்கிறார். மேலும், “நன்றாக வயலின் வாசிக்கத் தெரிந்தவர் கையில் இந்தக் கம்பிகள் அற்புதமான இசையை வெளிப்படுத்தும்’ என்றும் சொல்கிறார்.
இந்த விஞ்ஞானியின் பெயர் ஷிகயோஷி ஒஸாகி. இவர் நரா மெடிகல் யுனிவர்சிடியில் பாலிமர் கெமிஸ்ட்ரி புரொஃபஸராக இருக்கிறார். இவர் சொல்கிறார் “சிலந்தி நூலிழைகளை ஒரு பலம் வாய்ந்த தந்திக் கம்பியாக முறுக்க முடியும். இந்தக் கம்பி நெகிழும் தன்மையுடையது. வயலின் வாத்தியத்தில் பயன்படுத்தக்கூடிய சிறந்த கம்பியாக உள்ளது’.
கடந்த 35 ஆண்டுகளாக இவ்விஞ்ஞானி சிலந்தி வலை இழைகளைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். இவ்விழைகள் அறுவை சிகிச்சையின்போது தையல் போடவும் உதவுமாம். இதுதவிர, துப்பாக்கிக் குண்டு துளைக்காத கவசமும் செய்யப் பயன்படும் என்கிறார். ஆயினும் வயலின் மேல் உள்ள விருப்பத்தால், அதற்காகவென்றே சிலந்தி வலையின் இழைகளைப் பயன்படுத்தி, தந்திக்கம்பிகள் செய்ய முயன்றார். இவ்வலையின் இழைகளை ஒன்றுசேர்த்துத் திரிக்கும்போது இவற்றின் ஷேப் நான்கு பக்கங்களுக்கும் மேற்பட்ட பல கோணங்கள் கொண்டு கம்பியாக உருவெடுக்கிறதாம். இவை வயலின் வாத்தியத்திற்கு மிகவும் பொருத்தமானவையாக உள்ளன என்றார்.
“சாதாரணமான இழைகளால் நூலிழை திரிக்கும்போது ஒவ்வொன்றுக்கும் இடையே சிறிது இடைவெளி இருக்கும்; ஆனால் சிலந்தியின் இழையால் திரிக்கப்படும் கம்பிகளில் இவ்வாறு நேர்வதில்லை. அதனால் இக்கம்பிகள் பலம் பொருந்தியவையாக உள்ளன. நமது அன்றாட வாழ்விற்கு இவை பலவிதங்களில் பயன்படும்’ என்கிறார் இவர். இந்த நூலிழைகளை நெஃபில்லா மாகுலடா என்ற வகை சிலந்திகளிடமிருந்து தயாரித்ததாகச் சொல்கிறார். 300 பெண் சிலந்திகள் இதற்கான இழைகளைப் பெறப் பயன்பட்டவையாம்.
சிலந்தி வலை இழைகளின் பலமும், நீண்ட நாள் உழைக்கும் தன்மையும் ஒன்றும் புதிதான கண்டுபிடிப்பல்ல; முன்பே செய்யப்பட்ட பல ஆராய்ச்சிகளின் விளைவாக, இவ்வகைக் கம்பிகள் அதிகபட்சமான உஷ்ணத்தையும் அல்ட்ராவயலட் என்ற புறஊதா நிறத்தின் விளைவுகளையும் தாங்கக் கூடியவை என்பது தெரியவந்துள்ளது. முதன்முதலாக 600 கிலோ பாரத்தைத் தாங்கக் கூடிய ஒரு சிலந்தி நூலிழைக் கம்பியைச் செய்தார் இவ்விஞ்ஞானி. அப்போது இந்நூலிழைகள் பலவிதமான ஒலிகளை எழுப்புவதையும் கண்டறிந்தார்.
இக்கண்டுபிடிப்பு வயலின் வித்வான்களிடையே ஒரு பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் இந்த நூலிழையிலான் கம்பிகளின் மென்மையானதும், சுகமானதுமான ஒலியும், அதனால் ஏற்படும் மிக அருமையான இளமை வாய்ந்த அனுபவமும் அருமையாக உள்ளது என்று சிலாகிக்கிறார்கள்.
உலகிலேயே மிகவும் பிரசித்திபெற்ற வயலின்கள் ஸ்ட்ராடி வாரியஸ் எனப்படுபவை.
அன்டோனியோ ஸ்ட்ராடிவா என்ற இத்தாலியக் கலைஞரால் (18 நூற்றாண்டில்) சுமார் 300 வயலின்கள் தயாரிக்கப்பட்டன. இவற்றில் சிலவே இப்போது உள்ளன. இவற்றின் நாதமே தனிப்பட்டது. இந்த வயலினின் விலை இப்போது மதிப்பிட முடியாதது.
இப்போதுள்ள வயலின் வித்வான்கள் இந்த சிலந்தி நூலிழை பொருத்தப்பட்ட ஸ்ட்ராடிவாரி வயலினுக்கும் ஒசாசியின் 1200 டாலர் மதிப்புடைய வயலினுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்வதாகச் சொல்கின்றனர்.
அதனால் ஒசாகி கூறுகிறார்: விஞ்ஞானப்பூர்வமாக ஒரு புதிய கண்டுபிடிப்பைச் செய்யலாம். ஆனால் அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியாக இருக்க வேண்டியது அவசியம் அவ்வாறு புதிய கண்டுபிடிப்பு அமைந்துள்ளது.
அமெரிக்க ஃபிஸிகல் சொஸைடியின் வெளியீடான் ஃபிஸிகல் ரிவியூ லெட்டர்ஸ் இதழில் ஒசாகி அவர்களின் இப்புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புப் பற்றிப் பிரசுரம் செய்யப்பட இருக்கிறது.

ஆச்சரியம் தரும் அழகு

 

பண்டிகைகள் தொடர்ந்து வரும் காலம் இது. பண்டிகை காலத்தில் பகட்டாக உடை உடுத்தி, பளிச்சென உலா வர எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். ஏன்என்றால் பண் டிகை காலங்களில் ஒவ்வொருவர் பார்வையும் அடுத்தவர்கள் மீது பதிகிறது. அப்போது தானும் அழகுதான் என்று ஒவ்வொரு பெண்ணும் அடையாளம் காட்ட வேண்டியிருக்கிறது.

நீங்களும் அழகாகத் தோன்றவேண்டும் என்றால், இதைப் படியுங்கள்…

Face * பண்டிகைக் காலத்தில் பளிச்சென தெரிய, அடர்த்தியான `மேக்-அப்’ போட்டு விடக்கூடாது. இயல்பாக `லைட்டாக’ போடப்படும் அலங்காரம் தான் நேர்த்தியாக இருக்கும். பவுண்ட்டேஷன் லைட்டாக போடுங்கள். பவுண்ட்டேஷன் போடும் போது காதுகளையும், கழுத்தையும் மறந்து விடாமல் அவைகளையும் மேக்-அப் மூலம் சரிசெய்யுங்கள்.

* லிப்ஸ்டிக் கொஞ்சமாக போடுங்கள். பெரிய உதடுகளாக இருந்தால், உதடுகளின் உள்புறத் தில் மேல் நோக்கி `லிப் லைனர்’ மூலம் வரை யுங்கள். லைனரின் வெளிப்பகுதி கறுப்பாகத் தெரிந்தால் பவுண்டேஷனோ, கண்சீலரோ பூசுங் கள்.

* கண்களில் காஜல் ஸ்டிக் மூலம் வரையுங் கள். ஸ்டிக்கில் கண்மை படாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். ஐ லைனர் போட விரும்பு கிறவர்கள் மேல் கண் இமையில் மிக மெலிதாக வரைந்துகொள்ளவேண்டும்.

*பண்டிகை காலங்களில் பெண்கள் மல்லிகை, முல்லைப்பூ சூடிக்கொள்கிறார்கள். புடவை கட்டி இந்த பூக்களை வைத்துக்கொள்ளும்போது கூந்தலை அவிழ்த்துவிட்டால் நன்றாக இருக்கும். குளிக்கும்போது ஷாம்பு போட்டு, கண்டிஷனரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்போது கூந்தல் சில்க்கியாக, தனித்தனியாகத் தெரியும்.

* முகத்தில் புள்ளி, படை போன்று தெரியும் பெண்கள் பண்டிகைகால அழகுக்காக சில நாட்களுக்கு முன்பே தயாராக வேண்டும். முகத்தில் புள்ளிகள், படைகளை போக்க சில வகை அழகு சிகிச்சைகளை அவர்கள் செய்துகொள்ளவேண்டும்.

* இரவு தூங்கச் செல்வதற்கு முன்னால் மேக்-அப்பை முழுமையாக நீக்கிவிடவேண்டும். அதற்காக உங்கள் சருமத்திற்கு பொருத்தமான `பேஸ் வாஷை’ தேர்ந்தெடுக்கவேண்டும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் கடலைமாவுடன், பாலாடையைக் கலந்து முகத்தில் பூசவேண்டும். பயணம் முடிந்து வீடு திரும்பியதும் தயிரை பஞ்சில் முக்கி முகத்தில் பூசி கழுவவேண்டும்.

மரணத்தின் விளிம்பில் வாழும் மனிதர்கள்

இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை… இந்த கூட்டணி, மூன்றாவது அணி போல, வெத்து வேட்டு கூட்டணி அல்ல. இந்த கூட்டணி, மகத்தானது. இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு, 40 முதல், 70 சதவீதம், சிறுநீரக செயலிழப்பு வர வாய்ப்புள்ளது.
இந்தியாவில் முன்பு, தொற்று நோய்களான, டி.பி., தொழுநோய், காலாரா போன்றவை, அதிகமாக இருந்த காலம் போய், இப்போது, தொற்று நோய்கள் குறைந்து, ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய்களால் ஏற்படும், இதய மற்றும் சிறுநீரக நோய்கள் என்று அதிகமாகி வருகின்றன. இவை, தொற்று நோய்களை விட, அதிவேகத்தில் பரவி வருவதை காண முடிகிறது. முன்பு, குடும்பத்தில் முதியோருக்கு தான் ரத்தக் கொதிப்பு, இதய நோய் இருந்தது. ஆனால், இன்று, மகனுக்கும், மகளுக்கும் கூட உள்ளது. இதய நோய்கள், பல உள்ளன. அவை அனைத்தும், இறுதியில் இதயத்தைச் செயலிழக்க செய்கின்றன. அது தான், "ஹார்ட் பெய்லியர்’ என்பர். இது, இதய நோயின் இறுதி கட்டமாகி விடுகிறது. இதய தசைகளின் செயல்பாடுகளை, அதாவது அதன் செயல்திறனை, இ.எப்., – எஜக்ஷன் ப்ராக்ஷன் என்பர். இதன் செயல் குறைந்து, "ஹார்ட் பெய்லியர்’ வருகிறது.
சிறுநீரக நோய்களில் முக்கியமாக, இளம் வயதினருக்கு வருவது, "குல்மரோ நெப்ரைட்டிஸ்’ என்ற சிறுநீரக நோய். அதே, 40, 50 மற்றும் 60 வயதினருக்கு வரும் சிறுநீரக நோய், சர்க்கரை நோயால் வரும், "டயபெட்டிஸ் நெப்ரோபதி’ என்ற ஆபத்தான நோய். நீண்ட காலமாக, ரத்தக் கொதிப்பை கட்டுப்பாட்டில் வைக்கா விட்டால், சிறுநீரக ரத்தக் குழாய் சுருக்கத்தால், சிறுநீரக செயலிழப்பு ஏற்படுகிறது. சிறுநீரக செயலிழப்பு வர முக்கிய காரணம், சரிவர வைத்தியம் பார்க்காமல், சர்க்கரை குறையாமல் இருப்பதே. இதய செயலிழப்புக்கும், சிறுநீரக செயலிழப்பிற்கும், நெருங்கிய தொடர்பு உண்டு. இது, ஆங்கிலத்தில், "கார்டியோ ரீனல் பெய்லியர்’ எனப்படுகிறது. இந்த இரண்டு வியாதிகளும், கொடுமையானவை. அதோடு, பங்காளியாக வந்து சேருவது தான், "அனீமியா’ என்ற ரத்த சோகை நோய்.
மூன்று நோய்கள் கூட்டணி இதய நோய், சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை… இந்த கூட்டணி, மூன்றாவது அணி போல, வெத்து வேட்டு கூட்டணி அல்ல. இந்த கூட்டணி, மகத்தானது. இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு, 40 முதல், 70 சதவீதம், சிறுநீரக செயலிழப்பு வர வாய்ப்புள்ளது. இதய நோய் உள்ள, 10 பேரில், இரண்டு பேருக்கு சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகையும் வருகிறது. மூன்று கூட்டணி உள்ளவர்கள், தனித்தனியாக, அதாவது ஒவ்வொரு வியாதியும் தனியாக, கடுமையாகும் போது, 50 முதல், 100 சதவீதம், மரணத்தை வரவழைக்கிறது. மூன்று வியாதியும் கடுமையாகும் போது, 300 சதவீதம் மரணத்தை வரவழைக்கிறது. அத்தகைய மனிதர்கள் தான், மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து, நாட்களை கழிப்பவர்கள். நீண்ட நாள் இதய செயலிழப்பானது,
எப்படி, சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகையை கொண்டு வருகிறது?
இதய பம்ப் – இ.எப்., குறைவதால், சிறு நீரகத்திற்கு ரத்தம் குறைகிறது. இதனால், சிறுநீரகத்தின் வேலைத்திறன் குறைந்து, சிறுநீரக செயலிழப்பு ஆரம்பமாகிறது. சிறுநீரகத்திற்கு குறைவாக ரத்தம் செல்வதால், பிராண வாயு குறைகிறது. இதனால், எரித்ரோபாய்ட்டின் என்ற ரசாயன பொருள் உற்பத்தி உடலில் குறைந்து, ரத்த சிவப்பு அணுக்களும் குறைந்து, ரத்த சோகை வருகிறது. இத்தகைய முறையில், அதாவது நீண்ட நாள் இதய செயலிழப்பு உள்ளவர்களுக்கு, சிறுநீரக செயலிழப்பு, ரத்த சோகை என, தொடர் நிகழ்வு வருகிறது. சிறுநீரக செயலிழப்பானது,
இதய செயலிழப்பு, ரத்த சோகையை எப்படி அதிகமாக்குகிறது?
சிறுநீரக செயலிழப்பால், எரித்ரோ பாய்ட்டின் குறைந்து, ரத்த சோகையை அதிகப்படுத்துகிறது. மேலும், உடலில் நீர் சேர்வதோடு, யர் ரத்த அழுத்தமும் அதிகமாகிறது. இதோடு இல்லாமல், உடலில் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, ரத்தக் குழாய்களை பாதிக்கிறது. கார்டியோ ரீனல் அனீமியா
சின்ட்ரோம் என்ற முக்கூட்டணி, வராமல் தடுப்பது எப்படி?
இதய செயலிழப்பிற்கு, ஜாக்கிரதையாக, கடுமையாக வைத்தியம் செய்து, ரத்த சோகை, சிறுநீரக பாதிப்பு வராமல் தடுப்பது, மெத்த படித்த வல்லுனர்களின் தலையாயக் கடமை.
இதய நோய் நிபுணர், சிறுநீரக நிபுணர், ரத்த சோகைக்கு என, பொது மருத்துவர் என்ற கூட்டணி தேவை. எனக்கு எல்லாம் தெரியும் என, எல்லாவற்றுக்கும் ஒரு மருத்துவரே போதாது. இப்படி செய்தால், நோயாளிக்கு போதாத காலம்.
இ.எஸ்.ஏ., என்றால் என்ன?
கடந்த, 1980ம் ஆண்டுகளுக்கு முன், அனீமியா என்றால், ரத்தம் கொடுப்பது தான் வைத்திய முறை. ஆனால், அதற்கு பிறகு, இ.எஸ்.ஏ., என்ற எரித்ரோபாய்ட்டின், வியாபார ரீதியாக வந்த பிறகு, மரணங்கள் குறைந்துள்ளன. இந்த இ.எஸ்.ஏ.,வால் வாழ்க்கை தரம் உயர்ந்தது. வாழ்க்கை இனிமையாக வழக்கமாகி விட்டது. இ.எஸ்.ஏ., மருத்துவத்தின் குறிக்கோள், ரத்தத்திலுள்ள குறைந்த ஹீமோகுளோபினை, நார்மலான அளவு கொண்டு வருவது. இரும்பு சத்து குறைந்தால், இரும்பு சத்துள்ள மருந்துகளால் சரி செய்யலாம்.
கார்டியோ ரீனல் அனீமியா சின்ட்ரோமில் மிகவும் கடுமையானது எது?
இதில் கடுமையான, "ரீனல் பெய்லியர்’ என்ற சிறுநீரக செயலிழப்பு தான். சிக்கலான, மிகவும் ஆபத்தான, சிறுநீரக கோளாறு தான் காரணம். சிறுநீரக கோளாறை, தக்க நேரத்தில் கண்காணிக்கா விட்டால், டயாலிசிஸ், சிறுநீரக மாற்று சிகிச்சை என, சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எனவே, இதை, கண் இமை போல, காக்க வேண்டும். என்னிடம் சிகிச்சை பெற வந்த, ரஞ்சிதம், 65, என்பவருக்கு, ரத்த கொதிப்பு, சர்க்கரை நோய் மற்றும் சிறுநீரக கோளாறு ஆரம்ப நிலை, இருந்தது. இதை அப்படியே, 10 ஆண்டுகள் பாதுகாத்து, 75 வயதில் சிறுநீரக கோளாறு அதிகமாகி, 78 வயது வரை, ரத்த கொதிப்பு, இதய செயலிழப்பு, கிட்னி செயலிழப்பு, அனீமியா என்று மூன்று ஆண்டுகள் வாழ்ந்ததற்கு காரணம், அவருடைய அணுகுமுறை, மருத்துவரிடம் நம்பிக்கை, கடுமையான கட்டுப்பாடுடன் உணவு மற்றும் மருந்து. மருத்துவரிடம் செல்வது, மருத்துவரை மாற்றுவதை விட, வியாதியைப் பற்றி நன்கு அறிந்து, ஆலோசனை, மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் இவைகளை பின்பற்றி, வியாதியை நண்பனாக கருதினால், அதன் கடுமையைக் குறைத்து, தரமான வாழ்க்கை வாழலாம்; மரணத்தின் விளிம்பிலிருந்தும் மீளலாம்.
டாக்டர் அர்த்தநாரி
டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக்,
170/221, ராயப்பேட்டை ஹைரோடு,
சென்னை – 14.
Email: drsarthanaree@sify.com

சுயநலவாத’ டி.என்.ஏ.வும், சில ஆபத்துகளும்!

 

Vitality pre-order Aug 2010 5...

எப்போதும் தன்னைப் பற்றியும், தனது முன்னேற்றத்தைப் பற்றியுமே சிந்தித்து வாழும் மனிதர்களை நாம் சுயநலவாதிகள் என்கிறோம். ஆனால், சுயநலவாதம் எனும் குணம் மனிதர்களில் மட்டுமல்ல, உயிரினங்களின் இயக்கத்துக்கு அடிப்படையான டி.என்.ஏ. மரபுப்பொருளுக்கும் உண்டு என்று ஆச்சரியமூட்டுகிறது ஒரு சமீபத்திய ஆய்வு!
டி.என்.ஏ. என்பது உயிர்களின் உடலியக்கத்துக்கு அவசியமான நெறிமுறைகளை உள்ளடக்கிய ஒரு வேதியியல் மூலக்கூறு. இவை, சிக்கலான பல்வேறு உயிரியல் நிகழ்வுகள் மூலம், உடலிலுள்ள கோடிக்கணக்கான உயிரணுக்களின் செயல்பாடுகளை வழிநடத்துகின்றன. நம் உயிரணுக்களில் இருவகையான டி.என்.ஏ.க்கள் உண்டு.
ஒன்று, உயிரணுக்களின் மையக் கட்டுப்பாட்டுப் பகுதியான நியூக்லியசில் இருக் கும் உயிரணு டி.என்.ஏ. மற்றொன்று, உயிரணுக்களின் செயல்பாட்டுக்குத் தேவையான சக்தியைக் கொடுக்கும் மைட்டோ காண்ட்ரியா பகுதியில் இருக்கும் மைட்டோகாண்ட்ரிய டி.என்.ஏ. இந்த இரு வகையான டி.என்.ஏ.க்களுமே உயிரணு வளர்ச்சிக்கும், செயல்பாட்டுக்கும் இன்றியமையாதவைதான்.
வினோதமாக, உயிரணு வளர்ச்சிக்கு எந்தவிதத்திலும் பயனில்லாத, ஆனால் ஆபத்து விளைவிக்கக் கூடிய ஒரு புதிய வகை டி.என்.ஏ. மைட்டோ காண்ட்ரியாவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ள இந்த டி.என்.ஏ.வுக்கு `சுயநலவாத டி.என்.ஏ.’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சோதனைக்கூட ஆய்வுகளுக்கு பயன்படும் மாதிரி உயிரினமான சி.எலிகன்ஸ் எனப்படும் ஒரு புழுவின் மீதான ஆய்வில் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது.
டி.என்.ஏ. தெரியும், அதென்ன சுயநலவாத டி.என்.ஏ.?
ஒரு உயிரணு வளரும்போது பொதுவாக அதன் மைட்டோ காண்ட்ரிய டி.என்.ஏ. உள்ளிட்ட மொத்த டி.என்.ஏ.வும் இரட்டிப்படைவதே இயல்பான உயிரியல் நிகழ்வு. ஆனால் இந்த ஆய்வில், உயிரணு வளர்ச்சியின் போது மைட்டோ காண்ட்ரியாவில் உள்ள டி.என்.ஏ.வின் ஒரு பகுதி மட்டும் தனியாகவும், வேகமாகவும் இரட்டிப்படைந்தது கண்டறியப்பட்டது. மேலதிக பரிசோதனைகளில், இந்த டி.என்.ஏ.வினால் உயிரணுவுக்கு எந்த பயனும் இல்லை என்பதும், மாறாக சில பாதிப்புகள் இருப்பதும் தெரியவந்தது. இதன் காரணமாகவே, இந்த டி.என்.ஏ.வுக்கு சுயநலவாத டி.என்.ஏ. என்று பெயரிடப்பட்டது என்கிறார் மூத்த ஆய்வாளர் டீடென்வர்.
இதற்கு முந்தைய ஆய்வுகளில், சில தாவரங்களில் இதே போன்ற சுயநலவாத டி.என்.ஏ. இருந்தது கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், அந்த தாவரங்களின் மலர்தல் தொடர்பான குறைபாடுகள் மற்றும் மலட்டுத்தன்மைக்கு, அவற்றின் சுயநலவாத டி.என்.ஏ. காரணமாக இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுவரை, சில தாவரங்களில் மட்டும் இருக்கிறது என்று கருதப்பட்ட சுயநலவாத டி.என்.ஏ., சி.எலிகன்ஸ் போன்ற விலங்குகளிலும் இருக்கிறது என்பது, ஓரிகான் பல்கலைக்கழகத்தின் இந்த ஆய்வின் மூலம் உலகில் முதல் முறையாக கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சுவாரசியமாக, சி.எலிகன்ஸ் புழுவில் சுயநலவாத வகை டி.என்.ஏ.க்கள் இருந்ததும், அவை ஆபத்தானவை என்பதும் முன்னரே தெரிந்திருந் தாலும், அவை சுயநலவாத டி.என்.ஏ.தான் என்பது தெரியாமல் இருந்தது என்கிறார் ஆய்வாளர் கேட்டீ கிளார்க். மேலும், சுயநலவாத டி.என்.ஏ.க்களை உடைய புழுக்கள் குறைவான சந்ததிகள் மற்றும் தசை செயல்பாடு கொண்டவையாய் இருந்தன. இந்த நிலை, இயற்கை தேர்வு எனும் பரிணாம செயல்பாடு இந்த புழுக்களில் சரியாக வேலை செய்யவில்லை என்பதையே காட்டுகிறது என்கிறார் கேட்டீ!
சுயநலவாத டி.என்.ஏ.க்கள், உயிரினங்களின் வாழ்தல் மற்றும் இனவிருத்திக்கு பயன்படவில்லை என்றால், பரிணாம செயல்பாட்டின் மூலம் அவை அழிந்தல்லவா போயிருக்க வேண்டும்? அவை இன்னும் அழியாமல் இருப்பது, இயற்கை தேர்வானது உயிர் அல்லது உயிரின அளவில் எப்போதுமே சரியாக செயல்படுவதில்லை என்பதற்கான ஒரு உதாரணமே. ஆக, `உயிரியல் முன்னேற்றமானது குறைபாடுகள் உடையதே’ என்கிறார் முனைவர் டீ டென்வர்.
இவற்றைவிட இன்னும் சுவாரசியமான செய்தி என்னவென்றால், சுயநலவாத டி.என்.ஏ.வினால் சி.எலிகன்ஸ் புழுக்களில் ஏற்படும் பாதிப்புகள் அல்லது குறைபாடுகள், ஒரு மனிதன் மூப்படைவதால் அவனது உயிரணுக்களில் அதிகரிக்கும் கெட்டுப்போன மைட்டோ காண்ட்ரியாவினால் ஏற்படும் பாதிப்புகளைப் போலவே இருக்கிறது என்பதுதான். புழுக்களுக்கு வயதாக வயதாக, அவற்றின் சுயநலவாத டி.என்.ஏ.வின் அளவும் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
அதெல்லாம் சரி, இந்த சுயநலவாத டி.என்.ஏ.க்கள் பற்றிய செய்தியால் நமக்கென்ன பயன்?
சுயநலவாத டி.என்.ஏ.க்கள் மீதான மேலதிக ஆய்வுகள் மூலம், மனிதர்களைப் பாதிக்கும் ஒருவித குறைபாடான `மைட்டோ காண்ட்ரியல் டிஸ்பங்ஷன்’ குறித்த புரிதலை பெற முடியும் என்கிறார் முனைவர் டென்வர். இந்த ஆய்வின் மூலம், சுயநலவாதமானது மனித அளவில் இருந்தாலும் சரி, உயிரணு அளவில் இருந்தாலும் சரி, ஆபத்தானதே என்பது நிரூபணமாகிறது.

வெஜிடபிள் மசால்

 

சப்பாத்தி, பூரி, தோசை போன்றவைகளுக்கு தொட்டுக் கொள்ள இந்த வெஜிடபிள் மசாலா செய்து பாருங்கள். தேங்காய் சேர்க்காமல் செய்வதால், டயட்டில் இருப்பவர்களுக்குக் கூட இந்த மசால் ஏற்றது. சத்தானதும் கூட. செய்து பார்த்து சுவைப்போமா!

தேவையான பொருட்கள்:

கேரட் – 2 பெரியது

உருளைக்கிழங்கு -2 பெரியது

சவ்சவ் -பாதி

பச்சைப்பட்டாணி – 2 கைப்பிடியளவு

நறுக்கிய பீன்ஸ் -1/2 கப்

நறுக்கிய முட்டைக்கோஸ் -1 கப்

காலிப்ளவர் -1/2 கப்

பெரிய வெங்காயம் -1

இஞ்சி, பூண்டு விழுது -1 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்

தனியாத்தூள் -3 டீஸ்பூன்

மஞ்சள் தூள் -1/2 டீஸ்பூன்

உப்பு -தேவையான அளவு

எண்ணெய் -2 டீஸ்பூன்

சோம்பு, பட்டைகிராம்பு, ஏலக்காய் -தாளிக்கத் தேவையான அளவு

செய்முறை:

பெரிய வெங்காயத்தையும் காய்கறிகளையும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய், சோம்பு தாளித்து வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து சிறிது பச்சை வாசனை போக வதக்கவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து வதக்கி மிளகாய்த்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கிளறி தண்ணீர் அதிகம் சேர்க்காமல் திட்டமாக விட்டு மூடி வைக்கவும். வெயிட் போட்டு காய்கறிகள் குழைந்து விடாமல் வேகவைத்து மசாலா பதத்தில் எடுத்து கொத்தமல்லி தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

கார போண்டா, பிரட் சாண்ட்விச் செய்யவும் இந்த மசால் ஏற்றது.

விண்டோஸ் 8 டேப்ளட் பிசி

மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமான லெனோவா, வரும் அக்டோபரில் விண்டோஸ் 8 வெளியாகும்போதே, அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் டேப்ளட் பிசிக்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. திங்க்பேட் (Thinkpad) லேப்டாப் கம்ப்யூட்டர்களை வெளியிட்டு 20 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட்ட விழா ஒன்றில், லெனோவா இதனை அறிவித்துள்ளது. வெளியிடப்பட இருக்கும் டேப்ளட் பிசி Thinkpad Tablet 2 என அழைக்கப்படும். இன்டெல் சிப்புடன், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதில் இயங்கும். தற்போது திங்க்பேட் டேப்ளட் பிசிக்களில், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பதிந்து தரப்படுகிறது. விண்டோஸ் சிஸ்டத்துடன் டேப்ளட் பிசிக்களைப் பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் வேளையில் இந்த அறிவிப் பினை, லெனோவா வெளியிட்டுள்ளது.
இன்டெல் நிறுவனத்தின் “Clover Trail” ப்ராசசர், 1,366 x 768 ஐ.பி.எஸ். பேனல் டிஸ்பிளே, 10 மணி நேரம் தாக்குப்பிடிக்கும் பேட்டரி, தேவைகளின் அடிப்படையில் 3ஜி அல்லது 4ஜி, மைக்ரோ எச்.டி.எம்.ஐ. அவுட்புட், யு.எஸ்.பி. போர்ட், 2 எம்பி திறனுடன் முன் பக்க கேமராவும், 8 எம்பி திறனுடன் பின்பக்க கேமரா,விருப்பப்பட்டால் என்.எப்.சி., மற்றும் கைரேகை ரீடர் ஆகியவை இதில் தரப்படுகின்றன. இதன் ஓரத்தில் செருகி வைத்துப் பயன்படுத்த ஸ்டைலஸ் ஒன்றும் கிடைக்கிறது.
இதன் எடை 1 பவுண்டுக்கும் சற்று அதிகமாக உள்ளது. தடிமன் 9.4 மிமீ. விருப்பப்பட்டால், இதனுடன் கீ போர்ட், மூன்று யு.எஸ்.பி. போர்ட், எச்.டி.எம்.ஐ. போர்ட் மற்றும் ஈதர்நெட் ஜாக் கொண்ட ஹப் தனியே தரப்படுகிறது.
மைக்ரோசாப்ட் தன்னுடைய சர்பேஸ் ப்ரோ டேப்ளட் பிசியை விற்பனைக்குக் கொண்டு வருகையில், மேலே சொல்லப்பட்ட லெனோவா டேப்ளட் பிசி போட்டியாக இருக்கும். இவற்றின் விலை இனிமேல் தான் தெரிய வரும்.

தவற விட்டு விடாதீர்கள்!-செப்., 30 மகாளயபட்சம் ஆரம்பம்

வாழ்க்கையில் சந்தர்ப்பம் எப்போதாவது தான் கிடைக்கும். அதை தவற விடுபவர்கள் புத்திசாலிகள் அல்ல. சில குடும்பங்களில், துன்பம் துரத்திக் கொண்டே இருக்கும். குறிப்பாக, வாழாவெட்டியாய் வரும் பெண்கள், அங்கஹீனர்களாகப் பிறப்பவர்கள், திருமணமாகியும் நிம்மதியில்லாமல் இருக்கும் ஆண்கள், பணக்கஷ்டத்தால் அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றிக் கொள்ளாமல் இருப்பவர்கள்… இதற்கெல்லாம் காரணம் என்ன என்றால், பிதுர் தர்ப்பணம், சிரார்த்தம் ஆகியவற்றைச் செய்யாமல் இருப்பது தான். ஒவ்வொரு அமாவாசையும், பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். மாதப்பிறப்புகளில் பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இவையெல்லாம் சாத்தியமில்லாவிட்டால், தை அமாவாசை, ஆடி அமாவாசையாவது தர்ப்பணம் செய்யலாம். இதுவரை என் வாழ்க்கையில் தர்ப்பணம் செய்ததே இல்லை, அதற்கு ஏதாவது மாற்று இருக்கிறதா என்றால், அதற்கும் மாற்று வைத்திருக்கிறது சாஸ்திரம்.
புரட்டாசி மாத பவுர்ணமி துவங்கி, அமாவாசை வரையுள்ள, 15 நாட்கள் மகாளயபட்ச காலம். மகாளயம் என்றால், மொத்தமாகக் கூடுதல் என்று பொருள் கொள்ளலாம். பிதுர்கள் எனப்படும் முன்னோர்கள் இந்த, 15 நாட்களும் கூட்டமாக பூமிக்கு வந்து விடுகின்றனர். தங்களது சந்ததியர், தங்களை நினைத்துப் பார்க்கின்றனரா என சோதிக்கின்றனர். அவர்களை அந்த, 15 நாட்களும் நினைத்து தர்ப்பணம் செய்தால், அவர்கள் மகிழ்கின்றனர்.
இதற்கு அதிக செலவாகுமோ என்று எண்ணத் தேவையில்லை. வசதி படைத்தவர்கள், தகுதியுள்ள அந்தணர்களை அழைத்து, இதை சில ஆயிரங்கள் செலவழித்து செய்யலாம். மற்றவர்கள் என்ன செய்யலாம் என்றால், சில விதிமுறைகளை சாஸ்திரம் சொல்கிறது.
நதிக்கரைகளுக்கு சென்று, அந்தணர்களுக்கு தட்சணை கொடுத்து தர்ப்பணம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை தானம் செய்யலாம். அதுவும் முடியவில்லை என்றால், ஒரு பிடி எள்ளை கையில் எடுத்து, தீர்த்தத்தை விட்டு கீழே விடலாம். இதெல்லாம் முடியாவிட்டால், பசுவை வலம் வந்து வணங்கலாம். அதற்கும் முடியாவிட்டால், வெட்டவெளியில் நின்று இரண்டு கைகளையும் உயரே தூக்கி, "பித்ரு தேவதைகளை வணங்க வேண்டும் என்பது என் ஆசை தான். ஆனால் முடியவில்லை. எனவே, பித்ரு தேவதைகளே… நீங்கள் எல்லாரும், நான் சிரார்த்தம் செய்ததாக எண்ணி திருப்தி அடையுங்கள்…’ என்று வேண்டலாம்.
இதை விட சாஸ்திரம் நமக்கு என்ன சலுகையைத் தந்துவிட முடியும். மேற்கண்ட பரிகாரங்களுக்கு ஒரு பாக்கெட் எள் போதாதா. எள் எந்த அளவுக்கு வேண்டும் என்றால், கை கட்டை விரலில் எள்ளை ஒற்றிக்கொண்டு, அதில் தண்ணீரை விட்டு கீழே விட்டால் கூட போதும் என்கிறது சாஸ்திரம்.
மகாளயபட்சத்தின், 15 நாட்களும் இவ்வாறு செய்யலாம். முடியாதவர்கள், மகாளய அமாவாசை தினத்தன்றாவது, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை கடமைக்குச் செய்யாமல், சிரத்தையாக செய்தால், கிடைக்கும் பலன் என்ன தெரியுமா?
இனிமேல், நம் குடும்பங்களில் ஊனமான குழந்தைகள் பிறக்க மாட்டார்கள். இப்போது, மாற்றுத் திறனாளிகளாக இருப்பவர்களுக்கு, நல்ல வாழ்க்கை அமையும். மேலும், நம் முன்னோர்கள் பாவம் செய்து நரகத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், அவர்களுக்கு விமோசனமாகி சொர்க்கத்தை அடைவர். அவர்களின் ஆசிர்வாதம், நம்மை மனநிம்மதியுடனும், செல்வச்செழிப்புடனும் வாழ வைக்கும்.
மகாளயபட்ச காலம், செப்., 30ல் துவங்கி, அக்., 14 வரை நீடிக்கிறது. அக்., 15ல் மகாளய அமாவாசை. இந்த நாட்களில், நம் முன்னோரை நினையுங்கள். திருவாரூர் மாவட்டம் செதலபதி கிராமத்தில், முக்தீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே, ராமபிரான் பூஜித்த பிதுர்லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை மகாளயபட்ச காலத்தில் ஒரு நாளாவது சென்று தரிசித்து வாருங்கள். அங்கே தர்ப்பணம் செய்வது இன்னும் விசேஷம். திருவாரூரிலிருந்து மயிலாடுதுறை செல்லும் ரோட்டில், 22 கி.மீ., தொலைவில் பூந்தோட்டம் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து பிரியும் சாலையில், கூத்தனூர் சென்று, 2 கி.மீ., தொலைவில் உள்ள செதலபதியை அடையலாம். கூத்தனூரில் புகழ் பெற்ற சரஸ்வதி கோவில் உள்ளது. பிதுர் தர்ப்பணத்தின் பலன் அளவிட முடியாதது; அனுபவத்தின் மூலமே இதை உணர முடியும்.