பழங்களின் பலன்கள்

அத்திப்பழம்.

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம். 8 மீட்டர் வரை உயரமாக வளரும் அத்தி மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 கனிகள் கிடைக்கும் கனிகளை உலரவைத்து வெகுநாட்கள் வரை வைத்து

பதப்படுத்தலாம். புத்தம் புதிய அத்தி பழத்தில் புரத சத்து 4 கிராம், சுண்ணாம்பு சத்து 200 மிலி கிராம், இரும்பு சத்து 4 மில்லி கிராம், வைட்டமின் ஏ, தயாமின் 0.10 மிலி கிராம் மற்றும் 260 கலோரி சத்துகள் உள்ளன. அத்தி பழத்தில் வைட்டமின் சி குறைந்த அளவில் உள்ளது. ஆனால் அதிக அளவு சர்க்கரை சுண்ணாம்பு சத்து, இரும்பு, தாமிர சத்து உள்ளது. அத்தி பழம் உலர வைக்கப்பட்டு டின்களில் அடைத்து ஏற்றுமதி செய்யலாம். அத்தி பழத்தில் ஜாம் தயாரிக்கலாம். உலர்ந்த பழத்தை பொடிபொடியாக்கி காபி பொடிக்கு பதில் உபயோகப்படுத்தலாம். காயில் இருந்து பால் எடுக்கப்பட்டு மருந்து பொருளாக பயன்படுகிறது. அத்தி, ஜீரணத்தை எளிதாக்கும், சிறுநீர் கற்களை கரைக்கும். மண்ணீரல், கல்லீரல் குறைபாடுகளை தீர்க்கும். மூல நோயை குணப்படுத்தும். காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும். அத்தி பழத்தை சர்க்கரையுடன் கலந்து இரவு பனியில் படும்படி வைத்து காலையில் எடுத்து சாப்பிட 15 நாட்களில் உடம்பில் உள்ள வெப்பத்தன்மை குறைந்து குளிர்ச்சி ஏற்படும். மலச்சிக்கல் தீரும். ரத்த விருத்தி ஏற்படும். பித்தம் தணியும். வெள்ளைப் படுதலை தடுக்கும். ஆண்மையை பெருக்கும்.

அடுத்ததாக ஏழைகளின் ஆப்பிள் எனப்படும் கொய்யா,

இந்திய பழ வகைகளில் 4வது இடத்தை பெற்றுள்ளது. கொய்யாவில் வைட்டமின் சி மற்றும் பெக்டின் சத்துகளும் வைட்டமின் சி 260 மில்லி கிராமும் உள்ளது. கொய்யா பழத்தை முழுப்பழமாக, ஜாமாக, ஜெல்லியாக, சர்பத்தாக எந்த முறையில் வேண்டுமானாலும் சாப்பிடலாம். வயிற்றில் புண்களை நீக்கும், நீரிழிவை குறைக்கும், விந்துவை பெருக்கும். அடிக்கடி ஏற்படும் விக்கலை குணப்படுத்தும். வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்கள் உறுதியாகும். உடல் வளர்ச்சி கூடும். கொய்யா பழம் சாப்பிடுவதால் குடல், ஜீரண பை, கல்லீரல் மண்ணீரல் புத்துணர்வு பெற்று பலம் பெறும். கொய்யா காய் வயிற்று போக்கை குணமாக்கும். கொய்யா இலை வயிற்று புண்ணுக்கு மருந்தாகிறது.

கொய்யா பழத்துக்கு அடுத்து மிகவும் சிறந்த பழம் மாதுளம் பழம்.

மாதுளம் பழம் இலை, பூ, பட்டை, வேர் அனைத்துமே மருத்துவ பயன்களை கொண்டது. மாதுளம் பழம் சாப்பிட்டால் வயிற்றுக்கு குளிர்ச்சி தரும். ஜீரணத்தை அதிகரித்து ரத்த விருத்தி பெற வைக்கும். பித்தம் நீக்கும். எலும்பு, பற்களுக்கு உறுதி தரும். குடல், வயிற்று புண் ஆற்றும். நெஞ்சு எரிச்சலை குறைக்கும். மலச் சிக்கலை தீர்க்கும். புதிய ரத்தத்தை உருவாக்கும். மாதுளம் பழ சாறுடன் கற்கண்டை கலந்து சாப்பிட்டால் உடல் சூடு நீங்கும். மூல நோய் தீரும். மாதுளம் பழ சாறுடன் அருகம் புல் சாறு கலந்து சாப்பிட்டால் அறுந்த மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும். மாதுளம் பழ தோலை இடித்து சாறு எடுத்து மிளகு பொடியை கலந்து சாப்பிட்டால் போதை மயக்கம் தீரும். மாதுளம் பூவை கொதிக்க வைத்து குடித்தால் பித்த கோளாறு நீங்கும். வேர் பட்டையை அரைத்து நீர் சேர்த்து கசாயமாக காய்ச்சி மூன்று வேளை குடித்தால் வயிற்று பூச்சிகள் ஒழியும். மாதுளம் பூவை உலர வைத்து பொடியாக்கி தூளை நீரில் கலந்து குடித்தால் இருமல் தீரும். பூவை இடித்து சாறு எடுத்து அத்துடன் ஓரிரு துளி இஞ்சி சாறு கலந்து குடித்தால் சளி, இருமல் தீரும். பூச்சாறுடன் தேன் கலந்து குடித்தால் வயிற்று கடுப்பு நீங்கும். கோடை துவங்கி விட்டதால் நாளும் ஒரு பழத்தை சாப்பிட்டு உடல் நலனை பேணி பாதுகாப்போம்.

%d bloggers like this: