Daily Archives: ஒக்ரோபர் 6th, 2012

`ரத்த வங்கி’ தொடங்கியது எப்படி

 

விபத்து அல்லது வியாதியால் ரத்தம் இழந்தவருக்கு ரத்தம் ஏற்றிக் காப்பாற்றுவது இன்று சாதாரண வழக்கமாக உள்ளது.
இந்த நடைமுறை, பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் அப்போதெல்லாம் ரத்தம் ஏற்றுவதால் சில சமயங்களில் நன்மை விளைந்தது, சில சமயங்களில் தீமை ஏற்பட்டது. விஞ்ஞானிகளுக்கு அது புதிராக இருந்தது. அதன் பின்பே, எல்லா மனித ரத்தமும் ஒரே தன்மை உடையதல்ல என்று விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.
ரத்தம் ஏற்ற வேண்டுமென்றால் ரத்தத்தைச் சேமிக்க வேண்டும். ஆனால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் ரத்தம் உடனே உறைந்து விடுகிறது. 1914-ல்தான் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயனப் பொருளை ரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் அதன் உறைவைத் தடுக்க முடியும் என்று கண்டுபிடித்தார்கள்.
ஆனால் நீண்ட காலத்துக்கு ரத்தத்தைச் சேமித்து வைப்பது எப்படி? ரத்தத்தில் மிதக்கும் செல்கள் சீக்கிரத்தில் இறந்து விடுவதைத் தடுப்பது எப்படி? 1932-ல் இதற்கு சோவியத் மருத்துவர்கள் வழி கண்டனர். குளிரூட்டும் பெட்டியில் ரத்தத்தைப் பாதுகாத்தால், அந்த செல்களை அழியாமல் காக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அதன் பிறகு ரத்தச் சேமிப்பு நிலையங்கள் என்ற ரத்த வங்கிகளை அமைத்து மக்களிடம் இருந்து ரத்த தானம் பெறும் வழக்கத்தை ரஷியர்கள் தொடங்கினர். அது உலகெங்கும் பரவியது.
1936-ம் ஆண்டு ஸ்பெயினில் பிராங்கே கலகக் கூட்டத்துக்கு எதிராக குடியரசுப் போராட்டம் நடந்தபோது டாக்டர் நார்மன் பிதின், ரத்தச் சேமிப்பு முறையைப் பயன்படுத்தி போர்க் களத்தில் பல வீரர்களுக்கு மறு உயிர் கொடுத்தார்.
பிதின் கனடா நாட்டுக்காரர். அவர் சோவியத் யூனியனின் ரத்தச் சேமிப்பு ஏற்பாடுகளைக் கற்றறிந்திருந்தார். இறுதியாக அமெரிக்க மருத்துவர்கள் பிளாஸ்மா தயாரிப்பில் வெற்றி கண்டனர். மிதக்கும் அணுக்கள் உள்ளிட்ட முழுமையான ரத்தம் தேவைப்படாத நோயாளிகளுக்கு பிளாஸ்மா கொடுக்கலாம். பிளாஸ்மாவைச் சேமித்துப் பாதுகாப்பதும், நோயாளிக்குக் கொடுப்பதும் எளிது. மேலும் ரத்தத்தில் பிரிவுகள் இருப்பதைப் போல பிளாஸ்மாவில் இல்லை. யாருடைய பிளாஸ்மாவையும் எவருக்கும் கொடுக்கலாம்.

ராம நாமாவை சொல்லுங்கள்!

மக்களின் வாக்கிலே பகவான் நாமா வர வேண்டும். இது, அடிக்கடி வர வேண்டும். வேறு எதையெல்லாமோ பேசி, காலத்தை வீணாக்கக் கூடாது. வாழ்நாளில் ஒரு வினாடி போய் விட்டாலும், திரும்பவும் வராது. இதை நினைவுபடுத்தி வாழ வேண்டும். இப்படி, பகவான் நாமாவை சொல்லிச் சொல்லி பழக வேண்டும்.
பகவான் நாமாவில் ராம நாமாவுக்கு பெருமையும், முக்கியத்துவமும் கொடுத்துள்ளனர். காசி மாநகரில் ஒரு செல்வந்தன் இருந்தான். விதி வசத்தால் அவனுக்கு தொழுநோய் ஏற்பட்டது. என்ன செய்தாலும், நோய் குணமாகவில்லை. அவனது சுற்றத்தார், அவனை கங்கை கரையில் கொண்டு வந்து விட்டனர்.
அந்த இடத்துக்கு அடிக்கடி நீராட வருவார் பத்மநாபர் என்ற மகான். கபீர்தாசரை குருவாக அடைய வேண்டும் என்று எண்ணினார். கபீர்தாசரையும் கண்டு அவரது சீடராகி, ராமநாம பிரபாவத்தை பிரசாரம் செய்து வந்தார். அவர் வந்த சமயம், தொழுநோயால் வருந்தும் செல்வந்தனும் அங்கு வந்து கங்கையில் விழுந்து மரிக்கப் போவதாகச் சொன்னான். அதைக் கேட்ட பத்மநாபர், "அப்படிச் செய்யாதே… ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்தாலே போதும்; உன் நோய் போய் விடும்…’ என்றார்.
செல்வந்தனும், கங்கையில் ஸ்நானம் செய்துவிட்டு, ராம நாமத்தை மூன்று முறை உச்சரித்து, நோய் நீங்கப் பெற்று சுகம்அடைந்தான். இந்த விஷயத்தை பலர் ஓடிவந்து, கபீர்தாசரிடம் கூறினர். ஆனந்தப்பட்டு பத்மநாபரைக் கூப்பிட்டு, "ராம நாமாவை ஒரு தரம் சொன்னாலே போதுமே… ஏன் மூன்று முறை சொல்லச் சொன்னீர்கள்?’ என்று கேட்டார் கபீர்தாசர்.
அதற்கு பத்மநாபர், "அந்த செல்வந்தன், இந்த காசி ÷க்ஷத்ரத்தில் இவ்வளவு காலம் இருந்த போதும், ஒரு நல்ல குருவை தேடி உபதேசம் பெறாமல் இருந்ததற்காக ஒரு முறையும், அவனது நோய் நீங்க ஒருமுறையும், அனைவரும் இந்த ராம நாமத்தின் பெருமையை உணர்ந்திட ஒருமுறையும், ஆக மூன்று முறை சொல்லச் செய்தேன்…’ என்றார் பத்மநாபர்.
அது சரி, இப்படி ராம நாமாவை ஒருமுறை சொன்னாலே போதும் என்றால், நாட்டில் இவ்வளவு வியாதிக்காரர்கள் எப்படி உண்டாயினர் என்ற கேள்வி எழலாம். ராம நாமாவினால் எப்படிப்பட்ட வியாதியும் தீர்ந்து விடும் என்ற நம்பிக்கையோடு ஜெபம் செய்தால், கட்டாயம் பலன் உண்டு.
கும்பகோணத்துக்கு அருகில் கோவிந்தபுரம், ராம சித்தாந்தத்துக்கு உதாரணமான இடம். முடிந்தால் தரிசித்து வாருங்கள்.