Daily Archives: ஒக்ரோபர் 16th, 2012

தடுமாற வைக்கும் தங்கம்!

 

Golds

`கிடுகிடு’வென்று உச்சத்தை எட்டியிருக்கிறது தங்கம். ஆனால் இந்த விலையிலும் தங்கம் தங்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. இனி தங்க நகை வாங்குவதே காஸ்ட்லியான கனவாகி விடுமோ என்று தயங்கி, தேங்கி நிற்கிறார்கள் நடுத்தர மக்கள்.
தங்கத்தின் எவரெஸ்ட் சிகர உயர்வின் பின்னணி, தங்கத்தில் முதலீடு செய்வது போன்றவை குறித்த விஷயங்களைப் பார்ப்போம்…
விலை உயர்வு ஏன்?
தங்கம் பொதுவாகப் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. அதிகம் படிக்காதவர்கள் கூட தங்கத்தில் முதலீடு செய்வதில் நல்லது என்று புரிந்துவைத்திருக்கிறார்கள். அதிகமான பணவீக்கமும், நிலையில்லாத பங்குச் சந்தையும் தங்கத்தை வரலாறு காணாத விலை உயர்வை எட்ட வைத்திருக்கின்றன.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் தங்கம் 35 சதவீதம் விலை உயர்ந்திருக்கிறது. இதற்கு நமது மக்கள் மட்டுமின்றி, அமெரிக்க, ஐரோப்பிய நாட்டினரும் தங்கத்தில் முதலீடு செய்யக் காட்டத் தொடங்கியிருக்கும் ஆர்வம் ஒரு முக்கியக் காரணம்.

GoldLady

பிற முதலீடுகள், வங்கி டெபாசிட்கள் போலில்லாமல் தங்கம் ஒரு பொருளாக இருக்கிறது. அதனால் இது கரைந்து போகாது என்ற நம்பிக்கை உள்ளது. வழிவழியாக, கூடுதல் பணத்தைப் போடும் பொருளாகத் தங்கம் உள்ளது.
அமெரிக்கப் பின்னணி…
அமெரிக்க `பெடரல் ரிசர்வ்’ அமைப்பானது, ஒரு முக்கியமான வங்கிக் கூட்டத்தில், புதிய நிதித்துறை ஊக்குவிப்புத் திட்டங்களை அறிவிக்க முடிவு செய்தது. அதுதான் தங்க விலை உயர்வுக்கு முக்கியக் காரணம் என்று ஓர் ஊகம் நிலவுகிறது. புதிய நிதி ஊக்குவிப்புத் திட்டத்தால், சந்தைக்குள் மேலும் அதிகப் பணம் செலுத்தப்படும். அதன் விளைவாகப் பணவீக்கம் அதிகமாகி, பொருட் களின் விலை உயரும். எனவேதான் மக்கள் தங்கள் இருப்பு மதிப்புக் கரைந்து போகாமல் இருக்க தங்கத்தை வாங்குகிறார்கள், மேலும் வாங்குவார்கள் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இந்தியாவில்…
ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை தங்க இறக்குமதியும், விற்பனையும் குறையவே செய்யும் என்று வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். நிலையற்ற உலகப் பொருளாதாரம், `பலவீனமான’ ரூபாய், பருவமழை ஏமாற்றம், நாட்டின் பொருளாதார மந்த நிலை ஆகியவற்றை அவர்கள் காரணமாகக் கூறுகிறார்கள். கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 12 சதவீதத்துக்கு மேல் மதிப்பு சரிந்துள்ள ரூபாய், இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் விலையை மேலும் விசிறிவிட்டுள்ளது. ரூபாய் மதிப்புக் குறையும்போது தங்கம் மட்டுமல்ல, இறக்குமதியாகும் அனைத்துப் பொருட்களின் விலையும் கூடுகிறது.
சரிந்த இறக்குமதி
இந்த ஆண்டின் ஏப்ரல்- ஜூன் காலகட்டத்தில் நாட்டின் தங்க இறக்குமதி 56 சதவீதத்துக்கு மேல் குறைந்து 131 டன்கள் ஆகியுள்ளது. அண்மையில் உலக கோல்டு கவுன்சில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரியவந்திருக்கும் தகவல் இது. விலைவாசி மேலும் கூடக் கூட, உலகின் பெரிய தங்க வாடிக்கையாளர்களான இந்தியர்கள் தங்கத்தை மேலும் தள்ளிவைப்பார்கள் என்று நிதி அலசல் நிபுணர் கள் கூறுகிறார்கள்.

Golds

மழையும் காரணம்
இந்தியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள், அதாவது சுமார் 80 கோடிப் பேரின் பொருளாதாரம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ விவசாயத்தைச் சார்ந்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு தாமதமான, பற்றாக்குறையான பருவமழை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புற மக்களின் செலவழிப்பு குறைந்துள்ளது.
விவசாயத்தில் குறைந்துபோன வருவாயும், அதிகரித்த பணவீக்கமும் கிராமப்புற மக்களை தங்கம் போன்ற முதலீடுகளை அதிகம் நாட விடாமல் செய்துள்ளன. நம் நாட்டில் விற்பனையாகும் தங்க நகைகளில் 60 சதவீதத்தை வாங்குபவர்கள் கிராமப்புற மக்களே என்ற நிலையில் இது முக்கியமான தாக்கம் ஆகும்.

இரும்பு கூண்டுக்குள் பிச்சைக்காரர்கள்!

image

சீனாவின், தெற்கு பகுதியில் உள்ள நான்சாங் என்ற இடத்தில், உள்ளூர் திருவிழாக்கள், அடிக்கடி கோலாகலமாக நடக்கும். சீனாவின் பல பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பார்வையாளர்கள், இங்கு வருவதுண்டு.
திருவிழாவை காண வரும் பார்வையாளர்கள், பிச்சைக்காரர்களின் தொல்லை களுக்கு ஆளாவது, வழக்கமாக இருந்தது. பார்வையாளர்களை, துரத்தி துரத்திச் சென்று, பணம், உணவு பொருட்களை கேட்டு, தொல்லை கொடுத்து வந்தனர். பிடிவாதம் பிடித்த பிச்சைக்காரர்கள் சிலர், பிச்சை போடாதவர்களை, தகாத வார்த்தைகளில், திட்டித் தீர்ப்பதும் உண்டு. இதனால், வெளிநாட்டவர் மத்தியில், சீனாவின் பெருமைக்கு, தீங்கு ஏற்படுவதாக, சீன அரசு கருதியது.
இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக, நான்சாங் நகர நிர்வாகம் சார்பில், தற்போது அதிரடியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, திருவிழா சமயங்களில், விழா நடக்கும் இடத்துக்கு சற்று தள்ளி, கம்பிகளால் அமைக்கப்பட்ட கூண்டுகள் வைக்கப்படும். பிச்சை எடுக்க விரும்புவோர், இந்த கூண்டுக்குள், வரிசையாக அமர வேண்டியது தான். கூண்டுக்கு வெளியில், பிச்சை பாத்திரங்களை வைத்துக் கொள்ளலாம்.
பிச்சை போட விரும்புவோர், கூண்டுக்கு அருகில் சென்று, பிச்சை போடலாம். எந்த காரணத்தைக் கொண்டும், திருவிழா முடியும் வரை, பிச்சைக்காரர்கள் கூண்டை விட்டு வெளியில் வரக் கூடாது என்பது, முக்கிய நிபந்தனை. இயற்கை உபாதைகளை கழிப்பதற்கு மட்டும், சிறிது நேரம் வெளியில் வரலாம். மற்ற நேரங்களில், கூண்டுக்குள் தான், அமர்ந்திருக்க வேண்டும்.
கூண்டை விட்டு வெளியில் வரும் பிச்சைக்காரர்களை, போலீசார் நன்கு, "கவனித்து’ அந்த ஊருக்கு வெளியே விட்டு விட்டு வந்து விடுவர். அப்புறம், அந்த பிச்சைக்காரர், ஊருக்குள் நுழைய முடியாது. இந்த நிபந்தனைகளுக்கு கட்டுப்படும் பிச்சைக்காரர்கள் மட்டுமே, திருவிழா சமயங்களில், ஊருக்குள் அனுமதிக்கப்படுவர்.
நான்சாங் நகர நிர்வாகிகள் கூறுகையில்,"இந்த புதிய திட்டத்தால், பார்வையாளர் களுக்கு, பிச்சைக்காரர்களால், எந்த தொல்லையும் இல்லை. விரைவில், சீனா முழுவதும், இந்த திட்டத்தை அமல்படுத்தும், ஐடியாவும் உள்ளது…’ என்கின்றனர்.
ஆனால், மனித உரிமை ஆர்வலர்களோ, "பிச்சைக்காரர்களை, இரும்புக் கூண்டுக்குள், விலங்குகளை போல், அடைத்து வைத்திருப்பது, கண்டிக்கத் தக்கது. அவர்களும், மனிதர்கள் தானே. பிச்சை எடுப்பதை கட்டுப்படுத்துவதற்கு, வேறு ஏதாவது நடவடிக்கை எடுப்பதை விட்டு விட்டு, இதுபோல், கூண்டுக்குள் அடைத்து வைப்பது, மனித உரிமைகளை அப்பட்டமாக மீறும் செயல்…’ என, போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான், மூட்டைபூச்சி ஒழிப்பு : நவீன எந்திரம் அறிமுகம்

image

ரயில் பெட்டிகளில் எலி, கரப்பான் மற்றும் மூட்டை பூச்சிகளை ஒழிக்க, நவீன எந்திரம், சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. "இதன் மூலம், ரயில் பெட்டிகள் சோதனை செய்யப்பட்டால், மூன்று மாத காலத்திற்கு மீண்டும் மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி, எலி இப்பெட்டிகளுக்கு வராது’ என்று, அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் பெட்டிகள், முறையாக பராமரிக்கப் படாததால், ரயில்களில் எலி, மூட்டைபூச்சி, கரப்பான் பூச்சி தொல்லை இருப்பதாகவும், ஏ.சி., பெட்டிகளில் இவைகள் அதிகம் உள்ளதாகவும், பயணிகள் மூலம் ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து ,புகார் விடுக்கப்பட்டு வந்தது. ரயில்வே யார்டுகளில், பெட்டிகள் சுத்தம் செய்யப்படும்போது, மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சிகளை கொல்வதற்கு விஷ மருந்து அடித்தும், எலிகளுக்கு விஷ மாத்திரைகளும் வைக்கப்பட்டு கொல்லப்பட்டன. தற்போது. பெட்டிகளில் சிறிய இடம்கூட, இடைவெளி விடாமல்,முழுவதிலும் விஷ வாயு செலுத்தப்பட்டு, எலி, கரப்பான் பூச்சி, மூட்டை பூச்சிகளை ஒரே நேரத்தில் ஒழிப்பதற்கு நவீன அமைப்பு, எந்திர வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக, தெற்கு ரயில்வேயின், சென்னை பேசின் பாலம் அருகில் உள்ள ரயில் இன்ஜின் மற்றும் ரயில் பெட்டிகள், பராமரிப்பு மையத்தில் இப்புதிய வசதி துவங்கப்பட்டுள்ளது. இப்பிரிவில், 80 மீட்டர் நீளம்,12 அடி அகலம் மற்றும் 15 அடி உயரத்திற்கு கண்ணாடி தடுப்பு சுவருடன் கூடிய செவ்வக வடிவ கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரிவிற்குள், ஒரே நேரத்தில் மூன்று ரயில் பெட்டிகள் கொண்டு செல்லப்படுகிறது. உட்புற இருக்கைகள், கழிவறைகள் உட்பட அனைத்து இருக்கைகளின் அடிப்பகுதிகளும்,ஏ.சி., அமைப்புகளிலும் இடைவெளிகளிலும், வாயுவை அனுப்பும் சிறிய பிளாஸ்டிக் குழாய்கள் பொருத்தப்படுகின்றன.
அதன் பிறகு கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, இப்பெட்டிகளின் வெளிப்புறத்தில், பிரமாண்ட தார்ப்பாய் கொண்டு மூடப்படுகிறது. தார்ப்பாய், பெட்டிகளிலிருந்து விலகாமலிருக்கவும்,வெளியில் இருந்து காற்று ஏதும் உள்ளே சென்று விடாமலிருக்கவும், ஏதுவாக தரை பகுதியில் தார்ப்பாயின் மீதுமணல் மூட்டைகள் வரிசையாக அடுக்கப்படுகின்றன. இதன் பிறகு, ரயில்வே பராமரிப்பு ஊழியர்கள் மூலம், பெட்டிகளின் உட்பகுதியில்,"மெத்தேல் புரோமைடு’ என்ற திரவ வடிவிலான வாயு செலுத்தப்படுகிறது. இந்த விஷ வாயு, பெட்டிகளின் அனைத்து பகுதிகளிலும் பரவுகிறது. பெட்டிகளின் உள்ளே உள்ள மூட்டை பூச்சி, கரப்பான் பூச்சி மற்றும் எலிகள் செத்து விடுகின்றன. பெட்டிகளில் விஷவாயு செலுத்தப்பட்டு, 24 மணி நேரம் கழித்து, கண்ணாடி கூண்டிலிருந்து மூன்று பெட்டிகளும் வெளியே காற்றோட்டமான பகுதிக்கு கொண்டு வரப்படுகின்றன. அதன் பிறகு பெட்டிகள் மற்றும் கழிவறை கதவுகள் திறக்கப்படுகின்றன. பராமரிப்பு பிரிவு ஊழியர்கள். கவச உடைமற்றும் கையுறைகள் அணிந்து கொண்டு, பெட்டிகளில் ஏறி, இருக்கைகள் மற்றும் கழிவறைகளில் செத்து கிடக்கும், மூட்டை பூச்சி,எலி, கரப்பான் பூச்சிகளை அப்புறப்படுத்துகின்றனர். மேலும், 24 மணி நேரம் வரை பெட்டிகள் அங்கேயே நிறுத்தி வைக்கப்படுகிறது. பெட்டிகள் முழுவதும், மீண்டும் ஒரு முறை சுத்தமாக சுத்தம் செய்யப்படுகிறது. அதன் பிறகு பயணிகள் பயன்பாட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. "இப்புதிய வசதியின் மூலம், தினசரி மூன்று, ஏ.சி., பெட்டிகள் சுத்தம் செய்யப்படுகிறது. இவ்வசதி தெற்கு ரயில்வேயில் மட்டுமல்லாது. இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்வேக்களிலும் அறிமுகம் செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருவகிறது’ என, பராமரிப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

மனதில் ஒளி வீசட்டும்!-அக்., 16 – நவராத்திரி ஆரம்பம்

image

நவராத்திரி என்றால் என்ன? மகிஷன் என்ற அசுரனைக் கொன்ற பராசக்தியை, சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை என்ற வடிவங்களில் வழிபட வேண்டும். விதவிதமான அலங்காரங்களைச் செய்ய வேண்டும். கொலு வைக்க வேண்டும். சுண்டல் சாப்பிட வேண்டும். இத்துடன் முடிந்து போனது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், நவராத்திரி தத்துவம் மிகவும் உயர்வானது.
நவராத்திரி, சிவராத்திரி, ஏகாதசி என இறைவனை இரவு நேரத்தில் வழிபடுவது வழக்கமாக இருக்கிறது. காரணம், இரவில் இறை தியானம் செய்வது மிகவும் மகிமையுள்ளது.
மனித மனம் ஆணவம் என்ற இருளால் சூழப் பட்டிருக்கிறது. இந்த இருளை அகற்றி, அவன் தன்னை யாரென உணர வேண்டும். நாம் எங்கிருந்து வந்தோம், எங்கே போகப் போகிறோம், இப்போது நம்மைச் சுற்றியுள்ள அம்மா, அப்பா, மனைவி, மக்கள், கணவன் இவர்களெல்லாம் யார்? இவர்கள் ஒரு காலத்தில் நம்மோடு இருந்தனர். இவர்களில் சிலர் இப்போது நம்முடன் இல்லை. அவர்கள் எங்கே போய் விட்டனர். நாம் பணம் சேர்க்கிறோமே… அது யாருக்காக? அது, நம்முடன் கடைசி வரை வரப் போகிறதா இப்படி யெல்லாம் சிந்திக்க ஆரம்பித்து விட்டால், வாழ்க்கை என்றால் என்ன என்பதற்கு, விடை கிடைத்து விடும். ஆனால், இதையெல்லாம் சிந்திக்க விடாமல் ஆணவ இருள், மனிதனைத் தடுக்கிறது.
எல்லாமே தன்னால் தான் நடக்கிறது என்று மனிதன் எண்ணுகிறான். தனக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது என்ற எண்ணத்தையே அவன் விட்டுவிடுகிறான். இந்த அகம்பாவமாகிய இருளில் இருந்து, நம்மை மீட்டுக் கொள்ளவே நவராத்திரி வருகிறது.
இதன் முதல் மூன்று இரவுகளில், துர்க்கையை வணங்கி, பொறாமை, ஆசை போன்ற தீய குணங்களில் இருந்து விடுபட வேண்டும். அடுத்த மூன்று நாட்கள், லட்சுமியை பிரார்த்திக்கும் போது, "எனக்கு பணம் கொடு’ என்று உரிமையுடன் கேட்பது போல, "அன்பு, இரக்கம், தானம் ஆகிய குணங்களையும் கொடு’ என்றும் கேட்டுப் பெற வேண்டும். சம்பாதிக்கும் பணம் தனக்கு மட்டுமின்றி, இயலாதவர்களுக்கும் போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தைக் கேட்டுப் பெற வேண்டும். இறைவன் என்பதே நிஜம் என்ற உணர்வைப் பெற வேண்டு மானால், சாதாரண கல்வியறிவு போதாது. மெய்யறிவு வேண்டும். அதற்காகத்தான் கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியை பூஜிக்க வேண்டும்.
இப்படி ஆத்மா சுத்தமாகி விட்டால், மனிதன் தன் ஆன்மிக நிலையில் வெற்றி பெறுகிறான். இந்த வெற்றியையே, பத்தாம் நாளில் விஜயதசமியாகக் கொண்டாட வேண்டும். வடமாநிலங்களில், ராவணன் போன்றவர்களின் உருவ பொம்மைகளை எரிப்பது வழக்கம். ராவணன் அசுர சக்தி. பொறாமை, ஆசை, கஞ்சத்தனம் போன்றவை மனிதனை பீடித்திருக்கும் அசுர குணங்கள். இந்த குணங்களை தீயிட்டுக் கொளுத்துவதன் அடையாளமே உருவ பொம்மை எதிர்ப்பு.
ஆன்மிகத்தை வெறும் புராண அளவுடன் நிறுத்திக் கொள்ளக் கூடாது. புராணக் கதைகளில் பொதிந்துள்ள தத்துவங்களே முக்கியம். அதைப் புரிந்து, திருவிழாக்களை கொண்டாட வேண்டும்.
இரவு தியானம், மகான்களின் வாழ்வில் திருப்பத்தைத் தந்தது.
காளி உபாசகரான ராமகிருஷ்ண பரமஹம்சர், பஞ்சவடி எனும் மரங்கள் அடர்ந்த பகுதியில், பல இரவுகள் தியானத்தில் இருந்துள்ளார். தன் சீடர்களை இரவில் தூங்குவதற்கு அனுமதிப்பதில்லை. இரவில் தியானம் செய்தால் தான், இறைவனைக் காண முடியும் என சீடர்களிடம் சொல்வார்.
ராமகிருஷ்ணரின் சீடர்களான விவேகானந்தரும், (அப்போது அவர் நரேந்திரன் என்னும் இளைஞர்) கிரீஷ் சந்திரகோஷ் என்பவரும் இரவில் ஒரு தோட்டத்தில் அமர்ந்து தியானம் செய்வர். கொசுத்தொல்லை காரணமாக, கிரீஷால் தியானத்தில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை. ஒருநாள், அவர் கண்விழித்து பார்த்த போது, நரேந்திரரின் மேல் கொசுக்கள் தேன் அடை போல் மொய்த்திருந்தன. ஆனால், அவர் கண்விழிக்கவில்லை. இரவு நேர தியானத்தால் கிடைத்த மனவுறுதி காரணமாகத்தான் அவர் விவேகானந்தராக முடிந்தது.
நவராத்திரி நாட்களில், நம் மனதிலுள்ள ஆணவத்தை வேரறுக்கும் வகையில், அம்பாளிடம் தியானம் செய்வோம்.