போவோம் மலம்புழா அணை!

சுட்டெரிக்கும் வெயிலிலிருந்து தப்பி, ‘குளு குளு’ பிரதேசத்துக்கு செல்ல வேண்டுமா? பக்கத்து மாநிலமான கேரளாவில் உள்ள மலம்புழா அணைக்கு சென்று வாருங்கள்.
கோவையிலிருந்து ஒன்றை மணி நேர பயணத்தில், மலம்புழாவை அடைந்து விடலாம். காரிலோ, டூ-வீலரிலோ செல்வதாக இருந்தால், கஞ்சிக்கோடிலிருந்து, ஏழரை கி.மீ., தூரத்தில் மலம்புழா வந்து விடும். கோவையிலிருந்து மிக சமீபத்திலிருக்கும் மலம்புழா, முன் தமிழகத்தோடு இணைந்திருந்தது.

மலம்புழா அணைக்கு சிறிது தூரத்தில் உள்ளது ராக் கார்டன் எனப்படும், கற்களால் ஆன பொம்மை பூங்கா. சண்டிகரிலுள்ள ராக் கார்டனுக்கு அடுத்ததாக உள்ள, பெரிய ராக் கார்டன் இதுதான். இங்குள்ள விதவிதமான மார்பிள் பொம்மைகள், நம்மை வியப்பில் ஆழ்த்தும். இதை பார்த்தபின், அருகிலுள்ள பெரிய பூங்காவிற்குள் காலடி எடுத்து வைத்தோமென்றால், நாமும் குழந்தைகளாகி விடுவோம். குட்டி ரயில், பொம்மை வாயிலிருந்து விழும் தண்ணீர், அழகான வண்ணமயமான பூக்கள் இவற்றை பார்வையிட்டு நகர்ந்தால், தொங்கும் பாலம் வந்து விடும்.
கீழே அறுந்து விழுந்து விடுமோ என்கிற பயத்தில், இந்த பாலத்தில் நடந்து செல்வதே, பெரிய, ‘த்ரில்’ தான். பாலத்தில் நடக்கும் போதே, அணையின் பிரமாண்ட தோற்றம் தெரிவதால், அணையின் நடுப்பகுதியில் நடப்பது போன்று இருக்கும். தொங்கு பாலத்தை கடந்து சென்றால், படகு இல்லம் வந்து விடும். மோட்டார் படகு, துடுப்புப் படகு என, குழந்தைகளோடு, ஏதாவது ஒரு படகில் ஏறி அமர்ந்து, பூங்கா மற்றும் அணைக்கட்டு பகுதியை சுற்றி வரலாம்.
படகுப் பயணம் முடிந்ததும், அணைப் பகுதியின் மேலே ஏறினால், ரோப் கார் இருக்குமிடம் வரும். இருவர் அமர்ந்து செல்லும் கேபிள்களாக இருக்கும் ரோப் காரில் அமர்ந்து, மலம்புழாவின் மொத்த அழகையும், ஜாலியா ரசிக்கலாம். மேலும், ரோப் காரிலிருந்து கீழிறங்கி, அணைக்கட்டு பகுதியில், ஒரு ரவுண்ட் நடை போட்டு வரலாம்.
அணைக்கட்டிலிருந்து இறங்கி, பாம்பு பண்ணைக்கு சென்றால், அங்கே பிரமாண்ட சைஸ் பாம்புகளிலிருந்து, குட்டி பாம்புகள் வரை பாரக்கலாம். அங்கிருந்து வெளியே வந்தால், அசைவ பிரியர்களுக்காக, குறிப்பாக, மீன் வறுவலுக்கு அடிமையானவர்களுக்காக, அணையிலிருந்து பிரஷ்ஷாக மீன் பிடித்து, சுடக் சுட வறுத்து தருவர். அதன் பின், மீன் பண்ணைக்கு, ஒரு, ‘ரவுண்ட்’ போய் வரலாம். அப்படியே அருகிலுள்ள நீச்சல் குளத்தில், ஒரு குளியலும் போடலாம்.

%d bloggers like this: