இயற்கை கொஞ்சும் தண்ணீர் தேசம்!

image

முற்றிலும் சுற்றுலாவை நம்பி உள்ள நாடு தாய்லாந்து. இந்தாண்டு, ஏப்ரலில் மட்டும், 1.65 கோடி சுற்றுலா பயணிகள், தாய்லாந்திற்கு சென்றுள்ளனர். தாய்லாந்து என்றாலே, பாங்காக், பட்டயா, புக்கெட் போன்ற இடங்களும், கூடவே மசாஜ் நிலையங்கள், இரவு நேர விடுதிகள், நம் நினைவிற்கு வரும்.
இந்த மூன்று நகரங்களுக்கு தான், அதிக அளவில் இந்தியர்கள் செல்கின்றனர். ஆனால், ஐரோப்பியர்கள், சிங்கப்பூர், மலேசியா, சீனாவை சேர்ந்தவர்கள், தாய்லாந்தில் அதிகம் தேர்வு செய்வது, கிராபி என்ற பகுதியை தான்.
கிராபி என்பது ஒரு மாகாணம். தாய்லாந்தின் தென்கோடியில், அந்தமான் கடலோரம் இருக்கிறது. கிராபி தான் தலைநகர். (நம்மூர் மதுரையை விட மிகச்சிறிய ஊர். ஆனால், சர்வதேச விமான நிலையம் இருக்கிறது). பாங்காக்கில் இருந்து, 800 கி.மீ., தூரத்தில் உள்ளது. புக்கெட்டில் இருந்தும், சாலை வழியாக இரண்டு மணி நேர பயணத்தில் கிராபியை அடையலாம்.
கிராபி மற்றும் அதன் அருகில், அந்தமான் கடலில் உள்ள குட்டி தீவுகள் என, குறைந்தது, மூன்று நாட்கள் சுற்றுலா சென்று கண்டுகளிக்க ஏராளமான இடங்கள் இங்குள்ளன.
இங்கு, "நிறைந்த தண்ணீரோடு’ பாய்கிறது கிராபி என்ற நதி. ஆற்றை, அழகாக வைத்திருப்பது எப்படி என்று இவர்களை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டும். அத்தனை தெளிவான தண்ணீர். ஆற்றின் மறுகரையில் சதுப்பு நிலக் காடுகள். "நீண்ட வால் படகில்’ அரை மணி நேரம் பயணம் செய்தால், ஒரு சிறுகாடு. அதனுள், ஒரு உயர்ந்த சுண்ணாம்பு பாறை. அதில் ஏறிச் செல்ல, படிகள் உண்டு. பாறை குகைக்குள் சென்றால், கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள் என்று, சில பகுதிகளை அடையாளப்படுத்தி வைத்துள்ளனர்.
கிட்டத்தட்ட, 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய, மனித எலும்புக்கூடு இங்கு கண்டெடுக்கப்பட்டதாக, கல்வெட்டு வைத்திருக்கின்றனர். கற்கால மனிதர்களை போன்ற சிற்பங்கள் நம்மை மிரட்டுகின்றன. மேலே பார்த்தால், நம்மை குத்துவது போல நிற்கிற சுண்ணாம்பு பாறைகளின் கீற்றுகள். "செமதிரில்லான’ குகை இது.
ஆற்றில் உள்ள மிதக்கும் ஓட்டல்களில், அங்கேயே பிடித்த பெரிய மீன்களை, நண்டுகளை சுடச்சுட பொரித்து தருகின்றனர். ஒரு மீனை ஐந்து பேர் சாப்பிடலாம்; அவ்வளவு பெரியது. ஆற்றை கடந்து சென்றால், ஐந்தாயிரம் மக்கள் வசிக்கும் குட்டி தீவு. வயல் வெளியும், தென்னை தோப்புகளுமாய், கேரளாவை ஞாபகப்படுத்து கிறது. தாய்லாந்தின் கைவினைப் பொருட்கள், மீன், இறால் ஊறுகாயை இங்கு வாங்கலாம்.
கிராபியில் உள்ள புத்தர் கோவில், புலிக்குகை போன்றவை பார்க்க வேண்டிய இடங்கள்.
குட்டித்தீவுகளில் படகு யாத்திரை: கிராபியில் இருந்து, 17 கி.மீ., தொலைவில் உள்ள நொப்பரடாரா என்ற படகு துறைக்கு, ரோடு வழியாக சென்று, அங்கிருந்து படகில் குட்டி தீவுகளுக்கு செல்லலாம். இந்த ஊருக்கு அருகிலேயே, ஆ நாங்க் என்ற கடற்கரை நகரம் உள்ளது. "தாய் மசாஜ்’ இங்கு பிரபலம்.
கொஞ்சம் கடல், கொஞ்சம் மணல் என, இயற்கை கொஞ்சும், "தண்ணீர் தேசம்’ இந்த தீவுகள். இயற்கை, அற்புதங்களை அள்ளி தெளித்திருக்கும், கண்ணிற்கு இதம் அளிக்கும் கோ சமுய், கோ பன்கன், கோ பி பி, கோ லன்டா, கோ லைபி, போடா என்ற குட்டி, குட்டி தீவுகள் தான் சுற்றுலா பயணிகளின் சொர்க்க பூமி. உலக வரைபடத்தில் காணமுடியாத, தாய்லாந்து வரைபடத்தின், "சிறு புள்ளிகள்’ இவை. அலைகள் ஆர்ப்பரிக்காத, அமைதியான, தெளிவான நீலக்கடல் நீரில் குளித்து, களித்து, கவலைகளை மறந்து, வெள்ளை மணற்பரப்பில், "அவர்களது ஆடையில்’ ஓய்வெடுக்கின்றனர் ஐரோப்பியர்கள்.
நொப்பரடாராவில் இருந்து, கோ லன்டாவிற்கு மூன்று மணி நேர படகு பயணம். மதியம் 12:00 மணிக்கு படகின் மேற்பகுதியில் வந்து நின்றாலும், வெயில் சுடவில்லை. நடுக்கடலும், நம்மூர் ஏரி மாதிரி அமைதியாய் இருக்கிறது. அந்தமான் கடலின், "அமைதியே’ அழகு. கடலுக்கு இடையே, ஆங்காங்கே வழிமறிக்கின்றன, வானுயர்ந்து நிற்கும் பசுமை போர்த்திய சுண்ணாம்பு பாறைகள். எல்லா தீவுகளும் சராசரியாக, 6 கி.மீ., நீளம், 20 கி.மீ., அகலம் என்ற அளவில் தான் இருக்கின்றன. இடையிடையே நாம் ஓய்வெடுக்க, கடல் நடுவே மணற்பரப்புகள். அதில் இறங்கி நின்றால் நடுக்கடலில் நிற்கும் பிரமிப்பு. அந்த பகுதியில் ஆழம் குறைவாக இருப்பதால் குளிக்கலாம். அபூர்வ கடல் மீன்களை கண்குளிர கண்டு ரசிக்கலாம்.
மனித தலைகள் தெரியாத, மண்ணும், மரமும், கடலும் சூழ்ந்த சுற்றுச்சூழல் மாசு படாத, நீண்ட கடற்கரையை உடைய தீவு இது. படகில் சென்று இறங்கியதும், நபர் ஒன்றுக்கு, 10 பாத்(1 பாத்-தோராய மாக இந்திய மதிப்பில் 2 ரூபாய்) வசூலிக்கின்றனர். தீவை தூய்மையாக பாதுகாக்க, இந்த நுழைவு வரியை வாங்குகின்றனர். கட்டணம் வாங்குவதற்கு ஏற்ப, தூய்மையை காக்கின்றனர். கூடவே இலவசமாக, தீவு குறித்த, "பாக்கெட் கைடு’ தருகின்றனர்.
இங்கு வனத்திற்குள் சுற்றுலா (ஜங்கிள் சபாரி) சென்று அரிய பறவைகள், விலங்கினங்களை பார்க்கலாம்.
தேசிய பூங்கா, நீர்வீழ்ச்சி உள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு ஏற்ற இடங்கள் இவை. "சர்பிங்’ போன்ற தண்ணீர் விளையாட்டுகள் இங்கு பிரபலம்.
தனிமை விரும்பும், தேனிலவு தம்பதியர் தேடி வரவேண்டிய தீவு இது. வரலாற்று ஆய்வாளர்களை ஈர்க்க, சீன- தாய்லாந்து பண்பாடு இணைந்த, பழமையான, "மாதிரி கிராமம்’ ஒன்றை, பண்பாடு மாறாமல், அப்படியே வைத்துள்ளனர்.
இங்கிருந்து இரண்டு மணி நேர படகு பயணத்தில், ரெய்லே பீச்சிற்கு செல்லலாம். நம்மூர் கோவா, கோவளம் போன்று இங்கு, "சூரிய குளியல்’ பிரபலம்.
தாய்லாந்திற்கு எத்தனை சுற்றுலாப்பயணிகள் வந்தாலும், கடற்கரை, தெருக்கள் எல்லாம் தூய்மையாக, சுற்றுச்சூழல் மாசு இல்லாமல் இருக்கின்றன. மாதம் ஒரு முறை, "வீட்டிற்கு ஒருவர்’ எனத் தெருவிற்கு வந்து, ஓரிடத்தில் கூடி, "மாஸ்கிளீனிங்’ செய்கின்றனர். இதில், நகர மேயர், மாகாண கவர்னர் என விதிவிலக்கு இல்லாமல் பங்கேற்பது தான், "ஹைலைட்!’ என்னதான், "இயற்கையின் கொடை’ இருந்தாலும், கடல்சார்ந்த சுற்றுலாவில், தாய்லாந்து சாதிக்கும் ரகசியம் இது தான் போலும்.
"இந்தியாவில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே குறைந்த அளவில் வருகின்றனர். வந்தாலும் ஓரிரு நாட்கள் தங்கி சென்று விடுவர். தென்மாநிலத்தவர்கள் வருவது இல்லை; ஆனால், ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் நாட்கணக்கில் இங்கு தங்கி பொழுதை போக்குகின்றனர்…’ என்றார் தாய்லாந்து சுற்றுலா அதிகாரி ஒருவர்.
நீங்களும் இனி, தாய்லாந்து சுற்றுலாவிற்கு திட்டமிட்டால், வழக்கமான இடங்களை தவிர்த்து, கிராபி சென்று, அருகில் உள்ள குட்டி தீவுகளில் கொட்டமடித்து வாருங்கள்.
***
எப்படி செல்வது: சென்னையில் இருந்து, ஏர் ஏசியா விமானத்தில் சென்றால், பாங்காக்கில் இருந்து கிராபிக்கு, "கனெக்டிங் பிளைட்’ உள்ளது. கிராபியில் இருந்து தீவுகளுக்கு, படகில் செல்லவும், ஏர் ஏசியா ஏற்பாடு செய்கிறது. விமானத்திற்கு புக்கிங் செய்யும் போதே, படகில் செல்லவும் முன்பதிவு வசதி உண்டு. (www.airasia.com)
உணவு: டீ, காபி, ஐஸ் டீ, பிரட், ஆம்லெட், அரிசி சோறு கிடைக்கும். மீன், இறால், நண்டு, சிப்பி வகைகள் பிரபலம். வெஜிட்டேரியன், "தாய் உணவுகள்’ சூப்பர் டேஸ்ட்.
விலை: டீ-30 பாத், இளநீர்-40, பீர்(500 மி.லி.,)-90, மதிய உணவுக்கு குறைந்தது 150 பாத் ஆகும்.
அறை வாடகை: ரிசார்ட்-2000 பாத் முதல், ஓட்டல்-600 பாத் முதல்
படகு கட்டணங்கள்: 100 பாத் முதல்
மசாஜ்: ரோட்டோர மசாஜ் நிலையங்களில் தாய் மசாஜ்-200, ஆயில் மசாஜ்-250
சீசன்: நவம்பர் முதல் ஏப்ரல் வரை.

%d bloggers like this: