Daily Archives: ஒக்ரோபர் 10th, 2012

பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் ஷார்ட்கட் கீகள்

நமக்குத் தெரிந்த பலரின் முன் நின்று, ஒரு ஸ்லைட் ÷ஷாவினை, பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் மூலம் அளிக்கும் போது, பிரசன்டேஷன் தொகுப்பின் இயக்கம் நமக்கு எளி தாகவும், பழக இனிமையானதாகவும் அமைந்தால் தான், காட்சியைப் பதற்றமின்றித் தர முடியும். அந்த வகையில் பவர்பாய்ண்ட் தொ குப்பில் சில ஷார்ட்கட் கீகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.
1. முதல் ஸ்லைடிலிருந்து பிரசன்டேஷனைத் தொடங்க F5.
2. அடுத்த அனிமேஷனை இயக்க, அல்லது அடுத்த ஸ்லைடுக்குச் செல்ல என்டர்கீ/ஸ்பேஸ் பார் அல்லது மவுஸ்கிளிக்.
3. முந்தைய ஸ்லைடுக்குச் செல்ல பேக் ஸ்பேஸ்.
4. குறிப்பிட்ட ஸ்லைடுக்குச் செல்ல அந்த ஸ்லைடின் எண்ணை டைப் செய்து என்டர் அழுத்தவேண்டும்.
5. முதல் ஸ்லைடிற்குச் செல்ல Home பட்டன்.
6. கடைசி ஸ்லைடிற்குச் செல்ல End பட்டன்.
7. கருப்பு திரையைக் கொண்டு வர அல்லது கருப்பு திரை ஒன்றிலிருந்து ஸ்லைட் ­ஷோவினைத் தொடர B அல்லது முற்றுப் புள்ளி கீ.
8.வெள்ளை திரையைக் கொண்டு வர அல்லது வெள்ளை திரை ஒன்றிலிருந்து ஸ்லைட் ஷோவினைத் தொடர W அல்லது கமா.
9. ஸ்லைட் ஷோவினை முடிக்க Esc அல்லது ஹைபன்.
10. ஸ்லைட் ஒன்றிலிருந்து அன்னோடேஷன் குறிப்புகளை நீக்க E.
11. பாய்ண்ட்டரை ஒரு பேனாவாக மாற்ற (மாற்றி, அது மறைவாக இருப்பின்,) அதனை பாப் அப் மெனு பட்டனில் காட்ட Ctrl + P.
12. பாய்ண்ட்டரை ஒரு அம்புக் குறியாக மாற்ற (மாற்றி, அது மறைவாக இருப்பின்,) அதனை பாப் அப் மெனு பட்டனில் காட்ட Ctrl + A.
13. பாய்ண்ட்டர் மற்றும் பாப் அப் மெனு பட்டனை மறைக்க Ctrl + H.
14. பாய்ண்ட்டர் மற்றும் பாப் அப் மெனு பட்டனை 15 விநாடிகள் கழித்து மறைக்க Ctrl + U.
15. ஷார்ட்கட் மெனுவினைக் காட்ட Shift + F10.
16. ஸ்லைடில் அடுத்த ஹைப்பர்லிங்க்கிற்கு தாவ Tab.
17. ஸ்லைடில் முந்தைய ஹைப்பர்லிங்க்கிற்கு செல்ல Shift + Tab.
18. தேர்ந்தெடுக்கப்பட்ட ஹைப்பர் லிங்க்கினை இயக்க Enter.

இரத்த சோகை வராமல் தடுக்க…

இரத்த சோகை வராமல் தடுக்க…
இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் இருக்க வேண்டிய ஹீமோகுளோபின் அளவு குறைவதால் ஏற்படம் நிலையே இரத்தசோகை.
ஹீரோகுளோபின் பெண்களுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 12.1 முதல் 15.1 கிராமும், கர்பிணிகளுக்கு 100 மி.லி. இரத்தத்தில் 11 முதல் 12 கிராமும் இயல்பாக இரத்தத்தில் இருக்க வேண்டும்.
* பெண்களுக்கு 12 கிராமுக்கு குறைவாக, கர்பிணிகளுக்கு 11 கிராமுக்கு குறைந்தால் இரத்தசோகை ஏற்படும்.
* இதற்கு இளம்பெண்கள் மருத்துவரிடம் இரும்புச்சத்து மற்றும் ஃபோலிக் அமில மாத்திரைகள் பெற்று உட்கொள்ள வேண்டும்.
இரத்த சோகை ஏற்படக் காரணங்கள்:
* பெண்கள் பூப்பெய்திய காலம் முதல் தங்கள் மாதவிலக்கு காலங்களில் அதிக அளவு இரத்தப் போக்கினால் இரும்புச் சத்து மற்றும் வைட்டமின் இழப்பதால்…
* பேறு காலத்தின் போது இரத்தப்போக்கு ஏற்படுவதால்…
* அடிக்கடி அழந்தை பெறுவதால்…
* தேவைக்கு ஏற்ப உணவு உண்ணாமை…
உங்களுக்கு தெரியுமா?
தமிழ்நாட்டில் 70 சதவிகிதம் வளர் இளம்பெண்களுக்கு இரத்தசோகை நோய் காணப்படுகிறது.
இதன் பாதிப்பு:
பள்ளிப் படிப்பிலும் மற்ற செயல்பாடுகளிலும் குறைவான பங்கேற்பு, ஒழுங்கற்ற மாதவிடாய், உடல் சக்தி குறைவு, தொடர்ந்து அசதி.
இதன் ஆரம்ப அறிகுறிகள்:
சோர்வு, மூச்சு வாங்குதல், கற்றலில் கவனக்குறைவு, அன்றாட வேலைகளைச் செய்ய முடியாமை, வெளிறிய முகம் மற்றும் கண்கள், மார்பு படபடத்தல்.
தடுக்க என்ன செய்ய வேண்டும்?
* ஆறு மாதங்களுக்கு ஒருமுறை குடல் பூச்சி நீக்கி மருந்து எடுத்துக் கொள்ளுதல்.
* இபுரும்புச் சத்து மாத்திரை சாப்பாட்டுக்குப்பின் உட்கொள்ளுதல்.
* இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை போதுமான அளவு சேர்த்துக் கொள்ளுதல்.
* சுகாதாரக் கழிப்பறையை உபயோகித்தல்.
* வெளியில் செல்லும் போது காலணிகள் அணிதல்
* மலம் கழித்தபின், சமைக்கும் முன், குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் முன் சோப்பு போட்டுக் கைகளைக் கழுவுதல்.

ஆண் குழந்தை பிறந்தால் தான் குளியல்!

உ.பி., மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவர் கைலாஷ் சிங், வயது 66. நீண்ட சடை முடியுடனும், அழுக்கு படிந்த ஸ்வெட்டருடனும் வலம் வரும் இவரை தெரியாதவர்கள், வாரணாசியில் அதிகம் இருக்க முடியாது. "அப்படி என்ன சாதனை செய்து விட்டார்’ என, படிக்கும்போதே, உங்களின் புருவம் உயர்கிறதா? கடந்த 38 ஆண்டுகளாக, இவர் குளித்ததே இல்லை என்பது தான், இவர் செய்த சாதனை.
"ஆண் குழந்தை பிறக்கும் வரை, குளிக்க மாட்டேன்’ என, திருமணம் ஆன புதிதில் சபதம் செய்துள்ளார். இதுவரை, ஏழு பெண் குழந்தைகளுக்கு தந்தையாகி விட்டார். ஆனாலும், ஆண் குழந்தை பிறக்காததால், தன் சபதத்தை தொடர்கிறார். "ஒரு நாளைக்கு குளிக்கவில்லை என்றாலே, உடலில் நாற்றம் தாங்க முடியாதே. உங்களால் எப்படி, 38 ஆண்டுகளாக குளிக்காமல் இருக்க முடிகிறது?’ என, கேட்டால், "ஒரு லட்சியத்தை நோக்கி, பயணம் செய்யும்போது, ஒரு சில விஷயங்களை சகித்துக் கொள்ளத் தான் வேண்டும்…’ என, தத்துவ மழை பொழிகிறார்.
"லட்சியத்துக்காக அவர் வேண்டுமானால், நாற்றத்தை சகித்துக் கொள்ளலாம். அவரது மனைவி எப்படி சகித்துக் கொள்கிறார்?’ என, அவரது மனைவி கலாவதியிடம் கேட்டபோது, "அதை ஏன் சார் கேட்கிறீங்க. அவர் வீட்டிற்குள் நுழைந்தாலே, நாற்றமும், கூடவே வந்து விடும். ஒருமுறை, கட்டாயப்படுத்தி, குளிக்க வைக்க முயற்சித்தோம். கடும் ஆத்திரமடைந்த அவர், கம்பு, கத்தியை கையில் எடுத்து, எங்களை தாக்க வந்து விட்டார். அதிலிருந்து, விஷப் பரீட்சையை ஒத்தி வைத்து விட்டோம்…’ எனக் கூறினார்.
கைலாஷ் சிங்கோ , "விரைவில் எனக்கு ஆண் குழந்தை பிறந்து விடும். அதற்கு பின், என் சபதத்தை முடித்து விட்டு, குளித்து விடுவேன். அதுவரை, அந்த ஆண்டவனே வந்தாலும், என்னை, யாரும், கட்டாயப்படுத்தி, குளிக்க வைக்க முடியாது…’ என, கண்களில் பொறி பறக்க பேசுகிறார்.

பெற்றோரிடம் பிள்ளைகள் எதிர்பார்க்கும் `அந்தஸ்து’

 

பிள்ளைகள் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பெற்றோர் விரும்புகிறார்கள். அதேபோல் தங்கள் பெற்றோர் புத்திசாலிகளாக இருக்க வேண்டும் என்று பிள்ளைகளும் விரும்புகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலே போய், பெற்றோர்கள் தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்வதோடு மட்டுமின்றி, சமூகத்திலும் பலரால் மதிக்கப்படக்கூடிய அந்தஸ்துடன் வாழவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள். பெற்றோரின் அந்தஸ்து தங்களுக்கு தனி கவுரவத்தைக் கொடுப்பதாக கருதுகிறார்கள்.

பெற்றோர் புத்திசாலிகளாக இருந்தால், எப்போதும் அவர்கள் பிள்ளைகளின் மனநிலையை புரிந்து கொண்டு செயல்படுவார்கள். தங்கள் பிள்ளைகளின் தேவைகளை அவர்கள் சொல்லாமலேயே புரிந்துகொண்டு நிறைவேற்றுவார்கள்.

பொதுவாக எல்லா பெற்றோருக்கும் போதிய கல்வி அறிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. கல்வி அறிவு இல்லாவிட்டாலும்கூட, தங்களது பொது அறிவை மேம்படுத்தி குழந்தைகளின் தேவைகளை உணர்ந்து அவர்களை திருப்திப்படுத்தும் பெற்றோராக இருப்பது இன்று அவசியமாகிறது. போதிய கல்வி அறிவு இல்லாத பெற்றோருக்கு ஒருவித தாழ்வு மனப்பான்மை உருவாகிவிடும். அந்த தாழ்வு மனப்பான்மையால் யார் முன்னாலும் தன் பெற்றோர் தலைதாழ்ந்து நின்றுவிடக்கூடாது என்றும் குழந்தைகள் எதிர்பார்க்கின்றன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் பிள்ளைகளின் மனது காயப்படும் என்பதை பெற்றோர் உணர்ந்துகொள்ளவேண்டும்.

Sun14 பெற்றோரின் உழைப்பில்தான் குழந்தைகள் படித்து முன்னேறுகின்றன. தனது தந்தை என்ன வேலை பார்க்கிறார்? என்பதிலும், அவர் வாங்கும் சம்பளம் அல்லது சம்பாதிக்கும் பணத்தின் அளவு அதிகமாக இருக்கவேண்டும் என்பதிலும் குழந்தைகள் கவனமாக இருக்கின்றன. அப்பா பார்க்கும் வேலை சொல்வதற்கு மகிழ்ச்சியாக இல்லை என்றாலும், வாங்கும் சம்பளம் மிகக் குறைவாக இருந்தாலும் குழந்தைகள் வருத்தப்படுகின்றன என்பதை பெற்றோர் புரிந்துகொள்ளவேண்டிய காலம் இது.

போட்டிகள் நிறைந்த இந்த உலகத்தில், போராடி ஜெயிக்க ஒவ்வொரு குழந்தையும் தயாராக இருக்கிறது. அவர்களின் போராட்டத்திற்கு சரியான முறையில் வழிகாட்டி, ஊக்குவிக்கும் பெற்றோரை குழந்தைகள் அதிகம் விரும்புகின்றன. `நீ விரும்புவதால் அதில் கலந்துகொள்ள அனுமதிக்கிறேன். எந்த அளவுக்கு அதை சிறப்பாக செய்யமுடியுமோ அந்த அளவுக்கு செய்’ என்று தூண்டுதல் தரும் பெற்றோர் என்றால் குழந்தைகள் அதிகம் மகிழ்கின்றன. அப்படி அனுமதி

கொடுக்கும் விஷயத்தில் அவர்கள் தோற்றுப்போனால்கூட பெற்றோருக்கு அது பெரிய வெற்றியாகிவிடுகிறது. ஏன்என்றால் தானாகவே முன்வந்து பெற்றோர் அனுமதி செய்த காரியம் தோல்வி அடைந்தால், உடனடியாக அதுபற்றி குழந்தைகள் ஆய்வு செய்கின்றன. அதில் சில நல்ல தீர்மானங்களை எடுக்கின்றன. அந்த தீர்மானங்கள் காலம் முழுக்க அவர்கள் முன்னேற கைகொடுப்பதாக இருக்கிறது.

பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்குச் செல்கிறார்கள். `வேலைக்கு செல்வதால் தங்களோடு பெற்றோர் அதிக நேரம் இருப்பதில்லை’ என்ற கவலை குழந்தைகளுக்கு இருந்தாலும், பெற்றோர் அருகில் இல்லாத நேரத்தில் தனது நேரத்தை செலவிட சரியான ஏற்பாடுகளை செய்துகொடுத்தால், அந்த பெற்றோர்களை குழந்தைகளுக்கு பிடிக்கிறது. அந்த ஏற்பாடுகள் குழந்தைகளுக்கு பிடித்ததாக இருக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சிறுமிகள் தங்களுக்கு பலவிஷயங்கள் தெரியும் என்று, தங்கள் தோழிகளிடம் கூற ஆசைப்படுகிறார்கள். அதற்காக புதிய விஷயங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள். இந்த வாய்ப்பை புரிந்துகொண்டு எந்த தாய் தன் குழந்தைக்கு சமையல், அலங்காரம், தையல் கலை போன்றவைகளை சொல்லிக்கொடுக்கிறாரே, அவர் தன் குழந்தைகளிடம் அந்தஸ்துமிக்கவராக மாறிவிடுகிறார். இதை தாய் கற்றுக்கொடுக்கவேண்டும் என்றால், முதலில் அவர் அவைகளை கற்றுக்கொள்ளவேண்டும். நிறைய கலைகளை கற்றுத் தெரிந்து வைத்திருக்கும் அம்மாக்களுக்கு அவர்களது பெண் குழந்தைகள் அதிக மதிப்பு கொடுக்கிறார்கள் என்பது கவனிக்கத் தகுந்த விஷயமாகும்.

எப்போதும் திட்டுவது, அடிப்பது, கடிந்து கொள்வது என்று செயல்படும் பெற்றோரை குழந்தைகளுக்கு பிடிப்பதில்லை. தாங்கள் எப்போதும் கிறுக்கிக்கொண்டே இருந்தாலும், `நீ கிறுக்குவதற்குள் ஒரு ஓவியன் ஒளிந்திருக்கிறான்’ என்று கூறி ஊக்கம் அளித்து, அதற்கான வகுப்புகளுக்கு அனுப்பி, தங்களை ஓவியர் ஆக்கிவிட்டால் அந்த பெற்றோரை தலைக்கு மேல் தூக்கிவைத்துக்கொண்டு குழந்தைகள் கொண்டாடுகின்றன.

விளையாட்டு எல்லா குழந்தைகளுக்கும் பிடிக்கும். விளையாட்டு குழந்தைகளை பலம் பெற வைக்கும். நன்றாக வளர வைக்கும். குழந்தைகள் வாழ்க்கையில் விளையாட்டு மிக அவசியம் என்பதை பெற்றோர் உணர்ந்து அதை ஊக்கப்படுத்த வேண்டும். படிப்புக்கும்- விளையாட்டுக்கும் சரியாக நேரத்தை ஒதுக்க முடியாமல் குழந்தைகள் தடுமாறினால், அதற்கு சரியாக திட்டமிட்டுக்கொடுத்து நேரத்தை ஒதுக்க உதவினால் குழந்தைகள் மகிழ்கின்றன. எந்த விளையாட்டு அவர்களுடைய திறமையை வெளிக்கொண்டு வந்து அவர்களை பிரகாசிக்க வைக்கும் என்பதை புரிந்து, அதில் தொடர்ந்து பயிற்சியளிக்க பெற்றோர் உதவவேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனக்கு பிடித்த விளையாட்டில் பெற்றோருக்கு ஆர்வம் இல்லாவிட்டாலும், அதைப் பற்றி பெற்றோர் தெரிந்துகொண்டு, அதைப் பற்றி பேசவும், ஊக்கமளிக்கவும் வேண்டும் என்று குழந்தைகள் விரும்புகின்றன. தனது விளையாட்டுக்கு ஊக்கம் கொடுக்கும் பெற்றோரை, குழந்தைகள் உயர்ந்த இடத்தில்வைத்து பார்க்கிறார்கள்.

பிள்ளைகள் விஷயத்தில் எப்படிப்பட்ட நிலையிலும் புத்திசாலி பெற்றோர் ஆவேசப்படாமல் நிதானமாக செயல்படுவார்கள். குழந்தைகளுக்கென்று ஒரு வெளியுலக இமேஜ் இருக்கிறது. அவர்களுக்கென்று மரியாதைக்குரிய ஒரு நட்பு வட்டம் இருக்கிறது. அதை புரிந்து கொண்டு தங்களை கவுரவமாக நடத்த வேண்டும் என்று அவர்கள் பெற்றோரிடம் எதிர்பார்க்கிறார்கள். தங்களது நியாயமான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி தங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பெற்றோருக்கு பிள்ளைகள் தங்கள் மனதில் உயர்ந்த இடத்தை அளிக்கிறார்கள். அப்படிப்பட்ட பெற்றோரைப் பற்றி தங்கள் நட்பு வட்டத்திலும் உயர்வாகப் பேசுகிறார்கள்.

புதிய வகை மால்வேர் புரோகிராம்கள்

கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்கும், முடக்கிப் போடும் மால்வேர் புரோ கிராம்கள், இப்போது புதிய வடிவமைப்பில் வலம் வருவதைப் பல ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. வழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ்,பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கம்ப்யூட்டரில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும் இன்னும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவற்றிற்கு இடையே, புதிய வகை தாக்குதல்களுடன் சில புதிய வைரஸ்கள் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
ஷமூன் (Shamoon) என்னும் புதிய மால்வேர் புரோகிராம் ஒன்று பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலர், அல்லது நிறுவனங்களை இது தாக்குகிறது. குறிப்பாக மின்சக்தி நிறுவனங்களை இது இலக்காகக் கொண்டு தாக்குகிறது. செக்யூலர்ட் (Seculert) என்ற இஸ்ரேல் நாட்டு நிறுவனத்தின் ஆய்வு மையக் கணக்கின்படி, முதலில் இது கம்ப்யூட்டர் ஒன்றினை, இணையம் வழியே கைப்பற்றுகிறது. பிறகு அங்கிருந்து கொண்டு, நிறுவனங்களைத் தாக்குகிறது. அதன் பின்னர், தான் தங்கி உள்ள கம்ப்யூட்டரில் உள்ள பைல்களை, திருத்தி எழுதுகிறது. அதன் மாஸ்டர் பூட் ரெகார்டையும் (MBR Master Boot Record) மாற்றுகிறது. இவ்வாறு மாற்றப்பட்டால், பின்னர் அந்த கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. செக்யூலர்ட், மாஸ்கோவில் இயங்கும் காஸ்பெர்ஸ்கி லேப், அமெரிக்க ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான சைமாண்டெக் ஆகிய நிறுவனங்களால், இந்த வைரஸ் எத்தகைய தகவல்களைக் குறி வைத்து தாக்குகிறது என அறிய முடியவில்லை. 2010 ஆம் ஆண்டில் ஈரான் நாட்டின் நியூக்ளியர் திட்டத்தினைக் கெடுத்த ஸ்டக்ஸ்நெட் வைரஸ் போல இது இயங்குமோ என்ற சந்தேகத்துடன் இந்த ஆண்ட்டி வைரஸ் நிறுவனங்கள் இதனை அணுகத் தொடங்கி உள்ளனர்.
இவற்றுடன் இதே போல பலவகையான குறிப்பிட்ட கெடுதல் வேலையை இலக்காகக் கொண்டு Duqu, Flame, and Gauss என மால்வேர் புரோகிராம்கள் உலா வருகின்றன. இவை மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்களைக் கண்டறியும் புரோகிராம்களிடமிருந்து தப்பித்துவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
1990 ஆம் ஆண்டு வாக்கில் வந்த வைரஸ்கள் தான், தங்கள் இலக்காக மிக மோசமான விளைவைக் கொண்டிருந்தன. வேகமாகப் பரவி, மால்வேர் என்பதை ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனாளரும் உச்சரித்து பயப்பட வேண்டும் என்ற இலக்கோடு இவை வடிவமைக்கப்பட்டன. எவ்வளவு நாச வேலைகளைச் செய்திட முடியுமோ, அவற்றை மேற்கொண்டன. CodeRed, Nimda போன்றவை இந்த வகையைச் சார்ந்தவையாக இருந்தன. மிக மோசமான SQL Slammer இணைய தளங்களையே முடக்கிப் போட்டன. அதைப் போன்றவையே இப்போதும் பரவி வருகின்றன.
தாங்கள் கைப்பற்றிய கம்ப்யூட்டர்களிலிருந்து பாஸ்வேர்ட், யூசர் நேம், வங்கிக் கணக்குகள் அவை குறித்த பாஸ்வேர்ட் உட்பட தகவல்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து வர்த்தக நிறுவனங்களை முடக்குகின்றன. மேலும், கைப்பற்றிய கம்ப்யூட்டர்களைத் தளங்களாகக் கொண்டு ஸ்பேம், பிஷிங் அட்டாக் அல்லது மற்ற மால்வேர் புரோகிராம்களை பரப்புகின்றன. இதுவரை எரிச்சல் தரும் ஓர் புரோகிராமாக இருந்த மால்வேர்கள் தற்போது கண்டு அஞ்ச வேண்டிய புரோகிராம்களாக மாறிவருகின்றன.
ஆனால், இவை அனைத்திற்குமான பாதுகாப்பு வளையங்களை, தற்போது இயங்கும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் விரைவில் உருவாக்கித் தரும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

பொக்கை வாய்கள்! சிரிக்கட்டும்!

பெரியவர்களை, "தாத்தா’ "ஐயா’ என்று மரியாதையுடன் அழைத்த காலமெல்லாம் போய், "யோவ் பெரிசு’ "அட கிழவா’ என்று அழைக்கிற காலம் வந்திருக் கிறது. பெற்றவர்களைக் கூட பாரமாக நினைத்து, அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்க்கின்றனர் பிள்ளைகள். பெரியவர்களுக்கு மரியாதை தர தவறினால், நிலைமை என்னாகும் தெரியுமா? புரட்டாசி சனியன்று, பெருமாள் கோவிலுக்கு போகிறவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது.
இந்திரத்துய்மன் என்ற மன்னன் அகத்தியரை தன் குருவாகக் கொண்டவன். பெருமாள் பக்தன். ஒருமுறை, அகத்தியர் அவனது அவைக்கு வந்தார். அப்போது மன்னன் கேளிக்கை விளையாட்டுகளில் மூழ்கியிருந்தான். குரு வந்திருப்பதாக அவனுக்குத் தெரிந்தும், விளையாட்டு மும்முரத்தில் அவருக்கு மரியாதை செலுத்த செல்லவில்லை. இதுகண்டு குமுறிய அகத்தியர், தன்னை மதிக்காத மன்னனை, யானையாக மாற சாபம் விடுத்தார். மன்னன் மன்னிப்பு கேட்டபோது, வனத்தில் பல காலம் சுற்றித் திரிந்து, பெருமாளின் அருளால் மோட்சம் பெறுவாய் என சபித்தார். இந்திரத் துய்மனும் யானையானான். அதற்கு, கஜேந்திரன் எனப் பெயர்.
இதேபோல, கபில முனிவர் ஒருமுறை, ஆற்றில் நீராடச் சென்றார். கந்தர்வன் ஒருவனும் நீராடி கொண்டிருந்தான். அவன், தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று, முனிவரின் காலைப் பிடித்து இழுத்து சில்மிஷம் செய்தான். கோபம் கொண்ட முனிவர், "தண்ணீரில் மறைவாக வந்து காலைப் பிடித்து இழுத்த நீ, முதலையாக பிறப்பாய்….’ என சாபமிட்டார். அவனும் சாப விமோசனம் கேட்ட போது, "பிற்காலத்தில் விஷ்ணுவின் கரத்தால் மோட்சம் பெறுவாய்’ என்றார். அந்த முதலை, "கூஹு’ என்ற பெயருடன் ஆற்றில் கிடந்தது.
ஒரு சமயம், கஜேந்திர யானை, தன் கூட்டத்துடன் தண்ணீர் குடிக்க வந்தது. உள்ளே கிடந்த முதலை, அதன் காலைக் கவ்வியது. இரு விலங்குகளுக்கும் கடும் போராட்டம் நடந்தது. உடன் வந்த யானைகளோ, உதவி ஏதும் செய்யாமல், உயிருக்குப் பயந்து கரையேறி விட்டன. பெரியவர்களுக்கு மரியாதை தராதவர்களுக்கு மறுபிறப்பில், உறவுகளின் ஒத்துழைப்பு கிடைக்காது என்பது இதன் மூலம் உணர்த்தப்படும் தத்துவம்.
இந்நேரத்தில், கஜேந்திர யானைக்கு சாப விமோசன நேரம் வந்தது. தன் உயிர் போகும் நேரத்திற்குள் பெருமாளை வணங்க எண்ணி, ஆற்றில் இருந்த தாமரை மலரைப் பறித்தது; "ஆதிமூலமே’ எனக் கதறியது.
இந்த சப்தம், வைகுண்டத்தில் லட்சுமியுடன் சொக்கட்டான் விளையாடிக் கொண்டிருந்த பெருமாளின் காதில் கேட்டது. இருவரில் யார் தோற்றாலும் எழுந்து ஓடிவிடக் கூடாது என்பதற்காக, பெருமாளின் வஸ்திரமும், தாயாரின் புடவையும் இணைத்துக் கட்டப்பட்டிருந்தது. அதைக் கூட பொருட்படுத்தாமல் பெருமாள் வேகமாக எழுந்தார். கருடன் விரைந்து வந்தார். கருடன் மீதேறி, தாயாரும், பெருமாளும் ஆற்றிற்கு வந்தனர். சக்கரத்தை வீசி முதலையை அழித்தார் பெருமாள். சக்கரத்தின் மகிமையால் முதலை மோட்சம் அடைந்தது. கஜேந்திரன் விடுபட்டது.
யானையைப் பிடித்ததாவது ஒரே ஒரு முதலை தான்! ஆனால், மனிதர்களாகிய நம்மை, கண், காது, மூக்கு, வாய், <உடல் எனும் ஐந்து முதலைகள் பிடித்துக் கொண்டிருக்கின்றன. பணம், வீடு, வாசல், பெண் போன்ற பல சுகங்கள் வேண்டுமென இந்த முதலைகள், இளைஞர்களை பாவச் சேற்றில் தள்ளி விடுகின்றன. இதன் விளைவு, பெரியவர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் மறைந்து விட்டது.
பெருமாள் சீனிவாசனாக பூமிக்கு வந்தது புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரம், சனிக்கிழமை என்று சொல்வது மரபு. இதனால் புரட்டாசி சனி அன்று, நாம் பெருமாளை வணங்குகிறோம். அன்று, கோவிலுக்கு போனால் மட்டும், அவரது அருள் கிடைத்து விடாது. நம் வீட்டுப் பெரியவர்களையும் பெருமாளாக எண்ணி, அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். "பெருமாள்’ என்ற சொல்லுக்கே, "பெரிய ஆள்’ என்று தான் பொருள். இனியேனும், நம் இல்லங்களில் பொக்கை வாய்கள் சிரிக்கட்டும்.