ஈஸ்வர லயம்

 

நர்மதையின் பிரவாகத்தை கமண்டலத்திலேயே அடக்கினாராம் ஆதிசங்கரர். கடலையே குடித்தானாம் குறுமுனிவன் அகத்தியன்.
எது ஆகும், யாராலே ஆகும் என்றெல்லாம் நாம் பயந்து கொண்டிருக்கத் தேவையில்லை. `நம்மாலே ஆகும்’ என்ற நம்பிக்கைதான் அதிலே முக்கியமாகும்.
எந்தக் காரியத்தைச் செய்தாலும் இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டுச் செய்; அதிலே வில்லங்கம் வராது. அப்படி வந்தாலும் அது விரைவிலேயே தீர்ந்து விடும்.
ஒரு காரியம் வெற்றியடைந்து விட்டால், `நான் அப்படிச் செய்தேன்; இப்படிச் செய்தேன்; அதனாலே வெற்றி வந்தது’ என்று குதிக்காதே. `ஏதோ ஆண்டவன் அருளால் இந்த வெற்றி வந்தது’ என்று அவனையும் பங்காளியாகச் சேர்த்துக்கொள்.
கஷ்டம் வந்துவிட்டது என்றால், `நான் தான் தவறு செய்து விட்டேன்’ என்று கூட நீ வருந்தத் தேவையில்லை; `ஏதோ ஆண்டவன் கிருபை, இந்தக் கஷ்டம் இத்தோடு போயிற்று’ என்று அமைதியடை.
லாப நஷ்டங்களோ, நன்மை தீமைகளோ உன்னால் தான் விளைகின்றன என்றாலும், அதற்குப் பின்னணியில் இருப்பது ஆண்டவனுடைய இயக்கம்.

பலரிடம் திறமை இருக்கிறது; ஆனால், சிலருக்குத்தான் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்தச் சிலரிலேயும் மிகச் சிலர் தான் மிக வேகமாக முன்னேறுகிறார்கள்; உலகப் புகழ் பெறுகிறார்கள்.
ஏன்? ஆண்டவனுடைய இயக்கத்தில் அவனுடைய ஜாடை யார் மீது எப்பொழுது விழும் என்பதைச் சொல்ல முடியாது.
இறைவனை நம்புகிறவன், இறைவனுடைய கருணையை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டுமே தவிர, இறைவன் எப்போது வருவான் என்று ஆவலோடு இருக்க வேண்டுமே தவிர, இறைவனை நொந்து கொள்வதில் அர்த்தமில்லை.
பக்கம் பக்கமாக இரண்டு நிலங்கள். ஒன்று பச்சைப் பசேல் என்றிருக்கிறது; ஒன்று வறண்டு போய்க் காய்ந்துக் கிடக்கிறது.
ஏன்?
அருகருகே இரண்டு கிணறுகள். ஒன்றிலே தண்ணீர் சுரக்கிறது; ஒன்று வறண்டு போய்க் கிடக்கிறது.
அது ஏன்?
அழகழகாக இரண்டு பெண்கள். ஒருத்திக்கு வருஷம் ஒரு பிள்ளை பிறக்கிறது; ஒருத்தி மலடாகவே இருக்கிறாள்.
அது ஏன்?
நெருக்கமாக இரண்டு மரங்கள். ஒன்று பூத்துக் காய்த்துப் பழமாய் பழுத்துத் தள்ளுகிறது; இன்னொன்று வெறும் இலையாய் உதிர்த்துத் தள்ளுகிறது.
அது ஏன்?
தான் பதவியில் இருக்கும் போது தன் கட்சியை விட்டு ஒருவரை விலக்கினார் ஒருவர். இப்போது அவரது பதவி போய் விட்டது. யார் விலக்கப்பட்டாரோ அவர் வந்திருக்கிறார்.
இது ஏன்?
விதி என்று சொல்லுங்கள்; வினை என்று சொல்லுங்கள்! எதுவாயினும் இறைவனின் இயக்கம் என்பதை ஒப்புக் கொள்ளுங்கள்.
ஒரு தலைமுறை புகழ்பெற்று ஓயும்போது, அடுத்த தலைமுறை அந்தப் புகழையும் சேர்த்துக் கெடுப்பது போல பிறந்து தொலைக்கிறதே,
இது ஏன்?
டெல்லியில் இருந்து சென்னை வரை பதவியில் உயர்ந்தோர் ஒவ்வொருவரையும் பார்த்தால், அவர்கள் காலத்தில் அவர்கள் பெரும் புகழ்பெற்று விளங்குகிறார்கள். அவர்களுடைய பிள்ளைகள், அவர்களுடைய பெயரைக் கெடுப்பதற்கென்றே பிறந்திருக்கின்றன.
ஏன் இந்தப் பிறப்பு? ஏன் இந்த நிலை? ஏன் இந்த முடிவு?
உகாண்டாவிலிருந்து அனாதையாகத் துரத்தப்பட்டு, தான்சானியாவில் அடைக்கலம் புகுந்த ஒருவர், நீண்ட நாட்களுக்குப் பிறகு, மீண்டும் உகாண்டாவினுடைய தலைவராக ஆகியிருக்கிறார். இவ்வளவு காலத்திற்குப் பிறகு எது அவரோடு ஒத்துழைத்தது?
கராச்சியில் சிறை வைக்கப்பட்டிருந்தபோது, முஜிபுர் ரஹ்மானுக்கு அந்தச் சிறையிலேயே ஒரு சவக்குழி தோண்டப்பட்டிருந்தது. ஆனால், அதிலிருந்து மீண்டும், பங்களாதேஷைக் கண்டு அவர் பதவிக்கு வந்த பிற்பாடு, அவருடைய சவக்குழி வெகு விரைவிலேயே பங்களாதேஷிலேயே அமைந்தது.
அங்கிருந்து தப்பியவர், இங்கே மாண்டது எப்படி? இயக்கியது எது? நடந்தது என்ன?
பூட்டோ பதவியில் இருந்தபோது யாரைத் தளபதியாக நியமித்தாரோ, அவரே பூட்டோவைக் கைது செய்து தூக்கிலே போட்டார்.
அங்கே விளையாடியது எது?
`இந்தியாவுக்குச் சுதந்திரம் வாங்கியே தீருவேன்’ என்று சபதமிட்ட காந்தியடிகள், சுதந்திரம் வாங்கிய மறு ஆண்டிலேதான் கொல்லப்பட்டார்.
அதுவரையில் அவரைக் காப்பாற்றியது எது? எந்த பக்தி? எது அவருக்குத் துணை நின்றது?
இந்தியா, பிரிட்டனுக்கு அடிமையாக இருந்தது. இன்றோ, பிரிட்டனை விட வலிமை உள்ளதாக இந்தியா விளங்குவதாக உலகம் கருதுகிறது.
எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது? இரண்டு தேசங்களுக்கிடையே ஏற்பட்ட நிலை என்ன? எந்த இயக்கத்தின் மூலம் அது நடந்தது?
எங்கோ ஒரு சக்தி இருக்கிறது. அதற்கு வடிவம் இல்லை என்கிறீர்களா? மெத்தச் சரி; `முருகன்தான்’ அது என்கிறீர்களா? அதுவும் சரி; `அல்லா தான் அது’ என்கிறீர்களா? அதுவும் சரி; `கிருஷ்ணன் தான்’ என்கிறீர்களா? அதுவும் சரி, `ஏசு தான்’ என்கிறீர்களா? அதுவும் சரி.
எதுவானால் என்ன? இறைவனுடைய இயக்கம் என்று ஒன்று இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதனை உணராதவன், அடிமடையனாவான்.

சிறுகூடற்பட்டி சாத்தப்பச்செட்டியாரும், பிள்ளையார்பட்டி விசாலாட்சி ஆட்சியும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும், அவர்களுக்கு எட்டாவதாக ஒரு பிள்ளை பிறக்க வேண்டும் என்றும், ஆரம்பத்தில் அது முட்டாள் என்ற பெயரை எடுக்க வேண்டும் என்றும், பிறகு அது கவிஞனாக மாற வேண்டும் என்றும், மாறி அது சென்னையில் வந்து வாழ வேண்டும் என்றும், சென்னையில் இருந்து எல்லாத் தலைவர்களோடும் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும், புதியதொரு உலகத்தைக் காண்பதிலே அந்தக் குழந்தைக்கு ஆசை வரவேண்டும் என்றும் எது விதித்தது? எது நடத்திற்று? எந்த இயக்கத்தில் அது நடந்தது?
இந்த இயக்கத்தைத்தான், நாத்திகர்கள் இயற்கை என்கிறார்கள்.
அப்படியே வைத்துக் கொள்ளட்டும்; இறைவனுக்கு அப்படியும் ஒரு பெயர் உண்டு.
`சுயம்பு’- இயற்கையாகத் தோன்றியவன் தானே இறைவன்!
என்னுடைய தாய் என்னைப் பெற்றாள்; அவளுடைய தாய் அவளைப் பெற்றாள்; அவளுடைய தாய் தந்தையர் அவளைப் பெற்றார்கள் என்று போய்க்கொண்டே இருந்தால் முதல் மூலம் ஒன்று வேண்டும். அந்த மூலத்திற்கும் ஒரு மூலம் வேண்டுமல்லவா? அதுதான், `ஆதிமூலம்’ என்று நான் முன்பே குறிப்பிட்டிருக்கிறேன்.
கடவுள், விதி இவற்றை நம்புவதிலே ஒரு சுகம் இருக்கிறது.
கஷ்டங்களை அது தீர்த்து வைக்கிறதோ இல்லையோ, தீர்ந்து விட்டது போன்ற ஒரு நிம்மதி ஏற்படுகிறது.
`இது நம்மாலே ஆனதல்ல’ என்ற முடிவு தானாகவே தோன்றுகிறது.
`ஆனது ஆகட்டும்’ என்று நான் முன்பே சொன்னது போல, ஒரு அமைதி தோன்றுகிறது.
அமைதியை வரவழைப்பதற்காகவாவது, ஆண்டவன் பேரில் நம்பிக்கை வேண்டும்.
`இறை நம்பிக்கை, இறை நம்பிக்கை’ என்று நான் அடிக்கடி வலியுறுத்துகிறேன், அப்படி என்றால் என்ன?
தினமும் கோவிலுக்குப் போவதா? குளிப்பதா? விபூதி பூசுவதா? குங்குமம் வைப்பதா? இல்லை; ஈஸ்வரனோடு ஐக்கியமாகி விடுவது; சிவமும் தாமும் ஒன்றே என்று அறிவது! அந்த லயத்தில் ஈடுபட்டு விடுவது.
ஆண்டவனை விட்டுத் தான் பிரிந்ததில்லை; ஆண்டவனை விட்டுத் தன்னைப் பிரிக்க முடியாது; ஆண்டவன் என்கிற வடிவத்தின் மற்றொரு பிம்பமே `தான்’ என்பதை உணர்வதே இறைவழிபாடாகும்.
மீண்டும் பெரியவரை அழைக்கிறேன்:
ஞானிக்கு ஆத்ம விஸ்வரூபத்தைத் தவிர வேறெதுவுமே தெரிவதில்லை. ஒரே பரமாத்மா தான் இத்தனையாகவும் தெரிகிறது என்று கண்டு கொண்டவன் அவன். வெளியிலே தெரிகிற தோற்றத்தை மாயை என்று தள்ளிவிட்டு, எல்லாவற்றுக்கும் உள்ளேயிருக்கிற பரமாத்மா ஸ்வரூபத்தை மட்டுமே அனுபவிக்கிறவன் அவன். வெளிப்பார்வைக்குத் தெரிகிற உலகம் மாயை என்று ஆகிவிட்டதால், இந்த மாயா லோகத்தில் ஞானிக்குக் காரியம் எதுவுமே இல்லை. பார்க்கிறவன், பார்க்கப்படுகிற வஸ்து, பார்வை எல்லாமே ஒன்றாக அடங்கிப் போனவனுக்குக் காரியம் எப்படி இருக்க முடியும்? அவன் பிரம்மமாகவே இருக்கிறான் என்று உபநிஷத்து சொல்கிறது.
பிரம்மத்துக்குக் காரியம் இல்லை. ஆனால், அந்த மாயா உலகத்தில் அகப்பட்டுக் கொண்டு காரியங்களைச் செய்து வருகிறவர்கள் ஈஸ்வரன் என்று ஒரு வனைப் பூஜை செய்து, தங்கள் காரியங்களை நடத்தித் தர வேண்டும் என்று பிரார்த்திக்கிறார்கள். நல்ல காரியங்களுக்காக, நல்ல மனதோடு பிரார்த்தித்தால், ஈஸ்வரனும் இவற்றை நடத்தித் தருகிறார். இதிலிருந்து ஈஸ்வரனும் காரியமே இல்லாமல் இருப்பவரல்ல என்று தெரிகிறது. நாம் பிரார்த்தித்தாலும், பிரார்த்திக்கா விட்டாலும் சகல பிரபஞ்சங்களையும் இத்தனை ஒழுங்கான கதியில் நடத்திக் கொண்டு, சகல ஜீவராசிகளுக்கும் சோறு போடுகிற பெரிய காரியத்தைச் செய்கிறார்.
காரியம் இல்லாத பிரம்மம் வேறு, காரியம் செய்கிற ஈஸ்வரன் வேறு என்பதா? இல்லை. ஞானியின் பிரம்மமேதான் லோக காரியங்களை நிர்வகிக்கிற ஈஸ்வரனாகவும் இருக்கிறது.
சிவனின் தட்சிணாமூர்த்திக் கோலம் பிரம்ம நிலையைக் காட்டுகிறது. அங்கே காரியம் இல்லை. ஒரே மவுனம்தான். அதே பரமசிவன் எத்தனை காரியங்களைச் செய்திருக்கிறார்? சிதம்பரத்தில் ஒரேயடியாகக் கூத்தடிக்கிறார். தாருகாவனத்தில் பிக்ஷாடனனாக அலைந்து மோகிக்கச் செய்திருக்கிறார். தக்ஷயக்ஞத்தில் சூரியனைப் பளீரென்று அடித்துப் பல்லை உதிர்த்திருக்கின்றார்.
ஸ்வாமி எப்போதும் உள்ளே அடங்கிய பிரம்மமாக இருக்கிறார். வெளியிலே சகல காரியமும் செய்யும் ஈஸ்வரனாக இருக்கிறார்.
சாதாரண ஜனங்கள் ஏரியில், சம்ஸார அலைகளில் நீந்திக் கொண்டிருக்கிறார்கள். ஞானிகள் மறுபக்கம் வயலிலே நிற்கிறார்கள். நடுவில் ஏரிக்கரை. அது குறுக்கிடுவதால் ஞானிக்கு ஏரி தெரியாது. ஏரியில் இருக்கிற ஜனங்களுக்கு வயல் தெரியாது. ஸ்வாமியோ இரண்டுக்கும் மத்தியில் இருக்கிற கரை மேல் இருக்கிறார்.
ஏரித்தடத்தில் நிற்கிற `தடஸ்தன்’ அவர். அவருக்கு லோகமும் தெரியும். லோக திருஷ்டி நசித்துப் போன ஞானியின் நிலையும் தெரியும். `ஏரியில் முழுகுகிறவனைத் தூக்கிப் போடு’ என்று வயலில் இருக்கிறவனைக் கூப்பிட்டு அவர் சொல்ல முடியும்.
எல்லாமே தாமே என்பதை ஸ்வாமி அறிந்திருக்கின்றார்; ஆனாலும், அவரை வேறாகவே நினைத்திருக்கிற ஜீவர்களை அவரும் வேறு போலப் பார்த்து வேடிக்கையும் செய்வார். இதைப்பற்றி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷதரின் `சிவலீலார்ணவ’த்தில் ஓர் அழகான சுலோகம் உண்டு. அதன் தாத்பர்யத்தைச் சொல்கிறேன்.
பரமேசுவரன் கூலியாளாக வந்து, பிட்டுக்கு மண் சுமந்த கதை எல்லோருக்கும் தெரியும். அவர் உடைப்பு அடைத்து ஒழுங்காக வேலை செய்யாததைக் கண்டு பாண்டிய ராஜா அவரைப் பிரம்பால் அடித்தான். உடனே அந்தப் பிரம்படி, பாண்டியன் உள்பட சகல ஜீவராசிகளின் மீதும் விழுந்தது. இங்கே, தாமே எல்லாம் என்பதை அவர் காட்டி விட்டார்.
இதைப் பார்த்துக் கேள்வி கேட்கிறார்: `அது சரி, உன்னைத் தவிர வேறில்லை என்ற சிவாத்வைதம் பிரம்படி படுவதற்கு மட்டும் தானா?. நீ மதுரமான பிட்டை வாங்கித் தின்றாயே, அப்போது மட்டும் ஏன் எல்லா ஜீவராசிகளுக்கும் அதை உண்ட ஆனந்தம் இல்லை? அடிபடும் போது ஒன்று; ஆனந்திக்கும் போது வேறா?’
ஸ்வாமி, உள்ளே அடங்கிய பிரம்மமாகவும், வெளியே காரியம் செய்கிற ஈசுவரனாகவும் இருப்பதை இந்த ரசமான கேள்வி மூலம் தெரிந்து கொள்கிறோம். அவர் செய்கிற காரியங்களை ஐந்தாகச் சொல்வார்கள்.

`பஞ்ச கிருத்யம்’ என்பார்கள். சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் என்ற மூன்று உங்களுக்கே தெரியும். இந்த மூன்றும் மாயாலோக விஷயம்தான். இப்படி மாயையால் மறைகிற காரியம் `திரோதனம்’ எனப்படும். இந்த மாயையிலிருந்து விடுவிப்பதே அவன் செய்கிற மகா பெரிய காரியம். `அனுக்கிரகம்’ என்று அதற்கே பெயர்.
அத்வைத ஸித்தி நமக்கு ஏற்பட வேண்டும் என்றால் அதற்கு இந்த அனுக்கிரகம் இன்றி வேறு வழியில்லை. இந்த அனுக்கிரகத்தை வேண்டி வேண்டிச் செய்கிற உபாசனைக்கே, நம்மை அனுக்கிரகிக்கக் கூடிய கருணை படைத்தவர் அவர் என்று நம்பி, அவரிடம் நெஞ்சுருகி, அன்பு செலுத்துவதற்கே பக்தி என்று பெயர்.
இப்படி, தானே ஈஸ்வர லயமாகி விடுவதால் ஒரு வசதி உண்டு.
எதைச் செய்தாலும் கூட, இறைவன் செய்கின்றான் என்ற நோக்கம் எப்பொழுதும் தோன்றிக் கொண்டே இருக்கும்.
ஆண்டாளும், மீராவும் கண்ணனோடு ஐக்கியமானார்கள். ராதா, கண்ணனுடனே கலந்து விட்டாள்.
சைதன்ய சுவாமிகள் இறைவனோடு கலந்தார். கபீர்தாஸர் இறைவனோடு கலந்தார்.
இறைவனுக்கும் தனக்கும் பேதமில்லை என்ற உணர்வு ஏற்படும் போதே, இறைவனோடு பேசக்கூடிய வாய்ப்புத் தோன்றி விடுகிறது.
இறைவன் தன்னோடு உரையாடுவது போன்ற நினைப்பே வருகிறது.
தனக்குள்ளே தானாக நிறைந்து நிற்கின்ற ஆத்ம வடிவத்தைக் கோவிலிலே போய்த்தான் காணவேண்டும் என்பதில்லை.
வீட்டில் இருந்துகொண்டே காணலாம். பகலிலேயும் காணலாம்; இரவிலேயும் காணலாம்.
இப்படி ஈஸ்வரனோடு கலந்து விட்டவனைக் குளிர் நெருங்காது. நல்ல பனிக்கட்டியில் அவனைத் தூக்கிப் போட்டால் கூட, அது அவனைத் தொடாது.
வெயிலிலே தூக்கிப் போட்டாலும் கூட, அது அவனைச் சுடாது.
மழையிலே தூக்கிப் போட்டாலும் கூட, அது அவனை நனைக்காது.
காரணம், அந்த இறைவனோடு அவள் கலந்து விடுகிறான். தான் ஒரு மாமிசப் பிண்டம் என்பதையே அவன் மறந்து போகிறான்.
தான் ஒரு மனிதன் என்கிற உணர்வே அவனுக்கு அடிபட்டுப் போகிறது.
`எனக்கொரு சொந்தம் உண்டு; எனக்கொரு ஜீவன் உண்டு; பாசம் உண்டு; மனைவி மக்கள் உண்டு’ என்கிற எண்ணங்கள் அடிபட்டுப் போகின்றன.
`அவன் எனக்குத் துரோகம் செய்து விட்டான்; இவன் என்னை ஏமாற்றி விட்டான்; இவன் என்னோடு சண்டைக்கு வருகிறான்; இவன் என்னோடு போட்டி போடுகிறான்; இவன் என்னை எதிர்த்து நிற்கிறான்’ என்ற எண்ணங்களெல்லாம் லயத்தோடு ஒன்றியவர்களுக்கு வருவதே இல்லை.
இந்த ஈடுபாடு முடியுமா? நடக்கக் கூடியதுதானா?
ஏன் முடியாது? ஏன் நடக்காது?
கணவனும் மனைவியும் இரண்டறக் கலந்து விடுகிறார்கள்.
பிள்ளைப் பாசத்தில் இரண்டறக் கலந்து விடுகிறோம்.
இறைவனோடு கலப்பதற்கு ஒரு ஆத்ம ஞானம் வேண்டும். ஆத்மாவுக்குள்ளே அந்த விளக்கு எரிந்து கொண்டே இருக்க வேண்டும். அது மிகப்பெரிய ஜோதியாக அனற்பிழம்பாக வெடிக்க வேண்டும்.
அப்படி வெடிக்கும்போது, உன்னை அணைத்து உன்னை அப்படியே சாம்பலாக்கிவிட்டு, நேரடியாகக் கொண்டு போய் இறைவனிடம் உன்னை அது சேர்த்து விடுகிறது.
ஆகவே, வாழ்நாளிலேயே இறைவனை அடைய விரும்புவோர், இறைவனும் தானும் ஒன்றே என்கிற உணர்வை முதலில் பெற்றாக வேண்டும்.
மகாகவி பாரதி கூறுகிறான்:
`சாமிநீ; சாமிநீ; கடவுள் நீயே;
தத்வமசி; தத்வமசி; நீயே அஃதாம்!
பூமியிலே நீகடவு ளில்லை யென்று
புகழ்வதுநின் மனத்துள்ளே புகுந்த மாயை;
சாமிநீ; அம்மாயை தன்னை நீக்கி
சதாகாலம் `சிவோஹ’ மென்று சாதிப்பாயே!’
தெய்வம் உண்டென்பதை எப்படி அறிந்தோம்? உலகமிருப்பதாலேயே அறிந்தோம். தெய்வம் உயிர்; உலகம் அதன் வடிவம். உலகம் தெய்வந்தான்; உலகத்துச் செய்கைகளெல்லாம் தெய்வத்தின் செய்கைகளே; உலகத்தின் நடைகளிலிலும், வழிகளிலும் தெய்வத்தை உணர வேண்டும்.
செய்கை யாவும் தெய்வத்தின் செய்கை
சிந்தை யாவும் தெய்வத்தின் சிந்தை
உய்கை கொண்டதன் நாமத்தைக் கூறின்
உணர்வு கொண்டவர் தேவர்களாவர்.
வையமெல்லாம் தெய்வ வலியின்றி வேறில்லை
தெய்வம் நீயென்றுணர்.
வலிமையுடையது தெய்வம்நம்மை
வாழ்ந்திடச் செய்வது தெய்வம்.
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவாதொன்றில்லை
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்
பயிலுமுயிர் வகைமட்டு மன்றியிங்கு
பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்.
தெய்வ வலியுண்டு தீமையைப் போக்கும்.

ஒரு மறுமொழி

  1. wooow thanks for sharing

%d bloggers like this: