Daily Archives: ஒக்ரோபர் 28th, 2012

தலை திரும்பிய ஆடு

 

இங்கிலாந்தில் உள்ள கிராமத்து பண்ணை ஒன்றில் வளர்ந்து வருகிறது, இந்த தலை திரும்பிய ஆடு. வழக்கமான ஆடுகள் மாதிரி இல்லாமல் தலை 150 டிகிரி தள்ளி அதாவது தன்னையே தான் பார்த்தது மாதிரி அமைந்து, மற்ற ஆடுகளிடம் இருந்து இதை வித்தியாசப்படுத்துகிறது.

Aadu இது குட்டியாக பிறந்திருந்தபோது இதை எப்படி வளர்ப்பது, இதனால் சரிவர இரையை எடுத்துக் கொள்ள முடியுமா என்று பண்ணையில் உள்ளவர்கள் கவலைப்பட்டார்கள். ஆனால் தன் பிறவி ஊனத்தை இந்த ஆடு சுலபத்தில் வென்று மற்ற ஆடுகள் மாதிரி இயல்பான வாழ்க்கைக்குத் தயாராகி விட்டது. மற்ற ஆடுகள் புல் மேய்வதுபோல் இதனால் மேய முடியாது. இதன் தலை வித்தியாசமாய் ரிவர்சில் வளைந்து இருப்பதால் அந்த கோணத்தில் இருந்தபடியே புல் மேய்கிறது.

இதை பரிசோதித்த கால்நடை டாக்டர்கள் இதன் முதுகுத்தண்டு வளைந்து இருப்பது தான் இப்படி தலையை திருப்பிப் போட்டு இருக்கிறது. ஆனாலும் இயல்பு வாழ்க்கைக்கு அது பழகி விட்டது தான் இதில் மகிழ்ச்சிக்குரியது என்கிறார்கள்.

மாற்றப்பட்ட மைக்ரோசாப்ட் இலச்சினை

"பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்ற நம் பண்பாட்டு பழக்கத்தை, அண்மையில் மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது. சென்ற 25 ஆண்டுகளாக மாற்றாமல் வைத்திருந்த, தன் நிறுவனத்தின் இலச்சினையை, மைக்ரோசாப்ட், சென்ற ஆகஸ்ட் 23 அன்று மாற்றியுள்ளது. நான்கு வண்ண சதுர கட்டங்கள், முன்பு இருந்த எந்த வளைவும் இன்றி, தட்டையாகத் தரப்பட்டுள்ளன. அதே வரிசையில் இவை தரப்பட்டாலும், இப்போது இவை அனைத்தும் ஒரு கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளன. சம சதுரங்களாய், 90 டிகிரி கோணத்தில் அமைந்துள்ளன. இவை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தொடக்க திரையைப் போல் காட்சி அளிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பெயர், புதியதாக இந்நிறுவனம் அறிமுகப் படுத்தியுள்ள மெட்ரோ Segoe எழுத்துவகையில் அமைக்கப்பட்டுள்ளது. இது முன்பு பயன்படுத்திய எழுத்து வகையைக் காட்டிலும், தடிமன் சற்று குறைவானது. விண்டோஸ் 8 இலச்சினையில் உள்ளதுவே இங்கும் உள்ளது.
இந்த ஆண்டு முழுவதும், பல்வேறு புதிய சாப்ட்வேர் தொகுப்புகள் அறிமுகப்படுத்தப் படும் நிலையில் இருக்க, தற்போது தன் நிறுவன இலச்சினையை மாற்றி, அதற்கு ஒரு தொடக்கத்தினைத் தந்துள்ளது மைக்ரோசாப்ட். விண்டோஸ் 8, சர்பேஸ் டேப்ளட், விண்டோஸ் போன் மற்றும் தொடர்ந்து அடுத்த ஆண்டில் ஆபீஸ் 2013 என முக்கியமான பல தொகுப்புகள் வெளியாக இருக்கின்றன. இந்த மாற்றம் இப்போது இலச்சினையில் தொடங்கி உள்ளது.
""கடந்த 25 ஆண்டுகளாக மாற்றாமல் இருந்த இலச்சினையை மாற்ற, இதுவே சரியான தருணம் என்று எண்ணி இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்” என்று மைக்ரோசாப்ட் பிராண்ட் பிரிவு நிர்வாகி ஜெப் ஹேன்சன் தெரிவித்துள்ளார்.
இலச்சினையில் தரப்பட்டுள்ள வெவ்வேறு வண்ணங்களில் அமைந்துள்ள சதுரங்கள், மைக்ரோசாப்ட் வெவ்வேறு வகையான சாப்ட்வேர் தயாரிப்புகளில் ஈடுபடுவதனைக் காட்டுகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும், இந்த இலச்சினை அனைத்து பிரிவுகளிலும் அமல்படுத்த சில வாரங்கள் ஆகலாம்; சில இடங்களில் பழைய இலச்சினை இருக்கலம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.