கடிவாளம்

 

நமது உடம்பு எங்கே இருக்கிறது என்பது முக்கியமல்ல; மனம் எங்கே இருக்கிறது என்பது தான் முக்கியம்.
உடம்பு போகின்ற இடங்களுக்கெல்லாம் மனது தொடர்ந்து வருவதில்லை. உடம்பை மயிலாப்பூரிலே உட்கார வைத்து விட்டு, மனது சிங்கப்பூர் வரையிலே சென்று திரும்பிவிடும்.
மனது போகின்ற வேகம் மிகப் பெரியது என்பதாலே தான் `வாயு வேக மனோ வேகம்…’ என்றெல்லாம் நம்முடைய மூதாதையர்கள் வருணித்தார்கள்.
அதைத்தான் சிவவாக்கியர் மிக அழகாகச் சொன்னார், `மனத்திலே அழுக்கைச் சுமந்தவன் காட்டிலே போய் இருந்தால் கூட அந்த அழுக்கு அவனோடேயே இருக்கும்’ என்று.
மனத்திலே அழுக்கில்லாதவன், ஒரு தாசியின் மார்பின் அருகிலே அமர்ந்திருந்தால் கூட, அவன் அந்த மார்பகத்தைப் பார்ப்பதில்லை. அவன் மனது அந்த தாசியை நாடுவதில்லை. பிறப்பை அறுத்து விட்ட பிறவியாகவே அவன் அங்கே காட்சியளிக்கிறான்.
ஆகவே, நன்மைகள் தீமைகள் அனைத்துமே மனத்தின் கண் தான் இருக்கின்றன என்பதனை, நான் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது.
அனைத்தும் துறந்தும் கூட, கூட வந்த நாயைத் துறக்க முடியாத பத்ரகிரியாரைப் போல, எல்லாவற்றையும் துறந்தாலும் கூட இந்த மனது செய்கின்ற வேலையைத் துறக்க முடியாமல் நாம் அவதிப்படுகிறோம்.
`காதி விளையாடி இருகை வீசி வந்தாலும்
தாதி மனம் நீர்குடத்தே தான்’
என்றார் பட்டினத்தார்.
என்னதான் ஆட்டம் போட்டுக் கொண்டு போனாலும், தாதி நீர்க் குடத்திலே தான் மனத்தை வைத்திருப்பாள். தாதி என்றால்
வேலைக்காரி.தண்ணீர் தூக்கி வருகின்ற வேலைக்காரி, என்னதான் வேடிக்கைப் பேச்சுப் பேசட்டும், விளையாடட்டும், அவள் இடுப்பிலே இருக்கிற குடத்தின் மீதும், தண்ணீரின் மீதும்தான் மனது லயித்திருக்கும்.
ஞானிகளுடைய உள்ளமும் அப்படியே தான். அவர்கள் எதை விரும்புகிறார்களோ அதிலே லயித்து விடுவார்கள்.
ஆனால், சராசரி மனிதன் அவஸ்தைப்படுவதெல்லாம் இந்த மனத்தின் போக்கினாலே தான்.
கல்யாணத்தில் ஒரு கருப்புப் பெண் கிடைத்தால், மனது சிவப்புப் பெண்ணுக்காக ஏங்குகிறது; சிவப்புப் பெண் கிடைத்து விட்டால், கருப்புப் பெண்ணைக் காணும் போதெல்லாம் ஏங்குகிறது.
ஓட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு வீட்டுச் சாப்பாடு பிரமாதமாக தோன்றுகிறது. வீட்டிலேயே சாப்பிட்டுக் கொண்டிருப்பவனுக்கு ஓட்டல் பலகாரம் மிக அற்புதமாகத் தோன்றுகிறது.
மாறுபட்ட உணர்வுகளே மனத்தின் லயங்கள்.
மனிதன் தன்னை அறியும்படி வைப்பதும் அந்த மனதுதான்; தன்னை அறிய விடாமல் தடுப்பதும் அந்த மனதுதான்.
நான் எல்லாவற்றையும் விட உயர்ந்தவன் என்ற ஆணவத்தை உண்டாக்குவதும் அந்த மனதுதான்; நான் எல்லாரையும் விடத் தாழ்ந்தவன் என்ற அறிவை உணர்த்துவதும் அந்த மனதுதான்.
`நாம் என்னதான் உயர்ந்தவர்களாக இருந்தாலும், பணிந்து போக வேண்டும்’, என்ற பணிவை உண்டாக்குவதும் அந்த மனதுதான்.
ஆகவே, தன்னை அறிய வேண்டிய மனிதன், முதன் முதலிலே வெல்ல வேண்டிய பெரிய எதிரி மனது.
உடம்பிலே ரத்தக் கொதிப்பு ஏறுவதற்கு உடம்பு மட்டும் காரணமல்ல; மனத்தின் டென்ஷன் தான் முக்கியமான காரணம் என்று மருத்துவ நிபுணர்களும், மனோதத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள்.
ஒரு மனிதனைப் பார்த்து அனைவரும், `அடடா! எவ்வளவு அழகாக நீ இருக்கிறாய்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கட்டும். அவன் மனது அதைக் கேட்டுக்கேட்டு, தான் அழகாக இருப்பதாகவே நினைத்து, பூரித்துப் பூரித்து அவனுக்கு இல்லாத ஒரு அழகு முகத்திலும், மனத்திலும் வந்து விடுகிறது.
புவனத்திலுள்ள நிபுணர்களில் விஞ்ஞான நிபுணர்களைக் கூடப் பெரிதாக நினைப்பதில்லை; ஆனால், மனோதத்துவ நிபுணர்களையே உலகம் பெரிதும் மதிக்கிறது.
காரணம், மனத்தை நன்றாக அறிந்து கொண்டவன்தான், உலகை வெல்ல முடியும்; எதையும் வெல்ல முடியும் என்று உலகம் கருதுகிறது; ஒவ்வொரு மனிதனுடைய உள்ளமும் கருதுகிறது.
திருமூலர் திருமந்திரத்திலே சொன்னார்:
`தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை;
தன்னை அறியாமற் தானே கெடுகின்றான்.
தன்னையே அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே, அர்ச்சிக்கத் தானிருந் தானே!’
`தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!’
தன்னை அறிந்திருந்தால் அவனுக்குக் கேடில்லை.
மனிதன் எதனாலே கெடுகிறான்? தன்னை அறியாமலே கெடுகிறான்.
தன்னை அறியக்கூடிய அறிவு மட்டும் அவனுக்கு வந்து விடுமானால், எல்லோரும் தன்னை அர்ச்சிக்கும்படியும், தானே தனக்குப் பூஜை செய்யும்படியும் வளர்ந்து விடுவான்.
உனக்குப் பகைவன் யார்? நீயே!
உனக்கு மரணம் எது? நீயே!
உண்மை எது? நீயே!
நீ விதைத்த வினைப்பயனை அறுக்க வேண்டியவன் யார்? நீயே!
உனக்குத் தலைவன் யார்? நீயே!
உனக்குத் தொண்டன் யார்? நீயே!
எல்லாம் நீயே!
எல்லாம் நானே என்பதற்கு மூலம் எது? மனது!
`மனத்துக்கண் மாசிலன்ஆதல் அனைத்து அறன்
ஆகுல நீர பிற’
என்றான் வள்ளுவன்

உடம்பு களங்கப்பட்டிருக்கலாம்; ஆனால், மனது களங்கப்படாதிருக்குமானால், அந்த உணர்வு கூடப் பரிசுத்தமாக ஆகிவிடுகிறது.
முதலில் யார் மீதாவது நீ குற்றம் சாட்ட விரும்பினால், உன் மீதே குற்றம் சாட்டிப் பழகு.
ஒரு கண்ணாடியின் முன்னால் நின்று கொள். அதில் உன்னுடைய பிரதிபிம்பம் தெரியும். அதைப் பார்த்துக் கையைக் காட்டி, `நீ குற்றவாளி, நீ குற்றவாளி, நீ குற்றவாளி’ என்று மூன்று முறை சொல்.
நீ சொல்வது கண்ணாடியைப் பார்த்து; கண்ணாடி சொல்வது, உன்னைப் பார்த்து.
அதாவது, நீ உன் மனதுக்குச் சொல்கிறாய்; உன் மனது உனக்குச் சொல்கிறது.
மனது உனக்குச் சொல்கிறது என்னும் போது மனதுக்கு அப்பாற்பட்டது எது? உன் உடம்பு; உன் கண்; உன் உயிர்; அனைத்துக்குமே அந்த மனது சொல்கிறது, `நீ தான் குற்றவாளி’ என்று.
`நான் குற்றவாளி, நான் தவறானவன், நான் சிறியவன், நான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும், நான் மரியாதையாக இருக்க வேண்டும்’ என்றெல்லாம் உணர, தன்னை உணர்ந்து கொள்கின்ற தன்மை என்பது ஒரு லயமாக, ஒரு ராகமாக, ஒரு சுருதியாக, ஒரு பாவமாக நம் மனதுக்குள்ளேயே எழுந்து விடுகின்றது.
எப்போது மனிதன், தன்னை உணர்ந்து கொண்டு விடுகிறானோ, அப்போது மனது பாடமாகி விடுகிறது.
பச்சை இலை தான் புகையிலை. அது பாடம் செய்து வைத்தால் எவ்வளவு நாட்கள் இருக்கின்றது?
ஒரு வெற்றிலையை எடுங்கள்; அதை ஒரு புத்தகத்துக்குள் வையுங்கள்; பல காலம் கழித்துப் பாருங்கள்; அந்த வெற்றிலையின் நிறம் மாறி, அது காய்ந்து போயிருந்தாலும் கூட அப்படியே, அதன் தன்மை கெடாமல் இருக்கும்.
இதுதான் மனத்தைப் பாடம் பண்ணுகிற முறையாகும்.
மனது பாடமாகி விட்டால், யார் இறந்தாலும் கூட அழுகை வராது; எது நிகழ்ந்தாலும் கூட அதிலே போய் மனது ஒட்டிக் கொள்ளாது.
காஞ்சிப் பெரியவர்களோ, மற்ற ஞானிகளோ எந்த மரணத்திற்காவது துக்கம் கொண்டாடினார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? யாருடைய மரணத்திற்காவது அவர்களுடைய கண்களிலே இருந்து கண்ணீர் வந்திருக்கிறது என்று நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
மரணம் ஏன் அவர்களை அழச் செய்யவில்லை? மனது மரத்துப் போய் விட்டது; மனம் பாடமாகி விட்டது.
மனத்தைப் பாடம் செய்து கொண்டு விட்டால், தன்னை உணருகின்ற தன்மை, மிகச் சுலபமாக வந்து விடும்.
ஆயிரம் பேர் கூடி, நம் மீது குற்றம் சாட்டினால் கூட, நமக்குச் சிரிப்பு வரும்.
பத்தாயிரம் பேர் கூடி நமக்குப் புகழ் மாலை சூட்டினாலும், நமக்கு உடம்பிலே புல்லரிப்பு ஏற்படாது.
அதனால்தான், மனத்தைப் பாடம் செய்து கொள்ள வேண்டும் என்றனர் ஞானிகள். கீழே உள்ள பாடல்களைப் பாருங்கள்:
`மனத்தகத் தழுக்கறாத மவுனஞான யோகிகள்
வனத்தகத் திருக்கினும் மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த மவுனஞான யோகிகள்
முலைத்தடத் திருக்கினும் பிறப்பறுத் திருப்பரே!’
– சிவவாக்கியர்
`அலையுமனத்தை யகத்தடக்கு மவனேசரியை கடந்தோனா
மலையுமனத்தை யகத்தடக்கு மவனேகிரியை முடிந்தோனா
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே யோக தற்பரனா
மலையு மனத்தை யகத்தடக்கு மவனே ஞானி யதிசூரன்’!
– நிட்டானுபூதி
`ஓங்கிய பரசீ வைக்கிய முணர்ந்திடு முணர் வாலன்றிச்
சாங்கிய மகத்தி னாலுஞ் சார்ந்திடு மியோகத் தாலும்
வீங்கிய கன்மத் தாலும் வேறுபா சனையி னாலு
மோங்கிய முத்திப் பேற்றை யொன்றுவ தென்றுமில்லை!’
– விவேக சூடாமணி
மனத்திலே அழுக்கு அற்றுப் போகாதவன், மனது பாடமாகாதவன், எதற்கும் வளைந்து கொடுக்கிறவன், எதிலும் ஆசை வைக்கிறவன், காட்டுக்கு ஓடினாலும் கூட, அவனுடைய ஆசை சுற்றிக் கொண்டே இருக்கும்.
அந்தக் காட்டிலே இருக்கின்ற மரங்களையும், சுற்றிலும் இருக்கின்ற நிலங்களையும் பார்த்தால், இதில் கொஞ்சம் நமக்கு இருக்கக் கூடாதா என்று தோன்றும்.
எவளாவது ஒரு பெண் வழியிலே போனால் கூட, `இவளை வைத்து நாம் குடும்பம் நடத்தக் கூடாதா?’ என்று தோன்றும்.
ஓடியது காட்டுக்கு; பாடியது துறவறப் பாட்டு; ஆனால், தேடியதோ பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை.
காட்டுக்குப் போனாலும் கூட மனது அப்படி ஆகி விட்டால், அந்த லயத்துக்கு ஆட்பட்டு விட்டால், அது இந்த உடம்பையும் சேர்த்து இழுத்துக் கொண்டு போய் விடுகிறது.
ஆனால், `மனது பக்குவப்பட்டு விட்டால், அவன் காட்டுக்குப் போக வேண்டியதில்லை’ என்பது தான் சிவவாக்கியர் வாக்கு.
அவன் அங்கே இருக்கட்டும், பங்களாவிலே இருந்தாலும் அதைக் காடாக மாற்றிக் கொள்ள முடியும்; காட்டிலே இருந்தாலும் அதைப் பங்களாவாக மாற்றிக் கொள்ள முடியும்.
ஓடுகின்ற வண்டிக்குள் இருந்து கொண்டே, ஓடாமல் இருப்பவனே உண்மை சந்நியாசி; உண்மையில் மனத்தை அடக்கியவன்.
சாப்பாட்டைக் காணும் போது பசி எடுக்காதவன், மனத்தை அடக்கியவன்.
பெண்ணைக் காணும்போது இச்சை கொள்ளாதவன் மனத்தை அடக்கியவன்.
பணத்தைக் காணும் போது, இது நமக்கு இருக்கிறதா என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன்.
அடுத்தவனுடைய வீட்டைப் பார்த்து, `ஐயோ! இவ்வளவு பெரிய வீடா!’ என்று எண்ணாதவன், மனத்தை அடக்கியவன்.
எந்த ஞானியைப் பார்த்தாலும், `மனத்தை அடக்கு, மனத்தை அடக்கு’ என்று ஏன் சொல்லுகிறார்கள்?
சகல துன்பங்களுக்கும் அதுதான் காரணம்.
நான் ஏற்கெனவே அர்த்தமுள்ள இந்துமதத்தின் இதர பகுதிகளில் விவரித்துள்ளபடி, `இந்த மனத்தின் லயத்தினாலே தான்’ மனிதன்
கெடுகிறான்.அதனால்தான், `மனஸ்’ என்ற மூலத்தைக் கொண்டு `மனுஷ்யன்’ என்ற வடமொழி வார்த்தை உருவாயிற்று.
கலைவாணர் ஒரு கதை சொல்லுவார். அதை நானும் பல தடவை மேடைகளில் சொல்லி இருக்கிறேன்.
நோயுற்ற ஒருவன், ஒரு வைத்தியரிடம் போனான். `ஐயா! எனக்கு இன்ன நோய், அதற்கு ஏதாவது வைத்தியம் செய்யுங்கள்’ என்று
கேட்டான்.அந்த சித்த மருத்துவன் ஒரு லேகியத்தை எடுத்துக் கொடுத்தான்.
`நல்லது ஐயா! இந்த லேகியத்தை சாப்பிடும் போது ஏதாவது பத்தியம் உண்டா?’ என்று கேட்டான் அந்த நோயாளி.
`பத்தியம் வேறொன்றுமில்லை. லேகியத்தைச் சாப்பிடும் போது, குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது; அவ்வளவு தான்!’ என்று மருத்துவன் சொன்னான்.
நடந்தது அவ்வளவுதான். பிறகு, அவன் எப்போது லேகியத்தை எடுத்தாலும், எதிரே குரங்கு வந்து நிற்பது போல் தோன்றும்; கடைசி வரையில் அவன் சாப்பிட முடியவில்லை.
ஏன்? `குரங்கை நினைத்துக் கொள்ளக் கூடாது’ என்று வைத்தியன் சொன்னது அவன் மனத்தில் பதிந்து விட்ட காரணத்தால், லேகியத்தைத் தொட்டாலே அவனுக்குக் குரங்கு ஞாபகம் வரத் தொடங்கிற்று.
லேகியத்திற்கும், குரங்கிற்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? அவன் அதைச் சொல்லாமல் இருந்திருந்தால், இவன் அதை நினைக்கப் போகிறானா? கிடையாது.
அவன் சொல்லிவிட்ட காரணத்தால், மனது அதைச் சுற்றியே வட்டமிட்டது. லேகியத்தைத் தொடும் போதெல்லாம் `குரங்கு, குரங்கு’ என்கிற எண்ணமே வந்தது.
அதன் விளைவாகக் கடைசி வரை அவனால் அந்த லேகியத்தைச் சாப்பிட முடியவில்லை.
சில பேரைப் பார்க்கிறோம். தவறு செய்து விடுகிறார்கள். `ஏண்டா நீ இந்தத் தவறைச் செய்தாய்?’ என்று கோபத்தோடு கேட்டால், `ஐயோ, நான் என்ன செய்வேன்? என் மனது கேட்கவில்லையே! நான் அங்கே போனேன்’ என்கிறான்.
மனது எதற்குக் கேட்கும்? யாரிடம் கேட்கும்? நீ சொன்னால் மனது கேட்க வேண்டும்! அப்படிக் கேட்டால் தான் உனக்குள் அடங்கியது
மனது.மனதுக்குள் அடங்கியவனல்ல மனுஷ்யன்! மனுஷ்யனுக்குள் அடங்கியதுதான் மனது. இதுதான் வடமொழியினுடைய சாரம்.
பெரிய ஞானிகள் எல்லாம் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.
அவர்கள் ஏன் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்? மனத்திலே டென்ஷன் இல்லை; நோயில்லை; நோய்க்கு அவர்கள் மருத்துவம் பார்த்துக் கொள்வதுமில்லை. தனக்கு நோய் இருப்பதாக அவர்கள் உணர்வதும் இல்லை.
இந்த மனத்தை அடக்குவதற்கு வெறும் பக்தி லயம் மட்டும் போதுமா என்றால், போதாது. இது சாதாரணமாக வரக்கூடிய ஒன்றல்ல. எல்லோருக்கும் வந்து விடாது. எல்லோருக்கும் இது வந்து விடுமானால் ஊரிலே போட்டி இருக்காது; உலகத்தில் போர் இருக்காது.
சில பேருக்கு மட்டுமே இது வருகின்ற காரணத்தால்தான், உலகத்தில் அவர்களுக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது; அவர்களை ஞானிகள் என்கிறோம். மேதைகள் என்கிறோம்.
நாமெல்லாம் மனதுக்குக் கட்டுப்பட்டவர்கள்.

`என் மனசாட்சி அப்படிச் சொல்கிறது; என் மனது இப்படிச் சொல்கிறது’ என்று நாம் அடிக்கடி பேசுவோம்.
மனது சொன்னதை எது கேட்கிறது. மூளையா, கண்ணா, காதா?
அந்த மனத்தாலே ஆட்டி வைக்கப்படும் இந்த உடம்பு கேட்கிறது; அந்த உடம்பு அதன்படி செயல்படுகிறது.
ஏன், அந்த மனத்தை உன்னுடைய இஷ்டத்துக்கு, உன் மூளையினுடைய இஷ்டத்துக்கு ஆட்டி வைக்கக் கூடாது, `நான் சொல்கிறபடி கேள்’ என்று?
முந்திய அத்தியாயங்களில் சொன்னது போல மனத்தை அடக்கி,
`மனமெனும் பெண்ணே! வாழி நீ கேளாய்
ஒன்றைய பற்றி யூசலாடுவாய்’
என்றானே பாரதி, அப்படி ஊசலாடுகின்ற மனதை உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்து, பக்குவப்படுத்தி, பாடம் பண்ணி வாழக் கற்றுக் கொண்டு விட்டால், உறவு, பந்தங்கள், இரவு, பகல், இறப்பு, பிறப்பு எதிலேயும் பற்றும், பாசமும் இன்பமும், கண்ணீரும், புன்னகையும் மாறி மாறி வர வேண்டிய அவசியமே இருக்காது.
கோடை வரலாம்; வசந்தம் வரலாம்; பனிக்காலங்கள் வரலாம்; பருவங்கள் மாறுமே தவிர, உலகத்தினுடைய உருவம் மாறினாலும் கூட, உன்னுடைய நிலைமை மாறாது, மனதை மட்டும் உன்னால் அடக்க முடியுமானால்.

%d bloggers like this: