பைல்களை சேவ் செய்திட இணைய தளங்கள்

கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்போதுதான் நமக்கு முழுமையாகக் கிடைத்தாலும், இணைய தளங்களில் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் பைல்களை சேவ் செய்து வைத்திடும் வசதி பல ஆண்டுகளாய் நமக்குக் கிடைத்து வருகிறது. நாம் உருவாக்கும் அனைத்து பைல்களையும், நமக்குக் கிடைக்கும் எல்லாவிதமான பைல்களையும் நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் ட்ரைவ், சிடி, டிவிடிக்களில் சேவ் செய்து வைக்கலாம். ஆனால் பதிவினை வாங்கிக் கொள்ளும் இந்த மீடியாக்கள் எல்லாம், என்றாவது ஒரு நாளில் கெட்டுப் போய் பைல்களை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். எனவே இத்தகைய மீடியாக்களில் சேவ் செய்து வைப்பதுடன், சேவ் செய்து பாதுகாத்து தேவைப்படும்போது எடுத்துக் கொள்ளும் வசதியினைத் தரும் இணைய தளங்களிலும் நம் பைல்களை சேவ் செய்து வைத்திடலாம். அத்தகைய சேவை தரும் தளங்களை இங்கு காணலாம்.

1. மைக்ரோசாப்ட் ஸ்கை ட்ரைவ் (Microsoft Sky Drive):


இந்த தளத்தில் பைல்களை சேவ் செய்து வைத்திட 7 ஜிபி அளவு இடம் தரப்படுகிறது. முதலில் 25 ஜிபி அளவு தரப்பட்டது. பின்னர், இது குறைக்கப்பட்டது. இருப்பினும் முன்பு பதிந்து கொண்டவர்களுக்குத் தொடர்ந்து 25 ஜிபி அனுமதிக்கப்படுகிறது. நம் குடும்ப உறுப்பினர்களின் போட்டோக்கள், வீடியோ பைல்களை அதிக எண்ணிக்கையில் சேவ் செய்து வைத்திட இது நல்ல தளம். இதில் ஒரு குறைபாடு உள்ளது. இதற்கு எந்த பாதுகாப்பும் இல்லை. எனவே பெர்சனல் தகவல்கள் அடங்கிய தனி நபர் பைல்களை இதில் சேவ் செய்து வைப்பதனைத் தவிர்க்கலாம். தளத்தின் இணைய முகவரி: http://windows.microsoft.com/enUS/skydrive/home

2.மோஸி ஹோம் ப்ரீ (Mozy Home Free):

இலவசமாக 2ஜிபி வரை இத்தளத்தில் பைல்களை சேவ் செய்திடலாம். கூடுதலாக இடம் வேண்டும் எனில் கட்டணம் செலுத்த வேண்டும். இதன் சிறப்பு, இந்த தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டை செட் செய்து விட்டு, குறிப்பிட்ட போல்டர்களை தேர்ந்தெடுத்து அமைத்தால், பைல்கள் தாமாகவே ஒருங்கிணைக்கப்பட்டு சேவ் செய்யப்படும். இதன் தள முகவரி: http://mozy.com/home/free

3. ஐ ட்ரைவ் (IDrive):

இத்தளம் நமக்கு இலவசமாக 5 ஜிபி இடம் தருகிறது. குறிப்பிட்ட பெர்சனல் கம்ப்யூட்டர் என்றில்லாமல், உங்களுடைய பெர்சனல் கம்ப்யூட்டர், மேக் கம்ப்யூட்டர், ஐபோன், ஐபேட் மற்றும் ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் உங்கள் சாதனம் எதிலிருந்தும் பைல்களை இந்த தளத்திற்குக் கொண்டு சென்று சேவ் செய்திடலாம். ஆனால் பயன்படுத்தும் மொத்த அளவு 5 ஜிபி ஆக இருக்க வேண்டும். இங்கு பைல்கள் 256bit AES என்கிரிப்ஷன் என்ற தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்தி சேவ் செய்யப்படுகின்றன. இதற்கான கீ உங்களுக்கு மட்டுமே அறிவிக்கப்படும். இந்த ட்ரைவில் கூட பதிந்து வைக்கப்பட மாட்டாது. எனவே முற்றிலும் பாதுகாப்பானது. இத்தளத்தில் கட்டணம் செலுத்தி இடம் பெற திட்டமிடுபவர்களுக்குப் பல்வேறு கட்டணத் திட்டங்கள் உள்ளன. இதன் தள முகவரி: http://www.idrive.com/index.html

4. சுகர் சிங்க் (SugarSync):

இந்த தளமும் இலவசமாக 5 ஜிபி இடம் தருகிறது. அனைத்து வகை ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் (Android device, iPhone, iPad, BlackBerry, and Kindle Fire) இயங்கும் கம்ப்யூட்டர்களிலிருந்து பைல்களை மாற்றலாம். பெர்சனல் கம்ப்யூட்டரிலிருந்து மேக் கம்ப்யூட்டருக்கு பைல்களை மாற்ற விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல தளம். பைல்களைச் சுருக்கிப் பதிய இந்த தளம் TLS (SSL 3.3) தொழில் நுட்பத்தினைப் பயன்படுத்திகிறது. எனவே நம் பைல்கள் பாதுகாப்பாகப் பதியப்படுகின்றன. கட்டணம் செலுத்தி, கூடுதலாக இடம் பெற்றுக் கொள்ளலாம். இந்ததள முகவரி: https://www.sugarsync.com/?source=myss

5. ஏ ட்ரைவ் (A Drive):

இலவசமாய் 50 ஜிபி அளவு இடம் கொடுக்கும் இந்த தளம். ஸ்டோரேஜ், பேக் அப், பகிர்ந்து கொள்ளல், எடிட் செய்தல், எங்கிருந்தும் பைல் டவுண்லோட் செய்தல் எனப் பலவகை வசதிகளைத் தருகிறது. பைல்களை பகிர்ந்து கொள்ளும் ஷேரிங் வசதியின் மூலம், உங்கள் அலுவலக அலுவலர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என எவருடனும் இதில் சேவ் செய்யப்படும் பைல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பிட்ட பைலுக்கு இந்த தளம் தரும் லிங்க்கினை மின் அஞ்சலில் அனுப்பி, பெறும் நபரை இந்த ட்ரைவிலிருந்து பைலைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கலாம். இணைய வெளியில் இருந்தவாறே, இதில் சேவ் செய்யப்பட்ட பைல்களை எடிட் செய்திடலாம். நீங்கள் சேவ் செய்த பைல்களை எளிதாகத் தேடிப் பெறவும் வசதி தரப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்திப் பெற முன் வருபவர்களுக்கு 50 ஜிபிக்கு மேலாக 10 டெரா பைட் வரை இடம் தரப்படுகிறது. இந்த தள முகவரி: http://www.adrive.com/

6.கூகுள் ட்ரைவ் (Google Drive):

இலவசமாய் 5 ஜிபி ஸ்டோரேஜ் இடம் தருகிறது. பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மேக் கம்ப்யூட்டரின் பைல்களை இணைக்கலாம். மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வசதியும், ஆன்லைன் எடிட்டிங் வசதியும் குறிப்பிடத்தக்க வசதிகளாகும். நேரடியாக இந்த ட்ரைவில் பைல்களைப் பதியலாம். இதில் தரப்படும் தேடல் வசதிகள் மிகவும் அருமை எனச் சொல்ல வேண்டியதில்லை. கூடுதலாக இடம் தேவைப்படுவோர் கட்டணம் செலுத்திப் பெறலாம். இதன் தள முகவரி: https://drive.google.com/start?authuser=0#home
இந்த தளங்களுடன் கீழே குறிப்பிட்டுள்ள சில தளங்களும் சேவ் செய்திடும் வசதியையும், மற்ற மேலே குறிப்பிட்ட சில வசதிகளையும் தருகின்றன. அவற்றின் பெயர், ஸ்டோரேஜ் இடம் மற்றும் முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

1. உபுண்டு ஒன் (Ubuntu One):

5 ஜிபி இடம். முகவரி: https://one.ubuntu.com/

2. பாக்ஸ் (Box):

5 ஜிபி இடம். பைலின் அளவு 100 எம்.பி.க்குள்ளாக இருக்க வேண்டும். தள முகவரி: https://www.box.com/

3. ட்ராப் பாக்ஸ் (Drop Box):

2ஜிபி இடம். கட்டணம் செலுத்துபவர், ஓராண்டு முன் கூட்டியே செலுத்தினால், 17% கட்டணச் சலுகை தரப்படுகிறது. தள முகவரி: https://www.dropbox.com/pricing

4. கொமடா பேக் அப் (Comodo Backup):

5 ஜிபி இடம். Volume Shadow Copy என்ற தொழில் நுட்பத்தில் பைல்கள் சேவ் செய்யப்படுகின்றன. பாதுகாப்பானது. இதன் தள முகவரி: http://backup.comodo.com/

5. மிமீடியா (Mi Media):

7 ஜிபி இடம். இதன் தள முகவரி: http://www.mimedia.com/

6. மை அதர் ட்ரைவ் (MyOtherDrive):

2 ஜிபி இடம். பைல்களைச் சுருக்க AES 128bit தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதன் தள முகவரி: http://www.myotherdrive.com/

7. படி பேக் அப் (BuddyBackup):

இந்த தளம் உங்கள் பைல்களை உங்கள் கம்ப்யூட்டரிலேயே சுருக்கிப் பதிந்து, பின்னர் தன் தளத்திற்குக் கொண்டு செல்கிறது. ஒன்றுக்கு மேற்பட்ட பேக் அப் பைல்களை இதில் உருவாக்கலாம். நண்பர்களுடன் பைல்களைப் பகிர்ந்து கொள்ளலாம். இதன் தள முகவரி: http://www.buddybackup.com/

%d bloggers like this: