அரசியல் விளையாட்டு: குண்டுவெடிப்பு விசாரணையிலும் சிக்கல்

சென்னை : மத்திய அரசுடனான தமிழக அரசின் மோதல் போக்கு காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு இளம் பெண்ணின் உயிரை பலி கொண்டதுடன், 14 பேர் படுகாயம் அடைய காரணமான குண்டுவெடிப்பின் விசாரணையிலும் மாநில அரசின் செயல்பாட்டால் சிக்கல் எழுந்துள்ளது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசுடன்
இந்த சம்பவத்தை பயங்கரவாத தாக்குதலாக கருத மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதனையடுத்து , தேசிய புலனாய்வு அமைப்பின் உதவியுடன் கையாள மத்திய அரசு நினைக்கிறது.ஆனால் தமிழக அரசோ, வெடிமருந்து சட்டத்தின் கீழ் கிரிமினல் வழக்காகவும், கொலை மற்றும் ரயில்வே பொருட்களை சேதப்படுத்திய குற்ற வழக்குகளாகவும் பதிவு செய்து விசாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவுகளின் கீழே தமிழக போலீசாரும் விசாரணையை துவக்கிய இருப்பதுடன், சந்தேகத்திற்குரிய சிலரையும் கைது செய்துள்ளனர். அதிக திறனற்ற வெடி பொருட்களைப் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக வெளியான தகவலை அடுத்து இந்த முடிவு

மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தேசிய புலனாய்ப்பு அமைப்பின் விசாரணை தேவையில்லை என மறுத்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதா, இது பயங்கரவாத தாக்குதல் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

கருணாநிதி கமென்ட்:


இதனால் தமிழக அரசு மற்றும் ஜெயலலிதாவை கடுமையாக சாடுவதற்கு சரியான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த திமுக தலைவர் கருணாநிதியும், தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீரழிந்து விட்டதாகவும், திருவல்லிக்கேணியில் பிடிபட்டவர்களிடம் சரியான முறையில் விசாரணை நடத்தி இருந்தால் இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுத்திருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஆபத்தான நிலையில் தமிழகத்தின் பாதுகாப்பும், மக்களின் பாதுகாப்பும் உள்ள சூழலில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் மத்திய அரசின் உதவியை ஜெயலலிதா மறுத்துள்ளதும், அதனை பயன்படுத்தி கருணாநிதி தமிழக அரசின் நடவடிக்கைகளை விமர்சித்துள்ளதும் மக்கள் மனதில் அச்சத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்துவதாக உள்ளது. இந்த அரசியல் விளையாட்டுக்கு அப்பாவி பொதுமக்களின் உயிர்கள் பணயம் வைக்கப்படுகின்றன என்று கருதப்படுகிறது.

சிபிசிஐடி தகவல் :

குண்டுவெடிப்பு நடைபெற்ற சில மணிநேரத்திலேயே சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இது குறித்து தெரிவித்த சிபிசிஐடி அதிகாரிகள், பொங்களூருவைச் சேர்ந்த அமைப்புக்களே இதன் பின்னணியில் இருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம்; வெடிகுண்டு பெங்களூருவில் தான் வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என தெரிவித்துள்ளார். இதை பயங்கரவாத தாக்குதல் என கருதினாலும், கிரிமினல் வழக்காகவே பதிவு செய்து சிபிசிஐடி விசாரித்து வருகிறது. பல்வேறு கோணங்களில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக தேர்தல் பிரிவு டிஜிபி அனூப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

மோடிக்கு கூடுதல் பாதுகாப்பு :

சென்னை சென்ட்ரலில் நடைபெற்ற இரட்டை குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மோடி ஆந்திரா வருவதை அடுத்து அவருக்கு எசசரிக்கை விடுப்பதற்காகவும் குண்டு வைக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியானது. இது குறித்து தெரிவித்துள்ள மூத்த போலீஸ் அதிகாரி, பயங்கரவாதிகள் குறிவைத்திருப்பவர்கள் பட்டியலில் மோடியும் உள்ளார்; அவர் சீமந்திரா பகுதிக்கு நேற்று வந்தார் அதனை குறிவைத்தே சென்னையில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது; இதனால் மோடியின் பாதுகாப்பு மட்டுமின்றி அவர் செல்லும் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

%d bloggers like this: