Daily Archives: ஒக்ரோபர் 5th, 2012

சென்டிமீட்டரில் வேர்ட்

வேர்டில் எல்லாமே அங்குலம், பவுண்ட், காலன் என்று பழைய அளவில்தான் இருக்கும். ஏனென்றால் அமெரிக்காவில் இன்னும் அதுதான் பின்பற்றப்பட்டு வருகின்றது. இன்றைக்கு இந்தியாவில் 35 வயதிற்கும் குறைவாக உள்ளவர்களுக்கு இது முற்றிலும் தெரியாது. எனவே வேர்டில் கிடைக்கும் அளவுகளை மெட்ரிக் அளவுகளாக (அங்குலத்திற்குப் பதிலாக சென்டிமீட்டர்) மாற்ற விரும்பினால் கீழ்க்காணும் செட்டிங்ஸ் மாற்றவும்.
1. Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும்.
2. பல டேப்கள் கொண்ட டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் General என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும்.
3. இதில் “Measurement Units” என்று இருப்பதன் அருகே உள்ள மெனுவை விரித்து நீங்கள் விரும்பும் அளவைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு Inches, Centimeters, Millimeters, Points, or Picas என்ற அளவுகளைக் காணலாம்.
4.பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

காய்கறி வாங்கும் போது…

சில விஷயங்கள் நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும், சில சமயம் அஜாக்கிரதையாக நடந்து கொள்கிறோம். அதில், காய்கறிகள் வாங்குவதும் ஒன்று. கடையில் வாங்கும்போது கடைக்காரன் கொடுப்பதை கண் மூடித் தனமாக வாங்கிவிட்டு, அவஸ்தைப்படுவதை தவிர்த்து, சில நிமிடங்கள் செலவழித்து, நல்ல காய்களை தேர்ந் தெடுக்கலாமே!

  • * முருங்கைக்காய் மேலிருந்து கீழ்வரை ஒரே சீராக இருக்க வேண்டும்.
  • * வெண்டை மற்றும் அவரை காயில் விதைகள் புடைத்து வெளியே தெரிந்தால், அது முற்றல்.
  • * கீரை மஞ்சள் பூத்திருந் தால் அருகில் கூட செல்லாதீர்கள். அரைக்கீரை, முளைக் கீரை போன்றவற்றில் தண்டுகள் பெருத் திருந்தால் சுவையாக இருக்காது.
  • * வெண்மையாகவும், அழுத்தமாகவும் இருந்தால் மட்டுமே காலிப்ளவரை வாங் குங்கள். பூத்து விரிந்திருந்தால் சுவையிருக்காது.
  • * வெங்காயம், வாழைக்காய், மாங்காய் போன்றவற்றை வாங்கும் போது, விரல்களால் அழுத்திப் பார்க்கவும். அழுந்தினால் வாங்கக்கூடாது. நூல்கோல், முள் ளங்கி, சுரைக்காய், சவ்சவ், பீர்க்கங்காய் போன்றவை அழுந்தினால் நல்லது என்று பொருள்.
  • * அழுத்தமான ஆரஞ்சு நிறத்தில் இருந்தால் மட்டும் அது நல்ல கருணைக்கிழங்கு என்று அர்த்தம். சீக்கிர மாக வெந்து சூப்பர் சுவையாகவும் இருக்கும்.
  • * நன்றாகப் பழுத்த தக்காளிகளைவிட, பாதி பழுத்த கெட்டியான தக்காளிகளே சுவையானவை.
  • * வாழைத்தண்டை கிள்ளிப் பாருங்கள். நார் தெரிந்தால் அது முற்றல்.

ஆபீஸ் 2013 சந்தேகங்களும் தீர்வுகளும்

1. ஆபீஸ் 365 மற்றும் ஆபீஸ் 2013 ற்கான வேறுபாடு என்ன?
ஆபீஸ் 2013 தொகுப்பு வழக்கமாக மைக்ரோசாப்ட் வழங்கி வரும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் நவீன வசதிகளுடன் கூடிய பதிப்பாகும். இதில் டெஸ்க்டாப் புரோகிராம் உண்டு. ஆபீஸ் 365 புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்று வருபவர்களுக்கு ஆபீஸ் 2013 வழங்கப்படுகிறது. ஆன்லைன் ஸ்டோரேஜ், பைல்கள் பகிர்ந்து கொள்ளல், மைக்ரோசாப்ட் க்ளவ்ட் சேவை வழியாக பைல்களை அப்டேட் செய்து கொள்ளல் வசதிகள் கிடைக்கும். ஆபீஸ் 365 வர்த்தகம், நுகர்வோருக்கானது, கல்வியாளர்களுக்கானது, அரசுக்கானது எனப் பல பிரிவுகளில் கிடைக்கிறது.
2. ஆபீஸ் 2013 இயக்குவதற்கு ஆபீஸ் 365 தேவையா?
இல்லவே இல்லை. ஆபீஸ் 2013 புரோகிராமினைத் தனியாகக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளலாம். இதனை மைக்ரோசாப்ட் ஆன்லைன் அக்கவுண்ட் ஒன்றுடன் தொடர்பு படுத்தி (விண்டோஸ் லைவ்) இணைய வெளியில் பைல்களை சேவ் செய்து வைத்துக் கொள்ளலாம்.
3. ஆபீஸ் 2013 இயங்க தேவையான ஹார்ட்வேர் மற்றும் சிஸ்டம் தேவைகள் என்ன?
ஆபீஸ் 2013 விண்டோஸ் 7 மற்றும் இப்போது சோதனைப் பதிப்பாக இருக்கும் விண்டோஸ் 8 ஆகிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும், இவை இயக்கப்படக் கூடிய கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் சாதனங்களிலும் இயங்கும். குறைந்த பட்சம் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் 3.5 ஜிபி காலி இடம் இருக்க வேண்டும்.
4. ஆபீஸ் 2013 நுகர்வோருக்கான முன் சோதனைப் பதிப்பினை எப்படி, எங்கு இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்?
ஆபீஸ் 365 திட்டத்தில் கட்டணம் செலுத்தியவர்கள், நேரடியாக இதனைப் பெறலாம். அணுக வேண்டிய தள முகவரி http://office. com/preview. தனியாக இதனை தரவிறக்கம் செய்திட விரும்புபவர்கள் http://www.microsoft.com/office/preview/en/trymoreproducts என்ற முகவரியில் உள்ள தளத்திற்குச் செல்லவும்.
5. எப்படி ஆபீஸ் 2013 புரோகிராமினை இன்ஸ்டால் செய்திடலாம்?
மைக்ரோசாப்ட் ஆன்லைன் போர்டல் தளத்தில் நுழைந்தால், கிளிக் செய்து, தானாக இன்ஸ்டால் ஆகும் ஆப்ஷன் உங்களுக்கு வழங்கப்படும். உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்படுவதனை இந்த தளம் கண்காணித்துக் கொள்ளும். எனவே, இந்த புரோகிராம் இத்தளத்திலிருந்து இன்ஸ்டால் செய்யப்படுகையில், இன்டர்நெட் இணைப்பில் உங்கள் கம்ப்யூட்டர் இருக்க வேண்டும்.
6. ஏற்கனவே பதிந்துள்ள ஆபீஸ் தொகுப்புகளுடன், ஆபீஸ் 2013 புரோகிரா ம் இணைந்து இயங்குமா?
ஆம். மைக்ரோசாப்ட் அப்படித்தான் சொல்கிறது. ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 புரோகிராம்களுடன் இது இணைந்து செயல்படுகிறது.
7. ஆபீஸ் 2013 நிரந்தரமாகத் தேவைப்பட்டால், அதற்கான கட்டணம் எவ்வளவு செலுத்த வேண்டும்? தனி நபர் ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டருக்கான கட்டணம் எவ்வளவு?
இன்னும் இது குறித்து மைக்ரோசாப்ட் எதுவும் அறிவிக்கவில்லை.
8. ஆபீஸ் 2013 வர்த்தக ரீதியாக வெளியாகும் நாள் எது? இந்தியாவில் வழக்கம்போல் டீலர்களிடம் கிடைக்குமா? அல்லது இணையம் வழியாக வாங்க வேண்டுமா?
இன்னும் இதற்கான நாள் குறித்து மைக்ரோசாப்ட் அறிவிக்கவில்லை. விண்டோஸ் 8 வெளியான பின்னர், இது வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
9. ஆபீஸ் 2013 தொகுப்பை எப்படியாவது எக்ஸ்பி அல்லது விஸ்டா இயங்கும் கம்ப்யூட்டரில் இயக்க முடியுமா?
முடியாது. இந்த விஷயத்தில் மைக்ரோசாப்ட் மிகத் தெளிவாக, விண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டத்தில் மட்டுமே ஆபீஸ் 2013 இயங்கும் என அறிவித்துள்ளது. எக்ஸ்பி மற்றும் விஸ்டா சிஸ்டங்களில் இயங்குபவர்கள், ஆபீஸ் 2010 வரை மட்டுமே இயக்க முடியும். (விண்டோஸ் 7 வந்த பின்னர், ஏழு மாதங்கள் கழித்து ஆபீஸ் 2010 வெளியானது உங்களுக்கு நினைவிருக்கும்.) எனவே, இப்போது விண்டோஸ் பயன்படுத்துபவர்களில் ஏறத்தாழ 50%க்கு மேற்பட்டவர்கள், ஆபீஸ் 2013 பயன்படுத்த இயலாது. இதன் மூலம் ஆபீஸ் 2013 பயன்படுத்த விரும்புபவர்கள், விண்டோஸ் 8க்கு மாற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் ஆபீஸ் 2013 இயங்கினாலும், சிஸ்டம் மாற்றிக் கொள்ள திட்டமிடுபவர்கள், புதிதாய் வந்துள்ள சிஸ்டத்தைத்தானே நாடுவார்கள். விண்டோஸ் எக்ஸ்பியை புதிய ஆபீஸ் தொகுப்பிலிருந்து விலக்கி வைத்ததன் மூலம், தன் விண்டோஸ் 8 பரவலுக்கு மைக்ரோசாப்ட் வழி வகுக்கிறது. மேலும், விண்டோஸ் எக்ஸ்பியின் பயன்பாட்டினை நிறுத்தவும் மைக்ரோசாப்ட் முயற்சிக்கிறது எனலாம்.
முன்பு இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 வெளியான போது, அதனை எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு மைக்ரோசாப்ட் தடை செய்தது. இது குறித்து பலரும் எச்சரிக்கை கொடுத்தனர். பிரவுசர் பயன்பாட்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மிகவும் பின் தங்கிவிடும் என அபாய அறிவிப்பு கொடுத்தனர். ஆனால், மைக்ரோசாப்ட் எதற்கும் மசியாமல், தான் எடுத்த முடிவில் இன்று வரை உள்ளது.

ஒளி வெள்ளத்தில் மிதக்கும் அதிசய கோவில்!

கடல் கடந்து சென்று, பல்வேறு நாடுகளில் வசித்து வரும் தமிழர்கள், தாங்கள் செல்லும் இடங்களில் எல்லாம், தங்களின் கலாசார முத்திரையை அழுத்தமாக பதிக்க தவறுவது இல்லை. மலேசியாவின் கோலாலம்பூர் அருகே, பிரமாண்ட முருகன் சிலையுடன் கூடிய கோவில் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் மட்டுமல்லாது, உலகம் முழுவதுமிருந்து சுற்றுலா பயணிகளும், இந்த கோவிலுக்கு வந்து செல்கின்றனர். தற்போது, மலேசியாவுக்கும், அங்கு வசிக்கும் தமிழர்களுக்கும், மேலும், பெருமை சேர்க்கும் வகையில், முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்ட, ராஜகாளி யம்மன் கோவிலும், உலகம் முழுவதும் உள்ள இந்து பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மலேசியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜோகோர் பாரு என்ற நகரத்தில், கட்டப்பட்டுள்ள இந்த கோவில், மிகவும் பழமையானது. 1922ல், சிறிய குடிலில், இந்த கோவில் செயல்பட்டு வந்தது. 1991ல், விரிவாக்கம் செய்யப்பட்டது. சில மாற்றங்களுடன், 1996ல், பக்தர்களின் தரிசனத்துக்காக, மீண்டும் திறக்கப்பட்டது.
கோவிலின் தலைமை குருக்கள், ஸ்ரீ சின்னத் தம்பி சிவசாமி, சில ஆண்டுகளுக்கு முன், பாங்காக் சென்றிருந்தார். அப்போ<து, ஒரு இடத்தில், தூரத்தில், வைரக்கல் மின்னுவதை போன்று, ஒளிவீசுவதை, பார்த்தார். அங்கு சென்று பார்த்தபோது, ஒளிவீசிய அந்த இடம், ஒரு கோவில் என்பதையும், அது, முழுக்க முழுக்க, கண்ணாடியால் கட்டப்பட்டிருப்பதையும், பார்த்து ஆச்சரியம் அடைந்தார்.
அப்போது தான், ராஜகாளியம்மன் கோவிலையும், இதேபோல், நேர்த்தியாகவும், எழில் மிகுந்ததாகவும் மாற்ற வேண்டும் என, முடிவெடுத்தார். இதன்பின், மலேசியா திரும்பிய அவர், அதற்கான ஏற்பாடுகளை தீவிரமாகச் செய்தார்.
கோவிலின் வெளிப்புறம் மற்றும் <உட்புறங்கள் முழுவதும், பல வண்ணங்களில் ஒளிவீசும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டன. தரைப் பகுதியில், ஒளியை பிரதிபலிக்கும் வகையில், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொசைக் கற்கள் பொருத்தப் பட்டன.
நேர்த்தியான வேலைப்பாடுகளுடன் கூடிய, சிவப்பு, ஊதா, மஞ்சள் நிறங்களிலான, மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட கண்ணாடிகள், இந்த கோவிலில் பொருத்தப்பட்டன. கோவிலில் உள்ள தூண்கள், சுவர், மேற்கூரை ஆகிய அனைத்து பகுதிகளும், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்டன. இந்த கோவிலில் பொருத்துவதற்காகவே, ஒளியை, வித்தியாசமாக பிரதிபலிக்கக் கூடிய, மின் விளக்குகள், ஆங்காங்கே பொருத்தப்பட்டன.
இந்த விளக்குகளின் வெளிச்சம், கண்ணாடிகளில் பட்டு, பிரதிபலிக்கும் அழகை பார்ப்பதற்கு, கோடி கண்கள் வேண்டும். கோவில் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. நன்கொடைகள் மூலமும், சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தியதன் மூலமும் கிடைத்த பணத்தில், ஐந்து கோடி ரூபாய் செலவில், ராஜகாளியம்மன் கோவில், நேர்த்தியாக உருமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஒளி வெள்ளத்தில், சொர்க்கம் போல் மிதக்கும் இந்த கோவிலில் தரிசனம் செய்வதற்காகவும், இதன் அழகை காண்பதற்காகவும், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வருகின்றனர். இந்த அழகிய கோவில், மலேசியாவின் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது.