Daily Archives: ஏப்ரல் 15th, 2014

வேர்ட் டாக்குமெண்ட்களில் வரிசைப்படுத்தல்

எக்ஸெல் தொகுப்பினைப் போல, தகவல்களை வரிசைப்படுத்தும் வசதி (அகரவரிசை மற்றும் எண்கள் வரிசை) உள்ளது. இதனை அறியாத பலர், டேட்டாவினை இன்னொரு புரோகிராமிற்கு எடுத்துச் சென்று வரிசைப்படுத்தி, பின்னர் டாகுமெண்ட்களில் ஒட்டுகின்றனர். டாகுமெண்ட்டிலேயே வரிசைப்படுத்துவதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

Continue reading →

பெற்றோரை மதியுங்கள்!

பெற்றோர், பிள்ளைகளை பெற்று, வளர்த்து, கல்வி மற்றும் இதர செல்வங்களை கொடுத்து, அவர்களை காப்பாற்றுவது எப்படி கடமையோ, அதேபோல், தன்னை வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை, அவர்களின் அந்திமக் காலம் வரை காப்பாற்றுவது, பிள்ளைகளின் கடமை. இக்கடமைகளை யார் செய்யத் தவறினாலும், அந்த பாவம் அவர்களை பிறவி தோறும் தொடரும்.
பிள்ளைகள் பெற்றோரிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு, சிரவண குமாரன் கதையைக் கேளுங்கள்…
சிரவண குமாரன் என்ற சிறுவன், தன் பார்வையற்ற பெற்றோரை, கண்ணும் கருத்துமாக காப்பாற்றி வந்தான். ஒரு நாள், இவனின் பெற்றோருக்கு, காசி யாத்திரை செல்ல வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. தன் பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக, காவடி செய்து, அதில் அவர்களை அமர வைத்து, தூக்கி சென்றான். வரும் வழியில், ‘தாகமாக இருக்கிறது’ என்று பெற்றோர், சிரவணனிடம் கூறவே, ஒரு மரத்தடியில் அவர்களை அமர வைத்து, நீர் கொண்டு வர,
குளத்திற்கு சென்றான்.
சிரவணன் குடத்தைத் தண்ணீரில் அழுத்தி, நீர் நிரப்ப முயன்ற போது, ‘பளக் பளக்’ என்று சத்தம் எழுந்தது. அங்கு வேட்டைக்கு வந்திருந்த தசரத மன்னன், அந்த ஓசையை கேட்டதும், ‘ஏதோ மான் தான் தண்ணீர் குடிக்கிறது’ என்று நினைத்து, ஓசை வந்த திசை நோக்கி, அம்பை எய்தார். அம்பு, குறி தவறாமல், சிரவண குமாரன் மீது பாய்ந்தது. அவன் அலறினான். சத்தம் கேட்டு ஓடி வந்த தசரதர், அவன் உயிருக்கு போராடுவதைக் கண்டு நடுங்கி, மன்னிப்பு கேட்டார்.
அப்போது சிரவண குமாரன், தசரதனை நோக்கி, ‘ஐயா… பார்வையற்ற என் பெற்றோர், தாகத்தால் தவித்துக் கொண்டிருப்பர். இந்தத் தண்ணீரைக் கொண்டு சென்று, அவர்களிடம் கொடுங்கள். அவர்கள், நீர் குடித்து முடிக்கும் வரை, என் முடிவை, அவர்களுக்கு தெரிவித்து விடாதீர்கள். என் நிலையை அறிந்தால், தண்ணீரைக் குடிக்க மாட்டார்கள். இதனால், பெற்றோரின் தாகத்தை தீர்க்காத பாவம், என்னை வந்து சேரும்; உயிர் போகும் இந்த கடைசி நேரத்திலும், நான் அவர்களை வணங்கினேன் என்று கூறுங்கள்…’ என்றான்.
தசரதர் அப்படியே செய்து, சிரவண குமாரன் பெற்றோரிடம், சாபம் பெற்றது தனிக் கதை. சிரவணம் என்ற சொல்லுக்கே, கேட்பது என்று பொருள். பார்வையற்ற பெற்றோரிடம் அன்பு கொண்டு, அவர்களைக் காப்பாற்றிய, சிரவண குமாரன் கதையை, நம் குழந்தைகளும், கேட்கும்படி செய்தால், முதியோர் இல்லங்கள் பெருகாது.