Daily Archives: ஒக்ரோபர் 23rd, 2012

நீர்-இனி போர்: எதிரியாக மாறுமா எதிர்காலம்

பணத்தை தண்ணியா செலவழிக்கிறான்’ என பழமொழி சொல்லப்போய், "தண்ணியை பணத்தைப் போல செலவழிக்கிறான்’ என சொல்லும் காலம் நெருங்கி வருகிறது.
மண்ணுக்காக நாடுகள் முட்டிக்கொண்டதால் தான் இரண்டு உலகப் போர்கள் நடந்தன. எதிர்காலத்தில் இன்னொரு உலகப் போர் நடந்தால், அது நீருக்காக மட்டுமே நடக்கும் என்கின்றனர் அறிஞர்கள்.இதற்கு காரணம், மாறி வரும் சுற்றுச்சூழ்நிலைகளால், நீர் என்பதே அரிதாகி வருகிறது. ஆண்டுக்கு ஆண்டு, உலகுக்கு கிடைக்கும் நல்ல நீரின் அளவு குறைந்து கொண்டே போகிறது. செயற்கையாக நீரை தயாரிக்கலாம் என்றால், அது எளிதில் சாத்தியமாகாது. எனவே, இயற்கையாக கிடைக்கும் நீரை கைப்பற்ற, உலக நாடுகள் போட்டி போடும். தண்ணீர் இல்லாவிட்டால், வாழ்க்கையே இல்லை என்பதால், உலக நாடுகள், உச்சகட்டத்தில் மோதிக்கொள்ளும்.

பருவநிலை மாற்றம்:

பருவநிலை மாற்றத்தால், அதிக மழை அல்லது அதிக வெப்பம் என்ற நிலைமை ஏற்படுகிறது. சரியான நேரத்தில், மழை பெய்வது சமீப காலமாக நடப்பதில்லை. நூறு ஆண்டுகளுக்கு முன்பும் வறட்சி ஏற்பட்டது. அப்போதெல்லாம் தண்ணீரின் தேவை குறைவாக இருந்தது. ஆனால் இப்போது நிலைமையே வேறு.தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட காரணம் மக்கள் தொகை பெருக்கம், காடுகளை அழித்தல், மழை நீரை தேக்கி வைக்காதது, நதிகள் இணைக்கப்படாமல் இருப்பது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தொழில் மயம் ஆகியவை. தேவையை உணர்ந்து செயல்படாவிட்டால், 2015லேயே தண்ணீர் தேவை அதிகரித்து, உயிரினங்கள் அழியும் நிலை ஏற்படும். தண்ணீர் பற்றாக்குறையால், உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்து, விலை உயரும்.
பூமி, 71 சதவீதம் நீரால் சூழப்பட்டுள்ளது. 29 சதவீதம் நிலப்பரப்பாக உள்ளது. மொத்த தண்ணீரில் உப்பு நீரே அதிகம். 2.5 சதவீதம் நீர் மட்டுமே நல்லநீர். உலகில், 0.08 சதவீதத்துக்கும் குறைவான தண்ணீரை மட்டுமே பயன்படுத்த முடிகிறது. உலகளவில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் 50 நாடுகளை 1999ல் ஐ.நா., அறிவித்தது. தற்போது விவசாயத்திற்காக 70 சதவீத நீர் பயன்படுத்தப்படுகிறது. இது 2020ல் 87 சதவீதம் ஆகும் என, உலக தண்ணீர் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது, உலக அளவில் ஐந்து பேரில் ஒருவருக்கு, சுத்தமான தண்ணீர் கிடைப்பதில்லை. ஒவ்வொரு நாளும், ஐந்து வயது பூர்த்தியடையாத, 30 ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தைகள் பசி, தொற்று நோய்களால் இறக்கின்றனர். சுத்தமான குடிநீர், நல்ல சுகாதாரம், சரிவிகித உணவு போன்றவற்றின் மூலமே இதை சரி செய்ய முடியும்.

என்ன தீர்வு:

அனைத்து ஆதாரங்களுக்கும், அடிப்படையான தண்ணீரை பாதுகாப்பது நமது கடமை. நீராதாரங்களை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும். தண்ணீரை மறுசுழற்சி செய்து, விவசாயத்துக்கு பயன்படுத்தலாம். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், சூரிய ஒளி மின்சாரம் போன்ற திட்டங்களை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். சொட்டு நீர் பாசனம், நீர்தெளிப்பு போன்ற வற்றை பயன்படுத்தி தண்ணீரை சேமிக்கலாம்.

"மடி’யில் கை வைத்த கதை:

பற்றாகுறை ஏற்பட்டதும், "மடி’யில் கை வைத்த கதையாக, நிலத்தடியில் கை வைத்தோம். அந்த நீரையும் எக்கச்சக்கமாக உறிஞ்சிகிறோம். இது இன்னொரு ஆபத்து. இதனால், அந்த இடத்தின் இயற்கை சமநிலைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. கிணறுகள் வற்றி, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்படுகிறது.

நீரின் தேவை:

விவசாயத்திற்கே அதிக நீர் தேவைப்படுகிறது. அடுத்ததாகத் தான் மற்ற உபயோகங்களுக்கு தேவை. 1970ம் ஆண்டில், உலகில் இருந்த மொத்த நீரில் 25 சதவீதத்தை பயன்படுத்தினோம். இது 1980ல், 45 சதவீதமாகவும், 1990ல் 65 சதவீதமாகவும் அதிகரித்தது. தற்போது உலகின் நீர்த் தேவை, மொத்த நீரில் 80 சதவீதத்தை நெருங்கி விட்டது. இதே நிலை தொடர்ந்தால், நீர் அரிதான பொருளாகும் அபாயம் இருக்கிறது. நீர் இல்லாவிடில், உலகம் அழிந்து விடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கிறதா என்ன.
மாசுபடுத்தும் காரணங்கள்:நீர் மாசுபடுவதற்கு முக்கிய காரணமே மனிதர்களின் மனசாட்சி இல்லாத நடவடிக்கைகள் தான். தொழிற்சாலைகளிலிருந்து வெளிவரும் கழிவுகள், வேதிப்பொருட்கள், ஆயில், பெயின்ட் போன்றவையாலும் நீர் மாசுபடுகிறது. இக்கழிவுகள் ஆற்று நீரை மட்டுமல்லாது, நிலத்தடி நீரையும் நாசம் செய்கின்றன. நிலத்தின் இயற்கை தன்மையே மாறுகிறது. வீட்டு கழிப்பறை, சாக்கடை ஆகியவற்றாலும் நீர் மாசுபடுகிறது. உலகம் முழுவதும் 40 சதவீதம் நிலத்தடி நீர் குடிநீராகவும்,60 சதவீத நிலத்தடி நீர், விவசாயத்துக்கும் பயன்படுகிறது.

செயற்கை நீர் சாத்தியமா:

செயற்கையாக நீரை உருவாக்க முடியுமா என்று ஆராய்ச்சியாளர்களை கேட்டால், முடியாது என்றே பதில் அளிக்கின்றனர். இருப்பினும், ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.இரண்டு ஹைட்ரஜன் அணுக்களும், ஒரு ஆக்ஸிஜன் அணுவும் சேர்ந்தது தான் நீர். இந்த இரண்டு வாயுக்களும், எளிதாக கிடைக்கக்கூடியவை தான். ஆனாலும் இதை இணைத்து நீரை உருவாக்க முடிவதில்லை. காரணம், ஹைட்ரஜன் அணு தனித்து கிடைக்காது. ஆக்ஸிஜன், இரட்டை அணுவாகத்தான் இருக்கும். ஒரு அணுவை அதிலிருந்து பிரிக்க முடியாது.இதையும் மீறி, இரண்டு ஹைட்ரஜன் அணுவையும், ஒரு ஆக்ஸிஜன் அணுவையும் பிரித்தெடுத்தால், இரண்டும் நிலையான எலக்ட்ரான்களை கொண்டிருக்கும். ஒரே அளவு எலக்ட்ரான்கள் கொண்டவை, எதனுடனும் வினை புரியாது. மீறி இணைத்தால், தண்ணீருடன் சேர்ந்து அதிகமான சக்தி வெளிப்படும். காரணம் அணுக்கரு இணைவு (பியூஷன்).செயற்கையாக நீரை உருவாக்குவதில், இவ்வளவு சிக்கல்கள் இருக்கின்றன. ஆனால், இயற்கையாக ஆவியாகும் கடல்நீர், மேகத்தின் மீது பட்டு குளிர்வடைந்து மழைநீராக மண்ணில் மீண்டும் விழுகிறது. அந்த நீரை அலட்சியமாக வீணாக்குகிறோம்.

தியாகத் தாய்!


"நீ சரஸ்வதியை வணங்கு, வகுப்பில் முதல் மாணவனாக இருப்பாய். அவள் கல்வி அறிவைத் தருபவள். நீ தொழில் நடத்துபவனாக இருந்தால், அன்றைய தினம் ஆயுதங்களுக்கு பூஜை செய். அவள் லாபத்தை அள்ளித் தருவாள்’ என்ற அளவில், சுண்டல், பாயசத் தோடு சரஸ்வதி பூஜை கொண்டாட்டம் முடிந்து விடுகிறது.
சரஸ்வதி, வெறுமனே மதிப்பெண்களை வாரி வழங்குவதற்காக உருவானவள் அல்ல. அவள் தியாகத்தாய். இந்த உலகத்தில் எல்லா தெய்வங் களுக்கும் கோவில் இருக்கிறது. ஆனால், இவளுக்கு கோவில் இல்லை, இவளது கணவர் பிரம்மாவுக்கும் இல்லை. தமிழகத்தில், சரஸ்வதி மீது அதீத பற்றுக் கொண்ட ஒட்டக் கூத்தர், திருவாரூர் அருகிலுள்ள கூத்தனூரில் ஒரு கோவிலைக் கட்டி வைத்தார். பிரம்மாவுக்கு தனிக் கோவில் கிடையாது. சில பெரிய கோவில்களில் மட்டும் பூஜை இல்லாமல் ஒதுங்கி இருப்பார்.
ஏன் இவர்களுக்கு கோவில் இல்லாமல் போனது தெரி யுமா? புராணக்கதைப்படி, பிரம்மாவும், விஷ்ணுவும் சிவனின் அடிமுடியைக் காணச் சென்ற போது, பிரம்மா பொய் சொன்னதாகவும், அதனால், அவருக்கு வழிபாடு இல்லாமல் போகட்டும் என்று சிவன் சாபமிட்டதாகவும் சொல்லப் படுகிறது. கடவுளே என்றாலும், பொய் சொல்லக்கூடாது என்ற தத்துவம் மட்டுமே இதன்மூலம் விளக்கப்படுகிறது.
உண்மையில், இதன் தத்துவம் வேறு.
மனிதன் பிறக்கிறான். நிறைய சம்பாதிக்கிறான். தேவையானதை எல்லாம் வாங்குகிறான். சுகங்களை அனுபவிக்கிறான். ஆனால், ஒரு கட்டத்தில் அவனுக்கு அதில் சலிப்பு தட்டி விடு கிறது. கணவனுக்கும், மனைவிக்கும் சண்டை வந்து விட்டாலோ, பிள்ளைகளுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டாலோ போதும்… "கடவுளே… என்னை ஏன் படைத்தாய்?’ என்று புலம்புகிறான்.
அவ்வளவு ஏன் போக வேண்டும்? பணக்காரனை பார்த்து ஏழை பொறாமைப்படுகிறான்; பிறந்தால் அவனைப் போல் பிறந்திருக்க வேண்டும் என்று. இதே போல, ஏழையைப் பார்த்து, பணக்காரன் பொறாமை கொள்கிறான். அந்த ஏழை பழைய சோற்றையும், ஊறுகாயையும் சாப்பிடுகிறான். "உனக்கு பிரஷர், அதெல்லாம் சாப்பிடக் கூடாது…’ என்று சொல்லி ரொட்டி பாக்கெட்டை கையில் கொடுத்து, டாக்டர் அனுப்பி விட்டாரே… என்று. இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலையில் தான் வாழ்க்கைச் சக்கரம் சுழல் கிறது.
இன்று சர்க்கரை நோய் வந்த பலர், பணத்தை குவித்து வைத்திருந்தாலும், ஒரு டம்ளர் காபியைக் கூட ருசியாக குடிக்க இயலாத நிலையில் தானே இருக்கின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பங்களில், படைத்தவனை திட்டுகிறான் மனிதன்.
வெங்கடாஜலபதியை வணங்கினால், "நாராயணா… உன்னை மாதிரி நாலாயிரம் கோடிக்கு நான் அதிபதியாக வேண்டும்…’ என்று கேட்கலாம். சிவனை வணங்கினால், "ஐயனே… உன்னைப் போல் வீரச்செயல்கள் புரிய வேண்டும்…’ என்று வேண்டலாம். படைப்புக் கடவுளான பிரம்மாவிடம் போய், "ஐயா பிரம்மா… எனக்கு இன்னும் ஐந்தாறு பிறவியைக் கொடு…’ என்று யாராவது கேட்பார்களா? அதனால் தான், அவருக்கு வழிபாடு இல்லாமல் போய் விட்டது. தன் கணவருக்கு கோவில் இல்லை என்ற காரணத்தால், அவரது மனைவி சரஸ்வதி, தனக்கும் கோவில்கள் தேவையில்லை என்று எண்ணி விட்டாள். கணவருக்கு இல்லாத சுகம், மனைவிக்கு ஏன்… என்று விட்டுக் கொடுக்கும் தன்மை. எவ்வளவு பெரிய தியாகம் பாருங்கள்!
தியாகத் தாயான சரஸ்வதிக்கு கோவில் இல்லாவிட்டாலும், கல்விக்கு அவளை அதிபதியாக்கி விட்டதால், வருடத்தில் ஒருநாள் நம் இல்லங்களில் எழுந்தருளச் செய்கிறோம்.
சரஸ்வதி பூஜை நன்னாளில், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்!
படித்தால் மட்டும் போதாது. படிப்பின் நோக்கம், பிறருக்காக நம் வாழ்வை தியாகம் செய்வது தான் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
மாணவச் செல்வங்களே… நன்றாகப் படியுங்கள். படிப்பு என்பது, சம்பாதிக்க மட்டுமே என்ற குறுகிய நோக்கோடு நிறுத்தி விடாதீர்கள். குடும்பத்திற்கு, நண்பர்களுக்கு, சமுதாயத்திற்கு உதவும் வகையில், தியாகச் செயல்களைச் செய்யுங்கள். சரஸ்வதி பூஜையன்று நீங்கள் எடுக்க வேண்டிய உறுதி இதுதான்!