மலைகளில் மரம் வளர்ப்போம்

மூன்றாவது உலக யுத்தம் தண்ணீருக்காகத்தான் நடைபெறும்’ என்று சொல்வதன் மூலம், யுத்தம் நடைபெறும் என்பதையும், அதற்கான காரணத்தையும் சேர்த்தே சொல்லி எச்சரிக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கர்நாடகத்தையும், கேரளத்தையும், ஆந்திரத்தையும் எதிர்த்துப் போராடிக் கொண்டே இருக்கும் நிலை, இனி எந்தக் காலத்திலும் மாறும் என்று நம்பினால் நாம் அறிவிலிகள்.

மழை பெய்தால் உபரி நீர் வரும், அதுஇல்லாவிட்டால் "எந்தத் தீர்ப்பு வந்தாலும்’ தண்ணீர் வரவே வராது!

எனவே, மாற்று ஏற்பாட்டைக் கூடவே யோசிக்காவிட்டால், தண்ணீருக்கான சிக்கலையும், போராட்டத்தையும் நாம் தவிர்க்கவே முடியாது.

மழைக்காலம் நெருங்குவதால் எல்லா வீடுகளிலும் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தைச் செயல்படுத்தச் சொல்கிறது அரசு.

இத்திட்டம் ஒரு வகையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நல்ல பணி, மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்றுதான். அதேநேரத்தில் மாநிலம் முழுவதும் சிறிதும், பெரிதுமான மலைகள் நம் கவனத்தில் இருந்து விலகியே இருக்கின்றன.

சாலையோரங்களில் மரங்களை நடும் நிகழ்ச்சிகள் ஏராளமாக நடைபெறுகின்றன. ஆனால், பல மலைகள் வறண்டு கிடக்கின்றன. ஏற்கெனவே நீர்ப்பிடிப்புப் பகுதிகளாக இருந்த இவை பரிதாபமாகக் காட்சியளிக்கின்றன. ஏன் இவற்றைக் கவனிக்கக் கூடாது?

மலைகளிலிருந்து சிற்றாறுகளும், சுனைகளும் பிறக்கின்றன. பெரும்பாலான இடங்களில் அவை காய்ந்து, வற்றியுள்ளன. அருவிகள் இல்லாத மலைகளே இல்லை. நீர்ப்பிடிப்பு இல்லாததால் பெரும்பாலானவை வறண்டுவிட்டன.

வறட்சியான பெரம்பலூர் மாவட்டத்திலும் ஓர் அருவி இருக்கிறது. சுற்றிலும் மலைகளைக் கொண்ட இயற்கை அற்புதமாக மணப்பாறை அருகே பொன்னணியாறு அணை இருக்கிறது; இப்போது காய்ந்துபோய் காட்சியளிக்கிறது.

ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் உள்ள சிறிதும் – பெரிதுமான மலைகளை ஆய்வுசெய்து பெருந்திட்டம் ஒன்றை அரசு தயாரிக்க வேண்டும். உள்ளூர் மக்களின் உதவியுடன் அந்த மலைகளில் மரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அந்த மரங்கள் அம் மக்களுக்கும் சமுதாயத்துக்கும் குறுகிய கால, நீண்டகாலப் பயன்களை அளிப்பதாகவும் இருந்தால் சிறப்பு. பழ மரங்கள், மருத்துவத்துக்குப் பயன்படும் மூலிகை மரங்கள், எரிபொருளாகப் பயன்படக்கூடிய மரங்கள், கப்பல் கட்டுதல் போன்ற கனரக உபயோகத்துக்கான மரங்கள், பறவைகள் கூடு கட்டி வசிப்பதற்கானவை என்று எல்லாவித மரங்களையும் திட்டமிட்டு வளர்க்கலாம்.

இதைச் செய்துவிட்டால் நிச்சயம் அடுத்த நூறாண்டுகளுக்குத் தேவையான பெரும் தண்ணீர் ஊற்றுகளை நாம் உருவாக்க முடியும்.

ஏரிகளில் இருந்து குடிநீர்த் திட்டம், ஆறுகளில் இருந்து திட்டம் என்ற நிலை மாறி, மலைகளில் இருந்து வரும் அருவிகளில் இருந்தும், சிற்றாறுகளில் இருந்தும் குடிநீர்த் திட்டத்தை உருவாக்கி அருகேயுள்ள மாவட்டங்களுக்குத் தரும் நிலை வரும். இந்தக் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய அவசியமான பணி இது.

%d bloggers like this: